பூசணிப்பூ வைப்பதின் ரகசியம்..
அப்பலாம், கல்யாண புரோக்கர்கள் , மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் இல்ல. வீட்டில் திருமணத்துக்கு தயாராக பெண்ணோ இல்ல பிள்ளையோ இருந்தா, அந்த வீட்டின் வாசலில் மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பாங்களாம்.. ஒட்டுமொத்தமா எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டாங்களாம். மார்கழி மாத அதிகாலையில் பஜனைப்பாடல் பாடிக்கிட்டு வர்றவங்க பார்வையில் இந்த பூசணிப்பூ தென்பட்டு, தகவல் அறிந்து, விசாரித்து, பேசி தை மாசம் கல்யாணத்தை முடிப்பாங்களாம். அதனாலதான் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்ன்னு சொல் வந்துச்சாம். பூசணிப்பூ வைக்க இன்னொரு காரணம், இப்பூக்களிலிருந்து வரும் வாசமும் மகரந்தமும் பனிக்காற்றில் கலந்து கிருமிகளை கொல்லும் என்பதாலும்தான்.
போன வருசத்து படம்..
மார்கழி மாதம் பீடை மாதம்ன்னு இப்ப சொல்றாங்க. ஆனா, அது அப்படி இல்ல. நமக்கு வீடு உள்ளிட்ட சகல செல்வமும் பெற்று நம் வாழ்வில் பீடு நடைப்போட உதவும் மாதம் என்பதால் இதுக்கு பீடுடைய மாதம்ன்னு பேராம். காலப்போக்கில் அது மருவி பீடை மாசமாகிட்டுது. பீடுன்னா உயரிய, சிறந்த, உன்னதமான..ன்னு பொருள். இறைவனை வழிபட்டால், வாழ்வின் உன்னத நிலைக்கு செல்லலாம்ன்னு பொருள்படும். இந்த மாசத்தில் கரும்பு, நெல், மஞ்சள், காய்கறிகள்ன்னு அறுவடைக்காலம். வயல்ல பொழுது கழிக்கவும், விளைப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பவுமே சரியாய் இருக்கும். அப்படி இருக்க, மாமன் மச்சான் வீடுகளின் விசேசங்களில் கலந்துக்க முடியாதில்லையா?! அதுமில்லாம, இந்த மாசம் முழுக்க நிறைய ஆன்மீக விழாக்கள் வர்றதாலயும்தான் இந்த மாதத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகளை தவிர்த்தாங்க. சுப நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாதே தவிர அதுக்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம். இந்த மார்கழி மாசத்தில்தான் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் கல்யாணம், ஆருத்ரா தரிசனம் மாதிரியான ஆன்மீக நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.
போன வருசத்தைய படம்
வைணவ திருக்கோவில்களில் மார்கழிமாதம் முழுவதும் திருப்பாவை பாடுவாங்க. திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலா ஆண்டாளின் திருப்பாவையைத்தான் இந்த மாசம் முழுக்க திருப்பள்ளியெழுச்சிக்காக பாடுவாங்க. சகல சிவாலயங்களில் திருவெம்பாவை பாடல்கள் திருப்பள்ளியெழுச்சியாக இம்மாசத்தில் பாடப்படும். இந்த மாசத்துலதான் நல்ல கணவன் கிடைக்கனும்ன்னு பாவை நோன்பை வயசு பொண்ணுங்க இருப்பாங்க. பாவை நோன்புன்னா, அதிகாலையில் அருகிலிருக்கும் நீர்நிலைகளில் நீராடி, அப்படியே பெருமாள் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதாகும். இந்த நாளில் பால், வெண்ணெய், நெய் சேர்த்த உணவுகளை உண்ணாமலும், மையிடுதல், தலை அலங்காரம், என தன்னை அழகுப்படுத்துதலிலும் ஈடுபடாமல், முழுக்க முழுக்க இறை சிந்தனையிலேயே இருப்பதேயாகும்.
இன்றைய படம்
மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்னு கீதைல கண்ணன் சொல்றாப்ல. அப்ப மத்த பதினோரு மாதம் என்ன தக்காளி தொக்கான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு பதில் இதோ...
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம்ன்றது தேவர்களைப் பொறுத்தவரை ஒருநாள். அந்தவகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணிநேரம் மட்டுமே! ( 1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணிநேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறுமாதக்காலம் தேவர்களுக்கு பகல்பொழுது. இந்தக்காலத்துக்கு உத்தராயணம்ன்னு பேரு. ஆடிமாதம் முதல் மார்கழிமாதம்வரை வருகின்ற ஆறுமாதக்காலம் தேவர்களுக்கு இரவுப்பொழுது. இந்தக்காலத்துக்கு தட்சிணாயணம்ன்னு பேரு. தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி, அதாவது, தேவர்களை பொறுத்தவரை இரவுப்பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழிமாதம்ன்னு கணக்கிட்டு சொல்றாங்க. இந்த காரணத்தினால்தான் தேவர்களை வரவேற்கும்விதமாக மார்கழி மாசத்து அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவதை வழக்கமா வச்சிருக்காங்க.
ஜோதிடரீதியா சொல்லனும்ன்னா மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’ ன்னு வடமொழியிலும், மார்கழின்னு தமிழிலும் சொல்றோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப் பிதாமகராகத் திகழ்பவர் ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின் ஜென்ம நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் நம்மில் பலபேருக்கு தெரியாது. சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்றவர். . மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அவர், தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக் கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நமக்கு தெரியும்தானே?! மார்க்கண்டேய சரித்திரம் மரணத்தை வெல்லும். அதனாலதான் நினைத்தது நிறைவேற, எதிரிகள் தொல்லை நீங்க ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை மட்டும் மார்கழிக்குன்னு காத்திருந்து செய்வாங்க.
ஒருவரையொருவர் காணாமலே அவர்பற்றி பேசி அன்புக்கொண்டு அவர்களை அடைந்தது இருவர். அதில் ஒருவர் ஆண், இன்னொருவர் பெண், ராமனின் பராக்கிரமத்தை கேள்விப்பட்டு, அவர்பால் ஈர்க்கப்பட்டு ஆண்கொண்ட அன்புக்கு பக்தி, சேவகம்ன்னு பெயர்சூட்டி கடவுளாய் கொண்டாடப்படுது. பக்திக்கு இலக்கணமான அனுமன் ஜனித்தது இந்த மார்கழியில்தான். காதால் கேட்டு பெண் கொண்ட அன்புக்கு காதல்ன்னு பேர் சூட்டி, அவள் நோன்பிருந்து அரங்கனை அடைந்தது இந்த மார்கழி மாதத்தில்.. மார்கழி மாசத்தில் சூரிய பகவான் தனுசுராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர்மாதம்ன்னும் சொல்வாங்க. தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த்தொழிலில் ஈடுபடமாட்டார்கள். அதனாலும் இந்த மாதத்தில் இறைப்பற்றுக்குன்னு ஒதுக்கி வச்சுட்டாங்க.
இந்த மாசத்தில்தான் மகாபாரத யுத்தம் நடந்தது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாசத்தில்தான். இந்திரனால் பெருமழை, வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மாசத்தில்தான்.
எங்க ஊர்லலாம் மார்கழி மாத அதிகாலையிலும், மாலையிலும் பஜனை பாடிக்கிட்டு வருவாங்க. அரிசி, பணம், கோவில் விளக்குக்கு எண்ணெய்ன்னு கொடுப்போம். பதிலுக்கு துளசியை பிரசாதமா தருவாங்க. இப்ப அதுலாம் இல்ல. ஆன்மீக மலர்ச்சிக்கு இந்த மாசம் உகந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில் மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!
மார்கழி மகத்துவம் தொடரும்....
நன்றியுடன்,
ராஜி
இன்னின்ன காரணங்களுக்காக இன்னின்னது செய்கிறோம் என்றில்லாமல் பலதும் ஏதும் தெரியாமலேயே பின்பற்றப் படுகிறது
ReplyDeleteஆமாம்ப்பா, எடுத்துச்சொல்லாதது முன்னோர்கள் தவறு. நமது பாரம்பரியத்தை மதிக்காதது நமது தவறு. விரைவில் அதற்கான பலனை அனுபவிப்போம்
Deleteஇனிய தகவல்கள். படங்களும் சிறப்பு.
ReplyDeleteபாதி படங்கள் கூகுளில் சுட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே.
Deleteதகவல்கள் விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு சகோதரி/ராஜி/
ReplyDeleteகீதா: போனவருசத்து கோலம் ரொம்ப அழகா இருக்கு எனக்கும் நீலம், பிங்க் கலர் கலந்து கோலம் போடப் பிடிக்கும்.
இது அவசரத்துல போட்ட கோலம் கீதாக்கா
Delete