Tuesday, September 03, 2019

கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

Image may contain: plant, flower, nature and outdoor
ஆரணிக்கு பக்கத்தில் படைவேடுன்னு ஒரு ஊர் இருக்கு. அங்க புகழ்பெற்ற  ரேணுகாம்பாள் ஆலயம் இருக்கு.  அங்கு அம்மன் கோவில் மட்டுமில்லாம அந்த ஊரில் விளையும் புளி, இளநீர், கத்தரிக்காய், தக்காளிக்கென தனி மவுசு எங்க ஊரில் உண்டு. அதிகாலையில் எங்க ஊர் உழவர் சந்தையில் கீரைகள், பப்பாளி, தேங்காய், தென்னந்துடைப்பம்ன்னு கடை விரிச்சிருப்பாங்க. வயலட் கத்தரிக்காய், வெள்ளை கத்தரிக்காய், நாம கத்தரிக்காய்ன்னு எத்தனையோ விதங்கள் கத்தரிக்காய் இருந்தாலும், எங்க ஊர் கத்தரிக்காய் ருசிக்கு ஈடாகாது.
Image

காம்பில் சின்ன சின்னதா முட்கள் இருப்பதால் இதற்கு முள் கத்தரிக்காய்ன்னு எங்க ஊர்பக்கம்  பேரு வச்சிருக்கோம். வயலட் நிறத்தில்  மினுமினுன்னு  குண்டு குண்டாய் இருக்கும். எல்லா கத்தரிக்காயிலும் காம்பையும், கத்தரிக்காயையும் இணைக்கும் பாவாடை பகுதி பிஞ்சாய் இருக்கும்போது ஒட்டிக்கிட்டு இருக்கும். காய் பெருசாக ஆக... பாவாடை பகுதி சிறிதாய் ஆகி, கத்தரிக்காயிலிருந்து பிரிஞ்சு இருக்கும். ஆனா, எங்க ஊரு கத்தரிக்காய்ல பாவாடை பகுதி பெருசாவும், காய் பெருசானாலும் காயோடு பாவாடை ஒட்டிக்கிட்டும் இருக்கும்.  சாம்பார், காரக்குழம்பு, பொரியல், அவியல்ன்னு ஒருமுறை எங்க ஊர் கத்தரிக்காயை சமைச்சு சாப்பிட்டால் அதன் ருசியை மறக்கவே மாட்டாங்க.  அரிசி, பருப்பு மாதிரி கத்தரிக்காய் எங்க வீட்டில் எப்பயும் ஸ்டாக் இருக்கும். 

எங்க வீட்டு பசங்களுக்கு, புதுசா வாங்கின குட்டியூண்டு பிஞ்சு கத்தரிக்காயை லேசாய் கீறி முழுசா போட்டு காரக்குழம்பு வைக்கனும். இதுக்காகவே பார்த்து பார்த்து வாங்குவேன்.  கத்தரிக்காய் காரக்குழம்பு எப்படி வைக்குறதுன்னு பார்க்கலாம். எங்க ஊரு கத்தரிக்காய்ன்னு இல்ல, எந்த ஊரு கத்தரிக்காய்லயும் இந்த குழம்பை செய்யலாம். ஆனா, ருசியில் நிச்சயம் வித்தியாசம் தெரியும். 

தேவையான பொருட்கள்...
வெங்காயம் 
தக்காளி
பிஞ்சு கத்தரிக்காய்(சின்ன சைஸ்)
எண்ணெய்
குழம்பு மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
சீரகம்-1/4 டீஸ்பூன்
சோம்பு-1/4 டீஸ்பூன்
கடுகு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு- 4 பற்கள்
உப்பு
புளி


 வாணலியில் கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி காய்ந்ததும்,  வெங்காயத்தை பெருசு பெருசா வெட்டி லேசாய் வதக்கனும்.. வெங்காயம் லேசாய் நிறம் மாறினாலே போதும்.  
இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கனும்...
தக்காளி சேர்த்து வதக்கனும்...
மிளகாய் தூள் சேர்த்து வதக்கனும்..

மஞ்சப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்..
 சீரகத்தை சேர்த்து வதக்கனும்,
 சோம்பு சேர்த்து வதக்கி அடுப்பை அணைச்சு, ஆறவச்சு கொரகொரப்பா அரைச்சுக்கனும்..
கத்தரிக்காயின் நுனிகாம்பை மட்டும் வெட்டிட்டு, கத்தரிக்காயின் பின்பக்கம்  ஆறு, ஏழு, எட்டு என கத்தரிக்காயின் முக்கால் பாகம் வரைக்கும் வெட்டிக்கனும். முழுசா வெட்டாம கவனமா இருக்கனும். வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும், வெட்டி வச்சிருக்கும் முழு கத்தரிக்காயினுள் அரைச்சு வச்சிருக்கும் விழுதினை தடவி எண்ணெயில் வதக்கி எடுத்துக்கனும்.  

மிச்சமிருக்கும் எண்ணெயில் கடுகு, வெந்தயம் போட்டு வெடிக்க விடனும்...
வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கனும்.. சின்ன வெங்காயமா இருந்தால் குழம்பின் ருசி கூடும். எங்க ஊர் பக்கம்லாம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60க்கு குறைவா கிடைக்காது. அதனால், எப்பயுமே பெல்லாரி வெங்காயம்தான்.
கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்து வதக்கனும்..
அரைச்சு வச்சிருக்கும் விழுதினை சேர்த்து வதக்கனும்..
தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்க்கனும்..
வதக்கி வச்சிருக்கும் கத்தரிக்காயை சேர்த்து கொதிக்க விடனும்..
கொதிச்சு பச்சை வாசனை போனதும், கத்தரிக்காய் வெந்தபின் புளிக்கரைச்சலை சேர்த்துக்கனும்.
Image may contain: food
அவரவர் விருப்பப்படி பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைச்சுடனும். கொஞ்சம் கெட்டியா இருந்தால்தான் இந்த குழம்பு நல்லா இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துக்கு நல்லா இருக்கும்.

நன்றியுடன்,
ராஜி

17 comments:

  1. சுவையான காரக் குழம்பு. இங்கே சில சமயங்களில் மட்டுமே சின்னச் சின்ன கத்தரிக்காய் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு எப்பவும் கிடைக்கும். நான் எப்ப வாங்கினாலும் குட்டியூண்டா இருக்குறதா பார்த்துதான் வாங்குவேன்

      Delete
  2. எப்பவும் போலவே உங்களுடைய சமையல் பதிவு சூப்பர். படங்கள் எப்படிங்க இவ்வளவு சூப்பர் எடுக்கறீங்க. அருமை!

    ReplyDelete
    Replies
    1. நான் படங்களை சூப்பரா எடுக்கிறேனா?! இது வஞ்சப்புகழ்ச்சி இல்லியே!

      Delete
  3. சோம்பு, ஜீரகம்,இஞ்சி, பூண்டு இல்லாமல் செய்வேன். :)))) குழம்பில் சோம்பு, ஜீரகம், இஞ்சி வாசனை பிடிக்கிறதில்லை.பூண்டு சாப்பிடுவது இல்லை.மற்றபடி இந்தச் சின்னக் கத்திரிக்காயில் குழம்பு மட்டுமில்லாமல் ரசவாங்கி என்றும் பண்ணுவோம். அதுக்குத் தான் மசாலாவை அடைக்கிற வழக்கம். இந்தக் குழம்புக்குச் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை, சிவப்பு மிளகாய்களோடு கருகப்பிலை, கடுகு, வெந்தயம் தாளித்துக் கொண்டு எல்லாவற்றையும் நன்கு வதக்கிக் கொண்டு குழம்புப் பொடி போட்டுப் புளி கரைத்து விடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. சோம்பின் வாசம் குழம்பில் எனக்கே பிடிப்பதில்லை. ஆனா, பிள்ளைகளுக்கு பிடிக்குதேன்னு செய்வேன்ம்மா. ரசவாங்கி இதுவரை செய்ததில்லை

      Delete
  4. போன வாரம் இங்கே சின்ன வெங்காயம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விற்றது. தக்காளியும் கிலோ பத்து ரூபாய் தான், கால் கிலோ தக்காளி போதும் என்றால் நம்மவர் அரைக்கிலோவுக்குக் குறைந்து தருவதில்லை என்கிறார். :))))

    ReplyDelete
    Replies
    1. இங்க பெரிய வெங்காயமே 35க்கு விற்கிறது. சின்ன வெங்காயம் பக்கமே திரும்புவதில்லை

      Delete
  5. சூப்பர் ராஜிம்மா.நலந்தானே?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நலம்ப்பா. நான் உங்களை முகநூலில் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். வெற்றிலை பாக்கு, பழம், பால் சாப்பிட்ட உங்க வீட்டு பிள்ளையார் வரை...

      Delete
  6. உங்க அண்ணி கருவாட்டு குழம்புல இதை வெட்டிப்போட்டு சமைப்பதுண்டு, வெறித்தனமா சாப்புடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கிட்டும் அப்படி செய்வதுண்டுண்ணா

      Delete
  7. வெங்காயம், இஞ்சி பூண்டு இல்லாமல் செய்வோம். கத்தரிக்காயினுள் ஸ்டஃப் செய்வதும் புதிது, க த்தரிக்காயை நான்காய் பிளந்து பூச்சி எதுவும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டு முழுசாய் சேர்ப்போம்.

    கத்தரிக்காய் படம் மிகக் கவர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம் நானும் பூச்சி இருக்கான்னு பார்த்துட்டுதான் சேர்ப்பதே!

      கத்தரிக்காய் படம் கூகுளில் சுட்டது

      Delete
  8. அட்டகாசமா இருக்கு ராஜி க்கா..

    ReplyDelete
  9. வித்தியாசமான காரக்குழம்பு...

    ReplyDelete