Thursday, November 22, 2018

இருமுடி தாங்கி ஒருமனதாகி.... ஐயப்பனின் வரலாறு

இன்றைய ஆன்மீகம் கடவுளின்பால்  தேவையற்ற பயத்தையும், வீண் ஆடம்பரம், வெற்று விழாக்கள் என பாதை மாறி போய்க்கிட்டிருக்கு. கடவுள் வழிபாடு என்பது எந்த நிபந்தனையும், எந்த வேண்டுதலுமின்றி அவனே கதியென அவன் தாள் பற்றுதலேயன்றி வேறில்லை. எனக்கு இதை கொடுத்தா நான் உனக்கு இதை செய்றேன் என கடவுளுக்கும் மனிதனுக்கும் நிபந்தனை இருந்தா அது பக்தியில்லை. வியாபாரம். அந்த வியாபாரத்துக்கு கடவுள் ஒருபோதும் உடன்பட மாட்டார். கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். இதை பல புராண கதைகள் நமக்கு உணர்த்துது. சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாமென்பதைதான் இறைவன் பல அவதாரமெடுத்து திருவிளையாடல் புரிந்து நமக்கு உணர்த்துறார். ஆனா, அதை நாமதான் புரிஞ்சிக்கிடுவதில்லை. 
கார்த்திகை மாசம் வந்துட்டாலே சரணம் கோஷம் பட்டிதொட்டிலாம் ஒலிக்க ஆரம்பிக்கும். துளசி மணி முதர்கொண்டு டிராவல்ஸ் கம்பெனி வரை சபரிமலை சார்ந்த வியாபாரம் கொடிகட்டும். சபரிமலைக்கு போக ஊருக்கு ஒரு விதிமுறை, விரதமுறைகளில் மாற்றமிருக்குறது போதாதுன்னு சபரிமலைக்கு போயே தீருவேன்னு சில பெண்களும் களம் இறங்கி இருக்காங்க. உண்மையான பக்தி கொண்டு ஐயப்பனை தரிசிக்க ஆசைன்னு விரதமிருந்தா பரவாயில்லை. அதைவிட்டு வெத்து கௌரவத்துக்கும், விளம்பரத்துக்கும்ன்னு இருக்குறதை பார்க்கும்போதுதான் மனசு வலிக்குது:-( 

இந்த சில பெண்கள் மட்டுமில்ல. மலைக்கு செல்ல மாலை போட்டிருக்கும் பல ஆண்களுக்கே சபரிமலை பத்தியும், விரத நேர்த்திகள் பத்தியும் தெரியாதது ஆச்சர்யமே! சபரிமலை பத்தியும், ஐயனை பத்தியும் தெரிஞ்சவங்களுக்கு ஒரு நினைவு மீட்டலும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கவும் சில பதிவுகள் இந்த மாசம் போடலாம்ன்னு இருக்கேன்,. கார்த்திகை 1ந்தேதியே இந்த பதிவு வந்திருக்கனும். அப்பாவின் உடல்நிலை இப்ப பதிவு போட வச்சுட்டது. என் அப்பா வருசந்தவறாமல் மலைக்கு செல்பவர். எனக்கு நினைவு தெரிஞ்சு போகாம இருந்ததில்லை, இந்த வருசத்தை தவிர!! போகலியே தவிர மனசு முழுக்க சபரிமலை மீதுதான் இருக்கு. அவருக்காகவும் இந்த பதிவு.
ஐயப்பன் வரலாறு சுருக்கமா.... 

மகிஷனின் மரணத்துக்கு பழி வாங்க வேண்டி, ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை பிறக்காதென்பதை உணர்ந்த மகிஷி ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த குழந்தையால் சாகும் வரம் வாங்கி உலகையே ஆட்டி படைத்து வந்தாள்.  இறைவன் நினைத்தால் சாத்தியப்படாதது ஏது?! 
பாற்கடலை கடையும்போது வந்த அமிர்தத்தை சரிவர பங்கிட்டுக்கொள்ள சண்டை வந்தபோது அவர்களை சமாதானப்படுத்த விஷ்ணுபகவான்  மோகினி அவதாரமெடுத்தார்.மோகினியின் அழகில் மயங்கிய சிவன் மோகினியை நெருங்க, ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்தது. 
வேட்டைக்கு வந்த கேரளத்து பந்தள வம்சத்து மன்னரான ராஜசேகரன் பார்வையில் படுமாறு குழந்தையை சிவனும், விஷ்ணுவும் விட்டு சென்றனர். குழந்தையின் அழுகுரலை கேட்ட மன்னன் குழந்தையை கண்டெடுத்தான். குழந்தையை கையிலெடுத்து அக்கம்பக்கம் விசாரித்தபோது, அருகிலிருந்த முனிவர், குழந்தையின் அருமையினை உணர்ந்து, மன்னனுக்கு  சொல்லி அரண்மனைக்கு குழந்தையை கொண்டு செல்ல அறிவுறுத்தினார். குழந்தையின் கழுத்தில் சிவவிஷ்ணு அணிவித்த மணியினை கண்டு மணிகண்டன் என பெயர் சூட்டினார் முனிவர். 
மன்னரும் குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று பட்டத்து ராணியிடம் தந்தார். குழந்தை இல்லாத ஏக்கத்திலிருந்த ராணி, மணிகண்டனை பெற்றெடுத்த பிள்ளையைவிட அன்பு பாராட்டி வளர்த்தாள். சகல கலைகளிலும் மணிகண்டன் தேறி வந்தான். குருதட்சனையாய் குருவின் கண் தெரியாத மகனுக்கு பார்வை தந்தான். இதற்கிடையில் ராணிக்கு குழந்தை பிறந்தது. உங்களுக்கு மகன் பிறந்தபின்னும், காட்டில் கிடைத்த பிள்ளையை தலைப்பிள்ளைப்போல வளர்ப்பது ஏன்?! அடுத்து மணிகண்டனே மன்னனாய் வர வாய்ப்புண்டு, அவனுக்கு உங்கள் சொந்த பிள்ளை சேவகம் செய்ய வேண்டுமா என மந்திரியும், தோழியரும் ராணி மனசை கலைக்க, ராணி மெல்ல மெல்ல மணிகண்டன்மேல் வன்மம் கொண்டாள்.
மகிஷி வதம் நெருங்கும் வேளையில் மந்திரியின் யோசனைப்படி, தலைவலி என நாடகமாட,  அதுக்கு மருந்தாய் புலிப்பால்தான் வேணும்ன்னு அரண்மனை வைத்தியர் ஒத்து ஊத, தந்தை தடுத்தும் கேளாமல், தாயின் துயர் தீர்க்க தனியாளாய் காட்டுக்கு சென்றான் மணிகண்டன்.   சிவவிஷ்ணு புதல்வனுக்கு நாடகம் எது?! நோய் எதுன்னு தெரியாதா?! தெரிஞ்சும் காட்டுக்கு செல்ல காரணம் மகிஷி வதம்.  மணிகண்டன் பசியாறவும், பூஜைக்குமென அரிசி, கற்கண்டு, பேரிச்சை, முக்கண்  தேங்காயில் நெய், அவல், தேன், விபூதி, சந்தனம், குங்குமம் என தனித்தனியாய் கட்டி மன்னர் கொடுத்தனுப்பினார். 
காடெங்கும் தாய்ப்புலியை தேடினான். அவன் எதிரில் மகிஷி வந்தாள்.  தடுத்து சண்டைக்கு இழுத்தாள். வில்லெடுத்தாள். வில்லாதி வீரனாச்சே மணிகண்டன், எதிர் நாண் தொடுத்து அவளை வீழ்த்தினான். அவள் உடலின்மீது நின்று ஆனந்த நடனம் புரிந்தான். ஐயனின் பாதம் பட்டதும் மகிஷியின் பாவமெல்லாம் நீங்கி ஞானம் பெற்று அழகிய பெண்ணாகினாள். தன்னை மணமுடிக்க வேண்டுமென ஐயனை மகிஷி வேண்ட,  பிறவியில் தான் நித்ய பிரம்மச்சாரி எனவும்,  இப்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணமில்லை எனவும் மறுதலித்தார். 

பெண்ணின் குணங்களில் பிடிவாதமும் ஒன்றாச்சே! மகிஷியும் அதுக்கு விதிவிலக்கில்லையே! அவள் பிடிவாதம் பிடிக்க, அதிலிருந்து தப்ப ஒரு உபாயம் செய்தார் ஐயன். அதாவது, இன்னும் சிலகாலத்தில் தான் சபரிமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்க இருப்பதாகவும், எந்த வருடம் கன்னிச்சாமி வராம இருக்காரோ அந்த வருசம் உன்னை மணக்கிறேன் என வாக்கு தந்தார். எந்த வருசம் கன்னிச்சாமி  வரலைன்னு எனக்கு எப்படி தெரியுமென மகிஷி கேட்டாள். சந்தேகமும் பெண்ணின் முக்கிய குணமாச்சுதே!!

எனக்கு பக்கத்திலேயே மஞ்சமாதான்ற பேரில் தனிச்சன்னிதியில் நீ இரு. என்னை நோக்கி வரும் பக்தர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்தபின்னே, என்னை தரிசனம் செய்வார்கள். கன்னிச்சாமியாய் வரும் பக்தன் தன் கையில் ஒரு அலங்கரிக்கப்பட்ட குச்சியினை கொண்டு வந்து உன் ஆலயத்தில் குத்தி வைப்பான். எந்த வருசம் அப்படி குச்சி வரலியோ அந்த வருசம்  கன்னிச்சாமி வரலைன்னு அர்த்தம். அந்த வருசம் உன்னை நான் மணமுடிப்பேன் என வாக்கு கொடுத்தான்.

அரக்கியே ஆனாலும் மகிஷி ஏமாந்துதான் போனாள். கடவுளே ஆனாலும் வீண் வாக்குறுதி கொடுத்து பெண்ணை ஏமாத்தினான் மணிகண்டன். ஒரு பக்கம் காலக்கெடு கொடுத்து இன்னொரு பக்கம், எப்பயுமே  பிரம்மச்சரியாய் இருக்க விரும்பிய ஐயன், ஒவ்வொரு குருசாமியும் தன்னோடு ஒரு கன்னிச்சாமியையாவது கூட்டி வரனும்ன்னு நியதியை வகுத்தான். ஆணாச்சே! இந்த உள்ளடி வேலைலாம் அத்துபடி.  மஞ்சமாதாவுக்கு மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயருமுண்டு. சபரிமலை பதினெட்டாம் படியிலிருந்து பார்த்தால் வட கிழக்குப்புறமாக மஞ்ச மாதாவிற்கு தனியா ஒரு கோயில் உண்டு. ஆனா, இக்கோயிலின் கதவுகள் எப்போதுமே திறக்கப்படுவது இல்லையாம். எந்த வருடம் கன்னிச்சாமி வராம இருக்காங்களோ, அந்த வருசம் திருமணம் நடக்கும்போது வெளிவருவேன்னு மகிஷி,  மஞ்சமாதான்ற பேரில் அந்த சன்னிதியில் காத்திருப்பதா சொல்வாங்க. தனக்குதான் திருமணம் ஆகலியே, அந்த கஷ்டம் யாரும் படக்கூடாதுன்னு, தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு மாங்கல்ய பலமும், திருமணம்  விரைவில் நிறைவேறவும் அருள்புரிகிறாள். சனிபகவானால் பாதிக்கப்பட்டவங்களும் இவளை வணங்கி குணம் பெறுவர். ரவிக்கை துண்டு வைத்தும், மஞ்சப்பொடி தூவியும், மஞ்சள் பூசிய தேங்காயை உருட்டியும் இவளை வழிபடுகின்றனர். ஐயப்பனின் ஆபரணப்பெட்டி இந்த சன்னிதியில்தான் பாதுகாப்பாய் இருப்பதாய் நம்பிக்கை.  கந்தர்வன் அருகிலிருந்தும் கரம் பிடிக்க முடியாமல் கலங்கி தவிக்கிறாள் இந்த லீலாவதி. மஞ்சமாதாவின் இன்னொரு பேருதான் லீலாவதி. இதுக்கு அவ மகிஷியாவே இருந்திருக்கலாமோ?! பொண்ணு கெட்டவளா இருந்தா அடுத்தவங்களுக்கு கஷ்டம். அதுவே அவ நல்லவளா மாறினா தனக்குதான் கஷ்டம்.
கதை எங்கெங்கோ போகுதுல்ல!! நாம ஐயப்பன் கதைக்கு வரலாம்...  மூவுலகுக்கும் தொல்லை தந்த மகிஷி அழிந்ததால் மகிழ்வுற்ற தேவர்கள் ஐயப்பனுக்கு நன்றி சொல்ல பூலோகம் வந்தனர். தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் புலியாய் மாற, ஐயப்பன் வன்புலி வாகனனாய் அரண்மனை நோக்கி சென்றான்.  இதற்கிடையில் மந்திரியுடன் சேர்ந்து ராணி நாடகமாடியது ராஜாவுக்கு தெரியவந்தது. மணிகண்டனின் வருகைக்காக காத்திருந்தான் ராஜா ராஜசேகரன்.  தாயின் நோய் தீர்க்க  புலிப்பாலுக்காக புலியையே கொண்டு வந்திருக்கிறேன் என தாய், தந்தையை பணிந்து நின்றான். 
பந்தளமன்னன் ராஜசேகரன், ஐயப்பனிடம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டினார். ஐயப்பன் மன்னனிடம், தாயை கோபிக்க வேண்டாமெனவும்,  தன் அவதாரம் நோக்கத்துக்காகவே அன்னை நாடகமாடினாள் எனவும், தனக்கு தெரியாமல் எதுவும் நடந்துவிடவில்லை என சமாதானம் கூறி, சகோதரனுக்கு இளவரசு பட்டம் சூட்டி, கானகத்துக்கு செல்ல இருப்பதாய் ஐயப்பன் தெரிவித்தான். மகனை பிரிய மனமில்லாத பந்தளமன்னன் தன் ராஜ்ய எல்லைக்குள் இருந்து என்றும் தனக்கு காட்சி கொடுக்க வேண்டுமென ஐயப்பனிடம் வேண்டினார். 
அதற்கு ஐயப்பன் தான் எய்தும் அம்பு விழும் இடத்தில் பதினெட்டு படிகள் அமைத்து கோயில் அமைக்க வேண்டும் என்றார். மேலும் தன்னை காணவரும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி தாங்கிதான் கோயிலுக்கு வர வேண்டும் எனக்கூறி மறைந்தார். பந்தளமன்னர் ஐயப்பனின் கட்டளைப்படி அவ்விடத்திலே கோயில் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார். கும்பாபிஷேக தினத்தன்று ஜோதி ரூபமாக மணிகண்டன், சாஸ்தாவின் விக்ரகத்தினுள் ஐக்கியமானார். அப்போது ஐயப்பனின் அசரீரியாக, பந்தள மன்னன் மற்றும் மக்களின் வேண்டுதலின் பேரில் நான் வருடம் ஒருமுறை மகர சங்கராந்தி தினத்தன்று சூரியன் மறையும் நேரத்தில் காந்தமலை மீது ஜோதி ரூபமாக காட்சி கொடுத்து அருள் புரிவேன் எனவும் கூறினார். அதுப்போலவே அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் மகா சங்கராந்தியன்று காந்தமலையில் ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார் ஐயப்பன்.

ஐயப்பனின் வரலாறு நமக்கு பல உண்மைகளை விளக்குது. மரத்தடியில் ஜனனம். பின்பு,  ஆடம்பரமான அரண்மனை வாழ்வு..  அன்னையின் அன்பு, மந்திரிமார்களின் சூழ்ச்சி, சதி, மகிஷியுடனான போராட்டம்,  மீண்டும் காடு, மலையில் தவக்கோலம்... இப்படி போகுது ஐயப்பனின் வாழ்க்கை.  மன்னாதி மன்னனாகும் வாய்ப்பும்,  அழகு பெண் திருமணத்துக்கு வற்புறுத்தியும் எதுவும் அவருக்கு நிலைத்ததா?! இல்லை. . தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கேகூட இந்த வாழ்வு நிலைக்கலைன்னா சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைச்சுடுமா என்ன?! இந்த நிலையற்ற தன்மையை நமக்கு உணர்த்ததான்  எளிமையான ஏற்றத்தாழ்வற்ற உடை அணிந்து, எளிய உணவு உண்டு, குளிர்ந்த நீரில் நீராடி, வெற்று தரையில் உரங்கி,  ஒன்றுபோல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கி வருகிறோம்.

18 படிகளின் தத்துவம். காமம், குரோதம், கோபம், போன்ற எட்டு உணர்ச்சிகள்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள்,  சத்வ, ராஜஸ, தாமஸ ஆகிய மூன்று குணங்கள்,  வித்யை, அவித்யை ஆகிய இரண்டு சக்திகள் தாம் 18 படிகளின் அம்சங்கள். இந்த பதினெட்டு படிகளும் ஒரே கல்லிலானவை. பிற்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக ஐம்பொன்னால் தகடு வேயப்பட்டது. ஒவ்வொரு படிகட்டிலும், பிரம்மா, விஷ்ணு, சிவன், வினாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, அனுமன்... என 18 கடவுள் வீற்றிருந்து நமக்கு பக்கபலமா இருந்து ஐயனை தரிசிக்க உதவி புரிகிறார்கள். 
முக்கண் உள்ள  தேங்காய் சிவனையும்,  பசுநெய்  மகாவிஷ்ணுவையும் உருவகப்படுத்தும். சிவன்விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனான்.  அதனால் நெய்யும் தேங்காயும் சேர்ந்து அவருக்கு நிவேதனப் பொருளாகிறது.

விரதமிருந்து சபரிமலைக்குச் செல்பவர்கள் இருமுடி கட்டி புறப்படுவாங்க. அவற்றுள் ஒரு முடியுள் சுவாமிக்குரிய அபிஷேக  நிவேதனப் பொருட்களான தேன், சந்தனம், விபூதி, குங்குமம் மாதிரியான பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் தன் தேவைக்குரிய  உணவுப் பொருட்கள் அரிசி, அவல், கற்கண்டு, பேரீட்சை மாதிரியான பொருட்கள் இருக்கும். நாம் சபரிமலையை நெருங்க நெருங்க நம் உணவுப்பொருட்கள் குறைந்துகொண்டேபோய் இறைவனின் சந்நதியருகே செல்லும்போது நம் உணவுப்பொருட்கள் அடங்கிய முடி குறைந்து, சுவாமி முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும். இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவதாகும்.   மானிடராய் பிறந்த நாம் இறைவனைத் தேட  ஆரம்பிக்கும்போது, இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும்,  நம் உலகத்தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்குது. பக்தி, லௌகீகம் ஆதிய இரண்டு அம்சங்களுடனேயேதான் நாம் இறைவனை தேடுகிறோம். அந்தத் தேடலில் மெய்ஞானம் கிட்டக்கிட்ட நம் லௌகீகப் பற்று குறைந்து மறைந்து போகும். கடைசியில் இறைபக்தி ஒன்றுதான் மிஞ்சும். அந்த பொழுதில்  இறைவனடியும்  நமக்கு தரிசிக்க கிட்டும்.
ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலத்தை யோகநிலைன்னு சொல்வாங்க. அந்தக் கோலத்தின்  உட்புறம் சின்முத்திரையுடன் அமைந்திருக்கும். இடதுபுறத்தைக் கவனித்தால் ஒரு பெண் தனிமையாக கையை  வைத்திருப்பது போலிருக்கும். அது நாராயணனும் அம்பாளும் வேறில்லாத கருணையான தாய்மை அம்சம், சிவனின் சின்முத்திரையும், நாராயணனின் மோகினித் திருவுருவும் இணைந்ததே ஐயப்பன் தோற்றம் என கூறுவர். இன்னொரு விளக்கமும் சொல்லப்படுது.  அதாவது, அந்தர்யாமியாய் (மறைவாக) சபரிமலை என்னும் பிந்து ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் அம்பாளின் மடியில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் காட்சியே அது.  ஐயப்பன் மாத்திரம் காட்சியாக இருக்கிறார். அம்பாள் அரூபமாய் தன் குழந்தையை மடியில் வைத்திருக்கிறாள். அம்பாள் இல்லாத இறை பக்தி ஏது? ஐயப்பனில் இவ்வாறு அம்பாள் சம்பந்தப்பட்டிருக்கிறாள் எனவும் சொல்றாங்க.

48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள். அத்வைதம் என்பது பிரம்மம் என்பதாகும்.. விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு, பிரம்மம் வேறு என்பதாகும். த்வைதம் என்பது பிரம்மமும் ஜீவனும் ஒரு நிலையில் ஒன்றுபடுகின்றன என்பது.  ஒரு ஐயப்ப பக்தர், மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைத தத்துவமான அஹம் பிரம்மாஸ்மி எனும்படி தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் சொல்வாங்க. அடுத்து விரதம் முடிந்து சபரிமலைக்குச் செல்லும் நேரத்தில் ஜீவன் வேறு. பிரம்மம் வேறு; முயற்சித்தால் ஜீவன் பிரம்மனைக் காணலாம் என்று விசிஷ்டாத்வைத தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாகத் விளங்குகிறார். சந்நிதானத்தில் ஐயப்பனைக் கண்டு அவனருகில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும் ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவை ஒன்றுபடுகின்றன என்ற த்வைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறார்.

ஐயப்பனின் முழங்காலில் கட்டி இருக்கும் துண்டுக்கும் ஒரு கதை உண்டு. சபரிமலையில் ஐயப்பன் அமர்ந்தபின் அவரைக்காண, வளர்ப்பு தந்தையான ராஜசேகரன் அடிக்கடி வருவதுண்டாம். அப்படி வரும்போது, மரியாதை நிமித்தமாக ஐயப்பன் எழுந்து கொள்வாராம். கடவுள் தனக்கு மரியாதை செய்வதை விரும்பாத மன்னர், தன் இடுப்பிலிருந்த துண்டை ஐயப்பனின் கால்களில் கட்டி எழுந்துக்கொள்ளாத வண்ணம் செய்ததாக சொல்வாங்க.
வினாயகர், முருகனை போலவே ஐயப்பனுக்கு அறுபடைவீடுகள் உண்டு. அவை, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துபுழா, எரிமேலி, பந்தளம்,  சபரிமலை.  இதில் குளத்துபுழாவை விடுத்து திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தின் சுடலைமாட சாமின்னும் ஒரு கூற்று உண்டு.  இனி, ஐயப்பனின் அறுபடை வீடுகள் பத்திய பதிவுகள்  வரும்...

ஓம், சாமியே சரணம் ஐயப்பா!

நன்றியுடன்,
ராஜி.

Tuesday, November 20, 2018

கருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்ன்னு நம்ம ஊரில் சொல்வாங்க. நஞ்சையும் முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. மிளகு கொடி வகையை சார்ந்தது. மிளகு, வால்மிளகு, வெள்ளை மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகுன்னு பலவகை உண்டு.  நறுமண பொருட்களில் ஒன்றான மிளகு நாம நினைக்குற மாதிரி விதையோ காயோ அல்ல. அது ஒரு கனி. மிளகு செடியில் காய்க்கும் பழத்தையே உலர வச்சு மிளகாய் விற்பனைக்கு வருது. உணவுக்கு நறுமணத்தோடு சுவையும் கொடுக்குது. கூடவே மருந்தாகவும் பயன்படுது. பைப்பர் நிக்கரம்(Piper nigrum)ன்ற தாவர பெயரிலிருந்தே பெப்பர்ன்ற வார்த்தை உண்டானது.
மிளகின் பூர்வீகம் நம்ம தென்னிந்தியாதான். கேரளாவில் மிளகு அதிகளவில் பயிரிடப்படுது. மிளகுக்கு கோளகம், குறுமிளகுன்னும் வேற பேருண்டு. மலையாளத்தில் குருமிளகு, கன்னடத்தில் மெனசு, தெலுங்கில் மிரியாலு அல்லது மிரியம், கொங்கணியில் மிரியாகொனுன்னு பேரு. மிளகின் காரத்தன்மைக்கு பெப்பரைன்ன்ற வேதிப்பொருள் காரணமாகுது.  மிளகை கருப்பு தங்கம்ன்னும் செல்லமா கூப்பிடுறாங்க. லண்டனில்  டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததால்தான் கிழக்கிந்தியக் கம்பெனியே துவங்கப்பட்டதுன்னா மிளகின் மதிப்பை தெரிஞ்சுக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் மணப்பெண் சீதனமா மிளகை கொண்டு வருதல் செல்வ செழிப்பின் அடையாளமாய் கருதப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளின் மிளகின் அவசியத்தினால்தான் இந்தியாவுக்கு கடல்வழி கண்டுப்பிடிக்கப்பட்டது.  அப்புறம் நடந்த கதைலாம் நமக்குதான் தெரியுமே!
சுமார் நான்கு அடி மட்டுமே வளரும் தன்மையுள்ள இந்த கொடி, தான் படர்ந்திருக்கும்  சூழலை பொருத்து 12 அடிவரை செழித்து வளரும். இது பல்லாண்டு தாவரமாகும்.  மிளகுக்கு முள்முருங்கை மரம்ன்னா கொள்ளை இஷ்டம். இதன் இலைகள் வெற்றிலை மாதிரி இருக்கும்.  பழுக்காத பச்சை மிளகு காயை சுடுதண்ணியில் ஊறவைத்து பின்னர் வெயிலில் உலர்த்தினால் கிடைப்பதே பொதுவா நாம சமையலுக்கு பயன்படுத்தும் கருமிளகு. சுடுதண்ணியினால் மேல் தோல் உரிந்து பூஞ்சைகளின் உதவியோடு கருமை நிறத்துக்கு வந்திடுது.
வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்களே பயன்படுத்தப்படும். இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்பட்டு,  பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்பட்டு,  பின், பழத்தின் சதைப்பகுதியை தேய்த்து நீக்கி, கடைசியாய் மிஞ்சும் விதைகள் உலர்த்தப்படும். இவ்வாறு உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகளே வெண்மிளகாகும். சில இடத்தில் மிளகு பழத்துக்கு பதிலாய்  பச்சை மிளகு காயும் பயன்படுத்தப்படுது.
கருமிளகை போலவே மிளகு காயை பதப்படுத்துவதால் பச்சை மிளகு கிடைக்குது. பச்சை நிறத்தை தக்க வைக்க கந்தக - டை- ஆக்சைடு கலக்கப்படுவது உண்டு. வினிகரில் மிளகு காயை ஊற வைத்தும் பதப்படுத்துவதால் மிளகு பச்சை நிறத்துடன் இருக்கும். இதேமாதிரிதான் மிளகு பழத்தை வினிகரில் ஊற வைத்து பதப்படுத்துவதால் சிவப்பு மிளகு கிடைக்குது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு  போன்ற தாது உப்புகளும், கரோட்டின், தயாமின்,  ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமீன்களும் மிளகில் இருக்கு. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.  காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. மிளகின் காரமும் மணமும் செரிமானத்தை தூண்டுது. 

 இது மழைக்காலம் கூடவே முன்பனிக்காலம்... முன்பனிக்காலம் பொல்லாததுன்னு என் அம்மா சொல்லும். சளி, இருமல்ன்னு படுத்தி எடுக்கும்.  அதுக்கு தகுந்த மாதிரி ஒரு மருந்து குழம்பை  இன்னிக்கு பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்...
பூண்டு
வெங்காயம்
தக்காளி
புளி
உப்பு
எண்ணெய்.
வறுத்து அரைக்க...
மிளகு -  கொஞ்சம் தாரளமா எடுத்துக்கவும்
வெந்தயம்
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
மிளகாய்,
தனியா
சீரகம்
வறுத்து அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை கொஞ்சம் எண்ணெய் ஊத்தி வறுத்து, வதக்கின பூண்டை சேர்த்து ஆற விட்டு மைய அரைச்சுக்கனும்...
பூண்டு உரிச்சு எண்ணெயில் வதக்கி பாதி எடுத்து அரைக்க வேண்டியதில் சேர்த்துக்கனும்..
வெங்காயம் சேர்த்து வதக்கனும்...

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கிக்கனும்...

தக்காளி வெந்ததும் அரைச்ச விழுதை சேர்க்கனும்...

பெருங்காயப்பொடி,   மஞ்சப்பொடி சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து  கொதிக்க விடனும்.


பச்சை வாசனை போனதும் புளிக்கரைசலை சேர்க்கனும்.
உப்பு சேர்த்து நல்லா கொதிச்சு, எண்ணெய் பிரிஞ்சு தனியா வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சு இறக்கிடனும்.
மிளகை தாராளமாய் சேர்த்துக்கலாம். வெந்தயம் கொஞ்சமா சேர்க்கனும். மிளகு காரத்தினால் உடல் சூடாகாம இருக்கவே வெந்தயம் சேர்க்கடுது. சிலர் வீட்டில் உளுத்தம்பருப்பும், கடலை பருப்பும் சேர்ப்பதில்லை. அது குழம்பை கொழகொழன்னு ஆக்கிடும். இன்னும் சிலர் வீட்டில் பருப்புகளுக்கு பதில் பச்சரிசி சேர்ப்பதுண்டு. கத்திரிக்காய் இருந்தால் சேர்க்கலாம். அதும் தனி ருசி கொடுக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சாதத்தில் கொஞ்சம்  நெய் சேர்த்துக்கலாம். மிளகின் காரம், சாப்பிடும்போதே சளியை கரைச்சு  மூக்கில் நீர் வடிய வைக்கும். உடல்வலிக்கும், காய்ச்சல், சளிக்கும் கைக்கண்ட எளிய மருந்து இது.

நன்றியுடன்,
ராஜி

Monday, November 19, 2018

ஆண்களின்றியும் அமையாது உலகு - ஐஞ்சுவை அவியல்

இன்னிக்கு என்ன விசேஷம்?! ஸ்வீட்லாம் கொடுக்குறே?!

இன்னிக்கு உலக ஆண்கள் தினம் மாமா! அதான் ஸ்வீட்.

அடடா! எப்பப்பாரு என்னைய கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்கியே!  என்மேல ஆயிரம் குறை சொல்லி கோவமா இருக்கியே! இன்னுமா ஆண்வர்க்கத்தையே வெறுக்கலை?!

எந்த ஒரு விசயத்திலும் நல்லது, கெட்டது, விதிமீறல்ன்னு உண்டு. கருணையே வடிவானவர் கடவுள்ன்னு சொல்றோம். அவரே சிலசமயம் உயிரை பறிப்பதில்லையா?! அதுமாதிரிதான். கோவம்லாம் உன்மேலதானே தவிர, ஆண்கள்மீது இல்லை. ஆண்வர்க்கத்தின்மீதே கோவப்பட்டா அப்புறம் பூமில வாழமுடியாது. நம்ம தனிப்பட்ட அனுபவத்துக்காக எதுமீதும் கோவப்படவோ, ஒதுக்கி வைக்கவோ கூடாது. 
நீ சொல்றதும் சரிதான். ஒரு ஆணை பத்தி நான் சொல்றதைவிட, ஒரு பெண் நீ சொன்னா நல்லா இருக்குமே! நீயே ஆண்வர்க்கத்தினை பத்தி சொல்லேன்.

மகனாய், சகோதரனாய், தகப்பனாய், கணவனாய், தந்தையாய், சக ஊழியனாய், முதலாளியாய், தொழிலாளியாய், குற்றவாளியாய், சமூக ஆர்வலனாய்... இப்படி பல வடிவெடுக்கும் ஆணுக்குதான் எத்தனை எத்தனை கடமைகள்?!  பெண்ணைவிட ஆணுக்கே பொறுப்புகள் அதிகம். விவரம் தெரியாத வயதிலேயே சகோதர சகோதரிகளை காப்பதிலிருந்தும், கடைக்கு போய் வருவதிலிருந்தும் அவன் பொறுப்புகள் ஆரம்பிக்குது.  குறிப்பிட்ட வயதில் வேலைக்கு போகனும், வீடு கட்டனும், சகோதரிக்கு கல்யாணம் செய்யனும், அப்பா அம்மாவை பார்த்துக்கனும்... மகளை கட்டி கொடுக்கனும்.  மனைவியை பார்த்துக்கனும்.. இப்படி அவனின் கடமைகள் நீளுது. 

ஆண்மை எனப்படுவது கல்யாணம் கட்டி, பெண்ணை கட்டிலில் திருப்திப்படுத்தி, பிள்ளையை பெத்துக்குறதுல இல்ல. தன்னை நம்பியவரை கடைசிவரை காப்பாத்துவதில்தான் ஆண்மை இருக்கு.  மற்ற உயிரினங்களில் பெண் இனம்தான் குடும்பத்தை தாங்கும். ஆனா, மனித இனத்தில் மட்டும் ஆண்தான் தன்னை சார்ந்தோரை அடை காக்கனும்.  பொருளீட்டுவது முதற்கொண்டு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் வரை எல்லாமே ஆணை நம்பிதான் இருக்கு. பிள்ளைப்பேறும்,  பிள்ளை வளர்ப்பும், குடும்ப வேலை மட்டுமே பெண்ணை சாரும். மத்த விசயத்துல பெண் இனத்தின் பங்களிப்பை சமூகம் எதிர்பார்த்து இல்ல. காலமாற்றத்தில் பொருளீட்டுவது முதற்கொண்டு சமூக பிரச்சனைகள் வரை ஆண்களுக்கு  உதவும் பொருட்டு பெண்கள் உதவுறாங்க. ஆனாலும், ஆணை சார்ந்தே இந்த சமூகம் இயங்குது. 

நேரங்கெட்ட நேரத்துல வர்றான். நண்பர்களுடன்  சினிமா, அரட்டைன்னு ஜாலியா இருக்கான். வீட்டு வேலை செய்ய தேவை இல்லைன்னு பெண்கள் ஆண்களை பார்த்து  பொறாமைப்பட்டாலும், உண்மையிலேயே அவனுக்கும் சில உரிமைகள் மறுக்கப்படுவதை மறுப்பதற்கில்லை.  ஆண் பிள்ளை அழக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கப்பட்டு அவனின் மனக்குமுறல்கள் வெளிவராமயே அவனின் தொண்டைக்குழியோடு நின்னு போகுது. அழுதா பெட்டைன்னு சொல்லிடுவாங்கன்னு அவன் தன் வலியை ஜீரணிக்க பழகி, தன் கடமையை சரிவர செஞ்ச திருப்தியிலோ அல்லது தோல்வியிலோ எல்லத்தையும் அடக்கி அடக்கி வலிக்காத மாதிரியே நடந்து செல்லும் அத்தனை ஆணுக்கும் ஆண்கள் தின வாழ்த்துகள். முறையான அடிப்படை மருத்துவ பரிசோதனை பெண்கள் அளவுக்கு ஆணுக்கு கிடையாது.  தொடர் பரிசோதனைகளால் பல நோய்களிலிருந்து பெண்களால் தப்பிக்க முடியும். ஆனா,  ஆண்களை மட்டுமே தாக்கும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், இதய அடைப்பு நோய்கள் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடிக்க முடியாம  பல மரணங்கள் நிகழுது.

பெண்களை சார்ந்து பல திட்டங்கள், அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கம். ஆணுக்கென தனியாய் ஒரு ரூபாய்கூட ஒதுக்கப்படாததே உண்மை.  ஆணுக்கென தனியாய் எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தலை.  பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும்போது போராட மகளிர் சங்கம் இருக்கு. அவங்களோடு சேர்ந்து ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக போராடுவான். ஆனா, பாதிக்கப்பட்ட ஆணுக்காக போராட எந்த அமைப்பும் இல்ல. சக ஆணும்கூட பாதிக்கப்பட்டவனுக்காக  வரமாட்டான் என்பதே உண்மை.  அதேமாதிரி, குடும்ப வன்முறையில் நிவாரணம் பெற ஆணுக்கு உரிமை இல்லை. விவாகரத்தின்போது, குழந்தையை பிரிய நேர்வது பெரும்பாலும் ஆணே. தந்தைக்கும் பாசமும், பொறுப்பும் உண்டுன்னு அரசாங்கமும், சட்டமும் இன்னும் உணரலை.  சமீப காலமாய் பெண்மீது இரக்கம், அவள் உடல்மீதான ஆசை, என பல்வேறு காரணங்களுக்காக ஆணுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருது. ஆணின் உணர்ச்சியை தூண்டி, அவனின் உடலையும், மனசையும் பாழ்படுத்தும் பெண்களுக்கு தண்டனை வாங்கி தர சட்டம் ஏதுமில்லை. ஆணின்மீதான பாலியல் குற்றங்கள் சமூகத்தின் பார்வைக்கு வருவதே இல்லை.  ஆணை கேலி, கிண்டல் செய்யும் பெண்களையும், காதல், கல்யாணமென்ற பேரில் ஏமாறும் ஆண்களுக்கென எந்த நிவாரணமும், சட்டமும் இல்லை. இப்படி ஆணுக்கான மறுக்கப்படும் உரிமைகளை சொல்லிக்கிட்டே போகலாம் மாமா.

யப்ப்ப்பா. நான் சொல்லி இருந்தால்கூட இத்தனை சொல்லி இருப்பேனான்னு தெரில. அம்புட்டு விவரம் ஆண்களை பத்தி நீ சொல்றே! அப்படியே எதுக்கு ஆண்கள் தினம் கொண்டாடப்படுதுன்னும் சொல்லிடு. 


ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தவும், உலக அரங்கில் ஆணை முன்னிறுத்தி, அவனின் அவசியத்தினையும், தியாகத்தினையும் போற்றும் விதமாவும், ஆணின் பாதுகாப்பினையும், ஆரோக்கியம், எதிர்பாலினத்துடன் உறவுமுறையை மேம்படுத்துதல் என பல்வேறு காரணங்களை முன்வைத்து ஒவ்வொரு வருசமும் நவம்பர் 19 தேதியை உலக ஆண்கள் தினமாய் கொண்டாட ஐ. நா சபையால்  1999ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, ரினிடட் மற்றும் டோபாகோவில் அறிவிக்கப்பட்டது.  


ஆனாலும், 1960களிலேயே  ‘ஆண்கள் தினம்’  தேவை என்ற அறைக்கூவல்கள் கேட்க ஆரம்பிச்சாச்சு. 1992ல் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், தாமஸ் ஆஸ்டர் என்பவரால்தான் முதன்முதலில் இந்நாளுக்கான விதை விதைக்கப்பட்டது.  ஆனாலும், சட்டப்பூர்வமாக, Dr.Teelucksingh என்பவரால் 1999ம் ஆண்டு, Trindad – Tobagoவில்  கொண்டாடப்பட்டது. 60 நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுது. 2007லிருந்துதான் இந்தியாவில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுது. ஆண்கள் உரிமைகள் கழகம்ன்ற அமைப்பு இந்த தினத்தை முதன்முதலாய் இந்தியாவில் கொண்டாடியது. 2009ம் வருடம்  ஆண்களின் ஆடைத் தயாரிப்பு நிறுவனமான  ‘Allen Solly’ உடன் இணைந்து, கொண்டாட்டங்கள் சூடு பிடித்துவருது  மாமா. இந்த நாளில் நாடகம், பேரணி, விளையாட்டுகள்ன்னு கொண்டாட்டங்கள் நகர்புறங்களில் மட்டுமே நடக்குது.

எப்படியோ ஆணின் அருமை பெண்களுக்கு தெரிஞ்சா சரி. இன்னிக்கு இன்னொரு முக்கிய நாள் இருக்கு. அது என்னன்னு தெரியுமா?!

ம்ம்ம்ம் தெரியுமே! உலக கழிவறை நாள். இப்படியொரு நாள் தேவையான்னு எல்லாரும் நினைக்ககூடும். ஆனா, சரியான கழிப்பிடம். இருக்கும் கழிப்பிடமும் சுத்தமா இல்லாம பல மரணங்கள் நேருது. நோய் தொற்றும் உண்டாகி மக்கள் பல நோய்களினால்  பாதிக்கப்படுறாங்க. உலகிலேயே, இந்தியாவில் 818 மில்லியன் மக்கள் சரியான கழிப்பறை வசதி இல்லாம  இருக்காங்க.  இதனால் 10 லட்சம் பாக்டீரியாக்களும், ஒரு கோடி வைரசும், 50 கொடிய நோய்களும் உருவாகுது.  வயதுக்கு வந்ததும் பெண்பிள்ளைகளை  பள்ளிப்படிப்பை நிறுத்த கழிவறையும் ஒரு காரணமாகுது.  தமிழ்நாட்டில் மட்டும் 1500 பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது.  அப்படியே இருந்தாலும் போதிய தண்ணீரின்றி சுகாதாரமற்று இருக்கு. இதேநிலைதான் சமூகத்திலும்.  போதிய கழிப்பறை வசதி இல்லாம தினத்துக்கு 1000 குழந்தைகள் இறந்து போகுது.

கழிப்பறை பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு  2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம்ன்ற சர்வதேச அமைப்பு. சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் உறுப்பினரா இருக்கு. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதியைவே அனைத்து நாடுகளிலும் 'உலக கழிப்பறை தினமா கடைபிடிக்கப்படுது. கழிப்பறையின் அவசியம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.  உலக அரங்கில் போதிய கழிப்பறை வசதி இல்லாத  இடத்தில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கு. 35.5 கோடி பெண்களும், சிறுமிகளும் சரியான கழிப்பறை இல்லாம அவதிப்படுறாங்க. அவங்களைலாம் வரிசையில் நிக்க வச்சா, பூமியை நாலுமுறை சுத்தி வரலாமாம். அதுக்கடுத்து சீனா. 3வது இடத்தில் நைஜீரியா.  உலகில் மூன்றில் ஒருவருக்கு கழிப்பறை வசதி இல்ல. திறந்தவெளியில் ஒதுங்குவதால் பல வியாதிகள் வரும்ன்னு சொல்லும் அதேநேரத்தில், பெண்கள் பாலியல் தில்லைக்கு ஆளாகும் அபாயமும் புதுசா சேர்ந்திருக்கு. இப்ப புரியுதா மாமா கழிப்பறையின் அவசியம்?!

நல்லாவே புரியுது.  அதேமாதிரி இப்ப கஜா புயலின்போது சமூக வலைதளத்தில் பார்த்து மனசை பாதித்த படங்கள் சிலதை பார்க்கலாமா?!
அப்பாவிலாம் இப்படிதான் அவஸ்தை படனும்ன்னு  விதிச்சிருந்தால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும். ஒட்டுமொத்தமா செத்து போகலாம். சிறுக சிறுக சாகாமல்...
கடவுள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள்ன்னு யாரும் உதவ போறதில்லை. நமக்கு நாமே. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லையேல்.... அவதிதான்.
கொடுத்தே பழக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள். தங்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு வந்த திருச்சி கல்லூரி மாணவ மாணவிகளை வெறும் கையோடு அனுப்ப மனமில்லாம தங்கள்கிட்ட இருந்த இளநீரை கொடுத்தனுப்பிய காட்சி.. 
ஒரே இரவில் அனைத்தையும் இழந்து...
ஒன்பது மாத கர்ப்பிணியான தன் மனைவியை வீட்டில் விட்டுட்டு களப்பணியாற்றும் ஒரு சகோதரன் இதில் இருக்கார். அவருக்கு வாழ்த்துகளும், அவர் மனைவி பத்திரமாய் இருக்க ஆண்டவனையும் பிரார்த்திப்போம்.

இரவு பகல் பாராமல் இக்கட்டான சூழலில் வேலை செய்யும் தேவதூதர்கள். மின்சார துறையிலிருந்து  ஓய்வு பெற்றபின்னும் 70 வயசிலயும் கொட்டும் மழையில் ஒருவர் மீட்பு வேலையில் ஈடுபட்டிருந்தார்.  ஆனா தேடும்போது அவர் வீடியோ கிடைக்கல. ஆனா, இப்படி பாடுபடும் நல் உள்ளங்களுக்கு வணக்கங்களையும், நன்றியும் சொல்லலாமே!
சொல்லிக்கலாம் மாமா!  நல்லோர் ஒருவர் உளரேல் மழை பெய்யும். அந்த  மழையால் பாதிப்பு வந்தால் பல நல்லோர் உருவாகுவாங்கன்னு இதுமாதிரியான சூழல்கள் நமக்கு உணர்த்துது. வணக்கமும், நன்றியும் சொன்னா போதாது. நமக்கு சோறு போடும் பூமியும், விவசாயியும் மீண்டு வர நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.

நன்றியுடன்,
ராஜி