Tuesday, June 23, 2020

சத்தான முட்டை+கேரட் பொரியல் -கிச்சன் கார்னர்

கேரட் பொரியலில் துவரம்பருப்போ அல்லது பை பருப்போ சேர்த்து கூட்டு செய்வோம். இல்லன்னா, தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்வோம். முட்டை போட்டு புதுவிதமான பொரியலும் செய்யலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ.. அயோடின், பாஸ்பரஸ், துத்தாநாகம் போன்ற சத்துகளும், கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ,சி,கே, பொட்டாசியம் மாதிரியான சத்துக்களும் சேர்ந்து நமக்கு அதிகப்படியான சத்துக்களை தரும்ன்னு சொல்லி குழந்தைகளை ஏமாத்தலாம்..

ஆனா, முன்னலாம் இப்ப இருக்குற மாதிரி பணப்புழக்கம் கிடையாது. 10,20 ஆட்கள் இருக்கும் வீட்டில் முட்டை வாங்கி கட்டுப்படியாகாது. நாலு முட்டை வாங்கி வந்து  முருங்கைக்கீரை, கேரட்டோடு சேர்த்து பொரியல் செஞ்சா மொத்த குடும்பத்துக்கும் பரிமாறலாம். அதுமாதிரிதான் கறிக்குழம்பும்.. ஆட்டுக்கறி, கோழிக்கறியோடு உருளைக்கிழங்கு, அவரைக்காய்லாம் சேர்த்து செஞ்சு தட்டு நிறைய வச்சு பரிமாறுவாங்க..

தேவையான பொருட்கள்..
கேரட்-2
பெரிய வெங்காயம்-1
முட்டை -4
ப.மிளகாய் -1
உப்பு- தேவையான அளவு
மிளகுத்தூள்- தேவையான அளவு
கடுகு- சிரிது
உ.பருப்பு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1டீஸ்பூன்
எண்ணெய் -1 டீஸ்பூன்
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கனும். கேரட்டை சீவிக்கனும், ப.மிளகாயை பொடியாக வெட்டிக்கனும்..


வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் க.பருப்பு, உ.பருப்பு போட்டு சிவக்க விடனும். பருப்புகள் சிவந்ததும் பொடியாக நறுக்கி வச்சிருக்கும் ப.மிளகாயை சேர்க்கவும்...

பொடியா நறுக்கி வச்சிருக்கும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமா வதக்கவும்..
சீவி வைத்திருக்கும் கேரட்டினை சேர்த்து வதக்கி, லேசா தண்ணி தெளிச்சு வேகவிடவும். 
கேரட் வெந்து தண்ணி வத்தினதும் முட்டையை உடைச்சு ஊத்தவும்..
காரத்திற்கு தேவையான மிளகுத்தூளை சேர்க்கவும்...
ருசிக்கு தேவையான உப்பும், கெட்ட வாடை வராமல் இருக்க துளி மஞ்சத்தூளையும் சேர்த்து சுருள கிளறவும்...
சத்தான கேரட்+முட்டை பொரியல் தயார்..

முட்டையை உடைச்சு அப்படியே ஊத்தாம ஒரு கப்பில் ஊத்தி பிறகு பொரியலில் ஊத்தவும். கெட்டுப்போன முட்டையா இருந்தால் மொத்தமும் பாழ். கேரட்டை துருவிதான் இப்படி பொரியல் செய்யனும்ன்னு இல்ல. பொடியா வெட்டியும் பொரியல் செய்யலாம்..

ரொம்ப கஷ்டமான டிஷ் செஞ்ச என்னை வாழ்த்தலாமே சகோ’ஸ்....

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. கேரட் பொரியலில் முட்டை புதுசாக இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா! நமக்கும் ஒரு அடிமை இப்பூமியில் கெடக்கு

      Delete
  2. அக்கா உங்க டிஷை நான் படிக்கும் நேரம் இரவு இரண்டுமணி. கேரட் முட்டை இரண்டுமே எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஆனா இப்போ இந்தப் பொரியலுக்கு எங்கப் போறது? பசிக்குதே. இந்த டைம்ல பசியைப் போக்க நான் ஒரு ட்ரிக் வெச்சுருக்கேன். அது என்னன்னு பதிவுல சொல்றேன். அருமையான டிஷ். அம்மாகிட்ட நாளைக்கு ஒரு அப்லிகேஷன் கொடுத்துடுறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப கஷ்டமான டிஷ் பார்த்து செய்ய சொல்லுங்க.

      Delete
  3. 25 வருஷங்களுக்கு முன்னர் என்னுடன் பணி புரிந்தவர் முட்டைகோஸில் இப்படிச் செய்து கொண்டு வருவார். அவர்கள் வீட்டில் அதற்கு முட்டைமுட்டைகோஸ் பொரியல் என்று பெயர்!

    ReplyDelete
    Replies
    1. முட்டை+முட்டைக்கோஸ் அதையும் முயற்சித்து பார்ப்போம்...

      Delete
  4. கேரட் அதிகமோ...? துருவினதா...? சீவியதா...?

    ReplyDelete
    Replies
    1. சீவியது... கேரட் அதிகம்தான்,. முட்டை 4தான் இருந்தது...

      Delete