Friday, June 23, 2017

முரடனுக்கு வந்த வாழ்வு - நாயன்மார்கள் கதைகள்

பொதுவா கண்ணு மண்ணு தெரியாம கோவம் வந்தா போக்கிரி, முரடன்னு சொல்வோம். ஆனா, இங்க மூக்குக்கு மேல கோவம் வந்த ஒருத்தர் நாயன்மார் வரிசைல வந்திருக்கார். அவர் பேர் எறிபத்த நாயனார்.


உலகப்புகழ் வாய்ந்த கரிகாலன், ராஜராஜ சோழன், ராஜேந்திரசோழன்லாம் ஆட்சிப்புரிந்த சோழ ராஜ்ஜியத்திற்குட்பட்ட  கரூவூரில்  என்ற ஊரில் எறிபத்தர் பிறந்தார்.  இவர் சிவபெருமான்மீதும், சிவனடியார் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.  சிவனடியாருக்கு யாதொரு தீங்கென்றால் முதல் ஆளாய் நின்று தீங்கிழைப்போரை தண்டிக்கும் இயல்புடையவர். இதற்காகவே, பரசு என்றும், மழு என்றும் அழைக்கப்படும் ஆயுதத்தை கையில் எப்போதும் கொண்டிருப்பார்.   கருவூர்த் திருக்கோவிலுக்கு திருவாநிலை என்று தனியே ஒரு பெயரும் உண்டு. அங்க எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு,  பசுபதீசுவரர் என்று பெயர். ஆநிலையுடைய மகாதேவர்  என்று அப்பெருமானைச் சிலாசாசனங்கள் குறிக்கின்றன


மழு என்பது சிவப்பெருமான் கையிலிருக்கும்  ஒருவித ஆயுதமாகும். தருகாவனத்து ரிஷிகளின் செருக்கை போக்க சிவபெருமான் சென்றபோது ரிஷிகள் ஏவிய புலிகளை ஆடையாகவும், அவர்கள் ஏவிய ஆயுதங்களை தனது ஆயுதமாகவும் ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்றுக்கொண்ட சிறிய கோடாரி மாதிரியான ஆயுதமே மழுவாகும்.   மழு என்பது சிவன் அடையாளங்களில் ஒன்றாகும். சிவனைப்போலவே சிவனின் அம்சமான வீரபத்திரர் பைரவர் போன்றோர் மழுவினை தன் கரங்களில் ஏந்தியிருப்பர்.


எறிபத்த நாயனார் வாழ்ந்த அதேகாலத்தில், அதே ஊரில் சிவகாமியாண்டார் என்ற முதிய சிவனடியாரும் வாழ்ந்து வந்தார்.  இவர் இறைவனுக்கு பூமாலைகள் தொடுத்து ஆலயத்துக்கு கொடுக்கும் பணியில் இருந்தார்.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கொள்கை. சிவகாமியாண்டாருக்கு ஒரு கொள்கை. அதிகாலையில் யாரும் எழுந்திருக்கும் முன்னமயே எழுந்து முதல் ஆளாய் குளித்து எவர் கண்ணிலும் படும் முன்னரே பூக்களை பறித்து... பூப்பறிக்கும்போது தவறியும் எச்சில் தெறித்து விடக்கூடாது என்பதற்காகவே வாயை துணியால் கட்டிக்கொண்டு பூக்களை  பறிப்பார். அப்பூக்களை யாரும் தீண்டாவண்ணம் காத்து மாலையாக்கி, மாலை நிரம்பிய கூடையையும் ஒரு கொம்பின் நுனியில் கட்டி உயர தூக்கிக்கொண்டு சென்று இறைவனுக்கு  சாத்துவார். இவர் பூக்குடலை தாங்கிச்செல்லும் அழகை கண்டு அவ்வூர் மக்கள் இவர் பக்தியை மெச்சி அவரின் கொள்கைக்கு யாதொரும் பங்கமும் நேரக்கூடாதென வழிவிட்டு ஒதுங்கி நிற்பர்.


புரட்டாசி மாத மகாநவமியை முன்தினமான அஷ்டமியன்று     என்றும்போல் அன்றும் சிவகாமியாண்டவர் உடலும், உள்ளமும் தூய்மையோடும் மனதில் இறைவனை தொழுதுக்கொண்டு பூக்குடலை தாங்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போதைய சோழ அரியனையில் புகழ்சோழர் ஆண்டு கொண்டிருந்தார். அவரது பட்டத்து யானை பட்டவர்த்தனம். இது அச்சமயத்தில் மிக்க பேர் பெற்றது.  ஆற்றில் நீராட்டப்பட்டு, அலங்கரித்து மிக்க செருக்குடன் வீதிகளில் வந்துக்கொண்டிருந்தது. சிவகாமியாண்டவரை கண்டதும், அவர் கீழே தள்ளி அவர் கையிலிருந்த பூக்குடலை பிடுங்கிக்கொண்டு மதங்கொண்ட மாதிரி ஓடியது. யானைப்பாகர்களும் யானையை ஊக்குவித்தவாறும் மேலும் விரைந்து செல்ல யானையை பணித்தனர்.  முதியவரான சிவகாமியாண்டவரால் ஏதும் செய்ய இயலாமல் புலம்பி அழுதார். தன் கையிலிருந்த தண்டத்தால் அந்த யானையை அடிக்க ஓடி முதுமையின் காரணமாய் கீழ விழுந்தார். 

யானையை உரித்துப் போர்த்த சிவபெருமானே  ஓலம்! எளியவர்களுக்கு வலிமையாக நின்று துணை புரிபவனே ஓலம்! அன்புடைய அடியவர்களுக்கு அறிவாய் விளங்குபவனே ஓலம்! ,தெளிந்த அமுதைப்போன்று இனிக்கும் பெம்மானே ஓலம்! கங்கையாற்றையும்,  சந்திரனையும் சூடியுள்ள திருமுடியிலே சாத்துவதற்காக அல்லவா இம்மலர்களைக் கொண்டு வந்தேன். திரிபுர தகனம் செய்த பெருமாளே!  இவற்றை யானையா சிந்துவது? யமனை உதைத்த திருவடிகளை உடையோனே ஓலம்! , இது அடுக்குமா? எத்தனையோ அன்பர்கள் கூடியிருக்கும் பெருங்கூட்டத்தில் ஏழையாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கும் பேறு கிட்டுமா?! என தரையில் கைகளை மோதி அழுதார். மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்சிவகாமியாண்டவரின் கூக்குரல் கேட்டு இறைவனைவிடவும் வேகமாய் ஓடிவந்தார் எறிபத்தர்.  யானையின் அட்டூழியத்தை கண்ட சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கிந்த நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது” எனக் கேட்டார். சாமிக்குச் சாத்தக் கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு இந்தத் தெருவழியேதான் போகிறதென’  சிவகாமியாண்டவர் கூறினார். ‘இந்த யானை பிழைப்பதெப்படி’ என சினந்தபடி யானை சென்ற வழித்தடம் ஒற்றி   சென்று யானையினை கண்டுப்பிடித்து, யானையின் துதிக்கையை மழுவினால் வெட்டினார். யானை செத்து வீழ்ந்தது. அப்படியும் எறிபத்தருக்கு இன்னும் சினம் ஆறவில்லை. “இதுதான் அறிவில்லாது விலங்கு என்றால் நீங்கள் யாவரும் பார்த்துக் கொண்டா இருந்தீர்கள்? என்று பாகரையும் , பரிக்கோற்காரரையும் பார்த்து கோவத்துடன், அவர்கள் கூறிய சமாதானத்தைக் கேட்குமுன்னே தம் கோடாரியை வீசி அந்த ஐந்து பேரையும் வீழ்த்தினார். யானை மற்றும் வீரர் ஐவரின் ரத்தமும் சடலமுமாய் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. அவற்றிற்கிடையில் ரத்தம் பாய்ந்த மழுவுடன் வெற்றி மிதப்பில் எறிபத்தர் நின்றுக்கொண்டிருந்தார். 


காட்டுத்தீயென மன்னனின் காதுக்கு இச்செய்தி சென்றது. அச்சமயம் சமயதீசைப்படி விபூதி தரித்துக்கொண்டிருந்த நேரமது. காலை மாலை இருவேளையும் குளித்து பூஜைக்கு முன்னும், கோவில் செல்வதற்கு முன்னும், சாப்பாட்டிற்கு முன்னும்,  விபூதியை கட்டைவிரல் துணைக்கொண்டு நடுவிரல் மற்றும் மோதிர விரலால் கீழே சிந்தாதப்படி எடுத்து வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று சிவனின் அஞ்செழுத்து மந்திரத்தை சொல்லியும் அல்லது மந்திரமாவது நீரு.. என்று உச்சரித்தப்படி,  புஜங்கள், கைமூட்டுகள், மணிக்கட்டு, இடுப்பு மற்றும் கால்மூட்டுகளிலும் விபூதி பூசிக்கொள்ள வேண்டும். விபூதி வாங்கும்போதும் ஒற்றைக் கையால் விபூதி வாங்கக் கூடாது. வலது கையின் கீழே இடது கையைச் சேர்த்து வைத்தே விபூதி வாங்க வேண்டும். ஆலயங்களில் தரும் விபூதியை பூசிக் கொண்டது போக மீதியை தரையில் உதறக் கூடாது. வலது கையில் வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை அப்படியே பூசிக் கொள்ள வேண்டும். இது சமயதீட்சையின் பாலப்பாடமாகும்.  இதன்படியே சோழமன்னர் விபூதி அணிந்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் பட்டத்து யானையை யாரோ கொன்றுவிட்ட தகவல் வந்து சேர்ந்தது. யானையை கொல்வதென்பது எளிதான வேலை இல்லை. அதிலும், வீரர்கள்சூழ் பட்டத்து யானையை கொல்வதென்பது மிக சிரமமான வேலை/  இது பகை நாட்டவர் கைவரிசை என எண்ணி, நால்வகை சேணையோடு, தானும் குதிரைமீதேறி  சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றான். 


இறந்துப்பட்ட உடல்களை கண்டு, கடும்சினத்தோடு, அடாத இச்செயலை செய்தது யார்?! எதிரிப்படைகள் எங்கே?! உடைவாளை சுழற்றியபடி  அங்கு குழுமியிருந்த ஆட்களை கேட்டார்.  “இதோ இங்கே நிற்கிறாரே! இவர்தான் யானையைக் கொன்றார்“ என்று எறிபத்தரைக் காட்டி அருகில் இருந்தவர்கள் கூறினர்எறிபத்தரை கண்டதும் கைவாள் தானாய் கீழிறங்கியது. கூடவே, தரையில் வீழ்ந்துகிடந்த  சிவகாமியாண்டவர் மீதும் கண்கள் சென்றது. இந்த பெரியவருக்கு ஏதோ துன்பம் நேர்ந்திருக்கிறதென ஊகித்து, எறிபத்தைரை கைது செய்யாமல், குதிரையினின்று கீழிறங்கி, நல்லவேளை! யானை இவரை ஒன்றும் செய்யாமல் கடவுள்தான் காப்பாற்றினார்“ என்று மனதில் நினைத்து  ஆறுதல் அடைந்து எறிபத்தர் முன் சென்றான். கண்ணீர் மல்க அவர்காலில் வீழ்ந்தான். “ இங்கே என்ன அபசாரம் நேர்ந்ததோ அதை நான் அறியேன். பட்டத்து யானை கொல்லப்பட்டது என்பது மாத்திரம் தெரிந்து கொண்டேன். ஆனால், இங்கு வந்து பார்த்தபிறகுதான் என்ன நடந்தது என  தெரிகிறது.  தங்கள் உள்ளம் வருந்தும்படியான தீங்கு நடந்திருக்கவேண்டுமென்று உணர்ந்துகொண்டேன். அந்தத் தீங்குக்குப் பிராயச்சித்தமாக யானையையும்,  பாகரையும் தண்டித்தது போதுமா? தாங்கள் அருள் செய்ய வேண்டும் “ என்று பணிவுடன் கூறினான் அரசன். 

சிவகாமியாண்டவர் இறைவனுக்கு அணிவிப்பதற்காகக் கொண்டுப்போன பூக்களை யானை பாழாக்கியது. அதை பாகரும், குத்துக்கோற்காரரும் தடுக்கவில்லை. அதனால் கொன்றேன். என சிறிதும் பயமின்றி எறிபத்தர் சொன்னார்.   அதைக்கேட்ட புகழ்சேரன் மறுபடியும் அவர் காலில் வீழ்ந்து “அவருக்கு நேர்ந்த இந்த அபராதம் மிகப் பெரியது. என்னுடைய ஆட்சியில் என் யானை ஒரு சிவனடியாருக்குத் தீங்கு செய்தது என்றால்  நான் உலகில் இருந்து என்ன பயன்?  இந்த அபராதத்துக்கு யானையையும், பாகரையும் கொன்றது போதாது.  யானைக்கு உரியவனான என்னையும் கொல்வதே முறையாகும். தாங்கள் தங்கள் புனிதமான  கோடாரியால்  என்னைக் கொல்லவேண்டாம். என்னுடைய வாளால்   .என்னை வெட்டி கொன்று இந்த அபராதத்தினின்று என்னை விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி வாளை எறிபத்தரிடம் நீட்டினான்.  எறிபத்தர் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. புகழ்சேரன் தன் நிலையை மறந்து, தன் பட்டத்து யானையின் பெருமையை மறந்து, ஓர் சிவனடியாருக்கு இழைத்த தீங்கைத் தம்மைக் காட்டிலும் மிகுதியாக எண்ணி வருந்துவதை உணர்ந்தார். “ஆஹா! என்ன உத்தமமான அன்பு! என்னவிதமான பக்தி! என்று எண்ணினார். அரசன் எங்கேனும் தன் வாளால் தன்னை மாய்த்துக்கொண்டிடுவாரோ என அஞ்சி,    அந்த வாளை  உடனே அரசனிடமிருந்து வாங்கிக் கொண்டார்.  அதைக் கண்ட சோழன் முகம் மலர்ந்து , எறிபத்தர் தம்மேல் வாளை வீசுவதற்கு ஏதுவாகப் பணிந்து நின்றார்.  

ஆனால் எறிபத்தர் மனத்தில் புயல் கொந்தளித்து குமுறியது.  என்ன காரியம் செய்தேன்!, முறை தவறாது நிற்கும் மன்னன், இறைவனிடம் அன்பு செய்யும்   பக்தன், அடியார்களுக்கு அடியாராக இருந்து அவர்கள் துன்பம் களையும் சிறந்த நெஞ்சன், அப்படிப்பட்டவனின் மனம் புண்படும்படி நாம் நடந்துகொண்டோமே!  என்ற சிந்தனை அவர் உள்ளத்தில் ஓடியது. இத்தனை உத்தமருக்குத் தீங்கு இழைத்த நானல்லவா குற்றவாளி! இந்தக் குற்றத்துக்கு தண்டனையை நாமே அளித்துக் கொள்வதுதான்  உத்தமம்   என மனதிற்குள் புலம்பி . கையிலிருந்த வாளைத் தன் கழுத்தில் வைத்து அறுத்துக் கொள்ளப்போனார். 

புகழ்சேரன், அய்யகோ! என்ன காரியம் செய்ய துணிந்தீர் என அவர் கையிலிருந்த வாளை பறிக்க முயன்றான். எறிபத்தர் வாளை விடாமல் அசையாது நின்றார். அப்போது, வானிலிருந்து அசரீரி ஒலித்தது.  உங்கள் அன்பின் வலிமையை உலகத்துக்குக் காட்டும் பொருட்டே இந்நிகழ்வு அரங்கேறியது. அனைவரும் உயிர்த்தெழுக என கூறியதும் யானையும், குத்துகோற்வீரர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.  எறிபத்தர் மனமுருகி புகழ்சேரனது காலில் விழுந்தார். அரசனும் எறிபத்தர் கையிலிருந்த வாளைப்பற்றி  வீசி எறிந்துவிட்டு, அவர் காலில் விழுந்தான். அப்போது சிவகாமியாண்டாரும் அங்கு வந்து சேர்ந்தார்.   என்ன ஆச்சரியம்! அவருடைய பூக்கூடை பூக்களால் நிறைந்திருந்தது. எறிபத்தர் புகழ்சோழரின் கால்களில் விழுந்து பட்டத்து யானையின் மேல் அமரவேண்டுமென பணிந்து நின்றார். அவ்வாறே பட்டத்து யானைமீதேறி நால்வகை படைகளோடும், எறிபத்தர் முன்செல்ல அரண்மனை சென்றார். எல்லோரும் சிவபெருமானின் கருணையையும் , அடியவர்களின் அன்புச் சிறப்பையும் உணர்ந்து நெகிழ்ந்து ஆரவாரித்தனர். எறிபத்தநாயனார் நாளும் நாளும் அடியார்களுக்குத் தொண்டு செய்து, தவக்கொள்கையை மேற்கொண்டு, பின் நலமிக்க திருக்கயிலை மலையினில் இறைவரது கணநாயகத் தலைமை பெற்றார். அவர்தம் குருபூஜை மாசி மாதத்து ஹஸ்தம் நட்சத்திரமாகும். 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இங்க இருக்கு
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464259

நன்றியுடன்
ராஜி. 

13 comments:

 1. எறிபத்த நாயனார் கதை அறிவேன். தற்போது இப்பதிவின் மூலமாக மறுபடியும் படித்த, பார்த்த வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.

   Delete
 3. Replies
  1. நன்றிண்ணே

   Delete
  2. நான் இதுவரை அறியாத விடயம் நன்றி சகோ

   Delete
 4. வணக்கம்

  தங்களது பதிவை ஆன்லைனில் படித்துள்ளோம் ஆசிரம சார்பில் உஜிலாதேவி மாத இதழ் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளோம் தங்களது ஆக்கங்களை எங்களது இதழில் வெளியிடலாமா என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த பின்னூட்டத்தை அனுப்பி உள்ளோம் தங்களது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்


  தங்களது தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் பின்னூட்டத்தில் இதை தெரியபடுதுகிறோம் மேலும் தங்களது மின்னசல் முகவரி தங்களது தொலைபேசி எண் இருந்தால் எங்கள் மின்னசல் முகவரிக்கு தெரியபடுத்தம் ujiladevi@gmail.com

  நன்றி


  நன்றி.
  ஓம் நமோ நாராயணா
  இப்படிக்கு,
  ஸ்ரீ குரு மிஷன் ஆஸ்ரம நிர்வாகம்,
  காடகனூர்.
  Cell:- +91-9442426434
  web:- http://www.ujiladevi.in
  சதீஷ் குமார்

  ReplyDelete
  Replies
  1. நானும் தங்களது ஆஸ்ரமம் ஒரு 8 வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன் .திருக்கோவிலூர் செல்லும் வழியில் ,செல்லும் போது,பசுமையான அந்த இடத்தை பார்த்து அங்கே வந்தேன் .அப்பொழுது சிலர் உங்கள் குருஜியிடம் மந்திர உபதேசம் பெற்று கொண்டு இருந்தனர் .எல்லாவற்றுக்கும் மேலாக நான் நம்புவது, முத்தொழில் செய்யும் முமூர்த்திகள் ,கோடி நாராயண்ரும் ,கோடி ருத்திரனும் ,கோடி பிரமாக்களும் வணங்கி நிற்கும் ,அவர்களாலும் சரியாக அறியப்படாத,ஆதியும் அந்தமும் இல்லாத அந்த பரம்பொருளை.,
   எது சிவம் ,எது ருத்திரன் என்று சித்தர்களுக்கும் ,சத்குருக்களுக்கும் மட்டுமே தெரியும் ,அந்த பரம்பொருளின் அருள் படைப்பே எல்லா உயிர்களிலும் ,அன்பே சிவமாக இருக்கிறது .அதன் கருணை ,ஒவ்வரு படைப்பிலும் இருக்கிறது .பரம்பொருள் மறைக்கபட்டத்தினால் தான் ,உலகில் இத்தனை கலவரம் அவதாரங்களான கிருஷ்ணன் ,ராமன் முதலியோரும் ,யுகங்கள் வாழ்ந்த சித்த பெருமக்களும் ,கடைசில் தங்கள் முக்தியடைய அந்த பரம்பொருளையே ,தியானித்துதான் ,முக்தியடைந்துள்ளனர் .இயேசு சொன்ன பரமபிதாவும் ,நபிகள் சொன்ன அல்லாஹ்வும் ,ஏனைய புத்த சமண மாதங்கள் சொல்லும் ஒரே கடவுள் அந்த பரம்பொருள் சொல்லவேண்டும் என்றால் நிறைய சொல்லலாம் .நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் .இங்கே எதுபெறப்பட்டதோ அதற்க்கு காரணம் நாம் அல்ல ,அந்த மாகாதேவர், ஆதிசக்தி ,பிரபஞ்சத்தின் ஒவ்வரு உயிருக்கும் ,அன்னம் படைத்தது ,தன்கருணை விழியால் காப்பவள் ,அந்த ஆதிசக்தி ,பிரபஞ்சத்தின் தாய் .அன்பே சிவம் .தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் .

   Delete
 5. படித்தது மீண்டும்... நன்றி சகோ...

  ReplyDelete
  Replies
  1. திரும்ப திரும்ப படித்தாலும் ,இவை வாழ்க்கைக்கு தினம் தினம் நடக்கும் ஏதோ ஒன்றுக்கு விடை கொடுத்து செல்லும் அண்ணா ...மீண்டும் ஒரு முறை படியுங்கள் .

   Delete
 6. மீண்டும் படித்து மகிழ்ந்தேன். உஜிலா தேவைக்கான தங்கள் பதில் சந்தோஷம் தந்தது.

  ReplyDelete
  Replies
  1. சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது சகோ ..போலிகள் ,கார்பொரேட்கள் என ஆன்மீகமே குப்பையாகிவிட்டது .அதை அகற்ற முயசிப்பது கடினம்

   Delete