Wednesday, September 27, 2017

எது அழகென்று உணராத மகாலட்சுமி... அதை உணர வைத்தை மகாவிஷ்ணு.....

நவராத்திரியின் ஏழாவது நாள் நாம் வணங்க வேண்டியது மகாலட்சுமியை. மகாலட்சுமியை பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.  விஷ்ணுவின் பத்தினி, செல்வத்துக்கு அதிபதி. அழகு நிறைந்தவள்.  கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.  இப்படி நாம் இத்தனை நாள் நினைத்திருக்க, மகாலட்சுமி விஷ்ணுவின் பத்தினி, அவருக்கு சேவை செய்ய பிறந்தவள், அழகும், அன்பும் நிறைந்தவள் என்று மட்டுமே தேவி பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


ஆதிபராசக்தி தன்னிடமிருந்து தன்னைப்போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இடது பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி,  வலது பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி. ‘ரமா’  என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகா லட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். ஒருமுறை  துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினர். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். ‘’நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த செல்வங்களை பெற அருள்புரிவாள்’’ என்று மகா விஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.


இதையடுத்து பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில்,ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும், ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான சௌந்தர்ய லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, ‘’என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்’’ என்று கூறினாள்.

அதன்படி, யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப்பாடி மகிழ்ந்தனர். சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வகைச் செல்வங்களையும் அளிப்பவள்.


ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். அவர்கள் பூலோக மக்கள் பற்றியும், அவர்களின் இன்ப– துன்பங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு அழகு பக்கம் திசைமாறியது. அப்போது மகாலட்சுமி, ‘நான் அழகாக இருக்கிறேன். அதனால்தான் பூலோகத்தில் இருப்பவர்கள், நான் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், அந்த வீட்டில் நான் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர்’ என்று தன் அழகைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.  அதைக் கேட்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்களுக்கு அகத்தில் இருப்பதுதான் அழகு, புறத்தில் இருக்கும் அழகு மாயையில் சுழல வைப்பது என்று தெரிவதில்லை. பூலோகத்தில் இருக்கும் மனிதர்களில் பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாதவர்கள் பூலோகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம் அவர்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பணம் ஒரு மாயை என்பதை உணராமல், அதை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.  இப்படியே வாக்குவாதம் வலுத்தது. 


‘சுவாமி! என்னுடைய அழகையும், பூலோகத்தில் எனக்குக் கிடைக்கும் மதிப்பையும் பாராட்ட மனமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். கருமையாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? என்னைப் போன்று அழகாக இருப்பவர்களைக் குறை சொல்ல மட்டுமே தெரியும்’ என்று விஷ்ணுவின் கருமை நிறத்தைச் சுட்டிக் காட்டி பேசினார் மகாலட்சுமி. தன் நிறத்தைப் பற்றி பேசியும் மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல், ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு முகத்தை வைத்தும், ஆண்களுக்கு உடலமைப்பை வைத்தும் அழகைத் தவறாக மதிப்பிட்டு வருகின்றனர். பொலிவான முகம், பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, சிவந்த உதடுகள் போன்ற முக அமைப்புடைய பெண்கள்தான் உடல்நலத்துடன், அதிகமான குழந்தைகளை அளிப்பார்கள் என்கிற எண்ணத்தில் ஆண்கள் அவர்களை விரும்பினார்கள். காலப்போக்கில் இந்த விருப்பமே பெண்களின் அழகு என்றாகிவிட்டது. இதேபோல் பெண்கள், தங்களுக்குக் கணவனாக வருபவன் உடல் பலத்துடன் இருந்தால்தான் காட்டிற்குச் சென்று, வேட்டையாடித் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தனர். இதனால், ஆண்களுக்கு உடல் பலமே அழகு என்றாகி விட்டது.  ஆனால் உண்மையில், பிறருக்குத் தீங்கிழைக்காத நல்ல மனமும், தம்மைத் தேடி வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும்தான் உண்மையான அழகு என்பதை அனைவரும் மறந்து போய்விட்டனர்’ என்றார்.மகாலட்சுமியோ, ‘இறைவா! மகாலட்சுமி என்ற எனது பெயருக்குப் பேரழகு என்று பொருள் என்று உங்களுக்குத் தெரியும். இருப்பினும் அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி என்று அனைத்துச் செல்வங்களின் தேவதையாக இருக்கும் என்னைப் பற்றிக் குறை சொல்கிறீர்கள். அழகு வெளிப்படும் இடங்களிலெல்லாம் திருமகளாக நான் இருக்கிறேன் என்பதைத் தாங்கள் அறிந்திருந்தும், என்னை அவமதிக்கும் நோக்கத்திலேயே பேசுகிறீர்கள். செல்வத்துடன் சேர்ந்திருக்கும் என்னுடைய அழகிற்கு, நீங்கள் சொல்லும் எந்த அழகும் இணையானதில்லை’ என்றார் கோபத்துடன். இதைக் கேட்டு கோபமடைந்த மகாவிஷ்ணு, ‘ஒரு பெண்ணுக்கு உடல் அழகு தேவையாக இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் கொண்டு, உண்மையான அழகினை மறந்துவிடக் கூடாது. எந்த உடல் அழகு மீது நீ அளவு கடந்த பற்று கொண்டு, என்னை எதிர்த்துப் பேசினாயோ, அந்த அழகு கொண்ட உடல் இல்லாமல், உருவமில்லாதவளாகப் (அரூபம்) போவாய்’ என்று மகாலட்சுமிக்கு சாபம் கொடுத்தார். சாபம் கொடுத்த பிறகுதான் மகாலட்சுமிக்கு சுய உணர்வே வந்தது. ‘இறைவா! என் தவறை மன்னித்து எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். அவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூமியில் ஒரு முறை செய்யும் தவத்திற்கு, ஒரு கோடி முறை தவம் செய்த பலன் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று என்னை நோக்கித் தவம் செய்தால் உனது சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும்’ என்றார். உருவம் இல்லாதவளாகப் பூலோகம் வந்து சேர்ந்தார் மகாலட்சுமி. சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதி தேவி, அந்த சாபத்தில் இருந்து மீள ஏகாம்பரேஸ்வரரை வணங்கிய இடமே, தனக்கும் சாப விமோசனமளிக்கும் இடமாக இருக்கும் என்று எண்ணினார். எனவே அந்த இடத்திற்கு வந்த மகாலட்சுமி, விஷ்ணுவை நினைத்து தவம் இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்தின் பயனாக, ஒவ்வொரு நாளும் மகாலட்சுமியின் உருவம் சிறிது சிறிதாகக் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது. தொடர் வேண்டுதலில், அவரது உருவம் முழுமையாக பிறர் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியது. தவத்தின் வலிமையால் முன்பு இருந்ததைவிட அதிகமான அழகு சேர்ந்து ஒளி வீசத் தொடங்கியது. தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மகாலட்சுமியை, வைகுண்டம் அழைத்து வருவதற்கு சரியான நாளை எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. இந்த நிலையில் விஷ்ணு வரத் தாமதமானதால், மகாலட்சுமிக்கு கவலை அதிகரித்தது.  இந்நிலையில் ஒருநாள், அந்த இடத்திலிருக்கும் பஞ்சதீர்த்தக் கரையில் பார்வதி தேவியை மகாலட்சுமி சந்தித்தார். அவரிடம், தனக்கு முழு உருவம் கிடைத்தும், விஷ்ணு தன்னை அழைத்துச் செல்லாதது பற்றி வருத்தப்பட்டார். அப்போது விஷ்ணு, மகாலட்சுமி முன்பை விட எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், மறைவான ஒரு இடத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பார்வதிதேவி, அவரைக் ‘கள்வன்’ என்று அழைத்தார். பார்வதி கள்வனென்று யாரைச் சொல்கிறார் என்று மகாலட்சுமியும் திரும்பிப் பார்த்தார். அங்கு மகாவிஷ்ணு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டுத் தலை குனிந்தார். மறைவில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, ‘தேவி! இந்தப் பூமியில் உன் அழகைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஹரிணி (பசுமையான உடல் அழகைப் பெற்றவள்), சூர்யா (கதிரவனுக்கு நிகரான ஒளியுடையவள்), ஹிரண்மயி (பொன்னிறமானவள்), ஹிரண்ச வர்ணா (பொன்னிற உடலுடையவள்), சந்திரா (நிலவுக்கு நிகரான முகமுடையாள்), ஆர்த்திரா (நீரில் தோன்றியவள்), பத்ம ஸ்திதா (தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள்), பத்ம வர்ணா (தாமரை நிறமுடையவள்), ஆதித்ய வர்ணா (சூரியகாந்தி தோற்றமுடையவள்), கரிஷிணி (பெருகும் பசுச் செல்வமானவள்), பிங்கள (செம்மை நிறம் கொண்டவள்) என்று பல பெயர்கள் உனக்குக் கிடைக்கும். இத்திருத்தலத்திற்கு வந்து உன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு அழகின் மீதிருக்கும் மோகம் குறையும்” என்று சொல்லி அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வைகுண்டம் திரும்பினார்.   உடலின் நிறம், பலம் போன்றவைகளால் கிடைக்கும் அழகு காலமாற்றத்தால் மாற்றமடையக் கூடியது. உடலின் அழகு நிலையானதில்லை. பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் விதமாக மகாலட்சுமி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன....

பதிவின் நீளம் கருதி, சென்னை அஷ்டலட்சுமி கோவில் பதிவோட லிங்க்...... 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,.
ராஜி. 

22 comments:

 1. அறியாத கதை!!! அறிந்து கொண்டோம். நல்ல குணமே அழகு என்பதைச் சொன்ன கதை அருமை!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில் வரலாறு யாருக்கும் தெரியாது .புரவசேரியில்,இருக்கும் சிவன் கோவில் ,வரலாற்று கேட்டால் எவருக்கும் தெரியாது .காரணம் எல்லாம் கதைகளே ..உண்மையில் அந்த ஊரில் இருந்த நில சுவான்தாரர்கள் தாங்கள் வழிபட கட்டிய கோவிலே ,அதெற்கென்று ஒரு வரலாறும் இல்லை ..அதேபோல் கோதைக்கிராமம் ,அது கோதிச்ச பிள்ளையார் அகரம் .அதுமருவி கோச்சபிளாரம் ஆனது .அது அசிங்கம் என கோதைக்கிராமம் ஆக்கி இருக்கிறார்கள் .உண்மையில் இராஜேந்திர சோழன் அடிக்கல் நாட்டிய கோவில் அது .பணி நிறைவையும் நேரம் .அவன் பூவுலகில் இல்லை ..இப்படி நிறைய வரலாறுகள் தெரியாமலே போய்விட்டன ;;

   Delete
  2. இந்த நிலை வர யார் காரணம் தெரியுங்களா அமிர்தா?! நீங்க சொல்லும் சித்தர்கள்தான். எத்தனை அரிய தகவல்களை மறைச்சுட்டாங்க தெரியுமா?! கேட்டா சிவரகசியத்தை வெளில சொன்னா தலை ரெண்டு படும்ன்னு சொல்லி சொல்லியே அரிய மூலிகை, அரிய ஆசனங்கள்,கடவுள்கள், அவர்களை பற்றிய தகவல்கள் நமக்கு தெரியாமயே போச்சு. தலை ரெண்டு படும்ன்னு சொன்னதுக்கு அர்த்தம் தகவலை தெரிஞ்சுக்கிட்டவங்க இரண்டாவதுதானே தவிர தலை வெடித்துடும்ன்னு அர்த்தமில்லை.

   Delete
  3. உங்கள் ஆதங்கம் சரிதான் ,அணு அதை பாமாகவும் தயாரித்து மற்றவர்களை அழிக்கலாம் ,அணுஉலையில் வைத்து எரிசக்தியாகவும் பயன்படுத்தலாம் .அதனாலதான் தகுதியானவர்க்ளுக்கு வேண்டி மறைத்தார்களே தவிர வெளிப்படுத்த தயங்கவில்லை

   Delete
  4. தகுதியானவர்களை உருவாக்காதது யார் தவறு?!

   Delete
  5. குதியானவர்கள் இல்லை என்று சொல்லவில்லையே ...வித்தைகள் சேரவேண்டிய இடத்திற்கு இறைவன் சேர்த்து கொண்டுக்குத்தான் ,இருக்கின்றான் .குறிப்பாக வாசியோகம் தெரிந்தவன் எவனும் ,தமிழ்நாட்டிலையே இல்லை ,ஆனால் வாசியோகம் பற்றி வாய்கிழிய பேசுகின்றார்கள்.வைத்தியம் அறிந்தவன் எவனும் இல்லை .ஆனால் தானும் வைத்தியன் என்று ஊரை ஏமாற்றுகின்றனர்.
   யார் தவறு என்பதை சுட்டிக்காட்டும் உங்களுக்கு ,ஒன்று சொல்ல விரும்புகிறேன்..குறிப்பாக ஒருவன் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக ,ஏற்பட்ட மனகுழப்பத்தையும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தனது மனைவி மக்கள் என்னைவிட்டு தனியாக இருக்கின்றனர் .அவர்களை சேர்த்து வை இறைவா என்று அழுது புலம்புகிறான் .அதை செவி சாய்த்த இறைவன் ,ஒரு சாஸ்திரம் தெரிந்த ஒருவனை அழைத்து ,பூஜாரியிடம் வழிமுறை சொல்ல வைக்கிறார் ,இந்த முறைப்படி அந்த பக்தனை பூஜை செய்யச்சொல் அவனுக்கு இழந்ததை மீண்டுடும் கிடைக்க செய்யும் வழியாகும் என்று உபதேசிக்க வைத்தான் .அதுவரை பூஜை மட்டும் செய்து கொண்டு இருந்த ,அந்த பூஜாரிக்கு ,மோகமும் ,பணத்தாசையும் கூடி வந்துவிட்டது .இந்த பூஜையை பக்கத்தில் வசிக்கும் ஒரு செல்வந்தனின் குடும்பத்தில் செயல் படுத்தினால் என வென்று பூஜையை அந்த பூஜாரி டெஸ்ட் செய்து பார்த்தான் .அனைத்தும் அறிந்த இறைவன் இதனை அறியாமல் இருப்பானா ,ஒரு பூஜைமுறையை தவறாக பயன்படுத்தியமைக்காக அவனுக்கு கிடைத்த பலன் அவனுடைய செல்வத்திற்கு வழி செய்த பூஜாரி வேலையும் , பிறன் மனை நோக்கிய குற்றத்திற்கு அவன் மனை அவனை விட்டு ,எஞ்சிய வாழ்நாள்முழுவதும் அவன் செய்த தவறை உணர்ந்து கழிக்க செய்தான் .இதிலிருந்து என்ன தெரிகிறது ,ஒருவனை காப்பாற்ற செய்ய செய்யும் செயல் இனி ஒருவனையும் அழித்து விடும் அளவு இந்த மனிதர்கள் ,காம ,குரோத ,பகை ,பணம் என்று கெட்ட எண்ணங்களை வெளியிட்டு சமுதாயத்தையே ,தீய புகை எண்ணங்களால் நிறைத்து விட்டனர் .அதை சரி செய்ய என்ன வழி ,ஒரு ஊழிக்காலம் வந்து அனைவரையும் அழித்து புதிய சமுதாயத்தை ஏற்படுத்துவதுதான் .

   அதற்கும்

   உடனே அதை ஏன் இப்பொழுது செய்யவில்லை உங்கள் கடவுள் என கேட்பீர்கள் ..


   அவனவன் தன்னை சுற்றி பேராசை என்னும் கயிற்றால் இருக்க சுற்றி கட்டி இருக்கிறான் .அந்த பேராசை முதலில் ,தண்ணீரிலே கிடந்த ஆமையானது ,அதை பிடித்து உண்ணும் குரோத எண்ணமுள்ள கயவனின் சுடுநீர் பாத்திரத்தில் ,இளம் சூட்டை அனுபவிக்கும் ஆமையை போன்று சுகத்தில் இருக்கும் ,பின்னர் சூடு ஏறி கொதிக்கும் வெந்நீரில் அழிந்து போகும் போது.இறைவன் வெளிப்பட்டு ,இளம் சூட்டிற்கு ஆசைப்படாத ஆமையையும் ,அதைப்பிடித்து உண்ணும் மனநிலை இல்லாத ஆட்களையும் படைப்பான் ,அப்பொழுது இறைவனே பூமியில் நல்லாட்சி புரிவான் .கடவுள்கள் நடமாடிய காலம் போய்,இன்று கடவுளே பொய் என்று சொல்லும் காலம் இது .இதில் எங்கிருந்து தகுதியானவர்களை உருவாக்க ...சொல்லுங்கள் ஆரணியாரே ....

   Delete
 2. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 3. படங்கள் கவர்கின்றன. தகவல்கள் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. படங்களை தேடித்தேடி ஓய்ந்து போகின்றேன் சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 4. நவராத்திரி என்பது வேறு யாருக்கும் ,அல்ல இந்த பூவுலகில் உலவுவது அனைத்தும் கட்டுக்கதைகளிற் ,ஆதி பரம்பொருளின் .துணையான ஆதிசக்தியே இதன் நாயகி ,அவளில் ஒடுங்கியவர்களே மீதி அனைவரும் ,முத்தொழில் புரியும் மேனேஜர்களான ,ருத்திரன் ,பிரமன் ,நாராயணன் ,இவர்களின் துணை சக்திகள் எல்லாம் அந்த ஆதி பரம்பொருளின் ஆதிசக்தியினுளடக்கம் ,இங்கே சிவமே யாருக்கும் தெரியவில்லை ,ருத்திரனை சிவமாக வணங்கு கின்றனர் ...எல்லாமே பொய் கதைகளாக இருக்கிறது சித்தனுக்கு மட்டுமே உண்மை தெரிவதால் ,அவர்களை ஆதிபரம்பொருளின் கோவிலான அண்ணாமலைக்கு தவம் இருக்கிறார்கள் ...உண்மை வெளிவரும் காலம் வரும் ..போலிகள் எல்லாம் மறைந்துவிடும் ...

  ReplyDelete
  Replies
  1. உண்மை வெளிவந்தால் எனக்கும் சந்தோசமே!

   Delete
 5. Replies
  1. ஓட்டு லட்சுமிக்குதானா?! எனக்கில்லையா?!

   Delete
 6. மகாவிஷ்ணுவை, மகாலட்சுமி அடைந்த விதம் அறிந்தேன். லட்சுமி என்று உச்சரிக்கும்போதே மனம் அடையும் நிம்மதியும் சுகமும் அதிகம். தம+1

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பணம் பெரிசில்லைன்னு வாய் உச்சரித்தாலும் கையில், பையில் பைசா இருந்தா வரும் தைரியமே தனிதான்.

   Delete
 7. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 8. படஙஃகள் அருமை! த ம 8

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றிப்பா

   Delete
 9. உண்மை வெளிவரும்போது வரவே வராது போல் இருக்கிறதே வெளிக்கொணர செய்யும் முயற்சிகள் விரயமாகிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மை கண்டிப்பா ஒருநாள் வெளிவந்தே தீரும்ப்பா

   Delete