Friday, August 02, 2019

கந்தர் சஷ்டி அரங்கேறிய தலம்- புண்ணியம் தேடி....

சின்ன மகளின் கல்லூரி வேட்டைக்காக கோவை பி.எஸ்.ஜி காலேஜுக்கு அப்பா, நான், மகனார், சின்னவளும் ஆளுக்கொரு கனவுமாய் பயணமானோம். இந்த காலேஜ் 45 வருட கனவு என அப்பாவும், பிரண்ட் இருப்பதால் சேஃப்ன்னு அம்மாவும், பிராண்டட் காலேஜ்ன்னு நானும், க்ளைமேட், சிறுவாணி தண்ணி, ஹாஸ்டல் வாசம்,ன்னு பிள்ளைகளும் பல எதிர்பார்ப்புகளோடு, முதன்முதலாய் லாங்க்க்க்க் ட்ரைவ்ன்னு மகனார் கார் ஓட்ட மிக்க மகிழ்ச்சியாய் பயணம் தொடங்கியது.  கோவைக்கு போறோம்.  ரூமில் ப்ரெஷ்சாகிறோம். காலேஜ் போறோம் பணம் கட்டுறோம். பிறகு கோவை குற்றாலம் போகலாம்ன்னு அப்பா பிளான். ரூமில் ப்ரெஷ் ஆனதும்  கோவை குற்றாலம் வேண்டாம் நீங்க நடக்கமுடியாதுன்னு பேமிலி ப்ரண்ட் சொல்ல, மகனார் கேட்டதுக்கு இணங்கி ஈஷா போகலாம்ன்னு முடிவாகி, நேராய் காலேஜ் போய்ட்டோம். அங்கு காத்திருந்தோம்.. காத்திருந்தோம்.. காத்திருந்தோம்... 
Image may contain: one or more people, people standing, sky, cloud, mountain, tree, outdoor and nature

மதியத்துக்கு மேல் உங்க பேரு வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு.. மீண்டும் கூப்பிடுறோம்ன்னு அங்கிருந்தோர் சொல்ல,  மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கும் ஓகே சொல்லி, தூரம் அதிகம் கிட்டத்தட்ட 400கிமீன்னு சொல்லியும் மகளின் திருமண வேலைன்னு எத்தனை கெஞ்சியும் இன்னொரு நாள் வாங்கன்னு சொல்லிட்டாங்க.சீட் கிடைக்காததால் பாப்பா படு அப்செட், சாப்பிடலை, ஒரே அழுகாச்சி.. மூஞ்சியை தூக்கிட்டு உக்காந்ததுல எங்கயும் போகவேண்டாம்ன்னு முடிவு செய்து பேமிலி பிரண்ட் வீட்டுக்கு மட்டும் போய்ட்டு சாப்பிட்டு ரூமில் படுத்துட்டோம். இம்புட்டு தூரம் வந்துட்டு சும்மா போனால் ஆகாது. அதனால், அம்மாவை எங்காவது கூட்டிப்போகலாம்ன்னு மகனாரும், என் அப்பாவும் அவளை சமாதானப்படுத்தி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு போனோம்.  நடராஜரின் அபிஷேக  தரிசனம் கண்குளிர பார்த்தாச்சு. அங்கிருந்து  சிவன்மலை, கொடுமுடி போய்ட்டு, பிறகு சென்னிமலை கோவிலுக்கு போவோம்.அங்கிருந்து பெருந்துறை போகனும்ன்னு ப்ளான். பெருந்துறையில் ஏதோ ஒரு ஹோட்டலை யூட்யூபில் பார்க்க, மதியம் அங்கதான் சாப்பிடனும்ன்னு அப்பா முடிவெடுக்க சிவன்மலையில் தரிசனம் முடிச்சு போய்க்கிட்டிருக்கும்போது அப்பா பிரண்ட் போன் செய்ய.. பயணத்தில் இருப்பதாய் அப்பா சொல்ல, கொடுமுடி தனி ரூட், அங்க போய்ட்டு சென்னிமலைக்கு போனால் மதியம் சாப்பாட்டுக்கு பெருந்துறை வரமுடியாதுன்னு அப்பாவின் நண்பர் சொல்ல, உடனே கொடுமுடி கேன்சல். சென்னிமலை மட்டும் போகலாம்ன்னு முடிவு செய்து வண்டி அந்த பக்கம் திரும்பியது.  அப்பாக்கும் தன் பிரண்ட் ஒருத்தரை சென்னிமலையில் பார்க்கனும்ன்னு இருந்ததால் கொடுமுடி கேன்சல் ஆகிட்டு. கூகுள் மேப் உதவியோடு சிவன்மலையிலிருந்து சென்னிமலைக்கு பயணமானோம்.  என்னம் கூகுள் மேப் பொண்ணு கொஞ்சம் சுத்தல்ல விட்டுடுச்சு. அதும் நல்லதுக்குதான். பல ஊரை , அங்கிருக்கும் மனுஷங்களை பார்க்குறதும் ஒரு அனுபவம்தானே?!

24 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த கொங்குமண்டலத்தின் ஒரு பகுதிதான் பூந்துறை நாடு. பூந்துறையே இன்று பெருந்துறையாய் இருக்கு. அந்த பெருந்துறை வட்டத்தில்  இருக்கு இந்த சென்னிமலை.  நொய்யல் ஆற்றங்கரைல் இருக்கும் இக்கோவிலுக்கு முன்பு சிரகிரி என பெயராம். சிரம்ன்னா தலை, சிறப்பு, உச்சி, மேன்மை.. சென்னி’ன்ற சொல்லுக்கும் அதேப்பொருள். அதனால் பின்னாளில் சென்னிமலை என மாறிடுச்சுன்னு சொல்றாங்க.  அருணகிரி நாதரும், கந்தர் சஷ்டி இயற்றிய பாலன் தேவராயனும் தங்கள் பாடலில் சிரகிரின்னுதான் பாடி இருக்காங்க.  
Image may contain: one or more people, sky, cloud and outdoor


புராண காலத்தில் அனந்தன் என்ற நாகராஜனுக்கும், வாயுதேவனுக்கும் இடையில்  யார் பெரியவர்ன்ற பலப்பரிட்சை வந்ததாம்.  நேருக்கு நேராய் மோதும்போது, அனந்தன் மகாமேரு பர்வதத்தை உறுதியாக வளைச்சு பிடிச்சுக்கிட்டானாம். அனந்தனின் பிடியிலிருந்து மேருமலையை பிரிக்க,  வாயுதேவன் போராடினார். அந்த போட்டியில் மேருமலையின் உச்சிப்பகுதி உடைஞ்சு, பறந்து வந்து பூந்துறை நாட்டில் விழுந்ததாம். அந்தச் உச்சிப்பகுதிதான் சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரின்னு அழைக்கப்பட்டு, இப்ப சென்னிமலைன்னு  அழைக்கப்படுவதாகவும் சொல்றாங்க. 

Image may contain: people standing and outdoor
300 வருசத்துக்கு முன், சிறுவன் சென்னிமலைக்கு பஞ்சம் பிழைக்க வந்தான். அவனோட ஊர் பேரைக்கொண்டு அவனை செங்கத்துறையான்னு கூப்பிட்டாங்க. ஒரு பண்ணையில் வேலைக்கு சேர்ந்து மாடு மேய்ச்சுக்கிட்டிருந்தான். அவன் கையில் எப்பவும் வேல் இருக்கும் அதனால் அந்த வழியா போன ஒருவர், அந்த பையன்  பார்க்க சென்னியாண்டவர் போலவே இருக்கவே அவனை நிலத்தம்பிரான்னு கூப்பிட்டு அருகில் அழைத்து, ‘இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு!’ன்னு சொல்லி மறைஞ்சு போயிட்டாராம். 


நிலத்தம்பிரான் வளர்ந்ததும்  சென்னிமலை முருகனுக்கு கோவில் கட்ட தீர்மானித்தார் . கட்டும்போதே மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கும் மதில்சுவர் எழுப்பும் பணியையும் மேற்கொள்ள விரும்பினார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் வசம் இருந்தது. மதில் சுவற்றை இணைக்கும் கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி நகருக்கு தனது சீடர்களுடன் சென்றார் தம்பிரான். ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்து,  அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர். அப்ப அங்க வந்த ஆங்கிலேய அதிகாரி,  யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள் என இங்கிலீஷில் கேட்க, பதிலுக்கு, ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என இங்கிலீஷில் நிலத்தம்பிரான் பதில் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 

ஒரு இந்தியன் தனக்கு ஈடாக இங்கிலீஷில் பேசுவதை பொறுக்காத அதிகாரி, கோபத்துடன்   “மரத்தை வெட்டறதுமில்லாம, திமிரா பேசும் இவனை மரத்தில் கட்டி வைங்க என உத்திரவிட்டான். அவரது உத்தரவை செயல்படுத்த தயங்கிய ஊழியர்கள், சார்! இவர் பெரிய மகான், இவரை தண்டிச்சா நமக்குதான் ஆபத்து, என தாங்கள் பயப்படும் காரணத்தை சொன்னாங்களாம்.
நிலத்தம்பிரானின் சின்ன வயசில், பாம்பு கடிப்பட்ட ஒருவனை காப்பாற்றினார்.  மாடு மேய்க்கும் சிறுவன் எப்படி வைத்தியம் செய்தான் என ஊரார் அவரை விசாரிக்க, எல்லாம் சென்னியாண்டவர் அருள் என நிலத்தம்பிரான் சொன்னார், அன்றிலிருந்து இதுமாதிரியான சின்னசின்ன அபூர்வங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.  மெல்ல மெல்ல அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பணமும் சேர ஆரம்பித்தது. சென்னியாண்டவருக்கு கோவில் கட்ட ஆரம்பித்தார்.
Image may contain: outdoor

கோயில் கட்டுபவருக்கு கூலி கொடுப்பதே ஒரு வித்தியாசமான நிகழ்வு. கூலிப்பணம் கொடுக்கும் நாளன்று, பொரிமூட்டையை கொண்டு வந்து  கொட்டி, அதில் கடலையோடு பணத்தையும் கொட்டி நன்றாக கலக்குவார். ஒவ்வொரு கூலியாட்களாக வர, அவருக்கு ரெண்டு கைகளாலும் அள்ளி பொரியை கொடுப்பாராம். அவரவர் செய்த வேலைக்கான கூலி மிக துல்லியமா இருக்குமாம். இப்படி தம்பிரானின் அருமைகளை சொல்லிக்கொண்டு வந்தார் பணியாள்.
Image may contain: outdoor

நிலத்தம்பிரான், அதிகாரியை நோக்கி,  உமது மனைவி, உம்மை கொல்ல கொள்ளிக்கட்டையோடு திமிர்க்கொண்டிருக்கிறாள். சீக்கிரம் வீட்டுக்கு போங்கள் என சொல்ல, விழுந்தடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்த அதிகாரி, அங்கு மனைவி சித்தம் கலங்கி இருந்ததை கண்டு, தனது தவறினை உணர்ந்து, நிலத்தம்பிரானிடம் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வந்து மன்னிப்பு கேட்டார்.தன்னிடமிருந்த விபூதியை பூசி அதிகாரியின் மனைவியை குணப்படுத்தினாராம் நிலத்தம்பிரான். 
Image may contain: tree and outdoor
தல விருட்சமான பன்னீர் மரம்..

பின்னர், தம்பிரான் தேர்ந்தெடுத்த மரத்தினை அதிகாரியே வெட்டி கொண்டுவந்து சென்னிமலையில் சேர்ப்பித்தார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இன்றும் இருக்கும் அந்த முன்கதவுதான் அது. அந்த கதவு ஒற்றை மரத்தால் ஆனது. கோயில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த  சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார்.
Image may contain: cloud, sky and outdoor

லைப்படியருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேல முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள். மகா மண்டபத் தூணில் நிலத்தம்பிரானது சிலை இருக்கு. அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சாரியார் ஒருத்தர் வந்து பூஜை செய்து, வில்வ மரப்பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒருநாள் சிவாச்சாரியார் வராததால் நிலத்தம்பிரானே பூஜை செய்தார். அப்போது உயரம் குறைந்த  தம்பிரானுக்காக ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி பொட்டை தன் நெற்றியில் ஏற்றுக் கொண்டாராம்.அதனால் இப்போதும் அந்த சிலை தலை தாழ்த்தியபடியே இருக்கிறதாம்!


Image may contain: tree and outdoor

1,320 படிக்கட்டுகள் கொண்ட பாதை வழியாகவும், முடியாதவங்க வாகனத்துல போகும்படி மலைப்பாதை வசதியும் இருக்கு.  நடைப்பாதை வழியா  போனால் கடம்பவனேஸ்வரர், கந்தர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை  தரிசிக்கலாம்.  வள்ளியம்மன் பாதம் `முத்துக்குமார சாவான்' என்னும் மலைக்காவலர் சந்நிதி,  வரும் ஆற்றுமலை விநாயகர் சந்நிதியையும் தரிசித்து, படி ஏறினால்  திருக்கோயிலை வந்து சேரலாம்.

Image may contain: one or more people, tree, shoes, plant, sky and outdoor

உள்ளே நுழைந்ததும் எப்பவும்போல் வினாயகர் புளியடி வினாயகர்ன்ற பேரில் நம்மை வரவேற்றார். கருவறையில் சுப்ரமணியசுவாமி என்ற பெயரில்  மூலவர் அருள்பாலிக்கிறார். ஆண்டவருக்கு வலப்புறம் உமையவல்லி சமேத மார்கண்டேஸ்வரரும் இடப்புறம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரும் நமக்கு அருள்பாலிக்கின்றனர். 
Image

சென்னிமலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவன், தன் பசுமாடு ஒன்று, ஓரிடத்தில் பால் தானாய் சுரப்பதை கண்டார். தினமும் அதே இடத்தில் அந்த பசுமாடு பால் சொரிவதை கண்டு, என்னவாய் இருக்குமென அந்த இடத்தை தோண்டி பார்க்க, அழகிய முருகன் சிலை ஒன்று இருப்பதை கண்டார். மேலும் தோண்டி அதை வெளியில் எடுக்க தோண்டும்பொழுது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். பயந்து, மலையிலிருந்த சரவணமாமுனிவரை கேட்க, இப்படியே காட்சி தர முருகன் விரும்புகிறான் போல! அதனால், மேலும் தோண்டவேண்டாம் என சொல்ல,  மேலும் தோண்டாமல் நிறுத்திவிட, அன்றிலிருந்து இன்றுவரை அச்சிலை அப்படியே பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது. 
Image may contain: outdoor


இத்தலத்தில் மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக செவ்வாய் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.  மூலவரை சுற்றி மீதமிருக்கும் எட்டு நவகிரகங்களும்  வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வணங்கியதற்கு ஈடாகுமாம்.  செவ்வாய் தோசமுள்ளவர்கள், இங்கு வந்து தீபமேற்றி சென்னியாண்டவரை வழிபட்டால் தோஷம் நீங்கிவிடுமாம்.  மேலும் இங்குள்ள முருகனுக்கு இரண்டு தலைகள் இருக்கும். இது அக்னிஜாத தலம் என்பதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். 

நல்ல புத்தியை கொடுப்பான்னு சாமியை நல்லா கும்பிட்டுக்கிட்டு பிரசாதம் வாங்கிக்கிட்டு எப்பவும்போல பிரகாரத்தை சுற்றிவர தொடங்கினோம். கருவறைக்கு நேர் பின்னால்,    சில படிக்கட்டுகள் மலைக்கு மேல் போச்சு. அப்பாவால் மலை ஏறமுடியாதுன்னு நாங்களும் போகலை. மகளாக கோவிலுக்கு போகல. ஆனா, பதிவரா படங்களை கூகுள்ல சுட்டாச்சுது. அந்த படிக்கட்டுகளை ஏறிப்போனால்,  வள்ளி, தெய்வானை கோவிலுக்கு போகலாமாம். 
Valli Deivanai shrine (2)

கூகுள்ல சுட்டது...
முருகனுக்கு பக்கத்தில் வள்ளி, தெய்வானையை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இப்படி தனித்தனி சன்னிதியில் இருவரும் வீற்றிருப்பது புதுசு கண்ணா புதுசு. வள்ளியும், தெய்வானையும்  முன் ஜென்மத்துல அமிர்தவல்லி, சுந்தரவல்லின்ற பேரில் முருகனையே திருமணம் செய்துக்கனும்ன்னு இங்கதான் தவம் இருந்ததாய் சொல்றாங்க. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட வள்ளி தெய்வானையின் கற்சிலைக்கு நடுவில் கீழ் ஒரு அற்புத லிங்கமும் இந்த சிலையிலே இருக்குதாம்..
Image result for pinnakku siddhar chennimalai
கூகுள்ல சுட்டது..

வள்ளி, தெய்வானை அம்மன் சன்னதியிலிருந்து மேலும் படியேறி மலைக்கு போனா,  மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின்நாக்கு (புண்ணாக்கு) சித்தர் வாழ்ந்த குகை இருக்கு. அங்கு, வேல்கள் நட்டு வேல்கோட்டமா இருக்காம்.  இதுக்கு பக்கத்தில்தான், சரவணமா முனிவரின் சமாதியும் இருக்காம். மேலும், பல முனிவர்கள் வசித்த குகைகளும் இங்கதான் இருக்கு. 
No photo description available.
 ஸ்ரீபின்நாக்குச் சித்தர்  நவகிரகங்களில் சுக்கிரனைப் பிரதிபலிக்கும். இவரை, வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டால், சுக்கிர தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.  இங்கு மாதம்தோறும் உத்திரம் நட்சித்திரத்தன்று `ஸ்ரீமஹா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவியின் சென்னிமலை ஸ்ரீபின்நாக்கு சித்தர் அன்னதான அறக்கட்டளை' சார்பா விசேஷ அபிஷேக ஆராதனையும்  அன்னதானமும் நடக்குமாம்.
Pinnakku Siddhar shrine (4)

சுப்ரபாதத்திற்கு அடுத்தபடியா பெரும்பான்மையான வீட்டில் ஒலிப்பது கந்தர் சஷ்டி கவசம்தான். அந்த கந்தர் சஷ்டி கவசம் இந்த கோவிலில்தான் பாடியதாக சொல்றங்க.  சென்னிமலைக்கு சொந்தமான மடவிளாகம்ன்ற ஊரில்  பாலன் தேவராயன் என்பவர் வசித்து வந்தாராம்.  கந்தர் சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை திருக்கோயிலே தகுந்த இடம்ன்னு முருகப்பெருமான் பாலன் தேவராயனுக்கு உணர்த்த, இந்தத் திருக்கோயிலுக்கு வந்து  கந்தர் சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ததாக சொல்றாங்க. ஆனா, இதுக்கு ஆதாரம் ஏதுமில்லை. 
சித்தர் பாதம்... (கூகுள்ல சுட்டது..)

இத்தலத்து முருகனை குலதெய்வமாய் கொண்டவர்கள்,  தங்களின் குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், கோயிலுக்கு வந்து மூலவருக்கு அர்ச்சனை செய்து, முருகப் பெருமானின் சிரசுப்பூ உத்தரவு கிடைத்த பிறகே முடிவு செய்வாங்க. புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டவங்க, குழந்தை வரம் இல்லாதவங்க, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுறாங்க, தீர்க்கசுமங்கலியாக இருக்க,  சந்நிதியின் முன்பு நின்று மாங்கல்யச் சரடு கட்டிக்கொள்வதும் இங்க வழக்கமா இருக்கு. அதேமாதிரி, இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் புளியமரத்தில் `சந்தானகரணி’ என்னும் சித்திப் பொருள் இருப்பதாகவும், அந்த மரத்தினடியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


12.2.1984 அன்னிக்கு, இரட்டை காளைகள் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று, 1000க்கும் மேற்பட்ட படிகளில்  மலைக்கோவிலுக்கு சென்ற அதிசயம் நடந்த இடமாகும். அன்றிலிருந்து  மூலவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியம் செய்யவும் மலையடிவாரத்தில் இருந்து மாமாங்க குளத்திலிருந்து தண்ணீரை கொண்டு வர,  இரண்டு காளைகளை கோவில் நிர்வாகம் வளர்த்து வருகிறது. மாடுகள் படி ஏற சிரமப்படும். அதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகளை ஏறுவதென்றால்?! ஆனா, காளைகள் சிரமப்படாம ஏறுது. இந்த அதிசயத்தை காணவே அதிகாலை வேளையில், கோவிலில் பக்தர்கள் கூடுவார்களாம். 12 வருசத்துக்கொருமுறை எப்பேற்பட்ட கடுங்கோடையிலும்  இந்த மாமாங்க தீர்த்தளம் பொங்கி வழிந்தோடுமாம். 

இக்கோவிலுக்கு ஈரோட்டிலிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் போனால் 33 கிமீ.  பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை இருக்கு. தினமும் காலை 6 மணி டூ 11 மணி வரையிலும், மாலை 4 மணி டூ இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், உள்ளிட்ட முருகனுக்கு உண்டான அத்தனை பண்டிகைகளும் இங்கு விசேசமாய் கொண்டாடப்படுது. 

நன்றியுடன்,
ராஜி

10 comments:

 1. சிறப்பான தகவல்கள். இது மாதிரி பதிவுகளில் சிறந்து விளங்குகிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றி சகோ

   Delete
 2. இந்த பதிவில் கொடுத்துள்ள தகவல்கள் எல்லாம் எனக்கு புதிது...

  ReplyDelete
  Replies
  1. ஆகா!இதை நான் நம்பனும்?! நம்பிட்டேன்ண்ணே

   Delete
 3. கோயம்புத்தூர் பிஎஸ்ஜி டெக் என்று பார்த்ததுமே கோயம்புத்தூர் நினைவுகள். டெக் க்வாட்டர்ஸ்ல மூன்று வருடம் இருந்தோம்.

  ஊரும் நல்லாருக்கும் இப்போது அங்கும் பல மாறுதல்கள். அப்போது உறவினர் வரும் போது கோவைக்குற்றாலம் போயிருக்கிறோம் அருமையான இடம்.

  சரி கடைசில உங்க பொண்ணு அட்மிஷன் என்னாச்சு?

  படங்கள் எல்லாம் அருமை...தகவல்களும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அட்மிஷன் கிடைக்கலை கீதாக்கா. ரொம்ப ஆர்வமாய் இருந்தோம். இப்ப வேற காலேஜில்தான் சேர்த்திருக்கு.

   Delete
  2. நானும் கேக்க நினைத்தேன் ...

   Delete
 4. படங்களும் தகவல்களும் சிறப்பு.

  மகள் அட்மிஷன் பற்றி நானும் கேட்க நினைத்தேன் - கீதாஜி ஏற்கனவே கேட்டு இருக்காங்க. நல்லபடியாக கல்லூரியில் இடம் கிடைக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கல்லூரியில்தான் இடம் கிடைச்சிருக்கு. ஆனால் நாங்க எல்லாரும் விரும்பிய பி.எஸ்.ஜியில் கிடைக்கலைண்ணே.

   Delete


 5. சென்னிமலை தரிசனம் கிடைத்தது ராஜி க்கா ..

  தினமும் மாலை எங்க வீட்டில் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்கும் அப்பொழுது போன வாரம் பையன் கேட்டான் ....கந்த குரு கவசம் ..கந்தஸ்ரம்த்தில் பாடின மாதரி இது எங்க ன்னு தெரில பா ன்னு சொன்னேன்...


  இப்போ உங்க பதிவை பார்த்து அவனுக்கும் காட்டி நானும் தெரிஞ்சுகிட்டேன் ,....நன்றி ராஜி க்கா

  ReplyDelete