Thursday, December 06, 2018

என் மீசை வச்ச குழந்தைக்கு இன்று பிறந்தநாள் ...


முதலிரண்டும் பெண்ணா பிறந்ததில் வருத்தப்பட்ட, ஏளனப்பேச்சு பேசிய ஆட்களிடமிருந்து தப்பிக்க மூன்றாவது பிள்ளை கருவுற்ற நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு, பார்க்கும் கற்களைக்கூட கடவுளாய் எண்ணி வேண்டுதல் வைக்க ஆரம்பித்தாச்சுது. என்னை பெத்த பாவத்துக்கு என் அப்பா அம்மா வேண்டுதல் வச்சா பரவாயில்லை. என்னை வளர்த்தவங்க, என் நலம் விரும்பிகளின் வேண்டுதல் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. டெலிவரி நாட்கள் நெருங்க நெருங்க என்னைவிட அப்பா அம்மாக்கு பதட்டம் அதிகரிச்சுது.  நான் எப்பயும் கூல்தான். இதும் பொண்ணாய் போனாலும் பரவாயில்லை. நான் காப்பாத்திக்குறேன். ஒன்னுக்கு ஒன்னா துணையாய் இருந்துட்டு போகட்டும்ன்னு சொல்லி தைரியமா இருந்தேன்.

ஒருசுபயோக சுபதினத்தில் வலி எடுக்க ஆரம்பிச்சுது.  சின்ன மாமியார், பெரியமாமியார்ன்னு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போகவே ஒரு பட்டிமன்றம் நடந்துச்சுது. நான் வரலை, போனமுறை நாந்தான் வந்தேன் பொண்ணாய் போகிட்டுது, அதுஇதுன்னு..  வீட்டுக்கு பக்கத்துலயேதான் ஹாஸ்பிட்டல்.. அப்பாவை கூட்டிக்கிட்டு நடந்தே போனேன்.  சீக்கிரத்துல பிரசவம் ஆகிடும்ன்னு அட்மிட் பண்ணியாச்சுது. வலி பின்னி எடுக்குது. திங்கட்கிழமை 7.30 டூ 9 ராகுகாலம்.  ஊசிப்போட்டா டெலிவரி ஆகிடும்ன்னு நர்ஸ் சொல்ல,  அந்த ஹாஸ்பிட்டலில் வேலை செஞ்சதால நேரம் நல்லா இல்லன்னு தள்ளி போட அப்பா சொல்ல, ஊசி போடல. ராகுகாலம் கழிஞ்சதும் மீண்டும் நர்ஸ் ஊசி போடலாம்ன்னு சொல்ல 10.30 டூ 12 எமகண்டம்ன்னு அப்பா சொல்ல...
பிரசவமாகும் பெண்ணோட அம்மா வரக்கூடாதுன்னு  எங்க ஊரு பக்கம் சொல்வாங்க. அதாவது நீயே உன் அம்மாவை விட்டுடாம இருக்க. நான் எப்படி என் அம்மாவை விட்டு வருவேன்னு கேட்டு வெளிவராம பாப்பா அடம்பிடிக்கும்ன்னு சொல்வாங்க. அதனால் என்னோடு என் அம்மா வரல. அப்பா ராகுகாலம், எமகண்டம்ன்னு சொல்லிட்டு இருந்த தகவல்  அம்மா காதுக்கு போக, புயலென மை மம்மி கம்மிங்க் டூ ஹாஸ்பிட்டல். என் பொண்ணு தவியா தவிக்குறா. இப்பதான் உனக்கு நல்லநேரம் கெட்ட நேரம் பார்க்குறியா?!ன்னு டோஸ் விட்டு, ஊசிப்போட சொல்ல, 10.12க்கு  என் பையன் பொறந்தான். பையன் பொறந்திருக்கான்னு சொன்னாலும் பலவருச தவம் கைக்கு கிடைச்ச போதிலும் என் அம்மா கேட்ட முதல் கேள்வி, என் பொண்ணு எப்படி  இருக்கா?! அவளுக்கு ஒன்னுமில்லையேன்னுதான்...

அந்த தைரியம் அப்படியே எனக்குள் வந்திருக்கு. பிரச்சனைகளை போர்வையாய் போர்த்தி தூங்குமளவுக்கு... ஆனா, என் அப்பாக்கு தைரியம் துளிகூட கிடையாது. எல்லாத்துக்கும் ஒரு தயக்கம், ஒரு பயம். அந்த குணத்தை அப்படியே உரிச்சுக்கிட்டு என் பையன் பிறந்திருக்கான்.  ஹோட்டலுக்கு போனாலும் மெனுகார்டை முழுசா வாசிச்சுட்டு என்னம்மா சொல்லட்டும்ன்னு என்னை கேப்பான். 18வயசு ஆனாலும், இன்னமும் ரோட்டை கிராஸ் பண்ணும்போது கையை பிடிச்சுப்பான். கேட்டா நீ பயப்படக்கூடாதுன்னுதான்ம்மா கையை பிடிச்சுக்குறேன்னு சொல்வான். ஹாஸ்டலுக்கு போகும்போது 1000ரூபாயை செலவுக்கு கொடுத்தாலும் மிச்சமா 500ரூபாயை திருப்பி கொண்டு வந்து கொடுப்பான்(பொண்ணுங்க 1500 ஆ செலவு பண்ணுதுங்க)
கோவம் தவிர எந்த உணர்ச்சிக்கும் ஆட்படமாட்டான்.  இதுவரைக்கும் அவன் ஆசைப்பட்டு கேட்டது ரெண்டே ரெண்டுதான். ஒன்னு ஹாஸ்டலில் கட்டிப்பிடிச்சு தூங்க பெரிய சைஸ் பொம்மை. இன்னொன்னு ஹானட் வண்டி. ஹாஸ்டலுக்கு கொண்டுப்போக.. இது சரியான வயசில்லைன்னு வண்டி வாங்கி கொடுக்கல.  என் மாமியார் வீட்டில் பெண்குழந்தைங்கதான் அதிகம். பெண்ணோடு பிறந்து, வளர்ந்தும் பெண்கள்கிட்ட பேச கூச்சம். இப்பதான் காலேஜ்ல பொண்ணுங்கக்கூட பேச ஆரம்பிச்சிருக்கான். அவன் கேங்க்ல மூணு பொண்ணுங்க இருப்பதே எங்களுக்கு ஆச்சர்யம்.  பிள்ளை ஆம்பிளையாகிட்டான்னு தோணுது.
பொண்ணுங்க பெரிய மனுஷி ஆனா, அம்மாக்கள் முதல்ல வாங்கிதருவது சானிட்டரி நாப்கின். அதுமாதிரி என் பிள்ளை பெரியமனுசனாதை கொண்டாட ட்ரிம்மரை பர்த்டே பரிசா கொடுத்தாச்சு. சீக்கிரத்துலயே பெரிய மண்டபமா பார்த்து சடங்கு வைக்குறேன். சோப்பு, சீப்புன்னு தாய்மாமன் சீரை சரியா செஞ்சுடுங்கப்பா
இரண்டாவதா பொறந்த குழந்தைக்கு மூத்தது பெண்ணா இருந்தா அந்த குழந்தைக்கு ரெண்டு அம்மாக்கள்ன்னு சொல்வாங்க. அதுமாதிரி என் பையனுக்கு மொத்தம் மூணு அம்மாக்கள். என்னோடு சேர்த்து என் பொண்ணுங்களும் அவனுக்கு அம்மாதான். பெரியவ அமைதியா அன்பை வெளிக்காட்டுவா. சின்னவ, சண்டைப்போட்டு அடிச்சு துரத்தி அன்பை வெளிக்காட்டுவா. வயதுக்கு வந்த பிள்ளைகள்ன்னாலும் எதாவது இக்கட்டான சூழலில் மூணும் அணைச்சுக்கிட்டு படுத்திருக்கும். ஹாஸ்டலில் அப்படி படுக்க பெரிய சைஸ் பொம்மை அக்காக்களின் பரிசு.... 


 சீட்டுக்கட்டிலிருக்கும் ஜோக்கர்போல, எல்லாத்துக்குமே செட் ஆவான். அவன் தாத்தாவுடன் கோவிலுக்கும், பெரியப்பா, சித்தப்பாக்களோடு கடைகளுக்கும், அக்காக்களோடு அரட்டையும், அக்கா பிள்ளைகளோடு விளையாடவும் செய்வான். எல்லாம் நல்லதே சொல்லிட்டிருந்தா எப்படி?! கையெழுத்தை பார்க்கனும்!! எல்.கே.ஜி பாப்பாகூட அழகா எழுதும்.அம்புட்டு  கிறுக்கல்:-(.  காலேஜ் போயும் ஆங்கிலத்தில்  பெரிய எழுத்து, சின்ன எழுத்தை மாத்தி மாத்தி எழுதுவான். தமிழ்ல இடுகுறிகள், எழுத்துபிழைன்னு ஏகத்துக்கும் இருக்கும்.
ஒரு  ஐஸ்கட்டியைப் போல
மெல்ல மெல்ல என்னை உருக 
வைத்துக்கொண்டிருக்கிறது,
என் மடியினில் உறங்கும் இந்த
மீசை வைத்த குழந்தை.

தொட்டால் உறக்கம் தெளிந்தெடுமென
கரங்களால் தீண்டாமல்
கண்களால் வருடிக்கொண்டிருக்கிறேன்
அவன் அழகை!!

நரி பயங்காட்டியதோ..
இல்லை எறும்பு கடித்ததோ...
அழுதுடுவேன்னு என்னை
 பயங்காட்டிக்கொண்டிருக்கிறது
அவன்  உதட்டசைவு...

வேதனை நீங்கி புன்சிரிப்பொன்று
அவன் இதழில்..
நடிகர்திலகம் போல நொடிக்கொரு
பாவனை அவன் முகத்தில்...


பிள்ளை வாசம் உணர
அவனை உச்சி மோர்கையில்
அவன் உயிர் சுவாசம், என் சுவாசக் கூட்டில்
இடம் மாறுகிறது!!

குட்டிச்சூரியன் உருக்கொண்ட
வயிற்றை தொட்டுதடவிப்பார்க்கிறேன்..
எந்தமொழி  வார்த்தையாலும்
என் பூரிப்பினையும், பாசத்தினையும்
விளங்கவைக்கமுடியாது..

படிப்பு, சம்பாத்தியம், பணி
காதல், காமம், வேலை,
குடும்பப்பொறுப்பு என
எந்தக் கவலையுமில்லாமல்
உறக்கம் அவன் விழிகளில்...

உறங்கட்டும் அவன்!!
ஆணுக்குண்டான பொறுப்புகள்
அவனை உறங்கவிடாமல்
செய்யக்கூடும்...
அதனால்.
தன்முதுகில் நீர் சுமக்கும்
ஒட்டகத்தினைப்போல
இப்பவே உறங்கி
சக்தியை சேமித்துக்கொள்ளட்டும்...

தான் படிக்கும் படிப்பிலும், இதே நல்ல குணத்தோடும், நல்ல மனுசன்னு பேர் எடுத்து நல்லபடியா வாழனும்ன்னு எல்லாரும் வாழ்த்துங்க!!!

உங்கள் வாழ்த்துகளை எதிர்நோக்கி...
ராஜி

18 comments:

 1. மருமோனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  அனைத்து நலனும் பெற்று வளமோடு வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிண்ணே

   Delete
 2. கவிதை அருமை சகோ.

  ReplyDelete
 3. மனமார்ந்த வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிண்ணே

   Delete
 4. தாய்மையின் உணர்வுகளை மிக அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்! உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா. தவமாய் தவமிருந்து பெத்ததால் மட்டுமில்லைம்மா, நடத்தையிலும் அவன் ஸ்பெஷல்தான். கோவத்தை தவிர்த்தால் இன்னும் ரொம்ப நல்லதா இருக்கும்

   Delete
 5. அம்மாவாய் உணர்வுகள் அழகாய் வெளிப்பட்டிருக்கின்றன. நெகிழ்ச்சியான தருணங்கள். உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ

   Delete
 7. மாப்ளை க்கு இனிய பொறந்த டே வாழ்த்துக்கள்......இப்புடியே கண்டினியூ பண்ணி நல்லா படிச்சு முன்னுக்கு வந்து குடும்ப பேர காப்பாத்தணும்......சாமிய வேண்டிக்கிறேன்......

  ReplyDelete
  Replies
  1. உங்க ஆசீர்வாதத்துக்கு நன்றிண்ணே

   Delete
 8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மருமவனே

  ReplyDelete
 9. அரும்பு மீசை பையன் என்று இருந்திருக்க வேண்டுமோ

  ReplyDelete
 10. ஆஹா தம்பி க்கு எனது வாழ்த்துக்களும் க்கா..

  கொஞ்சம் லேட் ஆகி போச்சு

  ReplyDelete
 11. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... என்றும் இனிய நாளாக அமைந்திடட்டும்.

  ReplyDelete