Friday, August 16, 2019

தொள்ளைக்காது சித்தர் - பாண்டிச்சேரி சித்தர்கள்

இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையில் கடவுளுக்கு எப்படி முக்கியத்துவம் உண்டோ அதே அளவுக்கு அவரை நம்பி வழிப்படும் அடியார்களுக்கும் உண்டு. இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாய் செய்த தியாகங்கள், இறையின்பால் பாடிய பாடல்கள், இறைவனின் மகிமைகளை நாடு முழுக்க பரப்பியதால் அடியவர்களை சைவ, வைணவ முறைப்படி நாயன்மார்கள், ஆழ்வார்கள் என அழைப்பர். மனிதன் என்பவன் தெய்வமாகலாம்ன்னு சினிமா பாட்டே இருக்கு. அதுப்படி, மனிதனாய் பிறந்தவர் தான் வாழ்ந்த வாழ்க்கை, அவரால் பிறர் அடைந்த நன்மைகள், அவர்தம் இயற்கையோடு இழைந்த வாழ்க்கை, இயற்கை அளித்த கொடைகளை கொண்டு அவர்கள் நிகழ்த்திய சித்து லீலைகளை பொறுத்து   இறைவனின் அடியார்களை சித்தர்கள் என வகைப்படுத்துவர். இறைவழிப்பாட்டோடு சித்தர்கள் வழிபாடு இப்ப பரவலாய் நடத்தபடுது. இனிவரும் வாரங்களில் நாம சித்தர்களின் ஜீவ சமாதிகளை பார்க்கலாம். சித்தர்கள் வழிபாடு தமிழகம் முழுக்க இருந்தாலும்,  பாண்டிச்சேரியை சுற்றி எண்ணிலடங்கா சித்தர்கள் ஜீவசமாதிகள் இருக்கின்றன. ”தண்ணீரில்” தாராளமாக சூழப்பட்டிருக்கும் பாண்டிச்சேரி கடலில் மூழ்காமல் காப்பது இந்த சித்தர்களின் சமாதிகளே என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை.
பண்டையக்காலங்களில் வேதபுரி, வேதபுரம், அகத்தீஸ்வரம், ஞான பூமி ,சித்தர்கள் பூமி, பாண்டிச்சேரி, புதுச்சேரி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் புதுச்சேரி நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம் ஏன்னா எவ்வளவு வேகமா நாம போகிறோமோ அவ்வுளவு வேகமா சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கலாம். எந்த ஒரு காரியத்தை தொடங்குவது என்றாலும் விநாயக பெருமானை வணங்கிவிட்டே தொடரவேண்டும் என்பதற்க்காக எங்கள் குழு முதலில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட்டோம். இந்த கோவிலுக்கு ஏன் மணக்குள விநாயகர்ன்ற பெயர் வந்ததுன்னா கடலுக்கு அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என முதலில் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் இது மருவி மணக்குள விநாயகர் என அழைக்கப்படுகிறார்ன்னு சொல்றாங்க. புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்னயே இந்த கோவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கி இருக்கும் இந்தக்கோயில் முன்பு பவனேஸ்வர் விநாயகர் என்றுதான் அழைக்கப்பட்டதாம். அப்ப இருந்த மக்கள் இவரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றே அழைத்தார்களாம். பல பிரசித்தி பெற்ற தனி விநாயகர் ஆலயங்களில் இந்த மணக்குள விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயம் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்னாலேயே அதாவது  1666ம் ஆண்டுக்கு முன்னாலாயே இந்த கோவில் இருக்குன்னு சொல்லப்படுது .
இந்த கோவிலின் வெளிப்புற சுவர்கள் வண்ணம் பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. அதைத்தாண்டி கோவிலுக்குள் நுழையும்முன் நம்மை அங்கிருக்கும் ஒரு விநாயகர் வரவேற்கிறார். கோவிலின் உட்பகுதி அழகாக சுத்தமாக வைத்துள்ளனர். மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல காட்சிகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த விநாயகரை பலமுறை பிரஞ்சு அரசு  இதனை அகற்ற முற்பட்டனர். அதற்குப்பிறகு வந்த பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கு இடையூறாக இருந்த இந்த கோவிலை பலமுறை இடிப்பதற்கு முயற்சி செய்தனராம்.  ஆனா, பக்தர்களின் முயற்சியாலும் ,உள்ளூர் மக்களின் முயற்சியாலும் பலமுறை இக்கோவில் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டதாம். அதனால் ஆத்திரமடைந்த பிரஞ்சு அரசு இந்த கோவிலுக்கு திருவிழா நடத்த தடைவிடுத்தனர். கொஞ்சகாலம் திருவிழாக்கள் ஏதுமின்றி இக்கோவில் இருந்ததாம். அதன்பிறகு வந்த பிரஞ்சு கவர்னர் டூப்லேவின் முயற்சியால் விநாயகருக்கு மீண்டும் திருவிழா எடுக்கப்பட்டதாம். 
இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னனா, தனிக்கோவில் கொண்டுள்ள விநாயகர் சன்னதியில் தங்கத்தாலான மூலவர் கோபுரம் இருப்பது  இந்த தலத்தில்தான் என சொல்லப்படுகிறது. அதேப்போல இங்குதான் விநாயகருக்கு சித்தி, புத்தி என்னும் மனைவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் மூலவருக்கு அருகில் இருக்கும் சிறிய குழியில் இருந்து வற்றாமல் நீர் வந்துகொண்டே இருக்கிறது.  இவ்வளவு  சிறப்புவாய்ந்த இந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு என்னன்னா இங்க ஜீவசமாதியாக இருக்கும் தொள்ளைக்காது சித்தர்தான் தினம் தினம் விநாயகரை தரிசிக்க வரும் பக்தர்கள் இவரையும் தரிசிக்க தவறுவதில்லை. ஸ்ரீதொள்ளைக்காது சித்தரின்  ஜீவசமாதி அவர் வணங்கிய மணக்குள விநாயகர் கோவிலுக்கு உள்ளேயே அமைந்து உள்ளது. இந்த சமாதி கோவில் கருவறைக்கு பின்புறத்தில் உள்ளது.
இந்த தொள்ளைக்காது சுவாமிகளின், இயற்பெயர் என்ன?! தாய் தந்தையர் யார் எப்பொழுது பிறந்தார்?! எங்கிருந்து வந்தார் என்பதுயாருக்கும் தெரியாது. ஆனால் எப்போதும் புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில்தான் அமர்ந்திருப்பாராம். இவருக்கு சிறிய வயதாக இருக்கும்போதே தந்தை தவறிவிட்டாராம். இளவயதிலேயே  தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு அதில் விருப்பம் இல்லாமல் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக்கொண்டே சித்தபிரமை பிடித்தவர்போல நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன்தான் தந்நிலை அடைந்தாராம். பின்னர், அங்கிருந்த முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று, அங்கேயே தங்கி இடைவிடாது அம்மனை வேண்டிக்கொண்டிருந்தார்.  அப்பொழுது அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனம் கிடைத்தவுடன் ஞானமோன நிலைக்கு சென்று யாவற்றையும் உணர்ந்தார்.. அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. அன்றிலிருந்து  வாய் பேசா ஊமையானார். உடனே அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார்.
தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டுவிட்டு  பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். இது அவரின் தினசரி வாடிக்கையானது. சுவாமிகள் எங்கிருக்கிறார்?! என்ன செய்கிறார்?! என்பதை மக்களால் கண்டுக்கொள்ள இயலவில்லை. ஆனால், யார், என்ன துன்பம் என்று சுவாமிகளை தேடி வந்து முறையிட்டாலும் அவர்களின் துன்பம் பறந்தோடியது. நோயாளிகள்,  துன்பத்தில் தவிப்போரது பிரார்த்தனைகள் சுவாமிகள் தரிசனத்திலேயே ஈடேறியது. சுவாமிகள் அருளுடலில் ஆத்ம பேரொளி வீசத்தொடங்கியது. வேறு சிலரோ சுவாமிகள் முகத்தில் பலநாள் மீசை தாடியோடு அழுக்கடைந்த வேஷ்டியுடன்- பார்க்க ஒரு ஆண்டியைபோல் இருந்ததினால்-மக்கள் அவரை ”ஆண்டி” என்று அழைத்தார்கள்.அவரின் முரட்டுத்தனமான செய்கையை கண்ட மக்கள் அவரை “முரட்டு ஆண்டி” என்று அழைத்து வந்தனர். என்றும்  காலப்போக்கில் அவர் தங்கியிருந்த ஊர் அவர் பெயரைக்கொண்டே “முரட்டாண்டி சாவடி” எனவும், ”முரட்டாண்டி” எனவும் வழங்கப்படலாயிற்று என்றும் சொல்கின்ற்னர்
அந்த காலத்தில் சுவாமிகளின் பெயர் காரணத்தினால் முரட்டாண்டி சாவடி என்று அழைக்கப்படுவதை பிரஞ்சு அதிகாரிகள் அப்படி அழைப்பதை தடைசெய்தனர்.  காரணம், ஒரு ஆண்டியின் பெயரால் ஒரு கிராமம் இருப்பதா,  என பொறாமைகொண்டு அப்பொழுதைய கவர்னரான துய்ப்ளேக்ஸ், ”துய்ப்ளேக்ஸ் பேட்டை”  “என்ற பெயரை அக்கிராமத்திற்கு நிறுவினார். மேலும், ”முரட்டாண்டி சாவடி”-என்று சொல்லுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா செய்தனர்.இதனைக் கண்ட மக்கள் பிரஞ்சு அதிகாரியிடம் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர்.

முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக்கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய சுவாமிகளுக்கு அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள், தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.தொள்ளைக்காது சித்தர்.
அங்கிருந்து மணற்குளத்து பிள்ளையாரை வழிபட, தினமும் இரு வேளையும் செல்ல சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் இருந்தது .பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் ஸ்வாமிகளுக்கு   மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம். பின், முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார். பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார். காலங்கள் சென்றன. ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார். அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்று அழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.
பிரெஞ்சு மக்கள் இவரை வணங்க ஆரம்பித்து உபசரிப்பு தரிசனம் என்ற பெயரில் இவரை சந்திக்க முயன்றனர். இதனால் அவர் கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பி அருகிலிருந்த மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு சென்றார். அடர்ந்த தோப்பு மணற்கேணி அருகில் ஒரு பிள்ளையார் கோவில்  இதுவே அவருக்கு மனதில் அமைதியை தோற்றுவித்தது. இவர் சித்து வேலைகள் தொடர்ந்ததால் எப்போது எங்கு இருப்பார் என்று சரியாக யாராலும்   தெரிந்துக்கொள்ள முடியாது. காலங்கள் சென்றன. இறைவனின் அழைப்பை அறிந்தார். மணற்குளத்து பிள்ளையார் அருகிலேயே தான் சமாதியாக விருப்பம் கொண்டார். தன் எண்ணத்தை பிள்ளையார் கோவில் அருகில் வசித்து வந்த மீனவ மக்களிடம் தெரிவித்தார்.அவர் வேண்டுகோளின்படி அவர் மறைவிற்குபின் அவருடைய உடல் பிள்ளையாருக்கு அருகிலேயே மணற் குளத்தங்கரையில் அப்பகுதி மீனவர்களால் கரும காரியங்கள் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டது. அந்த ஆண்டி தொள்ளைக்காது சித்தரால் தான் அருள்மிகு ஸ்ரீமணக்குள விநாயகர் ஆலயம் இன்று புதுவையிலேயே மிகச் சிறந்த ஆலயமாக திகழ்கிறது.

சுவாமிகளை, முழுவதுமாக நம்புவோர்க்கும் உள்ளன்போடு தியானிப்போருக்கும் சித்தரின் பரிபூரண அருள் கிடைப்பதை இங்கு வந்து தரிசனம் செய்பவர்கள் கண்ணார காண்கிறார்கள். இந்த கோவிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னன்னா , பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த பாரதியார்  இந்த ஸ்தல  விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் மேலுமொரு சிறப்பு.பாண்டிச்சேரி பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது.  இந்த மணக்குள விநாயகர் ஆலயம் .மீண்டும் ஒரு சித்தர் சமாதியில் இருந்து அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்
நன்றிடன்
ராஜி 

10 comments:

  1. முரட்டாண்டி சாவடி பற்றிய விளக்கம் அரைகுறை...

    மணக்குளத்து விநாயகர் எனது அண்ணன்... ?:-

    அது தான் விரைவில் சந்திக்க போகிறோம்... அப்போது...

    நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நாம் வாழ்ந்த காலம் வேறு ,சம்பவங்கள் நடந்த காலம் வேறு ,எல்லாமே கேள்வி ஞானத்தில் தொகுக்கப்பட்டவைகள்.முன்பெல்லாம் எல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகளின் அடிப்படையில் சிலவற்றை மேற்கோள் காட்டுவேன்.இந்த பதிவு நான் சென்றுவந்த ஸ்தலங்களின் அடிப்படையில் பதிவு செய்தேன்.சரியான விளக்கம் சொன்னால் நானும் என் பதிவில் திருத்துவதோடு அல்லாமல்,பலரும் உண்மையான காரணங்களை தெரிந்து வைத்துக்கொள்வார்கள். நன்றிங்கண்ணே

      Delete
  2. கடலூரில் நான் இருந்தால் பலமுறை மணக்குள விநாயகரையும் அங்குள்ள சந்நிதி களையும் தரிசித்து இருக்கிறேன். தங்கள் கட்டுரை விரிவாகவும் தெளிவாகவும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கடலூரில் இருந்து பக்கம் அல்லவா ,கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து செம்மண்டலம் செல்லும் ஆற்றுக்கரை வழியில் கூட ஒரு சித்தர் சமாதி இருக்கிறதுப்பா .உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிப்பா ...

      Delete
  3. சில முறை மணக்குள விநாயகர் ஆலயம் சென்று வந்ததுண்டு.

    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கண்ணே,நான் சித்தர்கள் சமாதிகளை மட்டும் தரிசித்துவிடவேண்டும் என்று ஒருநாள் சென்ற இடங்களை பற்றி பதிவு செய்துள்ளேன்.

      Delete
  4. பாண்டிச்சேரியில் இருந்தவரை பெரும்பாலும் டவுன் சென்று மணக்குளவிநாயகர் ஆசிரமம் என்று அந்தப் பகுதிகள் எல்லாம் நிறைய சுற்றிய நினைவுகள் ராஜி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,உங்கள் வருகைக்கு நன்றி..உங்க ஊர் கோவில் பற்றி எழுதினேன்.அங்கே நீங்க சென்று தரிசனம் செய்துஇருப்பீர்கள்.வட இந்திய கோவில்கள் போன பொழுது சில கோவில்கள் எழுதினேன்,எனக்கு முன்னமே அங்கே சென்று முதலாவது நானேதான் சென்றேன் கிரெடிட் நீங்க வாங்கிட்டிங்க,பாண்டிச்சேரியிலையும் நீங்களே முந்திக்கிட்டிங்களா...இருங்க அடுத்த சித்தர் ஜீவசமாதி பத்தி எழுதுறேன்.நீங்க போயிருக்கிறீங்களான்னு பார்ப்போம்.உங்க ஊர்லயும் இன்னும் சில கோவில்களை பாக்கி இருக்குங்க கீதா ...

      Delete
  5. பாண்டிச்சேரி பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன் சகோதரி.

    இதுவரை சென்றதில்லை

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அழகான கோவில்,ஒருமுறை சென்றுவாங்க....அப்படியே நிறைய சித்தர் சமாதிகளும் அங்கே தரிசனம் செய்யலாம்,உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

      Delete