Showing posts with label தக்காளி. Show all posts
Showing posts with label தக்காளி. Show all posts

Tuesday, April 29, 2014

தக்காளி ஊறுகாய் - கிச்சன் கார்னர்

கோடைக்காலம் வந்தாலே  பொண்டுங்க, பொட்டு பொடுசுங்கலாம் ஊறுகாய், வத்தல்லாம் போடுற வேலைல இறங்கிடுவாங்க.  மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய்லாம் இப்போ விலைக் குறைவா கிடைக்கும். அதனால வத்தல் போட்டு சேமிச்சு வச்சு வருடம் முழுக்க பயன்படுத்திக்குவாங்க.  அதே நேரத்தில் தக்காளி, பூண்டு மாதிரியானலாம் விலைக் குறைவான நேரத்துல ஊறுகாய் செஞ்சு சாப்பிடுவாங்க. என்ன இதுலாம் பத்து இல்ல ஒரு மாசம்தான் தாங்கும்.  வருசம் முழுக்க சேமிச்சு வச்சுக்க முடியாது அதான் இதுல இருக்கும் மைனஸ் பாய்ண்ட்.

தேவையானப் பொருட்கள்:
நல்லா பழுத்த தக்காளி - 1 கிலோ
மிளகாய் பழம் அல்லது காய்ந்த மிளகாய் - 100கிராம்
புளி - 100கிராம்
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - 100 மிலி
பெருங்காயம் -  சிறிது
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது.
 தக்காளியை நல்லா கழுவி ஈரம் போக துடைச்சு நாலு துண்டா வெட்டி பீங்கான் ஜாடி இல்ல பிளாஸ்டிக் டப்பாவுல போட்டு உப்புப் போட்டு ஒரு நாள் முழுக்க ஊற விடுங்க. 

மறுநாள் காலைல ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல தக்காளியை மட்டும் காய வைங்க. தக்காள் ஜூஸை தனியா வெயிலில் வைங்க. 

தக்காளி நல்லா காய்ந்ததும் ட்வெயிலி வைத்த தக்காளி ஜூசில் தக்காளி, மிளகாய், புளி போட்டு ஊற வைங்க. ஊறினாதான் அரைக்க முடியும். இல்லன்னா நைசா அரையாது. தக்காளிலாம் ஊறினதும் உரலில் இல்ல மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க. தண்ணி பத்தலைன்னா ஆறின சுடுதண்ணி சேர்த்து அரைக்கலாம். 

ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகுப் போட்டு பொரிய விடுங்க. 

கடுகு பொரிந்ததும் தக்காளி, மிளகாய் அரைத்த விழுதைக் கொட்டி வதக்குங்க. 



எண்ணெயும், தக்காளி விழுதும் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க. ஊறுகாய் ஆறினதும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் பெருங்காயத்தை வறுத்து பொடிப் பண்ணி ஊறுகாய்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க. இப்படி ரெடியான ஊறுகாயை ஒரு நாள் முழுக்க வெயிலில் வைங்க.   

காரசாரமான  தக்காளி ஊறுகாய் ரெடி.காத்து புகாத மாதிரிலாம் டப்பாவுல வைக்காம லேசா திறந்து வச்சுக்கோங்க. இல்லாட்டி பூரணம் பிடிச்சுடும்.   (ரெடியான தக்காளி ஊறுகாய் படமெடுக்க மறந்துட்டேன்.  ஒரு வாரம் கழிச்சுதான் படமெடுக்காதது நினைவு வந்து மிச்சம் மீதியைதான் படமெடுத்தேன். அதான் காய்ஞ்சு போன மாதிரி இருக்கு.) 

மோர் சேர்த்த பழைய சாதம் , கூழ்க்குலாம் இந்த ஊறுகாய் மேட்ச் ஆகும். அடுத்த வாரம் என்ன செய்யலாம்!?

லீவுக்கு வரும் சொந்தக்காரங்க தலைத்தெறிச்சு ஓட வைக்குற மாதிரி பஜ்ஜி செய்யலாமா!?

Tuesday, February 18, 2014

கடலைப் பருப்பு அரைச்சு விட்ட குருமா- கிச்சன் கார்னர்

காலைல காரசாரமா சட்னி வச்சா வூட்டுக்காரருக்குப் பிடிக்குறதில்ல. சாம்பார் வச்சா சப்புன்னு இருக்குன்னு பசங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது! டெய்லியும் இட்லிக்கு தொட்டுக்க என்னதான் செய்யுறதுன்னு மண்டையைப் பிச்சுக்காதக் குறைதான்! குருமா செய்யலாம்ன்னு நினைச்சா பட்டாணி ஊற வைக்க மறந்திருப்போம்!

என் ஓரகத்தி இந்தக் குருமாவைச் செஞ்சாங்க. நல்லா இருந்துச்சு. நானும் அதேப்போல செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

தேவையானப் பொருட்கள்:
கடலைப்பருப்பு - கைப்பிடி
வெங்காயம் - 2
தக்காளி - 2
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய் - கொஞ்சம்
சோம்பு -கொஞ்சம்
பட்டை- ஒரு துண்டு
கிராம்பு- 2
எண்ணெய் -2 தே.கரண்டி
கடுகு -கொஞ்சம்
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு -தேவைக்கேற்ப

வெங்காயம், தக்காளி, இஞ்சி, தேங்காயைக் கழுவி வெட்டி வச்சுக்கோங்க.



வாணலியை அடுப்பில் வச்சு சூடானதும் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊத்தி கடலைப்பருப்புப் போடுங்க.

பட்டை, சோம்பு, கிராம்புலாம் போட்டு லேசா வறுங்க. கடலைப்பருப்பு பொன்னிறமாகனும்ன்னு அவசியமில்ல.

வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தில் பாதி போட்டு லேசா வதக்குங்க.

பச்சை மிளகாயை போட்டு வதக்குங்க.


வெட்டி வச்சிருக்கும் தக்காளில முக்கால் வாசி சேர்த்து ரெண்டு நிமிசம் வதக்குங்க. 

வெட்டி வச்ச இஞ்சி சேர்த்துக்கோங்க.

பூண்டு சேர்த்துக்கோங்க, தோல் உரிக்கனும்ன்னு அவசியமில்ல.

அடுத்து தேங்காய் சேர்த்து லேசா வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறினதும், மிக்சில போட்டு கரகரப்பா அரைச்சுக்கோங்க.

வாணலில ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகுப் போட்டு பொரிய விடுங்க.
மிச்சமிருக்கும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வதக்கிக்கோங்க.

மிச்சமிருக்கும் தக்காளி சேருங்க.


உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கிக்கோங்க.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்குங்க.

தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்க.



கொஞ்சம் தண்ணி ஊத்தி, மஞ்சப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.


மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விட்டு அரைச்சு வச்சிருக்கும் கடலைப்பருப்பு விழுதை சேர்த்துக் கொதிக்க விடுங்க.


கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு இறக்கிடுங்க. இட்லி, தோசைக்கு நல்ல மேட்சா இருக்கும்..

டிப்ஸ்: கடலைப்பருப்புலாம் வறுத்ததால ரொம்ப நேரம் கொதிக்க விடனும்ன்னு அவசியமில்ல. ஒரு ரெண்டு நிமிசம் கொதிச்சாலே போது. சாம்பார் போல தண்ணியா இல்லாம, குருமா போல கெட்டியா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். க்டலைப்பருப்பு கொஞ்சமா சேர்த்துக்கோங்க. அதிகமா சேர்த்தா ரொம்ப கொழகொழன்னு இருக்கும். அரைக்கும்போது கரகரப்பா அரைச்சுக்கோங்க.

மீண்டும் அடுத்த வாரம் ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.

இங்க மட்டுமில்லாம இன்னொரு இடத்துலயும் தற்காலிகமா ஒரு வாரத்துக்கு நம்ம கடை ஓப்பன் பண்ணி இருக்கு. அங்க வந்து உங்க ஆதரவு தருமாறு கேட்டுக் கொல்கிறேன்.

Tuesday, February 04, 2014

தக்காளி சட்னி - கிச்சன் கார்னர்

என் பசங்களுக்கு தக்காளிச் சட்னின்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, என் வீட்டுக்காரர் செக்கச்செவேல்ன்னு இருக்குறதால கொஞ்சம் இதுக்கிட்ட இருந்து தள்ளியே இருப்பார். வெளிய எங்காவது பிக்னிக் டூர் போகும்போது இதைத்தான் செஞ்சு எடுத்திக்கிடு போவோம். சாம்பார், குருமாப் போல இது சீக்கிரம் கெட்டுப் போகாது. இட்லி, சப்பாத்தி, சாதம், பொங்கல், பூரின்னு எல்லாத்துக்கும் ஜோடி இந்த சட்னிச் சேரும்.

இப்ப தக்காளி விலை குறைஞ்சிருக்குறதால இனி அடிக்கடி பசங்களுக்கு செஞ்சுகொடுக்கலாம்...,

தேவையானப் பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
நல்லா பழுத்த தக்காளி - 6
ப. மிளகாய் - 1
கறிவேப்பிலை கொத்தமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
மிளகாய் தூள்- தேவைக்கேற்ப
மஞ்சப்பொடி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

வெங்காயம், தக்காளி, ப. மிளகாயை நல்லா கழுவி பொடிப் பொடியா வெட்டிக்கோங்க.
அடுப்பில வாணலி வச்சு எண்ணெய் காய்ஞ்சதும் கடுகுப் போட்டு பொறிய விடுங்க. கடுகு பொறிஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க.

வெட்டிய ப.மிளகாயைச் சேர்த்து வதக்குங்க...,

உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்குங்க.

அடுத்து வெட்டி வச்ச தக்காளியைச் சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்குங்க.

தக்காளி வெந்ததும் தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்துக்கோங்க.


அடுத்து மஞ்சப்பொடி கொஞ்சம் சேர்த்து எண்ணெயில் வதக்குங்க.

தேவையான அளவு தண்ணி, உப்பு சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடுங்க. தண்ணிலாம் சுண்டி, எண்ணெய் தனியா பிரிஞ்சு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.

இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, பொங்கல், உப்புமான்னு எதுக்கும் ஜோடி சேரும். சாதத்துக்குச் செய்யும்போது துளியூண்டு புளிச் சேர்த்தா போதும். வெளியப் போகும்போது செஞ்சுக் கொண்டுபோறதா இருந்தா உப்பு ஒரு கல்லும், எண்ணெய் ஒரு ஸ்பூனும் அதிகமா சேர்த்துக்கோங்க. சீக்கிரம் கெட்டுப் போகாது.

அடுத்த வாரம் பழையக் காலத்து நொறுக்குத் தீனியான உடலுக்கு வலு சேர்க்கும் கேழ்வரகு அடை செய்யுறது எப்படின்னு பார்க்கலாம். இப்ப..., 

டாட்டா, பை பை, சீ யூ....,

Wednesday, August 14, 2013

கார சட்னி - கிச்சன் கார்னர்

பெண்களுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனை ஓய்ஞ்சாலும் ஓயும்!! ஆனா, காலைல டிஃபனுக்கு தொட்டுக்க என்ன செய்யுறதுங்குற பிரச்சனை மட்டும் ஓயவே ஓயாது.

இட்லிக்கு சாம்பார்தான் நல்ல காம்பினேஷன்னு உலகமே சொல்லும். ஆனா, தூயாக்கு இட்லிக்கு சாம்பார் வச்சா பிடிக்காது. வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி வெச்சா இன்னும் ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க பசங்க. ஆனா, வீட்டுக்காரர் வேண்டா வெறுப்பா சாப்பிடுவாங்க. அவங்களுக்கு கடலை பருப்பை அரைச்சு வெச்ச குருமா பிடிக்கும்.

ஆனா, எல்லாருக்கும் பிடிச்ச சட்னின்னா அது இந்த கார சட்னிதான். இதை வெளில டூர், பிக்னிக் போகும்போது செஞ்சு கொண்டு போனா, ஆறின இட்லி கூட நிமிசத்துல காலியாகிடும். செய்யுறதும் ரொம்ப ஈசி.

நாலு பேர் கொண்ட குடும்பத்துதேவையான பொருட்கள்: 

வெங்காயம் - கால் கிலோ
தக்காளி -  100 கிராம்,
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய்- 10 (காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகாயை சேர்த்துக்க்கோங்க)
உப்பு - தேவையான அளவு
மஞ்சப்பொடி - சிறிது
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது




வெங்காயத்தை தோல் எடுத்து கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க.

தக்காளியையும் நல்லா கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க.

மிளகாயை காம்பு கிள்ளி வச்சுக்கோங்க.

பூண்டையும் சுத்தம் பண்ணி, எல்லாத்தையும் மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க.




ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிய விடுங்க .
 கறிவேப்பிலை போட்டு லேசா பொறிஞ்சதும்...,



அரைச்சு வெச்சிருக்கும் தக்காளி, வெங்காய விழுதை கொட்டி கொஞ்சம் வதக்குங்க.

 ஒரு ரெண்டு நிமிசம் எண்ணெயில வதங்குனதும் மஞ்சப்பொடி போடுங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணி விட்டு  நல்லா கொதிக்க விடுங்க.  எண்ணெய் தனியா பிரிஞ்சு வரும் நேரத்துல அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறுங்க.
காரம், புளிப்புமா இட்லிக்கு செம மேட்சிங்கா இருக்கும்  இந்த சட்னி. பெரிய பொண்ணு தூயாக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய வைம்மான்னு போகும் போதும் வரும்போது சும்மாவே டேஸ்ட் பண்ணுவா! அவ இல்லாததால, இப்போலாம் அதிகமா செய்யுறது இல்ல. பத்து நிமிசத்துல இட்லி வேகுற நேரத்துல  செஞ்சுடலாம். 

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன்.


Thursday, August 08, 2013

கத்திரிக்கா!! கத்திரிக்கா!! குண்டு கத்திரிக்கா!! -ஆண்கள் ஸ்பெஷல்


ஒரு சட்டையோ இல்ல ஃபேண்டோ வாங்கும்போது திருப்பி திருப்பி பார்த்து வாங்கி வரும் நம்ம ஆளுங்களை ”ஒரு கால் கிலோ கத்திரிக்காயும், அரைக்கிலோ வெங்காயமும் வாங்கி வாங்க”ன்னு அனுப்பினா..., 

கடைக்காரர் வாயையே பார்த்துக்கிட்டு கத்திரிக்காயில பாதி சொத்தையாவும்  வெங்காயத்துல பாதி  அழுகலாவும் வாங்கி வருவாங்க.  இவங்களுக்குன்னே இதெல்லம் எடுத்து வச்சிருப்பாங்களோ தலையில் கட்ட!!

ஒரு கத்திரிக்காய் வாங்க துப்பில்லே நீயெல்லாம் ஒரு ஆஃபீசுல மேனேஜரா எப்படிதான் குப்பை கொட்டுறியோ?!ன்னு  நம்ம சகோ’ஸ்  பேச்சும், ஏச்சும் வாங்கக்கூடாதுன்னுதான் இந்த பதிவு....,

 வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமயும்,உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்கனும்...,

வெள்ளை வெங்காயத்தை  நசுக்கி பார்த்தா  சாறு வரும்படி இருக்கனும்.(அதுக்காக, ரொம்ப அழுத்தமா நசுக்கி ஜூஸ் எடுத்துட்டு கடைக்காரர்கிட்ட அடி வாங்குனா கம்பெனி பொறுப்பேற்காது)
 முருங்கைக்காயை கட்டை மற்றும் ஆட்காட்டி  விரல்களால லேசா முறுக்கினா, ஈசியா  வளைஞ்சா அது நல்ல முருங்கைகாய். ஒடிஞ்சா அது முத்தல்.

சர்க்கரைவள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடிப்பட்டு கருப்பா இருந்தா கசக்கும்

மக்காச்சோளம் அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

 தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).


கோவக்காய் முழுக்க பச்சையா வாங்கனும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேணாம். பழுத்தது ருசி இல்லாம இருக்கும்


சின்ன வெங்க்யாம் வாங்கும்போது பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருக்குறதும், முத்து முத்தாக தெளிவா இருப்பதை வாங்கவும்


 தோல் சுருங்காம இருக்கனும்.  கரும்பச்சையில இருந்தாலும்  வாங்கவேணாம். 


காலிபிளவர் பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாம அடர்த்தியா காம்பு தடினமனா இல்லாம வாங்கனும். எடை போடும்போது இலை தண்டை வெட்டிட்டு எடை போட சொல்லுங்க. 

 மாங்காய வாங்கும்போது  தட்டி பார்க்கும்போது டொக்க்ன்னு சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சின்னதா  இருக்கும்


பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ): அடிப் பகுதி குண்டா இல்லாம காய் முழுதும் ஒரே சைசில் இருக்குற மாதிரி  பார்த்து வாங்குறது நல்லது


புடலங்காய்  கொஞ்சம் கெட்டியா அழுத்தமா இருக்குற மாதிரி பார்த்து வாங்குங்க.  அப்போதுன் விதைப்பகுதி குறைவா, சதைபகுதி அதிகமா இருக்கும்


உருளை கிழங்கு முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர மாதிரி இருக்கனும்.

 கருணை கிழங்கு முழுசா வாங்கும் போது பெரியதா பார்த்து வாங்குறது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்குனா, உள்ள இளம்சிவப்பு நிறத்துல இருக்குமாறு  வாங்கவும்


சேப்பங்கிழங்கு முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது.கொஞ்சம்  உருண்டையா பார் த்து வாங்கவும்


 பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும். கீழ் பகுதில வால் முளைக்காமயும் பார்த்து வாங்குங்க.


இஞ்சி லேசா கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வந்தா வாங்குங்க.இதுல  நார் குறைவா இருக்கும். 


 கத்திரிக்காய் தோல் சாஃப்டா இருக்கனும். மேல் காம்பு தடிமனா இல்லாம, மேல்தோல் கத்திரிக்காயோடு ஒட்டி இருக்கனும்.
 

 சுரைக்காயை நகத்தால அழுத்தினா நகம் உள்ளே இறங்னும். அப்போ தான் அது இளசு.

 பூண்டு பல் பல்லா வெளியே தெரியனும். இல்லாட்டி உள்ளே பூச்சி, பூஞ்சை இருக்க வாய்ப்பு அதிகம். 


அவரைக்காய் தொட்டு பார்த்து விதைகள் பெரிதா இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசா வாங்கினா நார் அதிகம் இருக்காது


 பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது.


 வாழைப்பூவோட மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா?! என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் பூன்னு அர்த்தம். 


  மொச்சைக்காய் வாங்கும்ப்போது கொட்டை பெரிதா தெரியும் காய் பார்த்து வாங்கவும்


சௌசௌ வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தா முற்றிய காய்


முள்ளங்கி  லேசாக கீறினா தோல் மென்மையா இருந்தா அது இளசு- நல்ல காய்.

 பச்சை மிளகாய்  நீளமானது  காரம் குறைவா இருக்கும்.  குண்டா இருக்குறதுதான் காரம் தூக்கலாகவும் வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

இப்படி பார்த்து பார்த்து காய் வாங்கிட்டு போய் வூட்டம்மாக்கிட்ட நல்ல பேரு எடுங்க சகோ’ஸ்

Wednesday, August 07, 2013

சோயா உருண்டை பொறியல் - கிச்சன் கார்னர்

”சோயா உருண்டை” 1980 களில்   கல்யாண பந்திகளில் வெஜ் பிரியாணிகளில் தென்பட்டது. ருசி பிடிச்சு  போய் அப்பா, அம்மா இலைகளில் இருப்பதையும் வாங்கி சாப்பிட்டதால அப்பா தேடி பிடிச்சு வாங்கி வந்தார். அப்போலாம் அதன் பேர் கூட தெரியாது, அது தயாரிச்சு வித்த கம்பெனி பெயராலேயே “மீல் மேக்கர்”ன்னுதான் சொல்லிட்டு இருந்தேன். வெஜ் பிரியாணி செய்யும்போது பீன்ஸ், கேரட், பட்டாணி கூட இது கண்டிப்பா இருக்கும்.

சில சமயம் காய் எதும் இல்லாட்டி கூட இந்த சோயா உருண்டையை போட்டு கூட சமைச்சிருக்கோம். டிவில பார்த்து செஞ்சாங்களா?! இல்ல தானா செஞ்சாங்களா?!ன்னு தெரியலை..,  இப்போலாம் காய் எதும் இல்லாட்டி டக்குன்னு இதை பத்து நிமிசத்துல பொறியலா செஞ்சுடுவோம். என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

சோயாவை சாப்பிடுறதால வரும் நன்மைகள் என்னன்னா, இதெல்லாம் தெரியாமதான் சாப்பிட பழகினேன். ஆனா, பதிவு போடுறதுக்காகதான் தேடினேன். ஏன்னா, சமைக்குறது நல்லா இல்லைன்னாலும் இப்படி டிப்ஸ் குடுக்குறதால கொஞ்சம் தப்பிச்சுக்கலாமே அதனால்தான்!!

*சோயாவை சாப்பிட்டுல சேர்த்துக்கிட்டா எலும்புலாம் உறுதியாகும். சோயாவுல கால்சியம் குறைவா இருந்தாலும் இதுல இருக்குற தாவர ஹார்மோன் எலும்புகள் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டதாம்.

* மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்குற ஆற்றல் சோயாவுக்கு இருக்கு. . இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ்ன்ற பொருள்  பெண் ஹார்மோனான ”ஈஸ்ட்ரோஜன்” போல செயல்படும் சக்தி கொண்டது. இது  மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டதாம்.

2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுதாம். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்குமாம்.

4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். ஆரோக்கியமான உடல் நிலை இருக்குறவங்க தினமும் 25கி. சாப்பாட்டுல சேர்த்துக்கலாம். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்குமாம்.

5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றதாம்.

சோயாவில் இருக்கும் சத்துகள்: 

தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்குதாம். 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்குதாம். இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குதாம். (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான். அப்படி இருந்தாலும் சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்குது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்குது. சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான். சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது. மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷியம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ம்ம்ம்ம் போதும் லெக்சர். என்ன சமைக்குறேன்னு பார்க்கலாம்ன்னு நீங்க சொல்றதுக்குள்ள....,

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சமைக்க தேவையான பொருட்கள்:
சோயா உருண்டை - 25
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு 10 பல்
மிளகு - சிறிது
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
பட்டை- 1 
சோம்பு- சிறிது
கிராம்பு- 2 
கரம் மசாலா பவுடர்  - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  
கடலை பருப்பு - 1டீஸ்பூன்  
வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை


வாணலில கொஞ்சம் தண்ணி ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. ரெண்டு கொதி வந்ததும் சோயா உருண்டையை கொட்டி ஒரு கொதி வந்ததும், அடுப்பை ஆஃப் பண்ணி 5 நிமிசம் வாணலியை மூடி வைங்க.


அஞ்சு நிமிசம் கழிச்சு, வெந்த சோயா உருண்டைகளை  வடிகட்டி, மீண்டும் நல்ல தண்ணி ஊத்தி ரெண்டு முறை அலசிக்கோங்க. ஏன்னா, அப்படியே சேர்த்துக்கிட்டா ஒரு சிலருக்கு அந்த சோயா வாசனை பிடிக்குறது இல்ல. அதுக்காக.

அப்படி 2 முறை அலசி, தணி வடிக்கட்டுன சோயா உருண்டையை ரெண்டா மூணா பிச்சுக்கோங்க.

ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துக்கோங்க.


கடுகு பொறிஞ்சதும், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்துக்கோங்க.


அவையும் பொறிஞ்சதும் வெங்காயம் சேர்த்துக்கோங்க.

கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்துக்கோங்க. உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வேகும், பச்சை வாசமும் சீக்கிரம் போகும்..,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கும்போது அடிப்பிடிக்காது.

வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தா சேர்த்துக்கோங்க இல்லன்னாலும் பரவாயில்லை.


தக்காளி நல்லா வெந்து மசிஞ்சதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு   சேர்த்துக்கோங்க. 


மிளகாய் தூள்லாம் லேசா எண்ணெய்ல வதக்கி கொஞ்சமா தண்ணி ஊத்தி கொதிக்க வைங்க.

மிளகாய் தூள் வாசனை போனதும் சோயா உருண்டையை கொட்டிவச்சு  மிதமான தீயில  கிளறுங்க. 

 
அப்படி வதக்கும்போது கொஞ்சம் கரம் மசாலா தூள் சேர்த்துக்கோங்க.


 கடைசியா மிளகை கரகரப்பா இடிச்சு பூண்டை பஞ்சு போல நசுக்கி சேர்த்துக்கொங்க. கடைசியா வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை கிளறி பறிமாறுங்க.

 டிஸ்கி: மிளகு போட்டிருப்பதால சின்ன குழந்தைங்க காரம்ன்னு சொல்லலாம். அதனால, சின்ன பிள்ளைங்க இருந்தா மிளகு கொஞ்சமா சேர்த்துக்கோங்க.  நாலஞ்சு நாளா வெளியூருக்கு போய்ட்டு வந்து ஹோட்டல் சாப்பாட்டுனால நாக்கை அடக்கம் பண்ணி வச்சிருந்தா சாதம், ஒரு பருப்பு சாம்பாரோடு சேர்த்து இதை சாப்பிட்டா அடக்கமான நாக்குக்கு ருசி தெரியும்.

சாம்பார்சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதத்துக்கு தொட்டுக்க நல்லா இருக்கும். அதுமட்டுமில்லாம “அந்த” மெயின் டிஷ்சுக்கு இது நல்ல சைடு டிஷ்சா இருக்கும்.  அது எப்படி உங்களுக்கு தெரியும் அக்கான்னு வந்து பாசமா கேட்டாலும் கம்பெனி ரகசியங்கள் வெளியே சொல்வதற்கில்லை.

சமைச்சுக்கிட்டே பதிவை தேத்த போட்டோ எடுக்கும்போது என் வீட்டு சின்ன அம்மிணி வந்து எதுக்குன்னு கேட்டுச்சு. இதுப்போல பதிவு போடறதுக்குன்னு சொன்னா,,, ஆமாமா! ரொம்ப கஷ்டமான டிஷ் பாரு. யாருக்கும் தெரியாது பாரு. போம்மா போய் உருப்படியா சமைச்சு எங்களுக்கும் போட்டு, பதிவையும் போடுன்னு சொல்லுச்சு. பார்ப்போம் பதிவுக்கு என்ன ரெஸ்பான்ஸ்ன்னு!!??

அடுத்த புதன் வேறொரு ஈசியான அதாவது எனக்கு ஈசியான சமையற்குறிப்போடு வரேன்.