சிப்ஸ், கேக், பானிப்பூரி, பிஸ்ஸா, பர்கர்,சாக்லேட்ஸ் நான் சின்ன புள்ளையா இருந்தபோதுலாம் இவ்வளவு நொறுக்குத்தீனி இருந்துச்சான்னு தெரியலை. சம்பளத் தினத்தன்னிக்கு இனிப்பும், காரமும் வாங்கி வருவார். எப்பவாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிங்க இனிப்புலயும் காரத்துலயும் கால் கிலோவும் வாங்கி வருவாங்க. யாருக்காவது கல்யாணம் ஆனா, காராசேவு, மோட்டாசேவு, லட்டு, பாதுசா, ஜாங்கிரி,மிக்சர், அதிரசத்துல நம்ம அதிர்ஷ்டத்துக்கு ஏத்த மாதிரி கிடைக்கும்.
அப்பா கொடுக்கும் கைச்செலவு காசுல பொம்மை பிஸ்கட், தேன் மிட்டாய், கலர் அப்பளம், கொய்யாப்பழம், ஐஸ் இதெல்லாம் வாங்கலாம். எதாவது பண்டிகைன்னா முறுக்கு, தட்டைன்னு அம்மா செஞ்சு கொடுப்பாங்க. அது தவிர ஸ்கூல்ல இருந்து வந்ததும் தட்டுல சாதம் போட்டு தருவாங்க. மழை நேரத்துல எதாவது செஞ்சுத் தருவாங்க. அதுல உப்புமா, கோதுமை வடை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டுன்னு எதாவது இருக்கும்.
நாம சின்ன வயசுல சாப்பிட்ட கேழ்வரகு அடை எப்படி செய்யுறதுன்னு இன்னிக்கு கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர்
முருங்கைக் கீரை - ஒரு இணுக்கு
காய்ஞ்ச மிளகாய் -2
பூண்டு - பத்து பல்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
ஒரு பாத்திரத்துல கேழ்வரகு மாவை நல்லா சலிச்சுக்கிட்டு, அதுல சுத்தம் செஞ்ச முருங்கைக்கீரையை போடுங்க.
கழுவி பொடியா நறுக்கின வெங்காயத்தைப் போடுங்க.
பூண்டையும், மிளகாயையும் மிக்ஸில போட்டு அரைச்சு சேருங்க.
தேவையான அளவு உப்பு சேருங்க.
கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைஞ்சுக்கோங்க.
ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல லேசா எண்ணெய் தடவி, பிசைஞ்சு வச்சிருக்கும் மாவுல கொஞ்சம் எடுத்து வட்டமா தட்டிக்கோங்க. மாவு தண்ணியா இருக்குற மாதிரி இருந்தா துணில தட்டிக்கலாம். நான் துணிலதான் தட்டிக்கிட்டேன்.
அடுப்புல, தோசைக்கல் சூடானதும், வட்டமா தட்டின மாவைப் போட்டு லேசா எண்ணெய் ஊத்தி ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.
கேழ்வரகு அடை ரெடி! சூடான அடைக்கு வெல்லம் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும். சிலர், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம், கீரைலாம் லேசா வதக்கியும் சேர்ப்பாங்க. ப.மிளகாய் கூட சேர்த்துக்கலாம்.
மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், முருங்கைக் கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புகளும் உடம்பில் சேர்ந்த மாதிரியும் ஆச்சு!
கேழ்வரகு அடையை ஸ்கூல்ல இருந்து வந்ததும் என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க. மாசம் ஒரு தரமோ இல்ல ரெண்டு தரமோ செஞ்சுக் கொடுப்போம்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்
ராஜி.







































