Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Thursday, January 11, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்.. கேட்டால் கேளுங்க.. - தொடர்பதிவு



கொடுக்குறவங்களுக்கு சந்தோசத்தையும், வாங்கிக்குறவங்களுக்கு எரிச்சலையும் கொடுக்கக்கூடியது எதுன்னு பார்த்தா அது அட்வைசாதான் இருக்கும்.  நம்மூர்ல கேட்காமயே கிடைக்கக்கூடியது அட்வைஸ்தான். வயசு, இன, மொழி பேதமில்லாம அள்ளி அள்ளி வாரி வழங்குவாங்க. அப்படி வழங்கும் எதிர்க்க இருக்கவுங்களுக்கு உதவுமா?! இல்ல காத்துல விடுருவாங்களா இல்ல கொலைவெறில இருக்காங்களான்னுகூட யோசிக்க மாட்டாங்க. கிலோ கணக்குல அட்வைசை நம்ப தலைல இறக்குவாங்க.


இந்த அட்வைஸ் நம்ம கைரேக, நிழல் மாதிரி நாம பொறந்ததிலிருந்து சுடுகாட்டுக்கு போற வரைக்கும் நம்ப கூடவே இருக்கும். சர்க்கரை தண்ணி கொடுக்காத, இந்த துணி போடாத, இந்த பவுடர் போடுன்னு நமக்கான அட்வைஸ் அம்மா, அப்பாக்கள் வழியா நிறைவேத்தப்படும். மத்தவங்க சொல்றதை புரிஞ்சுக்க ஆரம்பிச்ச பின், நிக்காத, நடக்காத, ஓடாத, இதை தொடாத, வாயில் விரல் வைக்காதன்னு டைரக்டா நம்மகிட்டயே அட்வைஸ் பண்ணுவாங்க.  இன்னும் கொஞ்சம் வளர்ந்து ஸ்கூல் போக ஆரம்பிச்சதும் இப்படி போடாத, வை ஒழுங்கா சொல்லு,  பல்பத்தை திங்காத, பென்சிலை தொலைக்காதன்னு அட்வைஸ் மாறும். இதுக்கப்புறம், அட்வைஸ்  பாலினம் பார்த்து தரம் பிரிக்கப்படும். பையன்னா, ஒழுங்கா படி உன்னை நம்பிதான் குடும்பம் இருக்குன்னும், பொண்ணுங்கன்னா, வேலைலாம் ஒழுங்கா கத்துக்க போற வீட்டில் பெத்தவ என்னைதான் குறை சொல்வாங்கன்னும், பயலுங்கக்கூட சேராத, ஏரெடுத்தும் பாராதன்னு மாறும்.

பதின்ம பருவத்தை தாண்டிட்டா, ஆம்பிளைன்னா நல்ல வேலையை தேடிக்க, சிக்கனமா இரு, கார் வாங்கு, வீடு கட்டு, அம்மா அப்பாவை பார்த்துக்க. பொண்ணுங்கன்னா, வேலைலாம் செய், அடக்கமா இரு எதிர்த்து பேசாத, போற இடத்துல மாமியார் மாமனாரை எதிர்த்து பேசாத. மச்சினர், ஓரகத்தி, நாத்தனார்ன்னு அனுசரிச்சு போ.  கல்யாணம் கட்டிக்கிட்ட ஆண்ன்னா, பொண்டாட்டி வந்ததும் அம்மா அப்பாவை மறக்காதப்பா. பொண்ணுங்கன்னா, பொறந்த வீட்டை மறந்து, புகுந்த வீட்டை உன் வீடா நினைக்கனும், காலைல எந்திரிக்கனும், அவங்க மனசுக்கோணாம நடந்துக்க. அந்த பொண்ணு கர்ப்பம் ஆனா,  மெல்ல நட, பால் நிறைய குடி, பழம் சாப்பிடு, லேகியம் முழுங்கு, நிமிர்ந்து படுக்காத. குழந்தை பெத்தா, வாய கட்டு, குழந்தை தூங்கும்போதே எல்லா வேலையும் செஞ்சிடு.  குழந்தை வளர்ந்தா ஆணுக்கு பசங்க வளர்ந்து வருது சிக்கனமா இரு, பேங்க்ல பைசா போடு. பொண்டாட்டி, பசங்கன்னு வந்த பிறகு எங்களைலாம் மறந்துட்ட, அக்காக்கு செயின் செய், அண்ணன் மகளுக்கு சீர் செய்,
பசங்க பெருசாகி கல்யாணத்துக்கு வந்திட்டா, ஆணுக்கான அட்வைஸ் நகை செய், வரண் பாரு.  பொண்ணுக்கு பசங்க கல்யாணத்துக்கு வந்திட்டாங்க, அடக்கமா இரு. நீ மேக்கப் போடாத. பொறுப்பா நடந்துக்க... வயசான காலத்துல, ஆணுக்கு, இத்தனை காலம்தான் ஓடி ஓடி வேலை செஞ்சு அலுத்துட்ட, இனியாவது கோவில் குளம்ன்னு போயி வாழ்க்கைய எஞ்சாய் பண்ணு. உடலை பார்த்துக்க. சர்க்கரை பிபிலாம் குறைச்சுக்க, பென்சன், கையிருப்புலாம் எல்லாருக்கும் கொடுத்து காலி செய்யாம உனக்குன்னு கொஞ்சம் சேர்த்து வச்சுக்க. . பொண்ணுன்னா, ரிட்டையர்டா வந்திருக்குறவங்க மனசு ஒரு நிலையில் இருக்காது. அவரை பத்திரமா பார்த்துக்கோம்மா. அவருக்கு தேவையானதுலாம் செய். நீ இருக்கும்போதே உன் நகைகளை யார் யாருக்குன்னு பிரிச்சு கொடுத்துடும்மா... வயசான காலத்துல சும்மா உக்காராம பேரப்பசங்களுக்கு கதை சொல்லு, கறிகாய் நறுக்கி கொடு...
இந்த அட்வைஸ் படலம் இத்தோடு முடியல. நம் இறப்புக்கு பின்னும் தொடரும். ராமேஸ்வரத்துல போய் அஸ்தியை கரைச்சுட்டு வா. அப்பதான் அம்மாக்கு சொர்க்கம் கிடைக்கும். அமாவாசை அன்னிக்கு திதி கொடு அப்பதான் அவங்க பசிதீரும். அவங்க படத்தை இங்க மாட்டு. அதுக்கு மாலை போடுன்னு...  இந்த அட்வைஸ் கோவில், பேங்க், ஸ்கூல், படிப்பு, வாழ்க்கைத்துணை, பேருந்து, ட்ரெயின், கடல், நதி, நாடு நகரம்ன்னு விடாது கருப்பு மாதிரி நம்மோடவே சுத்தும்.
என் அப்பா அம்மாலாம் எனக்கு அட்வைஸ் பண்ணதே இல்ல. ஒரேயடியாய் ஆர்டர்தான். என் அப்பா அடிக்கடி சொல்லும் அட்வைஸ் யாரையும் நம்பாத, லூசு மாதிரி பேசாத. என்னை கட்டுன மனுசன் சொல்லுறது அடக்கம் ஆயிரம் தப்பை மறைக்கும்.. என் அம்மா சொல்லும் அட்வைஸ்  சும்மா லொடலொடன்னு பேசாத. இதைத்தவிர வேற எதும் எனக்கு அட்வைஸ் யாரும் பண்ணதில்ல. யோசிச்சு பார்த்தா, என் கெட்டதுக்குலாம் காரணம் இந்த பேச்சுதான் இப்ப புரியுது. அதனால, இப்பலாம் பேச்சை குறைச்சுக்கிட்டேன்.  அவசியப்பட்டா மட்டுமே கருத்து பரிமாறல்கள். 

அப்பா, அம்மா முதற்கொண்டு எல்லாருமே எனக்கு அட்வைஸ்ங்குற பேர்ல அவங்க கருத்தை திணிச்சதால, என் பசங்களுக்கு பெரும்பாலும் அட்வைஸ் பண்ணுறதில்லை. எனக்கு பதிலா, என் அப்பா அம்மா, வீட்டுக்காரர்ன்னு அந்த வேலையை பார்த்துப்பாங்க. அட்வைஸ் செஞ்சுட்டா மட்டும் அதுபடி நடக்க போறாங்களா?!  அதான்.

பசங்களுக்கே அட்வைஸ் பண்ணாதவ, உங்களுக்கா பண்ண போறேன்.. அதனால, இந்த பதிவை யார் வேணும்னாலும் தொடரலாம்... மதுரை தமிழன் அண்ணா தொடர்பதிவு க்கான அழைப்பை ஏத்து பதிவும் போட்டுட்டேன். இப்ப சந்தோசமா?!


நன்றியுடன்,
ராஜி. 

Monday, November 16, 2015

ஆசை..., ஆசை.., பேராசை இப்பொழுது. ஆசை தீரும் காலம் எப்பொழுது?! - தொடர் பதிவு

எனக்கு கடவுள் பக்திலாம் அவ்வளவா கிடையாது. ஆனா, அதுக்காக கடவுள் இல்லைன்னு சொல்ற ஆளும் கிடையாது. அப்புறம் எப்படி கோவிலுக்கு போய் பதிவுலாம் போடுறென்னு கிராஸ் கொஸ்டின்லாம் கேக்கப்படாது. அது ஃபேமிலி டூர் போகும்போது பெரியவங்களை  சமாதானப்படுத்த போறது. எனக்கும் உம்மாச்சிக்குமான தூரம் ஹாய்! ஹலோ!ன்ற அளவுதான். கோவிலுக்கு போகும்போதுகூட சாமி கும்பிடுறதைவிட அங்கிருக்கும் சிலை, படம் இதுலாம் பார்த்துக்கிட்டு நின்னுட்டு திட்டு வாங்குவேனே தவிர, ஒழுங்கா மனசு ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடமாட்டேன். 

அப்படி இருக்கும் என் எதிரில்லாம் கடவுள் தோன்றுவாரா?!ன்னு தெரியல. கடவுள்ன்னா க்ரீடம், நகை, வேல், அம்பு, பட்டாடை, நகை போட்டு ஹெவி மேக்கப்புலதான் வருவாங்களா!? ஆனா, நான் பல நேரங்களில்  கடவுளை என் அப்பா, அம்மா  ரூபத்துல பார்த்திருக்கேன். இப்பவும் பார்த்துக்கிட்டிருக்கேன்.

எல்லா கடவுளும் கேட்டப் பின்தான்  வரம் கொடுக்கும், ஆனா, என் கடவுள்கள் நான் கேட்காமலே எனக்கு தேவையானதை கொடுக்க முதல் ஆளாய் நிக்கும். அதனால, இதுவரை யார்கிட்டயும் கேட்டுப் பழக்கமில்ல. கடவுள் உட்பட...., 

அப்பேற்பட்ட என்னையும் உங்க ஆசை என்னன்னு கேட்க ஒரு ஆள்  இருக்கேன்னு மனசுக்குள் சந்தோசம் ரெக்கைக் கட்டி பறக்குது.  தேங்க்ஸ் கிரேஸ்!! எம்புட்டோ யோசிச்சு பார்க்குறேன்...., என் தேவைகள் என்னன்னு?! நிஜமா தெரிலப்பா!!

பொதுநலத்துக்காக யோசிக்க, பாடுபட நிறைய பேர் இருக்காங்க..., என் வீட்டுக்கு யோசிக்க அம்மா, அப்பா இருக்காங்க...,

எல்லாமே கிடைச்சாலும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர ஜெயம் ரவி மாதிரி  எனக்குள்ளும் சின்ன சின்ன ஆசை உண்டு...,

(என்னோட கடவுள்கள்..,)

7,8,9 மணிக்குன்னு எங்க வீட்டுல பள்ளி, வேலைக்கு கிளம்புவாங்க. அதனால, கண்ணு முழிக்குறதே அடுப்புலதான். 5 மணிக்கு எழுந்தால்தான் 7மணிக்கு டப்பா கட்ட சரியாய் இருக்கும். வேலைநாட்களில் லேட்டா எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஆத்துக்காரர் ஞாயிறு அன்னிக்கு மட்டும் டான்னு 5 மணிக்கு எந்திருச்சு வாசல் கதவை திறந்து வச்சுட்டு வாசல் தெளி, டீ கொண்டான்னு இம்சிப்பாங்க. அதனால, ரூம் கதவை பூட்டிக்கிட்டு, காலை குளிருக்கு இதமா போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கனும்...,

பக்கத்து தெருவுக்கு கூட அப்பா, அம்மா, பையன், வூட்டுக்காரர்ன்னு எஸ்கார்ட் கூட போயே பழகிட்டேன். அதனால, தனியா வெளி ஊருக்கு போய் கடைக்கு போய் நான் என் இஷ்டபட்டதை வாங்கி வரனும்..

புகுந்த வீடு, பொறந்த வீடு, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, அக்கா, நாத்தனார், மூத்தார், கொழுந்தனார் வீடுலாம் சுத்தி 20 கிமீக்குள்ளயே இருக்குறதால ஒரு நீண்ண்ண்ண்ண்ட பயணம் போகனும். அதும், ரயில், பஸ் பிரயாணம் போகனும்....,

வெளிய எங்கிட்டாவது போகும்போது பசங்கலாம் ஜன்னல் சீட்டை பிடிச்சுக்குதுங்க. கூடவே இயர் ஃபோனையும் பிடுங்கிக்குதுங்க. அதனால, யாருமில்லாம குளிர், மழை நேரத்துல பஸ் பயணம் போகனும். ஜன்னலோர சீட், இயர் ஃபோனோடு ஃபுல் சார்ஜ்ல மொபைல் இல்ல ஐபாட். கூடவே இளையராஜா, கார்த்திக், பிரபு, கமல், ரஜினி மெல்லிசை பாட்டும் வேணும்.

என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்கு. அதனால, கடல், ஆறு, அருவி பக்கத்துல ஒரு வீடு வேணும். என் வீட்டுல இருந்து பார்க்கும்போதே தெரியனும்.
(எதிர் வீட்டு குட்டி)
என் வீட்டு குட்டிலாம் பெருசாகிட்டு என் சொல்பேச்சு கேக்குறதில்ல. அதனால, இப்போ என் சின்னக்குட்டியாய் எதிர்வீட்டு குழந்தைதான் இருக்கான். அவனுக்கு எப்பவுமே வயசாகக் கூடாது. வயசானால் என் சொல் பேச்சு கேட்க மாட்டான்.

காலைல ஆளுக்கொரு நேரத்துல சாப்பிட்டு போவாங்க. நைட் சாப்பாடு ஒண்ணா சாப்பிடுவோம். தோசை, சப்பாத்திலாம் செஞ்சு வச்சு சாப்பிட மாட்டோம். ஒவ்வொண்ணா சுட்டு சாப்பிடுவோம். பிள்ளைங்கலாம் சாப்பிட லேட் ஆகும். அதனால, எனக்கு தேவையானதை நானே சுட்டுக்கனும்:-(   அதனால, நான் போதும் போதும்ன்னு சொல்லும்வரை தோசை, பூரி, சப்பாத்தி யாராவது சுட்டு போடனும், நான் சாப்பிடனும்.

அப்பாக்கு, வீட்டுக்காரருக்கு புத்தகம் படிச்சா பிடிக்காது. சத்தம் அதிகமா வச்சு பாட்டு கேட்டாலும் திட்டு விழும். அதனால, எனக்கே எனக்குன்னு ஒரு ரூம்ல 80ல வந்த மெல்லிசை பாட்டு சிடிக்களும், நிறைய புத்தகங்களும் வேணும்.

எங்க வீட்டுல புத்தகம் படிச்சு விமர்சிக்க யாரும் இல்ல. அதனால,  மாலை வேளையில் சூடான காஃபி, நொறுக்கு தீனியோடு, கைக்கோர்த்து கதை பேச ஒரு தோழி வேணும். 

மழை நாள்ன்னு ஐஸ் வாட்டர், கூல் ட்ரிங்க்ஸ்க்கு தடா போட்டுடுவாங்க. அதனால, ஃப்ரிட்ஜ்ல ஐஸ் வாட்டரும், கூல்ட்ரிங்க்ஸும் இருக்கனும். மிட்நைட்ல எழுந்து குடிக்கனும்.

என் பொண்ணுங்க சில நாட்களில் சமைப்பாங்க. ஆனா, கிச்சன் க்ளீன் பண்ண மாட்டாங்க. துணி துவைக்க மெஷின் இருக்கு. அதனால, கிச்சன், துணி லாம் மடிச்சு எடுத்து அந்தந்த இடங்களில் வைக்க ஒரு ஆள் வேணும். 

எல்லோரோடவும் டூர் போனால் ஒரு நாளைக்கு நாலு கோவில், அஞ்சு ஊர்ன்னு அவசர அவசரமா பார்ப்பாங்க. அதனால, சிவகாமி, நரசிம்ம பல்லவன், மகேந்திர பல்லவன், பரஞ்சோதியோடு நான் மட்டும் மகாபலிபுரத்தையும்..., அருள்மொழிவர்மன், வல்லவராயன், குந்தவை, பூங்குழலியோடு தஞ்சாவூரையும் சுற்றிப் பார்க்க ஆசை.


ஸ்ஸ்ஸ் அபா! என் ஆசைலாம் இவ்வளவுதான். நான் லேட்டா பதிவு போட்டதால யாரைக் கூப்பிடுறது. எல்லோரையும், எல்லாரையும் கூப்பிட்டதால என் பதிவுக்கு வரும் எல்லோரையும் கூப்பிடுறேன்.

Thursday, July 18, 2013

எனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு


2002 இல்ல 2003ன்னு நினைக்குறேன். அப்போதான் என் ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்டுலதான் முதன் முதலா கம்ப்யூட்டரை கிட்டக்க பார்க்க நேர்ந்தது. அதுவரை, சில ஹாஸ்பிட்டலில், ஆஃபீசுல கம்பியால பிண்ணப்பட்ட வலைக்கு இந்த பக்கமாதான் பார்த்திருக்கேன். ”உயிரே” படத்துல இருந்து “என்னுயிரே! என்னுயிரே! என் ஆருயிரே!ன்னு பாடிக்கிட்டு இருந்துச்சு. அந்த ஒரு காரணத்துக்காகவே அந்த பாட்டு இன்னிய வரை என் ஃபேவரிட்.., சரி, சரி, சொல்ல வந்தது டிராக் மாறுது போல!

எப்பவாவது அவங்க வீட்டுக்கு போகும்போதுலாம் என் பசங்களை உக்கார வச்சு, நோட் பேட்ல டைப பண்ணவும், படம் வரைஞ்சு பார்க்கவும் சொல்லிக்குடுத்து, தனியா பழகி பார்க்கவும் விடுவான். ஆனா, எனக்கு மட்டும் என்ன பார்ட், எப்படி ஆன் பண்றது?!ன்னு கூட சொல்லி தந்ததில்லை...,  ஒரு வேளை எனக்கு கத்துகுடுத்து, அப்புறம் அதை நல்லா பழகி பரிட்சை எழுதி கம்ப்யூட்டர்ல B.Com பட்டம் வாங்கிடுவேனோன்னு பயப்பட்டிருப்பான்னு நினைக்குறேன்.

டேய்! எனக்கு கம்ப்யுட்டர் பத்தி சொல்லி குடுடான்னு கேட்டா...,  வந்தியா?! என்கிட்ட அரட்டை அடிச்சியா?! அம்மாக்கிட்ட பேசுனியா?! தங்கச்சிக்கு எம்ப்ராய்டரி சொல்லி தந்தியா?!ன்னு போய்கிட்டே இருக்கனும்ன்னு சொல்வான். ரொம்பவும் அடம்பிடிச்சா  போனாப்போகுதுன்னு “ரோட் ரேஷ்”ன்னு ஒரு விளையாட்டை ஆன் பண்ணி விளையாட சொல்லிட்டு போய்டுவான். பொதுவா,  வேகமா வண்டி ஓட்டுறது எனக்கு பிடிச்சதால, இந்த விளையாட்டு என்னை ஈர்த்தது.

 இப்படியே நாட்கள் போயிட்டு...,  2008 ல எனக்கு ஆஸ்திரேலியாவுல வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு. நான் கிளம்ப போறேன்னு சொன்னான்.  எனக்கு கஷ்டமாகிட்டு.., இப்போ மாதிரிலாம் செல்போன் கட்டணம்  அப்போ கிடையாது. நாங்க போடுற மொக்கைக்கு அவன் ஒரு நாள் சம்பளம் ஒரு நாள்லயே தீர்ந்து போகும். என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும்போது...,

தன்னோட, மெயில் ஐடியை தந்து இதுக்கு மெயில் பண்ணு, இது என்னோட “பிளாக்” அட்ரஸ் என் கவிதைகள்லாம் படிச்சுக்கோன்னு சொல்லிட்டு ஆஸ்திரேலியா பறந்து போய்ட்டான்.., எப்பவாவது  ஃபோன் மூலமா பேசிக்குவோம்.  அப்படி ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும்போது, எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு ஃப்ரெண்டோட பேரைச் சொல்லி, அவ, மெயில் அனுப்புறா. நீயும் இருக்கியே!!ன்னு  சொன்னான். வந்துச்ச்ச்ச்ச்ச்சு பாருங்க ஒரு கோவம்..., அவ PG டிகிரி வாங்குனவ. நாமளோ மூணாப்பு ஃபெயில்ங்குறதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம அவன் எழுதி கொடுத்த மெயில் ஐடியை எடுத்திக்கிட்டு நேரா பிரவுசிங் செண்டர்ல போய் நின்னேன்...,

இருங்க மூச்சு வாங்கிட்டு வரேன்...,

அங்க வேலைல இருந்த ஒரு குட்டி பொண்ணு, அக்கா! என்ன வேணும்ன்னு கேட்டுச்சு. ஒரு செட் தோசை, பூரி செட் கேட்டா குடுப்பியா?!ன்னு நக்கலா ஒரு கேள்வி கேட்டுட்டு,  ஒரு மெயில் அனுப்பனும்ன்னு சொன்னேன். போய்  6வது கம்ப்யூட்டர்ல போய் உக்காருங்க, நான் ஆன் பண்றேன்னு  சொல்லுச்சு.., சரின்னு போய் உக்காந்ததும் ஆன் ஆகி ஒரு தீவுல ஒரே ஒரு ஒத்தை பனைமரம் என்னை போல  ”ங்கே”ன்னு  நின்னுட்டு இருந்துச்சு. அப்பவே, சுதாரிச்சு வெளில வந்திருக்கலாம். என் கெரகம்...,

எக்ஸ்கியூஸ் மீ, இங்க வாம்மா!

என்ன வேணும்?! ஸ்கிரீன் இன்னும் ஓப்பன் ஆகலியா?!ன்னு கேட்டுக்கிட்டே அந்த பொண்ணு வந்துச்சு. இந்த அட்ரஸ்லாம் ஓப்பன் பண்ணனும்ன்னு சொன்னேன். என்னை ஏற இறங்க பார்த்துட்டு, இதுக்கூட தெரியலை, செட்தோசை, பூரி மசாலான்னு நக்கல் வேறன்னு முணுமுணுத்துக்கிட்டே சரின்னு சொல்லி என்னமோ படபடன்னு கீபோர்டை தட்டிச்சு. உடனே அவன் பிளாக் ஓப்பன் ஆச்சு. அவன் எழுதிய கவிதைலாம் ஏற்கனவே படிச்சு இருந்தாலும் ஸ்கீர்ன்ல பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அந்த சந்தோஷத்தோடவாவது வெளில வந்திருக்கலாம். அங்கதான் விதி என் நாக்குல நின்னு பாலே டான்ஸ் ஆடிச்சு...,

அந்த மெயில் ஓப்பன் பண்ணும்மா!!ன்னு அந்த புள்ளைக்கிட்ட சொன்னேன். அதும், டக்குன்னு தட்டி ஐடியை அடிச்சுட்டு பாஸ்வேர்டு குடுங்கன்னு கேட்டுச்சு. பாஸ்வேர்டா?! அப்படின்னா?! என்னன்னு கேட்டேன்?! என்னை புழுவைவிடவும் கேவலமா பார்த்துட்டு அது நம்ம வீட்டுக்கு சாவி போல. அது இருந்தாதான் திறக்கும்ன்னு சொல்லி, இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்க. எங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா என்னை அனுப்பிடுச்சு.

அப்புறம், அந்த அவமானத்தை ஈசியா மறந்துட்டேன். என் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும்போது குழந்தைகளும் புரிஞ்சுக்குற மாதிரி தமிழ்ல ”கம்ப்யூட்டர் கற்க”ன்னு ஒரு புத்தகம் கண்ணுல பட்டுச்சு. அதை வாங்கி வந்து படிச்சு, குறிப்பெடுத்து அதே பிரவுசிங் செண்டர்ல போய் மெயில் அனுப்பனும்ன்னு சொன்னேன். ஹெல்ப்புக்கு வரவா?!ன்னு கேட்ட பொண்ணை  I know very well ன்னு சொல்லி ஒரு மெயில் தட்டி விட்டப் பின் ஏதோ ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதி பாஸ் பண்ண மாதிரி அந்த பொண்ணை பார்த்துட்டுதான் வந்தேன்.

அப்புறம்,  3 மாசம் கிளாசுக்கு கம்ப்யூட்டர் பழக கத்துக்கிட்டேன். அப்பவும் அதிகப்பட்சம் நான் போறது 123greetings.com, என் ஃப்ரெண்ட் பிளாக், நிலாச்சாரல் இந்த மூணு மட்டும்தான். அப்படி ஒரு வைராக்கியத்துல கத்துக்கிட்டது தான் இன்னிக்கு சுமாரா கம்ப்யூட்டரை பத்தி தெரியும்.

ஆனாலும், இன்னமும் கம்பியூட்டரை கழட்டி மாட்ட தெரியாது. ப்ரிண்டர் செட்டிங்க்ஸ் தெரியாது. அதுக்குலாம் என் பையனைதான் கூப்பிடுவேன், அவனுக்கு எதாவது காரியம் ஆகனும்ன்னா, எதாவது ஒரு வயரை எடுத்திட்டு, டேய் கண்ணா!  சரி பண்ணித் தாடான்னு நான் கெஞ்சும்போது, தன்னோட ஆஃபரை சொல்லி காரியத்தை சாதிச்சுப்பான்.    எனக்கும், கம்ப்யூட்டருக்குமான முதல் அனுபவம். இதுப்போல எல்லாருக்கும் ஒரு அனுபவமிருக்கும். அதை, சொல்ல இதை ஒரு தொடர் பதிவாக்க போறேன். இதை தொடர,


ஆகிய ஐந்து பேரை கூப்பிடுறேன். அவஙக இதேப்போல அஞ்சு பேரை சிக்க வைக்கனும். அப்போதானே நம்மாளுங்க விவரம்லாம் வெளில வரும்.

டிஸ்கி: ரொம்ப நாளாச்சே தொடர்பதிவு இல்லியேன்னு தம்பி தமிழ்வாசி பிரகாஷ்க்கிட்ட  பேசிட்டு இருந்தேன். ஆமாக்கா, எனக்கும் தோணுது இந்த தலைப்புல நீங்களே போடுங்க. ஆனா, என்னை சிக்க வைக்காதீங்கன்னு கண்டிஷன் போட்டார். நாம யாரு?! சொன்ன சொல்லை காப்பாத்தும் ஆளா?! அதான் முதல் ஆளா தம்பியையே கூப்பிட்டுட்டேன்.



Tuesday, July 17, 2012

வந்தேன்.., வந்தேன்..., மீண்டும் வந்தேன் நானே!


                                                 
வணக்கம் உறவுகளே நலமா?  

என்னடா! ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு..., நீங்க  பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால்.....,

 SO, SORRY. ஏன்னா ?   I CAME BACK கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . ஏறத்தாழ 2 வருசமா வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை. ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்ன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது எனக்கு கேட்குது. 

 SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை,  குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு. 

   பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு ரொம்ப  முக்கியமாக்கும்ன்னுலாம் கேட்கப்படாது..., கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம். 

 இதுவரைக்கும் சைலண்டா இருந்த என் வலைப்பூ இனி,  தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைலாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது.)   

இனி,  பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும். அது உங்க தலையெழுத்து நான்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.  இல்லாட்டி தூங்கும்போது எதிர்க்க நிக்குறவங்க யாருன்னு தெரியாம போய்டனும்ன்னு இஷ்ட தெயமான ஆஞ்சிநேய சாமிக்கிட்ட வரம் வாங்கி வந்திருக்கேன்.

டிஸ்கி:  சில  சொந்த சூழ்நிலைகளின்  காரணமாக வலைப்பக்கம் வராம இருந்தாலும்,  நிறைய உறவுகளின் தரமான பதிவுகளை மிஸ் பண்ணி இருக்கேன்.  இனி தொடர்ந்து வந்து,  படித்து, கருத்துக்களை சொல்வேன்.

Friday, February 24, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம்....., தொடர்பதிவு

 ஒண்ணாம் வகுப்பு..,
தொல்லை தாங்க முடியலைன்னு அம்மாவின்
 தூண்டுதலால், இடது காதை வலது கையால்
தலை மேல் தொட முடிந்த தகுதியோடு
அடிவாங்கி, வீதியெல்லாம் புரண்டு கதற கதற
நல்ல நாள் பார்த்து விஜய தசமியில்
கண்டிப்புடன் உட்காரவைக்கப்பட்ட வகுப்பு....
ஒண்ணாம் வகுப்பு

இரண்டாம் வகுப்பு:
தூக்கம், கதை, விளையாட்டு என
மகிழ்ச்சியாய் கழிந்த பள்ளி வாழ்க்கையில்
சிலேட்டு குச்சி, பலகை,
அ, ஆ..., 1,2,...வாய்ப்பாடு
அரிச்சுவடி, வீட்டுப்பாடம் என
வில்லன்கள் புகுந்த வகுப்பு
இரண்டாம் வகுப்பு...,

மூன்றாம் வகுப்பு:
இரட்டைக்கோடு நோட்டு, கோணார் கடை தேன்மிட்டாய்
ஜவ்வு மிட்டாயில் செய்த தேள், வாட்ச், பாம்பு..,’
 பாண்டி விளையாட்டு, கிச்சு கிச்சு தாம்பூளம் 
விளையாட்டுடன், அட்டெண்டன்ஸ், சாக்பீஸ் 
கொண்டுவரும் அட்டெண்டர் வேலைகளோடு
 பாடங்களை கற்ற வகுப்பு...,
மூன்றாம் வகுப்பு.

நான்காம் வகுப்பு:
ஆங்கிலத்தின் அறிமுகம்...,
நண்பனின் சில்லு மூக்கை பதம் பார்த்து
தோழியின் பென்சிலை உடைத்து..,
வீட்டு பாடம் செய்யாமல் அரட்டை அடித்து
இருக்கும் மூணு பாடத்திலும் ஃபெயிலாகி
இது தேறுமான்னு ஆசிரியரையே
யோசிக்க வைத்த வகுப்பு....
 நான்காம் வகுப்பு.

ஐந்தாம் வகுப்பு:
பேனாவின் அறிமுகம்
கிளாஸ் டீச்சரின் செல்லம்
கபடி விளையாட்டில் சுட்டி
பரத நாட்டியம் , நாடகம்..., ஆனால்
படிப்பில் மட்டும் பூஜ்ஜியம், என
ஆரம்ப பள்ளி படிப்பை முடித்த வகுப்பு...,
ஐந்தாம் வகுப்பு.

ஆறாம் வகுப்பு:
புது பள்ளி, புது நட்பு,
புதுசா சீவிய முள் கொம்பு..,
கண்டிப்பான வரலாற்று ஆசிரியர் மற்றும்
கனிவான கணக்கு ஆசிரியரின் தீவிர முயற்சியில்..,
மூளைக்குள் படிப்பு ஏற ஆரம்பித்த வகுப்பு....
ஆறாம் வகுப்பு.

ஏழாம் வகுப்பு:
கபடி, கோ கோ, ஓட்டப்பந்தயம், என
கலக்கி பி.டி சாரின் செல்லம்...,
தமிழாசிரியரின் வற்புறுத்தலால்
பஞ்சதந்திரகதைகளும், அம்புலி மாமா புத்தகமும்
அறிமுகமான வகுப்பு...,
ஏழாம் வகுப்பு.

எட்டாம் வகுப்பு:
கிராஃப் நோட், ஜியாமிண்ட்ரி பாக்ஸ்..,
கட்டுரை போட்டியில் முதல் பரிசு..,
சைக்கிள் பழக, எதிர் பாலினர் மீது
 புரியாத ஈர்ப்பு.., அம்மாவுக்கு துணையாய்
வீட்டு காரியங்களிலும், அப்பாவுக்கு
கணக்கு பிள்ளையாய் மாறி உலகத்தை
படிக்க துவங்கிய வகுப்பு...,
எட்டாம் வகுப்பு.

ஒன்பதாம் வகுப்பு:
மகளிர் பள்ளி, தாவணியே சீருடை....,
அக்காவின் சாயம்போன சைக்கிள்
கிடைத்தற்கே ஃபோர்ட் கார் கிடைத்த சந்தோசம்,
”பெண்ணாய்” என்னை உணர்த்தியது...,
ஒன்பதாம் வகுப்பு.

பத்தாம் வகுப்பு....,
டியூஷன், தினமும் டெஸ்ட்,
டி.வி, சினிமா, அரட்டை கச்சேரி,
தூக்கத்துக்குலாம் தடா விதிக்கப் பட்டாலும்
டிமிக்கி குடுத்து அனுபவித்து..., விளையாட்டாய்
மார்க் அள்ளி பெற்றோருக்கும், பள்ளிக்கும்
பெருமை சேர்த்த வகுப்பு...,
பத்தாம் வகுப்பு.

பதினொன்றம் வகுப்பு...,
கணக்கு பாடம் எடுத்தால் எந்த
 பட்டப்ப்டிப்புக்கும் போகலாமென நம்பி
சேர்ந்து..., காமர்ஸ் குரூப் மாணவர்களை
 ஏளனமாய் பார்த்து, லேப்ல எலி அறுக்கும்போது
மயங்கி விழுந்து..., பொது தேர்வு அடுத்த வருடம்தானே
என அசால்ட்டாய் இருந்த வகுப்பு...,
பதினொன்றம் வகுப்பு.

பனிரெண்டாம் வகுப்பு:
இன்னும் நாள் இருக்கு என 
அரை பரிட்சை வரை அலட்சியமாய் கழித்து..,
புத்தனுக்கு போதி மரம் போல், பள்ளி அரசமரம் 
எதிர்காலம் பற்றி போதிக்க...,
அக்கறையாய் படித்து 
ஆட்டோகிராஃப், கவிதை, திருமணமா? கல்லூரியா? என
பள்ளி வாழ்க்கை முடிந்த வகுப்பு...,
பனிரெண்டாம் வகுப்பு.

டிஸ்கி: போன வாரம் என் பொண்ணுக்கு ஸ்கூல்ல ஃபேர்வெல் பார்ட்டி.   தனக்கொரு கவிதை வேணும்ன்னு கேட்டாள்.  சில கவிதைகள் எழுதி காட்டுனேன். எதுவும் அவளுக்கு பிடிக்கலை. எப்படி வேணும்ன்னு கேட்டேன்.., அவ என் பள்ளி வாழ்க்கை மொத்தமும் ஒரே கவிதையில் வந்துடனும்ன்னு கண்டிசன் போட..., எப்பவோ எங்கேயோ படிச்ச ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. அந்த கவிதையில் இப்படித்தான் வகுப்பு வாரியா பிரிச்சு எழுதியிருப்பார். அந்த சாயல்ல எழுதினதுதான் இந்த கவிதை. அவளுக்கு தகுந்தாற்போல் எழுதி அவக்கிட்ட குடுத்து, எனக்கு தகுந்தாற்போல் எழுதி பதிவாக்கிட்டேன். இந்த கருப்பொருள் எல்லாருக்கும் ஒத்துவருமே அதனால் இதையே ஏன் ஒரு தொடர் பதிவாக்கக்கூடாதுன்னு தோணுச்சு.

அதனால்,   
ஆகியோரை இந்த தொடர் பதிவை தொடர  அழைக்கின்றேன். இந்த ஐந்து பேரும் தங்களுக்கு பிடித்த ஐந்து பேரை அழைக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொல்கிறேன் சாரி.., கேட்டுக்கொள்கிறேன்.