Saturday, August 26, 2017

பெண்களினால் ஏற்பட்ட சாபம் போக - ரிஷி பஞ்சமி

இந்துக்களின் வழிப்பாட்டில் எத்தனையோ விதம் இருக்கு, அதுல ஒன்னுதான் ரிஷிகள் வழிபாடு. காஷ்யபா,அத்ரி, பாரத்வாஜ முனிவர்கள், விஸ்வாமித்திரர், ஜமதக்னி,மற்றும் வஷிஷ்டர்ன்ற எழுவரே சப்தரிஷிகளாகும். சப்த என்றால் ஏழுன்னு அர்த்தம். சூரியனுக்கே சக்தியை அருளும் இவர்களை சூரியன் அனுதினமும் தொழுது வானவீதியில் வலம் வருகிறான். இவர்களை வழிபட்டால் நமக்கும் வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் ஆயுளும் வளரும் என்பதோடு செய்த பாவங்கள் எல்லாம் உடனே அகலும் என்பதுதான் புராணம் கூறும் ரகசியம்! சப்தரிஷிகளை நம் நாட்டில் ரிஷி பஞ்சமி அன்னிக்கு கும்பிடுகிறோம். அந்த ரிஷி பஞ்சமி தினம் இன்று. 
சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட முனிவரது மனைவியான அருந்ததியையும் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. வைதீக முறைப்படி நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு மிக முக்கியமானது. பழைய காலத்தில் நான்கு நாட்கள் நடந்த திருமண வைபவம் அவசர கதியில் ஒன்றரை நாட்களாகச் சுருங்கிய விபரீதத்தின் விளைவு இந்த அருந்ததி பார்க்கும் வைபவம் பகல் நேரத்திலேயே அருந்ததியை நிஜமாகப் பார்க்காமலேயே கல்யாண மண்டபத்திற்குள்ளேயே முடிஞ்சிடுது.  பழைய காலத்தில் இந்த பரிதாபம் இல்லை. திருமணம் நடந்த அன்று இரவு நிஜமாகவே துருவ நட்சத்திரத்தையும் அருந்ததியையும் பார்க்கும் பழக்கம் தவறாமல் அனுஷ்டிக்கப்பட்டது.
துருவனையும் அருந்ததியையும் பார்க்கும் போது கூறும் மந்திரத்தின் அர்த்தமாவது... “ஓ! துருவ! நீர் அழிவில்லா பதவி பெற்றவர். ஸத்யத்திற்கு காரணமானவர். ஸ்திரமாக இருப்பதற்கு நீரே காரணம். த்ருவம் என்ற பெயரைப் பெற்றீர். சுற்றுகின்ற நட்சத்திரங்களுக்கு நீர் கட்டுத்தறி போல இருக்கிறீர். அத்தகைய நீர் சத்ருக்களின் உபாதை இல்லாமல் இவளை ஸ்திரமாக இருக்கச் செய்யும்” என்பதாகும்.
சப்த ரிஷிகள் மனைவிகளுக்கு க்ருத்திகா என்று பெயர். அவர்களுள் சிறந்தவள் அருந்ததி. இவளை மற்ற பத்தினிகள், பெண்களுக்கே உண்டான பொறாமை இன்றி  “இவளே எங்களுள் மிக உத்தமி” என ஏற்றுக் கொண்டனர். அத்தகைய பெருமை வாய்ந்த அருந்ததியின் தரிசனத்தால் இவள் எட்டாவது கிருத்திகை போல கற்பினாலும் பாக்கியத்தினாலும் விருத்தி அடையட்டும்.”
தாரணமாக வானவியல் தெரியாதவர்கள் கூட இந்தக் காலத்திலும் சப்தரிஷி மண்டலத்தைத் தெரிந்து அதை வானில் ஒருவருக்கு ஒருவர் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர். இது மேலை நாட்டில் ‘க்ரேட் பேர்’ அல்லது ‘ஊர்ஸா மேஜர்’ என  சொல்லப்படுது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்சத்திரங்கள்  ஏர்க்கால் போன்று ஒரு முனை கிழக்காக இருக்குமாறு காணப்படுகிறது. இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என சொல்றோம். மேற்கில் உள்ள இரண்டு நட்சத்திரங்களைச் சேர்த்து சுமார் 7 பங்கு தூரம் வடக்கே நீட்டினால் துருவ நட்சத்திரத்தில் முடியும். ஆகவே திசையைக் காட்டும் நட்சத்திரங்களான இந்த இரண்டை மட்டும் மாலுமிகள் திசைகாட்டி என அழைத்தனர். இந்த சப்த ரிஷி மண்டலம் சூரிய வீதியில் இல்லாததால் 27 நட்சத்திரங்கள் பட்டியலில் சேரவில்லை. பிரம்ம சித்தாந்தம் என்னும் நூலில் சகலர் என்னும் ரிஷி சப்த ரிஷிகள் மற்றும் அருந்ததி எங்கே உள்ளனர் என்பதை விரிவாக விளக்குகிறார். ரிக் வேதம் (9-114-3) “தேவா: ஆதித்யா: யே சப்த” என்று இந்த ஏழு பேரும் ஏழு தெய்வங்கள் என முழங்குகிறது.மஹாபாரதமோ இவர்களை சித்ர சிகண்டி ( மயில் வடிவம்)என்று 12-336ம் அத்தியாயத்தில் விளக்குகிறது!
உண்மையில் சூரியனுக்கு பலமும் ஒளியும் தருபவர்கள் இவர்களே என வேதங்கள் சொல்லுது.  ரிஷி யாஸ்கர் சூரியனின் ஏழு கிரணங்களே சப்த ரிஷிகள் என்ற ரகசியத்தை (நிருக்தா I-1.5யில் உள்ள) ‘சப்த ரிஷயஹ சப்த ஆதித்ய ரஷ்மயஹ இதி வதந்தி நைருகாதாஹா’ என்ற வாக்கியத்தின் மூலம் உணர்த்துகிறார்! இவர்களிடமிருந்து தன் சக்தியைப் பெறுவதால்தான் சூரியன் சற்று கீழே தாழ்ந்து இவர்களை அன்றாடம்  தொழுது தன் பவனியைத் தொடர்கிறான் என்பதை குமார சம்பவத்தில் (7-7) மகாகவி காளிதாஸர் “அவர்கள் தொடர்ந்து தரும் ஆதரவால் அந்த ரிஷிகள் வானில் உதிக்கும் போது  சூரியன் தனது அஸ்தமன சமயத்தில் தன் கொடியைக் கீழே தாழ்த்தி பயபக்தியுடன் அவர்களைப் பார்க்கிறான்” என்கிறார். சூரியனே தொழுது சக்தி பெறும் போது நாம் தொழுது சக்தி பெறலாம் என்பதே நாம் உணர வேண்டிய ரகசியம்!இது மட்டுமின்றி இன்னொரு ரகசியத்தை அதர்வண வேதம் உரைக்கிறது. இவர்களே பஞ்சபூதங்களை உருவாக்கினர்!(சப்தரிஷய: பூதக்ருதா: தேI அதர்வண வேதம் VI -108-4)  ஏழு ரிஷிகளையும் நாம் பிதரஹ (தந்தைமார்) எனக் குறிப்பிட்டு வணங்குகிறோம். இவர்களுக்கு மேலே பிரம்ம லோகத்தில் உள்ள பிரம்மா இவர்களுக்குத் தந்தை ஆதலால் நாம் பிரம்மாவை பிதாமஹ என்று கூறி வணங்குகிறோம்.
விநாயகசதுர்த்தியைத் ரிஷி பஞ்சமி என சொல்லப்படுது. இந்த நாளில் அனைவரும் சப்த ரிஷிகளையும் வணங்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டு புதிய வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் பெற்றுத் தம் வாழ்க்கையைத் தொடர்வது வழக்கம். குறிப்பாகப் பெண்கள் நேபாளத்திலிருந்து காவேரி தீரம் வரை  ஒரு மரத்தட்டில் ஏழு ரிஷிகளையும் எழுந்தருளச் செய்து அறிந்தோ அறியாமலோ தாங்கள் மாதவிலக்குக் காலத்தில் செய்த பாவச் செயல்கள் உள்ளிட்ட அனைத்துப் பாவங்களையும் ஒரு கணத்தில் போக்கிக் கொள்கின்றனர்.
தொடர்ந்து அடுத்த நாளாக வரும் பஞ்சமி தினம்

சப்தரிஷிகளின் 1600 முறை பயணமே ஒரு மஹாயுக காலம். ஆரிய பட்டரும் வராஹமிஹிரரும் (பிருஹத் சம்ஹிதா 13ம் அத்தியாயத்தில் வராஹமிஹிரர் கூறுகிறார்) இந்த சப்தரிஷிகள் 1600 முறை புறப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் அங்கேயே வந்து சேர்ந்தால் ஒரு மஹாயுகம் ஆகும் என்று கணக்கிட்டுச் சொல்லி உள்ளனர். அதாவது இப்படிப்பட்ட 1600 முறை சுழற்சி முடிய 43,20,000 வருடங்கள் ஆகின்றன! ரிக் வேதம்,மஹாபாரதம், ராமாயணம்.18 புராணங்கள், மற்றும் பின்னால் வந்த இலக்கியங்கள் அனைத்திலும் சப்தரிஷிகளின் ரகசியங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மாயவரத்தின் அருகில் கொல்லுமாங்குடியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் உள்ளிட்ட ஏராளமான ஸ்தலங்கள் தென்னாட்டிலும் வசிஷ்டர் தவம் செய்து வசித்த வசிஷ்ட குகை போன்ற பல புண்ணிய இடங்கள் வட நாட்டிலும் சப்தரிஷிகளின் ஏராளமான வரலாறுகளை உள்ளடக்கிய பெரும் ஸ்தலங்களாக அமைந்துள்ளன

ரிஷி பூஜைக்கு முன்பாக யமுனா பூஜை செய்ய வேண்டும். பூஜை அறையில் கலசத்தை வைத்து, நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பூஜையை முதலில் செய்யனும். அடுத்ததாக ராஜஜேஸ்வரி ஸ்லோகத்தோடு பூஜை முடித்த பிறகு நிவேதனம் செய்த சித்ரான்னங்களை பிரசாதமாக தந்து விட்டு உபவாசம் இருக்க வேண்டும். 
அந்திமாலை அல்லது இரவில் ரிஷி பஞ்சதி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். இதில் யமுனர் விரத பூஜைக்கு பயன்படுத்திய அதே கலசத்தை பூஜிக்கலாம். புதிதாக மலர்ச்சரங்கள் சாத்திய அக்கலசத்தை சப்த ரிஷிகளாக பாவித்து இந்த பூஜை செய்யப்பட வேண்டும்.  இதில் நிவேதனமாக தேன்- பசும்பாலுடன் அனைத்து வகை கனிகளையும் படைத்தல் அவசியம். ரிஷி பஞ்சமி விரத பூஜையை சப்தரிஷி விரத பூஜை என்பார்கள். பகலில் யமுனா பூஜை நடத்தியவர்கள் மட்டுமே ரிஷி பஞ்சமி விரத பூஜையில் பங்கேற்க வேண்டும்.  ரிஷி பஞ்சமி பூஜையில் ஆண்கள் கலந்துக்கொண்டு விரதம் இருந்து வழிபடலாம். ஆனால் பூஜை நடத்தும் உரிமை பெண்களுக்கு மட்டுமே.
ஒருமுறை தருமர் கிருஷ்ணரிடம் சென்று, எங்கள் பெண்களினால் ஏற்பட்டு உள்ள சாபம் விலக ஏதாவது பரிகாரம் கூற வேண்டும் எனக் கேட்டாராம். ( திரௌபதியும் பாண்டவர்களின் மனைவியாகப் பிறந்ததும் ஒரு பெண்ணின் சாபத்தின் விளைவினால்தான்).அதற்குக் கிருஷ்ணர் கூறிய கதை இது. “இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது விதர்பா எனும் இடம். அந்த இடத்தை ஸ்னேயஜித் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இராஜ்ஜியத்தில் நல்ல நடத்தையும், நற்குணங்களும் கொண்டு நியாயம் மற்றும் உண்மையை கடை பிடித்த வண்ணம் சுமித்தரா என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருந்தாள். அவளும் கணவரைப் போன்றே அனைத்து நற்குணமும் கொண்டவள். மிகவும் ஆசாரபூர்வமான குடும்பம் அது. ஒரு முறை அவன் வீட்டு விலகாகிய நேரத்தில் வீட்டில் அவர்களை அறியாமலேயே தீட்டு பட்டுவிட்டது. அது அவர்களுக்குத் தெரியாது. அடுத்து சில தினங்களில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்து கணவன் நாயாகவும், மனைவி ஒரு மாடாகவும் பிறந்து அவர்களைப் போலவே வேறு ஜென்மம் எடுத்துப் பிறந்திருந்த அவர்களுடைய பிள்ளையின் வீட்டிலேயே வளர வேண்டியதாயிற்று. சுமித்தராவுக்கும் ஜெயஸ்ரீக்கும் தாம் யார் என்பதும் யார் வீட்டில் பிறந்து உள்ளோம் என்பதும் தெரியும். ஆனால் பிள்ளைக்கு அந்த மிருகங்கள் யார் என்பது தெரியாது. 
ஒரு நாள் சிரார்த தினம். அன்று அவர்கள் வீட்டில் சமைத்து வைத்திருந்த பாயஸத்தை பாம்பு ஒன்று வந்து சாப்பிட முயன்றது. ஆனால் அது தனது வாயை வைக்க முடியாமல் சூடு தாக்கிவிட அதுவும் சூட்டினால் அதனுள் விஷத்தை உமிழ்ந்து விட்டுச் சென்றது. அதை தற்செயலாக நாயாகப் பிறந்து இருந்த ஜெயஸ்ரீ பார்த்து விட அந்த விஷம் கலந்த பாயஸத்தை யாராவது உண்டு மடிந்து விடக் கூடாதே, அதனால் தன் மகனுக்கு சாபம் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையில் அந்தப் பாயஸ பாத்திரத்தை தள்ளி அதை கீழே கொட்டி விட அதை கவனித்து விட்ட சமையல்காரப் பெண்மணி அதை முதுகெலும்பே முறியும் அளவுக்கு அடித்துத் துரத்தினாள். அதற்கு பதிலாக வேறு பாயஸம் செய்து வைத்தாள். அடிப்பட்ட நாயும் வலி தாங்காமல் அழுது கொண்டே மாடாக இருந்த கணவனிடம் தன் நிலையை எடுத்துக் கூறி அழ அவளை மாடு உருவில் இருந்த கணவன் தேற்றினான். 

னைத்து சாஸ்திரமும் நன்கு படித்திருந்த அந்த அந்தணணின் மகன் அந்த விலங்குகள் பேசியதைக் கேட்டார். அவருக்கு விலங்குகள் பாஷையும் புரியும். ஆஹா……தவறு நடந்து விட்டதே, பூர்வ ஜென்மத்தில் நம் தாய் தந்தையாக இருந்தவர்கள் அல்லவா மாடாகவும் நாயாகவும் தற்போது பிறந்து நம்முடன் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான். எந்த தந்தையின் மரணத்திற்கு இன்று திவசம் செய்கிறோமோ அவர் மனதை அல்லவா வருத்தப்பட வைத்து விட்டோம் என எண்ணிக் கலங்கி அந்த இரு விலங்குகளையும் உள்ளே அழைத்து வந்து நன்கு குளிப்பாட்டி அவற்றை வணங்கியப் பின் அவற்றையும் அழைத்துக் கொண்டு ஒரு முனிவரிடம் சென்று அதற்கு பரிகாரம் கேட்டான். அவரும் ரிஷி பஞ்சமி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறி அதை செய்தால் அவனுடைய பெற்றோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் கூற அவனும் அதை செய்து தன் பெற்றோர்களுக்கு மோட்சத்தை அடைய வழி செய்தார். இந்தக் கதையை தருமரிடம் கூறிய கிருஷ்ணர் எந்த ஒருவன் ரிஷி பஞ்சமி விரதத்தை சரியாகக் கடைபிடித்தச் செய்கிறானோ அவனுடைய குடும்பத்துக்கு பெண்களினால் ஏற்பட்ட சாபம் விலகும் என்று கூறி அவருக்கு ஒரு வழி காட்டினார். 
பூர்வ ஜென்ம பாபங்களை விலக்கிக் கொள்ள விதர்பாவை ஆண்டு வந்த சிதாஷ்வ எனும் மன்னன் பிரும்மாவிடம் ஒரு விரதத்தை தமக்கு அருளுமாறு வேண்டிக் கொண்டபோது அவர் இந்தக் கதையை கூறியதாகவும் இன்னொரு செய்தி உள்ளது. ஆனாலும் இந்த விரதமே பூர்வ ஜென்ம பாபங்களை விலக்குகின்றது என்பது வட நாடுகளில் ஐதீகமாக உள்ளது.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470337   

நன்றியுடன்,
ராஜி.

8 comments:

  1. நிறைய விஷயங்கள் அறிந்தோம்...பகிர்விற்கு மிக்க நன்றி சகோ!

    கீதா: யப்பா ராஜி!! ஒவ்வொன்னுக்கும் ஒரு கதை, தகவல்னு காரண காரியங்கள்னு நிறைய சொல்லறீங்க. இந்த அளவுக்கு எல்லாம் எனக்கு ஆன்மீக அறிவு இல்லை...அறிந்து கொள்ள வேண்டும் நு நினைத்ததும் இல்லை....பிரார்த்தனை அதுவும் இறைவனை ரசித்து வியந்து, எல்லோரும் மகிழ்வாக இருக்கணும் பிரார்த்திப்பது என்ற ஒன்றோடு சரி!! நல்லா சொல்லறீங்கப்பா....எப்படி எல்லாம் நினைவில் வைத்துச் சொல்லறீங்க!! வியப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    ReplyDelete
  2. த ம பெட்டியும் தெரியய்லை....லிங்க் சுட்டி சரியாக இல்லை போல இருக்கே க்ளிக் ஆகவே இல்லை. கீழே உள்ள படத்டைக் க்ளிக் செய்தால் படம் தான் வருது....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா... உங்களுக்கு ஏன் எந்தத் தளத்திலும் வாக்குப்பெட்டி தெரிய மாட்டேன் என்கிறது? மொபைல் வழியாக மட்டும் வருகிறீர்களா?​

      Delete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. புராணக்கதைகள் எல்லாமே எனக்கு புதியதுதான்.... பிரமிப்பாக இருக்கிறது....

    ReplyDelete
  5. உங்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு இட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  6. தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    த.ம. +1

    ReplyDelete
  7. நான்காம் வாக்கு.

    அருமையான தகவல்கள். வரவர முற்றிலும் ஆன்மீகத் தளமாக மாறி வருகிறது உங்கள் தளம்.

    ReplyDelete