Showing posts with label சிவபெருமான். Show all posts
Showing posts with label சிவபெருமான். Show all posts

Friday, April 19, 2019

முன்ஜென்ம வினை தீர சித்ரா குப்த வழிபாடு

இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ணமிக்கும் நிறைய தொடர்புண்டு. அதுலயும் சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது.  வசந்தக்கால தொடக்கம் சித்திரை  மாதம். அதேப்போல,  சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது.  மத்த பௌர்ணமிக்கில்லாத சிறப்பு இந்த பௌர்ணமி ஏன் விசேஷமானதுன்னு இனி பார்க்கலாம்.



குடும்பம், வியாபார செய்யும் இடம்ன்னு எங்கும்  வரவு, செலவுலாம் சரிவர கணக்கு வச்சு நிர்வகித்தால்  அந்த இடம் ஓகோன்னு வரும். அப்படி வரவு செலவை பார்த்துக்குறவங்களுக்கு வயசுல சின்னவங்களா இருந்தாலும் அங்கு மரியாதை, பொறுப்புன்னு சற்று தூக்கலா இருக்கும்.  சாதாரண வீடு, கடைக்கே இப்படின்னா, உயிர்களின் பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, சுகம் துக்கம்ன்னு வரவு செலவு வச்சுக்குற வேலை எப்பேற்பட்டது?! எந்தவித சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் எள்முனை அளவும் தன் கடமைல இருந்து தவறாமல் கடமையை ஆற்றிவருபவர் சித்திரகுப்தன். இவரின் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படுது.

வட இந்திய கதை...

வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த  தெய்வம் இந்த சித்திரகுப்தன். வட இந்திய மதமான சமண மதத்தின் தெய்வம் இவர்ன்னும் சொல்லப்படுது. சமண மதம் மட்டும்தான் இறப்பை முன்னிறுத்தி அறம் கூறுவதால், மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

தென் இந்திய கதை.....

கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் உணர்ந்து சிவப்பெருமானிடம் முறையிட்டார். சிவப்பெருமான் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவப்பெருமானின் கட்டளையை  சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார்.  சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாறியது.   நீளாவதியின் அழகில் மயங்கி அவளை மணக்கிறார். அதன் விளைவாய்  சித்திரகுப்தன் பிறந்தார், சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. கர்ணன் கவசகுண்டலங்களோடு பிறந்த மாதிரி ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு கொண்ட நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார்.  பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்லுது.


அனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள்.  அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென  எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார்.  சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்திரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று. விரதமிருந்து  சித்திரகுப்தனை  வழிப்படுவோரின் பாவச்சுமை ஏறாதென சிவப்பெருமான் வாக்களித்தார். சித்திரக்குப்தனின் திருமணநாளும் சித்ரா பௌர்ணமியே.


காமதேனு மகனாய்....
அகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவப்பெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்திரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்திரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துறதில்லையாம்.


சித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் மனதில் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும்.  இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின்  செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.

சித்ரகுப்தனை வழிபடும் முறை...

பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானையும் அவருக்கு அருகில்  தேங்காய்க்கு பதிலாய் மாங்காய் வைத்த கும்பம்   வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து  சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள், பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், பனங்காய் வைத்துப் படைக்க வேண்டும்.  தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து குழம்பு வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயாசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், மற்றும் நீர்மோர்  வைத்து படைக்க வேண்டும். நம் வாழ்வு இனிமையாய் இருக்க இனிப்புகளும். கனிவாக வாழ்வமைய கனிகளும்  படைக்க வேண்டும்.. நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். வீட்டில்  மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறனும்ன்னு மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபாடு செய்கின்றோம்.  மா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கல சொம்பில் நீரும், செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் வழக்கம். 



இவரை, பக்கம் பக்கமாய்  மந்திரங்கள் கொண்டு ஜெபிக்க வேண்டாம். செய்த தவறுகளை எண்ணி மலையளவு செய்த பாவத்தினை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எண்ணி எம்மை காப்பாற்றுங்கள் என வேண்டினாலே போதும். இவரருக்கு பானகம் பிடித்த நைவேத்தியம்.   இத்தினத்தில், எண்ணெய் தேய்த்து குளித்தலும் நல்லது. இதுவரை செய்த பாவங்களை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று இதற்கு பொருள்.   இத்தினத்தில் நீர்தானம், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் தானம் செய்வது சிறந்தது.  கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் இருக்கு.  காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

நன்றியுடன்,
ராஜி

Sunday, December 16, 2018

மார்கழியின் மகத்துவம் -1


“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என வைணவமும், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ என சைவமும் இணைந்து போற்றும் அதி உன்னத மார்கழி மாதம் இன்று ஆரம்பம்.  பொதுவா, இரவின்போது பெய்யும் பனிப்பொழிவை விட, அதிகாலையில் பொழியும் பனிப்பொழிவானது நோய் உண்டாக்கும் தன்மையற்றதா இருக்கும். அதிகாலை வேளையில் உடலுக்கு தேவையான கதிர்களின் தாக்கம் அதிகமிருக்கும். வாகனங்களால் உண்டாகும் புகை நச்சு அதிகம் இருக்காது.   கார்த்திகையில் மாலையிலும், மார்கழியில் அதிகாலையிலும் விளக்கேத்தி வைப்பதும் நம் வழக்கம். அதுக்கு காரணம், கார்த்திகை மாதம் முதல் பனிப்பொழிய ஆரம்பிக்கும். வீட்டில் கதகதப்பை உண்டாக்கவே இந்த ஏற்பாடு. ஓசோன் வாயுக்கள் அதிகம் இருக்கும் அதிகாலை வேளையில் கோலமிடுவதால் பல சுவாச பிரச்சனைகள் தீரும்.  ஆனா, இப்பலாம் அதிகாலை எழ சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு நைட்டுலயே கோலம் போட்டுட்டு படுத்துடுறாங்க. அது தப்பான செயல். மார்கழி மாசத்தின் முக்கிய நோக்கமே அதிகாலையில் எழுவதும், பின்பனி நேரத்தில் காற்று மாசுபாடு இல்லாதபோது கோலமிட்டு இறைவனை வணங்குவதுமாகும். 


பூசணிப்பூ வைப்பதின் ரகசியம்..

அப்பலாம்,  கல்யாண புரோக்கர்கள் ,  மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் இல்ல.  வீட்டில் திருமணத்துக்கு தயாராக  பெண்ணோ இல்ல பிள்ளையோ இருந்தா,  அந்த வீட்டின் வாசலில்  மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பாங்களாம்.. ஒட்டுமொத்தமா எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டாங்களாம்.  மார்கழி மாத அதிகாலையில் பஜனைப்பாடல் பாடிக்கிட்டு வர்றவங்க பார்வையில் இந்த பூசணிப்பூ தென்பட்டு, தகவல் அறிந்து, விசாரித்து, பேசி தை மாசம் கல்யாணத்தை முடிப்பாங்களாம். அதனாலதான் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்ன்னு சொல் வந்துச்சாம்.  பூசணிப்பூ வைக்க இன்னொரு காரணம், இப்பூக்களிலிருந்து வரும் வாசமும் மகரந்தமும் பனிக்காற்றில் கலந்து கிருமிகளை கொல்லும் என்பதாலும்தான்.  
போன வருசத்து படம்..

மார்கழி மாதம் பீடை மாதம்ன்னு இப்ப சொல்றாங்க. ஆனா, அது அப்படி இல்ல. நமக்கு வீடு உள்ளிட்ட சகல செல்வமும்  பெற்று நம் வாழ்வில் பீடு நடைப்போட உதவும் மாதம் என்பதால் இதுக்கு பீடுடைய மாதம்ன்னு பேராம்.  காலப்போக்கில் அது மருவி பீடை மாசமாகிட்டுது. பீடுன்னா உயரிய, சிறந்த, உன்னதமான..ன்னு பொருள். இறைவனை வழிபட்டால், வாழ்வின் உன்னத நிலைக்கு செல்லலாம்ன்னு பொருள்படும். இந்த மாசத்தில் கரும்பு, நெல், மஞ்சள், காய்கறிகள்ன்னு அறுவடைக்காலம். வயல்ல பொழுது கழிக்கவும், விளைப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பவுமே சரியாய் இருக்கும். அப்படி இருக்க, மாமன் மச்சான் வீடுகளின் விசேசங்களில் கலந்துக்க முடியாதில்லையா?! அதுமில்லாம, இந்த மாசம் முழுக்க நிறைய ஆன்மீக விழாக்கள் வர்றதாலயும்தான் இந்த மாதத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகளை தவிர்த்தாங்க. சுப நிகழ்ச்சிகளை  நடத்தக்கூடாதே தவிர அதுக்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம்.   இந்த மார்கழி மாசத்தில்தான்  அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் கல்யாணம்,  ஆருத்ரா தரிசனம் மாதிரியான ஆன்மீக நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுது. 
போன வருசத்தைய படம்
வைணவ திருக்கோவில்களில் மார்கழிமாதம் முழுவதும் திருப்பாவை பாடுவாங்க.  திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலா ஆண்டாளின் திருப்பாவையைத்தான் இந்த மாசம் முழுக்க  திருப்பள்ளியெழுச்சிக்காக பாடுவாங்க. சகல சிவாலயங்களில் திருவெம்பாவை பாடல்கள்  திருப்பள்ளியெழுச்சியாக  இம்மாசத்தில் பாடப்படும். இந்த மாசத்துலதான் நல்ல கணவன் கிடைக்கனும்ன்னு பாவை நோன்பை வயசு பொண்ணுங்க இருப்பாங்க.  பாவை நோன்புன்னா, அதிகாலையில் அருகிலிருக்கும் நீர்நிலைகளில் நீராடி, அப்படியே பெருமாள் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதாகும். இந்த நாளில் பால், வெண்ணெய், நெய் சேர்த்த உணவுகளை உண்ணாமலும், மையிடுதல், தலை அலங்காரம், என தன்னை அழகுப்படுத்துதலிலும் ஈடுபடாமல், முழுக்க முழுக்க இறை சிந்தனையிலேயே இருப்பதேயாகும்.
இன்றைய படம்
மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்னு கீதைல கண்ணன் சொல்றாப்ல. அப்ப மத்த பதினோரு மாதம் என்ன தக்காளி தொக்கான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு பதில் இதோ...

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம்ன்றது தேவர்களைப் பொறுத்தவரை  ஒருநாள்.  அந்தவகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணிநேரம் மட்டுமே! ( 1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணிநேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறுமாதக்காலம் தேவர்களுக்கு பகல்பொழுது.  இந்தக்காலத்துக்கு உத்தராயணம்ன்னு பேரு. ஆடிமாதம் முதல் மார்கழிமாதம்வரை வருகின்ற ஆறுமாதக்காலம்  தேவர்களுக்கு இரவுப்பொழுது. இந்தக்காலத்துக்கு தட்சிணாயணம்ன்னு பேரு. தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி,  அதாவது, தேவர்களை  பொறுத்தவரை இரவுப்பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழிமாதம்ன்னு கணக்கிட்டு சொல்றாங்க. இந்த காரணத்தினால்தான் தேவர்களை வரவேற்கும்விதமாக மார்கழி மாசத்து அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமா வச்சிருக்காங்க. 

ஜோதிடரீதியா சொல்லனும்ன்னா  மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’ ன்னு  வடமொழியிலும்,  மார்கழின்னு தமிழிலும் சொல்றோம்.  இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில்  பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் நம்மில் பலபேருக்கு தெரியாது. சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்றவர். . மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அவர், தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நமக்கு தெரியும்தானே?! மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும்.   அதனாலதான் நினைத்தது நிறைவேற, எதிரிகள் தொல்லை நீங்க  ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை மட்டும் மார்கழிக்குன்னு காத்திருந்து செய்வாங்க. 
ஒருவரையொருவர் காணாமலே அவர்பற்றி பேசி அன்புக்கொண்டு அவர்களை அடைந்தது இருவர். அதில் ஒருவர் ஆண், இன்னொருவர் பெண்,  ராமனின் பராக்கிரமத்தை கேள்விப்பட்டு, அவர்பால் ஈர்க்கப்பட்டு ஆண்கொண்ட அன்புக்கு பக்தி, சேவகம்ன்னு பெயர்சூட்டி கடவுளாய் கொண்டாடப்படுது. பக்திக்கு இலக்கணமான  அனுமன் ஜனித்தது இந்த மார்கழியில்தான்.  காதால் கேட்டு பெண் கொண்ட அன்புக்கு காதல்ன்னு பேர் சூட்டி, அவள் நோன்பிருந்து அரங்கனை அடைந்தது இந்த மார்கழி மாதத்தில்.. மார்கழி மாசத்தில்  சூரிய பகவான் தனுசுராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர்மாதம்ன்னும் சொல்வாங்க. தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது,  குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும்  நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள்  உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த்தொழிலில் ஈடுபடமாட்டார்கள். அதனாலும் இந்த மாதத்தில் இறைப்பற்றுக்குன்னு ஒதுக்கி வச்சுட்டாங்க. 
இந்த மாசத்தில்தான்  மகாபாரத யுத்தம் நடந்தது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாசத்தில்தான். இந்திரனால் பெருமழை, வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மாசத்தில்தான். 
எங்க ஊர்லலாம் மார்கழி மாத அதிகாலையிலும், மாலையிலும் பஜனை பாடிக்கிட்டு வருவாங்க. அரிசி, பணம், கோவில் விளக்குக்கு எண்ணெய்ன்னு கொடுப்போம். பதிலுக்கு துளசியை பிரசாதமா தருவாங்க. இப்ப அதுலாம் இல்ல. ஆன்மீக மலர்ச்சிக்கு இந்த மாசம் உகந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த  இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில்  மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!

மார்கழி மகத்துவம் தொடரும்....

நன்றியுடன்,
ராஜி

Friday, June 23, 2017

முரடனுக்கு வந்த வாழ்வு - நாயன்மார்கள் கதைகள்

பொதுவா கண்ணு மண்ணு தெரியாம கோவம் வந்தா போக்கிரி, முரடன்னு சொல்வோம். ஆனா, இங்க மூக்குக்கு மேல கோவம் வந்த ஒருத்தர் நாயன்மார் வரிசைல வந்திருக்கார். அவர் பேர் எறிபத்த நாயனார்.


உலகப்புகழ் வாய்ந்த கரிகாலன், ராஜராஜ சோழன், ராஜேந்திரசோழன்லாம் ஆட்சிப்புரிந்த சோழ ராஜ்ஜியத்திற்குட்பட்ட  கரூவூரில்  என்ற ஊரில் எறிபத்தர் பிறந்தார்.  இவர் சிவபெருமான்மீதும், சிவனடியார் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.  சிவனடியாருக்கு யாதொரு தீங்கென்றால் முதல் ஆளாய் நின்று தீங்கிழைப்போரை தண்டிக்கும் இயல்புடையவர். இதற்காகவே, பரசு என்றும், மழு என்றும் அழைக்கப்படும் ஆயுதத்தை கையில் எப்போதும் கொண்டிருப்பார்.   கருவூர்த் திருக்கோவிலுக்கு திருவாநிலை என்று தனியே ஒரு பெயரும் உண்டு. அங்க எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு,  பசுபதீசுவரர் என்று பெயர். ஆநிலையுடைய மகாதேவர்  என்று அப்பெருமானைச் சிலாசாசனங்கள் குறிக்கின்றன


மழு என்பது சிவப்பெருமான் கையிலிருக்கும்  ஒருவித ஆயுதமாகும். தருகாவனத்து ரிஷிகளின் செருக்கை போக்க சிவபெருமான் சென்றபோது ரிஷிகள் ஏவிய புலிகளை ஆடையாகவும், அவர்கள் ஏவிய ஆயுதங்களை தனது ஆயுதமாகவும் ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்றுக்கொண்ட சிறிய கோடாரி மாதிரியான ஆயுதமே மழுவாகும்.   மழு என்பது சிவன் அடையாளங்களில் ஒன்றாகும். சிவனைப்போலவே சிவனின் அம்சமான வீரபத்திரர் பைரவர் போன்றோர் மழுவினை தன் கரங்களில் ஏந்தியிருப்பர்.


எறிபத்த நாயனார் வாழ்ந்த அதேகாலத்தில், அதே ஊரில் சிவகாமியாண்டார் என்ற முதிய சிவனடியாரும் வாழ்ந்து வந்தார்.  இவர் இறைவனுக்கு பூமாலைகள் தொடுத்து ஆலயத்துக்கு கொடுக்கும் பணியில் இருந்தார்.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கொள்கை. சிவகாமியாண்டாருக்கு ஒரு கொள்கை. அதிகாலையில் யாரும் எழுந்திருக்கும் முன்னமயே எழுந்து முதல் ஆளாய் குளித்து எவர் கண்ணிலும் படும் முன்னரே பூக்களை பறித்து... பூப்பறிக்கும்போது தவறியும் எச்சில் தெறித்து விடக்கூடாது என்பதற்காகவே வாயை துணியால் கட்டிக்கொண்டு பூக்களை  பறிப்பார். அப்பூக்களை யாரும் தீண்டாவண்ணம் காத்து மாலையாக்கி, மாலை நிரம்பிய கூடையையும் ஒரு கொம்பின் நுனியில் கட்டி உயர தூக்கிக்கொண்டு சென்று இறைவனுக்கு  சாத்துவார். இவர் பூக்குடலை தாங்கிச்செல்லும் அழகை கண்டு அவ்வூர் மக்கள் இவர் பக்தியை மெச்சி அவரின் கொள்கைக்கு யாதொரும் பங்கமும் நேரக்கூடாதென வழிவிட்டு ஒதுங்கி நிற்பர்.


புரட்டாசி மாத மகாநவமியை முன்தினமான அஷ்டமியன்று     என்றும்போல் அன்றும் சிவகாமியாண்டவர் உடலும், உள்ளமும் தூய்மையோடும் மனதில் இறைவனை தொழுதுக்கொண்டு பூக்குடலை தாங்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போதைய சோழ அரியனையில் புகழ்சோழர் ஆண்டு கொண்டிருந்தார். அவரது பட்டத்து யானை பட்டவர்த்தனம். இது அச்சமயத்தில் மிக்க பேர் பெற்றது.  ஆற்றில் நீராட்டப்பட்டு, அலங்கரித்து மிக்க செருக்குடன் வீதிகளில் வந்துக்கொண்டிருந்தது. சிவகாமியாண்டவரை கண்டதும், அவர் கீழே தள்ளி அவர் கையிலிருந்த பூக்குடலை பிடுங்கிக்கொண்டு மதங்கொண்ட மாதிரி ஓடியது. யானைப்பாகர்களும் யானையை ஊக்குவித்தவாறும் மேலும் விரைந்து செல்ல யானையை பணித்தனர்.  முதியவரான சிவகாமியாண்டவரால் ஏதும் செய்ய இயலாமல் புலம்பி அழுதார். தன் கையிலிருந்த தண்டத்தால் அந்த யானையை அடிக்க ஓடி முதுமையின் காரணமாய் கீழ விழுந்தார். 

யானையை உரித்துப் போர்த்த சிவபெருமானே  ஓலம்! எளியவர்களுக்கு வலிமையாக நின்று துணை புரிபவனே ஓலம்! அன்புடைய அடியவர்களுக்கு அறிவாய் விளங்குபவனே ஓலம்! ,தெளிந்த அமுதைப்போன்று இனிக்கும் பெம்மானே ஓலம்! கங்கையாற்றையும்,  சந்திரனையும் சூடியுள்ள திருமுடியிலே சாத்துவதற்காக அல்லவா இம்மலர்களைக் கொண்டு வந்தேன். திரிபுர தகனம் செய்த பெருமாளே!  இவற்றை யானையா சிந்துவது? யமனை உதைத்த திருவடிகளை உடையோனே ஓலம்! , இது அடுக்குமா? எத்தனையோ அன்பர்கள் கூடியிருக்கும் பெருங்கூட்டத்தில் ஏழையாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கும் பேறு கிட்டுமா?! என தரையில் கைகளை மோதி அழுதார். மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்



சிவகாமியாண்டவரின் கூக்குரல் கேட்டு இறைவனைவிடவும் வேகமாய் ஓடிவந்தார் எறிபத்தர்.  யானையின் அட்டூழியத்தை கண்ட சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கிந்த நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது” எனக் கேட்டார். சாமிக்குச் சாத்தக் கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு இந்தத் தெருவழியேதான் போகிறதென’  சிவகாமியாண்டவர் கூறினார். ‘இந்த யானை பிழைப்பதெப்படி’ என சினந்தபடி யானை சென்ற வழித்தடம் ஒற்றி   சென்று யானையினை கண்டுப்பிடித்து, யானையின் துதிக்கையை மழுவினால் வெட்டினார். யானை செத்து வீழ்ந்தது. 



அப்படியும் எறிபத்தருக்கு இன்னும் சினம் ஆறவில்லை. “இதுதான் அறிவில்லாது விலங்கு என்றால் நீங்கள் யாவரும் பார்த்துக் கொண்டா இருந்தீர்கள்? என்று பாகரையும் , பரிக்கோற்காரரையும் பார்த்து கோவத்துடன், அவர்கள் கூறிய சமாதானத்தைக் கேட்குமுன்னே தம் கோடாரியை வீசி அந்த ஐந்து பேரையும் வீழ்த்தினார். யானை மற்றும் வீரர் ஐவரின் ரத்தமும் சடலமுமாய் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. அவற்றிற்கிடையில் ரத்தம் பாய்ந்த மழுவுடன் வெற்றி மிதப்பில் எறிபத்தர் நின்றுக்கொண்டிருந்தார். 


காட்டுத்தீயென மன்னனின் காதுக்கு இச்செய்தி சென்றது. அச்சமயம் சமயதீசைப்படி விபூதி தரித்துக்கொண்டிருந்த நேரமது. காலை மாலை இருவேளையும் குளித்து பூஜைக்கு முன்னும், கோவில் செல்வதற்கு முன்னும், சாப்பாட்டிற்கு முன்னும்,  விபூதியை கட்டைவிரல் துணைக்கொண்டு நடுவிரல் மற்றும் மோதிர விரலால் கீழே சிந்தாதப்படி எடுத்து வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று சிவனின் அஞ்செழுத்து மந்திரத்தை சொல்லியும் அல்லது மந்திரமாவது நீரு.. என்று உச்சரித்தப்படி,  புஜங்கள், கைமூட்டுகள், மணிக்கட்டு, இடுப்பு மற்றும் கால்மூட்டுகளிலும் விபூதி பூசிக்கொள்ள வேண்டும். விபூதி வாங்கும்போதும் ஒற்றைக் கையால் விபூதி வாங்கக் கூடாது. வலது கையின் கீழே இடது கையைச் சேர்த்து வைத்தே விபூதி வாங்க வேண்டும். ஆலயங்களில் தரும் விபூதியை பூசிக் கொண்டது போக மீதியை தரையில் உதறக் கூடாது. வலது கையில் வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை அப்படியே பூசிக் கொள்ள வேண்டும். இது சமயதீட்சையின் பாலப்பாடமாகும்.  இதன்படியே சோழமன்னர் விபூதி அணிந்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் பட்டத்து யானையை யாரோ கொன்றுவிட்ட தகவல் வந்து சேர்ந்தது. யானையை கொல்வதென்பது எளிதான வேலை இல்லை. அதிலும், வீரர்கள்சூழ் பட்டத்து யானையை கொல்வதென்பது மிக சிரமமான வேலை/  இது பகை நாட்டவர் கைவரிசை என எண்ணி, நால்வகை சேணையோடு, தானும் குதிரைமீதேறி  சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றான். 


இறந்துப்பட்ட உடல்களை கண்டு, கடும்சினத்தோடு, அடாத இச்செயலை செய்தது யார்?! எதிரிப்படைகள் எங்கே?! உடைவாளை சுழற்றியபடி  அங்கு குழுமியிருந்த ஆட்களை கேட்டார்.  “இதோ இங்கே நிற்கிறாரே! இவர்தான் யானையைக் கொன்றார்“ என்று எறிபத்தரைக் காட்டி அருகில் இருந்தவர்கள் கூறினர்எறிபத்தரை கண்டதும் கைவாள் தானாய் கீழிறங்கியது. கூடவே, தரையில் வீழ்ந்துகிடந்த  சிவகாமியாண்டவர் மீதும் கண்கள் சென்றது. இந்த பெரியவருக்கு ஏதோ துன்பம் நேர்ந்திருக்கிறதென ஊகித்து, எறிபத்தைரை கைது செய்யாமல், குதிரையினின்று கீழிறங்கி, நல்லவேளை! யானை இவரை ஒன்றும் செய்யாமல் கடவுள்தான் காப்பாற்றினார்“ என்று மனதில் நினைத்து  ஆறுதல் அடைந்து எறிபத்தர் முன் சென்றான். கண்ணீர் மல்க அவர்காலில் வீழ்ந்தான். “ இங்கே என்ன அபசாரம் நேர்ந்ததோ அதை நான் அறியேன். பட்டத்து யானை கொல்லப்பட்டது என்பது மாத்திரம் தெரிந்து கொண்டேன். ஆனால், இங்கு வந்து பார்த்தபிறகுதான் என்ன நடந்தது என  தெரிகிறது.  தங்கள் உள்ளம் வருந்தும்படியான தீங்கு நடந்திருக்கவேண்டுமென்று உணர்ந்துகொண்டேன். அந்தத் தீங்குக்குப் பிராயச்சித்தமாக யானையையும்,  பாகரையும் தண்டித்தது போதுமா? தாங்கள் அருள் செய்ய வேண்டும் “ என்று பணிவுடன் கூறினான் அரசன். 

சிவகாமியாண்டவர் இறைவனுக்கு அணிவிப்பதற்காகக் கொண்டுப்போன பூக்களை யானை பாழாக்கியது. அதை பாகரும், குத்துக்கோற்காரரும் தடுக்கவில்லை. அதனால் கொன்றேன். என சிறிதும் பயமின்றி எறிபத்தர் சொன்னார்.   அதைக்கேட்ட புகழ்சேரன் மறுபடியும் அவர் காலில் வீழ்ந்து “அவருக்கு நேர்ந்த இந்த அபராதம் மிகப் பெரியது. என்னுடைய ஆட்சியில் என் யானை ஒரு சிவனடியாருக்குத் தீங்கு செய்தது என்றால்  நான் உலகில் இருந்து என்ன பயன்?  இந்த அபராதத்துக்கு யானையையும், பாகரையும் கொன்றது போதாது.  யானைக்கு உரியவனான என்னையும் கொல்வதே முறையாகும். தாங்கள் தங்கள் புனிதமான  கோடாரியால்  என்னைக் கொல்லவேண்டாம். என்னுடைய வாளால்   .என்னை வெட்டி கொன்று இந்த அபராதத்தினின்று என்னை விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி வாளை எறிபத்தரிடம் நீட்டினான்.  எறிபத்தர் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. புகழ்சேரன் தன் நிலையை மறந்து, தன் பட்டத்து யானையின் பெருமையை மறந்து, ஓர் சிவனடியாருக்கு இழைத்த தீங்கைத் தம்மைக் காட்டிலும் மிகுதியாக எண்ணி வருந்துவதை உணர்ந்தார். “ஆஹா! என்ன உத்தமமான அன்பு! என்னவிதமான பக்தி! என்று எண்ணினார். அரசன் எங்கேனும் தன் வாளால் தன்னை மாய்த்துக்கொண்டிடுவாரோ என அஞ்சி,    அந்த வாளை  உடனே அரசனிடமிருந்து வாங்கிக் கொண்டார்.  அதைக் கண்ட சோழன் முகம் மலர்ந்து , எறிபத்தர் தம்மேல் வாளை வீசுவதற்கு ஏதுவாகப் பணிந்து நின்றார்.  

ஆனால் எறிபத்தர் மனத்தில் புயல் கொந்தளித்து குமுறியது.  என்ன காரியம் செய்தேன்!, முறை தவறாது நிற்கும் மன்னன், இறைவனிடம் அன்பு செய்யும்   பக்தன், அடியார்களுக்கு அடியாராக இருந்து அவர்கள் துன்பம் களையும் சிறந்த நெஞ்சன், அப்படிப்பட்டவனின் மனம் புண்படும்படி நாம் நடந்துகொண்டோமே!  என்ற சிந்தனை அவர் உள்ளத்தில் ஓடியது. இத்தனை உத்தமருக்குத் தீங்கு இழைத்த நானல்லவா குற்றவாளி! இந்தக் குற்றத்துக்கு தண்டனையை நாமே அளித்துக் கொள்வதுதான்  உத்தமம்   என மனதிற்குள் புலம்பி . கையிலிருந்த வாளைத் தன் கழுத்தில் வைத்து அறுத்துக் கொள்ளப்போனார். 

புகழ்சேரன், அய்யகோ! என்ன காரியம் செய்ய துணிந்தீர் என அவர் கையிலிருந்த வாளை பறிக்க முயன்றான். எறிபத்தர் வாளை விடாமல் அசையாது நின்றார். அப்போது, வானிலிருந்து அசரீரி ஒலித்தது.  உங்கள் அன்பின் வலிமையை உலகத்துக்குக் காட்டும் பொருட்டே இந்நிகழ்வு அரங்கேறியது. அனைவரும் உயிர்த்தெழுக என கூறியதும் யானையும், குத்துகோற்வீரர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.  எறிபத்தர் மனமுருகி புகழ்சேரனது காலில் விழுந்தார். அரசனும் எறிபத்தர் கையிலிருந்த வாளைப்பற்றி  வீசி எறிந்துவிட்டு, அவர் காலில் விழுந்தான். அப்போது சிவகாமியாண்டாரும் அங்கு வந்து சேர்ந்தார்.   என்ன ஆச்சரியம்! அவருடைய பூக்கூடை பூக்களால் நிறைந்திருந்தது. எறிபத்தர் புகழ்சோழரின் கால்களில் விழுந்து பட்டத்து யானையின் மேல் அமரவேண்டுமென பணிந்து நின்றார். அவ்வாறே பட்டத்து யானைமீதேறி நால்வகை படைகளோடும், எறிபத்தர் முன்செல்ல அரண்மனை சென்றார். எல்லோரும் சிவபெருமானின் கருணையையும் , அடியவர்களின் அன்புச் சிறப்பையும் உணர்ந்து நெகிழ்ந்து ஆரவாரித்தனர். எறிபத்தநாயனார் நாளும் நாளும் அடியார்களுக்குத் தொண்டு செய்து, தவக்கொள்கையை மேற்கொண்டு, பின் நலமிக்க திருக்கயிலை மலையினில் இறைவரது கணநாயகத் தலைமை பெற்றார். அவர்தம் குருபூஜை மாசி மாதத்து ஹஸ்தம் நட்சத்திரமாகும். 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இங்க இருக்கு
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464259

நன்றியுடன்
ராஜி.