பாலையா என்னும் பழம்பெரும் நடிகர் பாமா விஜயம் படத்துல ஒரு வசனம் சொல்வாரு. வாழ்க்கை என்பது விசித்திரமானது. பாடம் சொல்லிக்கொடுத்து பரிட்சை வைக்காது. பரிட்சை வச்சுட்டுதான் பாடமே சொல்லிக்கொடுக்கும்ன்னு சொல்வாரு. அதேமாதிரிதான் காலமும்..... காலத்தால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு செயலும் வீணாய் நிகழ்வதில்லை. அந்த நிகழ்வின் காரண காரியத்தின் பலன் பின்னாளில் தெரியவரும். நாம் வரமா நினைச்சது சாபமா மாறும். சாபம்ன்னு வெறுத்தது வரமாகும்... சாபம் வரமான கதை புராணங்களில் பார்த்திருக்கிறோம். ராமாயணத்தில் நிகழ்ந்த ஒரு துர்மரணம் இரு வரமானதை இன்றைய தெரிந்த புராணம் தெரியாத தகவலில் பார்க்கப்போகின்றோம்..
ரிஷிக்குமாரன் ஒருவன் தாமசா நதியில் நீராடிக்கொண்டிருந்தான். பல காலமாய் வரும் அவனை கண்டதும் நதியும், நதியை சுற்றி இருக்கும் செடி,கொடிகள், சிறு பறவைகள், காட்டு முயல்லள், புள்ளி மான்கள் என அனைத்திற்கும் உற்சாகம் பீறிடும். தெய்வக்களையுடன் இருக்கும் அவனது முகம், மிகப்பெரிய துலாபாரம் ஒன்றை செய்து, அதில் ஒரு தட்டில் கண் தாயையும், இன்னொரு தட்டில் தந்தையையும் வைத்து சுமந்துக்கொண்டு இக்கரைக்கு வந்தவனை கண்டு அப்பகுதியே உற்று நோக்கின. அவனது தாய் தந்தை இருவருக்கும் கண்பார்வை தெரியாது. வயது முதிர்ந்து தள்ளாட்டம் வந்திருந்தது. அவர்களை மிகுந்த அன்புடன், சிறிதும் முகம் கோணாமல் கவனித்து வந்தான். இந்த சின்ன வயதில் அவனுக்கிருந்த பொறுமையும், அக்கறையும், கடமையுணர்ச்சியுமே நதி, ப
றவைகள், செடிகொடிகளின் மனதை கவர்ந்தது.
காரணமேயில்லாமல் அன்றையதினம் சிறுவனுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. நதிக்கு வரும்போதே பாடல்களை பாடிக்கொண்டும், எந்த பூவை இறைவனுக்கு சூட்டலாம்?! எந்த கனியை பெற்றோருக்கு கொடுக்கலாம் என யோசித்தவாறே பட்டாம்பூச்சியாய் வந்தவன், குளித்து முடித்து, கொண்டுவந்திருந்த குடத்தில் நீரை மொள்ள ஆரம்பித்தான்.
கோசலை, கைகேயி, சுமித்திரை உட்பட 60,000 மனைவிகள் இருந்தும் தனக்குபின் நாட்டை ஆள, ஒரு மகன் இல்லையே என்ற கவலையுடன் வேட்டையாட வந்த தசரதன், வந்த வழி மறந்து காட்டில் அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருந்தான். சொந்த கவலை, வழி மாறிய அலைச்சல் என இருந்த தசரதன் மனம் மிகவும் மனம் குழம்பி இருந்தான். ரிஷிக்குமாரன் குடத்தில் நீர் மொள்ளும் சத்தத்தினைக்கேட்ட தசரதனுக்கு அது ஏதோ ஒரு மிருகம் தண்ணீர் குடிக்கும் சத்தமென புரிந்து, மிருகத்தை நோக்கி அம்பெய்தினான், அம்பு பாய்ந்து சென்று ரிஷிக்குமாரனை தாக்கியது.
அம்மா என்று அலறிய சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்த தசரதர் , உயிருக்கு போராடும் ரிஷிக்குமாரன் அருகில் வந்து நடுங்கும் விரலால் மார்பில் புதைஞ்சிருக்கும் அம்பினை பிடுங்கி, வழியும் ரத்தத்தை கட்டுபோட்டு கட்டினார். எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டேன். எந்நாளும் உண்மை, நீதி, சத்தியத்திற்கு மாறாக எதுவும் செய்யக்கூடாது என இருந்தேனே! என விதியை நொந்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரிஷிக்குமாரணை வணங்கி, மன்னிப்பு கேட்டான். ஐயா! என்னிடம் மன்னிப்பு கேட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்காக பசியோடும் தாகத்தோடும் என் தாய் தந்தையர் காத்திருப்பர். அவர்களுக்கு இந்த கனியையும், நீரையும் கொடுங்கள். அதுவே எனக்கு செய்யக்கூடிய உதவியாகும் என வேண்டிக்கொண்டு உயிரை விட்டான்.
பசியோடு காந்திருந்த முனிவருக்கும், அவரது மனைவிக்கும் உண்ண கனியும், தண்ணியும் தசரதன் சுமந்து சென்றான். கண்பார்வையற்ற தம்பதியர் இருவரும் காலடி ஓசை கேட்டதும் வருவது மகனல்ல என்று உணர்ந்து யாரது?! என்றனர். நான்தான் தசரத மகாராஜா என்று அறிமுகப்படுத்தியபடி நடந்தவற்றை சொல்லி பசியாற கனியும், நீரும் கொடுத்து மன்னிப்பு கேட்டு நின்றார். அவற்றை புறந்தள்ளி, தனக்கு ஒரு உதவி வேண்டுமென சொல்லி, மகன் உடலை கொண்டு வரச்சொல்லி அவனது உடலுக்கு நெருப்பு மூட்டினார். “மன்னா! கண்பார்வையற்ற இந்த வயதான காலத்தில் எங்களுக்கு எனது மகனே எங்கள் சுக துக்கங்களை பார்த்துப் பார்த்து கவனித்தான். அவனிடம் நாங்கள் குழந்தைகளாகிப் போனோம். அவனைக் கொன்று விட்டீர்கள். வயதான காலத்தில் நாங்கள் எங்கள் மகனைப் பிரிந்து தவிப்பது போல், நீங்களும் மகனைப் பிரிந்து தவித்து இறப்பீர்கள்.” சாபம் இட்ட முனிவர் மனைவியோடு தீயில் இறங்கி விட்டார்.
முனிவரின் சாபத்தினை எண்ணியபடி நாட்டிற்கு திரும்பினார். ரிஷிக்குமாரனின் மரணமும், அவனது பெற்றோரின் தற்கொலையும், முடிவில் முனிவர் விட்ட சாபமும் தசரதனை கவலைக்கொள்ள செய்தது. எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தார். அதையே யோசிக்க யோசிக்க தசரதனுக்கு தெளிவு பிறந்தது. மகனை பிரிந்து வாடி இருக்கும்போது மரணம் நேர வேண்டுமென்றால் தனக்கு ஒரு மகன் பிறப்பான். அவ்வாறு பிறக்கும் மகன் தனக்கு பிறகும் வாழ்வான் , தனக்குப்பின் அரசாள நிச்சயம் ஒரு மகன் பிறப்பான் என்ற நம்பிக்கை தசரதனுக்கு ஏற்பட்டது. தனக்கு விடுக்கப்பட்ட சாபமே தனக்கு வரமாகிப்போனதை எண்ணி, மகிழ்ச்சிக்கொண்டு, மகன் பிறக்கும் நாளுக்காக காத்திருந்தான்......
என்றோ நிகழ்ந்த ஒரு நிகழ்வினால், தசரதனுக்கு பிள்ளையும், அவனால் தசரதனுக்கு மரணமும் நிகழும் என பின்னாளில் நடந்தவை நமக்கு உணர்த்தியது. எந்த தவறுமே செய்யாத ரிஷிக்குமாரனின் மரண பின்னாளில் என்ன நடந்தது என பார்க்கலாமா?!
ராமன் கதை நமக்கு தெரியும், ராமன் சீதையை சிறை மீட்டு, அயோத்திக்கு திரும்பும்முன், போரில் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியும், பரிசுப்பொருட்களையும் கொடுத்துக்கொண்டிருந்தார். அனுமனுக்கு என்ன கொடுப்பார் என அனைவரும் காத்திருந்தனர். அனைவரும் அனுமனுக்கு எதுவும் கொடுக்க மாட்டார். எதை கொடுத்தாலும் அனுமனின் சேவைக்கும் ராமர்பால் அவன் கொண்ட பக்திக்கும் ஈடாகாது என அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். தானே அவரது மனங்கவர்ந்த சீடன், பரிசுப்பொருட்களோ அல்லது நன்றியோ எதையும் எதிர்பாராமல், தானே அவருக்கு பேருதவி செய்ததாக ராமர் சொல்லப்படும் ஒற்றை சொல்லுக்காக அனுமன் காத்திருந்தார். இப்போரில் எனக்கு எல்லோரையும்விட இந்த அணிலே எனக்கு பேருதவி செய்தது, அதற்கு நான் என்ன கொடுத்தாலும், எத்தனை நன்றி சொன்னாலும் அதன் சேவைக்கு ஈடாகாது கைக்கூப்பிபடி கூட்டத்தில் இருந்த அணிலை அனைவருக்கும் சுட்டிக்காட்டினார். அனைவரும் திகைத்து நின்றனர்.
அனுமன், யோசிக்கின்றார். சீதையை இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு செல்ல கடலில் பாலம் கட்டும் முடிவு எடுத்து அருகிலிருந்த மலையிலிருந்த கற்கள், பாறைகளை பெயர்த்தெடுத்து கடலில் போட்டு பாதை அமைத்துக்கொண்டிருந்த சமயத்தில் , அணில் ஒன்று கடலில் குதிப்பதும், பிறகு கரைக்கு வந்து மணலில் புரள்வதும், பாறைகளுக்கு இடையில் சென்று உடலை குலுக்குவதும், சிலசமயத்தில் சிறுசிறு கற்களை சுமக்கமுடியாமல் சுமந்து வந்து பாலத்தில் போடுவதுமாக இருந்தது. அணிலின் இச்செயல் வானரப்படைகளுக்கு தொந்தரவாக இருந்தது. வானரங்கள் அணிலை நகர்ந்து போகச்சொல்லியும் அது நகராமல் தன் செயலில் கண்ணாக இருந்த நிகழ்வு அனுமன் மனக்கண்முன் விரிந்தது.. உடனே,....
அனுமன், ராமனிடம், ராமா! நான் பொறாமைக்கொண்டு பேசுவதாய் நினைக்காதீர்கள். செயற்கரிய செயல்களை செய்ததாக பலர் என்னை புகழ்வதால் அந்த கர்வத்தில் பேசுவதாய் நினைக்காதீர்கள். இந்த அணில் என்ன செய்தது?! காட்டினை அழித்து, கடலுக்கு இடையில் மிகப்பெரிய கற்களை கொண்டுவந்து அடுக்கி பாலம் உருவாக்கியது வானரப்படைகள். போரில் பலர் உயிரிழந்தனர். அப்படி இருக்க, இந்த அணில் தனது உடலை கடலில் நனைத்து பாலத்திற்கு உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை உதறியது. சிறு துளி பெரு வெள்ளம்தான்,. அவ்வாறு அணில் கொண்டு வந்து கொட்டிய மணல் ஒரு கூடையளவுகூட இருக்காதே. அப்படி இருக்க, அணிலின் சேவையே மிகப்பெரியது என்று தாங்கள் போற்றுவது எப்படி?! என அனுமன் கேட்டான்.
அனுமனே! தெய்வாம்சம் பொருந்திய நீர் கடலை தாண்டுவதும் மலையை பிளப்பதும் எளிது. வானரப்படைகளுக்கு காடுகளை அழித்தலும் பாறைகளை புரட்டுவதும் இயல்பு. காட்டில் அங்குமிங்கும் திரியும் அணிலுக்கு சிறு கற்களை சுமப்பதுகூட இயலாத காரியம். தன் சக்திக்கு மீறிய செயல்களை செய்தது. கூடவே, நீங்கள் கொண்டு வந்து போட்ட பெரிய பெரிய பாறைகள், கற்களுக்கான இடைவெளியை அணில் கொண்டுவந்து கொட்டிய மணலும், சிறு கற்களும்தான் நிரப்பி பாலத்தை பலப்படுத்தியது. எளிய மனிதர்களின் சேவையை பாராட்ட வேண்டும். அதனால் மட்டும் அணிலை பாராட்டவில்லை. பாலம் கட்ட சிறு உதவி புரிந்த இந்த அணில் வேறு யாருமல்ல, முற்பிறவியில் என் தந்தையும் அயோத்தியின் மன்னனுமான தசரத மகாராஜாவினால் தவறாக அம்பெறியப்பட்டு மரணித்த ரிஷிக்குமாரன் ஆவார். இவரின் இறப்பு எனது பிறப்புக்கு காரணமானது. அந்த நன்றிக்கடனுக்காகவுமே அணிலின் சேவை எனக்கு பெரிதாக தெரிகிறது எனக்கூறி, அணிலை கையில் எடுத்து அதன் முதுகில் தடவி கொடுக்க, அணிலின் முதுகில் விரல் அச்சு பதிந்தது. அணிலின் உடலில் இருக்கும் இக்கோடுகள் சத்தியம், தர்மம், அனைத்து உயிர்களையும் சமமாக நேசிக்கும் எனது குணங்களின் அடையாளமாக திகழும். இனி இது ஆனந்தந்தத்தின் அடையாளமாக திகழும். அணிலை காணும்போதே உற்சாகமும், மகிழ்ச்சியும் மற்றவர்களை தொற்றிக்கொள்ளும் எனவும் அணிலை வாழ்த்தி அதை ஓடவிட்டார். அணில் குதித்து குதித்து ஓடும் அழகு அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்தது.
ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி எந்த செயலும் காரண காரியமின்றி நிகழவில்லை என்பது புரிஞ்சிருக்கும்...
தெரிந்த கதை... தெரியாத தகவல்... தொடரும்...’’
நன்றியுடன்,
ராஜி
ஆமாம் இது எந்த இராமாயணம்...?
ReplyDeleteஎந்த ராமாயணத்திலும் இந்த கதை இல்லை. ஆனா, செவிவழியாக சொல்லப்பட்டு வரும் கதை இது.
Deleteராமாயணத்தை ராம+அயனம்ன்னு பிரிச்சு பொருள் கொண்டால் ராமன் காட்டும் பாதைன்னு பொருள் படுது. எளியோர் செய்த உதவியையும் நினைவில் கொள்ளனும், நம்மாலும் உதவமுடியும்ன்றதுக்காகவே இதுமாதிரியான இடைச்செருகல் கதைகள் புராண, இதிகாசங்களில் உண்டு. புராண, இதிகாச கதைகளின் நோக்கமே நாம அதன்படி நடக்கனும்ன்னுதானே?!
பதினாறு வயதினிலே படத்தில் ஒரு காட்சி வரும். பிள்ளைக அணிலை அடிச்சுக்கிட்டிருப்பாங்க. அப்ப அப்பாவியான கமல் அதை தடுப்பார். அப்ப பிள்ளைங்க, ராமர் ஒருமுறை தாகமெடுத்து தண்ணி கேட்டபோது அணில் இளநீர் கொடுத்ததாகவும், ஓணான் சிறுநீர் பிடிச்சு கொடுத்ததாகவும் அதனால்தான் அடிச்சதாகவும் ஒரு காட்சி வரும்..’
Deleteஇதை பிள்ளைக சிறுவயசில் நானும் கேட்டிருக்கேன். அது எந்த கதையில் வருது?!
அதென்ன கமல் சொன்னா கம்முன்னு இருக்கீக?! நான் சொன்னா மட்டும் உம்முன்னு இருக்கீக?!
சுவாரஸ்யமான கதை.
ReplyDeleteபெரும்பாலனவர்களுக்கு தெரிந்த கதைதான்..
Deleteவணக்கம்
ReplyDeleteமனித வாழ்வியலுடன் கருத்துக்களைச் சொல்லும் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteதெரிந்த கதை - என்றாலும் மீண்டும் படித்தேன். நன்றி.
ReplyDeleteசுவாரசியமான பதிவு. வாழ்த்துக்கள். கமல் சொன்னா கம்முன்னு இருக்கீக. நான் சொன்னா உம்முன்னு இருக்கீக? ஹா ஹா அருமை.
ReplyDeleteஅருமை பின்னிட்டீங்க.
ReplyDelete