Wednesday, November 29, 2017

மலையில் இறைவனை காணலாம்.. மலையே இறைவனாய் நின்று அருளும் அதிசயம்திருவாரூர்ல பிறந்தா முக்தி, சிதம்பரத்துல வாழ்ந்தா முக்தி, காசில இறந்தா முக்தி. பிறப்பு நம்ம கைல இல்ல. ஆனா, வாழுறதும், சாகுறதும் கொஞ்சம் மெனக்கெட்டா முடியும். ஆனா, அதுக்கும்  கடவுள் அருள் முக்கியம். ஆனா, நினைத்தாலே முக்தி தரும் இடம் ஒன்னு இருக்கு. அதுதான் திருவண்ணாமலை.  நினைச்சாலே முக்தின்றதால, அங்கிருக்கும் தியேட்டர், ஹோட்டல், தெரு, கோவில், பிரசாதம்ன்னு அர்த்தமில்ல, இறைவனை உள்ளன்போடு நினைக்கனும். அவனே கதின்னு சரணாகதி அடைஞ்சு அவன் தாள் பணியனும். அப்பதான் முக்தி கிடைக்கும்...


திருவண்ணாமலை... மனதார உச்சரித்தாலே முக்தியை தருவதோடு, ஆன்மீக அன்பர்களுக்கு உற்சாகத்தையும் தரவல்லது. மத, இன, மொழி கடந்து அனைவரையும் தன்பால் ஈர்க்கும் இத்திருவண்ணாமலையின் சிறப்புகளை பல புராணக்கதைகள் சொல்லி செல்லும். ம்ஹூம், நான் நாத்திகன்ப்பான்னு சொல்றவங்களையும் சமாதானப்படுத்த திருவண்ணாமலையின் சிறப்பு ஒன்று உண்டு. அது என்னன்னா,  கேலக்சி உருவானபோது, நெருப்பா இருந்த கோளம் குளிர்ந்து  பூமி உருவானபோது முதல்ல தோன்றிய இடம் திருவண்ணாமலை. இம்மலையில் இருக்கும் பாறைகள் மிகப்பழமையானதுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. திருவண்ணாமலையின் உயரம் 800 மீட்டர். ஆழம் இன்னும் கணக்கிடப்படல. உச்சில இம்மலையின் சுற்றளவு வெறும் 20 அடிதான். இம்மலையின் வயது சுமார் 260 கோடி ஆண்டுகள் என டாக்டர் பீர்பால் சகானி  ன்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார். பால் பிரண்டன் ன்ற ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா ன்ற நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை"ன்னு சொல்லி இருக்கார். 


திருவண்ணாமலை ஒரு காந்தம்போல, ஒருமுறை வந்து செல்வோரை மீண்டும் மீண்டும் தன்பால் ஈர்க்கும் சக்தி கொண்டது. கைலாயம், வெள்ளியங்கிரி, சதுரகிரி, பர்வதமலைன்னு ஈசனை மையமா வச்சு புனிதமான மலைகள் எத்தனையோ இருக்கு, ஆனா, ஈசனே மலையாய் மாறி நமக்கு அருள்புரிவது திருவண்ணாமலை மட்டுமே.  திருவண்ணாமலையே ஸ்ரீமேரு வடிவமானது.  மனித உடலில் இயங்கிக்கிட்டிருக்கும் சக்தி மையத்தை டாப் ஆங்கிள்ல பார்த்தா முக்கோண வடிவிலும், அதற்கிடையே கோடுகளும் நிறைஞ்சதா இருக்கும்ன்னு அறிவியலாளர்கள் சொல்றாங்க. சூட்சும வடிவில் இருக்கும் இந்த விசயத்தை ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும் புரிஞ்சுக்கிட்டது மாதிரி எளியவர்களும் புரிஞ்சுக்கனும்ன்னுதான் ஸ்ரீசக்கரமா தகடுகளில் வரைஞ்சு வச்சாங்க.ஸ்ரீசக்கரத்தோட மையத்தை மேருன்னு சொல்வாங்க. சரி, ஸ்ரீசக்கரம், மேரு மலை, திருவண்ணாமலை.. இம்மூன்றையும் இணைக்கும் மையப்புள்ளி எதுன்னு பார்த்தா, திருவண்ணாமலை, இயற்கையாவே அமைஞ்ச மேரு வடிவிலான மலை. அடுக்கடுக்கா அமைஞ்சு, கூம்பு வடிவம் மாதிரியான மலை இது. இந்தியாவிலேயே திருவண்ணாமாலை மட்டுமே, இதுமாதிரியான உருவ அமைப்போடு இருக்கு. இதனாலதான், திருவண்ணாமலைக்கு ஸ்ரீசக்கரகிரின்னும் பேர் உண்டு. நம்பிக்கை இல்லாதவங்க, கூகுள் மேப்ல மேலிருந்து திருவண்ணாமலைய பார்த்தா இதன் உண்மையினை அறியலாம். அதனாலதான், திருவண்ணாமலையை நோக்கி ஆன்மீக அன்பர்கள் அதிகம் வர்றாங்க. அதுமட்டுமில்லாம இங்கு ஏகப்பட்ட சித்தர்கள் இன்றும் உலா வர்றதா சொல்றாங்க.


எல்லாம் சரிதான்ம்மா, ஆனா, அப்படி தவம் செய்ய இந்த காடுகளையும், மலைகளையும் நோக்கி முனிவர்களும், சித்தர்களும் போவதேன்!? பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும்ங்குற மாதிரி திருவண்ணாமலைக்கு வருவதேன்னு நீங்க கேட்கலாம்..  இதுவே, சாதாரண பதிவா இருந்தா பொண்டாட்டி, புள்ளை, கடன் தொல்லை தாங்காமன்னு சொல்வேன். ஆனா, இது ஆன்மீக பதிவு. அதும் திருவண்ணாமலை பத்திய பதிவு. ஏற்கனவே எனக்கும்,  மிஸ்டர். அருணாச்சலேஸ்வரருக்கும் வாய்க்கா வரப்பு தகராறு இருக்குறதால, உண்மையான காரணம் சொல்றேன். இதயத்திலிருந்து ரத்தத்தை நரம்புகள் நம் உடல் முழுக்க கொண்டு செல்லும். அதேமாதிரி உடல்ல இருக்கும் நாடிகள், ஆற்றலை உடல் முழுக்க கொண்டு செல்லும்.  நாடி உங்களை இயக்குனா நீங்க மனிதன்.  நாடியை நீங்க இயக்குனா நீங்க ஞானி.  இடப்பக்கம் சுவாசம் இருக்கும்போது  வலப்பக்கம் உடல் இயங்கும். வலப்பக்கம் சுவாசம் இருக்கும்போது இடப்பக்க உடல் இயங்கும். ரெண்டும் சமமா இயங்க ஆரம்பிச்சா அதுக்கு சூட்சும நாடின்னு சொல்லுவாங்க.  அந்த சூட்சும நாடி, இந்த மாதிரியான மலை, காடுகளுக்கு வரும்போது வேலை செய்ய ஆரம்பிக்கும். அதனாலதான், காடு, மலைன்னு சாமியார்கள் சுத்திவர காரணம், இதுமாதிரியான சூட்சும நாடி செயல்படுறவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும். அதனாலதான், நம்மளை மாதிரியான சாரி, என்னைய மாதிரியான ஆட்கள் கிரிவலம் வர்றதுக்கான காரணம். நம்ம உடம்புல எனர்ஜிட்டிக் பாயிண்ட்ன்னு அக்குப்பஞ்சர் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுற மாதிரி, பூமியின் எனர்ஜிட்டிக் பாயிண்டுன்னு இந்த திருவண்ணாமலையை ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. எனர்ஜிட்டிங் பொங்கி வழியும் இந்த இடத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்தா யோக வாழ்க்கை கைக்கூடும்ங்குறதாலயே ஆன்மீக அன்பர்கள் திருவண்ணாமலையை தேர்ந்தெடுக்குறாங்க. 

(கார்த்திகை தீபத்தின்போது தமிழக அரசு போக்குவரத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்)

திருவண்ணாமலை வெறும் கருங்கல், மண்ணால் உருவான மலை அல்ல. அதற்குள் பிரம்மலோகம் உள்ளது என்பது நம்பிக்கை. சுமார் 50 வருடங்களுக்கு முன் அண்ணாமலையார் கோவிலில் இரவு முழுக்க தியானித்திருந்த சுஜாதா சென் என்ற ஆங்கிலேய பெண் மலைக்குள்ளிருக்கும் பெரிய உலகத்தை கண்டதாக சொன்னார், ஆனால், அன்று அவரின் பேச்சை யாரும் நம்ப தயாரில்லை.   கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரம்மலோகம் உள்ளதென்பது ஐதீகம். மீண்டும்  சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவரும், தானும் இதுமாதிரியா உலகத்தையும் கடவுளையும் கண்டதாக கூறியதோடு, தான் பார்த்த உலகமும் சுஜாதா சென் பார்த்ததாக சொல்லப்பட்டதும் ஒத்துப்போனதை வியந்து குறிப்பிட்டுள்ளார்.  கிருதா யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்,  கலியுகத்தில் கல்மலையாகவும் இம்மலை உருவெடுத்துள்ளது. 

பஞ்சபூதங்களை அடக்கி ஆளும் ஈசன் அருளும் பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது . சிதம்பரம் ஆகாயம், காளஹஸ்தி காற்று, திருவானைக்காவல் நீர், காஞ்சிபுரம் நிலம் என அருள்புரிகிறான். யார் பெரியவன் என்ற வாதம் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்குமிடையில் எழுந்தது, தங்கள் ஐயத்தை தீர்த்துக்கொள்ள, ஈசனிடம் சென்று முறையிட்டனர். என் அடியையோ அல்லது முடியையோ எவர் முதலில் தரிசிக்கின்றாரோ அவரே பெரியவர் என ஈசன் கூறி வானுக்கும், மண்ணுக்குமாய் தீப்பிழம்பாய் நின்றார். பிரம்மன் அன்னமாக மாறி முடியை காணவும், விஷ்ணு பன்றியாய் மாறி அடியை காண பூமியை பிளந்து சென்றார். யுகங்கள் பல கடந்தும் இருவராலும் அடி, முடியை காணவில்லை. தனது தோல்வியை உணர்ந்து ஈசனை நாடி விஷ்ணு திரும்பி வந்தார். ஆனால், தன் தோல்வியை உணர்ந்த பிரம்மா என்ன செய்வதென திகைத்திருந்த வேளையில், சிவனின் தலையிலிருந்து கழன்று விழும் தாழம்பூவிடம், பெண்ணே! ஈசனின் முடிக்காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமென கேட்டார். நான் பல யுகமாக பயணித்தும் இன்னும் பூமியை வந்து சேரவில்லை. அதனால் நீங்களும் ஐயனின் முடிக்காண இன்னும் பல யுகம் ஆகும் என உரைத்தது. தாழம்பூவின் பேச்சைக்கேட்டு அயர்ந்த பிரம்மன், தாழம்பூவிடம் தனக்கு உதவுமாறு கேட்டு, இருவரும் ஈசனிடம் வந்து தான் முடியை கண்டதாகவும், அதற்கு சாட்சி இந்த தாழம்பூவே என வாதிட்டார் பிரம்மன்.. உண்மையை உணர்ந்த ஈசன் கோபமடைந்து இனி தனிக்கோவில் பிரம்மனுக்கு இருக்காது எனவும், தனது பூஜையில் இனி தாழம்பூக்கு இடமில்லை எனவும் சாபமிட்டார்.

அண்ணா ன்ற சொல்லுக்கு நெருங்க முடியாதவன்னு பொருள். அடிமுடி காணா நெருப்பு மலையாய் ஓங்கி உயர்ந்து நின்றதால் இத்தலத்துக்கு திரு அண்ணாமலை என்று பெயர் உண்டானது.. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் நெருப்பு பிழம்பாய் காட்சியளித்த இடத்தில்தான் இன்று அண்ணாமலையார் கோவில் உள்ளது.  பார்க்க லிங்கம் போல் காட்சிதரும் இம்மலையானது, இம்மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தரும்


பிருங்கி முனிவரை பொறுத்தமட்டில் ஈசன் ஒன்றே தெய்வம். அவனின்றி எவரையும் தெய்வமாய் ஏற்காதவர். தினமும் கைலாயம் செல்வார். ஈசனை மட்டும் வணங்குவார்.  அம்பாள் உட்பட எவரையும் வணங்க மாட்டார், இதனால், வருத்தமுற்ற பார்வதி, அவருக்கு சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த,  சிவன் அம்பிகையை பிரிந்து சென்று, தவமிருந்தவளுக்கு தன் இடப்பாகத்தை தந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்தது இத்தலத்தில்தான். சக்தி இல்லையேல், சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லைன்னு உலகுக்கு பாடம் புகட்டும் தலம் இது, 


அருணகிரி, அண்ணாமலை, அருணாச்சலம், அருணை, சோனகிரி மற்றும் சோனாச்சலம் ன்ற பெயராலும் இம்மலை அழைக்கப்படுது. சமயக்குறவர் என அழைக்கப்படும் நால்வரால் பாடல் பெற்ற தலமிது. ரமணர், விசிறி சித்தர், காட்டு சிவா சித்தர், இடக்காடர், குகைநமச்சிவாயர், சேஷாத்திரி சுவாமிகள் உள்ளிட்ட பல சித்தர்களும் இங்கு இறவனை வழிப்பட்டு முக்தி அடைந்தனர். இளையராஜா, ரஜினி மாதிரியான பிரபலங்கள் அண்ணாமலையாரின் தீவிர பக்தர்கள்.  ஒவ்வொரு பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது வழக்கம்,  கர்ப்பிணி பெண், தன் வயிற்றில் இருக்கும் சிசுவின்மீது எத்தகைய கவனத்தைக்கொண்டு அடியெடுத்து வைப்பாளோ அதுமாதிரி, இறைவனை மனதில் இருத்தி கிரிவலம் வருதல் வேண்டும்.  திருவண்ணாமலை கோவிலின் சிறப்புகளையும், கிரிவலம் பத்தியும்  விரிவா வெவ்வேறு பதிவில் பார்க்கலாம்.திருவண்ணாமலைக்கு வர திருச்சி, மதுரை, கோவை,சேலம், ஈரோடு, திண்டிவனம், விழுப்புரம், சென்னை, பெங்களூரு, திருப்பதி உட்பட பல ஊர்களிலிருந்து நேரடி பேருந்து உண்டு. ரயில் மார்க்கமாவும் வரலாம். இல்ல விமானத்துலதான் வருவேன்னு அடம்பிடிச்சா கொஞ்ச நாள் வெயிட் செய்ங்க. இப்பதான் விமானசேவை தொடங்கலாமான்னு அரசு யோசிச்சிங்க். இல்லன்னா, சென்னை, பெங்களூரு, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலின்னு விமானத்தில் வந்திறங்கி பஸ் பிடிச்சு வாங்க. கப்பல்ல வரனும்ன்னா.. நோ சான்ஸ்....  எங்க ஊர்ல கடல் இல்ல :-(


அடிமுடி காண இயலா பெருமான்.
அருவாகி இருக்கும் சூட்சும இறைவன்,
உருவாகி இருக்கும் நடராஜா பெருமான்,
அரு,உருவாகி எங்கும் கோயில் கொண்ட லிங்கேஸ்வரர்.
ஒலியாய்,செவிகளை நிறைக்கும் பஞ்சாட்சரம்,
பேரொளியாய்,சோதிவடிவாய் இங்கே அண்ணாமலையார்,
எங்கெங்கு ,எவ்வழி,எல்லா ரூபமும் கொண்ட எம்பெருமானுக்கு,
தென்னாடுடைய சிவனே போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ,
என்று உலகம் உய்ய அவன் மலர் பாதம் பணிந்து போற்றிடுவோம்


நன்றியுடன்,
ராஜி


14 comments:

 1. இளையராஜா ரஜினி போன்ற பிரபலங்கள் சென்றால் இறைவனை சுலபமாக காண முடிகிறது இதைக்காணும் பொழுதுதான் இறைவனும் ஓரவஞ்சனைக்காரனோ என்று தோன்றுகிறது சகோ.

  ReplyDelete
  Replies
  1. இறைவன் நல்லவன், கெட்டவன்னு பார்ப்பானே தவிர, ஏழை, பணக்காரன்,உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பார்ப்பதில்லை. தன் சுயலாபத்துக்காக மனிதன் வகுத்ததே இதெல்லாம்,

   Delete
 2. அருமையான பதிவு.பல விடயங்களைத் தாங்கி,அழகான பிரதிமைப் படங்களுடன்.... நன்றி தங்கச்சி ..............

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 3. அருமையான பதிவு. தெரியாத சில விஷயங்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். சூட்சும நாடி ரகசியம் தெரிந்து கொண்டேன்.

  சமீபத்தில், இங்கிருக்கும் சித்தர் ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ராக்கெட் போல பறந்து மறைந்த சித்தர் பற்றி தொலைக்க காட்சிகளிலும், காணொளியாகவும் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் நான் பார்க்கலை சகோ. இதுமாதிரி சித்து வேலைகள் பலது இங்க நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். பெரும்பாலும் உண்மையான சித்தர்கள் இப்படி விளம்பரம் தேடமாட்டாங்கன்னு மட்டும் கேள்விப்பட்டிருக்கேன்.பெரும்பாலும், மனிதர்களிடமிருந்து விலகி இருக்கவே அவர்கள் விரும்புவாங்கன்னும் சொல்வாங்க

   Delete
  2. இது யதேச்சையாக செல்லில் படம் பிடிக்கப்பட்டது. காமிரா வைத்து பர்ப்பஸாக எடுத்தது இல்லை.

   Delete
  3. சரிங்க சகோ. நான் பார்க்கலை. அதனால சொன்னேன்.

   Delete
 4. தமிழகத்தில் நாம் பார்க்கவேண்டிய முக்கியமான கோயில்களில் மலைகளில் ஒன்று திருவண்ணாமலை. நாங்கள் குடும்பத்துடன் சென்றுள்ளோம். மனதிற்கு நிறைவினைத் தருகின்ற இடம். அழகான படங்களுடன், கார்த்திகை நேரத்தில் அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ப்பா. இதுமாதிரி மனநிறைவை தரும் கோவில்கள் மிகச்சிலதுதான் இருக்கு. மத்த கோவில்களா அங்கிருக்கும் ஊழியர்களின் வியாபார யுக்திகளால் போகனுமான்னு யோசிக்க வைக்குது.

   Delete
 5. ஓம் நமசிவாய அன்னமலையானுக்கு அரோஹரா விளக்கங்களுடன் படங்களுடன் அருமை கடைசி படத்தில் தண்ணி வீழ்வது(நீர் வீழ்ச்சி ) போல் எங்கிருக்கிறது அங்கு எந்த இடம் ராஜி

  ReplyDelete
  Replies
  1. தெரில சகோ. நெட்ல சுட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 6. திருவண்ணாமலைக்கு இரு முறை சென்றிருக்கிறோம் மலை ஏறும் பாதையில் வாலைச் சித்தர் என்பவர் கிரகப் பெயர்ச்சியின் போது விசேஷ பூஜைகள் செய்கிறார் அது ஒரு பணம் வசூல் செய்யும் வழி என்று தெரிந்தபின் ஆதரவு காட்டுவதில்லை காரிலேயே கிரி வலம் வந்த அனுபவமுண்டு மலையேறி ரமணாஸ்ரமம் பார்த்திருக்கிறோம் அங்கு மலையில் திரிபவர்களில் பெரும்பாலோர் லாகிரி வஸ்துக்களுக்கு அடிமை பயணம் ஒரு நல்ல அனுபவமாய் இருந்தது

  ReplyDelete
  Replies
  1. கோவிலுக்கு போனோமா சாமி கும்பிட்டோமா, இல்லாதவங்களுக்கு தானம் பண்ணோமான்னு வரனும். அதைவிட்டு சாமியார்கள் பின்னாடி போனா இப்படிதான். பல போலிச்சாமியார்கள் போதைக்கு அடிமைன்றதை இங்க நிறைய பார்க்கலாம்

   Delete