Friday, March 10, 2017

ஹோலி ஹோலி... சுப லாலி லாலி - ஹோலி பண்டிகை வரலாறு

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.  இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
ஹோலி பண்டிகையின் மற்றொரு வரலாறு ;
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான்.  இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன்,  மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல்  மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும்,  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள்  மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். 
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.
சைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...

ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். 
இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, March 08, 2017

மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா?!


உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?
பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.
இனி மகளிர் தினம் உருவான வரலாறு பார்ப்போம்..


மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றில் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! .


பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரேக்கத்தில்...

 பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சுப் புரட்சியின்போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்தன்மை வேண்டிப் போராடினார்கள்.



ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள, கோஷங்கள் வானைப் பிளக்க, அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரெனக் கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களை சமாதானப்படுத்தினான். அது இயலாமல் போகவே, அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.
ஐரோப்பாவில்...

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட, ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8-ஆம் நாள்தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அமெரிக்காவில்....

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியால் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதன்பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. 1910 இ-ல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடிப் பெண்கள் தினத்தைச் சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1911 மார்ச் 19-இல் முதல் சர்வதேசப் பெண்கள் தினம் இலட்சக்கணக்கானப் பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் கருகி இறந்தனர். இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.

ரஷ்யாவில்.....

1917-இல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்தச் சமயத்தில் ரொட்டிக்காகவும், அமைதிக்காகவும் பெண்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23. ஆனால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள். ஆகவேதான் மார்ச் 8 இல் பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது..ஐ.நா.&வும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமத்துவக் கோரிக்கைகளுக்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி, பெண்களுக்குச் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேசக் கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்தது.

மகளிர் தினமான இந்நாள்...

1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

1977-இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் நலன் குறித்துச் சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.
அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின. பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சி நான்கு வழிகளில் வழிகாட்டி, முயற்சியும் செய்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்கள் எனவும் முண்டாசுக் கவிஞன் பாரதி முழங்கினான். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்!
பெண்கள் பற்றிய செய்திகள் சில...

* உலகில் உள்ள ஏறத்தாழ 3 கோடி அகதிகளில் 80 முதல் 85 சதவித்தினர் பெண்கள்.

* தினமும் பிரசவத்தின் போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள்.

* ஸ்வீடன், கனடா, நார்வே, அமெரிக்கா, பின்லாந்துப் பெண்கள் ஆயுள், கல்வி, வருமானம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

* பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து. 1893-ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள்.

* இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர். சர்வதேச நாடாளுமன்றங்களில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

* ஸ்வீடனில் 1995-இல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர். அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை
நன்றியுடன்..








ராஜி.


Friday, March 03, 2017

பொங்கல் வைப்பதில் கின்னஸ் சாதனையா?!

படி ஏறுதல், விமானத்திலிருந்து குதித்தல், கல்யாணம்,  கோலம், பூசணிக்காய் உடைத்தல், முத்தம்......ன்னு எத்தனையோ கின்னஸ் சாதனையை பார்த்திருப்போம்.ஆனா, ஒரு மத சடங்குல?! இது வெளிநாட்டுலன்னா நம்புவோம். ஆனா, இந்த சாதனை இந்தியாவுல இந்துக்கள்லதான் இருக்கு.

பெண்களின் சபரிமலை என்று பேரெடுத்த ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் பெண்களால் மட்டும் வைக்கும் பொங்கல்தான் கின்னஸ்ல பதிவாகியிருக்கு.. அங்க  ஏன் பெண்கள் மட்டும் பொங்கல் வைக்குறாங்க?! ஏன் ஆம்பிளைகளுக்கு இடமில்ல... கின்னஸ்ல எப்ப பதிவாச்சு?! பொங்கல்ல என்ன சிறப்பு?! தமிழகத்துலகூடதான் வித விதமான பொங்கல் வைக்கும் வைபவம் நடக்குதுன்னு யோசிக்குறவங்களுக்கு பதில் இதோ......
கேரளம் உருவெடுக்க காரணம் பரசுராமர். அவர், 108 சிவாலயங்களையும், 108 அம்மன் கோவில்களையும் உருவாக்கினார். கேரளாவில் அம்மன் கோவில்கள் நிறையவே இருந்தாலும் தனிப்பட்ட பெயரால் அழைக்கப்படுவதில்லை. பகவதி என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் எல்லா பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லாத சிறப்பு “ஆற்றுக்கால் பகவதி அம்மன்” கோவிலுக்கு உண்டு.

பராசக்தியின் பக்தர் ஒருவர், ’’கிள்ளி” என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணினார் அந்த பக்தர். கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ”என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விடமுடியுமா? என்று கேட்டாள். அவ்வாறே மறுகரையில்  கொண்டு போய் சேர்த்தார்.
ஆனால், சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார். 

அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள். 

மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு. 
இக்கோவிலை பற்றிய மற்றொரு கதை....


கற்புக்கரசியும், சிலப்பதிகாரத்தின் நாயகியுமான கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்றும் கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல, என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி. 


பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினார் என்றும், அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது என்றும் கூறுகிறார்கள். 
கேரள மற்றும் கேரள தமிழக எல்லை வாழ் பெண்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி இக்கோவிலுக்கு செல்கின்றனர். அதனால் இக்கோவில பெண்களின் சபரிமலை என்று பெயர் பெற்றது. கேரளத்து மக்கள் பகவதி அம்மனை தங்கள் தாயாக பாவித்து தங்கள் இல்லத்து விசேசத்துக்கு அம்மனுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள். ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீ சக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவருக்குப்பின், வித்யாதிராஜ சட்டம்பி  சுவாமிகள் இத்தலத்தில் வெகுகாலம் தங்கி பூஜை செய்துள்ளார்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டுள்ளது.. கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 
கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. 

மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன. 
அம்மனே பொங்கலிடும் ஐதீகம்;

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். 

ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள். 

அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர். 

கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது
இனி கின்னஸ் சாதனை பற்றி பார்ப்போம்...

1997–ம் ஆண்டு பிப்ரவரி 23–ந் தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அது ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதே போல் 2009–ம் ஆண்டு மார்ச் மாதம் 10–ந் தேதி நடந்த பொங்கல் விழாவின் போது 25 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்ததாக முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வைக்கும் திருவிழா. 

உலகப்புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா வரும் 11/3/2017 நடைப்பெற உள்ளது.. இயன்றவர்கள் சென்று பகவதி அம்மன் அருள் பெறுவோம்.
வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
நன்றியுடன்..
ராஜி..

Thursday, March 02, 2017

பாலியல் குற்றங்களுக்கு இத்தனை விதமான தண்டனைகளா??!!

 உலகத்துக்கே பாலியல் பற்றி எடுத்து சொன்ன தமிழ்நாட்டில் இன்று வயது வித்தியாசமின்றி  பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதோடு இன்னுயிரையும் இழக்கின்றனர். இதற்கு பாலியல் பற்றிய முறையான கல்வியும், விழிப்புணர்வும் இல்லாததாலும், கடுமையான சட்டங்கள் இல்லாததே காரணமாய் அமைகின்றது.
மதம், குடும்பம், பொருளாதாரம் உட்பட  பலவித கட்டுப்பாடுகளை போராடி தகர்த்து இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், இப்படிப்பட்ட செயல்களால் இனி பெண்பிள்ளைகளை பெற்று வளர்க்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழப்போவது நிச்சயும். தமிழ்நாடே உசிலம்பட்டியாய் மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்த மாதிரியான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை மிருகங்களைவிட கீழானவர்கள். ஏனெனில் எந்த மிருகமும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருக்க பாலியல் கல்வியும், வளர்ப்பு முறையும், சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கடுமையான தண்டனை இல்லாவிட்டால் சிறை அல்லது அபராதம்தானே என்ற அலட்சியம் வரும். மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுவர். ஆனால், நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாததாலேயே இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகம் நடைப்பெறுகிது.  மற்ற நாடுகளில் இருப்பதுப்போல கடுமையான தண்டனைகள் கொடுத்தால் ஓரளவு குறையும்.

இனி பல்வேறு நாடுகளில்  கொடுக்கும் கடுமையான தண்டனை பற்றி பார்ப்போம்...


சீனா;

 சீனாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். பாலியல் குற்றங்களிலேயே வக்கிரமான, சைக்கோக்களுக்கு ஆண்மை நீக்கப்படும். உதாரணமாய் சீனாவின்  கான்சு மாகாணத்தின் வுஷுன் நகரின் அருகேயுள்ள கிராம ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த லி ஜிஷுன் என்பவர் கடந்த 2011-2012 ஆண்டுவாக்கில் 4 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 25 மாணவிகளிடம் வகுப்பறை, தங்கும் விடுதி மற்றும் அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதியில் பாலியல்ரீதியாக முறைதவறி நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கல்வித்துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிகவும் குழந்தைத்தனமாகவும், அப்பாவியாகவும் இருக்கும் சிறுமிகளை தேர்ந்தெடுத்த லி ஜிஷுன், தனது இச்சைக்கு அவர்களை இரையாக்கிக்கொண்டது தெரியவந்தது. அவர் மீது கோர்ட்டில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபணமாகி மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரது ஆண்மையும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான்;

ஈரான்  நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரியான செயலில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக ஈரானில் மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் கொராசான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  சீனாவுக்கு அடுத்ததாக ஈரானிலேயே அதிகமானோர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மரண தண்டனை அவசியம் எனவும் தீவிரமான நீதிவிசாரணைகளின் பின்னரே மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதாகவும் ஈரானிய அரசாங்கம் கூறுகிறது. கொலைபாலியல் வல்லுறவு, ஆயுத முனைக்கொள்ளைபோதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான்;

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்துநான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள். அதேப்போல  திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்பு கொண்டால் ஆப்கானிஸ்தானில் ஆணுக்கும் பெண்ணுக்கும் 100 கசையடிகள். 20-24 வயதுகளுக்கு உட்பட்ட இருவருக்கும் இந்த கசையடி தண்டனை வழங்கப்பபட்டது. அவர்கள் திருமணத்துக்கு முன்பு  பாலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்த இருவருக்கும் கசையடி வழங்கி தண்டனை நிறைவேற்றியதாக மத்திய மாகாணமான கோர்-இல் உள்ள அதிகாரி ஒருவர் நாளிதழில் பேட்டியளித்துள்ளார். இப்படி பலவிதமான தண்டனைகள் இந்த பாலியல் குற்றங்களுக்கு கொடுக்கப்படுகிறது
ஆப்கானிஸ்தானில் குடும்பத்தினரோடு காரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்களை வழிமறித்த கும்பல் ஒன்றுஅவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடியதோடு நில்லாமல்துப்பாக்கி முனையில் ஒரு கர்ப்பிணி உட்பட காரில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இவர்களில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  குற்றம்சாற்றப்பட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த பலாத்காரம் மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்ஸ்; .

பிரான்ஸ்  நாட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்குமரண தண்டனையோ அல்லது சுடவோ செய்யமாட்டார்கள். மாறாகஅவர்களுகு 15 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். குற்றவாளியின் மோசமான செயலைப் பொறுத்து, 30 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறையிலேயே இருக்கக்கூடும்.
வடகொரியா;

வட கொரியாவில் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.
ரஷ்யா;

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஸ்யாவிலும் நம் நாட்டைப்போல கடுமையான சட்டங்கள் இல்லை. இங்குபாலியல் பலாத்காரம் செய்தால் 3-6 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். மோசமான சூழ்நிலையில் 10-20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.
அமெரிக்கா;
 அமெரிக்காவில் பாலியல் பலாத்காரத்திற்கு அந்நாட்டு சட்டத்தின் கீழ்சில வருட சிறை தண்டனை முதல் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய மரண தண்டனை வழங்கப்படும். ரஷ்ய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அமெரிக்கர் ஒருவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் அப்ரமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். அப்ரமோவ்கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூனில் ரஷ்யாவுக்கு சென்றிருந்தபோது 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். போலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்ரமோவ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்ரமோவ்சிறுமியை ஈவிரக்கமின்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஓடிஸ் ரைட் தீர்ப்பளித்தார்.
சவுதி அரேபியா;

சவுதி அரேபியா உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும்படியான தண்டனை வழங்கப்படுகிறது எனலாம். ஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால்பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டிவிடுவார்கள்.

இந்தியா;


இந்தியாவில் பாலியல் பலாத்காரத்திற்கான சட்டம் மிகவும் மோசமாக உள்ளது. டெல்லி நிர்பயா வழக்கில் ஈடுபட்டவனுக்கு தையல்மெஷின் கடை வைத்து கொடுத்த கூத்துலாம் இந்தியாவில் நடந்தேறியது. ஜாதி, மதம், அரசியல், பண தலையீடுகளால் இத்தகைய பல குற்றங்கள் வெளிஉலகிற்கு வராமலே புதைந்துள்ளது. இதனால்தான் இந்தியாவில் சமீப காலமாக பல பெண்கள் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும்இந்திய அரசாங்கம் இப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குகிறது. அதனால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கு சவுதியைப் போன்று மிகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான்யாரும் இந்த மாதிரியான வெட்கக்கேடான செயலில் ஈடுபடமாட்டார்கள்.
இத்தகைய பாலியல் குற்றங்கள் இனி தொடர்ந்து நடைப்பெறாமலிருக்க பாலியல் கல்வி, குழந்தை வளர்ப்பில் மாறுதல், உணவு கட்டுப்பாடு, சமூக மாற்றத்தோடு முறைப்படுத்தப்பட்ட ஆன்மீகமும் கொண்டு வரவேண்டும்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்...
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, March 01, 2017

ப்ளஸ் டூ தேர்வெழுதுவதில் இத்தனை விசயம் இருக்கா?!

தேர்வுக்கு செல்லும்  மாணவர்கள் கவனத்திற்கு:
1.தேர்வு நடைப்பெறும் இடத்திற்கு தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுங்கள்.. இது தேவையற்ற பதட்டத்தை தடுக்கும். 

2.  தேர்வுக்கு முதல் நாளிலேயே தேர்வுக்கு கொண்டு செல்ல வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிண்ட்ரி பாக்ஸ் , ஹால் டிக்கட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
3. வீட்டில் தேர்வுக்கால அட்டவணையை அனைவருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் எந்த தேதியில் எந்த தேர்வு என்பது குறித்து சந்தேகம் ஏற்படாது. 

4. தேர்வு மையத்திற்கு முன்னதாகச் சென்றுவிட்டாலும் தேர்வு மையத்தில் யாருடனும் தேவையில்லாமல் அரட்டை அடிப்பதும் பாடம் சம்பந்தமானதையும்கூட விவாதம் செய்யாதீங்க.  இதை படிச்சியா?!  அந்த கேள்வி கண்டிப்பா வரும்ன்னு வீண் குழப்பங்களை அது உருவாக்கும்.
5. தேர்வு மையத்திற்கு சென்றபின் நேரமிருந்தால் முக்கிய குறிப்புகளை பார்க்கலாம். புதிதாய் எதையும் படிக்காதீங்க. 

6. தேர்வு அறைக்குள் செல்லும்முன் உங்களிடம் எழுதப்பட்ட தாள்களோ அல்லது ஜெராக்ஸ் பிரதிகளோ இருக்கிறதா என பார்த்து அதை  வெளியிலேயே போட்டு விடுங்கள். கவனக்குறைவாய்  தேர்வெழுதும்போது  எதாவது தாள் இருந்து அறை கண்கானிப்பவரிடமோ பறக்கும் படையிடமோ மாட்டிக்கொண்டால் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு தேர்வெழுத முடியாது.

7. அறைக்குள் நுழைந்ததும் தங்களுக்குரிய இடத்தை கண்டுப்பிடித்து அமர வேண்டும். அங்கு சிறிது நேரம் மூச்சு பயிற்சி செய்தால் நலம். இதனால் மன அழுத்தம் குறையும்.

8.  கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் பதட்டப்படாமல் படித்துப் பார்த்து கடினமான, தெரியாத கேள்விகள் வந்திருந்தாலும் அதை பார்த்து பதட்டப்படக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். இப்படிச் செய்தால் தன்னம்பிக்கை பிறக்கும். மற்ற கேள்விக்களுக்கான பதில்களும் எளிதில் ஞாபகத்தில் வரும். 
9. தேர்வு எழுதும்போது கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

10.  தேர்வு அறையில் அருகில் இருக்கும் மாணவர்களிடமிருந்து பேனா, பென்சில் போன்ற பொருட்களை வாங்கக்கூடாது. தேர்வின் போது தேவையில்லாமல் திரும்பி பார்த்தல், சைகை மொழியில் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் ரிலாக்சாக அமருங்கள். தேர்வு நேரத்தில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை  பார்க்காமல், தேர்வு எழுதுவதிலேயே முழுக்கவனம் செலுத்துங்கள். 

11. தேர்வு நேரமான மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டாம். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக விடைகளை எழுதி முடித்துவிட்டு, மிச்ச நேரத்தை எழுதிய விடைகள் சரியாக இருக்கிறதா, விடைத்தாளில் தேர்வு எண் சரியாக இருக்கிறதா? விடைத்தாளில் கேள்விக்கான  எண் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். விடைத்தாளை உங்களது மேஜையிலேயே வைக்காமல் கண்கணிப்பாளர் வசம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்.
இனி மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..

உங்கள் குழந்தைக்கு தேர்வு பயம் வந்தால்.., நீங்கள்  கவலை கொள்ளாமல் உங்கள் குழந்தைக்கு தைரியமூட்டுங்கள். தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருங்கள்.....

பெரும்பாலும் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட தேர்வு என்றாலே காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். ஏதோ ஒருவித படப்படப்பு வயிற்றில் பட்டாம்பூச்சி ஓடுவது போல தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோர்களான நீங்கள் தான் உதவ வேண்டும்.

பொதுவாக இந்த பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வருவது தான். சில மாணவர்கள் தேர்வு எழுதுவதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சரியாக சாப்பிடாமல், இரவில் சரியாக உறங்காமல் ஒருவித பயத்துடனே காணப்படுவார்கள் அது மிகவும் தவறான விஷயமாகும். தேர்வுக்கு செல்லும் முன் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.
தேர்வுக்கு செல்லும் முன் முதலில் என்ன தேர்வு எழுத போகிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்வது நல்லது. சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் மூளைக்கு சுறு சுறுப்பு ஏற்படும்.

சரியாக படிக்காத குழந்தையாக இருந்தாலும், முக்கியக் கேள்விகள், மிகவும் எளிதான கேள்விகளை நன்கு படித்துக் கொண்டால் போதுமான கேள்விகளுக்கு பதிலளித்து தேர்வில் தேர்ச்சி பெறலாம் எளிதாக.
தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த வித மன குழப்பமும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஏற்படும் எந்த பிரச்சனையும் பிள்ளைகள் மனதை பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது பெற்றோர்கள் கடமையாகும்.

தேர்வு எழுதி வந்தவுடன், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் எழுதினே, இந்த கேள்வியை ஏன் விட்டு வந்தே, நூறு மார்க்குக்கு மட்டும்தானா எழுதினேன்னு கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்யாதீர்கள். அது அவர்களை பதட்டப்படுத்தி அடுத்து வரும் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது பதட்ட பட வைக்கும்.

தேர்வெழுதி வந்தவுடன் சிறிது நேரம் தூங்கவோ, இல்லை மெல்லிய இசையையோ ரசிக்க விட்டு பிறகு படிக்க விடுங்கள். அது புத்துணர்ச்சியுடன் அவர்களை படிக்க வைக்கும்.
ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்று கொள்ளும் பக்குவம் உங்களுக்கிருப்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அது, அவர்களை தவறான முடிவுகளை எடுக்க வைக்காதிருக்கும்.

தேர்வெழுதும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் என் வாழ்த்துகள். எல்லாரும் தேர்வில் வெற்றி பெறனும்ன்னு இறைவனை வேண்டிக்குறேன். அப்படியே என் மகன் ராம்ஜியும் இந்த வருசம் பரிட்சை எழுதப்போறான். அவனுக்காக நீங்க வேண்டிக்கோங்க.
தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கபடுத்துங்கள் தேர்வில் வெற்றி பெற துணையாய் இருங்கள்.  

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.....
நன்றியுடன்,
ராஜி.