Wednesday, September 27, 2017

எது அழகென்று உணராத மகாலட்சுமி... அதை உணர வைத்தை மகாவிஷ்ணு.....

நவராத்திரியின் ஏழாவது நாள் நாம் வணங்க வேண்டியது மகாலட்சுமியை. மகாலட்சுமியை பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.  விஷ்ணுவின் பத்தினி, செல்வத்துக்கு அதிபதி. அழகு நிறைந்தவள்.  கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.  இப்படி நாம் இத்தனை நாள் நினைத்திருக்க, மகாலட்சுமி விஷ்ணுவின் பத்தினி, அவருக்கு சேவை செய்ய பிறந்தவள், அழகும், அன்பும் நிறைந்தவள் என்று மட்டுமே தேவி பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


ஆதிபராசக்தி தன்னிடமிருந்து தன்னைப்போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இடது பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி,  வலது பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி. ‘ரமா’  என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகா லட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். 



ஒருமுறை  துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினர். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். ‘’நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த செல்வங்களை பெற அருள்புரிவாள்’’ என்று மகா விஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.


இதையடுத்து பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில்,ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும், ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான சௌந்தர்ய லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, ‘’என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்’’ என்று கூறினாள்.

அதன்படி, யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப்பாடி மகிழ்ந்தனர். சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வகைச் செல்வங்களையும் அளிப்பவள்.


ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். அவர்கள் பூலோக மக்கள் பற்றியும், அவர்களின் இன்ப– துன்பங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு அழகு பக்கம் திசைமாறியது. அப்போது மகாலட்சுமி, ‘நான் அழகாக இருக்கிறேன். அதனால்தான் பூலோகத்தில் இருப்பவர்கள், நான் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், அந்த வீட்டில் நான் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர்’ என்று தன் அழகைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.  அதைக் கேட்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்களுக்கு அகத்தில் இருப்பதுதான் அழகு, புறத்தில் இருக்கும் அழகு மாயையில் சுழல வைப்பது என்று தெரிவதில்லை. பூலோகத்தில் இருக்கும் மனிதர்களில் பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாதவர்கள் பூலோகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம் அவர்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பணம் ஒரு மாயை என்பதை உணராமல், அதை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.  இப்படியே வாக்குவாதம் வலுத்தது. 


‘சுவாமி! என்னுடைய அழகையும், பூலோகத்தில் எனக்குக் கிடைக்கும் மதிப்பையும் பாராட்ட மனமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். கருமையாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? என்னைப் போன்று அழகாக இருப்பவர்களைக் குறை சொல்ல மட்டுமே தெரியும்’ என்று விஷ்ணுவின் கருமை நிறத்தைச் சுட்டிக் காட்டி பேசினார் மகாலட்சுமி. தன் நிறத்தைப் பற்றி பேசியும் மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல், ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு முகத்தை வைத்தும், ஆண்களுக்கு உடலமைப்பை வைத்தும் அழகைத் தவறாக மதிப்பிட்டு வருகின்றனர். பொலிவான முகம், பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, சிவந்த உதடுகள் போன்ற முக அமைப்புடைய பெண்கள்தான் உடல்நலத்துடன், அதிகமான குழந்தைகளை அளிப்பார்கள் என்கிற எண்ணத்தில் ஆண்கள் அவர்களை விரும்பினார்கள். காலப்போக்கில் இந்த விருப்பமே பெண்களின் அழகு என்றாகிவிட்டது. இதேபோல் பெண்கள், தங்களுக்குக் கணவனாக வருபவன் உடல் பலத்துடன் இருந்தால்தான் காட்டிற்குச் சென்று, வேட்டையாடித் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தனர். இதனால், ஆண்களுக்கு உடல் பலமே அழகு என்றாகி விட்டது.  ஆனால் உண்மையில், பிறருக்குத் தீங்கிழைக்காத நல்ல மனமும், தம்மைத் தேடி வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும்தான் உண்மையான அழகு என்பதை அனைவரும் மறந்து போய்விட்டனர்’ என்றார்.



மகாலட்சுமியோ, ‘இறைவா! மகாலட்சுமி என்ற எனது பெயருக்குப் பேரழகு என்று பொருள் என்று உங்களுக்குத் தெரியும். இருப்பினும் அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி என்று அனைத்துச் செல்வங்களின் தேவதையாக இருக்கும் என்னைப் பற்றிக் குறை சொல்கிறீர்கள். அழகு வெளிப்படும் இடங்களிலெல்லாம் திருமகளாக நான் இருக்கிறேன் என்பதைத் தாங்கள் அறிந்திருந்தும், என்னை அவமதிக்கும் நோக்கத்திலேயே பேசுகிறீர்கள். செல்வத்துடன் சேர்ந்திருக்கும் என்னுடைய அழகிற்கு, நீங்கள் சொல்லும் எந்த அழகும் இணையானதில்லை’ என்றார் கோபத்துடன். இதைக் கேட்டு கோபமடைந்த மகாவிஷ்ணு, ‘ஒரு பெண்ணுக்கு உடல் அழகு தேவையாக இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் கொண்டு, உண்மையான அழகினை மறந்துவிடக் கூடாது. எந்த உடல் அழகு மீது நீ அளவு கடந்த பற்று கொண்டு, என்னை எதிர்த்துப் பேசினாயோ, அந்த அழகு கொண்ட உடல் இல்லாமல், உருவமில்லாதவளாகப் (அரூபம்) போவாய்’ என்று மகாலட்சுமிக்கு சாபம் கொடுத்தார். 



சாபம் கொடுத்த பிறகுதான் மகாலட்சுமிக்கு சுய உணர்வே வந்தது. ‘இறைவா! என் தவறை மன்னித்து எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். அவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூமியில் ஒரு முறை செய்யும் தவத்திற்கு, ஒரு கோடி முறை தவம் செய்த பலன் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று என்னை நோக்கித் தவம் செய்தால் உனது சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும்’ என்றார். உருவம் இல்லாதவளாகப் பூலோகம் வந்து சேர்ந்தார் மகாலட்சுமி. சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதி தேவி, அந்த சாபத்தில் இருந்து மீள ஏகாம்பரேஸ்வரரை வணங்கிய இடமே, தனக்கும் சாப விமோசனமளிக்கும் இடமாக இருக்கும் என்று எண்ணினார். எனவே அந்த இடத்திற்கு வந்த மகாலட்சுமி, விஷ்ணுவை நினைத்து தவம் இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்தின் பயனாக, ஒவ்வொரு நாளும் மகாலட்சுமியின் உருவம் சிறிது சிறிதாகக் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது. தொடர் வேண்டுதலில், அவரது உருவம் முழுமையாக பிறர் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியது. தவத்தின் வலிமையால் முன்பு இருந்ததைவிட அதிகமான அழகு சேர்ந்து ஒளி வீசத் தொடங்கியது. 



தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மகாலட்சுமியை, வைகுண்டம் அழைத்து வருவதற்கு சரியான நாளை எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. இந்த நிலையில் விஷ்ணு வரத் தாமதமானதால், மகாலட்சுமிக்கு கவலை அதிகரித்தது.  இந்நிலையில் ஒருநாள், அந்த இடத்திலிருக்கும் பஞ்சதீர்த்தக் கரையில் பார்வதி தேவியை மகாலட்சுமி சந்தித்தார். அவரிடம், தனக்கு முழு உருவம் கிடைத்தும், விஷ்ணு தன்னை அழைத்துச் செல்லாதது பற்றி வருத்தப்பட்டார். அப்போது விஷ்ணு, மகாலட்சுமி முன்பை விட எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், மறைவான ஒரு இடத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பார்வதிதேவி, அவரைக் ‘கள்வன்’ என்று அழைத்தார். பார்வதி கள்வனென்று யாரைச் சொல்கிறார் என்று மகாலட்சுமியும் திரும்பிப் பார்த்தார். அங்கு மகாவிஷ்ணு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டுத் தலை குனிந்தார். 



மறைவில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, ‘தேவி! இந்தப் பூமியில் உன் அழகைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஹரிணி (பசுமையான உடல் அழகைப் பெற்றவள்), சூர்யா (கதிரவனுக்கு நிகரான ஒளியுடையவள்), ஹிரண்மயி (பொன்னிறமானவள்), ஹிரண்ச வர்ணா (பொன்னிற உடலுடையவள்), சந்திரா (நிலவுக்கு நிகரான முகமுடையாள்), ஆர்த்திரா (நீரில் தோன்றியவள்), பத்ம ஸ்திதா (தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள்), பத்ம வர்ணா (தாமரை நிறமுடையவள்), ஆதித்ய வர்ணா (சூரியகாந்தி தோற்றமுடையவள்), கரிஷிணி (பெருகும் பசுச் செல்வமானவள்), பிங்கள (செம்மை நிறம் கொண்டவள்) என்று பல பெயர்கள் உனக்குக் கிடைக்கும். இத்திருத்தலத்திற்கு வந்து உன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு அழகின் மீதிருக்கும் மோகம் குறையும்” என்று சொல்லி அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வைகுண்டம் திரும்பினார்.   உடலின் நிறம், பலம் போன்றவைகளால் கிடைக்கும் அழகு காலமாற்றத்தால் மாற்றமடையக் கூடியது. உடலின் அழகு நிலையானதில்லை. பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் விதமாக மகாலட்சுமி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன....

பதிவின் நீளம் கருதி, சென்னை அஷ்டலட்சுமி கோவில் பதிவோட லிங்க்...... 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,.
ராஜி. 

Tuesday, September 26, 2017

கண்களுக்கு காவல் இந்த கௌமாரி அம்மன்


நவராத்திரியின் ஆறாவது நாளான இன்று நாம் வணங்க வேண்டியது கௌமாரி. இவள்  முருகனின் அம்சம்.  மிகுந்த அழகுடையவள். வீரத்துக்கும் குறைவில்லாதவள்.  இவள் அகங்காரத்தின் நாயகி. இவளுக்கு வாகனம் மயில். பக்தர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில் இவளுக்கு முதலிடம்.  பன்னிரண்டு கரங்கள் கொண்டவள். அதில் வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள். முருகனைப்போன்றே இவளுக்கும் ஆறுமுகம்.  இவள் நமது உடலில் ஓடும் ரத்தத்திற்கு அதிபதி.   இவள் சஷ்டிதேவியாகும். 

ஒருமுறை கௌமாரி அம்மன் அசுரனை கொல்ல வேண்டி வைகை நதிக்கரையோரமிருந்த அடர்ந்த காட்டுக்குள் தவமிருந்தாள். அதை அறிந்த அந்த அசுரன் அம்பாளை கடத்தி செல்லும் நோக்கோடு அன்னையை நெருங்கினான். இதை அறிந்த அன்னை, தன் அருகிலிருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அசுரனை நோக்கி வீச அசுரன் இரண்டாக பிளக்கப்பட்டு இறந்தான்.  


 பாண்டிய மன்னன் ஒருவன், தான் செய்த பாவத்தால் பார்க்கும் திறனை இழந்தான்.  தன் செயலுக்கு மனம் வருந்தி சிவனை வேண்ட, மன்னன் கனவில் தோன்றிய இறைவன், இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகைக்கரை ஓரமாக சென்று, நிம்பா ஆரணியத்தில் முருகன் அம்சம் பெற்ற கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு. அவள் அருளால் உனக்கு பார்க்கும் திறன் கிடைக்கும் என கூறி மறைந்தார், அதேப்போல் கௌமாரியை வணங்கிய பாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கௌமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி மறு கண்ணையும் பெற்றார். அன்றிலிருந்து அங்கிருந்த சிவனுக்கு திருக்கண்ணீஸ்வரர் என்று பெயர் உண்டானது.  இதற்கு கைமாறாக சிவனுக்கு பெரிய கோவிலும், கௌமாரிக்கு சிறிய கோவில் ஒன்றை எழுப்பி வணங்கி வந்தான். அதனாலாயே, இவ்வூருக்கு வீரபாண்டி என காலப்போக்கில் மாறிப்போனது. வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவில் கௌமாரி பார்க்கும் திசையில் அமைந்துள்ளது.

மந்தையிலிருந்து தனியே பிரிந்து சென்ற பசு ஒன்றின் காலிடறி, அங்கிருந்த கல்லிலிருந்து ரத்தம் கசிந்தது. அதைக்கண்ட பசு, தன் பால் சொரிந்து தன் கால்பட்ட காயத்தை போக்கியது. அன்றிலிருந்து, அக்கல்லுக்கு பால்சொரிவதை வழக்கமாக கொண்டது பசு. பால் குறைவதை கண்ட பசுவிற்கு சொந்தமானவன், மேய்ச்சல்காரனை கேட்க, மேய்ச்சல்காரன் பசுவை கண்காணிக்க, பசு, கல்லுக்கு பால் சொரிவதை கண்டு பசுவின் சொந்தக்காரருக்கு சொல்ல ஊரே திரண்டு வந்து அந்த அதிசயத்தை காண, பசு பால் சொரிந்த கல்லை பெயர்க்க முற்பட்டபோது, தான் கௌமாரி எனவும், தான் சுயம்புவாய் இங்கு அவதரித்துள்ளதாகவும், தனக்கு இங்கொரு கோவில் கட்டவேண்டுமென பணித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. 


இவளை வழிபடுவதால் இளமை, அழகோடு செல்வம் சேரும், குழந்தை பாக்கியம் கிட்டும், கண் பார்வை தெளிவுபெறும், பார்வை குறைபாடு நீங்கும், கண்கட்டி உட்பட அனைத்து விதமான கண் நோய்களும் தீரும்.  கௌமாரியினை நிந்தித்தால் நமது வீட்டில் உள்ள பசுக்களுக்கு கோமாரி நோய் உண்டாகும். இவளுக்கு தேவசேனா என்ற மற்றொரு பெயருமுண்டு. எலுமிச்சை, தேங்காய் சாதம் இவளுக்கு நைவேத்தியம்.



கௌமாரியின் மூல மந்திரம்.....
ஓம் சிகித்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.


மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங்களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என்முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக.....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி

Monday, September 25, 2017

குயில் பாடும். தவம் செய்யுமா?!

நவராத்திரியின் ஐந்தாவது நாள் வணங்க வேண்டிய பெண் தெய்வம் மகேஸ்வரி. இவள் சப்த கன்னியரில் இரண்டாவது கன்னி. இவள் சிவனின் அம்சம்.  இந்த சக்தியினால்தான் சிவன் தன் சம்ஹாரத்தை நிகழ்த்துகிறான். இவள் வெண்ணிற மேனியனாள். மூன்று கண்களோடு, பிறை சூடிய ஜடா மகுடத்துடன், பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு, மான், மழு ஏந்தி அபயவரத கரத்தோடு கூடிய பத்து கரங்களோடு ரிஷப வாகனத்தில் வடகிழக்கு திசையான ஈசானிய திசையை நிர்வகிப்பவள். இவள் கோபத்தை குறைக்கும் ஆற்றலை கொண்டவள். கடின உழைப்புக்கு சொந்தக்காரி. தர்மத்தின் திருவுருவம். தன்னை வழிபடுபவருக்கு போகத்தை வழங்கக்கூடியவள்.


சப்த கன்னியர்கள் வழிப்பட்டு சிவன் அருள் பெற்ற தலங்கள் வரிசையில் மகேஸ்வரி சிவனை வழிப்பட்ட தலம் நாகப்பட்டனம் கருங்குயில்நாதன்பேட்டையில் அருள்பாலிக்கும் ஆனந்தவல்லி சமேத சக்திபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.  இந்திரன் குயில் உருவங்கொண்டு ஈசனை வழிப்பட்ட தலம் இது.  இங்குள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு கருணா தீர்த்தம் என்று பெயர். வில்வமரம் இங்கு ஸ்தல விருட்சம்.  தட்சன் சிவனை மதியாது யாகம் செய்தபோது அங்கு வந்த அன்னையால் யாகம் அழியப்பெற்றது. அந்த அழிவிலிருந்து தப்பிக்க எல்லாரும் ஓடியபோது இந்திரன் குயில் உருவங்கொண்டு உயிருக்கு அஞ்சி ஓடினான்.



தன்னையுமறியாமல் சிவநிந்தனைக்கு ஆளானதை எண்ணி வருந்தி, இந்திரன் குருபகவானிடம் யோசனை கேட்க, சப்த கன்னிகையரில் ஒருவளான மகேஸ்வரி  வழிப்பட்டு அருள்பெற்ற  கருணாபுரம் என்ற திருத்தலமொன்று உண்டு. அங்கு சென்று இறைவனை வழிப்பட்டால் உன் பாவம் தீரும் என கூறினார். அதன்படி இந்திரன் வழிப்பட்ட தலம் இது.  இதனாலயே, இந்த ஊருக்கு கருங்குயில்நாதன்பேட்டை என்றும், சிவனின் கருணையினை குறிக்கும் விதமாக கருணாப்பேட்டை என்றும் அழைக்கப்படுது.


மகேஸ்வரி மூல மந்திரம்.... 

ஓம் வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472746 நன்றியுடன்,
ராஜி.

Sunday, September 24, 2017

தங்கம் கிடைக்க வணங்க வேண்டிய பெண் தெய்வம்.

நவராத்திரியின் நாலாவது நாளில் நாம் வணங்கப்போற பெண் தெய்வம் வைஷ்ணவி. இவள் சப்தகன்னிகளில் நாலாவது கன்னி. சங்கு, சக்கரம், கதை, வில்,வாள், சூலம், கத்தி, கேடயம் தாங்கி எட்டு கரங்களுடன், சிவப்பு நிற ஆடையணிந்து கருட வாகனத்தில் காட்சியளிப்பவள்.  இவள் பராசக்தியின் கைகளிலிருந்து பிறந்தவள். விஷ்ணுவின் சக்தி.  பாரிஜாத மலருக்கு மனம் மயங்குபவள், சுக்கு, ஏலக்காய் பொடி தூவிய பானகம், எலுமிச்சை சாதம் இவளது நைவேத்தியம்.  தீயவற்றை சம்ஹரிக்க பிறந்தவள்.  கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம்  கிடைத்திட வைஷ்ணவியின் அருள் மிக முக்கியம்.  நீல நிற மேனி கொண்டவள். 


தஞ்சை ஐய்யம்பேட்டைக்கு அருகில் நல்லிச்சேரி நந்திமங்கை என்ற ஊரில் வைஷ்ணவிதேவி சிவனை வணங்கி அவன் அருள் பெற்றாள் என்று புராணங்கள் கூறுகின்றது. இங்குள்ள சிவனுக்கு ஜம்புநாதஸ்வாமி என்றும், அம்பாளுக்கு அலங்காரவல்லி என்றும் பெயர்.  இந்த தலத்தில் பஞ்சாட்சரத்தை நந்திபகவான் ஓதி சிவனை பூஜித்ததால் இந்த ஊருக்கு நந்திகேஸ்வரம் என்ற பேரும் உண்டு. இந்த ஊருக்கருகில் வயல் வெளிகள் அதிகம் கொண்டதால் அங்கு விளைந்த நெல்களை இங்கு குமித்து வைத்ததால் நெல்லுச்சேரி என அழக்கப்பட்டு நல்லிச்சேரி என திரிந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. 


இந்த கோவில் இருந்த இடம்,முன்பு அடர்ந்த காடாய் இருந்ததாம்.  இந்த கோவிலை மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கட்டியதாக கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கோவிலில்தான் சப்த கன்னிகளில் ஒருவரான வைஷ்ணவி தேவி தனது பதினெட்டு வயதில் சிவ பெருமானையும் அம்பாளையும் ஒரு சேர வழிபட்டார்.  இவளுக்கு நாராயணி என்றும் பெயருண்டு. 

108 சக்தி பீடங்களில் 51வது சக்தி பீடமான ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்ராவிலிருந்து அருள்புரியும் வைஷ்ணவிதேவியும், சப்தகன்னியருள் ஒருவரான இந்த வைஷ்ணவிதேவியும் வேறுவேறானவர்கள்., 

வைஷ்ணவிதேவியின் மூலமந்திரம்...

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,
ராஜி. 

Saturday, September 23, 2017

இந்திரன் மனைவி இந்திராணியும், சப்த கன்னிகளில் ஒருவரான இந்திராணியும் ஒருவரா?!


நவராத்திரியின் மூன்றாவது நாளில் வணங்க வேண்டிய தெய்வம் இந்திராணி.  இவள் இந்திரனின் சக்தியாகும். இந்திரனின் மனைவியான இந்திராணியும், இவளும் வேறு. இவள் நித்யகன்னி. இந்திரன் மனைவி தெய்வானை, சித்திரகுப்தன், ஜெயந்தனின் தாய்.   இவளுக்கு மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் பெயருண்டு. சீதைக்கு நிகரான அழகும் குணமும் கொண்டவள். இவள்தான் தேவலோகத்தை ஆட்சி செய்பவள்.  நவரத்தின கற்கள் பதித்த க்ரீடம் அணிந்தவள். வஜ்ராயுதத்தை தாங்கியவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திகாசுரனை அழித்தவள். ஆயிரம் கண்ணுடையவள். சப்த கன்னிகளில் ஆறாவது சக்தியாகும். 


வேலை கிடைக்க, பதவி உயர்வு, சம்பள உயர்வு, இழந்த பதவி திரும்ப பெற வேண்டுபவர்கள் இவளை வழிப்பட  கைமேல் பலன் கிடைக்கும். மரிக்கொழுந்து, சம்பங்கி மலர்களின் பிரியை. யம பயம் போக்குபவள், திருமண வரம் தருபவளும்கூட. 


சப்த கன்னியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று வணங்கி சிவனின் அருளாசி பெற்றனர். அவ்வாறு, இந்திராணி சிவனை வழிப்பட்ட தலம் நாகப்பட்டினம் அருகில் தருமபுரம், அபயாம்பிகை சமேத தருமபுரீஸ்வரர் ஆலயம்.  ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயன் உயிரை பறிக்க முயன்ற குற்றத்திற்காக சாபத்திற்கு ஆளான எமன், இத்தலத்தில் சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றதாய் கூறப்படுது. தருமராஜாவும் இக்கோவிலில் சிவனை வணங்கி சிவனின் அருள் பெற்றுள்ளார். இங்கு துர்க்கை 18 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். சந்திரன் சாபம் நீங்க வழிப்பட்ட தலத்தில் இதுவும் ஒன்று. அனைத்து விதமான கலைகளும் கைவர சந்திரனின் அருள் மிக முக்கியம். அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த எம்பெருமான் இங்கு சந்திரமௌலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு சுயம்பு மூர்த்தியாகும். 


இந்திராணிக்கு தாழமங்கை என்றொரு பெயருண்டு. அவள் இங்கு தங்கி சிவனை பூஜித்ததாலேயே இந்த கோவிலுக்கு தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுது. 

இந்திராணியின் மூல மந்திரம்...
ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;வஜ்ரஹஸ்தாயை தீமஹி;தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472564

நன்றியுடன்,
ராஜி.