Sunday, May 13, 2012

தெய்வத்தை விட மேலானவள்......

ன் உயிர் தந்து
என் உயிர்
வளர்த்த தாயே !!

தரணியில் நானும்
அவதாரம் எடுத்திட
துணையாய்
இருந்தவளே !!

ஈரைந்து மாதங்கள்
எனை கருவாய்
வயிற்றில்
சுமந்தவளே !!

பசியால் நீ
வாடிடும் போதும்
நான் பசியறியாது
செய்தவளே !!

நோயினால் நீ
வாடிய போதும்
என் மனம்
நோகாமல்
பார்த்தவளே !!

உன்னை
என்னவென்று
நான் சொல்வேன்...
நீ தெய்வம் என்று
சொன்னால் கூட
உனக்கு அது
இழுக்கு தான்...!!

நீ தெய்வத்துக்கு
மேலே தான்
என் மனதில்...!!
                                                               

ஒரு அன்னையாய் பொறுப்புணர்ந்து, என் அன்னைக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள தாய்மை குணம் கொண்ட அனைத்து  உயிரினங்களுக்கும்  “அன்னையர் தின வாழ்த்துக்களை” சொல்லிக்குறேன்.

Friday, May 11, 2012

வாழ்க்கையின் வலி புரிய....,

  


சில பொழுதாவது சோகப்படு....,

ஆனந்தத்தின் அருமை புரியும்.

யாருக்காவது கண்ணீர் விடு.....,

புன்னகையின் பெருமை புரியும்.



ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று....,

வறுமையின் கொடுமை தெரியும்.

மாளிகைவிட்டு மண் குடிசைக்கு வா....,

அன்றாடங்காய்ச்சியின் அழுகுரல் புரியும்.



மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல்....,

கல்வியின் அவசியம் தெரியும்.

அன்பிற்குரியவர்களிடமிருந்து விலகிப்பார்...,

மரணத்தின் வேதனை புரியும்.



குற்றவாளிகளின் கதறலைக் கேள்.....,

முன்கோபத்தின் பின்விளைவு புரியும்.

காலைப்பத்திரிகை விற்பனை பின்தொடர்....,

வாழ்க்கையின் வேகம்தெரியும்.



கடற்கரையில் குடிநீர் விற்பனைக் கேள்...,

வாழ்க்கையின் தாகம் புரியும்.

உழைக்கும் சிறுவர்களை உற்றுப்பார்....,

வாழ்க்கையின் அச்சம் தெரியும்.



உயர்ந்தவர்களின் வரலாறு படி..,

வாழ்க்கையின் வலி புரியும்.

Thursday, May 10, 2012

ஹீரோக்களின் ஹீரோ...

கடந்த ஞாயிற்று கிழமை நாங்க சென்னைக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட விஐபிலாம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு ஒரே தொந்தரவு. அதனால,   சென்னைக்குள்   நுழைஞ்ச உடனே  எங்க செல்போன்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டோம்.
நாங்க எங்கெல்லாம் போவோம்ன்னு அவங்களாவே கெஸ் பண்ணி, ஈவினிங்க் பீச்சுக்கு போவோம்ன்னு முடிவு பண்ணி எங்களுக்கு முன்னாடி அந்த விஐபிலாம் வந்து எங்களுக்காக  காத்திருந்தாங்க.

கலைஞர் ஐயா, நடிகர் பருத்தி வீரன் கார்த்தி, நடிகர் தனுஷ், நடிகர் விஜய்,  நடிகர் சரத்குமார், நடிகர் சிம்பு,  தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை காஜல் அகர்வால், நடிகை சினேகா, நடிகை அஞ்சலி, நடிகை நயன்தாரா, நடிகை அசின் கூட மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர்கூட தேவலோகத்திலிருந்து வந்திருந்தார். 
இவங்களோடு காட்டிலிருந்து ஒரு புலியும் வந்துடுச்சு. நாங்கலாம் பயப்படமாட்டோம். ஆனா  பீச்சுல இருக்குறவங்கலாம் பயப்படுவாங்களேன்னு போக சொல்லிட்டோம்.


எல்லாரும்  என்கூட போட்டோ எடுத்துக்கோங்கன்னு என் மகனை ரொம்ப விரும்பி கேட்டுக்கிட்டாங்க. ஆனா, எங்களுக்குதான் இந்த பப்ளிசிட்டி பிடிக்காதே!? அதனால,முடியாதுன்னு  சொன்னோம்.. இருந்தாலும் ரொம்ப கேட்டுக்கிட்டதால ரெண்டே ரெண்டு குரூப் போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டான்.

டிஸ்கி: படத்துல இருப்பது வருங்கால தமிழகத்தின் சூப்பர் ஹீரோ என் மகன் அப்பு. படம் எடுத்தது சின்ன பொண்ணு இனியா.  

Wednesday, May 09, 2012

காதல் என்றால் என்ன?!(படித்ததில் பிடித்தது..,)


“என்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- அன்பே… 
நீ என்னை மறப்பாய்.”
“என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- அன்பே… 
நீ என்னை நினைப்பாய்.”
காதலையும்,  வாழ்க்கையையும்,  மனித மனங்களையும், மனதின் தேடுதலையும், மனதின் ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது. எப்போதோ படித்து வெறுத்த கவிதையிது.

ஆனால், வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்… காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும், இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பட்டது.

காதல் என்பது இவ்வளவு தானா என்ன?
காதல் எவ்வளவு உயர்வானது?!

எதிர்கால  வாழ்க்கைக்காக, பார்த்து, ரசித்து, சிரித்து, மயங்கி, உலகே காலடியில் என்று இறுமாந்திருந்த  காதலை மறக்க முடியுமா? கவிதையா இது..? ச்ச்சீசீசீசீ எனறு தோன்றியது. ஆனால், அதுவே இன்று, சிலவற்றை படித்து, பல்வேறு மனிதர்களை சந்தித்து, வாழ்க்கையில் அடிப்பட்டு, உலகை உணர ஆரம்பித்த பின்  கவிதையின் பொருள் உண்மையென்றே தோன்றுகிறது.


உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா, காதல் மட்டும்?! மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை. உற்று பார்த்தால்  காதல் கூட அப்படித்தான் என்றே தோன்றுகிறது.

நான் பார்த்த காதலும், காதலர்களும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது.  காதலியாக அல்லது காதலனாக  பார்த்த போது இருந்த முகம் + மனம் – இப்போது வேறு ஒருவரின் மனைவியாக அல்லது கணவனாக  பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக.

நீ  இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவனும் சொன்னாள்… அவளும்  சொன்னான்… ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் . அது நடந்ததா?! இல்லையே… ஆனாலும் வாழ்கிறோம்.

பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்களாக இருப்பவர்கள் ?!.  ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். அவன் அல்லது அவள்  போன பின்னால் எல்லாமே  விட்டு போய் விடவில்லை.

அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறோம். சினிமாவை ரசிக்க்கிறோம். இடை இடையே அவள்(ன்) ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடமோ அல்லது தன் மழலை செல்வத்திடமோ பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது. 

பின் … “அவனி(ளி)ல்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி வாழ்வதாக” தோன்றுகிறது.

அப்படியெனில் காதல்..?

காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா..? – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா, அதுவா… வேறு எதுவா..? இப்படித் தான் எதையாவது நினைத்து நாம் வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ,  விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன.

“எழுதுங்கள் இவன் கல்லறையில் –
 அவள் இரக்கமில்லாதவன் என்று… ”
 பாடுங்கள் இவன் கல்லறையில் –
 இவன் பைத்தியக்காரன் என்று,” 
என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா?

போய் விட்டான்(ள்) அடுத்து என்ன செய்வது? எதிர்காலம், வேலை, குடும்பம், தங்கை, பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறார்கள், ஆனால், உண்மை வேறு தானே?

ஏதோ ஒன்று, அவனை(ளை) விட்டு  விலகும்படி தூண்டியது என்பதே உண்மை. காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான். காதல் கூட நாளாக நாளாக சலித்து தான் போகிறது.
ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது? பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நாமாக விலகினால் நமக்கது கௌரவம். இல்லையென்றால், காயப்பட வேண்டியிருக்கும்.

யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும்? யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை அவனு(ளு)க்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துங்கள்.

வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும்; ஆனால் இருக்காது.  கிடைப்பது போல் இருந்தது; ஆனால் கிடைக்கவில்லை. அதனால், மனசை தேற்றிக் கொள்ள வேண்டும். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.

உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.
டிஸ்கி: மெயிலில் வந்த ஒரு கட்டுரையை பட்டி, டிங்கரிங்க் செஞ்சு பதிவாக்கிட்டேன். 

Monday, May 07, 2012

மோனலிசா புன்னகையின் மர்மம்

ஏண்டி புள்ள,  கல்யாண நாளுக்கு சீலை  எடுக்க வந்துட்டு, சீலையை பார்க்காம வேறென்னத்தையோ  பார்க்குறியே, அப்படி என்னத்தைதான் பார்க்குறே புள்ளை?!

 அந்த பொம்பளை  போட்டோவை பார்த்துக்கிட்டு இருக்கேன்.யாருங்க மாமா அந்த பொம்பளை?! அதான் கடைக்காரரம்மாவா?! நல்லா அழகா சிரிக்குதுங்க மாமோய்.

அடி கூறுகெட்டவளே! அது கடைக்காரம்மா இல்லடி.புகழ்பெற்ற ஒரு ஓவியம்டி. படத்தோட பேரு ‘மோனலிசா’.

கடந்த 500 வருசமா  அந்த புள்ளையோட சிரிப்புல  இருக்குற  மர்மம புரியாத புதிராக இருந்துச்சு.


கேணைத்தனமா பேசாதீங்க மாமோய், நிஜ பொண்ணாயிருந்தால் அவ சிரிப்புல மர்மம் இருக்குன்னு சொல்லலாம். இது வெறும் படம் தானே மாமா?!

அவசரப்படாதடி என்  கேணப்பய பொண்டாட்டி. பிரான்ஸ் நாட்டுல  ஃபேமஸ் டிராய்ங்க் ஆர்டிஸ்ட்  லியனார்டோ டாவின்சி 1500 களில் வரைஞ்ச  அற்புத மான ஓவியம்தான் இந்த “மோனலிசா” ஓவியம். இந்த ஓவியம் அஞ்சு நூற்றாண்டா  உலகம் முழுக்க  பேசப்படுவதாக அமைஞ்சுது.

அதுக்கு  காரணம் மோனலிசா சிரிப்பின்  மர்மம். மோனலிசாவின் முகத்தை நேரடியாக பார்க்கும் போது சிரிப்பது தெரியாது. ஆனா ஓவியத்திலிருந்து கொஞ்சம்  பார்வையை விலக்கினா அந்த சிரிப்பு தெரியும். இந்த மர்மத்திற்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்கரெட் லிவிங்ஸ்டன் விடை கண்டுபிடிச்சிருக்கார். அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் அவர் தன்னோட ஆய்வை குடுத்திருக்கார்.

மோனலிசாவின் படத்தை உத்து  பார்க்கும்போது அந்த சிரிப்பு மறைவதற்கு நம்  கண்களின் பார்வைதான் காரணம்னு அவர் சொல்றார்.

அது எப்படிங்க மாமா?! நாம எல்லாத்தையும் ஒரே மாதிரிதானே பார்க்குறோம்?!

அதான் இல்லியாம் புள்ள, நம்ம  கண்களுக்கு ரெண்டு  விதமான பார்வைகள் இருக்காம். அவை நேர்பார்வை மற்றும் ஓரப்பார்வை. நாம் பெரும்பாலும் நேர்பார்வைதான் யூஸ் பண்றோம். ஓரப் பார்வை குறைவுதான்,.

மோனலிசாவின் சிரிப்பு  கிட்டத்தட்ட முற்றிலும் கீழ் பகுதியில் நிகழ்கிறது. எனவே ஓரப்பார்வையில்தான் அது புலப்படும் என்கிறர் மார்கரெட்.

உதாரணத்துக்கு அச்சடிக்கப்பட்ட  ஒரு பக்கத்தில் உள்ள எழுத்தை மட்டும் உத்து  பார்த்தா, அந்த குறிப்பிட்ட எழுத்துக்கு பக்கத்துல இருக்குற மத்த  எழுத்துங்க கூட என்னன்னு தெரியாது.

இதை மையமா வெச்சுதான்  டாவின்சி தன்னோட  படத்துல யூச் பண்ணியிருக்கார்.

மோனலிசாவின் கண்ணையோ இல்லாட்டி  அவ முகத்துல  வேறு இடத்தையோ பார்க்கும்போது அந்த சிரிப்பு தெரியாது புள்ள. இந்த மெத்தடை டாவின்சி மட்டுமல்ல, சுக்குளோஸ், ராபர்ட் சில்வர்ஸ் உள்ளிட்ட பல ஓவியர்கள் மனித தன்மைகளை அந்த காலத்துலயே கண்டுகிட்டாங்க. ஆனா விஞ்ஞானிகள் அதை  இப்பதான் கண்டுபிடிக்கிறாங்கன்னு சொன்னாராம் மார்கரெட்.

அப்படிங்களா மாமா! ஏனுங்க மாமா, ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே!

அடியே, இது கடை புள்ள, வீட்டுக்கு போய் குடுக்குறேன்.

சீ போங்க மாமா, நான் அத கேட்கலை, உனக்கு மட்டும் இதெல்லாம் எப்படி தெரியும்ன்னு கேட்கலாம்ன்னு வந்தேன்,

உன்னை போல 24மணி நேரமும் சீரியல் பார்க்காம நியூஸ், விவாதங்கள் பார்க்குறேன். நியூஸ் பேப்பர் படிக்குறேன். லைப்ரரி போய் புக்ஸ் படிக்குறேன். அதுமட்டுமில்லாம நம்ம வூட்டுல கம்ப்யூட்டர் பொட்டி இருக்கே, அதுல போய் எல்லா பிளாக்கும் படிக்குறென். அதனால, எனக்கு உலக விசய்ம்லாம் அத்துப்படி புள்ள.

ஓ இதுதான் சங்கதியா? அதனாலதான் உங்களை ஊர் நாட்டாமையா போட்டிருக்காங்க மாமோய். சரி சீலை எடுத்துக்கிட்டு மழைக்கு முன்னாடி வெள்ளன வூட்டுக்கு போலாம் மாமோய்.