Wednesday, June 24, 2020

ராமனின் பெண்பால்தான் இந்த மணிமேகலை - வெளிச்சத்தின் பின்னே...

சிலப்பதிகாரத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம் யார்ன்னு கேட்டா  யாரை சொல்வீங்க? மாதவியிடமும், பிறகு எமனிடமும் கணவனை பறிகொடுத்த கண்ணகியையா?! தாசிக்குலத்தில்  பிறந்து கற்பு நெறியோடு வாழ்ந்தாலும் சந்தேகம் கொண்ட கோவலனால் கைவிடப்பட்ட மாதவியையா?! ரெண்டு பெண்களோடும் வாழ்ந்து, பொய் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டுண்ட  கோவலனா?! அதிகாரிகளை நம்பி தீர விசாரிக்காமல்  தண்டனை வழங்கி தப்பென்று தெரிந்தபின் உயிர் விட்ட பாண்டிய மன்னனா?! அல்லது கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட பாண்டிமாதேவியா?! இல்லை வாழ்வில் எந்த சுகமும் அனுபவிக்காத மணிமேகலையா?! சிலப்பதிகாரத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம்ன்னா அது மணிமேகலைன்னுதான் நான் சொல்வேன்.  

ஏன் மணிமேகலையை பாவப்பட்ட கதாபாத்திரம்ன்னு சொல்றேன்னு இன்றைய வெளிச்சத்தின் பின்னே... பகுதியில் பார்க்கலாம்..


அட்சய பாத்திரம் கிடைச்சது.. ஊருக்கே பசிப்பிணி போக்கி நல்ல பேரு எடுத்தாள், நினைச்ச உருவம் எடுக்க முடியும்,  ஆகாய மார்க்கமா பயணிக்க முடியும், பௌத்தமதத்தில் புகழ்பெற்ற துறவி, மணிமேகலை காப்பியத்தின் நாயகி அவளுக்கென்ன குறைன்னு சொல்லலாம்.... ஆணோ, பெண்ணோ எந்த உயிரானாலும் தன் வாழ்வை தான் வாழ உரிமை உண்டு.  ஆனால்,  மணிமேகலையின் துறவறம் திணிக்கப்பட்ட ஒன்று.  அப்பா, அம்மா, செல்வம், இளமை என எல்லாம் இருந்தும் எதுவுமே அனுபவிக்காத (அனுபவிக்கவிடாத)வள்தான் இந்த மணிமேகலை..மணிமேகலையின் பெயர் சூட்டுவிழா கோலாகலமாக நடந்துக்கொண்டிருந்தது. ஆடல் பாடல், தான தர்மங்கள், விருந்து என மாதவியின் மாளிகையில் உற்சாகம் கரைப்புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.  தாசிக்குலத்தில் பிறந்திருந்தாலும் கோவலனையே கணவனாய் வரித்துக்கொண்டு எந்தவித சஞ்சலத்திற்கும் ஆட்படாமல் வாழ்ந்து வந்ததன் பலன், கோவலனும் மாதவியின் அன்பை புரிந்துக்கொண்டு அதற்கு ஈடாக, அவளை தன் மனைவியாய் மனதில் இருத்தி வாழ்ந்ததன் பலனாக அழகான பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது.  அந்த மகிழ்ச்சியைத்தான் அப்படி கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  தான தர்மங்கள் செய்ய தம்பதியர்கள் இணைந்தே செய்யவேண்டும் என்பது நியதி. கோவலன் மாதவியுடன் சேர்ந்து தான தர்மங்களை செய்ததால் அவன் மனதில் மாதவி தன் மனைவி என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என உணரலாம்.

கோவலனின் மூதாதையர்களில் ஒருவர் வாணிபம் செய்ய கடல் கடந்து செல்லும்போது கப்பல் உடைந்து நீரில் தத்தளிக்கும்போது மணிமேகலா என்ற கடல்தேவதை அவரை காப்பாற்றியது.  நன்றிக்கடனாக கோவலனின் வம்சாவளியினர் மணிமேகலா தெய்வத்தை குலதெய்வமாக வணங்கி வந்தனர். ஆகவே, தனது பெண்குழந்தைக்கு மணிமேகலை என பெயர் சூட்டினான் கோவலன். மணிமேகலையின் வளர்ச்சியை தினம்தினம் மாதவியும், கோவலனும் பார்த்து ரசித்து வந்தனர். இந்திர விழாவிற்கு செல்லும்போதுகூட மகளை பிரிந்திருக்க வேண்டுமே என உச்சிமுகர்ந்து முத்தமிட்டுதான் இருவரும் சென்றனர். இந்திரவிழாவில் மாதவியின் பாடலின் பொருளை உணராமல் கோவலன் மாதவியை சந்தேகித்து அவளை பிரிந்து கண்ணகியிடம் சேர்ந்தான்..


அங்கு, மொத்த செல்வமும், மாதவியின் அம்மா கோவலனை காட்டி வாங்கியதால் கண்ணகி ஏழ்மை நிலையில் இருந்தாள். பெரும் செல்வந்தரனாய் வாழ்ந்த சொந்த ஊரில்  ஏழையாய் வாழ விரும்பாத கோவலன் கண்ணகியுடன் மதுரைக்கு செல்கிறான். அங்கு தவறுதலாய் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டுண்டு இறக்கிறான். அவனது கொலைக்கு நீதிக்கேட்ட கண்ணகி மதுரையை எரித்து பின்னர் இடுக்கி மலையில் தெய்வமாய் நின்றாள்.

கோவலன் பிரிந்து சென்றபின் கோவலன் காணாத ஆடலையும் அவன் கேட்காத பாடலையும் இனி எக்காரணம் கொண்டும் தொடரமாட்டேன் என சபதம் கொண்டு கலைப்பணியிலிருந்து விலகி கோவலனுக்காக காத்திருந்தாள். தனது மகளை தாசிக்குல மகளாக எண்ணாமல் கோவலனின் குலக்கொழுந்தாகவே நினைத்து வளர்த்து வந்தாள். மணிமேகலை மாதவியைவிட பேரழகியாய் வளர்ந்து வந்தாள். கோவலன் - கண்ணகியின்  நிலையை கேட்டறிந்த மாதவி, மனம் நொந்து பௌத்த மதம் தழுவினாள்.  அதற்கு முன்பாக   அறவண அடிகள் முன் ஏழை எளியோர், கோவில், சத்திரத்திற்கு தனது திரண்ட செல்வத்தை கொடுத்தாள். பௌத்த மதம் ஏற்ற மாதவி புத்த மடம் சென்று தங்கினாள். உடன் மணிமேகலையும் அங்கு அழைத்து சென்று அவளையும் பௌத்தமதம் ஏற்க வைத்தாள். 

மாதவியும், மணிமேகலையும் பௌத்த மதம் தழுவியதை கேள்விப்பட்ட ஊர்மக்கள் பலவாறாய் பேச, மாதவியின் தாய் சித்ராபதி, மீண்டும் ஆடல் தொழிலை செய்யவும், மணிமேகலையை ஆடல் மகளாக அரங்கேற்ற செய்யவும் ஊருக்குள் வருமாறு, மாதவியின் தோழி வசந்தமாலையை மாதவியிடம் தூது அனுப்புகிறாள்.   மாதவி தனது சபதத்தை கூறி இனி நான் கலைத்தொழிலில் ஈடுபடமாட்டேன் என உறுதியாய் கூறி ஊருக்குள் வர மறுக்கிறாள். சரி, மணிமேகலையாவது எங்களுடன் அனுப்பி வை என வசந்தமாலை கேட்க, பத்தினி என்ற பிறப்பிற்கு உரியவளாக நான் இல்லாதிருக்கலாம். ஆனால் மணிமேகலை அப்படி இல்லை. காரணம் அவளின் தந்தை கோவலனனின் மனைவியான கண்ணகி பத்தினி. கோவலனின் இன்னொரு மனைவியான கண்ணகி மணிமேகலையின் இன்னொரு  தாயாகிறாள். அப்படி இருக்க, நல்ல குடும்பத்தில் பிறந்த அவள் எப்படி ஆடல் தொழில் செய்வாள் என எதிர் கேள்வி கேட்டு அவளை திருப்பி அனுப்பினாள். 


தாயின் முடிவும், தந்தையின் அகால மரணமும், பெரியன்னையின் கற்பு நெறி, தைரியமும், மணிமேகலையின் வயதும், தனதுமீது காதல்கொண்ட அந்நாட்டு இளவரசன் உதயக்குமாரனும், உதயக்குமாரன்மேல் ஆசையிருந்தும் வெளிக்காட்ட முடியாமல் தடுக்கும் அறியாத வயதில் அவள் ஏற்ற துறவறமும் சேர்ந்து மணிமேகலையை பலவாறாய் சிந்திக்க வைத்தது.  மகளின் மனப்போராட்டத்தை மாற்ற நினைத்த மாதவி அவளை உவவனம் என்ற நந்தவனத்திற்கு மலர்களை பறிக்க அனுப்புகிறாள்.

நந்தவனத்தில் மணிமேகலைக்காக காத்திருந்தான் இளவரசன் உதயக்குமாரன். தாசிக்குலத்தில் பிறந்திருந்தாலும் ஒழுக்கத்துடன் வாழ்ந்த தன் அன்னையைப்போல்   அல்லாமல் துறவு நிலையிலும்  தன் மனம்  ஏன் உதயக்குமாரனை எதிர்பார்க்கின்றது என அறியாமல் குழம்பி, உதயக்குமாரனை கண்டதும் வந்த மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு அவனை அலட்சியம் செய்து அவனை தவிர்த்து வேறு பக்கம் சென்றாள். மணிமேகலையின் மனப்போராட்டத்தினை உணர்ந்த கோவலனின் குலதெய்வமான மணிமேகலா , அவளை நந்தவனத்திலிருந்து வான்வழியாக எடுத்துச்சென்று மணிபல்லவம் தீவில் தன்னோடு தங்க வைத்து மணிமேகலையின் பூர்வஜென்ம கதையை சொல்கின்றது.


வேறு உருவம் எடுக்கவும், ஓரிடத்திலிருந்து தான் நினைக்கும் இடத்திற்கு  யாரும் அறியாமல் வான்வழி செல்லவும்,  அடுத்தவர் பசி பிணி போக்கும் சக்தி, எனும் மூன்று வரத்தை  மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு தருகின்றது . வரத்தினை பெற்ற மணிமேகலை சிறிது நாட்கள் மணிபல்லவ தீவில் தங்கி இருந்து அதன் அழகை கண்டு ரசித்தாள். அப்போது அவள்முன் தீவ திலகைன்ற கடல்தெய்வம் தோன்றி, கோமுகி பொய்கையில் அமுதசுரபி தோன்றவிருப்பதாகவும், ஆபுத்திரன் கையில் இருந்த அப்பாத்திரம் உன் கைக்கு கிடைக்கும் விரைந்து அங்கு செல் எனக்கூறி மறைந்தது..  மணிமேகலை கோமுகி பொய்கையை அடைந்து வலம் வந்து அமுதசுரபியை பெற்றாள்.  

மணிபல்லவ தீவிற்கு வந்து 7 நாட்கள் கழிந்த பிறகு  மணிமேகலா தெய்வத்தின் ஆசியோடு நாட்டிற்கு திரும்பினாள். அமுத சுரபியில் முதன்முதலில் ஆதிரை என்ற நல்மகள் கையால் பிச்சை பெற்றப்பின் அள்ள அள்ள குறையாமல் உணவு வந்துக்கொண்டே இருந்தது.     அள்ள அள்ள குறையாத அமுத சுரபியிலிருந்து கிடைக்கும் அளவில்லா உணவின்மூலம் பசி என வந்தவர் அனைவரின் பசியை போக்கினாள்.  மணிமேகலையின் சேவையினை கேள்விப்பட்ட உதயக்குமாரன் முன்னிலும் அதிகமாக அவள்மீது காதல் கொண்டு தினமும் அவள்முன் தோன்றி தன்னை மணக்க வேண்டி மன்றாடினான். செய்வதறியாமல் திகைத்தாள் மணிமேகலை.. 

இமயமலைச்சாரலில் காஞ்சன் - காயசண்டிகை என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் காயசண்டிகை ஆற்றங்கரைக்கு செல்லும்போது நாவல் மரத்தடியில் தரையில் இருந்த நாவல் பழத்தை  மிதித்துவிட்டாள். அவள் மிதித்த பழத்தை எடுத்த முனிவன், அது காயசண்டிகை கால் பட்டதை உணர்ந்து எனது பசிப்போக்கும் உணவை மிதித்து பாழாக்கி என்னை பசியோடு அலையவிட்ட நீ, என்னைப்போல் பசியோடு அலைவாயாக என சபித்துவிட்டார். காயசண்டிகையை அழைத்துக்கொண்டு நாடு நகரமென சுற்றி அலைந்தும், எத்தனை பொருள் ஈட்டியும் அவளது பசியை போக்க முடியவில்லை. தென் தமிழகம் வந்த காஞ்சன் பொருள் ஈட்டிவர காயசண்டிகையை பூம்புகார் விட்டுவிட்டு  வட தமிழகம் சென்றான். மிகுந்த பசியோடு இருந்த காயசண்டிகை மணிமேகலை உணவு தருவதை கேள்விப்பட்டு அவளிடம் சென்று உண்ண உணவு கேட்கிறாள்.அமுத சுரபியிலிருந்து வந்த உணவை அவளுக்கு கொடுக்க காயசண்டிகையின் சாபம் நீங்கி பசிப்பிணி போனது.  கணவனை தேடி வடதமிழகம் நோக்கி காயசண்டிகை சென்றாள்.

உதயக்குமாரனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த மணிமேகலை காயசண்டிகை உருவெடுத்து  பூம்புகாரிலேயே வாழ்ந்து வந்தாள். பூர்வஜென்ம ஈர்ப்பினால் காயசண்டிகை உருவிலிருந்த மணிமேகலையை அறிந்த உதயக்குமாரன் அவள்முன் சென்று தன்னை ஏற்கும்படி கேட்டான். அதேவேளையில் மனைவியை தேடிவந்த காஞ்சன் தன் மனைவி தன்னை தேடிவந்ததும், அவள் உருவில் மணிமேகலை இருப்பதையும் உணராமல், தன் மனைவியை மாற்றான் காதல் கொள்வதை சகிக்காமல்  உதயக்குமாரனை கொன்றுவிடுகிறான். பிறகு, உண்மை அறிந்து அங்கிருந்து தப்பிவிடுகிறான்.  உதயக்குமாரனை கொன்ற பழி மணிமேகலைமீது விழுகின்றது. 


உதயக்குமாரனின் தந்தையும் அந்நாட்டின் மன்னனுமான கிள்ளிவளவன் அவளை சிறையில் அடைக்கின்றார். மகன்மீது மிகுந்த பாசம் கொண்ட உதயக்குமாரனின் தாயான அரசமாதேவி மணிமேகலையை பலவிதமாக கொடுமை படுத்துகிறாள். அத்தனை கொடுமையிலிருந்தும் புடம் போட்ட தங்கமாய் உயிர் தப்பி வரும் மணிமேகலையை கண்டு மணிமேகலை எத்தவறும் செய்யாதவள் என்பதை உணர்ந்து மணிமேகலையை சிறையிலிருந்து விடுவிப்பதோடு அவளிடம் மன்னிப்பும் கேட்கிறாள். மணிமேகலை அரசமாதேவிக்கு காமம், கொலை, கள், பொய், களவு ஆகியவற்றால் தீய குற்றங்களால் உண்டாகும் தீமையினை எடுத்து சொல்லி, அடுத்தவர் பசி போக்குவதும் அவர்களிடத்தில் அன்பு செலுத்துவதுமே நல்லறமாகும் என போதிக்கிறாள். சிறையிலிருந்து வெளிவந்த மணிமேகலையை மாதவியின் தாய் சித்ராபதி தனது பேத்தியான மணிமேகலையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அரசமாதேவியை கேட்டாள். அவளின் நோக்கமறிந்த அரசமாதேவி, சித்ராபதியுடன் அவளை அனுப்ப மறுத்துவிட்டாள். மணிமேகலையின் நிலையறிந்து, அவளை சிறைமீட்க வந்த அறவணடிகளோடு சாவக நாட்டிற்கு திரும்புகிறாள்.
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே’

 அரசிக்கும், அரசனுக்கும் போதனை செய்தபடி  அடுத்தவர் பசிப்போக்கும் பணியை தொடர்ந்து செய்து வந்தாள் . காஞ்சி மாநகருக்கு வந்து அறவண அடிகளின் மடத்தில் தங்கி அவரிடம் தீட்சை பெற்று முழுமையான புத்த பிக்குணியாக மாறி மக்களுக்கு சேவை புரிந்தாள். எங்கெங்கொ சுற்றி அலைந்து மாதவியும் மகள் இருந்த அதே புத்த மடத்திற்கு வந்து சேர்ந்தாள். முடிவில் தன் பிறப்பிற்கான குற்றங்கள் நீங்குக என இறைவனை வேண்டி, உண்ணாநோன்பு இருந்து முடிவில் இறைவனை அடைந்து,  இன்றும் தெய்வமாக போற்றப்படுகிறாள். 

அடுத்தவரின் மிரட்டல், கெஞ்சல், விருப்ப்பத்திற்கேற்பலாம் சாமியாராகக்கூடாது. நியாயப்படி உதயக்குமாரனை மணிமேகலை மணந்திருக்க வேண்டும். ஏனென்றால் உதயக்குமாரன் மணிமேகலையை விரும்பியதுபோலவே மணிமேகலையும் அவனை விரும்பினாள். முற்பிறவியில் இருவாரும் கணவனும் மனைவியும்கூட.. அப்படி இருக்க இருவரும் வாழ்வில் இணைந்திருக்க வேண்டியது அவசியம்.

ஏதும் அறியாத வயதில் கோவலன்,  மாதவியை விட்டு பிரிந்ததால் தந்தையின் அரவணைப்பு இன்றி வளர்ந்தாள். மாதவியும் சதாசர்வகாலமும் கோவலனை நினைவில் இருந்ததால் தாயின் அன்பும் இல்லை. பாசம் துளிக்கூட இல்லாத ஆணவமும், திமிரும் பணம் ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்ட பாட்டியிடம் வளர்ந்தாள். கண்ணகி  இருவரின் குடும்பத்தாரும் கடல் கடந்து வணிகம் செய்த பெரும் செல்வந்தர்கள். அவர்களின் சொத்தை சித்ராபதி சிறுகசிறுக பறித்துக்கொண்டாள்.. தாசி குலமானாலும் மாதவியின் அம்மாவும் திரண்ட சொத்துக்கு அதிபதிதான் ஆனாலும், மாதவி அத்தனையும் தானம் செய்துவிட்டதால் சொத்தும் கைவிட்டு போனது.  என்ன ஏதுவென அறியாத வயதிலேயே துறவறம் மேற்கொள்ள வைக்கப்பட்டாள். பேரழகியான அவள் தலை மழிக்கப்பட்டது. அவளின் அத்தனை கதையை தெரிந்தும் மொட்டை தலையுடனும் ஏதும் அலங்காரமின்றி இருந்தாலும் அவளின் அன்பினால் கவரப்பட்ட உதயக்குமாரன் காதலை ஏற்கமுடியாத சூழல். துறவறம்லாம் தானாய் மேற்கொள்ளனும்,    மனசுக்குள் உதயக்குமாரன்மேல் காதல் இருந்தும் தாயின் விருப்பத்திற்காக காதலையும், தன் வாழ்வையுமே தியாகம் செய்து இயல்பாய் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கையை வாழ்ந்த பாவப்பட்ட ஜீவனே இந்த மணிமேகலை.. தந்தைக்காக காட்டுக்கு 14 வருடங்கள் சென்ற ராமனை போற்றுமளவுக்கு  தாய்க்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து தவவாழ்வு வாழ்ந்த மணிமேகலையும் போற்றப்பட்டிருக்க வேண்டியவள்தான்.

மணிமேகலையின் கைக்கு கிடைக்கும் முன்பே, அமுத சுரபி ஆபுத்திரன் என்ற ஆண்மகன் வசம் இருந்தது. அந்த கதையை அடுத்த வாரம் பார்க்கலாம்.... வெளிச்சத்தின் பின்னே தொடரும்.. 

நன்றியுடன்,
ராஜி.

7 comments:

 1. வெளிச்சத்தின் பின்னே அடுத்த வார கதையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

  ReplyDelete
 2. கதை.....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 3. பிற்காலத்தில் வந்த சேக்ஸ்பியர் நாடகங்களில் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளைவிட வில்லன் பாத்திரம் நம் மனதில் அதிகமாக நிற்கும். கல்கியின் சில புதினங்களில்கூட எதிர்மறைப் பாத்திரங்கள்கூட நம்மைக் கவரும். இவை இங்கு சரியான ஒப்புமை இல்லை என்றாலும், கதாநாயக நாயகிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்து மனதில் நிற்பவள் மாதவி என்பதே என் கருத்து.

  ReplyDelete
 4. நிறைய அறிய முடிகிறது. தொடர்கிறேன்

  துளசிதரன்

  ReplyDelete
 5. சில அறிந்திருந்தாலும் தலைப்பு யோசிக்க வைக்கிறது. அடுத்து வருவது என்னன்னு தொடர்கிறேன் ராஜி

  கீதா

  ReplyDelete