Friday, May 18, 2012

கோலம் போடுங்க... கோலாகலமாக வாழுங்க!

                                         
ஏண்டி புள்ள, காலங்காத்தால எம்புட்டு வேலை இருக்கு. வாசல் தெளிச்சோமா, கூட்டினோமா, நாலு புள்ளில ஒரு கோலம் போட்டோமான்னு வராம வாசலடைச்சு தினமும் கோலம் போடுறியே உனக்கு இடுப்பு வலிக்கலை?!

என்னங்க மாமா இப்பிடி கேட்டுட்டீங்க? கோலம் போடுறதுல எம்புட்டு விசயம் இருக்கு தெரியும்ங்களா?

ம்க்கும் என் காசுலாம் கோலமாவாவும், கலர் பொடியாவும்  மாறி வேஸ்ட் ஆகுறதுதான் மிச்சம்.

ஐயோ மாமா, உக்காருங்க இப்பிடி, அழகா இருக்குற ஒரு விசயத்தை இன்னும் கொஞ்சம் அழகு பண்றது நம்ம பழக்கம்.

என்ன புள்ள சொல்றே?! கோலம் போட்டு அழகு பண்றியா? வெளங்கலியே!

மாமோய்!  ஒவ்வொரு விசயத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு மாமா.  காரணம் தெரியாம அந்த  காரியத்தை செய்யுறது அறியாமை. அந்த காரணத்துக்காகக் காரியம் செய்வது அறிவுடைமைன்னு பெரியவங்கலாம் சொல்லியிருக்காங்க.

சுத்தத்துக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும்  நாம வீட்டைச் சுத்தம் செய்றோம். காத்து  மூலமா  வர்ற  தூசு, தும்மை  தடுக்க ஜன்னல்,  கதவுகள் வெச்சு வீட்டை கட்டுறோம். ஜன்னலுக்கு ஸ்கிரீன் கட்டுறோம். சுவத்துல  சுண்ணாம்பு பூசுறோம். சுவத்துல  பூசுற சுண்ணாம்பு சுவத்துல நமக்கு தெரியாம  புகுந்திருக்குற நுண்ணிய நோய்க் கிருமிகளை அழிக்குது.

அதுப்போல அலங்காரங்களினால், வீட்டுக்குள் இருப்பவர்களின் நலன்கள் பாதிக்காமல், பாதுகாக்கப்படுறது  பழந்தமிழர் நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள்ல ஒண்ணு.  வூட்டுல இருக்குறவங்க  நலனைப் பாதுகாக்கும் முறைகள்ல  ஒண்ணுதான்   கோலம் போடுறது.

பொம்பளைங்க நாங்க,  அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல    பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளிச்சு,
வாசலைப் பெருக்குறது.  இது, சுத்தத்துக்காக மட்டும் செய்யப்படுவதல்ல! வீட்டின் முன்னாடியும் பின் வாசல்லலியும்  தெளிக்குற பசுஞ்சாண தண்ணி, அந்த வூட்டுக்குள்ள காத்துலயும், தூசியிலயும், வீட்டுக்குள் வர்றாவங்களால தொத்திக்கிட்டு வர்ற நோய்க்கிருமியை தடுக்குது. அதனால, பசுஞ்சாண தண்ணி  ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுதுங்க மாமா. அம்மை நோய், காலரா, வைசூரி போன்ற நோய்லாம்  பரவுறதைப் பசுஞ்சாண தண்ணி தடுக்குதுன்னு ஆராய்ச்சிலயே சொல்லியிருக்காங்க மாமோய்.

அப்படியா புள்ள!

வீட்டுமுன் வாசலில் கோலம் போடுவாங்க. இந்தக் கோலம்கூட  கண்டமேனிக்கு கண்டவாறு போடுறதில்லை. ஒவ்வொரு கிழமைக்கு ஏத்த மாதிரி  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலம் போடுவாங்க. அந்தக்கோலம், முக்கோண வடிவிலயும், நாற்கோண வடிவிலயும், வட்ட வடிவிலயும், பதினாறு கோண வடிவிலயும் இருக்கும் பொம்பளைங்க போடுறது  கோலமா இருந்தாலும்...,  அதுலாம்,  வூட்ல இருக்குறவங்களை காக்கும் யந்திர சக்ரமாகும்.

வூட்டு முன்னாடி போடுற கோலம், “ யந்திர சக்கரங்கள்”. அது  அந்த வூட்டுல இருக்குறவங்க, வூட்டில இருந்து வெளியே போகும் போதும், வூட்டுக்குள்ள  நுழையும் போதும் அவங்களுக்கு எந்த கெடுதலும்  நடந்துடாம பாதுகாக்குமாம்.
வூட்டிலிருக்கும் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ கண்ட  இடத்துக்கு போவாங்க . கண்ட கண்ட  பொருள்களைத் தொடுவாங்க. . அந்த இடங்களிலிருக்கும் தீய சக்திகள் குழந்தைகள் நலனைக் கெடுத்துடாம பாதுகாக்குதாம்.  

கோலத்தின் நடுவே பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப் பூவை வைக்கிறோமே!  அந்த பூசணிப்பூ மற்றவர்களால் கண் திருஷ்டி  படாம பாதுகாக்குது. பூசணிப்பூவின் மஞசள் கலருக்கு அந்த  சக்தி இருக்காம்.
இந்தப்பழக்கம் காலங்காலமாக நடந்துக்கிட்டு வர்ற பண்பாட்டு முறையாம்.
ஆனா, இன்ன்னிக்கு  நாகரிக வளர்ச்சியில எல்லாமே  போலித் தனங்கள். கோலமிடும் பொம்பளைங்க குறைஞ்சு போயிட்டாங்க.  தினமும் கோலத்தை தானே போடாம.  ஏதோ ஒரு கோலத்தை கலர் கலரா பிளாஸ்டிக் பேப்பர்ல அச்சடிச்சதை வாங்கி  வாசல் முன்னே ஒட்டிக்குறாங்க.

ஆமா புள்ள, முன்னலாம் நானும் வயலுக்கு போகும் போது  அழகழகான பொண்ணுங்கள்லாம் வாசல்ல கோலம் போடும்ங்க. நானும் அதெல்லாம் பார்த்துக்கிட்டே...,

என்ன பார்த்துக்கிட்டே?!

அது வந்து, அது வந்து கோலத்தையெல்லாம் பார்த்துக்கிட்டேன்னு சொல்ல வந்தேன் புள்ள.

ம்க்கும் உங்களை பத்தி எனக்கு தெரியாதா? நான் கோலம் போடும்போது எதிர்க்க டீகடைல உக்காந்து சைட்டடிச்ச ஆளுதானே நீங்க?!  உஙக புத்தி எனக்கு தெரியும். அதை விடுங்க. கோலத்தை பேசலாம்..

வார நாட்கள் ஏழும் ஏழு கோள்களின் ஆதிக்கத்தைக் குறிப்பதாகும். ஒரு நாளில் இருக்கும் ஆதிக்கம் மறுநாள் மாறிவிடும். அந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு கோலங்களை மாற்றி மாற்றிப் போடுவதனால், தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிட்டு, பிளாஸ்டிக் கோலங்களை ஒட்டி வைத்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மார்கழி மாதம் வந்து விட்டால் போதும்: வாசல் தோறும் வண்ணக் கோலங்கள் புத்துப்புது மலர்கள்போல் நாளும் ஓர் அழகுடன் மலரும். கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக்கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஜதிகம்.


அது மட்டுமில்லாம என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்னு கூட இருக்கு மாமோய்.  கோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும் ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது.

அழகுக்காக வண்ணப்பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம். இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் கிரக தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும்.

 ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கம் மனை விளங்கும்.வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது.புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். 

படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும்.கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஜக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது. சகல நன்மையும் தருமாம்  மாமா. அதேப்போல முன்னலாம் அரிசி மாவுல கோலம் போடுவாங்க. அது, எறும்பு, பூச்சி, குருவிக்குலாம் பசியாற உதவி பண்ணுச்சு. ஆனா, இப்பலாம் கோலப்பொடி கல்லு உடைச்சு அதை பவுடராக்கி அதுல கோலம் போடுறோம்.அதனால ஒரு யூஸும் இல்ல மாமா.

கரெக்ட்தான் புள்ள, இனி  வாசல்ல கோலம் போடு.  ஆனா, என்கிட்ட கோலம் வராத. புரிஞ்சுதா?!

என்னாது, உங்களை..., ஓடாதீங்க மாமா! எப்படியும் கொட்டிக்க வூட்டுக்கு வந்துதானே ஆகனும் அப்ப இருக்கு உங்களுக்கு.

17 comments:

  1. பசுஞ்சாணி ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அரிசி மாவினால் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு அவை உணவாகவும் அமையும். இதெல்லாம் தெரிந்த விஷயங்கள் எனக்கு. இதைத் தவிரவும் கோலம் போடறதுல எவ்வளவோ இருக்குன்னு இப்பத் தெரிஞ்சுக்கிட்டேன். அசத்திட்டம்மா தங்கச்சி! சூப்பர்ப்!

    ReplyDelete
  2. கோலாகல கோலப் பதிவுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. கோலம்..இது புது வித அர்த்தங்களின் கோலம் ..அருமை..

    ReplyDelete
  4. எம்மாடி ...., கோலத்துக்குள் இத்தனை விசயமா ....?

    ReplyDelete
  5. வணக்கம் சகோ,
    அருமையான் பதிவு.வாழ்த்துக்கள்.கோலம் என்பதும் கணிதமே.ஒரு புள்ளியில் ஆரம்பித்து அனைத்து புள்ளிகளுக்கும் ஒரே முறை சென்று தொடங்கிய புள்ளிக்கு வருவது நம் சகோதரிகள் பல கோலங்களில் எளிதாக செய்யும் செயல்.கணிதத்தில் இதன் பெயர் ஆய்லர் சுற்று.ஆனால் இது ஒரு மிக பெரிய கணிதப் புதிர்.இன்னும் இங்கே படியுங்கள்

    சமரசம் உலாவும் இடமே!!!!: கோடு+புள்ளி+கோலம்=கணிதம்:

    http://aatralarasau.blogspot.com/2011/10/blog-post_27.html

    நன்றி

    ReplyDelete
  6. இப்பொதெல்லாம் தெருவெல்லாம் சிமெண்ட் பிளாட் போட்டு பசுஞ்சாணம் தெளிக்கவிடாமல் பண்ணிட்டாங்க. கோலத்தை கொஞ்சம் பெரிசா போட்டால் இன்னைக்கு ஏதும் விசேசமா? என்று கேட்க கூடிய நிலைமை. இன்றைய தலைமுறைக்கு கோலம் போடத்தெரியவில்லை. அப்படியே போட்டாலும் பேப்பரில் மட்டும் போடுவர். கிராமங்களில் திருமண விசேசம் என்றால் வீடு முழுவதும் கோலம் போட்டு அழகுபடுத்துவர். அது இப்போது காணாமல் போச்சு.

    ReplyDelete
  7. கோலத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா
    சொன்ன விஷயங்களும்
    சொன்னவிதமும் அருமை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ///
    கணேஷ் சொன்னது…பசுஞ்சாணி ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி.///

    தயவு செய்து தவறானதை மக்களுக்கு சொல்லாதீர்கள். அந்தக் காலத்தில் நமக்கு அறிவு அவ்வளுவு தான். மேலும் பசுவுக்கு முக்கித்துவம் கொடுக்க இது மாதிரி சொன்னது. முழுக்க முழுக்க மதம் சம்பந்தமான பொய் மற்றும் முட்டாள்தனம்!

    முக்கால்வாசி Tetanus இந்தியாவில் அங்கு இருந்து தான் வருகிறது!


    மக்களை முட்டளாக்கினது போதும்; எங்கு வேண்டுமானாலும், விவாதம் செய்ய நான் ரெடி.

    Please, Ganesh, do not propagate more illiteracy among our poor people...

    ReplyDelete
  9. கோலம் போடுறதுல எம்புட்டு விசயம் இருக்கு என்று பதிவில் எம்புட்டு விசயம் அழகாக சொல்லி இருக்கீங்க....

    ReplyDelete
  10. வீட்டுல அத்தான்தானே கோலம போடுறாங்க .. நீங்க பதிவு தானே போடுவிங்க

    ReplyDelete
  11. கோலங்கள் சீரியல் பார்க்காம இங்கே என்ன வேடிக்கை? ஹி ஹி

    ReplyDelete
  12. நீங்க கோலம் போடுங்க சகோ

    நிறைய விடயம் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  13. அலங்கோலத்துல....இவ்வளவு அழகு மேட்டர் இருக்கா..??

    ReplyDelete
  14. கோலம் பற்றிய விளக்கம் மிகவும்
    அருமையாக உள்ளது.
    அறியவேண்டிய பல செய்திகள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. உங்கள் ulavu பட்டை எழவு பட்டை ஆகி விட்டது போல ! உங்கள் தளம் லோட் ஆக 10 நிமிடம் ஆகிறது ! கவனிக்கவும் ! பகிர்வுக்கு நன்றி சகோ !

    ReplyDelete
  16. மிகவும் அருமையான கோலவிழக்கம் அக்கா .நல்ல பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete