பெண்பாவம் பொல்லாததுன்னு சொல்வாங்க. ஆனா, அந்த பாவத்தை தீர்த்துக்கவும் ஒருநாள் இருக்கு. அந்தநாள் என்னிக்குன்னு தெரிஞ்சுக்கிட்டா பலருக்கு பயன்படுமே! அந்தநாள் எதுன்னா, கார்த்திகை மாசத்து அமாவாசைதான். மாசாமாசம்தான் அமாவாசை வருது. அதுக்கும் பெண்பாவத்துக்கும் வாட் சம்பந்தம்ன்னு யோசிக்குற ஆட்களுக்கு ஒரு புராணக்கதை பதிலா அமையும். கேரள மன்னன் கணபதி என்பவனை பீடித்திருந்த பெண்பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசலூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண்பாவம் இத்தலத்தில் அவன் வழிபட்ட மாத்திரத்தில் அகன்றதாம்!! அதனால், நம் வாழ்வில் தெரிஞ்சும், தெரியாமலும் செய்த தவறால் பெண்சாபத்திற்கு ஆளாகியிருந்தால் இத்தலம் வந்து வழிபட அச்சாபம் பாவம் நீங்குமென்பது நம்பிக்கை.
திருவிசலூர்
திருவிசலூரில் ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் என்னும் சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், சவுந்தர நாயகி சமேத சிவயோகிநாத சுவாமி திருக்கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து, அதன்பின்னரே உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார். ஒருநாள்கூட , இறைவனை தரிசிக்கதவறியதில்லை. ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தன்று, இவர் தனது முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருந்தது.
திருவிசலூர்
திதி கொடுப்பதற்கு முன்னரே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் வீட்டுவாசலுக்கு வந்து, பசிக்குதுன்னும், தனக்கு எதாவது சாப்பிட கொடுக்குமாறு வேண்டினான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய தீட்சிதர், வீட்டில் திதிக்காக செய்யப்பட்ட உணவை பசியாற கொடுத்தார். இச்செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திரத்துக்கு விரோதமானது. இதற்கு பரிகாரமாக நீர் காசி சென்று கங்கையில் நீராடி வந்த பின்னரே திதி கொடுக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஊரைவிட்டு விலக்கு செய்து, உம்மையும் உமது குடும்பத்தாரையும் நீக்கிவைப்போமென கூறியதோடு, தர்ப்பணம் செய்யவும் மறுத்தனர்.
திருவிசலூர்
தென்னாட்டிலிருக்கும் ஒரு சாதாரண மனிதனால், வடநாட்டிலிருக்கும் கங்கையில் ஒரேநாளில் நீராடி, திரும்பி வீடுவந்து மூத்தோருக்கு தர்ப்பணம் செய்யமுடியுமா?! கங்கைக்கு சென்றுவர குறைஞ்சது ஒருவருசமாவது ஆகுமேன்னு மலைத்து நின்றார். திக்கற்றவருக்கு தெய்வமே துணைன்னு இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்'ன்ற துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து ஊரே வெள்ளக்காடானது.
திருவிசலூர்
இந்த அதிசயத்தினை கேள்விப்பட்ட மக்கள் ஸ்ரீவெங்கடேச தீட்சிதரிடம் விவரமறிந்து, ஊரில் பாய்ந்திக்கொண்டிருந்த கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்க, தீட்சிதரும், மன்னித்து, கங்கையிடம் கோவம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கியது. தீட்சிதர், தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே! நீ இங்கேயே நிலைத்திரு’ என வேண்டியதால். கங்கை அங்கேயே நிலைத்து நின்றது. அதைத் தொடர்ந்து தீட்சிதரின் முன்னோருக்கு திதி கொடுக்கப்பட்டது. இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். தீட்சிதர் வசித்த இல்லம் மடமாக மாறியுள்ளது.
திருவிசலூர்
காலையில் நடந்த களேபரத்தில் திருவிசலூர் சிவயோகிநாதசுவாமியை தரிசிக்கமுடியாமல் போனது. அன்று மாலை திருவிசலூர் ஈசன் கருவறை மூர்த்தங்களின் காலடியில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீவெங்கடேச தீட்சிதரின் வீட்டு திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என எழுதியிருந்தது. ஏழையாக வந்து, தீட்சிதரின் வீட்டு திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், தங்கள் தவறினை உணர்ந்து தீட்சிதரை போற்றி புகழ்ந்தனர்.
திருவிசலூர்
கிணற்றில் கங்கை பொங்கிய அதிசய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசையன்று திருவிசலூர் ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் மடத்தில் நிகழ்கிறது. இன்ரும் கங்கை பொங்கி வந்த அமாவாசை தினத்தில் இங்கு கங்கை பொங்கும் விழாவினை பத்து நாட்கள் திருவிழாவாய் கொண்டாடுகின்றனர். விழா நாட்களில் தினமும் அன்னதானம் நடக்கும். பத்தாம்நாள் கார்த்திகை அமாவாசையன்றுதான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் இங்கு திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து, அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள். பிறகு கிணற்றுக்கு கங்காபூஜை நடத்தி, காலை ஐந்து மணியிலிருந்து திரண்டிருக்கும் மக்கள் எல்லாரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரையுடன், நீர்மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாதாம். இப்படி நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.
ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் சிவபக்தர் மட்டுமில்லை. சிறந்த விஷ்ணு பக்தரும்கூட.. விஷ்ணுவும் ஒன்றே என மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசலூர் ஈசனை காலையில் வழிபடுவதோடு, மாலையில் அருகிலிருக்கும் திருவிடைமருதூருக்குச் சென்று, மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார். அதன் பின்பே இரவு உணவை உண்ணும் வழக்கம் கொண்டவர். திருவிசலூரிலிருந்து திருவிடைமருதூருக்கு செல்லும் வழியில் வீரசோழன்ன்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்துதான் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார்.
திருவிடைமருதூர்
ஒருநாள் வீரசோழன் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீவெங்கடேச தீட்சிதரால், ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர், மகாலிங்க சுவாமியை தரிசிக்காததால் கவலையோடு சாப்பிடாமலேயே படுக்கைக்குச் சென்றார். திடீரென வீட்டுவாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடைமழையில் யார் கதவைத் தட்டுவது’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார். ‘அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியைக் காண உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல்,இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆகவே, திருக்கோவில் பிரசாதத்துடன் நானே வந்து விட்டேன்’ என்றார் அர்ச்சகர்.
திருவிடைமருதூர்
திருக்கோவில் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடுங்குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட தீட்சிதர், தன்னுடைய கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்திவிட்டார். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த தீட்சிதர், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணி விடிந்ததும் விடியாததுமாக, அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.
திருவிடைமருதூர்
மகாலிங்கசுவாமி சன்னிதியில் முதல்நாள் இரவு, தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதை கண்ட தீட்சிதர், அப்போதுதான் அவரும் கோவிலுக்கு வந்துக்கொண்டிருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது. வாசலிலேயே அர்ச்சகரிடம் சென்று, நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, ‘சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!’ என தீட்சிதர் வருத்தப்பட்டார். அர்ச்சகர் திகைத்தவாறே, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் எப்ப உங்க வீட்டுக்கு வந்தேன்? கடுமையான மழையினால், கோவிலுக்கு யாரும் வரமாட்டார்களென நான் நேற்று மாலையில் சீக்கிரத்துலயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே!’ என்றார்.
திருவிடைமருதூர்
இருவரும் திகைத்தவாறே கோவிலை திறந்து கருவறை கதவை திறந்து பார்த்தபோது ஸ்ரீவெங்கடேச தீட்சிதர், முதல்நாள் இரவு அர்ச்சகருக்கு போர்த்திவிட்ட கம்பளி, ஈசனின் திருமேனியில் இருந்தது. அப்போதுதான் இருவருக்கும் தெரிந்தது “நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் தீட்சிதரின் வீட்டுக்கு சென்று, பிரசாதம் உண்ணக்கொடுத்து, அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே''என. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர். பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்து, ஸ்ரீவெங்கடேசர் தீட்சிதர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம், ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீவெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப்பெறும் வஸ்திரம் சாத்தப்படும்.
திருவிசலூர்
அதேமாதிரி அன்றையதின உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்குது. ஜோதிவடிவில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது. ஆம்! பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய புண்ணியபூமி திருவிடைமருதூர். இத்தலத்தில் பிரம்மஹத்திக்கென தனிச்சன்னிதி இருக்கு. திருமணத்தடை, புத்தி சுவாதீனம் இல்லாமல் இருத்தல், மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய்கள், செய்யாத குற்றத்திற்காக அவச்சொல், உத்தியோகத்தடை கணவன்-மனைவி பிரச்சினை, புத்திரபாக்கியமின்மைலாம் பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுது. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டுமாம். அப்படிச் செய்வதால் பிரம்மஹத்திக்கு நிகரான சகல பாவங்களும் இத்தல பிரம்மஹத்தியிடம் சேர்ந்து, மீண்டும் அவை நம்மை அண்டாது என்கிறார்கள். திருவிடைமருதூரில் தினமும் காலை 8 மணி, 9 மணி, 10 மணிக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவாரண பரிகாரம் செய்கிறார்கள்.
திருவிசலூர்
பொதுவா எல்லா சிவன் ஆலயங்களிலும் பைரவர் சன்னிதி ஈசானிய மூலையில் இருக்கும், ஆனா, திருவிசலூர் ஈசன் ஆலயத்தில் யுகத்துக்கு ஒரு பைரவரென மொத்தம் நாலு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். அதனால், இவர்களுக்கு சதுர்கால பைரவர்கள் எனப்பெயர். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இந்த நால்வரின் திருப்பேர்களாகும். ஞானகால பைரவரின் அருகினில் தட்சினாமூர்த்தி அருள்புரிகிறார். அவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். சொர்ண ஆகர்ஷ்ண பைரவரின் எதிரில் மகாலட்சுமி இருக்குறதால இவரை வணங்கினால் வறுமை, கடன்பிடியிலிருந்து தப்பிக்கலாம். சேமிப்பு உயரும். உன்மத்த பைரவருக்கு அருகில் சனிபகவான் இருப்பதால் இவரை வணங்கினால் ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டமத்து சனி மாதிரியான தொல்லைகளிலிருந்து விலகலாம். யோக பைரவரின் அருகில் உத்திர கயிலாச லிங்கம் அருகில் இருப்பதால் எல்லாவிதமான ராஜயோகங்களும் கிடைக்கும்.இழந்த சொத்துகள், பூர்வீக சொத்துகள் கைப்பெறும். மொத்தமாய் இந்த நான்கு பைரவர்களையும் ஒருசேர வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மைகள் கிடைக்குமென்பது ஐதீகம்.
காசிக்கு சென்று கங்கையில் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்குமென்கிறது சாஸ்திரம். ஆனா, போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும்கூட எல்லாராலும் காசிக்கு போய் கங்கையில் நீராட முடியாது. அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதமாகவே, ஈசனின் அருளால் குறிப்பிட்ட சில நாள்களில், குறிப்பிட்ட ஆறு, கிணறு என்று சில நீர்நிலைகளில் கங்கை சங்கமிக்கும் அற்புதம் நம் புண்ணிய பூமியில் நிகழ்ந்திருக்கவே செய்திருக்கிறது. இந்த கார்த்திகை அமாவாசை தினத்தில் இக்கிணற்றில் குளிப்பதால் கங்கையில் குளித்த பலனை பெறுவதோடு திருவிசலூர், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிகளின் அருளையும், ஸ்ரீவெங்கடேச தீட்சிதர் சுவாமிகளின் அருளினையும் பெறலாம். நாளைய தினம் (6/12/2018) கார்த்திகை அமாவாசை. வாய்ப்பு இருக்கவுங்க போய் அதிசய கிணற்றில் நீராடி பலன் பெறுங்க.
நன்றியுடன்
ராஜி.
நல்ல தகவல். இதுவரை படித்தறியாதது. பாராட்டுகள் இந்த மாதிரி இடுகை எழுதினதுக்கு.
ReplyDeleteஎனக்கும் இது புதுசுதான் சகோ. பேப்பரில் படிச்சேன்.. இங்க பகிர்ந்துக்கிட்டேன்...
Deleteஅழகிய படங்கள்.
ReplyDeleteஎல்லாமே ஃபேஸ்புக்கில் சுட்டது சகோ
Deleteநல்ல தகவல்கள்....
ReplyDeleteஅருமையான கார்த்திகை அமாவாசை வரலாறு....இது வரை தெரிந்திராத பல தகவல்கள்/ நிகழ்வுகள்/படங்கள்......... நன்றி,தங்கச்சி பதிவுக்கு..........
ReplyDeleteஎனக்கும் இதுவரை தெரிஞ்சிடாத தகவல்கள்ண்ணே
Deleteபடங்கள் அருமை
ReplyDeleteஎல்லாமே சுட்டதுண்ணே
Deleteஅருமையான தகவல்கள் சகோதரி...
ReplyDeleteநன்றிண்ணே
Delete