Thursday, November 10, 2011

நீ பிறந்த காலம்..., அழகுக்காலம்....,

மழைக் காலம், கார்காலம், வசந்த காலமெல்லாம்,     எந்த மாதமென்று எனக்குத் தெரியாது… ஆனால்.    நீ பிறந்த இந்த மாதம் எனக்கு அழகுக்காலம்!!..,
ஒரு வேளை, கால எந்திரம் மட்டும் எனக்கு கிடைத்தால் நீ பிறந்தபொழுது,     நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?     எனப் பார்க்க ஆசை!  அழுகையோடு பிறந்தாயா?    அழகோடு பிறந்தாயா? இல்லை என்னை காண ஆவலோடு பிறந்தாயா?
உன் தாய்க்குதான் நீ பிறந்தாய். ஆனால், என் தாய்க்குப் பின்..., என் தாய் ஆனாய். உன் பிறப்பில் தான்    கண்டுகொண்டேன்…    கவிதைக்கும் உயிருண்டென...,!     
ஒவ்வொரு பிறந்த நாளிலும்...,  ஒரு  வயதோடு, கொஞ்சம் அழகையும்    ஏற்றிக் கொள்கிறாய் நீ! உன் பிறந்த நாளன்று     உன்னை வாழ்த்துவதா?இல்லை,   நீ பிறந்த இந்த நாளை வாழ்த்துவதா? புரியாமல் விழித்து நிற்கிறேன். எப்பொழுதும் போல்!!
பிறந்தநாளை எப்போதும்    ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…    என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி மட்டும்?  ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லை என்னால்!?.    உன் பிறந்தநாளை மாதம்தோறும்…    இல்லையில்லை,நீ பிறந்தகிழமையன்று    வாரம் தோறும் கொண்டாடுவோமா? இல்லையெனில், மணித்துளிகள்தோறும் கொண்டாடுவோமா?
 

உன் பிறந்த நாளை    தேவதைகள் தினமாய்க் கொண்டாட..,    தேவதைகளே தீர்மானித்திருப்பது     உனக்குத் தெரியுமா?! உன் பெயரில் நடக்கும்     பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள     தவம் கிடக்கின்றன…    எல்லாத் தெய்வங்களும்! நீ பிறந்த அன்றிலிருந்து     தன் சாதனைப் பட்டியலில்     உன் பிறப்பை முதன்மையாய்க்    குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
ஒருமுறைதான் பிறந்தாய்,    உன்னைப் பார்க்கும்     ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன் நான்.., உன் பிறப்பு     உன் தாய்க்குத் தாய்மையையும்,    எனக்கு வாழ்வையும் தந்தது! உன் அறிமுகமில்லயேல், நான் என்னவாகியிருப்பேனோ?! தெரியாது.

விந்தையான உலகம்…….!
விளங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்களுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!
       டிஸ்கி:எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து நட்பென்னும் ஓர் புள்ளியில் இணைந்து, ஒரே அலைவரிசையில் பயணித்து, வாழ்வாதாரத்திற்காக, என்னை பிரிந்து, தூரதேசத்தில் வாழும் என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்.

                                                                       

                                                      

Wednesday, November 09, 2011

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??


மல்டிநேஷனல் கம்பெனில வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க பாஸுங்க்கிட்ட நல்ல பேர் வாங்கி என்னைப் போல ஆளுண்டா?!ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க.  ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க. 
அதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க. 
கத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா? கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்...., இப்படி எத்தனை எத்தனையோ..., ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, சக ஆண்பதிவர்களுக்கு இந்த டிப்ஸ்.
இதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல பாஸாகுங்க. 
*முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!
* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.
*தேங்காய் ஆட்டி பார்த்து உள்ளே நல்லா தண்ணி இருக்குற காயா பார்த்து வாங்கணும்
*முட்டைகோஸ் இலை பிரியாம கொஞ்சம் பச்சை நிறமா இருக்குறதை வாங்கணும்.

                     
*வெங்காயம் வாங்கும்போது, மேற்பாகமும், கீழ்பாகமும்  அதிகம் வளராமலும், நீள்வாக்க்கில் இல்லாமல் உருளையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
*கத்திரிக்காய் வாங்கும்போது அழுத்தி பார்த்து கல் போலில்லாமலும், காம்புகள் நீளமாகவும், மேல்தோல் காயைவிட்டு பிரியாமலும் இருக்க வேண்டும்.

      
அசைவ பிரியர்களுக்கு:
*மீன் கடையில் பச்சை கலர் பெரிய ஈ சுத்தக்கூடாது . வயிற்றுப்பகுதி வீக்கமாகவோ உடைந்தோ இருக்க கூடாது

*எந்த மீனுமே புதிதானால் கவுச்சி வாடை இருக்காது . செவுலும் கண்ணும் பாத்து வாங்கனும்.  மீனின் மேற்பரப்பு பள பளன்னு வழு வழுப்புடன் இருந்தாலே புதிதாக இருக்கும்
*தேளி, கெண்டை, கெளுத்தி மீன், போன்றவை வறுக்க நல்லா இருக்கும்.
*டேம் கெளுத்தி, ஜிலேபி, விரால், போன்ற மீன்கள் குழம்பு வைக்க நல்லது.
ஆட்டுகறி வாங்கும்போது  கால் தொடைக்கறி வாங்குனா நல்லாருக்கும்(ரம்பா, தொடை அது இதுன்னு கமெண்ட் போட்டால்.. அவங்க தளத்துல மைனஸ் ஓட்டு போடப்படும் என்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.)

டிஸ்கி: சொந்தமா யோசிச்சீங்க போல இருக்குன்னு யாரும் கமெண்ட் போட வேணாம். இது சொந்தமா யோசிச்சு போட்ட பதிவல்ல. சொந்த அனுபவங்களை வச்சு போட்ட பதிவு. என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.

Monday, November 07, 2011

நீயும் நானும் நட்பென்ற எல்லையில்!?...,


வார்த்தைகளை
உணர்ச்சிகளாய் வெளிபடுத்தவோ
உள் உணர்வுகளை
வார்த்தைகளாய்
வெளிபடுத்தவோ
காதலில் மட்டுமே முடியும்.

நமக்காக நாம்
வரையறுத்து கொண்ட
நட்பென்ற எல்லையில்
இவை, சாத்தியமில்லாமல் போனதில்
வருத்தமே மிச்சம்.

இங்கே, எந்த உணர்வுகளும் சரி
எந்த வார்த்தைகளும் சரி
நாகரிகம் கருதி
நமக்கு நாமே புதைத்து கொண்டதை
நம் மனம் மட்டுமே அறியும்!?.

இருப்பினும்
நீ சொல்ல தயங்கியதை நானும்...,
நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்..,
புரிந்துகொண்டமையால் தான்
வளர்ந்து கொண்டு இருக்கிறது
நம் நட்பெனும் உறவு....,

Friday, November 04, 2011

திருப்பரங்குன்றம்-ஒன்றாம் படைவீடு






எங்க வீட்டுல எல்லாருக்குமே முருகர்தான் இஷ்ட தெய்வம். நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப  என் அப்பா அடிக்கடி முருகர் கதை, அவரோட கோயில்கள் பற்றிலாம் கதை கதையா சொல்வார். அது இப்போ என் பிள்ளைகளுக்கும் தொடருது. ஆனால், இன்னிய வரைக்கும் என் பிள்ளைகளுக்கு  அறுபடை வீடுகளை வரிசைப்படுத்தி சொல்ல தெரியாது(ம்க்கும் உனக்கு மட்டும் தெரியுமாக்கும்ன்னு யாராவது கமெண்ட் போட்டால் ரொம்ப கோவமா ”தெரியாது” னு சொல்லிப்புடுவேன் ஆமாம்.) அதனால், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மற்றும் என்னை போல உள்ளவங்களுக்கும் உபயோகப்படட்டும்னுதான் அறுபடைவீடுகள் பற்றி எனக்கு தெரிந்ததையும், நெட்டுல கொஞ்சம் சுட்டும் (கொஞ்சமான்னும் யாரும் கேட்க கூடாது) இந்த பதிவை போடலாமின்னு தோணுச்சு. 
வெள்ளிக்கிழமை இனி ஆன்மீகப் பதிவு போடலாம்ன்னு ஒரு ஐடியா. யாரும் என்னை பார்த்து காப்பி , பேஸ்ட் பதிவான்னு கேட்ககூடாது இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமாம்..

இந்த வாரம் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை பற்றி பார்க்கலாம். இங்குதான் முருகர், தெய்வானையை மணந்ததாக கூறப்படுகிறது. 
                
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி  
உற்சவர்: சண்முகர் , தெய்வானை
 தல விருட்சம்: கல்லத்தி 
தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் 
புராணகால பெயர்: தென்பரங்குன்றம், சத்தியகிரி, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரிபரம்சினம், கந்தமாதனம், கந்த மலை  
தற்போதைய பெயர் : திருப்பரங்குன்றம் .
அமைவிடம்: சங்கம் வளர்த்த மதுரையிலிருந்து தென் மேற்கில் 9கிலோமீட்டரில் இருக்கின்றது.
 மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
                 
தல சிறப்பு:
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர். இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால் சிவப்பெருமானே குன்று வடிவில் அருள் புரிவதாக எண்ணி வழிப்படுகின்றனர். மலையின் உயரம் சுமா180 மீட்டராகும்.
சுவாமி தரிசனம் தரும் நேரம்:
 காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,  மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தல பெருமை:
திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு, தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
புரட்டாசியில் வேலுக்கு அபிஷேகம் : திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன், இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது
வெள்ளை மயில் : மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.
பிரகாரம் இல்லாத சிவதலம்:
பொதுவாக கோயில்களில் சுவாமியைச் சுற்றி பிரகாரங்களும், பரிவார தேவதைகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். பிள்ளையார்பட்டி குடவறைக்கோயில் என்றாலும், அங்குள்ள சிவன் சன்னதியை சுற்றிவரலாம்.
தவறுக்கு பரிகாரம்:
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார். பிரணவ மந்திரத்தை குரு மூலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக முருகன் மந்திர உபதேசம் கேட்டுவிட்டாலும் அதை தவறாகவே கருதி பரிகாரத்திற்காகவும், சிவனே தனக்கு குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டுமென்றும் வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று காட்சி தந்து மன்னித்தார்.
இவர், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
                  
கொடிமரம், ராஜகோபுரத்துடன்  துர்க்கை சன்னதி:
கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். ஆம்! இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.
                     
தல வரலாறு
தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானை திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
முருகப்பெருமான் தெய்வானையை இங்கு மணந்து கொண்ட தலம் இது என்பதால்இத்தலத்தில் திருமணம் செய்துக் கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் மற்ற கோவில்கள் போல் சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே.., மேலே என்று ஏறிக் கொண்டே போகவேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவது இங்கு முடியாது.




Wednesday, November 02, 2011

நான் பெத்த மகனே!

நேத்து சாயந்தரம் என் குட்டி பையன் ஸ்கூலிலிருந்து வந்து ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். ,
அவன் ஹேண்ட் புக்கை எடுத்துக்கிட்டு  அப்பு! அம்மா  கேள்வி கேட்பேனாம். நீ பதில் சொல்வியாம்ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று  பார்ப்பதை அறியாமல்...,

நான் கேள்விகளை கேட்க, பதில் சொல்லி, சொல்லி கடுப்பான அவன், எப்ப பாரு என்னையவே கேள்வி கேக்குறியேம்மா! இன்னிக்கு ஒரு நாளைக்கு நான் கேள்வி கேட்குறேன் நீ பதில் சொல்லும்மான்னு சொன்னதற்கு..., சரி சரின்னு மண்டையை ஆட்டினேன். ஏழரை சனி மெல்ல உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்ததை அறியாமல்...,

1.தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியுமா?
.............................................................................

2.மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் புடிக்கறவனை மாணவன்னு சொல்ல முடியுமா?
....................................................................

3.புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,
ஆனா, கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா? .
...................................................................
 4. ஃபேண்ட் போட்டுக்கிட்டு முட்டி போடலாம்..,
முட்டி போட்டுக்கிட்டு ஃபேண்ட் போட முடியுமா?
...................................................................
5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் ஐய்யராத்துல மீன் புடிக்க முடியுமா? 
..............................................................
5.  இட்லி பொடியை தொட்டு  இட்லி சாப்பிட முடியும். 
ஆனால், மூக்கு பொடியை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?
..............................................................
                                      
6. கோலமாவில் கோலம் போடலாம் ,
கடலை மாவில் கடலை போட முடியுமா?
..................................................................
7. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா
washing சோடாவாகுமா?
...........................................................................
8. பாம்பு எத்தனை தடவை படமெடுத்தாலும்
அதால், ஒரு முறையாவது  ஒரு படத்தையாவது
தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?
.............................................................................
9.என்னதான் கோழிக்கு வயிறு ஃபுல்லா தீனி போட்டு வளர்த்தாலும்,
கோழி முட்டைதான் போடும்.
100/100 லாம் போடுமா?.
............................................................................
10. நீ எவ்வளவு பெரியா படிப்பாளியா இருந்தாலும்,
பரிட்சை ஹால்ல போய் எழுதத்தான் முடியும்.
படிக்க முடியுமா?

ஐயா சாமி, என்னை ஆளை விடு.., ன்னு
எழுந்து ஓட ஆரம்பித்தேன்.


அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.