Monday, June 08, 2020

பெண்மனசு ஆழத்தையும் தெரிஞ்சுக்கலாம்.. ஆழ்கடல் ரகசியத்தை தெரிஞ்சுக்க முடியாதுபோல!! - ஐஞ்சுவை அவியல்

மாமா! என் போன்ல வால்பேப்பரா வைக்க நல்லதா ஒரு  கடல் படம் தேடி தாயேன்..

என்ன புள்ள! திடீர்ன்னு கடல் படம் கேக்குறே?!

இன்னிக்கு சர்வதேச பெருங்கடல்கள் தினமாம். அதனால் அதுபத்திய பதிவை பார்த்தேன். அதான் கடல் படம் வைக்கலாம்ன்னு..
குரங்கு, யானை, விமானம், கடல் இவற்றின்மீதான பிரமிப்பும், ஆர்வமும் எத்தனை வயதானாலும் மக்களுக்கு  குறையாது.  இந்த பூமி எத்தனையோ விந்தைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதற்கு சற்றும் குறைவில்லாதது  கடலும், கடல் சார்ந்த விசயங்களும்...    கடலைவிட பிரம்மாண்டது கடல் சார்ந்த விசயங்கள்..
மெரினா கடற்கரைக்கு போய் இருக்கியே! அதை பார்த்தே பிரமிச்சு நின்னியே!  தமிழ்நாடு முழுக்க நீண்டிருக்கும் கடற்கரைகளின் நீளம் எவ்வளவு தெரியுமா?! 

தெரியாது மாமா...

தமிழ்நாட்டில் 997 கிமீ நீளத்துக்கு கடற்கரை இருக்காம். இந்தியாவில் இருக்கும் கடற்கரை 7,517கிமீ ஆகும்.  உலகத்தில் இருக்கும் மொத்த கடற்கரைகளின் நீளம்  5,50,000 கிமீ.  கடலை ஒட்டிய கரையே அஞ்சரை லட்சம் கிமீக்கு மேல் நீண்டிருக்குதுன்னா.,  கடல் எந்தளவுக்கு பரந்து விரிஞ்சிருக்கும் . அப்படி பரந்து விரிந்திருக்கும் கடலில் இருக்கும் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் தெரியுமா?! 1450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன் அளவுக்கான நீர் இருக்காம் . இது பூமியின் மொத்த எடையில் 0,022  சதவிகித எடைதான் இருக்காம்.

போ மாமா! பொய் சொல்லாத! பூமியின் மேற்பரப்பின் மூன்றில் இரண்டு பங்கு கடல்ன்னு படிச்சிருக்கேன். அப்படி இருக்க, 0.022 சதவிகித எடைதானா இருக்கும்?!
ஆமா புள்ள, நீ சொல்ற பூமியின் மூன்றில் இரண்டு பங்கு நிரைஞ்சிருக்கும் கடலானது பூமிக்கு மேலதான் இருக்கு,  பூமியின் குறுக்கு வெட்டு நீளம் கிட்டத்தட்ட 12,700கிமீ. , இதுல முதல் 5 டூ 10 கிமீக்குதான் கடல் தண்ணி இருக்கு. மிச்சம்லாம் மணல், பாறைகள், கற்கள், மலைகள்ன்னு இருக்கு. அதனாலதான் கடல்நீரின் எடையின் சதவிகிதமாகும்.      என்னதான் கடல் மூன்றில் இரண்டு பங்கு பூமியில் இருந்தாலும் பூமியின் மொத்த எடையில் ஒரு பங்கு கூட இல்ல. உதாரணத்துக்கு நம்ம உடம்பில் அதிகமா தென்படுவது தோல்தான். ஆனா, மொத்த தோலின் எடை எவ்வளவு இருக்கும்?! அதுமாதிரிதான் பூமியை மூடியிருக்கும் தோல்தான் கடல்ன்னு வச்சுக்கலாம். பூமிக்கடியில் இருக்கும் நெருப்பு குழம்பால் பூமியின் மேற்பரப்பு பாதிப்படையாமல் காக்கும் ஒரு இயற்கை அரணே இந்த கடல்ன்னு சொல்லலாம். 
உலகில் அட்லாண்டிக், பசிபிக், இந்தியன் பெருங்கல், அண்டார்டிக், ஆர்டிக்ன்னு மொத்தம்  5  பெருங்கடல்கள் இருக்குன்னு சின்ன வயசில் படிச்சிருக்கோம். இப்ப,  அட்லாண்டிக் பெருங்கடலை வட அட்லாண்டிக், தென் அல்டாண்டிக்ன்னும் பசிபிக் பெருங்கடலை வட பசிபிக், தென் பசிபிக்ன்னு பிரிச்சு மொத்தம் ஏழு பெருங்கடலா ஆக்கி இருக்காங்க.  தமிழ் இலக்கியத்தில்  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு  நிலத்தை வகைப்படுத்தி வச்சிருக்கிற மாதிரி பெருங்கடல்களை உப்புக்கடல், கரும்பச்சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க்கடல்ன்னு ஏழா பிரிச்சு வச்சிருந்ததற்கான குறிப்புகள் இருக்கும்.

பெருங்கடல்களின் பகுதிகளாக கடல், வளைகுடா(Gulf) விரிகுடா(Bay), நீரிணை(Strait)  இருக்கு. நாலு பக்கமும் கடல் நீரால் சூழ்ந்தது தீவுன்னும் சொல்றோம். அதாவது கடலுக்கு அடியில் இருக்கும் மலைகளின் உச்சிப்பகுதி கடலுக்கு வெளியே நீட்டிக்கிட்டு இருக்கும் பகுதிதான்  தீவா உருவெடுக்குது. , மூன்று பக்கமும் கடல் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் மூடியது தீபகற்பம்.  இந்தியா தீபகற்ப நாடுன்னு சின்ன வயசில் படிச்சதை மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.


ஐந்து வகை பெருங்கடல்களில் பசிபிக் பெருங்கடல்களில்  பசிபிக் பெருங்கடல்தான் பெரியது.இப்ப இருக்கும் உலக நாடுகள் மொத்தமும் சேர்த்து பசிபிக் கடலில் வச்சாலும் இன்னொரு ஆப்பிரிக்க கண்டத்தின் நிலப்பரப்பையும் வைக்குற அளவுக்கு பசிபிக் பெருங்கடல் பெரிசாம்.   சீனா, ஜப்பான் நாடுகளுக்கு கிழக்காகவும், அமெரிக்காவுக்கும் மேற்காகும் இடைப்பட்ட பகுதில் பரந்து விரிநதிருக்கும் பசிபிக் பெருங்கடல் சில இடத்தில் இதன் அகலம் 16,000கிமீ இருக்கு.  அதனால்தான் பசிபிக் கடலை தென், வட என பிரிச்சு வச்சிருக்காங்க. பூமி கிழக்கு பக்கமா சுத்துவதால், காத்து மேற்கு பக்கமா வீசும். இடையில் எந்த தடுப்பும் இல்லாததால் பசிபிக் கடல் காற்றின் வேகம் அதிகம் அதனால், கிழக்கு நோக்கி கப்பலை ஓட்டுறது மிக சிரமம்.  தென் பசிபிக் பகுயில் காற்றின் வேகத்தால் பெரியப்பெரிய அலைகள் உருவாகுது. இதுவரை உருவான சுனாமி மொத்தமும்  இந்த பசிபிக் கடலில்தான் உருவாச்சு.  பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் நடுக்கங்களால் உருவாகும் பெரும் அலைகள் ஜப்பானிய கடற்கரையைத்தான் தாக்கும். 
அண்டார்டிகா பெருங்கடலிலிருந்து பிரிந்து வரும் பனிப்பாறைகள் எட்டுமாசம் வரைக்கும் உருகாம பசிபிக்  கடலில் மிதந்து பல இடங்களுக்கும் போகுமாம்.  சில பாறைகள் நியூசிலாந்து வரைக்கும் நகர்ந்து போய் இருக்குன்னா பார்த்துக்கோயேன்.  கரையிலிருந்து கடலுக்குள் ஓரிரு மைல்கள் வரைக்குதான்  எல்லை பிரிச்சு வச்சிருக்காங்க. எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சராசரியா 600 அடி ஆழம் வரைக்கும் இருக்கும். கடலோட ஆழமே அதுக்கு பிறகுதான் ஆரம்பிக்குது.  எல்லை பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் கடல் பகுதிகளுக்கு காண்டினெண்டல் ஷெல்ப்ன்னு பேரு.  இதிலும் 3%கடல்தான் இருக்கு.  காண்டினெண்டல் ஷெல்ப்க்கு பிறகு97% கடல் இருக்கு. இங்கு  குறைஞ்சது 13,000 அடியிலிருந்துதான்  ஆழமே ஆரம்பிக்குது. அதுக்கு அபிஸ்(abyss)ன்னு பேரு. இங்கதான் நிலத்தில் இருப்பதுபோல் எரிமலைகள், சமவெளிகள், மேடுகள், பள்ளங்கள், மலைத்தொடர்கள் இருக்கு.  சூரிய ஒளி 100 அடி ஆழம் வரைக்கும்தான் போகும். 100 அடிக்கு மேல ஆழம் போகப்போக வெளிச்சம் குறைஞ்சுக்கிட்டே வந்து கும்மிருட்டாகிடும்.  இருட்டில் என்ன இருக்கும்?! ஒன்னுமே இருக்காதுன்னு நாம நினைச்சுக்கிட்டிருக்கோம்..


கடலுக்கடியில் ஏதோ இருக்குன்னு அரிஸ்டாட்டில் சொல்ல, அவரது அலெக்சாண்டர் கண்ணாடியில் பலூன் மாதிரி செஞ்சு, அதில் எந்தவித கருவியும் இல்லாம, மூச்சை அடக்கிக்கிட்டு   கடலுக்குள் போய் இருக்கார். மிகப்பெரிய திமிங்கலத்தை பார்த்ததா சொன்னார். அதுதான் கடலுக்குள் நடந்த முதல் ஆராய்ச்சி.. பலர் பல்வேறாய் முயன்றாலும் 1960ல சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிக்கார்ட் என்பவர் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி ட்ரீஸ்டின்னு பேர் வச்சார். அதில் உக்காந்துக்கிட்டு செங்குத்தாக கடலில் இறங்கினார்.  4 மணி நேரமாகியும் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.  அஞ்சு மணி நேரம் கழிச்சு தரையை தொட்டுவிட்டேன்னு வயர்லெஸ்சில் தகவல் அனுப்பினார். பிக்கார்ட்  கடலுக்குள் இறங்கிய இடம்தான்  ‘மெரியான் ட்ரெஞ்ச்’. இங்கு கடலின் ஆழம்  ஆறே முக்கால் மைல்.  அதாவது 35 ஆயிரத்து 808அடி. நம்ம எவரெஸ்ட் சிகரம் 29 ஆயிரத்து 28அடிதான். அதைவிட  அதிக ஆழமானது இந்த மரியானா ட்ரெஞ்ச். அங்க பிக்கார்ட் 20நிமிசம் இருந்தார்.  இதுவரை மனிதன் கண்டுபிடித்த மிகமிக ஆழமான இடம் இது. இதுவே இப்பவரைக்கும் சாதனையா இருக்கு.  கடல் சார்ந்த ஆரய்ச்சிகள் உலகம் முழுக்க குறைச்சலாகவே இருக்கு. மிகச்சவாலான இந்த வேலைக்கு எட்டு முதல் கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பேசப்படுது. ஆராய்ச்சிக்காக மட்டுமில்லாம எரிவாயு, எண்ணெய் குழாய்களை பதிக்கவும், கண்டங்களுக்கு இடையிலே தகவல் பரிமாற்றத்துக்காக கேபிளை பதிக்க, அவற்றை பராமரிக்க  ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் பயன்படுறாங்க.  இந்தியாவில் ஆழகடல் மூழ்கு வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் இல்லைன்னாலும் ஆனாலும் ஆஸ்திரேலியா, நார்வே மாதிரியான நாட்டில் பயிற்சிப்பெற்ற  800 ஆழ்கடல் வீரர்கள் இந்தியாவில் இருக்காங்க.   பெல் டைவிங்ன்னு சொல்லப்படும் இந்த ஆழ்கடல் வீரர் பயிற்சிக்கு பத்து லட்சத்துக்கும் மேல் செலவாகுமாம். 


 காற்றும், வெளிச்சமும் இல்லாத,  தண்ணீர் சூழ்ந்த இடத்தில் வேலை பார்க்கும் துணிவு இருக்க வேண்டும்.  டைவிங் பெல் அமைப்பினரால் மட்டுமே இந்த வீரர்களுக்கு உடைகள் கொடுக்கப்படும். அந்த அமைப்பின்மூலம் வெதுவெதுப்பான காற்றும், நீரும் அடிக்கப்படும். ஆக்சிஜன் சிலிண்டர், மற்ற உபகரணங்கள் இந்த அமைப்பின்மூலமே கொடுக்கப்படும்.  டைவிங் பெல் அமைப்புக்கு சொந்தமான கப்பலின் சாச்சுரேசன் சேம்பர்ன்ற பகுதியிலிருந்து வீரர்கல் கடலுக்குள் இறக்கப்படுவார்கள்.  ஒவ்வொரு வீரருக்கும் மூச்சு விடும் முறை மாறுபட்டு இருக்கும். அதனால் இவர்களுக்கு ஆக்சிஜனும், ஹீலியமும் கலந்த காற்றைதான் சுவாசிக்க கொடுப்பாங்க.  நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனும், நைட்ரஜனும் இருக்கும்.,  கடலின் ஆழத்தில் உள்ள அழுத்தத்தால் ரத்தத்திலிருந்து ஆக்சிஜனும், நைட்ரஜனும் வெளியேறும்.  அப்ப ரத்தக்கசிவு உண்டாகும். சிலசமயம் உயிரிழப்புக்கூட ஏற்படும். ஆனா, ஹீலியம் வெளியேறாது. அதனால்தான் ஹீலியத்தை கணிசமான அளவுக்கு உடலில் செலுத்துவாங்க. கடலுக்குள் பல நாட்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செது முடித்து வெளிய வந்தபின்  வெளிப்புற அழுத்தத்திற்கும், சூழலுக்கும் உடல் பழகும்வரை சாச்சுரேசன் சேம்பரில் வைப்பாங்க.  அந்த சாச்சுரேஷன் சேம்பரில் எல்லா வசதியும் இருக்கும்.  கடல் எல்லைகளை  ஐக்கிய நாடுகள் மன்றம் எனப்படும்  United Nations Convention on th Law of the Sea வரையறுத்தது.  இந்த அமைப்பில் 158 நாடுகள் இருக்கு.  கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்ட கரைக்கடல் பகுதியில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலா, அதற்கடுத்த ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்கும் பகுதிக்கு அண்மைக்கடல்ன்னு பேரு. இதில் விசைப்படகு வீரர்கள் மீன் பிடிக்கலாம்.  அதற்குப்பிறகு இருக்கும் பகுதிகள் ஆழிக்கடல்ன்னு பேரு. இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம். கால மாற்றத்தால் கரையோரங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் இடம்மாறி மீன் பிடிச்சு சண்டை வருது. இந்தியா, இலங்கைக்கு இடையிலான கடற்பரப்பின் தூரம் 25கிமீதான். பல்வேறு அரசியல் காரணங்களல் எல்லை பிரிப்பு சரிவர நடக்காததால் இரு நாட்டுக்குமிடையில் எல்லை தகராறு வருது.    எந்த நாடா இருந்தாலும் கடலிலிருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தில் அதாவது தோராயமா 22.2 கி.மீ தூரத்திற்கு பயணிகள் கப்பல் போகலாம்.  ஆனா, மீன்பிடிக்கப்பல், போர்க்கப்பல், சரக்கு கப்பல்லாம் போகனும்ன்னா பர்மிஷன் வாங்கனும். 
மனிதன், மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என பலதரப்பட்ட உயிர்கள் இருக்கு. அவற்றை பற்றி ஆராய்ச்சிகள் பல காலமாய் நடந்துக்கிட்டு இருந்தாலும் அடிக்கடி புதுசா எதாவது ஒரு உயிரினத்தை பத்திய தகவல் வந்துக்கிட்டுதான் இருக்கு, இதேமாதிரிதான் கடலிலும் பலதரப்பட்ட உயிரினங்கள் இருக்கு.1சதவிகிதம்தான் பூமியில் இருக்கு. மிச்சம்லாம் கடலில்தான் இருக்கும் . கடலில் 25மில்லியன் உயிரினங்கள் வாழலாம்ன்னு ஒரு கணக்கு சொல்லுது.  உலகின் முதல் உயிரி கடற்பாசி, உலகின் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்.. இப்படி பல சாதனைகள் கடலுக்குண்டு. சுறாவில் மட்டும் 350வகை இருக்காம்.

மாறிவரும் வெப்பநிலை, சுற்றுச்சூழல் மாசுகள், கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல் மாசுப்பட்டு வருது. வெப்பநிலை உயர்ந்துக்கொண்டே வருவதால் பனிமலைகள் உருகி கடற்கரைகள் நகரை நோக்கி நீண்டுக்கொண்டு வருகிறது. மாலத்தீவுகள் உள்ளிட்ட பல தீவுகள் தங்களது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கு.  இனி கடல்களின் கதி என்னாகுமென சமூக ஆர்வலர்கள் யோசிக்குறாங்க.

அப்ப, கடலும் மாற்றத்திற்குள்ளாகும்போல.. உலக பெருங்கடல் தினமான இன்று கடலை பத்தி நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் மாமா.

கடலைப்போலவே கடல் சார்ந்த விசயங்களும் நிறைய இருக்கு. பதிவு நீளுமேன்னு இத்தோடு முடிச்சுக்கிட்டேன்..

ஆமா மாமா , ஏற்கனவே பதிவு நீளம்ன்னு பேச்சு வருது. வயித்துக்குள் இருக்கும் பாப்பாவை பத்தின மீம்ஸ். பார்த்ததும் பிடிச்சு போச்சுது. கூடவே அதிலிருக்கும் உண்மையும் ஒத்துக்க வேண்டியதா இருக்கு...
இந்த பாப்பாவை பாருங்க. கேட்டதும் கொடுக்கலைன்னு காண்டாகி என்ன பண்ணுச்சுன்னு...
கால்ல எதுக்கு இத்தனை விரல்ன்னு நினைச்சு கடிச்சு துப்ப பார்க்குதான்னு தெரில மாமா. 

பாப்பாக்கள் வீடியோலாம் செம சூப்பர்ப்பா... வெளில வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன்...



நன்றியுடன்,
ராஜி




12 comments:

  1. சுவாரஸ்யமான விவரங்கள்.  சுருளும் தண்ணீர் காணப்படும் கடல் படத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எந்த ஆப்பின் உதவியும் இல்லாமல் முன்னலாம் gif படங்களை தரவிறக்கம் செய்யமுடியும். இப்பலாம் முடில.

      Delete
  2. விரிவான விளக்கங்கள் அசத்தல்...

    பாப்பா கோபம் ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. பாப்பாவின் அழகும், கெஞ்சலும், கோவமும் பார்த்ததும் பிடிச்சு போச்சுதுண்ணே.

      Delete
  3. அருமை
    அருமை
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்தற்கு நன்றிண்ணே

      Delete
  4. நல்லதொருபகிர்வு.

    பாப்பா மீம்ஸ் பாப்பா கோபம் இரண்டும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

      Delete
  5. கடல் தினம் - விளக்கங்கள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. தகவல்கள் அனைத்தும் ஸ்வாரஸ்யம்.

    துளசிதரன்

    கடல் என்றாலே பல ரகசியங்கள் அடங்கியதுதானே ஸ்வாரஸியமாகத்தான் இருக்கும்.

    பாப்பா மீம்ஸ் புன்சிரிப்பு.

    அந்த கடல் அலை வருவது போல இருக்கும் படம் ரசித்தேன். அப்ப்டி வருவதை வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  7. கடலில் அடங்கியிருக்கும் ரகசியங்கள் இன்னும் பலது இருக்கு. அவற்றை சொல்ல ஒரு பதிவு போதாது...

    ReplyDelete