Showing posts with label மிளகு. Show all posts
Showing posts with label மிளகு. Show all posts

Tuesday, November 20, 2018

கருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்ன்னு நம்ம ஊரில் சொல்வாங்க. நஞ்சையும் முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. மிளகு கொடி வகையை சார்ந்தது. மிளகு, வால்மிளகு, வெள்ளை மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகுன்னு பலவகை உண்டு.  நறுமண பொருட்களில் ஒன்றான மிளகு நாம நினைக்குற மாதிரி விதையோ காயோ அல்ல. அது ஒரு கனி. மிளகு செடியில் காய்க்கும் பழத்தையே உலர வச்சு மிளகாய் விற்பனைக்கு வருது. உணவுக்கு நறுமணத்தோடு சுவையும் கொடுக்குது. கூடவே மருந்தாகவும் பயன்படுது. பைப்பர் நிக்கரம்(Piper nigrum)ன்ற தாவர பெயரிலிருந்தே பெப்பர்ன்ற வார்த்தை உண்டானது.
மிளகின் பூர்வீகம் நம்ம தென்னிந்தியாதான். கேரளாவில் மிளகு அதிகளவில் பயிரிடப்படுது. மிளகுக்கு கோளகம், குறுமிளகுன்னும் வேற பேருண்டு. மலையாளத்தில் குருமிளகு, கன்னடத்தில் மெனசு, தெலுங்கில் மிரியாலு அல்லது மிரியம், கொங்கணியில் மிரியாகொனுன்னு பேரு. மிளகின் காரத்தன்மைக்கு பெப்பரைன்ன்ற வேதிப்பொருள் காரணமாகுது.  மிளகை கருப்பு தங்கம்ன்னும் செல்லமா கூப்பிடுறாங்க. லண்டனில்  டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததால்தான் கிழக்கிந்தியக் கம்பெனியே துவங்கப்பட்டதுன்னா மிளகின் மதிப்பை தெரிஞ்சுக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் மணப்பெண் சீதனமா மிளகை கொண்டு வருதல் செல்வ செழிப்பின் அடையாளமாய் கருதப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளின் மிளகின் அவசியத்தினால்தான் இந்தியாவுக்கு கடல்வழி கண்டுப்பிடிக்கப்பட்டது.  அப்புறம் நடந்த கதைலாம் நமக்குதான் தெரியுமே!
சுமார் நான்கு அடி மட்டுமே வளரும் தன்மையுள்ள இந்த கொடி, தான் படர்ந்திருக்கும்  சூழலை பொருத்து 12 அடிவரை செழித்து வளரும். இது பல்லாண்டு தாவரமாகும்.  மிளகுக்கு முள்முருங்கை மரம்ன்னா கொள்ளை இஷ்டம். இதன் இலைகள் வெற்றிலை மாதிரி இருக்கும்.  பழுக்காத பச்சை மிளகு காயை சுடுதண்ணியில் ஊறவைத்து பின்னர் வெயிலில் உலர்த்தினால் கிடைப்பதே பொதுவா நாம சமையலுக்கு பயன்படுத்தும் கருமிளகு. சுடுதண்ணியினால் மேல் தோல் உரிந்து பூஞ்சைகளின் உதவியோடு கருமை நிறத்துக்கு வந்திடுது.
வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்களே பயன்படுத்தப்படும். இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்பட்டு,  பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்பட்டு,  பின், பழத்தின் சதைப்பகுதியை தேய்த்து நீக்கி, கடைசியாய் மிஞ்சும் விதைகள் உலர்த்தப்படும். இவ்வாறு உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகளே வெண்மிளகாகும். சில இடத்தில் மிளகு பழத்துக்கு பதிலாய்  பச்சை மிளகு காயும் பயன்படுத்தப்படுது.
கருமிளகை போலவே மிளகு காயை பதப்படுத்துவதால் பச்சை மிளகு கிடைக்குது. பச்சை நிறத்தை தக்க வைக்க கந்தக - டை- ஆக்சைடு கலக்கப்படுவது உண்டு. வினிகரில் மிளகு காயை ஊற வைத்தும் பதப்படுத்துவதால் மிளகு பச்சை நிறத்துடன் இருக்கும். இதேமாதிரிதான் மிளகு பழத்தை வினிகரில் ஊற வைத்து பதப்படுத்துவதால் சிவப்பு மிளகு கிடைக்குது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு  போன்ற தாது உப்புகளும், கரோட்டின், தயாமின்,  ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமீன்களும் மிளகில் இருக்கு. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.  காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. மிளகின் காரமும் மணமும் செரிமானத்தை தூண்டுது. 

 இது மழைக்காலம் கூடவே முன்பனிக்காலம்... முன்பனிக்காலம் பொல்லாததுன்னு என் அம்மா சொல்லும். சளி, இருமல்ன்னு படுத்தி எடுக்கும்.  அதுக்கு தகுந்த மாதிரி ஒரு மருந்து குழம்பை  இன்னிக்கு பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்...
பூண்டு
வெங்காயம்
தக்காளி
புளி
உப்பு
எண்ணெய்.
வறுத்து அரைக்க...
மிளகு -  கொஞ்சம் தாரளமா எடுத்துக்கவும்
வெந்தயம்
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
மிளகாய்,
தனியா
சீரகம்
வறுத்து அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை கொஞ்சம் எண்ணெய் ஊத்தி வறுத்து, வதக்கின பூண்டை சேர்த்து ஆற விட்டு மைய அரைச்சுக்கனும்...
பூண்டு உரிச்சு எண்ணெயில் வதக்கி பாதி எடுத்து அரைக்க வேண்டியதில் சேர்த்துக்கனும்..
வெங்காயம் சேர்த்து வதக்கனும்...

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கிக்கனும்...

தக்காளி வெந்ததும் அரைச்ச விழுதை சேர்க்கனும்...

பெருங்காயப்பொடி,   மஞ்சப்பொடி சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து  கொதிக்க விடனும்.


பச்சை வாசனை போனதும் புளிக்கரைசலை சேர்க்கனும்.
உப்பு சேர்த்து நல்லா கொதிச்சு, எண்ணெய் பிரிஞ்சு தனியா வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சு இறக்கிடனும்.
மிளகை தாராளமாய் சேர்த்துக்கலாம். வெந்தயம் கொஞ்சமா சேர்க்கனும். மிளகு காரத்தினால் உடல் சூடாகாம இருக்கவே வெந்தயம் சேர்க்கடுது. சிலர் வீட்டில் உளுத்தம்பருப்பும், கடலை பருப்பும் சேர்ப்பதில்லை. அது குழம்பை கொழகொழன்னு ஆக்கிடும். இன்னும் சிலர் வீட்டில் பருப்புகளுக்கு பதில் பச்சரிசி சேர்ப்பதுண்டு. கத்திரிக்காய் இருந்தால் சேர்க்கலாம். அதும் தனி ருசி கொடுக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சாதத்தில் கொஞ்சம்  நெய் சேர்த்துக்கலாம். மிளகின் காரம், சாப்பிடும்போதே சளியை கரைச்சு  மூக்கில் நீர் வடிய வைக்கும். உடல்வலிக்கும், காய்ச்சல், சளிக்கும் கைக்கண்ட எளிய மருந்து இது.

நன்றியுடன்,
ராஜி

Tuesday, October 10, 2017

காய்ச்சலின்போது சாப்பிட ஏதுவான ரசம் - கிச்சன் கார்னர்

காய்ச்சல்ல விழுந்திட்டா நொய் கஞ்சி, பால், பிரட், இட்லி, இடியாப்பம்ன்னு கைக்குழந்தை வாய்ல முத்தம் கொடுத்த மாதிரி சப்ப்ப்ப்புன்னு சாப்பாடு கொடுப்பாங்க. காய்ச்சல் போனதும் காரம், புளிப்பு கம்மியா பருப்பு வேக வச்ச  தண்ணி வடிக்காம சாம்பார் வச்சு லேசா மிளகு தட்டிப்போட்டு  தொட்டுக்க நார்த்தங்காய் இல்லன்னா கிச்சிலி ஊறுகாய் கொடுப்பாங்க. அப்படியும் நாக்கின் உணர்ச்சி நரம்புகள் வேலை செய்யலைன்னா வெறும் ரசம்ன்னு சொல்லப்படுற கொட்டு ரசம் வச்சு தொட்டுக்க துவையல் கொடுப்பாங்க. சூடான சாதத்துல இந்த ரசத்தை ஊத்தி சாப்பிட்டா மாம்சுக்கு கொடுக்குற லிப்கிஸ் மாதிரி சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு  இருக்கும். 

தேவையான பொருட்கள்:
மிளகு
சீரகம், 
பூண்டு
மிளகாய்
புளி
உப்பு
மஞ்சப்பொடி
பெருங்காயம்
கறிவேப்பிலை

புளியை  சுத்த பண்ணி ஊற வெச்சுக்கனும்....
மிளகு, சீரகம், பூண்டு, மிளகாயை வறுக்காம பச்சையா தண்ணி ஊத்தி அரைச்சுக்கனும்...
ஊற வச்ச புளியை கரைச்சு வடிகட்டிக்கனும், அதில்   அரைச்ச மிளகு, சீரக விழுதை  போட்டு கரைச்சு  மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்.....
பச்சை கறிவேப்பிலையை புளிக்கரைசலில் போட்டு நல்லா கசக்கி விட்டுக்கனும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
பெருங்காயம் சேர்த்துக்கோங்க...  இந்த ரசம் பொங்கியோ இல்ல கொதிக்கவோ கூடாது. நல்லா சூடேறி நுரைச்சுக்கிட்டு வரும்போது, அந்த நுரை மேல ஒரு கரண்டி தண்ணி ஊத்தி அடுப்பை அணைச்சுடனும்...  இதுக்கு தொட்டுக்க தேங்காய், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைச்ச துவையல் சூப்பரா இருக்கு. நாவின் சுவை அரும்புகள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

அகத்தை சீர் செய்யும் சீரகம், பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்ன்னு சொல்லும் நச்சுக்கொல்லியான மிளகு, ஜீரண உறுப்புகளை தூண்டும் கறிவேப்பிலை,  பெருங்காயம்ன்னு சேர்த்து, எண்ணெய் சேர்க்காம இருக்குறதால இந்த ரசம் உடலுக்கு மிக நல்லது.. தக்காளி, பருப்பு தண்ணிலாம் சேர்க்காததால சீக்கிரம் கெட்டு போகாது. வெளில வச்சாலே மூணு நாலு நாளைக்கு வரும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன், 
ராஜி.

Wednesday, August 07, 2013

சோயா உருண்டை பொறியல் - கிச்சன் கார்னர்

”சோயா உருண்டை” 1980 களில்   கல்யாண பந்திகளில் வெஜ் பிரியாணிகளில் தென்பட்டது. ருசி பிடிச்சு  போய் அப்பா, அம்மா இலைகளில் இருப்பதையும் வாங்கி சாப்பிட்டதால அப்பா தேடி பிடிச்சு வாங்கி வந்தார். அப்போலாம் அதன் பேர் கூட தெரியாது, அது தயாரிச்சு வித்த கம்பெனி பெயராலேயே “மீல் மேக்கர்”ன்னுதான் சொல்லிட்டு இருந்தேன். வெஜ் பிரியாணி செய்யும்போது பீன்ஸ், கேரட், பட்டாணி கூட இது கண்டிப்பா இருக்கும்.

சில சமயம் காய் எதும் இல்லாட்டி கூட இந்த சோயா உருண்டையை போட்டு கூட சமைச்சிருக்கோம். டிவில பார்த்து செஞ்சாங்களா?! இல்ல தானா செஞ்சாங்களா?!ன்னு தெரியலை..,  இப்போலாம் காய் எதும் இல்லாட்டி டக்குன்னு இதை பத்து நிமிசத்துல பொறியலா செஞ்சுடுவோம். என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

சோயாவை சாப்பிடுறதால வரும் நன்மைகள் என்னன்னா, இதெல்லாம் தெரியாமதான் சாப்பிட பழகினேன். ஆனா, பதிவு போடுறதுக்காகதான் தேடினேன். ஏன்னா, சமைக்குறது நல்லா இல்லைன்னாலும் இப்படி டிப்ஸ் குடுக்குறதால கொஞ்சம் தப்பிச்சுக்கலாமே அதனால்தான்!!

*சோயாவை சாப்பிட்டுல சேர்த்துக்கிட்டா எலும்புலாம் உறுதியாகும். சோயாவுல கால்சியம் குறைவா இருந்தாலும் இதுல இருக்குற தாவர ஹார்மோன் எலும்புகள் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டதாம்.

* மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்குற ஆற்றல் சோயாவுக்கு இருக்கு. . இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ்ன்ற பொருள்  பெண் ஹார்மோனான ”ஈஸ்ட்ரோஜன்” போல செயல்படும் சக்தி கொண்டது. இது  மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டதாம்.

2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுதாம். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்குமாம்.

4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். ஆரோக்கியமான உடல் நிலை இருக்குறவங்க தினமும் 25கி. சாப்பாட்டுல சேர்த்துக்கலாம். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்குமாம்.

5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றதாம்.

சோயாவில் இருக்கும் சத்துகள்: 

தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்குதாம். 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்குதாம். இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குதாம். (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான். அப்படி இருந்தாலும் சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்குது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்குது. சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான். சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது. மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷியம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ம்ம்ம்ம் போதும் லெக்சர். என்ன சமைக்குறேன்னு பார்க்கலாம்ன்னு நீங்க சொல்றதுக்குள்ள....,

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சமைக்க தேவையான பொருட்கள்:
சோயா உருண்டை - 25
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு 10 பல்
மிளகு - சிறிது
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
பட்டை- 1 
சோம்பு- சிறிது
கிராம்பு- 2 
கரம் மசாலா பவுடர்  - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  
கடலை பருப்பு - 1டீஸ்பூன்  
வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை


வாணலில கொஞ்சம் தண்ணி ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. ரெண்டு கொதி வந்ததும் சோயா உருண்டையை கொட்டி ஒரு கொதி வந்ததும், அடுப்பை ஆஃப் பண்ணி 5 நிமிசம் வாணலியை மூடி வைங்க.


அஞ்சு நிமிசம் கழிச்சு, வெந்த சோயா உருண்டைகளை  வடிகட்டி, மீண்டும் நல்ல தண்ணி ஊத்தி ரெண்டு முறை அலசிக்கோங்க. ஏன்னா, அப்படியே சேர்த்துக்கிட்டா ஒரு சிலருக்கு அந்த சோயா வாசனை பிடிக்குறது இல்ல. அதுக்காக.

அப்படி 2 முறை அலசி, தணி வடிக்கட்டுன சோயா உருண்டையை ரெண்டா மூணா பிச்சுக்கோங்க.

ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துக்கோங்க.


கடுகு பொறிஞ்சதும், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்துக்கோங்க.


அவையும் பொறிஞ்சதும் வெங்காயம் சேர்த்துக்கோங்க.

கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்துக்கோங்க. உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வேகும், பச்சை வாசமும் சீக்கிரம் போகும்..,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கும்போது அடிப்பிடிக்காது.

வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தா சேர்த்துக்கோங்க இல்லன்னாலும் பரவாயில்லை.


தக்காளி நல்லா வெந்து மசிஞ்சதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு   சேர்த்துக்கோங்க. 


மிளகாய் தூள்லாம் லேசா எண்ணெய்ல வதக்கி கொஞ்சமா தண்ணி ஊத்தி கொதிக்க வைங்க.

மிளகாய் தூள் வாசனை போனதும் சோயா உருண்டையை கொட்டிவச்சு  மிதமான தீயில  கிளறுங்க. 

 
அப்படி வதக்கும்போது கொஞ்சம் கரம் மசாலா தூள் சேர்த்துக்கோங்க.


 கடைசியா மிளகை கரகரப்பா இடிச்சு பூண்டை பஞ்சு போல நசுக்கி சேர்த்துக்கொங்க. கடைசியா வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை கிளறி பறிமாறுங்க.

 டிஸ்கி: மிளகு போட்டிருப்பதால சின்ன குழந்தைங்க காரம்ன்னு சொல்லலாம். அதனால, சின்ன பிள்ளைங்க இருந்தா மிளகு கொஞ்சமா சேர்த்துக்கோங்க.  நாலஞ்சு நாளா வெளியூருக்கு போய்ட்டு வந்து ஹோட்டல் சாப்பாட்டுனால நாக்கை அடக்கம் பண்ணி வச்சிருந்தா சாதம், ஒரு பருப்பு சாம்பாரோடு சேர்த்து இதை சாப்பிட்டா அடக்கமான நாக்குக்கு ருசி தெரியும்.

சாம்பார்சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதத்துக்கு தொட்டுக்க நல்லா இருக்கும். அதுமட்டுமில்லாம “அந்த” மெயின் டிஷ்சுக்கு இது நல்ல சைடு டிஷ்சா இருக்கும்.  அது எப்படி உங்களுக்கு தெரியும் அக்கான்னு வந்து பாசமா கேட்டாலும் கம்பெனி ரகசியங்கள் வெளியே சொல்வதற்கில்லை.

சமைச்சுக்கிட்டே பதிவை தேத்த போட்டோ எடுக்கும்போது என் வீட்டு சின்ன அம்மிணி வந்து எதுக்குன்னு கேட்டுச்சு. இதுப்போல பதிவு போடறதுக்குன்னு சொன்னா,,, ஆமாமா! ரொம்ப கஷ்டமான டிஷ் பாரு. யாருக்கும் தெரியாது பாரு. போம்மா போய் உருப்படியா சமைச்சு எங்களுக்கும் போட்டு, பதிவையும் போடுன்னு சொல்லுச்சு. பார்ப்போம் பதிவுக்கு என்ன ரெஸ்பான்ஸ்ன்னு!!??

அடுத்த புதன் வேறொரு ஈசியான அதாவது எனக்கு ஈசியான சமையற்குறிப்போடு வரேன்.