இன்னிக்கு ஒரு பர்த்டே பங்க்ஷன், கல்யாணம், காட்சின்னா உடனே படமெடுத்து ஆல்பமாக்கிக்கிறோம். சமூக வலைத்தளத்தில் படங்களை ஷேர் செஞ்சு சந்தோசப்பட்டுக்கிறோம்.. ஆனா, அந்த காலத்தில்?! போரில் வெற்றின்னா கோவில் கட்டுவாங்க. கர்ப்பிணி பெண் பிரசவிக்க முடியாம இறந்தால் ஊர்க்கோடியில் சுமைதாங்கி கல், போரில் இறந்தால் நடுகல் நட்டு தங்களது நினைவை சேமிச்சு வச்சாங்க. அந்த சேமிப்பின்மூலம் அவங்க சுகதுக்கங்கள் மட்டுமல்லாம பண்பாடு, கலாச்சாரம், கலைகள், பழக்க வழக்கங்களையும் சேமிச்சு தலைமுறைகள் தாண்டி வரும் எதிர்கால சந்ததியினர் தெரிஞ்சுக்க ஒரு கடத்தியாவும் இவைகளை பயன்படுத்தினாங்க. ஆனா, நாம?! பழங்கால நினைவுசின்னங்களை பாதுக்காக்குறதில்லை. பாதுகாக்கலைன்னாலும் பரவாயில்ல. அந்த இடங்களுக்கு போய் குடிக்குறது, சிலை இருந்தால் அதை உடைக்குறது, பெயிண்ட்ல பேர், போன் நம்பர் எழுதுறதுன்னு கண்ட கருமத்தையும் செஞ்சு பாழ்படுத்துறோம். அதனால, நினைவு சின்னங்களாய் இருக்க வேண்டிய இடங்கள் வெறும் எச்சங்களா இருக்கு.

ஆற்காடு, செய்யாறு பைபாஸ் சாலையில் இருக்கு டெல்லி கேட். ஆற்காடு பாலத்தின் வலப்பக்கத்தில் சுமார் இரண்டு கி.மீ தூரத்திலிருக்கு இந்த டெல்லி கேட். சென்னைல இருந்து 90கிமீ தூரத்திலும், வேலூரிலிருந்து 22 கிமீ தூரத்திலும் ஆரணில இருந்து 25கிமீ தூரத்திலும் ஆற்காடு இருக்கு. இந்த ஊரில் மக்கன்பேடாவும் அரிசியும்கூட பிரசித்தம். ஆற்காட்டில் டெல்லிகேட்டா?! இந்த பெயருக்குப்பின் பல வரலாற்று உண்மைகள் மறைஞ்சிருக்கு. ராபர்ட்கிளைவ் இந்த பேரை நினைவிருக்கா?! எட்டாவது, ஒன்பதாவது பாடப்புத்தகத்தில் சில பத்திகளில் இவரை பத்தி படிச்சிருக்கோம். அவருக்கும், இந்த இடத்துக்கும் இருக்கும் சம்பந்தமே டெல்லி கேட் என பேர் உருவாக காரணமா இருந்துச்சு. அவர் கட்டிய கோட்டையின் மிச்சம் மீதியைதான் இன்னிக்கு மௌனச்சாட்களில் பார்க்க போறோம்.

ராபர்ட் கிளைவின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. 1725ம் ஆண்டு பிறந்த ராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, அத்தை வீட்டில் வளர்ந்தவர். க்ளைவ் இளைஞனானதும் வீட்டுக்கு அடங்காமல் பொறுக்கியாக திரிந்தார். தன் நண்பர்களோடு சேர்த்துகொண்டு டிரைட்டன் சந்தையில் உள்ள கடைகளில் மிரட்டி மாமுல் வசூலித்து பொழுதை கழித்து வந்தார். இரண்டு முறை ஜெயிலுக்கு போய் வந்த இவரை, இம்சை தாளாமல் அவர் அப்பா ரிச்சர்ட் க்ளைவ், இந்தியாவிலுள்ள கிழக்கிந்திய கம்பெனிக்கு கிளார்க் வேலைக்கு அனுப்பினார்.
தனது 18 வயதில் இந்தியாவிற்கு வந்த ராபர்ட் க்ளைவுக்கு சம்பளம் இந்திய மதிப்பில் 50ரூ. கிளார்க் வேலை பிடிக்காம ஒருமுறை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், மேலதிகரிகளால் கடுமையாய் எச்சரிக்கப்பட்டு சென்னை கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னைக்கு வந்தும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் ராபர்ட் க்ளைவ்.

ராபர்ட் க்ளைவுக்கு இந்திய வெப்பநிலை செட் ஆகாம கடுமையா மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த நேரத்தில் இரவு கடலூர் தேவனாம்பட்டினம் அருகே போர் ஆரம்பமானது. பிரெஞ்சு படையை எதிர்க்க தயார் நிலையில் பிரிட்டிஷார் இருந்தாலும் பிரெஞ்சு படையின் எண்ணிக்கையை ஒற்றர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷார் கொஞ்சம் தயங்கினர். அந்தநேரத்தில், எந்த போர் பயிற்சியும் இல்லாத ராபர்ட் கிளைவ் இருளான சூழலைப் பயன்படுத்தி சாதுரியமாக செயல்பட்டு பிரெஞ்சுகாரர்களின் பின்புறம் வந்து, சில வெடிகுண்டுகளை திடீரென வெடிக்க செய்ததில் பிரெஞ்சு வீரர்கள் குழப்பத்தில் சிதறுண்டு ஓடினர். அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ் படை வீரர்கள் பிரெஞ்சு சிப்பாய்களை வேட்டையாட ஆரம்பித்தனர். பிரெஞ்சுகாரர்கள் பின்வாங்கி உயிர் பிழைத்து ஓடியதே பெரிய காரியமானது. இந்த செய்தி இங்கிலாந்து அரசர் வரை சென்றது. இந்த நிகழ்வுக்கு பின் ராபர்ட் க்ளைவ் படிப்படியாய் உயர்ந்து சென்னை கிளையின் மேஜர் ஜெனரலானார்.

அப்போது, ஆற்காட்டை தலைநகராக கொண்டே மொகலாய சாம்ராஜ்யத்தின் கர்நாடக பகுதிகளின் பிரதிநிதியாக ஆற்காடு நவாபுகள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர். அப்போது, மைசூரை உடையார் அரச வம்சமும், ஐதராபாத் பகுதியை நிஜாம்களும், திருவிதாங்கூரை கேரள வர்மாக்களும் ஆட்சி செய்து வந்தனர். அப்போது சென்னையில் வர்த்தகம் செய்து வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மெல்ல மெல்ல இந்திய சமஸ்தானங்களில் நடந்து வந்த குழப்பத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதில் இறங்கினர்.
அதேபோல் கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியா பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டச்சு கிழக்கிந்திய கம்பெனிகளும் இந்தியாவை அரசாள களமிறங்கின. கி.பி.1749ல் ஆம்பூரில் நடந்த போரில் ஆற்காடு நவாப் அன்வருதீன்கான் மரணமடைந்தார். இதையடுத்து ஆற்காடு நவாப் சிம்மாசனத்தை பிடிப்பதில் முகமதுஅலி, சந்தாசாகிப் இடையே பங்காளி சண்டை உருவானது. இந்த போட்டியில் அன்வருதீனின் இளைய மகன் முகமதுஅலி திருச்சியில் நவாப்பாக முடிசூட்டிக் கொண்டார்.

திருச்சியை தவிர மற்ற கர்நாடக பகுதிகள் சந்தாசாகிப், முசாபர்ஜங் வசமாகியது. சந்தாசாகிப்புக்கு பிரஞ்சுகாரர்களும், முகமது அலிக்கு ஆங்கிலேயர்களும் துணை நின்றனர். கி.பி 1750ல் திருவதிகையில் நடந்த போரில் பிரெஞ்சு படை முகமதுஅலியையும், ஆங்கிலேயர்களையும் தோற்கடித்தது. அதே ஆண்டில் யுத்தநேந்தல் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் முகமதுஅலி, ஆங்கிலேயர் மற்றும் ஐதராபாத் நிஜாம் நசீர்ஜங் ஆகியோரின் படைகளை பிரெஞ்சு படைகள் தாக்கி வெற்றி கண்டன. இந்த போரில் திருச்சி கோட்டைக்கு தப்பியோடிய முகமதுஅலி அங்கு ஒளிந்து கொண்டார். இதனால் பிரஞ்சு படைகள் உதவியுடன் திருச்சியை முற்றுகையிட சந்தாசாகிப் அங்கு விரைந்தார். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முடிவு செய்தது. இதையடுத்து ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படை 500 ஆங்கில படைவீரர்கள், 300 உள்ளூர் சிப்பாய்களுடன் ஆற்காட்டை 53 நாட்கள் முற்றுகையிட்டு அதை கைப்பற்றியது.

இதற்காக கி.பி 1751ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ராபர்ட் க்ளைவின் படைகள் காஞ்சி நகரை விட்டு கிளம்பிய போது, காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதை பொருட்படுத்தாத ராபர்ட் க்ளைவின் படைகள் சந்தாசாகிப்பின் ஆற்காடு கோட்டையை நோக்கி ஆவேசத்துடன் முன்னேறின. ஆங்கிலேயர்களின் கடும் தாக்குதலால் நவாப்பின் வீரர்கள் சிதறி ஓடினார்கள். ஆங்கிலேயர்கள் சந்தாசாகிப்பின் வீரர்களை ஆற்காடு தெருக்களில் விரட்டியடித்தார்கள்.
முகமதுஅலிக்கும், சந்தாசாகிப்பிற்கும் நடந்த உரிமைப்போரின் இறுதியில், கி.பி 1751ம் ஆண்டு ராபர்ட்கிளைவ் ஆற்காடு ஆலம்பானா கோட்டையை கைப்பற்றினார். இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட வடக்கே நெல்லூர் வரை பிரிட்டிஷாரின் வசம் வந்தது. இரவில் கிடைத்த இந்த வெற்றி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் அமைவதற்கு வித்திட்டது. பாலாற்றங்கரையில் அமைந்துள்ள டெல்லி கேட் என்னும் உயர்ந்த இந்த நுழைவாயிலே, ஆற்காடு கோட்டையின் பிரதான நுழைவாயிலாக விளங்கியது.
கட்டடத்திற்குப் பின்புறம் திப்பு சுல்தான் 1783ல் போர்வெறியில் உடைத்த கட்டட உறுப்புகள் மண்ணில் பாதி புதைந்து கிடக்குது. இந்த டெல்லிகேட் இரண்டு தளங்களை கொண்டிருக்கு. கீழ்தளத்தில் இருக்கும் நுழைவாயில் இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டிருக்கு. இந்த வாயிலின் இருபுறமும் காவலர்கள் தங்குவதற்கான அறைகள் இருக்கு. நுழைவு வாயிலின் வெளிப்புறம் பாலாற்றை ஒட்டியுள்ள பகுதியிலும் சிறு சிறு அறைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கு.
வாயிலின் மேல்தளத்தில் ஓர் அறை இருக்கு. இது எதிரி படைகள் வருவதை வேவுபார்க்கும் வகையில் இருக்காம். நான் போனபோது பூட்டி இருந்ததால் மேல போகமுடில டெல்லி கேட் இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்குன்னு போர்ட் சொல்லுது. ஆனா, அங்க எந்த பணியாளர்களும் இல்ல. நான் போனபோது ரெண்டு தமிழக ‘குடி’மகன்கள்தான் நல்ல போதையில் உறங்கிட்டிருந்தாங்க. நானும் என் சின்ன பொண்ணும் போனதும் தலையை தூக்கி பார்த்துட்டு உறக்கத்தை கண்டினியூ......
முகாநூலில் சுட்ட படமிது. டெல்லி கேட்டின் மேல் தளத்தில் இருக்கும் அலங்கம். அலங்கம்ன்னா, எதிரிப் படைகள் வருவதை மறைந்திருந்து வேவுபார்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அமைப்பு. இதுக்கு கிளிக்கூண்டு அலங்காயம்ன்னும் சொல்வாங்க. கிளிக்கூண்டு அமைப்பிலிருக்கும் இதில் ஓராள் மறைஞ்சிருந்து வேவு பார்க்கலாம். உள்ள இருக்கவுங்களுக்கு வெளில இருப்பதை பார்க்க சிறு சிறு ஓட்டைகள் இருக்காம். இதுமாதிரியான அமைப்பு விழுப்புரம் செஞ்சிக்கோட்டையில் இருக்கு.
நாங்க போன நேரம் குருதையோ, குதிரையோ இங்க மேய்ஞ்சிக்கிட்டிருந்துச்சு. ராபர்ட் க்ளைவ் நவாப் படையை எப்படி தூள் தூளாக்கினான் என்பதை இங்கிருக்கும் சுவர்கள், விரிசல்களின்மூலம் சாட்சியம் சொல்கின்றன.
கட்டிடத்தின் உச்சியில் மேல்தளத்தில் ராபர்ட் க்ளைவ் தங்கி இருந்ததாய் சொல்லப்படும் அறை ஒன்று இருக்கு. எங்கிருந்தோ வந்து இங்கு தங்கியிருந்த வெள்ளைத் தோல் மனிதன், பாரதநாட்டினர் பேசும் மொழி புரியாவிட்டாலும் நவாபின் பதவி ஆசை, நம் மக்களின் இனம் மத, சாதி,மொழி வெறியுடன்கூடிய ஒற்றுமையின்மையை இங்கிருந்துதானே புரிந்துக்கொண்டான் என நினைக்கும்போது இனம்புரியா வலி மனசில் ஏற்படுவதை தடுக்க முடியலை. இன்னிய வரைக்கும் ஒற்றுமையின்மைதான் நமது பிரச்சனைன்னு நம் மக்களுக்கு புரியவே இல்லைன்ற ஆதங்கமும் எழாமலில்லை.
ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் என்றுமே ஒன்றுதான் போல! தங்களது பதவி நிலைக்க யாருக்கு, என்ன கொடுக்கனும், எப்படி கொடுக்கனும்ன்னு நல்லாவே தெரிஞ்சிருந்து என்ன சொன்னா முடிய பிடிச்சிக்கிட்டு சண்டை போடுவாங்கன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஆட்சி பிடிக்குறாங்க. அதுக்கு முன்னோடி இந்த ராபர்ட் க்ளைவ்தான் போல!
நெட்டில் சுட்ட படமிது. வேலூர் கோட்டையிலிருந்து தொடங்கும் சுரங்கம் இங்க முடியுதாம். இந்த சுரங்கத்தின் வழியாகத்தான் திப்பு சுல்தானின் மகன்கள் தப்பி வந்ததா சொல்லப்படுது. பதிவு முடியும் நேரம் வந்திட்டுது. இன்னமும் டெல்லி கேட்டுக்கு அர்த்தம் சொல்லலைதானே!? கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க காரணமான முதல் வெற்றி இங்கு கிடைத்ததால்ன்னும், இங்கிருந்து டெல்லி செங்கோட்டை வரை சுரங்கபாதை இருப்பதாலும் இதுக்கு டெல்லி கேட்ன்னு பேர் வந்ததாக சொல்றாங்க. ஆனா, ராபர்ட் க்ளைவ், தனது முதல் வெற்றிக்கு பின், ’இந்தியா முழுமையையும் கிழக்கிந்திய கம்பெனிவசம் கொண்டு வருவேன்’ என இங்கிருந்து சபதமெடுத்ததால் இந்த இடத்துக்கு டெல்லி கேட் என பேர் உண்டானது.

பரந்து விரிந்த பாலாற்றங்கரையில், கருங்கல்லின்மீது எழுப்பப்பட்ட செங்கல்லால் ஆன கட்டடமிது. அன்று, குதிரைப்படையும் போர் வீரர்களும் வேலியாய் இருந்த இவ்விடம் இன்று வேலிக்காத்தான் செடிகள் நிறைஞ்சிருக்கு. இது ஒரு காலத்தில் ரத்தபூமியாக்கும்ன்னு சொல்லாமல் சொல்லுது இங்கிருக்கும் பெயர் தெரியாத ரத்தநிற காட்டுப்பூக்கள். ஆள் நடமாட்டமில்லைன்னாலும், ஊருக்கு ஒதுக்குபுறமா இருந்தாலும் சுத்தமா இருக்கு இந்த இடம். களைப்பு தீர கொஞ்சநேரம் மதில் சுவத்து மேல உக்காந்திருக்கையில், சிறிது நேரத்தில் பீரங்கி அலறலும், மனிதர்களின் போர்வெறிக்குரல்களும், ரத்தவாடையையும் உணரும்போதில், மதிய வெயிலில் பிராய்லர் கோழியின் வெண்ணிற இறகும், கெட்ட வாடையும் காற்றில் பறந்து வந்து என்னை நிழல் உலகத்துக்கு கொண்டு வந்தது. ஒரு மனிதனின் மண்ணாசைக்கு, மக்களுக்குள் ஒற்றுமை இல்லன்னா என்ன கதிக்கு ஆளாக வேண்டி வரும்ன்னு அந்த பக்கம் போவோருக்கும், வருவோருக்கும் சாட்சியம் சொல்லியபடி மௌனமாய் புத்தம்புது சுண்ணாம்பு பூச்சோடு நின்னுக்கிட்டிருக்கு டெல்லி கேட்.
நன்றியுடன்,
ராஜி