Thursday, August 15, 2019

சகோதரத்துவத்தை மலர செய்யும் ரக்‌ஷாபந்தன்

தொப்புள்கொடியால்  வருவது பெற்றோர் பிள்ளை உறவு, தாய் தந்தையால் வருவது பிறந்த வீட்டு உறவு.  தாலிக்கொடியால வருவது கணவன் மனைவி உறவு. கணவன்/மனைவியால் வருவது புகுந்த வீட்டு உறவு.  இதுமாதிரி எல்லா உறவுக்கும் எதாவது ஒரு உறவுக்கொடி இருக்கும். ஆனா, எந்த உறவுக்கொடி இல்லாத ஒரு ஆணையும், பெண்ணையும் அண்ணன் தங்கையா மாத்துது இந்த ராக்கிக்கொடி. ரக்‌ஷாபந்தன் விழாவுக்கு பல காரணம் சொல்லப்படுது. அது என்னன்னு வரிசையாக பார்க்கலாம். இப்பத்திய பிள்ளைகள் இந்த விழாவை விமர்சையா கொண்டாடுறாங்க. தன்னை கிண்டல் செய்து, தொந்தரவு செய்யும் பிள்ளைகளை இக்கயிறு கட்டி நல்லவனா, தன்னோட நல்லது கெட்டதுல முன்னுக்கு நிக்குற சகோதரனா மாத்தும் சக்தி இக்கயிறுக்கு உண்டு.  இது வடநாட்டுல வந்த ஒரு பண்டிகை. எங்கிருந்து வந்தால் என்ன நல்லது நடந்தா சரி. 
No photo description available.
முதல் கதை மகாப்பாரதத்திலிருந்து...
பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, ஒருமுறை போரில் அடிப்பட்ட கிருஷ்ணரின் காயத்திலிருந்து வழியும் ரத்தத்தை தன் பட்டுப்புடவையை கிழித்து, துடைத்து, மருந்திட்டு காயத்தின்மீது கட்டுக்கட்டியதாகவும், அந்த நிகழ்வு கிருஷ்ணரின் மனதை பாதிக்க அன்றிலிருந்து திரௌபதியை தனது சகோதரியாய் ஏற்றுக்கொண்டு அவளது சுகதுக்கத்தில் பங்கெடுப்பேன் என உறுதிமொழி எடுத்து கடைசிவரை காப்பாற்றினார். இதனால்தான், அரசவையில் திரௌபதியின் துயில் உரியப்படும்போது புடவை தந்து மானம் காத்தான். 
Image may contain: one or more people and ring


அடுத்த கதை..

விஷ்ணுவின் பரமபக்தனான அரக்கன் பாலியின் வேண்டுக்கோளுக்கிணங்க வைகுண்டத்தைவிட்டு பாலியின் ராஜ்ஜியத்தை காக்க சென்றார். கணவர் இல்லாத இடத்தில் தானும் இருக்க விரும்பாத லட்சுமிதேவி சாதாரண பெண்ணாய் மாறி, அடைக்கலம் வேண்டி அலைந்து திரிந்தார். ஷ்ரவண் பூர்ணிமா  அன்று மன்னன் பாலியின் கரத்தில் ராக்கி கயிறை கட்டினாள். அவளின் அடையாளத்தையும்,  ராக்கி கயிறு கட்டியதற்கான நோக்கத்தையும் பாலி வினவ, தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினாள் லட்சுமிதேவிஇதனால் மனம் நெகிழ்ந்த, அன்பு மனைவிக்காக விஷ்ணுவை அனுப்ப முன்வந்ததோடு, தனது அனைத்து செல்வத்தையும் லட்சுமிதேவிக்கு அர்ப்பணித்தான்.  பாலியின் தியாகத்தின் பொருட்டு ரக்‌ஷாபந்தன் விழாவை பாலிவான்னும் சொல்வாங்க. இந்நிகழ்ச்சிக்கு பிறகே, ராக்கி கயிறு கட்டும் பழக்கம் உண்டானது. 

அடுத்த கதை..
கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வந்தபோது புருஷோத்தமன் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கு சண்டை நடந்தது. அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனா, மன்னர் புரோஷோத்தமனுக்கு ராக்கி கயிற்றை கட்டிவிடுகிறாள். போர்க்களத்தில் அலேக்சாண்டரைக் கொல்வதற்கு வாளை உருவிய புருஷோத்தம ராஜா, தற்செயலாக தன் கையில் கட்டப்பட்டிருந்த ராக்கியைப் பார்த்ததும் மனம் மாறி அலேக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறார்.
அடுத்த கதை..
சித்தூர் ராணி கர்ணவதி,  முகலாய மன்னரான ஹுமாயூனுக்கு ஒருமுறை ராக்கி கயிற்றை அனுப்பி கட்டச் செய்கிறாள்.  அந்த சகோதர பாசத்திற்காக கர்ணவதியைக் காப்பாற்றும் பொறுப்பு ஹிமாயூனுக்கு வந்து விடுகிறது. குஜராத் மன்னர் பகதூர் ஷா, சித்தூர்மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைபற்றியதும் போர் தொடுத்துச் சென்ற ஹிமாயூன் நாட்டை மீட்டு, இறந்த சகோதரி கர்ணவதியின் மகன் விக்ரம்ஜித்சிங்கிடம் ஒப்படைத்தார். 
அடுத்த கதை..
வீட்டுக்கு தெரியாம கல்யாணம் கட்டிக்கிட்டு வாழும் இப்பத்திய ஆண்கள் மாதிரி பிள்ளையாரும்  இங்க  பிரம்மச்சாரி.  வடக்கே பிள்ளையாருக்கு இரு மனைவிகள், இரு மகன்களோடு வாழ்ந்து வர்றார். ரித்தி- சித்தி என்பது அவரது மனைவியரின் பெயர்கள். ரக்ஷாபந்தன் நாளில் எங்களுக்கு ராக்கி கட்ட தங்கை இல்லை என பையன்கள் இருவரும் அழ, அந்த நேரம் அங்கு வந்த நாரதரும் இதுக்கு தூபம் போட, திடீரென குழந்தை வருமாவென பிள்ளையார் நகைக்க, பக்தர்களின் துயரை அவர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது துன்பத்தினை போக்கும் உனக்கு ஒரு பெண்பிள்ளையை உண்டாக்குவதா கஷ்டமென உசுப்பேத்தினார். அத்தோடு பெண்பிள்ளை இல்லாத வீடு சுபிட்ஷமாய் இருக்காது. எல்லா ஆணுக்கும், சகோதரிகள் முக்கியம் அதுக்காகவது ஒரு பெண்பிள்ளைக்கு தந்தையாகு என கட்டளையிட்டு சென்றார். உடனே பிள்ளையாரு, தனது மனைவிமார்களை அழைத்து இருவரும் சேர்ந்து ஒரு பெண்பிள்ளைக்கு என்னை தந்தையாக்க வேண்டும். அந்த பெண் இருக்குமிடம் சகல செல்வங்களோடு சந்தோசமாய் இருக்கவேண்டுமென உத்தரவிட, இருவரும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதிதேவியான முப்பெரும்தேவியரை வேண்டி சந்தோஷிமாதாவை பெற்றெடுக்கின்றனர்.  சந்தோஷிமாதாவும் தன் அண்ணன்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி மகிழ்விக்கிறாள் என வடநாட்டு புராணக்கதை. 
அடுத்த கதை
எமன் 12 ஆண்டுகள் தன் தங்கை யமுனாவைப் பார்க்கச் செல்லவே இல்லை. யமுனை, சக நதியான கங்கையிடம் ஆலோசனை கேட்டாள். கங்கை எமனுக்கு நினைவுபடுத்தினாள். எமன் தங்கை யமுனையைப் பார்க்க வந்தான். மகிழ்ச்சியில் திளைத்த யமுனைஅண்ணனுக்காக பெருவிருந்து படைத்தாள். என்ன பரிசு வேண்டும் என்றான் எமன். மீண்டும் விரைவிலேயே பார்க்க வர வேண்டும் என்றாள் யமுனை. அன்பில் திளைத்த எமன்யமுனைக்கு என்றும் அழிவில்லை என்று வாழ்த்தினான். வடக்கே அண்ணன்-தங்கை இடையிலான உறவைக் கொண்டாடும் பாய்-தூஜ் பண்டிகையின் வரலாறு இது. 

அடுத்த கதை..
இந்தி காலண்டர்படி வரும் ‘ஷ்ரவன்’ மாத பவுர்ணமி நாளில் ரக்க்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. ‘ரக்‌ஷான்னா பாதுகாப்பு, பந்தன்ன்னா இணைப்பு’ இரண்டையும் இணைத்தால் ரக்க்ஷாபந்தன். அதாவது பாதுகாப்பான ஒரு பிணைப்பு’ ன்னு அர்த்தம். தீய விஷயங்களில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், சகோதரர்களின் நல்வாழ்வு, நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்து, சகோதரிகள் கட்டும் ரட்சையே, ரக்க்ஷாபந்தன் ராக்கி என்று அழைக்கப்படுகிறது. இக்கயிறு சாதாரண மஞ்சள் நூலா இருந்தாலும் சரி, இல்ல தங்கச்செயினில் வைரம் பதித்ததா இருந்தாலும் ஒரே பலன் தான். 
பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து முடித்து பூஜை செய்து, சாப்பிடாமலிருந்து, இனிப்பு வழங்கி, நெற்றியில் சிவப்பு நிற குங்குமத்தை இட்டு சகோதரர்களின் கைகளில் அலங்கரிக்கப்பட்ட ராக்கி கயிறை கட்டி,  அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவர். தன்னை வணங்கும் சகோதரிக்கு பரிசுகளை கொடுக்குறதோட அன்றிலிருந்து அவளின் பாதுகாப்புக்கு தான் இருப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறான். ராக்கி கயிறு கட்ட வயது வித்தியாசம், சாதி மத பேதமில்லை. சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ என்று குறிக்கும் விதமாக அவர்களுக்கு பல பெண்கள் ராக்கி கயிறு கட்டி பாசத்தை சொல்லாமல் சொல்கிறார்கள்.
ராக்கி கட்டும்போது சொல்வதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. வெறும் கயிறு கட்டுவதோடு இந்த சடங்கு முடிந்துவிடுவதில்லை...
யேன பத்தோ பலி ராஜா தானவேந்த்ரோ மகாபலாஹ்

தேன த்வம் ப்ரதிபத்நாமி ரக்ஷே மாசல் மாசல்.

(அசுரர்களின் அரசன் பலியைக் கட்டிய இந்தக் காப்புக் கயிறை நான் உனக்குக் கட்டுகிறேன். உன்னைக் காக்கும் இந்த ரக்ஷை இது விழாமல் இருக்கட்டும், விழாமல் இருக்கட்டும்.) 


மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நாளை நாரியல், அல்லது, தேங்காய் பௌர்ணமி என்று கொண்டாடுகின்றனர். தேங்காய்களுக்கு மலர் சூடி, கடற்பயணம் சென்றவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டிக் கொள்கின்றனர்.
குஜராத்தில் உள்ள சிவபக்தர்கள் இந்த நாளை பவித்ராபனா என்ற திருவிழாவாய் கொண்டாடுகின்றனர். கடவுள்களுக்கு தண்ணீர் நைவேத்யம் செய்து தம் தவறுகளை மன்னிக்க பிரார்த்தித்துக் கொள்கின்றனர். மத்திய பிரதேசம், சத்திஸ்கர் பகுதியில் உள்ளவர்கள் கஜரி பூர்ணிமா என்று கொண்டடுகின்றனர். வரும் விவசாயப் பருவத்துக்கான உழவுப் பணிகளைத் தாய்மார்கள் துவக்கி வைக்கின்றனர்.

சகோதர உறவுகள் வளர்ந்தால் சர்ச்சைகளுக்கு இடமேது? உலகிலேயே உயர்வான சகோதர உறவை வெளிப்படுத்தும் இத்திருநாள் குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற அடிப்படை பாடத்தை நமக்கு போதிக்கிறது.

சகோதரர்கள் அனைவருக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துகள். பதிலுக்கு வாழ்த்து சொன்னா மட்டும் போதாது. பெருசா எதாவது ரிட்டர்ன் கிஃப்ட் பண்ணனும்..

நன்றியுடன்,
ராஜி. 

5 comments:

 1. எத்தனை எத்தனை கதை...!

  சகோதரனின் அன்பை விட பெரிய கிஃப்ட் ஏது...?

  ReplyDelete
 2. வில்லனுக்கு 'ராக்கி' கட்டி சகோதரனாக்குவதும், பிடிக்காத காதலனை விலக்குவதற்காக அவ்னுக்கு ராக்கி கட்டுவதும்...என்று பல சினிமாக்களுக்குக் கதையைச் சொல்லிக்கொடுத்ததும் இந்த ரக்ஷா பந்தன் தானே! படங்களும் கட்டுரையும் (எப்போதும்போல்) பேரழகு!

  ReplyDelete
 3. சகோதரிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் சகோதரியாரே

  ReplyDelete
 5. வாழ்த்துகள்.

  நிறைய கதைகள் இதற்கு உண்டு! எனக்கும் இங்கே சில ராக்கி சகோதரிகள் உண்டு.

  ReplyDelete