Wednesday, May 22, 2019

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புறக்கணிக்கப்படுகிறதா பூம்புகார்?! - மௌனச்சாட்சிகள்
புராண கதைகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போகும்போதெல்லாம் அந்த கதை மாந்தர்கள்லாம் கூடவே நடந்து வர்ற மாதிரி எனக்கொரு நினைப்பு. அதனால அதுப்போன்ற இடங்களுக்குப் போகனும்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். பூம்புகாருக்கு பத்து வருடங்களுக்குமுன் போயிருக்கேன். ஆனா, கடற்கரையில் கால் நனைத்ததோடு சரி. வேற எங்கும் சுத்திப் பார்க்கல. ஆனா, இந்த முறை அப்பாவோடு போகும்போது என்னை பூம்புகார்ல கொஞ்ச நேரம் சுத்தி பார்க்க  விடனும்ன்னு கேட்டுக்கிட்டேன். இந்த முறை பொறுமையாய் எல்லா இடத்துலயும் சுத்திப் பார்த்துட்டுதான் வந்தேன். 

சிலப்பதிகார கதையை உங்களுக்கு நான் சொல்லனும்ன்னு அவசியமில்ல. இருந்தாலும் எனக்கு தெரியும்ன்னு நீங்க தெரிஞ்சுக்கனுமேன்னு சிலப்பதிகார கதை சுருக்கமாய்....,

வணிகக் குலத்தில் பிறந்த கோவலனுக்கும், கண்ணகிக்கும் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்து தனிக்குடித்தனம் வைக்குறாங்க. கடல் கடந்து வாணிபம் செய்து கண்ணகியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். மாதவியின் ஆடல் நிகழ்ச்சிக்கு செல்லும் கோவலனின் கழுத்தில் மாதவி வீசிய மாலை விழுது. தாசிக்குலத்தில் பிறந்தாலும் நல்லவளான மாதவியின் அன்பிலும், கூடவே அவள் தாயின் சூதிலும் விழுந்து மலையென இருந்த செல்வத்தை இழக்கிறான் கோவலன்.

இந்திரவிழாவில் பாடிய பாடலை தவறாய் புரிந்துக்கொண்டு கண்ணகி இல்லம் நோக்கி மீண்டும் வருகிறான். வீடு வந்தபின்னரே தெரியுது தான் பாடுப்பட்டு சேர்த்த அத்தனை செல்வமும் இழந்துட்டோம்ன்னு.... நல்லா வாழ்ந்த ஊரில் இனி வறுமைக்கோலத்தில் இருக்கக்கூடாதுன்னு  முடிவு செய்து பாண்டிய நாட்டிற்கு கண்ணகியுடன் செல்கிறான். அங்கு கண்ணகியின் கால் சிலம்பை எடுத்துக்கொண்டு சென்று அரண்மனை பொற்கொல்லரிடம் தந்து அதை விற்றுத் தரச் சொல்கிறான்.

அதற்கு முன்பே, பாண்டிய மன்னனின் பட்டத்து ராணியின் சிலம்பு பழுதுக்கு வர, அதை களவாடிக் கொண்ட பொற்கொல்லன், கோவலந்தான் அதை திருடிக்கொண்டான் என மன்னனிடம் சொல்ல, ஆராயமல் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இதைக்கேட்டு வெகுண்ட கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவைக்கு வந்து முறையிட, தன் சிலம்பின் பரல்கள் மாணிக்கம் என உரைத்து, பாண்டிய ராணியின் கால்களில் இருந்த தன் சிலம்பை உடைத்து கோவலன் நிரபராதி என நிரூபித்து மதுரையை எரித்து பழித்தீர்த்துக் கொள்கிறாள்.

இளங்கோவடிகளின் திருவுருவ சிலை.

கால்நடையாகவே 14 நாட்கள் நடந்து,  சேர நாட்டை அடைந்து செங்குன்றம் மலைமீது நிற்க, கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து அழைத்துச்செல்கிறான். தெய்வமானவளின் கதையை வேட்டைக்கு வந்த செங்குட்டுவன் கேள்வியுற்று, அவளுக்கு கோவில் எழுப்ப இமயமலையிலிருந்து கல் கொண்டுவந்தான் என புராணங்கள் சொல்லுது. 

கண்ணகி கோவலன் வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினம் நகரத்தின் 7 தெருக்களை நினைவுப்படுத்தும் விதமாக 7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கு இந்த சிலப்பதிகாரக் கலைக்கூடம்சிலப்பதிகாரத்தையும், கண்ணகியையும், தமிழையும் கௌரவப்படுத்தும் விதமாக பூம்புகாரில் அப்போதைய அரசால்  1973ல் சிலப்பதிகார கலைக்கூடம் என்ற பெயரால் ஒரு நினைவுக்கூடம் எழுப்பப்பட்டுள்ளது.  மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் இந்த கூடம்  உருவாக்கப்பட்டது.
கலைக்கூடத்தின் நுழைவு வாயிலில் கோவலன் மற்றும் கண்ணகி  சிலைகள்   நம்மை வரவேற்கும் விதமாக வச்சிருக்காங்க. இக்கலைக்கூட மாளிகையின் கோபுர வடிவமைப்பு 50 அடி உயரம் கொண்டது. இக்கோபுரத்தின் கலசங்கள் 8 அடி கொண்டதாகும்.

இக்கலைக்கூடத்தின் சுவற்றில் சிலப்பதிகார கதையின் முக்கிய நிகழ்வுகளை 49 சிற்பங்களாக வடிக்கப்பட்டு கண்ணாடிக்குள்  பார்வைக்கு வச்சிருக்காங்க. 


(கண்ணகி பத்தினி தெய்வமாக போற்றப்பட முக்கிய காரணமான அவளின் காற்சிலம்பு)

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில்  பூம்புகார் அமைந்திருக்கு.  சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் பூம்புகார் இருக்கு.  சென்னைல இருந்து சீர்காழி, அல்லது சிதம்பரம் வந்து அங்கிருந்து பூம்புகார் வரலாம்.

(கண்ணகியும், கோவலனும் சந்தோசமாய் இருந்த காலத்தை விளக்கும் சிற்பம்)

(மாதவியை தவறாய் புரிந்துக்கொண்டு அவளைப் பிரிந்துச் செல்லும் காட்சி)

(கண்ணகி கையால் கடைசியாய் உணவருந்தும் காட்சி)


(பொற்கொல்லரிடம் கண்ணகியின் சிலம்பை கோவலன் கொடுக்கும் காட்சி)

(கோவலனின் படுகொலைக் காட்சி)


(பாண்டிய மன்னன் அரசவையில் கண்ணகி சிலம்பொடித்து கோவலன் நிரபராதி என நிரூபிக்கும் காட்சி)

(சேர மன்னன் செங்குட்டுவனும், அவன் சகோதரன் இளங்கோவடிகளும் கண்ணகிக்கு  கோவில் எழுப்ப இமயமலையிலிருந்து கல் கொணரும் காட்சி)

(சிலப்பதிகார கலைக்கூடத்தின் மேற்கூரையில் வடிவமைக்கப்பட்ட வண்ணச் சிற்பம்)


(சிலப்பதிகார காலத்தில் இசைக்கப்பட்ட இசைக்கருவிகளின் மாதிரிகள்)


காவிரி ஆறு இப்பூம்புகார் கடலில்தான் கலக்கின்றது. இப்பூம்புகார் நகரம் சோழ நாட்டின் தலைநகராய் அக்காலத்தில் விளங்கியது.

வரலாற்று புகழ்பெற்ற எல்லா இடங்களிலும் சுற்றிக்காட்ட கைடுகள் இருப்பாங்க. ஆனா, எவ்வளவு தேடியும் பூம்புகார் பற்றி விளக்க ஒருத்தரையும் காணோம். 

காவிரிப்பூம்பட்டிணம் மிகப்பெரும் துறைமுகமாக விளங்கியது. உலக நாடுகள் பலவற்றிலிருந்து வந்தப் பொருட்கள் இங்கு கடைவிரிக்கப்பட்டதற்கு பட்டிணப்பாலை நூலே சாட்சி. முத்தும், பவளமும், பட்டும், ரத்தினமும் கடைவிரிக்கப்பட்ட இடத்தில் கருவாடும், மீனும். காலத்தின் கோலம் இதுதான் போலும்!!

பூம்புகார் நகரின் கடற்கரை. துறைமுகம் வரப்போகுது. அதனாலதான், கற்களால் கரைக் கட்டுறாங்கன்னு அங்கிருந்தவங்க சிலர் சொன்னாங்க. இன்னும் சிலர் சுனாமி தாக்குதலிலிருந்து அதிக பாதிப்பு வராம இருக்க தடுப்பணை கட்டுறாங்கன்னு சிலர் சொல்றாங்க. எது உண்மை!?

அரசியல் காழ்ப்புணர்ச்சியா!? இல்ல எதாவது செண்டிமெண்டான்னு தெரியல. இக்கலைக்கூடம் போதிய வெளிச்சமில்லாம, சரிவர துப்புறவு கூட செய்யாம இருக்கு. நுழைவுக்கட்டணம் கூட பலகையில் போட்டிருப்பது போல் வாங்காம 7 பேரா!? 29 ரூபா கொடுத்துட்டுப் போங்கன்னு சொன்னார். இதென்ன கணக்குன்னு எனக்கு புரியல.
என்னதான் அரசியல் காழ்ப்புணர்ச்சியாய் இருந்தாலும் ஐப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகார கதையின் நினைவாய் இருஜ்கும் கலைப்பொக்கிஷம் இப்படி வீணாய் போகக்கூடாது :-(

நன்றியுடன்,
ராஜி

3 comments:

 1. தஞ்சையம்பதியில் சில நாட்களுக்கு முன்னால் துரை ஸாரும் பதிவிட்டு வருத்தப்பட்டிருந்தார்.

  இசைக்கருவிகள் போட்டோவில் நீங்கள் தெரிகிறீர்கள்!

  ReplyDelete
 2. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்காது விடுவது கவலைக்குரியது. இது நம்நாட்டிலும் நடக்கிறது.

  ReplyDelete
 3. இது அன்றே வாசித்துவிட்டோம். கருத்திட லேட்.

  விவரணங்கள் அருமை. வருத்தமான விஷயங்கள் பாதுக்காக்காமல் இருப்பது.

  துளசிதரன், கீதா

  கீதா: இதே போன்று தஞ்சையம்பதியிலும் பூம்புகார் பற்றி சொல்லி வருத்தப்பட்டிருந்தார் துரை அண்ணா.

  ஒரு ஃபோட்டோல கண்ணாடிக்குள்ள நீங்க தெரியறீங்க இல்லையா ராஜி?

  ReplyDelete