Wednesday, December 05, 2018

இங்கேயும் வருவாள் கங்கை - கங்கை நீராடல்

பெண்பாவம் பொல்லாததுன்னு சொல்வாங்க. ஆனா, அந்த பாவத்தை தீர்த்துக்கவும் ஒருநாள் இருக்கு.  அந்தநாள் என்னிக்குன்னு தெரிஞ்சுக்கிட்டா பலருக்கு பயன்படுமே! அந்தநாள் எதுன்னா, கார்த்திகை மாசத்து அமாவாசைதான். மாசாமாசம்தான் அமாவாசை வருது. அதுக்கும் பெண்பாவத்துக்கும் வாட் சம்பந்தம்ன்னு யோசிக்குற ஆட்களுக்கு ஒரு புராணக்கதை பதிலா அமையும்.  கேரள மன்னன் கணபதி என்பவனை பீடித்திருந்த பெண்பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசலூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண்பாவம் இத்தலத்தில் அவன்  வழிபட்ட மாத்திரத்தில் அகன்றதாம்!! அதனால்,  நம் வாழ்வில் தெரிஞ்சும், தெரியாமலும்  செய்த தவறால் பெண்சாபத்திற்கு ஆளாகியிருந்தால் இத்தலம் வந்து வழிபட அச்சாபம் பாவம் நீங்குமென்பது நம்பிக்கை.

திருவிசலூர்
திருவிசலூரில் ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் என்னும் சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.  அவர், சவுந்தர நாயகி சமேத சிவயோகிநாத சுவாமி திருக்கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து, அதன்பின்னரே  உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார். ஒருநாள்கூட , இறைவனை தரிசிக்கதவறியதில்லை. ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தன்று, இவர் தனது முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.  மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருந்தது.
திருவிசலூர்
திதி கொடுப்பதற்கு முன்னரே தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சார்ந்த ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் வீட்டுவாசலுக்கு வந்து, பசிக்குதுன்னும், தனக்கு எதாவது சாப்பிட கொடுக்குமாறு வேண்டினான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய தீட்சிதர், வீட்டில் திதிக்காக செய்யப்பட்ட உணவை பசியாற கொடுத்தார். இச்செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திரத்துக்கு விரோதமானது. இதற்கு பரிகாரமாக  நீர் காசி சென்று கங்கையில் நீராடி வந்த பின்னரே திதி கொடுக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஊரைவிட்டு விலக்கு செய்து, உம்மையும் உமது குடும்பத்தாரையும் நீக்கிவைப்போமென   கூறியதோடு, தர்ப்பணம் செய்யவும் மறுத்தனர்.
திருவிசலூர்
தென்னாட்டிலிருக்கும் ஒரு சாதாரண மனிதனால், வடநாட்டிலிருக்கும் கங்கையில் ஒரேநாளில் நீராடி, திரும்பி வீடுவந்து மூத்தோருக்கு தர்ப்பணம் செய்யமுடியுமா?! கங்கைக்கு சென்றுவர குறைஞ்சது ஒருவருசமாவது ஆகுமேன்னு மலைத்து நின்றார். திக்கற்றவருக்கு தெய்வமே துணைன்னு இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்'ன்ற துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து ஊரே வெள்ளக்காடானது.
திருவிசலூர்
இந்த அதிசயத்தினை கேள்விப்பட்ட மக்கள் ஸ்ரீவெங்கடேச தீட்சிதரிடம் விவரமறிந்து, ஊரில் பாய்ந்திக்கொண்டிருந்த  கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்க, தீட்சிதரும், மன்னித்து, கங்கையிடம் கோவம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கியது. தீட்சிதர், தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே! நீ இங்கேயே நிலைத்திரு’ என வேண்டியதால். கங்கை அங்கேயே நிலைத்து நின்றது. அதைத் தொடர்ந்து தீட்சிதரின் முன்னோருக்கு திதி கொடுக்கப்பட்டது.   இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். தீட்சிதர் வசித்த இல்லம் மடமாக மாறியுள்ளது. 
திருவிசலூர்
காலையில் நடந்த களேபரத்தில் திருவிசலூர் சிவயோகிநாதசுவாமியை தரிசிக்கமுடியாமல் போனது. அன்று மாலை திருவிசலூர் ஈசன் கருவறை மூர்த்தங்களின் காலடியில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீவெங்கடேச தீட்சிதரின் வீட்டு திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என எழுதியிருந்தது. ஏழையாக வந்து, தீட்சிதரின் வீட்டு திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், தங்கள் தவறினை உணர்ந்து தீட்சிதரை போற்றி புகழ்ந்தனர். 
திருவிசலூர்
கிணற்றில் கங்கை பொங்கிய அதிசய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசையன்று திருவிசலூர் ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் மடத்தில் நிகழ்கிறது. இன்ரும் கங்கை பொங்கி வந்த அமாவாசை தினத்தில் இங்கு கங்கை பொங்கும் விழாவினை பத்து நாட்கள் திருவிழாவாய் கொண்டாடுகின்றனர்.  விழா நாட்களில் தினமும் அன்னதானம் நடக்கும். பத்தாம்நாள் கார்த்திகை அமாவாசையன்றுதான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் இங்கு திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து, அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள். பிறகு கிணற்றுக்கு கங்காபூஜை நடத்தி,  காலை ஐந்து மணியிலிருந்து திரண்டிருக்கும் மக்கள் எல்லாரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரையுடன்,  நீர்மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாதாம். இப்படி நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.
ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் சிவபக்தர் மட்டுமில்லை. சிறந்த விஷ்ணு பக்தரும்கூட..  விஷ்ணுவும் ஒன்றே என மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசலூர் ஈசனை காலையில் வழிபடுவதோடு, மாலையில் அருகிலிருக்கும் திருவிடைமருதூருக்குச் சென்று, மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார். அதன் பின்பே  இரவு உணவை உண்ணும் வழக்கம் கொண்டவர்.  திருவிசலூரிலிருந்து திருவிடைமருதூருக்கு செல்லும் வழியில் வீரசோழன்ன்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்துதான் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார்.
திருவிடைமருதூர்
ஒருநாள் வீரசோழன் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீவெங்கடேச தீட்சிதரால், ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர், மகாலிங்க சுவாமியை தரிசிக்காததால் கவலையோடு சாப்பிடாமலேயே படுக்கைக்குச் சென்றார். திடீரென வீட்டுவாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடைமழையில் யார் கதவைத் தட்டுவது’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார். ‘அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியைக் காண உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல்,இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆகவே,   திருக்கோவில் பிரசாதத்துடன்  நானே வந்து விட்டேன்’ என்றார் அர்ச்சகர்.
திருவிடைமருதூர்
திருக்கோவில் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடுங்குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட தீட்சிதர், தன்னுடைய கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்திவிட்டார். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த தீட்சிதர், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணி  விடிந்ததும் விடியாததுமாக,  அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.
திருவிடைமருதூர்
மகாலிங்கசுவாமி சன்னிதியில் முதல்நாள் இரவு,  தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதை கண்ட தீட்சிதர், அப்போதுதான் அவரும் கோவிலுக்கு வந்துக்கொண்டிருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது. வாசலிலேயே  அர்ச்சகரிடம் சென்று,  நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, ‘சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!’ என தீட்சிதர் வருத்தப்பட்டார். அர்ச்சகர் திகைத்தவாறே, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் எப்ப உங்க வீட்டுக்கு வந்தேன்? கடுமையான மழையினால், கோவிலுக்கு யாரும் வரமாட்டார்களென  நான் நேற்று மாலையில் சீக்கிரத்துலயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே!’ என்றார்.
திருவிடைமருதூர்
இருவரும் திகைத்தவாறே கோவிலை திறந்து கருவறை கதவை திறந்து பார்த்தபோது  ஸ்ரீவெங்கடேச தீட்சிதர், முதல்நாள்  இரவு அர்ச்சகருக்கு போர்த்திவிட்ட கம்பளி, ஈசனின் திருமேனியில் இருந்தது. அப்போதுதான் இருவருக்கும் தெரிந்தது “நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் தீட்சிதரின் வீட்டுக்கு சென்று, பிரசாதம் உண்ணக்கொடுத்து, அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே''என. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர். பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்து, ஸ்ரீவெங்கடேசர்  தீட்சிதர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம்,  ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீவெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப்பெறும் வஸ்திரம் சாத்தப்படும்.
திருவிசலூர்
அதேமாதிரி அன்றையதின உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்குது.  ஜோதிவடிவில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது. ஆம்! பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய புண்ணியபூமி திருவிடைமருதூர். இத்தலத்தில் பிரம்மஹத்திக்கென தனிச்சன்னிதி இருக்கு.  திருமணத்தடை, புத்தி சுவாதீனம் இல்லாமல் இருத்தல், மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய்கள்,  செய்யாத குற்றத்திற்காக அவச்சொல், உத்தியோகத்தடை  கணவன்-மனைவி பிரச்சினை, புத்திரபாக்கியமின்மைலாம் பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுது.  திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டுமாம். அப்படிச் செய்வதால் பிரம்மஹத்திக்கு நிகரான சகல பாவங்களும் இத்தல பிரம்மஹத்தியிடம் சேர்ந்து, மீண்டும் அவை நம்மை அண்டாது என்கிறார்கள். திருவிடைமருதூரில் தினமும் காலை 8 மணி, 9 மணி, 10 மணிக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவாரண பரிகாரம் செய்கிறார்கள்.
திருவிசலூர்
பொதுவா எல்லா சிவன் ஆலயங்களிலும் பைரவர் சன்னிதி ஈசானிய மூலையில் இருக்கும், ஆனா, திருவிசலூர் ஈசன் ஆலயத்தில் யுகத்துக்கு ஒரு பைரவரென மொத்தம் நாலு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். அதனால், இவர்களுக்கு சதுர்கால பைரவர்கள் எனப்பெயர். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இந்த நால்வரின் திருப்பேர்களாகும். ஞானகால பைரவரின் அருகினில் தட்சினாமூர்த்தி அருள்புரிகிறார். அவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். சொர்ண ஆகர்ஷ்ண பைரவரின் எதிரில் மகாலட்சுமி இருக்குறதால இவரை வணங்கினால்  வறுமை, கடன்பிடியிலிருந்து தப்பிக்கலாம். சேமிப்பு உயரும். உன்மத்த பைரவருக்கு அருகில் சனிபகவான் இருப்பதால் இவரை வணங்கினால் ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டமத்து சனி மாதிரியான தொல்லைகளிலிருந்து விலகலாம். யோக பைரவரின் அருகில் உத்திர கயிலாச லிங்கம் அருகில் இருப்பதால் எல்லாவிதமான ராஜயோகங்களும் கிடைக்கும்.இழந்த சொத்துகள், பூர்வீக சொத்துகள் கைப்பெறும். மொத்தமாய் இந்த நான்கு பைரவர்களையும் ஒருசேர வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மைகள் கிடைக்குமென்பது ஐதீகம். 

காசிக்கு  சென்று கங்கையில் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்குமென்கிறது சாஸ்திரம். ஆனா, போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும்கூட எல்லாராலும் காசிக்கு போய்  கங்கையில் நீராட முடியாது. அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதமாகவே, ஈசனின் அருளால் குறிப்பிட்ட சில நாள்களில், குறிப்பிட்ட ஆறு, கிணறு என்று சில நீர்நிலைகளில் கங்கை சங்கமிக்கும் அற்புதம் நம் புண்ணிய பூமியில் நிகழ்ந்திருக்கவே செய்திருக்கிறது. இந்த கார்த்திகை அமாவாசை தினத்தில் இக்கிணற்றில் குளிப்பதால் கங்கையில் குளித்த பலனை பெறுவதோடு திருவிசலூர், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிகளின் அருளையும், ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் சுவாமிகளின் அருளினையும் பெறலாம். நாளைய தினம் (6/12/2018) கார்த்திகை அமாவாசை. வாய்ப்பு இருக்கவுங்க போய் அதிசய கிணற்றில் நீராடி பலன் பெறுங்க. 

நன்றியுடன்
ராஜி.

Tuesday, December 04, 2018

செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி - கிச்சன் கார்னர்

நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க. அதுமாதிரி அசைவ பிரியர்களுக்கு பிராய்லர் கோழிக்கறி இன்றி எதும் அமையாது. ஆட்டுக்கறி, நாட்டுக்கோழியைவிட விலை குறைச்சல், நாட்டுக்கோழியைவிட சதைபத்தானது. சமைக்க ஈசி, நாட்டுக்கோழின்னா நாமதான் உசுரோட வாங்கி வந்து அறுத்து சுத்தம் பண்ணனும். ஆனா, பிராய்லர் கோழிக்கதை அப்படி இல்ல. சதைப்பத்தா இருக்கும். கோழியின் உசுரை எடுக்கும் வேலையோ இல்ல சுத்தம் பண்ணும் வேலையோ இல்ல. கொல்லும் பாவத்திலிருந்து தப்பிச்சுக்கவும் ஒரு சாக்கு. அதனால, பிராய்லர் கோழி விற்பனை அமோகமா இருக்கு. ஆனா, எத்தனைக்கெத்தனை ருசியும், விலைக்குறைச்சலும், வேலையை மிச்சம் பண்ணாலும் பிராய்லர் கோழிக்கறி ஸ்லோபாய்சன் என்பதை மறுக்கமுடியாது.

அசைவ பிரியர்களின் தவிர்க்க முடியாத உணவாகிப்போன பிராய்லர்கோழி வளர மொத்தம் 12 கெமிக்கல் பயன்படுத்தப்படுது. அந்த கோழிக்கறியை சாப்பிடுறதால நம்ம  எலும்புகளில் இருக்கும் சத்து மெல்லமெல்ல அழியுது, மஞ்சள் காமாலை,  இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என வியாதிகளின் எண்ணிக்கை உயர்ந்துக்கிட்டே போகுது. ஊசிகளின் மூலமாகவே பிராய்லர் கோழிகளின்  தசை வளர்ச்சி நடக்குறதால  இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் அபாயமும் உண்டாகும். கவனிச்சு பார்த்தா நாட்டுக்கோழியை முட்டையில் மஞ்சக்கரு அதிகமாவும், வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும். ஆனா, பிராய்லர் கோழியில் வெள்ளைக்கரு அதிகமாவும், மஞ்சக்கரு குறைச்சலாவும் இருக்கும்.  மஞ்சக்கருவில்தான் நல்லது செய்யும் கொலஸ்ட்ரால் இருக்கு. ஊட்டச்சத்து வேண்டியவங்க பிராய்லர் கோழிமுட்டையை சாப்பிடுவதால் நோ யூஸ்..

மாதவிடாய் கோளாறுகள், சிறுவயதிலேயே பூப்படைவது, ஆண்மைக்குறைவு, உடல் எடை அதிகரிப்பு, இதய பிரச்சனை என பல்வேறு உடல் உபாதைக்கு பிராய்லர் கோழி காரணமாகுது. இத்தனையும் தெரிஞ்சாலும் பிராய்லர் கோழிதான் அதிகளவு புழக்கத்திலிருக்கு. கிடைக்குதுன்னு சாப்பிடும் நம்மை குத்தம் சொல்வதா?! இல்ல கல்லா கட்டுனா போதும்ன்னு நினைக்கும் ஆட்சியாளர்கள், கோழிக்கம்பெனிக்காரங்களை சொல்றதான்னு தெரில.  

தேவையான பொருட்கள்..
சிக்கன்
சின்ன வெங்காயம்
தக்காளி
மிளகு,
சீரகம்,
சோம்பு,
தனியா
காய்ந்த மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சப்பொடி
உப்பு 
எண்ணெய்
கறிவேப்பில, கொத்தமல்லி, புதினா

கோழிக்கறியை சுத்தம் பண்ணிக்கனும். வெங்காயம், தக்காளியை கழுவி வெட்டி வச்சுக்கனும். வெறும் வாணலில மிளகு, சீரகம்,, சோம்பு, மிளகாய், தனியாவை வறுத்து பொடிச்சுக்கனும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, பட்டை, கிராம்பு போட்டு பொரிய விடனும்.
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கனும்...

இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கனும்...

 தக்காளியை சேர்த்து வதக்கனும். கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயமு, தக்காளியும் சீக்கிரம் வெந்துடும்.
சுத்தம் செய்து நல்லா கழுவி வச்சிருக்கும் சிக்கனை சேர்த்து வதக்கனும்...
 பொடிச்சு வச்சிருக்கும் தனியா, மிளகாய், மிளகு, சோம்பு, சீரகப்பொடியை சேர்த்து, காரத்துக்காக கொஞ்சம் மிளகாய் தூளையும், வாசனைக்காக கரம் மசாலா தூளையும்  சேர்த்து வதக்கி, தேவையான அளவுக்கு உப்பு தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்...
கறிவேப்பிலை, புதினா, கொ.மல்லி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினா செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெடி. என் அப்பாக்கு சிக்கன் குழம்பு தண்ணியா இருக்கனும். அதுமாதிரி ஆளுங்களுக்காக தேங்காய், முந்திரிப்பருப்பு சேர்த்து அரைச்சு சேர்த்து கொதிக்க விட்டா குழம்பு ரெடி. 

அடுத்த வாரம் ஒரு ஸ்வீட்டோடு வரேன்..

நன்றியுடன்,
ராஜி

Monday, December 03, 2018

ரோபோ மனுசனை மாதிரி ஆகமுடியுமா?! -ஐஞ்சுவை அவியல்

மாமா! எந்திரன் 2.0 படம் வந்திருக்கு. படம் நல்லா இருக்காம். எல்லாரும் சொல்றாங்க.  படத்துக்கு போகலாமா மாமா?!

படத்துக்கா?! உனக்குதான் சினிமா போகவே பிடிக்காதே. அதும் இப்பத்திய படம்ன்னா எட்டி ஓடுவியே! எதுக்கு கூப்பிடுறே?! அந்த படத்துல என்ன ஸ்பெஷல்?!

என்னமோ ரஜினி ரோபோவா நடிச்சிருக்காராமே! 

அதைதான் எந்திரன் படத்துலயே நடிச்சிட்டாரே! டிவில படமுறை போட்டுட்டாங்க. இனியும் போடுவாங்க. இந்த படத்தையும் டிவில போடுவாங்க. அப்ப பார்த்துக்க.  முதல்ல உனக்கு ரோபோன்னா என்னன்னு தெரியுமா?!

தெரியுமே!  வால் ஈன்னு ஒரு இங்கிலீஷ் படம், அதுல துளியூண்டு ரோபோ பூமியை சுத்தம் செய்றதா காட்டுவாங்க,  அதுமில்லாம வெளிநாட்டுலலாம் சின்ன சைஸ்ல, மனுசங்க, பூனை, நாய், மாதிரிலாம் ரோபோ தயாரிச்சிருக்காங்க. அது, வீடு கூட்ட, சமைக்கன்னுலாம் செய்யுது.  

வீட்டு வேலை செய்யுற ரோபோவைதான் உனக்கு தெரியுமா?!  அட அறிவுசூனியமே!

இப்படிலாம் வையக்கூடாது. அப்புறம் சாப்பாட்டுல பூச்சி மருந்து கலந்து வச்சிருவேன்.  கிரிவலம் போகும்போது சிவப்பு கலர்ல ஒரு ரோபோ இருக்கும். கைல மை தடவி நம்ம கைரேகையை அதுல ஸ்கேன் பண்ணினா நமக்கு ரேகை பலன்லாம் சொல்வாங்க. நானும் ரோபோவை நேரில் பார்த்திருக்கேனாக்கும்.

அறிவுசூனியம்ன்னு சொன்னா மட்டும் கோவப்படுறே! ஆனா, உனக்கு ரோபோ பத்தி இதுதான் தெரியுது.  சினிமாவிலும், செய்திகளிலும் நீ பார்த்த ரோபோக்கள் மட்டுமில்ல, நம்மோட அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு விசயத்தில் ரோபோ  மறைமுகமாவோ நேரடியாகவோ இருந்திக்கிட்டுதான் இருக்கு. 

நீ சொன்னா நம்புவேங்குறதுக்காக பொய் சொல்லாத மாமா.  நான் பார்த்தவரைக்கும் ஜோசியம் சொல்ற அந்த சிவப்பு பொட்டியை தவிர எதும் ரோபோ நம்மூரில் இல்ல. 


பொய்லாம் சொல்லல. உனக்கு ஈசியா புரியவைக்கனும்ன்னா, ஏடிஎம் மெஷினில் நாம பின்கோட் எண்டர் பண்ணதும் பணமும், ரசீதும் வெளிவருவதும் ஒரு ரோபோவின் வேலைதான். புத்தகத்தை எண்ட்ரி பண்ணி வெளியில் அனுப்புவதும்கூட ரோபோதான். செக்போஸ்ட்ல பணம் கட்டி முடிச்சதும் பாதையை அடைச்சு தடையா வச்சிருக்கும் கொம்பு உயர்வது, ரிட்டர்ன் டிக்கெட் எடுத்திருந்தா நம்ம வண்டி நம்பரை பார்த்ததும் தடைக்கொம்பு உயர்வது அதோட வேலைதான். சிக்னலில் விளக்குகள் நேரத்துக்கு தகுந்தமாதிரி எரிவது முதற்கொண்டு இப்படி  நமக்கே தெரியாம நம்ம அன்றாட வாழ்க்கையில் ரோபோக்கள் வேலை செஞ்சுக்கிட்டுதான் இருக்கு. ரோபோக்கள் இல்லன்னா, மக்கள்தொகை அதிகமா இருக்கும் நம்ம ஊரு திணறித்தான் போகும். 

அதான், ஜனங்க நிறைய பேரு இருக்காங்களே! அவங்களை வச்சு வேலை வாங்கிக்க வேண்டியதுதான். ரோபோக்கள் கண்டுபிடிக்கும்முன் நம்ம தாத்தா பாட்டிலாம் வாழாமயா போயிட்டாங்க?!


வாழ்ந்தாங்க. ஆனா, வாழ்க்கைமுறை இந்தளவுக்கு சிக்கல் இல்ல. அதேப்போல வேகமாவும் அவங்க வாழ்க்கை நகரலை. இந்தளவுக்கு நம்ம வாழ்க்கை வேகமா நகர ரோபோவும் ஒரு காரணம். ரோபோ இல்லன்னா நாம திண்டாடித்தான் போவோம்ன்றது மறுக்கமுடியாத உண்மை. ரோபோக்கள் பல வடிவங்களில், விதங்களில் நமக்கு பயன்படுது. அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போக நம்மாட்கள் முயற்சி பண்றாங்க. அதான், ரோபோக்கு மனுசங்க மாதிரி சிந்திக்கும் திறனை கொண்டு வந்தா தனக்கு ரொம்ப உதவியா இருக்கும்ன்னு நினைக்குறான். எந்திரன் படத்துல வர்ற மாதிரி அது நமக்கே ஆபத்தா முடியும் வாய்ப்பு இருந்தாலும், ரோபோக்களுக்கு சிந்திக்கும்  திறனை கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல.  


ரோபோக்களை ரெண்டு வகையா பிரிக்கலாம்.   எந்திரன் டைப் ரோபோ. இது வெறும் எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ் அடங்கிய ஒரு ரோபோக்கு இசை, விளையாட்டு, ஓவியம், சண்டைன்னு எல்லா புரோகிராமையும் அப்லோட் பண்ணி எந்திரன் பட சிட்டி மாதிரி சிந்திக்கும் திறனை கொண்டு வருவது. இன்னொன்னு அதே எலக்ட்ரான் சர்க்யூட்ஸ் அடங்கிய ரோபோவை பொதுவாழ்க்கையில் விட்டு எல்லாத்தையும் கத்துக்கோன்னு சொல்ல வேண்டியது. அதாவது, நம்ம குழந்தைகளை வளர்க்குற மாதிரி ரோபோவையும் வளர்க்குறது. ஆனா, இதுக்கு வாய்ப்பு ரொம்ம்ம்ம்ம்ப கம்மி.  சிட்டி மாதிரி சில சின்ன சைஸ் ஹார்ட் டிஸ்கை கொண்ட ஒரு ரோபோக்கு ஈருயிர்ன்னு சொல்லும் எறும்பு, சிலந்தி, பூச்சிகள் அளவுக்குகூட சிந்திக்கும் திறன் இருக்காது. ஒரு ரெண்டு வயசு குழந்தை சிந்திக்குமளவுக்கு திறனை வைக்கனும்ன்னாகூட ஒரு பெரிய கண்டைனர் அளவிலான ஹார்ட் டிஸ்க் வேணும். இது சாத்தியமான்னு நீயே சொல்லு...


கொஞ்சம் கஷ்டம்தான் மாமா..

நம்ம மூளையே பலப்பல சிக்கல்களைக்கொண்ட ஒரு ஆர்கானிக் சர்க்யூட்தான். நிலாவுக்கே மனுசனை அனுப்பி வைக்குமளவுக்கு சிந்திக்கும் திறன்கொண்ட மனுசனாலே மூளை எப்படி செயல்படுதுன்னு இன்னும் முழுசா கண்டுபிடிக்கமுடியல. சும்மா நாலஞ்சு விசயத்தை கண்டுபிடிச்சு சீன் போட்டுக்கிட்டு இருக்கோம்.  அதனால்தான், தேவைப்படும் பட்சத்தில் கிட்னி, கண், கை, இதயம்ன்னு  கழட்டி போட்டு வேற பொருத்திக்கும் நம்மாளுங்களால மூளைல மட்டும் கைய வைக்கவே முடில. சின்ன சின்னதா ரிப்பேர் செய்யமுடியுமே தவிர, மொத்தமா இன்னொரு மூளையை மாத்தி வைக்குமளவுக்கு அது சிக்கல் நிறைந்த சர்க்யூட்டா இருக்கு.  மனுச மூளையைவே இன்னும் புரிஞ்சுக்க முடில,. இதுல எப்படி மனுசங்க மாதிரி அதை சிந்திச்சு செயல்பட வைக்க முடியும்?!


எல்லாத்துக்குமே நியதிகள் உண்டு. அதுமாதிரி ரோபோக்குன்னு நியதிகள் உண்டு. ஒரு ரோபோ எக்காரணத்தை கொண்டும் மனிதர்களை நோகடிக்கும்படி நடக்கக்கூடாது. ஆனா, மனிதர்கள் தன்னை நோகடிக்க அனுமதிக்கனும். 2.எந்த சூழ்நிலையிலும் மனிதனோட கட்டளைக்கு கீழ்படியனும். அதே சமயம் முதல் விதியை மீறவும் கூடாது. 3.ஒரு ரோபோ தன்னைத்தானே தற்காத்துக்கனும் அதேசமயம், முதல் 2விதிகளையும் மீறவும் கூடாது. இப்படிலாம் ரூல்ஸ் போட்டா வசீக்கு தலை சுத்தாது. சிட்டிக்குதான் தலை சுத்தும். இதுக்குமமேல ஒரு ரோபோ, தான் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆளுன்னு மனுஷனுக்கு நிரூபிச்சு காட்டவேண்டிய கட்டாயத்துலயும் இருக்கு. தான் ஒரு ரோபோன்னும் நிரூபிக்கனும். அதேநேரத்துல A1turning டெஸ்ட்ல பாஸ் பண்ணனும்.


A1 turning testன்னா என்ன மாமா?!

இதுக்கு இமிட்டேஷன் கேம்ன்னு இன்னொரு பேரும் இருக்கு. அதாவது ரோபோவையும், மனுசனையும் தனித்தனியா பெட்டியில் அடைச்சுடனும். எதுல யார் இருக்காங்கன்னு வெளிய இருக்கும் ஆட்களுக்கு தெரியக்கூடாது. ரெண்டு பேருக்குமே ஒரேமாதிரியான கேள்விகளை கேட்கனும். எந்த சமயத்துலயுமே தான் ரோபோன்னு வெளிய தெரியாத மாதிரி அதோட பதில் இருக்கும். ஏங்க! என்னோட ஞாயித்துக்கிழமை வர்றீங்களா?! எங்கம்மாவை தாசில்தார் ஆபீசுக்கு கூட்டி போய் ஹெல்த் செக் பண்ணலாம்ன்னு ஒரு பொண்ணு கூப்பிட்டா, அவ புருசனா நீ என்ன பண்ணுவேன்னு கேட்டா, அதுக்கு வரேன்னு சொன்னாலும், வரலைன்னு சொல்லி சாக்குபோக்கு சொன்னாலும் ரோபோ அவுட். சனியனே! எந்த தாசில்தார் ஆபீஸ் ஞாயித்துக்கிழமை திறந்திருக்கும்?! அப்படியே திறந்திருந்தாலும் தாசில்தார் ஆபீசுலயா ஹெல்த் செக் பண்ணுவாங்கன்னு எதிர்கேள்வி கேட்டாதான் ரோபோ பாஸ். ஆனா, அப்படி எதிர்கேள்வி கேட்குமளவுக்கு ரோபோவுக்கு நடைமுறை அறிவு இருக்குமான்றது சந்தேகமே! ஒரு ரோபோ AIனு தன்னை சொல்லிக்கனும்னா அது,ம் காரணக்காரியங்களை புரிஞ்சுக்கனும், பிரச்சனையை தீர்க்கும் அறிவு வேணும், அதை செயல்படுத்த பிளான் பண்ண தெரியனும், அதுமில்லாம, தன்னை சுத்தி நடக்குற விசயங்களை கூர்ந்து நோக்கி அதிலிருந்து நல்லது கெட்டதை கத்துக்கனும். கடற்கரையில் நிக்கும்போது பெரிய அலை வருது. உன்னோடு சேர்த்து, கரையிலிருந்து 10 அடில ஒருத்தன் நிக்குறான். அம்பது அடில ஒருத்தன் நிக்குறான் நீ யாரை காப்பாத்துவேன்னு சொன்னா, ரெண்டு பேரையுமே காப்பாத்த மாட்டேன். என்னை காப்பாத்திக்குவேன்னு சொன்னா யோசிக்காம அதுக்கு A1 ரோபோன்னு சர்டிபிகேட் கொடுத்துடலாம். ஆனா, யாரையாவது ஒருத்தங்களை காப்பாத்தியே தீரனும்ன்னு ஆப்ஷன் கொடுத்தா, யாரை காப்பாத்துவேன்னு காரணம் சொல்லனும். அப்படி காப்பாத்த போகும்போது தனக்கு வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பேன்னும் யோசிச்சு, மனுசனால முடிவெடுக்க முடியும். மனுசன் அப்படி முடிவெடுக்க வெளி உலகங்களிலிருந்து கத்துக்கிட்ட அனுபவ பாடமும், கல்வியும்தான். அப்படி ஒரு மனுசனால முடியும்ன்னா ரோபோவினாலும் முடியும்ன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. இதுலாம் முதல் டைப் அதாவது, எல்லா புரோகிராமையும் செட் பண்ண சிட்டி டைப் ரோபோக்கு.. குழந்தை மாதிரி கத்துக்க விடும் ரெண்டாவது டைப் ரோபோ பத்தி இனி பார்க்கலாம்...


குழந்தை தவழ, நடக்க, எல்.கே.ஜி, அஞ்சாப்பு, பத்தாவது, டிகிரின்னு கத்துக்குறது எப்படி?! தப்பு பண்ணி, அதிலிருக்கும் சூட்சுமத்தை கத்துக்கிட்டு திரும்ப பண்ணாம திருத்திக்கிட்டு படிப்படியா வளருது. அதுமாதிரி ரோபோவும் கத்துக்க விடனும். இந்த விசயத்தில், மனுஷங்களைவிட எலக்ட்ரானிக் சர்க்யூட் துல்லியமா செயல்படும். இதுல மாற்று கருத்தில்லை. ஆனா, ஒரு கிளாசில் சுடுதண்ணியை வச்சிட்டு இது சுடுமான்னு கேட்டா, அது பக்கத்தில கையை கொண்டு போகும்போதே வீசும் அனல்காத்தால் மனுசன் சுடும்ன்னு சொல்வான். ஆனா, ரோபோ அதோட புரோகிராம்படி தெர்மாமீட்டர் வச்சு அளந்து பார்த்துதான் சொல்லும். எதிர்க்க சூடான பொருள் இருக்குன்னு சொல்லத்தானே தெரியுமே தவிர. அதை தொட்டா சுடும்ன்னு அதுக்கு தெரியாது. அதுக்கு தன்னோட பார்வையிலிருந்து பார்க்கத்தான் தெரியும். ஆனா, அலசி ஆராய தெரியாது. ஒரு ரோபோ தன்னால ஒரு விசயத்தை கத்துக்க ரொம்பவே சிரமப்படும். 1+1 என்னனு கேட்டா 2ன்னு ஈசியா சொல்லிடும். ஆனா, 1+1ன்னா என்னன்னு நம்மாளுங்ககிட்ட கேட்டா அதுக்கு நூறு ஆன்சர் சொல்வாங்க. அந்த நூறு ஆன்சரையும் ரோபோ சொல்ல முடியாது. எப்பேற்பட்ட மக்கு குழந்தைக்கூட 100முறை எடுத்து சொன்னா புரிஞ்சுக்கும். ஆனா, ரோபோக்கு 1000முறை எடுத்து சொன்னாலும் புரியுறதில்ல. அந்த விசயத்தில் நம்மாளுங்க தோத்து போய் நிக்குறாங்க. நடைமுறை விசயத்தை கத்துக்கும்போதே, அது, கூடவே கோவம், காதல், குறும்பு, பழின்னு எல்லாத்தையும் கத்துக்கும். காதல் வந்தா அதை யார்கிட்ட சொல்லனும்ன்னு தெரியாது. எதிர்க்க நிக்குறது பொம்பளையா?! இல்ல சேலை கட்டி வந்திருக்கும் கமல்ஹாசனா தெரியாது. அப்படியே தெரிஞ்சு லவ் பண்ணாலும் அதுக்கு மேல கல்யாணம், செக்ஸ்ன்னு போகமுடியாது. ஒருவேளை லவ் புட்டிக்கிச்சுன்னா என்ன பண்ணனும்ன்னு தெரியாது. தண்ணியடிச்சு, பாட்டு பாடி, கவிதை எழுதி தன் சோகத்தை தீர்த்துக்கலாம்ன்னு அதுக்கு தெரியாது. ஒருவேளை அந்த ரோபோ பொண்ணா இருந்தா அரளிவிதை அரைச்சு குடிச்சாலோ, இல்ல, கமுக்கமா வேற ஆளை கட்டிக்கிட்டாலோ இந்த பிரச்சனை சால்வ்ன்னு அதுக்கு தோணாது. காதல் தோல்விலயொ, இல்ல குடும்ப பிரச்சனையில் நம்ம மூளை பிசகி போற மாதிரி அதோட சர்க்யூட்லாம் பிசகி போச்சுன்னா?! சைக்கோவாகிடும். அப்புறம் அதுக்கிட்ட இருந்து நாட்டை காப்பத்தனும்.


எந்த ஒரு சக்தியானாலும் அது தெய்வ சக்தியானாலும், மனுச சக்தியானாலும், இயந்திர சக்தியானாலும் பழி உணர்ச்சிக்கொள்றதுலாம் தனிமனிதனுக்கும் சரி நாட்டுக்கும் சரி நல்லதில்லை. அதனால, முழுக்க, முழுக்க 100% மூளையுள்ள ரோபோவை உருவாக்காம, நமக்கு தேவையான வேலைகளை 100% சரியா செய்யும் ரோபோக்களே போதும். தனக்கு தேவையில்லாத விசயத்துல ஆராய்ச்சி பண்ணி தேவையில்லாத சிக்கலை உண்டாக்கிக்குறது மனுசனோட வாடிக்கை. அதுமாதிரி இதும் ஆகிடக்கூடாது புள்ள.

ஆமா, இதுலாம் உனக்கு எப்படி தெரியும் மாமா?!

இதையெல்லாம் ட்விட்டர்ல படிச்சேன்.

ம்ம் அதானே பார்த்தேன். உனக்குதான் கொஞ்சம் அறிவு கம்மியாச்சுதே. எதும் சொன்னா புரியாதேன்னு இதுமட்டும் எப்படின்னு யோசிச்சேன். சுட்டதா இதுலாம்?! இன்னிக்கு மாற்றுதிறனாளிகள் தினம்ன்னு சொல்றாங்களே!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு என பிறக்காமல் இருப்பதுன்னு அவ்வையாரே பாடிட்டாரு. அதுக்கப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு?! மாற்றத்திற்கு ஏற்ப மாறும் இவ்வுலகம், மாற்றமின்றி அவங்களை மட்டும் மாறுபடுத்தி காட்டுது... அவங்கலாம் மாற்றுதிறனாளி கள் மட்டுமல்ல... எதையும் மாற்றும் திறனாளிகள்...ன்னு மனசில் நினைவு வச்சிக்கனும்

மெய்தான் மாமா! ரொம்ப பேசியாச்சுது. போய் பொழப்ப பார்ப்போம்...

நன்றியுடன்,
ராஜி



Sunday, December 02, 2018

எங்க புள்ள இருக்க?! - பாட்டு புத்தகம்

வானத்துல பறக்கும் பட்டம்போல எதை பத்தியும் யோசிக்காம சுத்திக்கிட்டிருந்த ஒரு பையன்,  விதிவசத்தால் ஒரு இக்கட்டான சூழலில் ஒரு பொண்ணை பார்க்கிறான். பிடிச்சு போகுது. பேர், ஊர், குலம், கோத்திரம்ன்னு எதும் தெரியாது. பார்த்ததும் தனக்கானவள்ன்னு மனசுக்கு தோண, இக்கட்டான சூழலிலும், எதிராட்கள் சூழ்ந்திருக்க, அத்தனைப் பேரு முன்னாடியும் உன்னை எனக்கு பிடிக்குதுன்னு சொல்லிட்டு போயிடுறான். அதுவரை காதல் வசப்படாத அந்த பொண்ணுக்கு,  அவன் போனப்பின் அவளுக்குள் ரசாயாண மாற்றம்.  காதல் கொண்டு அவனை தேடி அவன் சொன்ன இடத்துக்கு அவன்மேல் நம்பிக்கை வச்சு போகுது. 

அந்த பொண்ணை மீண்டும் பார்க்கனும், கூட்டிட்டு வந்திடனும்ன்னு அந்த புள்ளை ஊருக்கு அந்த பையன் போறான். அங்க போனபின்தான் தெரியுது. தன்னை தேடி அந்த பொண்ணு . அவன் சொன்ன இடத்துக்கு வந்திருக்குன்னு.. அங்க  போய் தேடுறான். தேடுறான்.  கைக்கு கிட்டும் சமயத்தில் சுனாமி வந்து அந்த புள்ளையை அடிச்சுட்டு போய்டுது. அந்த சூழலில்தான் இந்த பாட்டு. அவனின் ஏக்கத்தினை மிகவும் மெல்லிய இசையில் இருக்கும். 

வீடியோவில் பார்க்கும்போது காட்சிகளின் இரைச்சல் பாடலின் தரத்தை குறைச்சு காட்டும். ஆனா, ஆடியோவில் கேட்கும்போது இரைச்சல்கள் இல்லாம, ரொம்ப மெல்லிய இசையோடு  இந்த பாட்டு அழகா மனசை பாதிக்கும்.  . அவனின் ஏக்கத்தினை வரிகளாய் அழகாக எளிதான வரிகளால்  பகிர்ந்துள்ளார் யுகபாரதி. 

எங்க புள்ள
இருக்க?!

 நீ சொல்லடி ..
கண்ணு முன்ன வந்து நீ 
கொஞ்சம் நில்லடி....
ஒத்தையா வேகுறேன்...
மொத்தமா நோகுறேன்...
இது ஏனோ தானோ?!
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன நீ
வந்து கொஞ்சம் நில்லடி......

அரிதான பொருளாக
தெரிந்தாயடி!!
அடைக்காக்க முடியாமல்
தொலைத்தேனடி!
எனக்குள்ளே புது
மூச்சை கொடுத்தாயடி...
சுழல் போல
அதை நீயே எடுத்தாயடி…

பொத்தி வச்ச
உன் நினைப்பு
பொத்திக்கிட்டு கொட்டுதடி..
சுத்தி விட்டு ராட்டினமா
என் மனசு சுத்தடி...
இது ஏனோ தானோ….
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன வந்து  நீ 

கொஞ்சம் நில்லடி!
எனக்கான வரம்போல
பிறந்தாயடி..

தவமேதும் புரியாமல்
கிடைத்தாயடி...
இனிமேலும் இவன்
வாழ முடியாதடி,
இறந்தாலும் உன்னை
தேடி அலைவேனடி...

உன்ன இவன்
கண்ணு முழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி
அப்படியே செத்திடவும்
தோணுதடி..
இது ஏனோ தானோ…
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன வந்து நீ 

கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!

இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: பலராம்
படம்: கயல்

நடிகர்: சந்திரன்

Saturday, December 01, 2018

பெண்களே ஐயப்பனை தரிசிக்க ஆசையா?! - ஐயப்பனின் அறுபடை வீடுகள்

சபரிமலைக்கு போகனும்ன்னு முடிவெடுத்துட்டா கார்த்திகை மாதம் ஒன்றாம்தேதி மாலை போட்டுக்கனும். இல்லன்னா, கார்த்திகை மாதம் 19தேதிக்குள் நல்ல நாள் பார்த்து மாலை போட்டுக்கனும்.  கார்த்திகை ஒன்றுன்ன்னா நாள், கிழமை, நட்சத்திரம்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எது எப்படியோ குறைஞ்சது 41 நாட்களாவது விரதமிருக்கனும். முன்னலாம், அப்படிதான், இப்பதான் கூட்டம் சேரச்சேர ஐப்பசியிலேயே மாலையிட்டு கார்த்திகை முதல்நாளே தரிசனம் செய்ய மலைக்கு கிளம்பிடுறாங்க.
108 இல்லன்னா 54 மணிகளை கொண்ட துளசிமணி இல்லன்னா ருத்திராட்ச மாலையில் ஐயப்பன் பதக்கத்தை இணைச்சு குலதெய்வம் இல்லன்னா இஷ்டதெய்வம், தாய் தகப்பனை வணங்கி அனுமதி பெற்று குருசாமி கைகளால் மாலை அணிஞ்சுக்கனும். குருசாமி பக்கமில்லைன்னா, கோவில் குருக்கள், தாய், தகப்பன் கைகளால் மாலை அணிஞ்சுக்கலாம். குருசாமிக்கிட்ட மாலை போட்டுக்கிட்டா அவருக்கு தன்னாலான குருதட்சணை கொடுப்பது முக்கியம். ஏன்னா, ஐயப்பனே குருதட்சனை கொடுத்தவர்தான்.  மாலை போட்டதும் காமம், புகை, மது, அசைவத்தைலாம் தள்ளி வச்சா மட்டும் போதாது, கோவத்தையும் தள்ளி வைக்கனும். மாலை போட்டதிலிருந்து  குருசாமி சொல்றதை தட்டாம ஏத்துக்கனும்.
மாலை போட்டதிலிருந்து காலை சூரிய உதயத்துக்கு முந்தியும்,  மாலை  சூரிய அஸ்தமனத்துக்கு பிந்தியும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பன் படத்துக்கு முன் 108 சரணகோஷத்தினை சொல்லனும். எளிய சைவ உணவை உட்கொள்ளனும். சைவ உணவுதானேன்னு தினத்துக்கு ஒரு பலகாரம் செஞ்சு சாப்பிடக்கூடாது.  முடிஞ்சவரை ஹோட்டல் சாப்பாட்டை தவிர்க்கனும். தினமும் கோவிலுக்கு போய் வரனும். விளக்கு பூஜை, கன்னி பூஜைலாம் செய்யும்போது கூட்டு வழிபாடுல கலந்துக்கிட்டு, வாய்விட்டு ஐயப்பன் சரணம் சொல்லி இறைப்பாடல்களை பாடனும். அவங்கவங்க குடும்ப வழக்கப்படி கருப்பு, நீலம், காவி நிறத்தில் உடை உடுத்தனும். பாய், படுக்கை, தலையணை ஏதுமில்லாம துண்டு விரித்து வெறுந்தரையில் படுக்கனும். உடம்புக்கு முடியாதவங்க புது பெட்ஷீட்டை பயன்படுத்தலாம். மத்தபடி பாய்களை தவிர்க்கனும்.   செருப்பு போடக்கூடாது. பணிநிமித்தமா இருக்கவுங்க போட்டுக்கலாம்.

சோப், ஷாம்பு, சீயக்காலாம் பயன்படுத்தலாம். ஏன்னா, ஐயப்பனுக்கு மனத்தூய்மையோடு உடல்தூய்மையும் முக்கியம். மாலை போட்டிருக்கும்போது இறப்பு நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்க்கனும். நெருங்கிய உறவினர் மரணம்ன்னா மாலையை கழட்டிட்டு கலந்துக்கிட்டு அடுத்த வருசம் மாலை போட்டு சபரிமலைக்கு போகலாம். அதேப்போல் மாலை போட்டிருக்கும்போது வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டிருந்தால் மாலையை கழட்டிடனும். ஒருவேளை குடும்பத்தாரை பிரிஞ்சு இருந்தால் மாலையை கழட்ட வேண்டாம்.  ஒருவேளை குடும்பச்சூழலும், பணிநிமித்தமும் கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை போட்டுக்க அனுமதிக்காத பட்சத்தில் மாலை போடாமயே முறையான விரதமுறைகளை  கடைப்பிடிச்சு வந்தால்  இருமுடி கட்டும் நாளிலேயே மாலை போட்டுக்கிட்டு போகலாம். ஆனா, 48 நாட்கள் விரதமுறையை கண்டிப்பா கடைப்பிடிச்சே ஆகனும்.

இதுலாம் மாலை போட்டுக்கிட்டு இருக்கும்போது இருக்க வேண்டிய விதிமுறைகள். சபரிமலையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.. இன்னிக்கு ஐயப்பனின் அறுபடை வீட்டில் ஒன்றான ஆரியங்காவு தர்மசாஸ்தாவை பத்தி பார்க்கலாம்...
பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இளவயதில், ஆரியங்காவு பகுதில்தான் வீர விளையாட்டுகளை கற்க வந்தார். அதன் காரணமாக, இங்குதான் முதன்முதலில், சாஸ்தாவிற்கு கோவில் எழுந்ததாகவும், பின், அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழா,  மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொண்ட சபரிமலையில் கோவில் தோன்றியதாகவும் செவிவழி கதைகள் உண்டு. தர்மசாஸ்தாவை பற்றி சொல்லப்படும் கதைகளில் மகேஷ்வரனின் புத்திரனாகிய அவர் குறுகிய காலத்திலேயே சகல சாஸ்த்திரங்களையும்  பிரம்மாவிடம் கற்று "மஹா சாஸ்த்ரு" என்ற நாமத்தையும் பெற்றார். தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்மசாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன்.  ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி, தர்மசாஸ்தாவின் திருஅவதாரமாகும். தர்மசாஸ்தா தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தோன்றியவர். அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாக சொல்லப்படுது.
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால் திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, முதலான பல கலைகளில் சிறந்து விளங்கலாம்.

ஞான சாஸ்தா: தட்சிணாமூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.

மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

தர்மசாஸ்தா: இவரே ஐயப்பனின் திருஅவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே!
ஆன்மீகத்தை பொறுத்தவரை எல்லா கதைகளும்,  செவிவழி கதைகளாகவே வந்திருக்கு. இதுக்குலாம் ஆதாரம் கேட்டா இல்லன்னுதான் சொல்லனும். இதுலாம் நம்பிக்கை, உள்ளுணர்வை பொறுத்தது. எல்லா கதைகளையும் போல ஐயப்பன் கதைகளிலும் பலவேறு கதைகளாய் பேசப்பட்டாலும், தர்மசாஸ்தா அவதரித்து, கலியுகத்தில் அருள்பாலிப்பது என்பது உண்மையே. முதலாவது தர்மசாஸ்தாவான புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழி வந்த கதையை பார்க்கலாம். நெசவுத்தொழில் செய்துவந்த மதுரையில் குடியேறிய குலத்தவர்கள் நெய்து கொடுக்கும் பட்டாடைகளைத்தான் சேரமன்னர்கள் அணிவார்கள். அப்படியான ஒரு காலக்கட்டத்தில் சௌராஷ்டிரா நெசவு வணிகர் ஒருவர், தான் நெய்த பட்டாடைகளை மன்னனுக்கு எடுத்து செல்லும்போது தன்னுடைய மகளையும் உடன் அழைத்து சென்றார் .  அப்படி செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அந்த காலத்தில் கோவில்கள் எல்லாம் அன்ன சத்திரங்களாகவும், தங்கும் இடங்களாகவே இருந்தது. இப்ப மாதிரி வியாபாரதலமா இருந்திடலை. அதனால் நெசவு வணிகரும், அவரது மகளும் அங்கேயே தங்கினர். 
நெசவு வணிகனின் மகளான புஷ்கலை அங்கிருந்த ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்டவுடன் ஐயன்மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள்.  மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே, தான் தங்கப் போவதாய் பூரணை பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்கவில்லை. நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்கிறாள்.  என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரைமனதுடன் மன்னனைக் காண  செல்லுகிறார்.

அந்த அடர்ந்த காட்டுவழியே தனியே சென்ற நெசவு வணிகன், ஒற்றை யானையிடம் சிக்கிக்கொள்கிறார். உடனே பயந்து, தான் ஆரியங்காவில் பார்த்த அய்யப்பனை நினைத்து, ஐயப்பா!! காப்பாற்று... என கதறுகிறார். அப்பொழுது அங்கே அழகே உருவான ஒரு வேடன் வருகிறான். அந்த யானையை அடக்குகிறான். இதைக்கண்டு மகிழ்ச்சியுற்ற நெசவு வணிகன் தன்னிடம் இருந்த உயர்ந்த பட்டாடை ஒன்றினை பரிசாக கொடுக்கிறான் மனம் மகிழ்ந்த வேடுவ வாலிபன், உடனே அதை அணிந்து அழகே உருவாக காட்சிகொடுத்து சிரித்துக்கொண்டு  நின்றான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர், "மாப்பிள்ளைப்போல் இருக்கிறாய்? வேறு என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார். "நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொன்னார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள் அங்க இல்ல. எங்கு தேடியும் மகளை காணலை. இரவு முழுதும் தேடுகிறார். அவருடன் கோவிலின் மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது.  அசதி மேலிட மேல்சாந்தி அப்படியே  தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் ஐயப்பன் கனவில் தோன்றி, புஷ்கலை தன்மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டதாய் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. மேல்சாந்தி, வணிகர் உள்ளிட்ட அனைவரும் காலையில்   கோயிலை திறந்து ஐயன் சந்நிதியை பார்த்தார்கள். என்ன அதிசயம்! காட்டில் வேடனுக்கு வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் காணப்பட்டது. அதே மாப்பிள்ளைக்கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்கிறார். இதேப்போல் மற்றொரு செவிவழி கதையும் இருக்கிறது. அது நடைபெற்ற இடமும், புவியில் அமைப்பில் வெகுதொலைவில் இருந்தாலும், பெயர்களும் சம்பவங்களும் ஒற்றுமையாகவே இருக்கு.
ஆரியங்காவில் பூரணை, புஷ்கலையுடனான ஐயனின் திருமணக்காட்சி 1

நேபாள நாட்டில் மந்திர தந்திரங்களில் சிறந்த பளிஞன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் காளி உபாசகனாகவும், மந்திர சாஸ்திரத்தில் பண்டிதனாகவும் இருந்தான். அவனுக்கு புஷ்கலை என்னும் மகள் இருந்தாள் பளிஞன் என்றும் சிரஞ்சீவியாக இருக்க அநேக கன்னி பெண்களை காளிக்கு பலியிட்டுவந்தான். அந்த நாட்டில் சிவனிடத்தில் பக்திக்கொண்ட கன்னிகா என்னும் பெண் வசித்துவந்தாள். பக்தியில் சிறந்த அவளை காளிக்கு பலியிட பளிஞன் முடிவு செய்தான். கருணையே வடிவான அந்த சிவன், பளிஞனின் கொட்டத்தை அடக்கவும், கன்னிகாவை காப்பாற்றவும், குமாரனாக இருந்த சாஸ்தாவையும், கருப்பண்ண சுவாமியையும் கன்னிகாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி மறைத்து வைத்தார். சாஸ்திரத்தில், மந்திரக்கலைகளில் வல்லவரான தர்மசாஸ்தா பளிஞனின் பல்வேறு சூழ்ச்சிகளையும் மந்திர வித்தைகளையும் தவிடு பொடியாக்கினார். கடைசியில் தன்னுடைய சுயரூபம் காட்ட, பளிஞன் அவரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை ரட்சிக்குமாறு வேண்டினான். தன் மகளான புஷ்கலையை மனம் முடிக்கவேண்டும் என்றும் வேண்டினான். அவரும் அவ்வாறே செய்து புஸ்கள காந்தன் என்ற பெயரும் பெற்றார் என்றும் ஒரு செவிவழிக்கதை உண்டு . 
இனி, பூரணை மற்றும் புஷ்கலை பற்றிய தர்மசாஸ்தாவின் அவதார தத்துவத்தை பற்றி பார்க்கலாம் .முன்னொரு  காலத்தில் சத்ய பூர்ணர் என்றோரு மகரிஷி வசித்துவந்தார் .அவருக்கு  பூரணை,  புஷ்கலை என்ற இரு மகள்கள் இருந்தனர். அவர்கள் ஹரியினுடைய மகனை மனக்கவேண்டி கடுமையாக விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுடைய தவத்தை மெச்சி உங்கள் இவருடைய எண்ணங்களும் அடுத்த பிறவியில் ஈடேறும் என்று கூறி மறைந்தார்.  அவர்களில்  ஒருத்தி நேபாள மன்னனுடைய மகளாக பிறந்து தர்மசாஸ்தாவை மணம் முடிக்கிறாள். மற்றொருத்தி இப்பொழுது மலையாள தேசத்தில் இருக்கும் கொச்சியானது அப்பொழுது வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்பட்டது. அதை பிஞ்சகன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு மகளாக பூரணை என்ற திருநாமத்தில் வளர்ந்துவந்தாள். மணப்பருவம் எய்திய பூரணை மற்றும் பரிவாரங்களுடன் வேட்டைக்கு சென்ற மன்னன் வேட்டையாடுதலில் தன்னை மறந்து தன்னுடன் வந்தவர்களை பிரிந்து வெகுதூரம் வந்துவிட்டான். இரவு நெருங்கியபோதுதான்,  தான் தனித்துவிடப்பட்டதை மன்னன் அறிந்தான் .
திடீரென  அந்த இடத்தில கூச்சல், அழுகை, ஆர்ப்பாட்டமென எல்லா வீடும் அல்லோகலப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தால், அங்கு ஒரு சுடுகாடும், அங்கிருக்கும் பூதங்களும், பேய்களும் ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி களியாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. இதைக்கண்ட மன்னன் கதிகலங்கி போய் பூதநாதனாகிய தர்ம சாஸ்தாவை நினைத்து பிரார்த்தனை செய்தான் .
பூதநாதனே சரணம்,
மோகினி மைந்தனே சரணம் ,
செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம் ,
என பலவாறு வேண்டி துதித்தான். உடனே ஐயன் அங்க வந்து தன் அருட்பார்வையால் பூதகணங்களை நோக்க, அவரைக்கண்ட மாத்திரத்தில் அவையெல்லாம் திக்குதிசை தெரியாம ஓடி மறைந்தன.  பயங்கொள்ள வேண்டாமென அபாயம் கொடுத்த தர்மசாஸ்தா,  மன்னனை தன் குதிரையில் ஏற்றி பத்திரமாக அரண்மனைக்கு  திரும்ப அழைத்து சென்று விட்டுவிடுகிறார். மனம் மகிழ்ந்த மன்னன் திருமண வயதில் இருக்கும் தன்மகள்  பூரணையை  திருமணம் செய்துகொள்ளவேண்டும் என ஐயனிடம் வேண்டுகிறார். தர்மசாஸ்தாவான ஐயன், அவளின் பிறப்பு ரகசியத்தையும் தன்னை மணப்பதற்காகவே அவள் பிறந்து தனக்காக காத்திருக்கிறாள் என்பதனையும் உணர்த்தி, பூரணையை மணம் முடித்து ஹரிஹராத்மஜனான தர்மசாஸ்தா கயிலாயம் சென்றடைந்தார்.  அங்கு,  மகாதேவரின் ஆணைக்குட்பட்டு பூதகணங்களுக்கு தலைவணங்கி அவற்றை வழிநடத்தி, பூதநாதன் என்று திருநாமம் பெற்று பூரணை, புஷ்கலை சமேதனாக எழுந்தருளினார். தர்மசாஸ்தா, இவருக்கு சத்யகன் என்ற புத்திரனும் உண்டு அவனை செல்லப்பிள்ளை என்றும் கைலாயத்தில் அழைப்பார்கள் .
இப்படி இருக்க பூரணயை ஐயன் திருமணம் செய்ததை கேள்விப்பட்ட புஷ்கலையின் தந்தை பளிஞன், ஆவேசங்கொண்டு தன்மகளிடம் முறையிடுகிறான். முற்பிறவியை தன் ஞானதிருஷ்டியினால் அறிந்துக்கொண்ட புஷ்கலை ஏதும் அறியாததைப்போல மௌனம் சாதிக்கிறாள். இதனால் கோபங்கொண்ட பளிஞன் தர்மசாஸ்தாவிடமே சென்று, நீ செய்தது சரியோ என முறையிடுகிறான். ஒரு தந்தையாக பளிஞனின் கோபம் நியமானதென உணர்ந்த ஐயன் மெளனமாக இருக்க,  மேலும் கோபங்கொண்ட பளிஞன் தர்மசாஸ்தாவான அவனுக்கு சாபம் கொடுக்கிறான். ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ பூலோகத்தில் ஜனித்து பிரம்மச்சாரியாகவும் யோகியாகவும் இருக்க கடவாய் என சாமிட்டார். அதையும் சந்தோஷமாக புன்முறுவலோடு ஏற்றுக்கொண்ட ஐயன் பளிஞனே! நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று இருக்கிறது. அதில் நான் பிரம்மச்சாரியாகவும் இருக்கவேண்டும்.  இப்பொழுது உன் சாபம் அதை மிகவும் எளியதாக்கி விட்டது.  அப்பொழுது நீயே பந்தள தேசத்து அரசனாக வந்து என் வளர்ப்பு தந்தையுமாய் ஆவாய். நான் என்னுடைய அவதார நோக்கத்தை பூர்த்தி செய்ய நீயே உறுதுணையாக இருப்பாய் என்று கூறி பளிஞனுக்கு அருள்பலித்தார் . இன்றும் தர்மசாஸ்தா, பூரணை, புஷ்கலை திருக்கல்யாணத்திற்கு மதுரையிலிருந்து சௌராஸ்டிர மக்கள் சீர் கொண்டு போவதை வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.


ஆரியங்காவில் பூரணை, புஷ்கலையுடனான ஐயனின் திருமணக்காட்சி 2

கோயில் கேரள கட்டிடக்கலையிலிருந்தாலும் பூஜைலாம் தமிழ்நாட்டு வழக்கப்படியே நடக்கும்.  கருவறையில் பார்வதி, லிங்க வடிவில் சிவன், ஐயப்பனின் உருவச் சிலைகள் உள்ளன. நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர். பரசுராமரால் உருவாக்கப்பட்டத் தலங்களில் இதுவும் ஒன்றுன்னு சொல்றாங்க. கோயிலின் இடப்புறம் அய்யப்பனின் காவல் தெய்வங்களாகிய கருப்பசாமியும் கருப்பாயி அம்மையும் வீற்றிருக்கின்றனர். ஒற்றைக்கல்லில் தீர்த்த திருக்கல்யாண மண்டபம். கோயிலினுள் ஆண்கள் மட்டுமே நுழைய வேண்டும், இங்க ஐயப்பன் மனைவியரோடு காட்சியளிப்பதால் பெண்களும் இக்கோவிலுக்கு கணவரோடு போய்வரலாம்ன்னு சொல்றாங்க.  எது எப்படியோ இதுலலாம் பெண்ணியம்,ஆணியம், ஈயம்லாம் வீம்பு பிடிக்காம அந்தந்த கோவிலுக்குண்டான நியதிகளை பின்பற்றி நடப்பதே சிறப்பு.

அடுத்த வாரம் அச்சன்கோவிலை பார்க்கலாம்....


நன்றியுடன், 
ராஜி