Sunday, August 27, 2017

ஊருப்பேருக்காக கோவிலா?! இல்ல கோவிலுக்காக ஊர்ப்பேரா - ஆவணி ஞாயிறுநில அமைப்புபடி நாம் வாழும் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு ஐந்தா பிரிச்சிருக்காங்க நம் முன்னோர்கள்.   எல்லா  ஊரும் எதாவதொரு கேட்டகிரில வந்திரும். ஒருசில ஊர்கள் மட்டும் ஓரிரு நில அமைப்புல இருக்கும். ஆனா கன்னியாக்குமரி  மட்டு ஐந்து நில அமைப்புலயும் வரும். மலைகள், மணல், விளைநிலம், கடல், காடுன்னு எல்லா நில அமைப்பும் சேர்ந்த அழகானதொரு ஊர் கன்யாக்குமரி.  கன்யாக்குமரி மட்டுமில்ல அந்த மாவட்டமே அழகானதாதான் இருக்கும். இந்த அழகான மாவட்டத்துலதான் நாகர்கோவில் ஊர் இருக்கு.

மதுரை, கும்பக்கோணம், காஞ்சிபுரத்துலதான் கோவில் அதிகம். இவைகளைதான் கோவில்நகரம்ன்னு சொல்வாங்க. ஆனா இந்த ஊர்களுக்குலாம் இல்லாத சிறப்பு ஊர்ப்பெயரின் பின்னாடி கோவில் இருக்குறது. இதுமாதிரி கோவில்ன்னு ஊர்பெயரோடு பிற்பாதில இருக்குறது ஒருசில ஊர்களே. அதுல இந்த நாகர்கோவிலும் உண்டு. அதே மாதிரி இந்த ஊர்ல எந்த தெய்வத்தோட கோவில் இருக்கோ அது ஊரோட முற்பாதில இருக்கு, இந்த ஊரோட தெய்வம் நாகர்... நாகர் குடிக்கொண்டிருக்கும் கோவிலை கொண்டதால இந்த ஊருக்கு நாகர்கோவில்ன்னு பேர் வந்திருக்கும் போல... பேருக்காக கோவில் வந்துச்சா இல்லை கோவில் இருக்குறதால பேர் வந்துச்சான்னு ஒரு  பட்டிமன்றம் சன் டிவில வைக்கனும்.  நான் முன்ன எப்பயோ போனது இக்கோவிலுக்கு.. அதை வச்சு இந்த பதிவை தேத்துறேன். படங்கள் மட்டும் கீதாக்கா, துளசி சாருக்கு அன்பளிப்பா.... 


கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான கோட்டாறுதான் இப்ப நாகர்கோவில்ன்னு அழைக்கப்படுது (விவரம் சரியா கீதாக்கா, துளசி சார்) நாகர்கோவில்ன்னு பேரு வரக்காரணமான இந்த  நாகராஜார்  கோவிலில் இரண்டு பிரதானமான சன்னிதிகள் உள்ளன. அதுல ஒன்னு ஓலைக் கூரையிலமைந்திருக்கும் சன்னிதியில் நாகக் கற்சிலை உள்ளது. மற்றொரு சன்னிதி, கருங்கற்களால் விமான வடிவில் அமைக்கப்பட்டுள்ள நாகராஜா சன்னிதியாகும். இச்சன்னிதியில், தலைக்குமேல் ஐந்தலை நாகப்படத்துடன் கூடிய ஆண் தெய்வத்தின் சிற்பம், இரு தேவியரின் சிற்பங்களுடன் காணப்படுகிறது.
இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில்தான்.  மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகள் தனிச்சன்னிதியில் இருக்கும். தனிச்சன்னிதியில் இருப்பதற்கும் மூலவராய் இருப்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.  நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு மட்டுமே உரிய சிறப்பமாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன.  இன்று மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும். மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடுநடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. 

இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டுன்துன்னு தெரியாது. இங்கிருக்கும் நாகராஜர் சுயம்புமூர்த்தி. கோயில் இருக்கும் இடம் ஒருகாலத்தி  புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது.
இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்தபோது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.  இதைக்கண்டு பயந்துப்போன அந்தப்பெண் அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று ஆட்களை  அழைத்து வந்து இடத்தை காட்டினாள். மக்கள் உடனே அங்கு, தங்களிடமிருந்த ஓலைகளால் கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில், உதய மார்த்தாண்டவர்மா மன்னர்  இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும்  விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன்.  ஆதலால் அதை  மாற்ற வேண்டாம்'' ன்னு சொன்னதால அந்த திட்டம் கைவிடப்பட்டு மூலவரின் கருவறை மட்டும் இன்றுவரை ஓலைக்கூரையின்கீழ் உள்ளது.
இந்த கோயிலின் உள்ளே போகும்போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜனும்பத்மாவதி என்ற நாகராணியும் ஆகும்.   இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் இருக்கு.  இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக இருக்கு.
  மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். ­மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும்  பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.  

பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நன்று நாகருக்கு பால் ஊற்றுவதைகாணமுடியும்.  ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது.  திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.

இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து

காளிகேசம் போகும் வழி கீதாக்கா...

இந்த கோவில்ல இருக்கும்  துர்க்கை சிலை, இங்க இருக்கும் நாக தீர்த்தத்தில் கிடைச்சதால "தீர்த்த துர்க்கை"  ன்னு சொல்றாங்க.  துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம்  ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள்  உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 
கடுக்கரை...
வட்டக்கோட்டை...

மாத்தூர் தொட்டிப்பாலம்...
மைலாடி குகைப்பாலம்...
வள்ளியூர் பைபாஸ்
 இந்த இடத்தோட  பேர் மறந்துப்போச்சே....

1905ல எடுத்த புத்தேரி படம்...
புத்தேரி....

 வடச்சேரி பஸ்ஸ்டாப்
ரோடு மேல ஆறு.. வில்லுக்குறி.

படங்கள் போதுமா கீதாக்கா?!

தமிழ்மணம் ஓட்டு
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470401

   
நன்றியுடன், 
ராஜி.

17 comments:

 1. நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவில் சிறு வயதில் பார்த்தது
  நினைவில் இல்லை. மீண்டும் பார்க்கும் ஆசையை தூண்டி விட்டது படங்களும் செய்திகளும்.

  ReplyDelete
 2. நாகர்கோவில் இருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில், திருநெல்வேலியில் அல்ல.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் எனக்கு சொன்ன பக்கி நெல்லை மாவட்டம்ன்னுதான் சொல்லிச்சு,. அதுமேல இருந்த நம்பிக்கைல நம்பி அப்படியே பதிவிட்டேன். சாரி சகோ. திருத்திட்டேன்.

   Delete
 3. நாகர்கோவில் தகவல்கள் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

  த.ம. +1

  ReplyDelete
 4. "நாகர்" கோவில் பற்றிய தகவல்களும், படங்களும் சிறப்பு.

  ReplyDelete
 5. ஹலோ ராஜி நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்பா! திருநெல்வேலி இல்லை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சரிங்க கீதா. திருத்திட்டேன். நண்பர் ஒருவர் சொன்னார், அதனால நம்பிட்டேன். சாரி

   Delete
 6. ராஜி மிக்க மிக்க மிக்க நன்றி!! எங்கள் ஊரைக் கண்ணாரக் கண்டேன். பழைய நினைவுகள் எங்கள் இருவருக்குமே வந்தது. துளசி நாகர்கோவிலில் கல்லூரிப்படிப்பு படித்தார். நான் நாகர்கோவில்காரி. துளசி கேரளத்தவர் ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர். இப்போது கேரளத்தில்தான்.

  என் ஊர் திருப்பதிசாரத்தின் அடுத்த கரை புத்தேரி. எங்கள் ஆற்றங்கரையில் இருந்து பார்த்தாலே புத்தேரி ரோடு தெரியும். வில்லுகுறி, மாத்தூர் தொட்டிப் பாலம் காளிகேசம், கடுக்கரை ஆஹா அனைத்தும் நான் எத்தனை முறை சென்றிருப்பேன்...மிக்க மிக்க நன்றி ராஜி! பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். புத்தேரி ஓல்ட் படம் கூட என் மாமாவிடம் இருந்தது. ப்ளாக் அண்ட் வொயிட்...அதே போன்று தெரிசனங்கோப்பு என்ற ஊரில் ஆயுர்வேத மருத்துவர் இருக்கிறார் மிகவும் புகழ்பெற்றவர். இதழ்களில் கூட எழுதியிருக்கிறார். அவரது அப்பாவை தெரிசனங்கோப்பு வைத்தியர் என்போம் என் அம்மாவுக்கு அவரிடமிருட்ந் மருந்து வாங்கியதுண்டு. இப்படி நிறைய உண்டு...

  நாகர்கோவில் கதை எல்லாம் சரியே. இன்னுருகதையும் உண்டு. இதோ அடுத்த பின்னூட்டத்தில்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. முன்ன ஒரு முறை புத்தேரி பத்தி பதிவிட்டேன்.அப்ப சொல்லி இருக்கீங்க உங்க ஊர்ன்னு. நினைவிருக்குங்க கீதா

   Delete
  2. ஞாபகம் வருது ,புத்தேரி இல்லை ,புரவசேரி,அங்கே இருக்கும் ,சடைநாதர் கோவில் கூட ,பதிவிட்டு இருந்தேன் .அந்த ஆற்றுக்கரையோரமாக நடந்து ,உங்க ஊர் திருப்திஸ்வரம் வந்து ,அந்த கோவிலையும் பதிவிட்டு ,ஜடாயுவுக்கு விமோசனம் கொடுத்த ,ஜடாயுபுரம் ,இராமலிங்க ஸ்வாமி கோவிலையும் பதிவிட்டிருக்கிறேன் .பாருங்கள்ள அக்கா ...

   திருப்பதிசாரம் ”திருவாழ்மார்பன்” திருக்கோயில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

   http://rajiyinkanavugal.blogspot.com/2013/09/blog-post_2210.html

   ஜடாயுபுரம் இராமலிங்க சுவாமி திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்..

   http://rajiyinkanavugal.blogspot.com/2013/09/blog-post_13.html

   Delete
 7. அந்தப் பெண் புல் வெட்டும் போது ....அந்தக் கதை முடிகிறது இல்லையா...அப்படிப் ஃபேமஸ் ஆனார் நாகர். அப்போது களக்காடு மன்னர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர் இந்தக் கோயிலுக்கு அதாவது முதலில் மக்கள் வணங்கிய அந்தச் சிறிய கோயிலுக்கு ஆவணி மாதம் ஞாயிறு அன்று வந்து தரிசித்து அவருக்கு அற்புதத்தில் அவரது நோய் மறைந்து போனதால் அவர் அக்கோயிலை இப்போது உள்ளது போல் கட்டியதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

  இந்த இடத்தின் பெயர் மறந்து போச்சே// இது மார்த்தாண்டத்தில் உள்ள சர்ச் என்று நினைக்கிறேன். சிஎஸ் ஐ சர்ச். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய சர்ச்சுகள் உண்டு. கத்தோலிக்க மற்றும் சிஎஸ் ஐ சர்ச்சுகள் இரண்டுமே உண்டு.

  கோட்டார், நாகர்கோவில் பெயர்க்காரணம் எல்லாம் சரியே! மிக்க மிக்க நன்றி! மகிழ்ச்சி! மீண்டும் என் ஊரைக் காண எப்போது வாய்க்குமோ தெரியவில்லை. போனாலும் அதிக நாட்கள் இருந்து மீண்டும் இந்த இடங்கள் எல்லாம் போக வேண்டும் என்ற ஆசையும் உண்டு. பார்ப்போம்...

  ராஜி மீண்டும் மனமார்ந்த நன்றியுடன்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த கதையையும் கேள்விப்பட்டிருக்கேன். உங்க ஊருக்கு போகும்போது சொல்லுங்க.. நானும் வர்ஃபேன்,. நாஞ்சில் மனோ அண்ணாவோட அம்மா இருந்த வீடு இப்ப சும்மாதான் இருக்காம், போய் தங்கி, சுத்தி பார்த்துட்டு வர்லாம்

   Delete
 8. அழகான படங்களுடன் நாகர் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு ராஜிக்கா....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு

   Delete
 9. அழகான படங்களுடன் கோவில் பற்றிய தகவல்களும் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நிஷாக்கா

   Delete
 10. சிறந்த கட்டுரை . மாத்துர் தொட்டிபாளையம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. ஐவகை நிலங்களான குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி. எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என்றாலும் சரியா தகவலுக்காக மட்டுமே இதை பதிவு செய்கிறேன். ஆறுமுகம்.சு.

  ReplyDelete