Monday, August 12, 2019

சமூக வலைத்தளத்தில் குழந்தைகள் படத்தை போடுபவரா நீங்கள்!? - ஐஞ்சுவை அவியல்

மாமோய்! உன்கிட்ட மாட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே! ஒரு நகை நட்டு உண்டா?! ஒரு புடவை உண்டா?! எதாவது அனுபவிச்சிருக்கேனா?! இல்ல என் பிள்ளைகதான் எதாவது அனுபவிச்சிருக்கா?! அதுகளுக்கு செரிலேக் வாங்கி கொடுத்திருப்பியா?! இல்ல டயாப்பர்தான் வாங்கி கொடுத்திருக்கியா?!

  பத்து புடவை இருந்தால் போதாதா?! பீரோ புல்லா அடுக்கி வைக்கனுமா?! காது மூக்கு கழுத்துலன்னு நகை இருந்தாலே போதும். அதிகப்படியான நகைகள் ஆபத்தை கொண்டு வரும். எந்த விசயத்திலும்  பொம்பளைகளை திருப்திப்படுத்த அந்த ஆண்டவனால்கூட முடியாது. பிள்ளைகளுக்கு செரிலாக் கொடுப்பதுதான் கௌரவம், ஆரோக்கியம்ன்னு நினைக்குறியா?! 
செரலாக்ல என்ன இருக்குன்னு சொல்றாங்க?!

எல்லா பழங்களும், அரிசி, கோதுமை, கம்பு, பாதாம், முந்திரின்னு சொல்றாங்க,

அதுலாம்தான் நம்ம ஊரில் கிடைக்குதே! வாங்கி கழுவி கொடுத்தால் என்ன?! பேக்டரில சுத்தமான பொருட்களா கிடைக்குமா?! இல்ல, அதை சுத்தப்படுத்துவாங்களா?! பவுடர் தயார் பண்ணும் மெஷின்லாம் சுத்தமா இருக்குமான்னு யோசிச்சியா?! வீட்டில்ன்னா, சுத்தமான பழங்கள், கீரைகள், தானியங்களை வாங்கி, சுத்தப்படுத்தி, சுத்தமான பாத்திரத்தில் அப்பப்ப செய்து கொடுத்தால் குழந்தைக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அதைவிட்டு  பதப்படுத்த பொருட்களை பிள்ளைக்கு சாப்பிட கொடுத்தால் உடம்பில் எப்படி ஒட்டும்?!

சரி, செரலாக் வாங்கி தரலைங்குறதுக்கு  நீ சொன்ன காரணத்தை ஏத்துக்கிட்டேன். டயாப்பருக்கு என்ன சொல்லப்போறே?!

முன்னலாம், பிறந்த குழந்தைகளுக்கு பழைய காட்டன் வேட்டி, சேலையை கிழிச்சு  குழந்தைகளுக்கு கட்டி விடுவாங்க. பாப்பா  சூச்சு பண்ணினாலோ இல்ல வெளிய போய்ட்டாலோ உடனே மாத்திடுவாங்க. பிறகு மெத்துமெத்துன்னு ஜட்டி வந்துச்சு. அதை போட ஆரம்பிச்சாங்க. இப்ப, அடிக்கடி ஜட்டி மாத்தவும், துவைக்கவும் சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு டயாப்பர் போட ஆரம்பிச்சாங்க. டயாப்பரில் இருக்கும் ஒரே நன்மை வெளியில் போகும்போது பாப்பா ட்ரெஸ்சும், நம்ம ட்ரெஸ்சும் பாழாகாது. அதனால் வெளியில் போகும்போது போட்டுக்கலாமே தவிர, வீட்டில் இருக்கும்போது போட்டுக்குறதுலாம் தேவை இல்லாத ஆணி. 

பாப்பாக்கு சுத்தமான பருத்தி துணிகளை, காட்டன் ஜட்டிகளை போட்டால், ஈரமானதும் வெளியில் தெரியும்., உடனே மாத்திடுவோம். ஆனா, டயாப்பரில் அப்படி தெரியாது . சிறுநீரும், மலமும் பாப்பா உடலிலேயே ஒட்டிக்கிட்டு இருக்கும். சிலநேரம், மணிக்கணக்கில் இப்படி மலமும் சிறுநீரும் உடலில் ஒட்டிக்கிட்டிருக்கு. கொஞ்சம் யோசிச்சு பாரு. நம்ம மேல் சிறுநீர் தெரிச்சாலோ இல்ல மலத்தை மிதிச்சுட்டாலும் நமக்கு எத்தனை அன் ஈசியா இருக்கு?! அப்ப பாப்பாக்கு எப்படி இருக்கும்?! 
அதுமில்லாம, சிறுநீர், மலத்தில் இருக்கும் யூரியா, உப்பு, கிருமிகள் என பாப்பா உடம்பில் ஒட்டிக்கிட்டு பாப்பாக்கு அலர்ஜியை உண்டாக்கும். முதலில் பாப்பாவின் பின்புறம் சிவந்து காணப்படும். அப்புறம் அரிக்க ஆரம்பிக்கும் நாளாக நாளாக இன்ஃபெக்‌ஷன் ஆகி கிட்னியைக்கூட பாதிக்கும்.  அதனால், பாப்பாக்கு டயாப்பர்  போடுறதை தவிர்க்கனும். ஒருவேளை வெளியில் போகும்போது போட்டுவிட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மாத்திடனும். பாப்பா சிறுநீர், மலம் கழிச்சிருக்கான்னு அப்பப்ப செக் பண்ணனும், அப்படி செய்திருந்தால் உடனே க்ளீன் பண்ணிடனும். டயாப்பர் போட்டுவிடுறதுக்கு முந்தி அதற்கென இருக்கும் ஜெல்லை தடவனும்.  அந்த க்ரீமில் `ஸிங்க்’ (Zinc)ன்ற கெமிக்கல் இருப்பதால், அது தோலின் மேல்புறம் ஒரு லேயராக  மாறி, சிறுநீர், மலம்லாம் பாப்பாவின்  தோலில் ஒட்டிக்காம பாதுகாக்கும்.  
டயாப்பரை பாப்பாக்கு போட்டுவிட்ட பின்னாடி அலர்ஜி வந்துட்டா வெதுவெதுப்பான தண்ணில காட்டன் துணியை நனைச்சு பாப்பாவோட பின்பக்கத்தை தொடைச்சு விடனும்.  அசிங்கம், ஆரோக்கியம் கிடையாதுன்னு நினைக்காம ஜட்டி, துணின்னு எதும் கட்டாம காத்தாட விடனும்.

டயாப்பரை ரெண்டு வருசம் வரைக்குமே பயன்படுத்தனும். பிள்ளைகளுக்கு 6 மாசத்திலிருந்தே டாய்லட் ட்ரெயினிங்க் கொடுக்கனும். பாப்பா தூங்கி எந்திரிச்சதும், குழாய்க்கு அருகில் கொண்டு போய் தண்ணிய லேசாய் திறந்து விட்டு காலில் விழுற மாதிரி செஞ்சா பாப்பாக்கு சிறுநீர், மலம் கழிக்க தோணும். டயாப்பரை எப்படி டிஸ்போஸ் பண்ணனுமோ அப்படியே பண்ணனும். அதைவிட்டு கண்ட இடத்திலும் தூக்கி போடக்கூடாது. ராத்திரி முழுக்கஒரே  டயாப்பரை  போட்டு விடக்கூடாது. அதிகபட்சம் 4 மணிநேரமே ஒரு டயாப்பரை போட்டு வச்சிருக்கனும். ஒருமுறை கழட்டிய டயாப்பரை மீண்டும் போட்டுவிடக்கூடாது.. இத்தனையும் டயாப்பர் விசயத்தில் கவனிக்கனும். நாம பயன்படுத்திய துணியைதான் வெளிநாட்டுக்காரன் சின்னதா ஒரு மாற்றம் செய்து டயாப்பரா மாத்தினான்.  அதையே பொழுதன்னிக்கும் போட்டுக்கிட்டு பாப்பாக்கு போட்டுவிட்டு யூரினரி இன்பெக்‌ஷன் முதற்கொண்டு நிறைய நோய்கள் உண்டாக வாய்ப்பை நாமே பேஷன்ன்ற பேர்ல ஏன் உருவாக்கனும்?! டயாப்பர் போட்டுவிடும் பாப்பாக்கள் காலை அகட்டி அகட்டி வச்சு நடந்து குழந்தைகளின் நடையே மாறிவிட்டதா எனக்கு தோணுது.. இத்தனை அவஸ்தையான டயாப்பர் வேணாம்ன்னுதான் நான் வாங்கி தரல.

இத்தனை விசயமிருக்குன்னு நான் யோசிக்கலை மாமா.  

குழந்தைகளின் விசயத்தில் எல்லாத்தையுமே யோசிக்கனும். 
Image

ஃபேஸ்புக்கில் பொண்ணுங்க படத்தை போடக்கூடாதுனு சொன்னதும் வயதுக்கு வந்த பிள்ளைகளின் படத்தை போடுறதை நாம் தவிர்க்கிறோம். ஆனா, பத்து வயதுக்குட்பட்ட சின்ன பிள்ளைதானேன்னு அந்த குழந்தைகளின் படத்தோடு பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்ன்னு எதாவது பதிஞ்சிடுறோம்.  நம்மோடு ஒன்னுமண்ணாய் பழகி வர்றவங்களில் Phedophiliaன்ற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களை பீடோபைல்ன்ற கேட்டகிரி ஆளுங்க இருக்காங்க. பீடோபைல்ன்னா குழந்தைகள்மீது பாலியல்ரீதியான ஆர்வமுள்ளவர்கள். இந்த மாதிரி ஆளுங்களுக்கு 10வயசுக்குட்பட்ட குழந்தைகளோடு செக்ஸ் வச்சுக்க ஆசை வரும். அந்த ஆசையை நிறைவேத்திக்க எந்த எல்லைக்கும் போவாங்க. முதலில் சின்ன பசங்க வரும் செக்ஸ் படங்களை ஆர்வமா பார்ப்பாங்க. பின்னர், அதை செயல்படுத்தி பார்க்க, கண்ணில் படும் குழந்தைகள்கிட்ட அதை செயல்படுத்தி பார்ப்பாங்க. அதன்விளைவுதான் இன்னிக்கு செய்திகளில் அடிபடும் நம்பவே முடியாத அளவுக்கு 9 மாச குழந்தைகூட செக்ஸுக்காக கொலை செய்வது.

இவர்களை சட்டுன்னு அடையாளப்படுத்திக்க முடியாது. ஆனா, நம்மோடயே இருப்பாங்க. இவங்களுக்குன்னு தனியா ஒரு குழுவே இருக்குன்னு சொன்னால் நம்பமுடியாது. அவங்களுக்கென தனியா ஒரு வலைத்தளம் இருக்கு, அதில் மத்த செக்ஸ் படங்களைப்போல் உடலுறவு காட்சிகள் மட்டுமே இருப்பதில்லை. நாம் இதில் என்ன தப்பா இருக்குன்னு பர்த்டேக்கும், விழாக்கள்ன்னு பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் நாமும், நம் நண்பர்கள்ன்னு பகிர்ந்த மிகச்சாதாரண படங்கள்தான். அந்த படத்திற்கு அவர்கள் அளிக்கும் கருத்துகள்தான் இதில் ஹைலைட்டே. அக்கம் பக்கத்து குழந்தைகளுடனான, தங்களின் செக்ஸ் அனுபவத்தை ரத்தமும், சதையுமாக எடுத்து வைப்பதுதான். குழந்தைகளின் வலி, அதை அவங்க எப்படி ரசிச்சாங்கன்னு கருத்துகள் இருக்கும். இதில் நாம் டாக்டர், டீச்சர், போலீஸ், பக்கத்து வீட்டு தாத்தான்னு நாம மரியாதையா பார்க்கும் ஆட்கள்தான்.

அதனால், எக்காரணம் கொண்டும் எந்த வயதில் பிள்ளைகள் இருந்தாலும் பிள்ளைகளின் படத்தை சமூக வளைத்தளத்தில் போடக்கூடாது. அக்கம், பக்கத்தாரோடு குழந்தைகள் இருக்கும்போது கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள் படத்தோடு அதுங்க படிக்கும் ஸ்கூல், ஹாஸ்டல்ன்னு எதையும் விவரமா சொல்லக்கூடாது. முக்கியமா, குழந்தைகள் பத்தி இந்த மாதிரியான படங்களை பார்க்கும்போது சைபர் கிரைமுக்கு சொல்லலாம். குழந்தைகளை கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுப்பதென எந்த உறவாய் இருந்தாலும் அனுமதிக்காதீங்க. குட் டச், பேட் டச் பத்தி ஆண், பெண் என பேதமின்றி சொல்லிக்கொடுங்க. பெண்குழந்தைகளுக்கு மட்டுமில்ல, ஆண்குழந்தைகள்மீதும் செக்ஸ் டார்ச்சர் உண்டு.

எப்பா! பிள்ளை பெத்துக்குறதுதான் வலின்னு நினைச்சா பிள்ளைகளை வளர்க்குறது அதைவிட கஷ்டம்ன்னு தோணுது மாமா.
காத்து, நீர், மண் மட்டுமில்ல, மனுசங்க மனசும்கூட கெட்டுப்போய் கிடக்கு. அதன்விளைவுதான் இது.  மனசு கணக்குற மாதிரி பேசிட்டோம். அதனால், இந்த வீடியோவை பார்த்து மனசை லேசாக்கிக்கோ.

பெரியவங்களை மட்டுமில்லாம சின்னதுங்களைக்கூட கண்காணிக்கனும்போல!

நன்றியுடன்,
ராஜி


5 comments:

  1. டயாபர் பற்றிய விஷயங்கள் நானும் என் உறவில் ஒருவருக்குச் சொல்லியிருக்கிறேன். மாமா சொல்வார், அவருக்கு கஷ்டம் தெரியாது என்கிற கமெண்ட் வந்தது! நல்ல தகவல்கள்.

    பெண்கள், குழந்தைகள் விஷயத்தில் முன் எச்சரிக்கையாக இருந்து விட்டால் தொல்லையில்லை.

    காணொளி பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. டயாபர் - கொடுமையான கண்டுபிடிப்பு. பல அம்மா-அப்பாக்கள் குழந்தைக்கு இதைக் கட்டிவிட்டால் கடமை முடிந்தது என்று இருக்கிறார்கள். நாள் முழுவதும் ஒரே டயப்பரோடு சுற்றிய சில குழந்தைகளைப் பார்த்து இருக்கிறேன்! கொடுமை மஹா கொடுமை.

    காணொளி ஏற்கனவே பார்த்தது - யக்!

    நல்ல அவியல்.

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள் சகோதரி...

    ReplyDelete
  4. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. குழந்தைகள் வளர்ப்பிலும், கண்காணிப்பிலும் சற்றே அதிகமாக நாம் கவனம் செலுத்துவது அவர்களுக்கும் நல்லது. நமக்கும் நல்லது. பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  5. டயபர் என் உறவுகளில் சொன்னாலும் ஒரு சிலர் அதைக் கேட்பதில்லை எனவே சொல்லுவதில்லை இப்போதெல்லாம். மிக நெருங்கிய முறையில் பழகுபவர் என்றால் மட்டுமே சொல்கிறேன். சிறு குழந்தைகளை நன்றாகவே பழக்கலாம் 6 மாதம் முதல் அவ்வப்போது நாமே பார்த்து பார்த்து கொண்டு விட்டால் போதும்.

    பெண் குழந்தைகளைக் கொஞ்சம் கவனமாக எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டாலே போதும். பல ஆபத்துகளில் இருந்து தப்பலாம். கூடவே அவர்களைக் கொஞ்சம் தைரியமாகவும் சில தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ளச் செய்தும் வளர்க்கலாம்

    தகவல்கள் எல்லாமே சூப்பர் ராஜி

    கீதா

    ReplyDelete