Wednesday, June 10, 2020

வருவேன் என்ற ஒற்றை வார்த்தைக்காக காத்திருந்த சகுந்தலையின் காதல் - வெளிச்சத்தின் பின்னே..

காதல் என்னவெல்லாம் செய்யும்?! அள்ளி அணைக்கும், அழ வைக்கும், கெஞ்சும், கொஞ்சும், காத்திருக்கும், காணாமல் போகும்... சகுந்தலையின் காதலும் அப்படித்தான்.. பார்த்ததும் காதல் கொண்டது, குலம் குணம் தெரியாமல் மணம் புரிந்தது, தன்னையே தந்தது, வருவேன் என்ற ஒற்றை வார்த்தைக்காக காத்திருந்தது, யார் நீ என கேட்டு எட்டி உதைத்தபோதும் பல ஆண்டுகளாக காத்திருந்தது... திரும்பி வந்த துஷ்யந்தனை ஏற்றுக்கொண்டது.....  அதுவரை வாழ்வில் எந்த சுகமும் அனுபவித்திராத சகுந்தலை ராஜபோகத்தில் திளைத்தாள்.  அத்தோடு சுபம் போட்டுடலாமா?! காத்திருந்த சகுந்தலை துஷ்யந்தனுக்கு ஒரு பரிசு தந்தாள். அது என்ன பரிசு என  வெளிச்சத்தின் பின்னே.. பகுதியில் பார்க்கலாம்...


விஸ்வாமித்திரனின் தவத்தை கலைக்க தேவர்களால் அனுப்பப்பட்டவள் மேனகை. தவத்தை கலைக்க சென்ற மேனகை கர்ப்பவதியானாள். கர்ப்பத்தின் விளைவு சகுந்தலை பிறந்தாள்.  தேவலோக மங்கையான மேனகை குறிப்பிட்ட காலத்திற்குமேல் பூமியில் இருக்கமுடியாது. அதனால் தேவலோகம் செல்ல குழந்தை சகுந்தலா தடையாக இருந்தாள். சகுந்தலையை பூமியிலேயே  விட்டுவிட்டு  தேவலோகம் சென்றாள்:. ராஜரிஷி பட்டம் பெறுவதை குறிக்கோளாய் கொண்டிருந்த விஸ்வாமித்திரனின் தவத்திற்கு சகுந்தலை  தடையாய் இருந்தாள். சகுந்தலையை கண்ணுவ முனிவர் பர்ணசாலையில் விட்டுவிட்டு தவம் இயற்ற  சென்றுவிட்டார்.


கண்ணுவ முனிவர் சகுந்தலையை மகளாக பாவித்து வளர்த்து வந்தார்.  தேவலோக அழகியான மேனகையின் மகளாயிற்றே! அழகின் பேருருவமாக திகழ்ந்தாள் சகுந்தலை. அழகு இருக்கும் இடத்தில் குணமும் இருந்தது.  ஈ, எறும்புக்கு தீங்கு நினையாத உள்ளம் கொண்டவளாய் இருந்தாள் சகுந்தலை.  தந்தையின் பூஜைக்கு தேவையான மலர்களை பறித்து வந்து மாலை தொடுத்தல், நந்தவனத்தை பராமறித்தல் மாதிரியான வேலைகளை செய்து வந்தாள்.  மான்குட்டியாய் துள்ளி வந்தாலும் அடிக்கடி தாய்,தந்தை தன்னை விடுத்து சென்றது அவளது மனதை வாட்டும். அந்த சந்தர்ப்பங்களில் நந்தவனத்தில் ஒதுங்கி மலர்களோடும், அங்கிருக்கும், மான், மயில், முயல்களிடம் பேசிக்கொண்டிருப்பது அவளது வாடிக்கை..

ஒருமுறை அவ்வாறு, தன்னை மறந்து தனது நிலையை எண்ணி மனம் வருந்திக்கொண்டிருந்தாள். தன்னை மறந்திருந்தவளுக்கு தன்னை யாரோ உற்று நோக்குவதாக தோன்ற, திரும்பி பார்த்தவள் கண்களில் வேட்டைக்கு வந்த இடத்தில் கண்ணுவ முனிவரை காண வந்திருந்த துஷ்யந்தன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்டாள். யார் நீங்கள்?! என துஷ்யந்தனை கேட்டாள் . ஏற்கனவே அவள் அழகில் மயங்கி கிடந்தவன், வீணை, குழல் இசைக்கும் மேலான அவளது குரலை கேட்டு தன்னை மறந்தான். தன் நாடு , நகரம் மறந்தான். அவ்வளவு ஏன் தான் திருமணமானவன்,. தனக்காக தன் அரண்மனையில் தன் மனைவி லாஷி காத்திருப்பாள் என்பதையும் மறந்தான்.  சகுந்தலையின்பால் காதல் கொண்டான்.

உங்களைத்தான் கேட்கிறேன்.. யார் நீங்கள் என்ற சகுந்தலையின் குரல் துஷ்யந்தனை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. கண்ணுவ முனிவரை காண வந்தேன் என்றான். தந்தை ஆசிரமத்தில் இல்லை என்றாள். தந்தை இல்லை என்று சொல்லியும் நகராமல் இருக்கும் துஷ்யந்தனை கண்டு, ஏன் கிளம்பாமல் இருக்கிறீர்கள்?! பயண களைப்பா?! தாகமா?! தண்ணீர் கொண்டு வரட்டுமா என்றாள்.  தாகம்தான், ஆனால், இது தண்ணீரால் தீராத தாகம் என துஷ்யந்தன் கூறினான். சகுந்தலைக்கு அவன் கூறுவது புரிந்தது. என்ன பதில் சொல்வது என புரியாமல் திகைத்து நின்றாள். 

சகுந்தலை! உன் மனதில் என்ன இருக்கிறது என எனக்கு புரியாமல் இல்லை. காதலுக்கு கண் இல்லை. அதற்கு தகுதி, தராதரம் தெரியாது. குலம் அறியாது. குணத்தை மதியாது. பூரு தேசத்தின் மன்னனான நான் உன்மீது காதல் கொண்டேன்.  மன்னாதி மன்னனான துஷ்யந்தன் உன்னிடம் காதலை யாசிக்கிறான். மறுக்காதே! என்று மன்றாடி நின்றான். துஷ்யந்தனின் யாசிப்பு அவளை அசைத்து பார்த்தாலும் மனதில் இருக்கும் காதலை மறைத்துக்கொண்டு, தந்தை வந்ததும் அவரிடம் சொல்லுங்கள் என சகுந்தலை சொன்னாள். அப்படியென்றால் உனக்கு சம்மதமா என்றான். என் தந்தையின் சம்மதமே என் சம்மதம். தாய் தந்தை நிராகரித்த என்னை கண்ணென பாதுகாத்து வளர்த்து வருபவர். அவர் அறியாமல் எந்த செயலையும் செய்ய மாட்டேன் என்றாள். காதலில் பெற்றோர் புகுந்தால்  எப்படி?! நாம் காந்தர்வ மணம் புரிந்து கொள்ளலாம் என்றான். எனக்கு காயத்ரி மந்திரம் மட்டுமே தெரியும் என்றாள். 


காமம் என்பது ஒருவிதமான பசி. அதை அடக்க அதை இதை சொல்லத்தான் செய்வோம்ன்னு விதி படத்தில் ஒரு வசனம் வரும்..  அதுக்கு   தகுந்த மாதிரி சகுந்தலைக்கு காந்தர்வ மணம் பற்றி வகுப்பெடுத்தான் துஷ்யந்தன்.  பிரமம், பிராசாபத்யம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்தன், பைசாகம் என திருமணம் எட்டு வகையாக பிரிச்சிருக்காங்க. அதில்  கந்தர்வ மணம் மிக சுவாரசியமானது. கந்தர்வ மணம் என்பது காதல் கொண்ட இருவர் பழகி தழுவி ஒருவராக உடல்களால் சங்கமம்  ஆவதே கந்தர்வ மணம். பசிக்கும்போது அது தந்தையிடம் அனுமதி கேட்பாயா?! என்ன சாப்பிடுவது என ஆலோசிப்பாயா?! அதுமாதிரிதான் காதல் என்ற பசிக்கு தந்தையிடம் விவாதித்தல் கூடாது என பலவாறாய் பேசி சகுந்தலையிடம் உறவு கொண்டான். வருவேன் காத்திரு .. அதுவரை யாரிடமும் எதுவும் சொல்லாதே என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாய் அவ்விடம் அகன்றான்..

துஷ்யந்தன் சொல்லி சென்றபடி வருவான் என சகுந்தலை காத்திருந்தாள். மான் போல துள்ளி நடந்த மகள் அடி எடுத்து வைக்க யோசிப்பதை கண்ட கண்ணுவ முனிவர் அவளை கவனிக்க ஆரம்பித்தார் . சகுந்தலையின் மினுமினுப்பும், அழகும் கூடுவது அவருக்கு எதையோ உணர்த்தியது. இந்த ஆசிரமத்தில் ஆண்களே கிடையாது. இந்த வனாந்திரத்திற்கு ஆண்கள் வந்ததற்கான தடமும் இதுவரை கண்டதில்லை. என்ன நடந்திருக்கும் என குழம்பினார் முனிவர். மகளிடமே, அவளது மாற்றத்திற்கு காரணம் கேட்டார். தாய் தந்தை நிராகரித்த தன்னை மகளாக வளர்த்து வரும் வளர்ப்பு தந்தையிடம் மறைக்க அவளுக்கு மனம் வரவில்லை. அவரை சபிக்கக்கூடாது என அப்போதும் துஷ்யந்தனுக்காக யோசித்தாள். 

நடந்ததை சொல்லிவிட்டாள். விடைபெறும்போது காலங்கள் கடந்தாலும் வந்துவிடுவேன்.அதுவரை கந்தர்வ மணம் பற்றி யாரிடமும் சொல்லாதே என சொன்னதால் சொல்லவில்லை என்றுக்கூறி அழுதாள். நிச்சயம் வருவார் அப்பா என்று தந்தையை தேற்றினாள். பாவி மகளே! ஏமாந்து போனாயே! அவனுக்கு லாஷி என்ற மனைவியும், ஜனமேஜயன் என்ற மகனும் இருக்கிறார்கள் என கண்ணுவ முனிவர் சொன்னதை சகுந்தலை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னிடம் சொல்லி விட்டார் அப்பா! என்றாள். உனக்கு துஷ்யந்தனை ஒருநாள்தான் தெரியும். எனக்கு பலகாலமாய் தெரியும். வா அரண்மனைக்கு நியாயம் கேட்போம் என்று கண்ணுவ முனிவர் சகுந்தலையை அழைத்தார். வருவேன் என்று சொல்லி சென்றுள்ளார். வருவார். காத்திருப்பேன் என சகுந்தலை மறுத்து விட்டாள். சகுந்தலை துஷ்யந்தனுக்காக காத்திருந்தாள். ஆனால்....

சகுந்தலையின் வயிற்றில் இருக்கும் சிசு காத்திருக்கவில்லை. பத்து மாதம் கழித்து அழகான ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். மகனுக்கு பரதன் என பெயர் சூட்டினாள்.  நாட்கள் நகர்ந்தது. ஆனால், வந்துவிடுவான் என்ற நம்பிக்கை மட்டும் குறையாமல் இல்லை. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் காத்திருந்தும் துஷ்யந்தன்மீது நம்பிக்கை இழக்கவில்லை. இதை பைத்திய நிலை என்றுதான் சொல்லவேண்டும்.  ஒருநாள் உறவு, வருவேன் என்ற வாக்குறுதி.. இதற்காகவா ஒருத்தி 12 வருடங்கள் காத்திருப்பது.. துஷ்யந்தனும் அவளும் கூடிக்களித்த புன்னை மரநிழலுக்கு தினமும் வருவாள். அன்று நடந்ததை எண்ணி வெட்கம் கொள்வாள். துஷ்யந்தன் வருகிறானா என்று பார்ப்பாள். மீண்டும் ஆசிரம் செல்வாள். இதுவே அவளின் வாடிக்கையானது. இந்த கண்மூடித்தனமான காதலிலும் ஒரு சுகம் இருப்பதை சகுந்தலை உணர்ந்து அதை அனுபவித்தாள். 

ஊர் வாயை அடைத்தவள், தந்தையை சமாதானப்படுத்தியவளுக்கு மகனை சமாதானப்படுத்த முடியவில்லை. தந்தை யார் என்று தினமும் கேட்கும் மகனுக்கு என்ன பதில் சொல்வது என விழித்தாள். பூரு நாட்டுக்கு போகலாமென கேட்ட தந்தையை , வருவேன் என்றுதான் சொல்லிச்சென்றான். வா என்று சொல்லவில்லை. அதனால் போகவேண்டாமென மறுத்தவள், மகனுக்காக பூரு நாட்டுக்கு செல்ல முடிவெடுத்தாள். அத்தனை நாள் காத்திருந்தவளுக்கு ஆசிரமத்திற்கும், பூரு நாட்டிற்கும் தூரம் அதிகமென உணர்ந்தாள்.  அடியெடுத்து வைக்கும்போதெல்லாம் தன்னை கண்டதும் ஓடி வருவான். கண்ணே! மணியே என கொஞ்சுவான். மகன் பரதனை அள்ளி அணைத்து உச்சி முகர்வான் என பலவாறாய்  கனவு கண்டபடி நடந்தாள்..

அரண்மனை சேவகர்களிடம் சொல்லி அனுப்பி, வாசலில் காத்திருந்தவள், காதலுடன் ஓடிவரும் துஷ்யந்தனை காண ஆவலாய் இருந்தாள். துஷ்யந்தனும் வந்தான். யார் நீ?! என அவளது தலையில் இடியை இறக்கினான். கந்தர்வ மணம் புரிந்தது, வருவேன் என்று வாக்களித்தது எல்லாம் எடுத்து சொல்லியும் உன்னை பார்த்ததே இல்லை என மறுத்தான். இதற்குமேலும் அங்கிருந்தால், தன் காதலுக்குதான் இழுக்கு என நினைத்து பரதனை அழைத்துக்கொண்டு கண்ணுவ முனிவரின் ஆசிரமம் வந்தாள். வரும்போது, பூரு தேசத்தின் மன்னனாக்கி தீருவேன் என்று சபதம் செய்தாள். 

மந்த்ர மலையடிவாரத்தில்  குடில் அமைத்து  தங்கினாள். கண்ணுவ முனிவர் வந்து அழைத்தார், எனக்கும் துஷ்யந்தனுக்குமான காதலை கொச்சைபடுத்திவிட்டான், எனக்கும் அவனுக்கும் பிறந்த மகனை யாருக்கோ பிறந்ததாக கறைப்படுத்திவிட்டான். அந்த கறையை கழுவாமல் இந்த பூரு தேசத்தை விட்டு வரமாட்டேன். பூரு வம்சத்தின் மன்னன் என்ற கர்வத்தில் இருக்கும் துஷ்யந்தனின் குலம் பரத வம்சம் என அழைக்கவைப்பேன். அதன்பிறகே ஆசிரமம் வருவேன் என்றாள்.

தனி ஆளாய் பரதனுக்கு சகல கலைகளையும் கற்றுக்கொடுத்தாள். மகளின் நிலை மேனகையின் காதுக்கு எட்டியது. மகளை காண மேனகை ஓடோடி வந்தாள். நடந்ததை கேட்டறிந்தாள். துஷ்யந்தனிடம் சமாதானம் செய்ய சென்றாள். மேனகை என்ன பேசினாள் என்று தெரியாது. ஆனால் துஷ்யந்தன் மனம் மாறினான். சகுந்தலையின் குடில் நோக்கி வந்தான். சகுந்தலையையும், பரதனையும் அரண்மனைக்கு அழைத்தான். மேனகை என்ன சொன்னாள் என சகுந்தலையும் கேட்கவில்லை. துஷ்யந்தனும் சொல்லவில்லை. சகுந்தலை மகனுடன் அரண்மனை சென்றாள். சகுந்தலையை பணிப்பெண்கள் நீராட்டி, அழகுபடுத்தினர்.  துஷ்யந்தன் சகுந்தலையை கண்டு பிரமித்தான். நந்தவனத்தில் வெறும் காட்டுப்பூக்களை சூடிக்கொண்டபோதே சகுந்தலை பேரழகியாய் இருண்டாள். ஆடை ஆபரணத்தில அப்ரசாய் ஜொலித்த சகுந்தலையை காமத்தோடு நெருங்கினான் துஷ்யந்தன். 

பரதனுக்கு முடிசூட்டி, அவன் அரியாசனத்தில் அமர்ந்த அன்றிரவு நமக்கு மீண்டுமொரு முதலிரவு என்று நிபந்தனையிட்டாள். மூத்தவள் லாஷியின் மகனான ஜெயமேஜயன் இருக்க பரதனுக்கு முடிசூட்டுவதா என்ற யோசனையோடு அவ்விடம் அகன்றான். ஆனாலும் சகுந்தலையின் அழகு  அவனை படாத பாடு படுத்தியது. பரதனுக்கு முடிசூட்ட சம்மதித்தான்., முடிசூட்டும் நாளும் வந்தது. ஊரெல்லாம் விழாக்கோலம், தெருவெங்கும் தோரணம், வண்ணக்கோலம், அன்னதானம் என தூள் பறந்தது... தேவராகம் முழங்க, மேளதாளம் ஒலிக்க பரதனுக்கு துஷ்யந்தன் முடிசூட்டினான். இதை கண்ணார கண்ட சகுந்தலை ஆனந்த கண்ணீர் விட்டாள்...

பரதனுக்கு முடிசூட்டிய கையோடு இரவுக்கு தயாராகு என்று குறிப்பால் உணர்த்த, மேல் மாடியில் இருந்த சகுந்தலையை கண்டான் துஷ்யந்தன். அவனது பார்வையின் நோக்கமறிந்து சகுந்தலை எழுந்து வேகமாக கீழிறங்கினாள்.  பட்டாபிஷேகம் நடந்த இரவு காம பசியாற்றுவதாக சொன்ன தனக்காக தனது அறையில் துஷ்யந்தன் காத்திருப்பான்... காத்திருக்கட்டும்...... என்ற எண்ணத்தோடு  அரண்மனையை விட்டு வெளியேறி கண்ணுவ முனிவரின் புஷ்கர தீர்த்தம் நோக்கி நடந்தாள்..

 தாய் தந்தை அரவணைப்பின்றியும் , எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் காட்டில் ஏகாந்தமாய் வளர்ந்த சகுந்தலையை ஏமாற்றி காமசுகம் அனுபவித்ததோடு மட்டுமல்லாமல் அவளையும் அவளது மகனையும் கொச்சைப்படுத்திய துஷ்யந்தனை பழிவாங்கவும் செய்தாள்... என்னவெல்லாமோ செய்யும் காதல்  பழிவாங்கவும் செய்யும்,

வெளிச்சத்தின் பின்னே தொடரும்....

நன்றியுடன்,
ராஜி.

10 comments:

  1. nice. waiting for the next episode.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சுவாரசியமான கதை மாந்தர்களோடு வருவேன்

      Delete
  2. இந்த மாதிரி பின்கதை அறிந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. நம்மூரில்தான் ஆணும், பெண்ணும் சேர்ந்துட்டா எண்ட் கார்ட் போட்டுடுவோமே! அதுக்கு பிறகுதான் பிரச்சனைகள் ஆரம்பிக்குதுன்னு எந்த கதையும் சினிமாவும் சொன்னதில்லை

      Delete
  3. வெளிச்சத்தின் பின்னே - நன்று. படித்தேன் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், படித்து கருத்திட்டமைக்குன் நன்றி சகோ

      Delete
  4. இதில் ஆழமாக ஆய்வு செய்து விடாதீர்கள்... பிறகு வருத்தப்படுவீர்கள்...

    கதையாக மற்றும் பார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. கதையில் நல்ல கருத்துக்கள் இருந்தால் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லையே!

      Delete
  5. வெளிச்சத்தின் பின்னே வித்தியாசமான நிகழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. இதிகாச, புராணக்கதைகளில் நாம் கொண்டாடப்படும் அல்லது வெறுக்கப்படும் ஒரு காதாபாத்திரத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்து சொல்வதே இத்தொடரின் நோக்கம்..

      Delete