Showing posts with label இட்லி. Show all posts
Showing posts with label இட்லி. Show all posts

Tuesday, July 23, 2019

ரவா இட்லி செய்வது இம்புட்டு ஈசியா?! - கிச்சன் கார்னர்

எனக்கு ரவா இட்லின்னா பிடிக்கும். ஆனா, இதுவரை ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. எங்காவது கல்யாணம், காட்சின்னு போனால் சாப்பிடுவதோடு சரி. யூட்யூப், பேஸ்புக்ல உலா வரும்போது அடிக்கடி ரவா இட்லி செய்முறை கண்ணில் படும். அதில் தயிர் சேர்ப்பதால் புளிப்பு சுவையா இருக்குமோன்னு புதுசா ட்ரை பண்ண பயமா இருந்துச்சு. 

நேற்று வீட்டில் யாருமில்லை.  சரி ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு இறங்கிட்டேன். சின்னவதான் பரிசோதனை எலியா மாட்டிக்கிட்டா. நல்லாதான் இருக்கும்மான்னு சொன்னா.  அது எந்தளவுக்கு உண்மைன்னுதான் தெரில:-(  . ஆனா, இட்லி சாஃப்டா வந்தது. இனி அடிக்கடி செய்யனும். மருமகப்பிள்ளைக்கு ஆக்கிப்போட ஒரு புது டிபன் தயார்..

தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் 
கேரட்
இஞ்சி
ப.மிளகாய்
கறிவேப்பிலை கொத்தமல்லி
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
ஆப்பசோடா
உப்பு

ரவையை சுத்தம் செய்து வச்சுக்கனும். கேரட்டை கழுவி தோல் சீவி துருவி வச்சுக்கனும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியா நறுக்கி வச்சுக்கனும். இஞ்சியை கழுவி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கனும்

வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடனும்..
ப.மிளகாயை போடனும்...

வெங்காயத்தை போட்டு லேசா வதக்கவும்..
நசுக்கி வச்சிருக்கும் இஞ்சியை சேர்க்கவும்..
துருவி வச்சிருக்கும் கேரட்டை சேர்த்து நல்லா வதக்கனும்...
கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து லேசா வதக்கனும்...
சுத்தம் செய்து வைத்திருக்கும் ரவையை கொட்டி வறுக்கனும்.... ஒரு ரெண்டு நிமிசம் வறுத்ததும் அடுப்பை அணைச்சி ஆற விடனும்..
ரவை+கேரட் கலவை ஆறினதும் ஒரு பங்கு ரவைக்கு முக்கால் பங்கு தயிர் சேர்த்து நல்லா கிளறி விடனும். கொஞ்சமா தண்ணி சேர்த்து கலக்கனும். தேவையான அளவுக்கு உப்பு, ஆப்பசோடா சேர்த்து கலந்து 15 நிமிசம் மூடி வச்சுடுங்க.
மாவு தண்ணியா இருக்கக்கூடாது. மாவு தண்ணியா இருந்தால் இட்லி சப்பையா இருக்கும். கொஞ்சம் கெட்டியா அள்ளி எடுத்து வைக்கும் பக்குவத்தில் மாவு இருந்தால்தான் இட்லி பூரித்து வரும். இட்லிப்பானையில் வச்சு அவித்தெடுத்தால் ரவா இட்லி ரெடி.

ரவை+கேரட் கலவையோடு தயிர் கலந்தபின் பத்து நிமிசம் கண்டிப்பா ஊறவிடனும். இல்லன்னா இட்லி கல்லுப்போல் இருக்கும். அதிகமா தண்ணி சேர்க்கக்கூடாது. தயிர் சேர்க்க விருப்பப்படாதவங்க ஈனோ சால்ட் சேர்க்கலாம்.   முந்திரிப்பருப்பு சேர்க்கலாம். வீட்டில் இல்லாததால் நான் சேர்க்கலை. பச்சை பட்டாணி கொஞ்சமா சேர்க்கலாம்..

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னிலாம் இதுக்கு சைட் டிஷ்சா பக்காவாய் பொருந்தும்..

நன்றியுடன்,
ராஜி

Tuesday, February 05, 2019

கமகம ஹோட்டல் சாம்பார் - கிச்சன் கார்னர்

Image may contain: food
சின்ன வயசில் அரக்கோணத்தில் சாய்ராம்ன்ற ஹோட்டலுக்கு அப்பா கூட்டி போகும்போது இட்லிதான் தனக்கு சொல்லிக்குவார். அதேமாதிரி வேலூருக்கு கூட்டிப்போகும்போதெல்லாம் சி.எம்.சிக்கு அருகில் இருக்கும் பேலஸ் கபேக்கு கூட்டி போவாங்க. அங்க பொழுதன்னிக்கும் இட்லி கிடைக்கும்.  ஆவி பறக்கும் இட்லி தும்பை பூவாய் தேங்காய் சட்னி, இளம்பெண்ணின் கன்னம்போல் சிவந்த கார சட்னி,  இதோடு ஒரு ஸ்பூன் இருக்கும். இந்த ரெண்டு ஹோட்டலிலும் ஒரு ஒற்றுமை. நாம கேக்காமயே, சாம்பார் குறைய குறைய கொண்டு வந்து ஊத்திக்கிட்டே இருப்பாங்க. இட்லியைவிட சாம்பார்லதான் வயிறு நிறையும். 

Image may contain: food
ஆற்காட்டில் பஸ் ஸ்டாப் பக்கத்துலயே சாமி ஹோட்டல்ன்னு இருக்கும்.  அங்க  90களில் மினி இட்லி செம பேமஸ்.  அந்த பக்கம் போகும்போதெல்லாம் வாங்கி கொடுப்பார். ஒரு கிண்ணம் நிறைய சாம்பார்ல மிதக்கும் இட்லியை துண்டாடி சாப்பிடுறதே ஒரு கெத்து.. எதுக்கு இந்த ஹோட்டல் விளம்பரம்ன்னா, சாம்பாருக்காக இட்லியா?! இட்லிக்காக சாம்பாரான்னு யோசிக்கும்போது சாம்பாரின் ருசிதான் காரணம்ன்னு தெரியுது. அதேமாதிரியான ஒரு சாம்பாரை செய்யனும்ன்னு என்னோட போராட்டத்துல ஒருவழியா ஜெயிச்சுட்டேன்னுதான். கிட்டத்தட்ட ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் இப்ப வீட்டிலேயே செய்றேன். 

ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்...
துவரம்பருப்பு
பச்சை மிளகாய்,
பூண்டு
காய்ந்த மிளகாய்
வெங்காயம்
தக்காளி
மிளகாய் பொடி (தனியா, பருப்புலாம் போட்டு அரைச்சது. தனி மிளகாய்தூள் இல்ல)
உப்பு
கேரட், கத்தரிக்காய், முருங்கை, முள்ளங்கின்னு காய்கறிகள்
எண்ணெய்
வெல்லம்.

அரைக்க
தேங்காய்
தக்காளி
உ.கடலை
து.பருப்பை கழுவி மஞ்சப்பொடி சேர்த்து வேகவைக்கனும். நான் வாசனைக்காக பூண்டு, காய்ந்த மிளகாய்,  ப.மிளகாய், தக்காளி சேர்த்து வேகவைப்பேன்.

.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் ப.மிளகாயை போட்டு வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கனும்.

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கனும்...
காய்கறி சேர்த்து வதக்கனும்.. 
மிளகாய் பொடி சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும்வரை வதக்கிக்கனும்..
தேவையான அளவு தண்ணியும், உப்பும் சேர்த்து கொதிக்கவிடனும்..
குழைய வேகவைத்த பருப்பை சேர்த்துக்கனும்..
தேங்காய், தக்காளி, உ.கடலைலாம் அரைச்சுக்கனும்..

அரைச்ச விழுதை சேர்த்து கொதிக்கவிடனும்..

பெருங்காயப்பொடி சேர்த்துக்கனும்..
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொ.மல்லி, காய்ந்த மிளகாய்லாம்  சேர்த்து  வதக்கி சாம்பாரில் சேர்க்கனும்..
ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக்கிட்டா ஹோட்டல் சாம்பார் ரெடி. சிலருக்கு சாம்பார் தண்ணியா இருக்கனும். சிலருக்கு கெட்டியா இருக்கனும். அவரவருக்கு தகுந்தமாதிரி கொதிக்கவிட்டு இறக்கிக்கலாம்..

இட்லி, தோசை, பொங்கலுக்கு இந்த சாம்பார் நல்லா இருக்கும். பூரியை சின்ன சின்னதா சுட்டு சாம்பாரில் போட்டு எடுத்து சாப்பிட்டாலும் நல்லா இருக்கும். இதேமாதிரி உளுந்து வடையும் சேர்த்து சாப்பிடலாம்.. வடையும், பூரியும் மிதந்த சாம்பார் இன்னும் ருசியா இருக்கும்...

அடுத்த வாரம் கீரை மசியலோடு வரேன்...

நன்றியுடன்,
ராஜி

Saturday, March 31, 2018

இட்லி ஆணா?! பெண்ணா?! - இட்லி தினம்


இட்லி- சட்னி, இட்லி-குருமா, இட்லி-மட்டன் குழம்பு, இட்லி- தேங்கா சட்னி, மினி இட்லி, ராகி இட்லி, டம்ப்ளர் இட்லின்னு முகநூல், ட்விட்டர்ன்னு நேத்து முழுக்க இட்லி போட்டோக்கள் சுத்திக்கிட்டு இருந்துச்சு. என்னன்னு கேட்டா, நேத்து இட்லி தினமாம். அடேய்களா! இதை முதல்லியே சொல்லி இருந்தா ஒரு பதிவை தேத்தி இருப்பேனே!ன்னு நினைச்சுக்கிட்டேன். தாமதமா தெரிஞ்சாலும் பிறந்தநாள், கல்யாணநாளுக்கு வாழ்த்துற மாதிரி நினைச்சுக்கிட்டு இன்னிக்கு பதிவை போட்டுட்டேன். பிலேட்டட் இட்லி டே! 
குழந்தைக்கு முதன்முதலா ஊட்ட ஆரம்பிக்கும் உணவு இட்லியாதான் இருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதானவங்க வரை எல்லாரும் எல்லா நேரத்திலும் சாப்பிடலாம். இதுவரை இட்லி சாப்பிடாதன்னு யாருக்கும் மருத்துவரீதியா அட்வைஸ் கொடுத்திருப்பாங்களான்னு பார்த்தா இல்லன்னுதான் சொல்லனும். அளவு குறைச்சலா சாப்பிடுங்கன்னு வேணும்ன்னா சொல்லி இருக்கலாம். எப்பேர்ப்பட்ட நோய்க்கிருமியும் 100டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அழிஞ்சுடும். நீரின் கொதிநிலை 100டிகிரி செல்சியஸ். நீராவியினால் செய்யப்படும் இட்லியும், இடியாப்பமும் 100டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்பத்தினால் சமைக்கப்படுவதால் இட்லிமாவில், அதில் சேர்க்கப்படும் தண்ணியில் எதாவது கிருமி இருந்தாலும் அழிஞ்சுடும்., அதனால, எந்தவித கிருமியும் இல்லா உணவுன்னு இட்லியை சொல்லலாம். ஆறிப்போன இட்லி மீது அமரும் ஈ, கொசு, சுத்தமில்லாத பாத்திரத்தினால் பரவும் கிருமிகள் இட்லி கணக்கில் சேராது.
அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட்டும், உளுந்தில் இருக்கும் புரோட்டீனும் நீராவியில் இட்லியாய் அவித்தெடுக்கும்போது ஈசியா ஜீரணமாகக்கூடிய புரதமா மாறிடுது. ஒரு இட்லியில் ஒன்று அல்லது இரண்டு  கிராம் புரதம் இருக்கும். இந்த புரத அளவு இட்லி சைஸை பொறுத்து 65 முதல் 100 கலோரி கிடைக்கும். அதனால உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்குது., இதில் கொழுப்புக்கு இடமே இல்லாததால் உடல் எடை கூடாது. அதுக்காக பத்து பதினைந்து இட்லிகளும், குருமா, தலைக்கறி, குடல்குழம்பு, மீன் குழம்புலாம் சாப்பிட்டு உடல் எடை கூடிடுச்சுன்னு என்கிட்ட சண்டைக்கு வரப்படாது.
பண்டிகை தினத்திலும், காதுகுத்து, கல்யாணம் மாதிரியான விசேச வீடுகளிலும், சாவு, கருமாதி மாதிரியான இழவு வீடுகளிலும் அபூர்வமாக அந்தக்காலத்தில் பரிமாறப்பட்டு, மினிமம் அஞ்சு, மேக்சிமம் பதினைந்துன்னு வெளுத்து கட்டிய இட்லி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர், இன்ஸ்டண்ட் மாவுன்னு தினம் தினம் பரிமாறப்பட்டு நாலு இல்ல அஞ்சு என்ற எண்ணிக்கையில் சுருங்கிட்டுது. அந்த வயசுல நான் உன் வயசில் ஆறு இட்லிக்கு குறையாம சாப்பிடுவேன்னு ஓரிரண்டு இட்லி சாப்பிடும் மகள்கிட்ட சொல்லி தீனிப்பண்டாரம்ன்னு பேர் வாங்கி கொடுத்த நிகழ்வெல்லாம் நம்மில் பலருக்குண்டு.
 
நிர்பந்தம் காரணமாய் சொத்து சுகம் நிலம் புலம் விட்டு  ஊர் பெயர்ந்தவங்களை கைத்தூக்கி விட்டிருக்கு இந்த இட்லி.   இறைவனால்  கைவிடப்பட்ட விதவைகளுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கும் இட்லி வியாபாரம்தான் மானத்தோடு வாழ வழி செய்திருக்கு. அதிகபட்சம் 1000ரூபாய் இருந்தால் சின்னதா ஒரு இட்லிக்கடை போட்டுடலாம். இது, பத்து வருசத்துக்கு முந்தின கதை.
தென்னிந்தியாவின் குறிப்பா தமிழகத்தின் பாரம்பரிய உணவா இட்லியை சொன்னாலும் இட்லியின் பிறந்தகம் இந்தோனேசியான்னு ஹிஸ்டரிக்கல் ஆஃப் இண்டியன் ஃபுட்ன்ற நூலில் K.T.அச்சையா  சொல்லி இருக்கார்.  அதுமட்டுமில்லாம, , 7ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இட்லிப்பானைன்ற பாத்திரம்ன்னு ஒன்னு இல்லவே இல்லன்னு சீன யாத்ரீகர் யுவான் சுவாங் பயணக்குறிப்பு சொல்லுது. ஆகமொத்தம் கி.பி 800 முதல் கி.பி 1200 யிலான காலக்கட்டத்தில்தான் இட்லி இந்தியருக்கு அறிமுகமாகி இருக்கு. இட்லி ஆணா பெண்ணான்னு பட்டிமன்றம் வச்சா பொண்ணுன்னு ஓங்கி அடிச்சு சொல்லலாம். ஏன்னா, பெண்கள் வாழ்க்கை நல்லவிதமாவும், கெட்டவிதமாவு அமையுறது புகுந்தவீட்டில்தான். வாழ்க்கையின் பெரும்பகுதியை புகுந்தவீட்டில்தான் கழிப்பாங்க. அம்மா, மாமியார், அண்ணி, பாட்டி.....ன்னு அவளுக்கு அதிகமான ரூபம் உண்டாகுது. இட்லியும் அதுப்போலதான், ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி, முருங்கக்கீரை இட்லி, காஞ்சிபுரம் இட்லி, இட்லி சாண்ட்விச், இட்லி உப்புமா, சேமியா இட்லி, சாமை இட்லி, குதிரைவாலி இட்லி, திணை இட்லி, கேரட் இட்லி, பொடி இட்லி....ன்னு இட்லியின் ரூபமும் அதோட புகுந்த வீடான இந்தியாவில் பல ரூபத்தில் வெளிப்படுது.

இந்தோனேசியாவில் இதுக்கு பேரு கெட்லி(kedli). அதான் இட்லின்னு ஆச்சுன்னு சொல்றாங்க. இல்லையில்லை, இட்டாலிக்கான்ற கன்னட வார்த்தைதான் இட்லின்னு மாறிச்சுன்னும், அரிசி உளுந்துமாவினை பானையில் இட்டு அவிக்குறாதால இட்லின்னு உண்டாச்சுன்னும் சொல்றாங்க. கிபி 1130ல் மேலை சாளுக்கிய மன்னனான மூன்றாம் சோமேஸ்வரன் எழுதிய நூலில்  மானசொல்லாசான்ற நூலில் ஒரு உணவுக்கு இட்டாரிகான்னு சொல்லி இருக்கார் அது இட்லிதான்னும்,  10ம்நூற்றாண்டில் தமிழ்நாட்டில் குடியமர்ந்த சௌராஷ்டிரர்கள் இடாடான்ற ஒரு உணவுப்பொருளை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினாங்க. அது இட்லின்னும், 1250காலக்கட்டத்திற்குப்பிறகுதான் இந்தியாவுக்கு இட்லி அறிமுகம் ஆச்சு. அது அரேபிய வணிகர்கள் இந்தியாவிற்குள் வந்ததால்தான் இட்லியே வந்துச்சுன்னும் சொல்றாங்க. ஆகமொத்தம் அப்பயும், இப்பயும் இட்லின்னாலே பிரச்சனைதான் போல!  என்னிக்குமே நதிமூலம் ரிஷிமூலம் போல இட்லியின் மூலமும் கண்டறியமுடியாது போல!
ஒரு மீடியம் சைஸ் இட்லியில் 65கிராம் கலோரி,  2கிராம் புரதம், 2 கிராம் நார்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கு. ஜீரணிக்க எளிதாகவும், இட்லி சுட்டெடுப்பது எளிதா இருந்தாலும் இட்லி மாவு தயாரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.  இட்லிமாவில் உளுந்து அதிகமாகிட்டால் இட்லி சப்பையா இருக்கும். உளுந்து கம்மியாகிட்டா இட்லி கல்லு மாதிரி இருக்கும். மாவு தண்ணியா இருந்தாலும் இட்லி ஒருமாதிரி அதிகப்பட்ச சாஃப்டா இருக்கும். மாவு கெட்டியா இருந்தால் ரப்பர் பந்துபோல இருக்கும். ஈசியான இட்லிக்கான சின்ன சின்ன செய்முறை நுணுக்கங்கள் பல...  அதுலாம்  கைவர பழகிட்டா இட்லி ஈசியான உணவுதான்.

இட்லி அரிசி 4 பங்குக்கு, ஒரு பங்கு உளுந்தோடு கால் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து தனித்தனியா ரெண்டு மணிநேரத்துக்கு மேலா ஊற வைக்கனும். அரிசி, உளுந்தை நல்லா கழுவி உளுந்தை அடிக்கடி நீர் தெளிச்சு பந்துபோல் நல்லா நைசா அரைச்சு எடுத்துக்கனும். அரிசியை ரொம்ப நைசா இல்லாம ரவை பதத்துக்கு அரைச்சு எடுத்து உப்பு சேர்த்து கலக்கி எட்டு மணிநேரம் புளிக்க வச்சு, இட்லித்தட்டில் மாவை இட்லிகளா ஊத்தி இட்லிப்பானையில் வச்சு அவித்தெடுக்கனும். உளுந்தை கம்மி பண்ணிக்கிட்டு கொஞ்சம் ஜவ்வரிசி இல்லன்னா ஆமணக்கு கொட்டையும் சேர்ப்பது வழக்கம். இட்லிமாவில் ஆப்பசோடாவையும் சேர்ப்பது நம்மூர் வழக்கம்.   அப்படி சேர்க்கனும்ன்னு நினைக்குறவங்க நைட்டே சேர்த்து கரைச்சு வச்சுக்கனும்.
 காலையில் இட்லி அவிக்கனும்ன்னா நைட்டே இட்லி மாவில் கொஞ்சூண்டு ஆப்பசோடா சேர்த்து சரியான பதத்தில் கரைச்சு வச்சுக்கனும். காலையில், இட்லி ஊத்தும்போது மாவை ரொம்ப கிளறாம, ஓரிரண்டு முறை கிளறி இட்லியா ஊத்தனும். ஏன்னா, இப்படி கிளறிவிடுறதால மாவில் இருக்கும் காற்று குமிழிகள் உடைஞ்சிடும். இந்த காற்று குமிழிகள்தான் இட்லி சாஃப்டா இருக்கக் காரணம். மாவை ரொம்ப நைசா அரைச்சாலும் இட்லி நல்லா இருக்காது. 
இட்லி மாவு மீந்துட்டா கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகுலாம் எண்ணெயில் வதக்கி சேர்த்து இட்லி ஊத்தலாம். முன்னலாம் ஊருக்கு போகும்போது இப்படிதான் கொண்டுப்போவாங்க. ரெண்டு நாள் தாங்கும். அதேநேரம் சைட்டிஷ்சா எதும் தேவை இருக்காது. இட்லி மீந்துட்டா உதிர்த்து உப்புமா செஞ்சுக்கலாம். இட்லி ஃப்ரை, இட்லி மஞ்சூரியன், இட்லி பக்கோடான்னு இட்லில செய்யப்படும் பதார்த்தங்கள் நீண்டுக்கிட்டே போகும்.  காலத்துக்கு ஏற்ப, ஓட்ஸ் இட்லி, பாஸ்தா இட்லியும் வந்தாச்சு. 

மாவில், ருசியில், நிறத்தில் மட்டுமல்ல இட்லி உருவத்திலும்கூட மாற்றம் வந்தாச்சு. முக்கோணம், சிப்பி, இதயம், பூ வடிவிலான இட்லி தட்டுகள் இப்ப மார்க்கட்டில்  கிடைக்குது.  இட்லின்னாலே பறந்து கட்டிக்கிட்டு சாப்பிட்ட காலம் போய் இட்லியை, நம்ம பசங்க சாப்பிட  என்னென்ன உத்திகளை செய்ய வேண்டி இருக்கு?!
இட்லின்னா பலப்பல நினைவுகள் வந்தாலும், ஊர்க்காவலன் படத்தில் ராதிகா, ரஜினி காமெடியான கொஞ்சூண்டு மாவில், கொஞ்சூண்டு இட்லி அவிச்சு வச்ச காமெடியை மறக்க முடியுமா?! 

நன்றியுடன்,
ராஜி

Tuesday, December 03, 2013

கதம்பச் சட்னி - கிச்சன் கார்னர்

ஒரு பொண்ணுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனையை விட பெரிய பிரச்சனை, காலை டிஃபனுக்கு சைட் டிஷ் தேடுறதுதான். தேங்காய் சட்னியும், வேர்கடலை சட்னியும் கொலஸ்ட்ரால், சாம்பார் வச்சா எப்பப் பாரு சாம்பாரா!? குருமா வச்சா அது பூரிக்குதான் சரியா இருக்கும்ன்னு எதை செஞ்சாலும் நொள்ளை நொட்டை சொல்லுவாங்க. 

வீட்டுக்காரருக்கு முள்ளங்கி பிடிக்காது, சின்னவளுக்கு கத்திரிக்கா பிடிக்காது. அப்புக்கு கேரட் பிடிக்காது. இந்த காய்கறில இருக்கும் சத்துலாம் எப்படி கிடைக்கும்!? அதனால எல்லா காய்கறியும் போட்டு ஒரு சைட் டிஷ் ரெடி பண்ணிட்டா, எல்லோரையும் எல்லா காய்களையும் சாப்பிட வச்ச மாதிரி ஆச்சுன்னு அம்மா செய்வாங்க.

4 பேர் சாப்பிடும் அளவுக்கு தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
ப.மிளகாய் - 1
பூண்டு - 4 பல்
கத்திரிக்காய் - 1
கேரட் - 1
முள்ளங்கி -1
உருளைக்கிழங்கு - 1
மிளகாய் தூள் - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு -சிறிது
கடலை பருப்பும், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு.

கத்திரிக்காய் தவிர மத்த காய்கறிலாம் தண்ணில நல்லாக் கழுவிட்டு பொடியா நறுக்கி வச்சுக்கோங்க.  கத்திரிக்காயை பொடியா நறுக்கி தண்ணில போட்டு வைங்க. அப்படி இல்லாட்டி, கத்திரிக்காய் கறுத்து போகும்.

வாணலியை அடுப்புல வச்சு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய வைங்க.

அடுத்து பச்சை மிளகாயை போட்டுக்கோங்க.


அடுத்து பூண்டு போட்டுக்கோங்க. 

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்குங்க. பொன்னிறமா வதங்கனும்ன்னு அவசியமில்ல. வெங்காய வாசனை போனால் போதும்.

வெங்காய வாசனை போனதும் தக்காளி சேர்த்து லேசா வதக்கிங்கோங்க.

அடுத்து பொடியா வெட்டி வச்ச காய்கறிகளை சேர்த்து நல்லா வதக்கிங்கோங்க.

தேவையான அளவு உப்பு சேருங்க... பொறியல், காரக்குழம்புக்கு வெங்காயம், காய்கறிகள் வதக்கும்போது உப்பு சேர்த்துக்கிட்டா காய்கறிகள் சீக்கிரம் வேகும். பாத்திரத்துல ஒட்டவும் ஒட்டாது.


மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்குங்க. மிளகாய்தூள் வாசனை போனதும் தேவையான அளவு தண்ணி ஊத்தி கொதிக்க விடுங்க.

அப்படி கொதிக்கும்போதே மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க. மஞ்சப்பொடி சிறந்த கிருமி நாசினி. நம்ம கவனத்தையும் மீறி சாப்பாட்டுல சேரும் கிருமிகளை கொல்ல மஞ்சப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. காய்லாம் நல்லா வெந்ததும் கல்சட்டில போட்டு காய்கறிலாம் உருத்தெரியாம  கடைஞ்சிக்கோங்க. 

அடுப்புல வாணலி வச்சு சூடானதும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ஞ்சதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்க. 

கடுகு பொரிஞ்சதும் கடலைப்பருப்பும், உளுத்தம்பருப்பும் சேர்த்து, அது சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க.
கறிவேப்பிலை பொரிஞ்சதும் கடைந்த குழம்பை ஊத்தி சூடு பண்ணி இறக்கிக்கோங்க. கொதிக்கனும்ன்னு அவசியமில்ல. சூடேறினால் போதும்.

சூடான சுவையான கதம்ப சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கலாம். சமயத்துல சாதத்துக்கும் நல்லா இருக்கும். 

தக்காளி விலை அதிகமா இருக்கும் நேரங்களில் தக்காளி குறைச்சுக்கிட்டு கொஞ்சம் புளி சேர்த்து கடைஞ்சாலும் டேஸ்ட் மாறாது. கடையும்போதே டேஸ்ட் பார்த்தால் ஒருவேளை காரம் கம்மியா இருந்தா காய்ந்த மிளகாய் சேர்த்தால் காரமும் சரியாகும். ருசியும் கூடும். பிள்ளைகளும் காய்கறிகளை எடுத்து வச்சுடாம சாப்பிட்டுடும்.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் கார்னர்ல சந்திக்குறேன். அதுவரை, டாட்டா, பை பை, ஸீ யூ.