Tuesday, March 25, 2014

கஞ்சி வத்தல் - கிச்சன் கார்னர்

முன்னலாம் வெயில் காலம் தொடங்கிட்டாலே எல்லார் வீட்டுலயும் கூழ் வத்தல், முறுக்கு வத்தல்,  ஜவ்வரிசி வத்தல்,  கத்திரிக்காய் வத்தல்,  மாங்காய், எலுமிச்சை ஊறுகாய் வத்தல், வடகம்லாம் போட்டு பேக் பண்ணி எடுத்து வச்சுக்கிட்டு தேவைப்படும்போது வறுத்து சாப்பிடுவாங்க. இப்பலாம் அதெல்லாம் ரெடிமேடா கடையில கிடைக்குறதால அதெல்லாம் இப்ப செய்யுறதில்ல.

அம்மா வத்தல் விடப்போகும்போதுலாம் நானும் சேர்ந்து வத்தல் விடுவேன். வத்தல் விடக் காய்ச்சி வச்சிருக்கும் கஞ்சியை அம்மாக்கு தெரியாம குடிப்பேன். மிளகாய், இஞ்சி, சீரகம்லாம் போட்டு செம வாசனையா இருக்கும் அந்த வத்தல் கஞ்சி. காய்ஞ்ச வத்தலை துணில இருந்து எடுக்குறது இன்னும் சாதனை. லேசா தண்ணித் தெளிச்சி எடுக்கனும். கொஞ்சமா தெளிச்சா வத்தல் எடுக்க வராது. அதிகமா தண்ணி ஊத்தினா வத்தல் ஊசல் வாடை வந்துடும். இப்படிலாம் வத்தல் விட்ட அனுபவம் எனக்கு. இப்பலாம் கடைக்கு போனோமா அப்பள், வத்தல் பாக்கெட் வாங்கிப் போட்டோமா வந்து வறுத்துச் சாப்பிட்டோமான்னு இருக்குதுங்க என் புள்ளைங்க. அதனால, இந்த வருசம் வத்தல் விட்டே ஆகனும்ன்னு முடிவு பண்ணி பசங்கலாம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும் சுப முகூர்த்த நாளில் கஞ்சி காய்ச்சி வத்தல் விட்டுட்டேன். அதை பதிவாவும் ஆக்கியாச்சு!

தேவையான அளவுகள்:
பச்சரிசி - ஒரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

பச்சரிசியை ரெண்டு மணி நேரம் ஊற வச்சு கழுவி கிரைண்டர்ல போட்டு நைசா அரைச்சுக்கோங்க. அரைச்ச அரிசி மாவை தண்ணி விட்டு கரைச்சு வச்சுக்கோங்க.  அடுப்புல அடிக்கணமான பாத்திரத்தை வச்சு தண்ணி வச்சு கொதிக்க வைங்க. பச்சை மிளகாய், இஞ்சியை கழுவி நைசா அரைச்சுக்கோங்க.

தண்ணிக் கொதிச்சதும் கரைச்சு வச்சிருக்கும் அரிசி மாவை ஊத்தி கொதிக்க விடுங்க. அடிக்கடி கிளறி விடுங்க இல்லாட்டி அடிப்பிடிச்சுக்கும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்க. 

கஞ்சி கொதிக்கும்போதே அரைச்சிருக்கும் பச்சைமிளகாய், இஞ்சி விழுதை சேர்த்து கொதிக்க விடுங்க.
அடுத்து சீரகம் சேர்த்து லேசா கொதிச்சதும் இறக்கிடுங்க. கஞ்சி ரொம்பவும் திக்காவும், இல்லாம தண்ணியாவும் இல்லாம இருக்கட்டும்.

தேவையில்லாத பாலியஸ்டர் புடவையை நல்லா துவைச்சி அலசி, ஈரத்தோட மாடில விரிச்சு சின்ன சின்ன அப்பளம் சைசுக்கு ஊத்திக்கோங்க. ஒரு நாள் முழுக்க வெயிலில் காய்ஞ்சதும், சாயந்தரம் லேசா தண்ணித் தெளிச்சு சேலைல இருந்து வத்தலை எடுத்து ஃபேன் காத்துல பரவலா காய விடுங்க. இல்லாட்டி ஊசல் வாசனை வரும்.

திரும்பவும் ரெண்டு இல்ல மூணு நாள் வத்தல்களை வெயிலில் காய வச்சு டப்பாவுல எடுத்து வச்சுக்கிட்டா தேவைப்படும்போது வறுத்து சாப்பிட்டுக்கலாம். கடையில வாங்குற அப்பளம், வத்தல்லாம் எந்த தண்ணில, எப்படி செய்யுறாங்களோ! ஆனா, இது நம் கைகளால் சுத்தம் பத்தமா செஞ்சு சாப்பிடுறதால உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது.

குழந்தைங்க இருக்கும் வீடுகள்ன்னா கஞ்சில கலர் கலரான கேசரிப் பவுடரை கலந்து சிவப்பு, பச்சை, மஞ்சள்ன்னு வறுத்துக் கொடுத்தால் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.

Monday, March 24, 2014

இப்படியும் சில ஆசிரியர்கள்!! - ஐஞ்சுவை அவியல்

ஐயோ என்ன மாமா இப்படி அடிப்பட்டு வந்திருக்கீங்க!? என்னாச்சு!?

வண்டில போகும்போது கீழ விழுந்துட்டேன் புள்ள!

பார்த்து கவனமா வண்டி ஓட்டிக்கிட்டு வரக்கூடாதா மாமா!? என்னாச்சு!? எப்படி கீழ விழுந்துட்டீங்க!? பாதையில எதாவது குறுக்க வந்துட்டதா!?

ம்ஹூம்.  சாவு ஊர்வலத்து போது ரோட்டுல போட்ட மாலை மேல வண்டி ஏறி பேலன்ஸ் பண்ண முடியாம கீழ விழுந்துட்டேன் புள்ள.

இதை யார்கிட்டயாவது சொன்னா சிரிப்பாங்க மாமா!  பூ மாலை மேல வண்டி ஏறி ஆக்சிடெண்ட் ஆச்சா!? யார்க்கிட்ட ரீல் விடுறீங்க!?

போடி போக்கத்தவளே!  மாலைலாம் சின்னதா இருந்தா பரவாயில்ல. ஒண்ணொன்னும் யானை தும்பிக்கை பெருசா இருக்கு. அவனவன் தன் பந்தாவைக் காட்ட ஆளுயர மாலைகளை செத்தவங்களுக்குப் போட்டு அதை ரோட்டுல வீசி எறிஞ்சுட்டுப் போறாங்க. நல்ல விசயத்துக்கு போறவங்க, ஸ்கூல், ஆஃபீஸ் போறவங்களுக்குலாம் இது எவ்வளவு இடைஞ்சலாவும், அபசகுனமா இருக்குன்னு அவங்களுக்குப் புரியல. அதுமில்லாம,  இறந்தவர் மேல் போடப்பட்ட அந்த மாலைகளால் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்குன்னு சம்பந்தப்பட்டவங்களுக்குப் புரிய மாட்டேங்குது! 

நீங்க சொல்றதுலாம் நியாயம்தான் மாமா!  ராஜியோட சின்ன பொண்ணு இனியா இந்த வருசம் பத்தாவது பரிட்சை எழுதப் போகுது. போன வெள்ளிக்கிழமையோட ஸ்கூல் முடிஞ்சுப் போச்சு. அதுக்காக, சின்னதா ஒரு பார்ட்டி வச்சிருக்காங்க.  பார்ட்டி முடிஞ்சதும் எல்லாப் பிள்ளைகளுக்கும் பேனா ஒண்ணை பரிசா தந்திருக்காங்க ஒரு டீச்சர். பதிலுக்கு பசங்க அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வந்திருக்காங்க. பசங்களைப் பிரிய முடியாம அந்த டீச்சர் அழுத அழுகை பிள்ளைங்களைக் கூட்டிப் போக வந்திருந்த பெற்றோர் மனசை நெகிழ வச்சிடுச்சு. பாஸ் பண்ணுற எல்லாப் பிள்ளைகளுக்கும் தன்னால் முடிஞ்ச பரிசு உண்டுன்னு சொல்லி இருக்காங்க அந்த டீச்சர்.

இப்படியும் சில டீச்சர்கள் இருக்காங்க. இனியா இப்பதான் ஸ்கூல் சேர்த்து விட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ள பத்தாவது வந்துடுச்சா. அவள் ஸ்கூல் சேர்ந்து  தத்தக்க பித்தக்கான்னு தமிழ் படிக்க ஆரம்பிச்ச நேரம். ஏதோ ஒரு கல்யாணப் பத்திரிக்கையை படிச்சு காட்டிட்டு இருந்தா. அதுல, ”லேட்”ன்னு அடைமொழிப் போட்டு ஒரு பேரை போட்டுருந்தாங்க(இறந்தவங்க பேர் முன்னாடி ”லேட்”ன்னு போடுவது எங்க ஊர் வழக்கம்.) அதைப் படிச்ச இனியா ஏன்மா இவங்க எப்பவும் லேட்டாதான் போவாங்கள்!? அதான் லேட்ன்னு போட்டிருக்காங்களா!?ன்னு உன் ஃப்ரெண்ட் போலவே எடக்கு மடக்கா கேட்டுச்சு.
ம்க்கும். சிரிச்சது போதும். நான் ஒரு ஜோக் சொல்றேன். கேட்டு அதுக்கும் சேர்த்து சிரிங்க. 
வாடிக்கையளர்:"சார் பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"900 ரூபாய் கிடைக்கும் சார்"
வாடிக்கையாளர்: "பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"இப்பதானே சார் சொன்னேன்"
வாடிக்கையாளர்;"இது வேற ஒரு பத்தாயிரம் சார்"
சிரிப்பே வரலைப் புள்ள.சிரிக்காட்டி மதியம் சோறு போடமாட்டியே! அதனால சிரிச்சு வைக்குறேன். நான் ஒரு விடுகதை  கேக்குறேன் பதில் சொல்லுப் பார்க்கலாம்!

கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?

பதில் யோசிச்சு வை. நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்.


Saturday, March 22, 2014

என்னவருக்கு வந்த ஊடல்


திங்கள் கிழமை மதியம் வரை என்னோடு நல்லாவே உறவாடிக்கிட்டு இருந்த என்னவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அதுக்கப்புறம் என்கிட்ட பேசுறதையே நிறுத்திக்கிட்டார். எம்புட்டு யோசிச்சும் நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு புரியவே இல்ல. எவ்வளவோ சமாதானப்படுத்தியும், கெஞ்சியும் கேட்டுப் பார்த்துட்டேன். ம்ஹூம் நோ ரெஸ்பான்ஸ். 

ஸ்கூல் விட்டு வந்த அப்புக்கிட்ட சொல்லி, சமாதானப்படுத்தப் பார்த்தேன். அப்படியும் சமாதானமாகி கோவம் குறையல. சரிடா, உடம்புக்கு எதாவது முடியலியோன்னு செக் பண்ணி பாருடான்னு சொன்னேன். அப்பு, உடம்பு  முழுக்க செக் பண்ணி பார்த்து, உடலில் இருக்கும் அழுக்கு, தூசிலாம் துடைச்சி புது ட்ரெஸ் போட்டு விட்டும் என்னுடனா என்னவரின் ஊடல் குறையல.


அவரின் ஊடலால் மனசு நொந்து போயிருந்த சமயத்தில் பெரிய பொண்ணு ஊரிலிருந்து வந்தாள். அவளிடம் சொல்லி சமாதானப்படுத்தப் பார்த்தேன். அவளும் என்னால முடியலைம்மான்னு சொல்லிட்டா. ச்சீ போ. உனக்கே இம்புட்டு கோவம் இருக்குன்னா, தப்பே செய்யாத எனக்கு எம்புட்டு கோவமிருக்கும்ன்னு சொல்லி, நாலு நாளாகத் திரும்பி கூடப் பார்க்காம இருந்துட்ட்டேன்.  

பெரிய பொண்ணுக்கு பிடித்ததை சமைத்துப் போடுவதும், அவளுடன் ஷாப்பிங் போவதிலும், சின்ன பொண்ணை பத்தாவது பரிட்சைக்கு தயார் செய்வதிலும் இருந்ததால் என்னவரின் பிரிவு எனக்கு பெருசா தெரியல. இன்னிக்கு தூயா ஊருக்குக் கிளம்பிட்டா. சின்னவ ஸ்கூல் போயிட்டா. தனிமை வாட்டவே, எதாவது டாக்டரைக் கூட்டி வந்து பார்க்கலாமா?ன்னு யோசிச்சுக்கிட்டே கடைசியாய் ஒரு முறை பேசிப் பார்க்கலாம்ன்னு வெட்கத்தை விட்டு அவரைத் தொட்டவுடன், தன் கோவத்தையெல்லாம் மறந்து, என்னுடன் சகஜமாகி, நாலு நாட்கள் பேசாதக் கதையெல்லாம் பேசித் தீர்க்க ஆரம்பிச்சிருக்கோம்.  பைசா செலவில்லாம, நாலு நாள் ஓய்விலேயே என்னவர் சகஜ நிலைமைக்கு திரும்பிட்டதுதான் எனக்கு ஆச்சர்யம்!!

மனிதருக்கு மட்டுமில்ல இயந்திரத்துக்கும் ஓய்வுத் தேவைன்னு இந்த நாலு நாளில் என்னவரின் ஊடலால் புரிஞ்சுக்கிட்டேன். இனி, அடிக்கடி, உனக்கு  கொஞ்சம் ஓய்வு தருகிறேன்  என் ஆசை கணினியே!

Monday, March 17, 2014

ஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்களைப் பார்க்கப் போகும்போது இப்படி நடந்துக்கலாமா!? - ஐஞ்சுவை அவியல்

ராஜியோட மூத்தார் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குன்னு நீயும் உன் ஃப்ரெண்டும் ராஜியும் போனீங்களே! பாப்பா எப்படி இருக்கு!? ராஜியை அவன் பாட்டின்னு கூப்பிட்டானா!?

ம்க்கும், அவளை வம்புக்கிழுக்காட்டி தூக்கம் வராதே உங்களுக்கு!

ஏய் நான் என்ன வம்பிக்கிழுத்தேன்!? முறைப்படி பார்த்தா ராஜிக்கு பேரந்தானே வேணும்!?

ஆமா, அதுக்காக, ராஜியை பாட்டின்னு சொல்லுவீங்களா!?

ப்ப்ப்ப்ச்ச்ச்ச் அதை விடு பாப்பா எப்படி இருக்கு!?

பாப்பா நல்லாதான் இருக்கு மாமா. 3.500 கிலோ வெயிட்ல, தலை நிறைய முடியோட செம அழகா இருந்துச்சு. அவங்களைப் பார்க்க, நாங்க போன நேரம் சாப்பாட்டு நேரம் கூடவே பார்வையாளர்கள் நேரமும் கூட.  நோயாளிகளை பார்க்க வர்றவங்க பண்ற அலம்பல் இருக்கே! சாமி தாங்க முடியல. ஒவோருத்தரும் கண்டிப்பா ஒரு கட்டைப் பை நிறைய விதம் விதமா சாப்பாடு கொண்டு வந்து பாசத்தை காட்டுறாங்க. கூடவே பிளாஸ்டிக் கவர்ல வாங்குன பழங்கள், இனிப்புகள்ன்னு ஹாஸ்பிட்டலை ஒரு பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆக்கிடுறாங்க.

அட, அதுவாவது ஹாஸ்பிட்டல்ல இருக்குறாவங்களுக்கு வீட்டு ச் சாப்பாடு கொண்டு வந்து தர்றங்கன்னு நினைச்சு ஆறுதல் அடைஞ்சுக்கலாம். நோஆளிகளுக்குப் பரிமாறிட்டு, அவங்க கட்டில் பக்கத்துலயே உக்காந்துகிட்டு இவங்களும் ரவுண்ட் கட்டி அடிப்பாங்க பாருங்க. அப்படியே செம எரிச்சல் வரும். கூடவே நோயாளிகள்கிட்ட இப்படிதான் எங்க ஒண்ணு விட்ட மாமாவுக்கு இந்த நோய்க்கு ஆப்ரேசன் செய்யப் போயி அப்படி ஆகிடுச்சு, இப்படி ஆகிடுச்சுன்னு நோயாளிக்கு பீதியை கிளப்புவாங்க. ஹாஸ்பிட்டல் போகும்போது வீட்டில் இருக்கும் நண்டு சிண்டுகளைலாம் தூக்கிட்டு போய் காட்டுவாங்க. குழந்தையோட அப்பா, அம்மா நோயாளியாய் இருந்தா பரவாயில்ல கூட்டிப் போகலாம். அதை விட்டு சும்மா யாராயைவாது பார்க்கப் போனால்கூட குழந்தைகளைக் கூட்டிப் போய் குழந்தைகளுக்கு நோயை வாங்கி வர வேண்டியது. இதெல்லாம் நோயாளிகளைப் பார்க்கப் போறவங்க யோசிச்சா நல்லது.

ம்ம்ம் நீ சொல்றது நிஜம்தான் புள்ள. எனக்கு தெரிஞ்சு ஒரு பொண்ணு பிரசவத்துக்கு வேன் வச்சு போய் வந்தாங்க. பிரசவத்துக்கு ஹாஸ்பிட்டல் பில் விட, கூட போய் வந்தவங்களுக்கு டீ,காஃபி வாங்கி கொடுத்த செலவுதான் அதிகம் வந்திருக்கும்!  
மாமா, ரொம்ப நாள் கழிச்சு தூயா வீட்டுக்கு வந்திருக்கவே கோவிலுக்குப் போய் வர்லாமின்னு ராஜியும், தூயாவும் போய் இருக்காங்க. கோவிலுக்குப் போகும்போது தெருவுல ஒரு அம்மா பூ வித்திட்டு இருந்திருக்காங்க.  பூ வாங்கி தலையில் வச்சப்புறம்தான்  பர்ஸ்ல பார்த்தா100 ரூபாய் நோட்டாதான் இருந்திருக்கு. சில்லறை இல்ல. பூ விற்கும் அம்மாவை நம்பி எப்படி 100 ரூபாய் தர்றதுன்னு ராஜி யோசிச்சிக்கிடு இருக்கும்போதே. அந்தம்மா, தான் இருக்கும் இடத்தை சொல்லி, கோவிலுக்குப் போய் வந்துக் கொடுங்கன்னு சொல்லி பெருந்தன்மையால ராஜியை தலைக்குனிய வச்சிருக்காங்க.

வாழ்க்கைத்தரத்துலயும், படிப்புலயும் பின் தங்கியிருந்தாலும் மனசால உயர்ந்தவங்கன்னு சொல்லாம சொல்லி இருக்காங்க அந்தம்மா!.
 
நிஜம்தானுங்க மாமா! நேத்து ராஜி ஏதோ நினைப்புல, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா!! படத்துல வர்ற “எதிர் வீட்டுல நான் இருந்தேனே”ன்ற பாட்டை ஹம் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா. உன் டாடி மூஞ்சி புடிக்கல, உன் மம்மி பேச்சுப் பிடிக்கலைனு ராஜி ஹம் செய்யவும், தூயா வரவும் சரியா இருந்துச்சு. உடனே தூயா, நீ பாடுறது எனக்கு சகிக்கலன்னு எதிர்பாட்டு பாடி இருக்கா. இதைக் கேட்டு, இனியாவும், அப்புவும் சேர்ந்து ராஜியைக் கலாய்ச்சிருக்காங்க.
ஹா! ஹா! தேவையா உன் ஃப்ரெண்டுக்கு!? நான் ஒரு கணக்குப் புதிர் கேக்குறேன். பதில் சொல்லு பார்க்கலாம்!

ருத்தர் தன்னோட பசங்களுக்கு பொம்மை வாங்கப் போனாரு. அவர் கையில நூறு ரூபாய் வச்சிருந்தாரு.ஒரு யானை பொம்மையோட விலை அஞ்சு ரூபாய். குதிரை பொம்மை விலை ஒரு ரூபாய். ஒரு நாய்க்குட்டியோட விலை இருபத்தஞ்சு பைசா.

அப்படின்னா, அவரு மொத்தமா நூறு பொம்மைங்களை நூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தா ஒவ்வொன்னுலேயும் எத்தனை பொம்மைகள் வாங்கியிருப்பார்!?


அது வந்து...., 

சீக்கிரம் சொல்லு புள்ள. இருங்க மாமா யோசிக்குறேனில்ல!
சரி, நான் ஒரு ஜோக் சொல்றென். கேட்டு சிரிச்சுட்டு, நல்லா நிதானமா யோசிச்சு பதில் சொல்லு. 

 மகன் : பலூன் வாங்கித் தந்தால்தான் நான் ஹோம் வொர்க் செய்வேன் 
அப்பா: கடமையை செய், பலூனை எதிர்பார்க்காதே!

ஜோக் எப்படி புள்ள!?

கடி தாங்க முடியல. இருங்க நான் போய் காஃபி போட்டு கொண்டாறேன் உங்களுக்கு.

புதிருக்கு விடைச் சொல்லாம எஸ்கேப் ஆகுறியா!?

நான் ஏன் எஸ்கேப் ஆகுறேன். எனக்கு பதிலா, விடையைச் சொல்ல நிறையப் பேர் வருவாங்கப் பாருங்க மாமா.
 

Friday, March 14, 2014

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ணியம் தேடி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் நாம இரண்டாம் நிலையில் இருக்கும் முக்கியமான ஐந்து இடங்களை போன வாரம் திவில் பார்த்தோம். பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துட்டா ,பதிவைத் தொடர வசதியாய் இருக்கும்.  கோவில் பற்றிய விரிவான வரலாற்று சம்பவங்களையும், பெருமைகளையும் பார்க்கலாம். இந்த வாரம் புண்ணியம் தேடி பதிவில் கிழக்கு வாசல் வழியே ராஜகோபுரம் தாண்டி அம்மன் வாசல்னு சொல்லபடுகிற அஷ்ட சக்தி மண்டபத்திற்கு செல்லலாம். வாங்க!

இதற்கு அஷ்ட சக்தி வாசல்ன்னு ஏன் சொல்றாங்கன்னா, இந்த மண்டபத்தில் அன்னை மீனாட்சியை எட்டு விதமான சக்திவடிவில் தரிசிக்கலாம். திருமலை நாயக்கரின் பட்டத்து ராணி ருத்ரபதி அம்மையாரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கவும், உணவு வழங்கவும் இந்த மண்டபத்தை பயன்படுத்தினார்கள். இந்த மண்டபத்தின் மேற்பக்கம் அன்னை மீனாட்சியின் திருவிளையாடல்கள் பத்தின சிற்பங்கள் இருக்கு.    இதில் மீனாட்சி அம்மனின் பிறப்புவாழ்க்கை,   மதுரையின் இளவரசியானது போன்றவை சிற்பங்களாக வடிவமைக்க பட்டுள்ளன.

அடுத்து வருவது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இது திருமலை நாயக்கரின் அமைச்சர்களில் முக்கியமான மீனாட்சி நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டதுனால இது மீனாட்சி நாயக்கர் மண்டபம்ன்னு சொல்றாங்க.  இந்த மண்டபம் ஆறுவரிசை தூண்களால் தாங்குகிற மாதிரி கட்டப்பட்டு இருக்கு. இதில் 110-க்கும் மேற்பட்ட யாளி-சிங்க உடலும் யானை முகமும் கொண்ட யாளி சிற்பங்கள் இருக்கு. இதுவா மீனாட்சி நாயக்கரின் சிலைன்னு கேட்காதீங்க ஒரு தகவலுக்கு இணைக்கப்பட்ட படம் அவ்வளவுதான். 

அடுத்து ஆடிவீதி, அதனை அடுத்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு மேற்கில் ஏழு அடுக்குகள் கொண்ட சித்ரா கோபுரம் இருக்கு.  உள்ளே இருக்கிற கோபுரங்களில் உயரமானதும், கலைநயம் கொண்டதும் இதுதான். இந்த கோபுரத்தில் கிட்டத்தட்ட 730 அழகிய சின்னஞ்சிறிய சிலைகள் இருக்கு. சித்ரா கோபுரம் வழியே சென்றால் வருவது முதலி மண்டபம். இதில் . சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா காடுகளின் முனிவர் ஒருவரது சிலை போன்றவை இருக்கு.

இனி உள்பக்கம் இருக்கும் இரண்டாம் நிலை சுற்றில் நாம பார்க்கபோறது
1. பொற்றாமரைக்குளம்
2. ராணி மங்கம்மாள் மண்டபம்
3. ஊஞ்சல் மண்டபம்
4. கிளிக்கூண்டு மண்டபம்

தெற்கு  வாசல் வழியா கோவிலுக்குள் வந்தோம்னா நேரே  இந்த 0x60 மீட்டர் அளவுள்ள பொற்றாமரைக் குளத்திற்கு  வந்திடலாம்.  இந்தக் குளத்தைச் சுற்றி நாலுபக்கமும் தூண்கள் கொண்ட பாதை இருக்கு. அதிலிருந்து இந்தக் குளத்தை முழுமையாகப் பார்க்கலாம். இந்த நடைப்பாதையை சுற்றி நிறைய படங்கள் வரையப்பட்டு இருக்கு.

குளத்துக் கரையில் உள்பக்கம் கிழக்கு நோக்கிய வகையில் ஒரு சிவலிங்கம் இருக்கு. அதை அழகாக அலங்கரிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டு இருந்தது. ஆனா அதனை பற்றிய தெளிவான வரலாறு கிடைக்கல. கோயிலுக்கு வர்றவங்க மாலை வேளையில இங்கே அமர்ந்து தண்ணீரில் தெரியும் நான்கு கோபுரங்களின் பிம்பங்களையும் பார்க்கலாம். இந்த குளத்தின் கீழ் பக்கமும் சிமன்ட் தளம் அமைச்சு இருகிறதனால குளத்துல மீன்கள் இல்லைன்னு நினைக்கிறேன்.

மேலும், இங்கே எந்த தாமரை மலரும் இல்லை. அதற்க்கு ஒரு கதை  சொல்லுவாங்க. இந்திரன் பூலோகம் வந்த போது இந்தக் குளத்தில் இருந்துதான் தாமரை மலரை பூஜைக்காக பறித்து வந்ததாக ஐதீகம். முன்னொருக் காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் செய்ததாம். அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் சும்மா இருந்த அந்த கொக்கை சீண்டி விளையாட்டினவாம். ஆனால் கொக்கு அதை கண்ண்டுக்காம கருமமே கண்ணாயினர் போல முக்தி அடையும் வழியை மட்டும் மனதில் கொண்டு தவம் செய்ததாம். பிறகு அது முக்தி அடைஞ்சவுடனே தனக்கு மாதிரி வேற யாருக்கும் தொந்தரவு இருக்க கூடாதுன்னு  "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " ன்னு இறைவனிடம் வரம் வாங்கிச்சுன்னும், அதனாலதான் இந்த குளத்தில வேறு எந்த உயரினமும் இல்லன்னும் ஒரு கதை உண்டு.

அடுத்து பார்க்கப்போறது ராணி மங்கம்மாள் மண்டபம். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், 15 ஆண்டுகாலம் மதுரையை சிறப்பாகவும், வீரமாகவும் ஆட்சி செய்தார் அவர் பின்னாளில் சதிகாரர்களால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார் எனபது வரலாறு. இந்தக் குளத்தில் இவர் கட்டிய ஒரு மாடம் இருக்கு. குறிப்பிட்ட சில விழாக்களின் போது மட்டும்  இறைவனும் இறைவியையும் இந்த மண்டபத்தில் வைத்திருப்பார்கள்.  மேல்கூரையில் மங்கம்மாள் அரசி, அவரது பேரன் சொக்கநாதர், தளபதி ராமய்யன் தளவாயின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் ராணி, அவரது அமைச்சர் ராமய்யன், அவரது பேரன் விஜயரங்கச் சொக்கநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. ராணி மங்கம்மாள் காலம் முதற்கொண்ட பல ஓவியங்கள் இம்மண்டபத்தில் உள்ளன.

ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எதிரே ஒரு மண்டபம் இருக்கு. அதன் விதானத்தில் ஒரு ஊஞ்சலும் இருக்கு. இதுதான் ஊஞ்சல் மண்டபம். இந்த இடத்தில்தான் மீனாட்சி-சுந்தரேசுவரர் விக்கிரகங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குக் கொண்டுவரப்பட்டு சம்பிரதாய ஊஞ்சலாட்டு நடத்தப்படுகிறது. தெய்வத்திருப்பாடல்கள் இசைக்க, மீனாட்சி அம்மாவும், சுந்தரேசுவரரும் ஊஞ்சலாடுவது பார்க்க நல்லா இருக்கும். இந்த சிலைகள் கூட 16ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தின் அருகில் உள்ள மேற்குக் கரையின் கூரையில் உள்ள தற்கால ஓவியங்களும், பக்கவாட்டில் உள்ள சுவற்றில் சிவனின் திருவிளையாடல்களை நினைவுப்படுத்தும் சிலைகளும் இருக்கு.

பொற்றாமரைக் குளத்திற்கு வடமேற்கில்இருக்கிறது. கிளிக்கூண்டு மண்டபம். இந்த மண்டபத்தில் 28 ஒரே கல்லினால் ஆன தூண்களும், அதில் இதிகாசங்களை நினைவுப்படுத்தும் பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன் இவங்களது சிலை உருவங்களும், அவர்களைத் தொடர்ந்து வரிசையாக  யாளி சிலைகளும் இருக்கு. இந்த சிலைகள் விஜயநகர மன்னர்கள் வடித்ததாகச் சொல்றாங்க.  இதுல என்ன விஷேஷம்னா கோவிலின் ஒவ்வொரு கூடத்திலும் குறைஞ்சது நான்கைந்து தூண்களாவது விஜயநகரக் கலைப்பாணியைச் நமக்கு உணர்த்துகிறது. இந்த மண்டபத்தின் தெற்கு மூலையில் விநாயகர் சன்னதி இருக்கு.

அடுத்து இரண்டாம் நிலை பிரகாரத்தில் முக்கியமாக நாமப் பார்க்கப் போறது அன்னை மீனாட்சி சன்னதி.  இந்த சன்னதி வாசலில் உள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கிவிட்டு சன்னதிக்கு செல்லும் போது அங்கே இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என ஒரு வாசகம் இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் அது தவறாக தோணும். ஆனா, உண்மையில் இந்த கோவிலின் அமைப்பு சக்கரத்தின் சக்தியிலயும், நம்பிக்கையின் அடிப்படையிலும், அதற்கு மேலே பவித்ரம் மிகவும் முக்கியம்.  சும்மா வேடிக்கை பார்க்க செல்பவர்களால் அங்கே நன்மை செய்யும் எண்ண அலைகளுக்கு தீமை உருவாகக்கூடும் என்பதற்காக வைக்கபட்டுள்ளதே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்ல.


இந்துக்களாக இருந்தாலும் யார் பயபக்தியும், பவித்ரமும் இல்லாமல் செல்கிறார்களோ அவர்களும் இந்துக்கள் அல்ல என விளக்கம் சொல்வார் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் அவர்கள். இங்கே உள்பிரகாரத்தில் தெற்குப் பக்கம் திருமலை நாயக்கரின் பெரிய சிலை வடிவம் இருக்கு இங்கே பெரியபுராண சிற்பங்கள் அறுபத்துமூவரின் காட்சிகள் எல்லாம் தரிசிக்கலாம்.

அடுத்து அம்மனைத் தரிசிக்கச் செல்லும் வரிசையில் நிற்கும் போது ஒரு பெண்மணி மீனாட்சியின் ஸ்தல புராணத்தை சொல்லிகொண்டு வந்தார் அவங்க சொன்னது மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தைப் பிறக்கவில்லை. அதனால மன்னன் வாரிசு வேண்டி பல யாகங்கள் செய்தான். அப்ப அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி வந்ததாம் . ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக இருந்ததாம். இதனால்  மலையத்வஜ பாண்டிய மன்னன் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது வானத்தில் ஒரு அசரீரி கேட்டது. மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று.

சிறிய வயதிலையே மிகவும் வீரம் மிக்க இளவரசியாக வளரத் தொடங்கினாள் மீனாட்சி. சின்னவயசிலேயே அரசுப் பொறுப்பை ஏற்று மதுரையை ஆட்சி புரிந்தாள். எல்லாத் தேவர்களையும் போரில் தோல்வியுற செய்தாள் மீனாட்சி.  கடைசியாக கைலாயம் சென்று சிவனைப் போருக்கு அழைத்தாள். அங்க இறைவனை கண்டவுடன் தன் மனதை அவரிடம் பரிகொடுத்தாள். அன்னை மீனாட்சி இறைவனை கண்டதும்  தன் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போதுதான் தான் யாருமல்ல, சிவனுடன் ஐக்கியமான பார்வதி தேவி என்பதை உணர்ந்தாள். அதன் பிறகு சிவன் மதுரையின் அரசனாக பூலோகத்திற்கு வருகிறார். மதுரையை சில காலம் ஆண்ட பின், மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் தெய்வங்களாக ஐக்கியமாகி மதுரையை ஆண்டு வருவதாக அந்த அம்மா சொன்னாங்க. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்படடு இப்பொழுது சென்றாலும் பார்க்கலாம்.
  
ஒருவழியாக மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால், திருமூர்த்தி நாயனார் வரலாறு சொல்லப்பட்டு இருக்கு. மதுரையில் உள்ள ஒரு வணிகர் குலத்தில் அவதரித்த திருமூர்த்தி நாயனார். அவர் இறைவனுக்கு தினமும் சந்தனக்காப்பு செய்து வணங்குவார்.அந்த சமயத்தில் மதுரையை கர்நாடக மன்னன் கைப்பற்றி ஆண்டுவந்தான். அவன் சமணர் பக்கம் சார்ந்து சிவனடியார்களுக்கு எல்லாம் தொல்லை கொடுத்தான்.  இவருக்கும் தீமை செய்தான்.

ஒரு சமயத்தில், இறைவனுக்கு சந்தன காப்பு செய்ய அவருக்கு சந்தனக் கட்டை கிடைக்காமல் செய்தான். ஆதிருமூர்த்தி நாயனாரும் மிகவும் மனம் வருந்தி தன் கையையே கல்லில் வைத்து தேய்த்தார். ரத்தமும் சதையுமாக நாற்புறமும் தெறிக்க அவர் வேதனயுடன் இறைவனுக்காக தன கையையே அரித்தபோது அவருடைய பக்தியை மெச்சி இறைவன் அவர்முன்னே தோன்றி அப்பனே இந்த பாண்டிய நாட்டின் அரசனாக ஆட்சி செய்து பின் என்னை வந்து சேர்வாயாக என கூறி மறைந்திருக்கிறா.


 அன்றிரவே மதுரையை ஆண்டு வந்த மன்னன் இறந்தான். வாரிசு இல்லாத காரணத்தால், பட்டத்து யானையின் கண்களை கட்டிக்கொண்டு அது யாருக்கு மாலை இடுகிறதோ அவரை மன்னனாக முடிவு செய்தபோது பட்டத்து யானை நேராக திருமூர்த்தி நாயனார் கோவிலில் இருந்தபோது அவருக்கு மாலை சார்த்தி தன் முதுகில் சுமந்து அரசவையை அடைந்தது. பின்னர், அவர் அரசனாகி இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்தார். திருமூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த கல் இந்தக்கல்தான் என சொல்கின்றனர். 

மீனாட்சியை தரிசனம் செய்யும் முன் பொற்றாமரை குளத்தின் தெற்கு கரையில் வீற்று இருக்கும் இந்த தீருநீறு விநாயகரை பத்தி முழுமையாக தெரியவில்லை. அருகம்புல் சார்த்தி முழுவதும் திருநீரினால் அபிஷேகம் செய்யபட்டு இருக்கிறார் இந்த குளக்கரை விநாயகர்.  வர்றவங்க எல்லாம் அந்த திருநீரை எடுத்து செல்கின்றனர். இதுபற்றிய விவரங்களும் தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லலாம். மீனாட்சி அம்மையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது சண்டிகேஸ்வரர் இருக்கிறார். அவரையும் தரிசனம் செய்யலாம். வாங்க! 

இனி நாம மீனாட்சி சன்னதி வழியாக இறைவன் சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் செல்லலாம். இந்த சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் முன் நாமப் பர்ர்க்கப் போற இடங்கள் நிறைய இருந்தாலும் இதில் 5 இடங்கள் முக்கியமா நாம தரிசனம் செய்யணும். அது...,
1.முக்குருணிப் பிள்ளையார்
2.சுந்தரேசுவரர் கோயில் பிரகாரங்கள்
3.எல்லாம் வல்ல சித்தர்
4.சாட்சிக்கிணறும் சாட்சி லிங்கமும்
5.வெள்ளியம்பலம்
இந்த வெண்தாமரை மலரை இறைவனின் பொற்பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு மீண்டும் அடுத்தவாரம் மேலே சொன்ன ஐந்து பிரகாரங்களையும், சுந்தரேஸ்வரர் சன்னதியையும் புண்ணியம் தேடிப் போறப் பதிவில் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்!