புதன், ஜூன் 19, 2013

ஒரு முறை விமான நிலையத்துக்கு வாங்களேன்!!


தனதும், தன் குடும்பத்தார் வாழ்வு சிறக்க இரவென்றும்.., பகலென்றும்.., பாராமல் கண்டம் விட்டு கண்டம்,  நாடு விட்டு நாடு பறக்கும் "விமான பணிப்பெண்களின் கனவுகளையும்...,

ஊரார் மெச்ச பேருக்கு பின்னால் பி.ஈ என்ற ஈரெழுத்தை வாங்க, அடமானம் வைத்த காட்டையும், வீட்டையும் மீட்கவும், அக்கா திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்கவும், அன்பு காதலியை பிரிந்து, அரபு பாலைவனத்தில் வேர்வை சிந்த பயணிக்கும் "இளைஞனின் கடமையையும்.....,

ஒரு மாதமாக சாக்லேட், ஐஸ், குலதெய்வ கோயில், உறவினர் வீடு, இரவில் தூங்கும் முன் கதை, உப்பு மூட்டை என அசத்திய அப்பா, இப்போ போனால் திரும்ப வர குறைந்தது இரண்டு வருடமாகும் என்பதை உணராமல், விமான நிலையத்தின் பிரமிப்பில் ஆயிரம் கேள்வி கேட்கும் குட்டி பெண்ணின் சுட்டித்தனத்தையும்...,

கட்டிய மஞ்சள் தாலி கயிற்றின் வாசம் மாறாமலும், அவனிட்ட முத்தத்தின் ஈரம் காயமலிருக்கும்போதே வழியனுப்பும் மனைவியின் "மோகத்தையும்"...

காதலென்னும் கவிதையை கட்டிலில் படித்து, அதற்கு மனைவி அளித்த பரிசான... மழலையை, கண்டு உச்சி முகர ஓடோடி வரும் தந்தையின் “ஆர்வத்தையும்...,

இருவது வருடம் பாலூட்டி, சீராட்டி வளர்த்து, அவள் விருப்பப்படி மணமுடித்து, ஆயிரம் ஆசை கனவுகளை தாங்கி செல்லும், யு.எஸ் மாப்பிள்ளையையும், மகளையும் ஊறுகாயும் , இட்லிப்பொடியும் தந்து வழியனுப்பும்  பெற்றோரின் அக்கறையையும்"...

உலக அரங்கில் நாட்டின் பெருமையை நிலைநாட்ட செல்லும் விளையாட்டு வீரனின் வீரத்தையும்..,  ஆயுர்வேதத்தையும், சித்த மருத்துவத்தையும் நம்பாமல் வெளிநாடு சென்று சிகிச்சை பெற செல்லும் நோயாளியின் அறியாமையையும்...,

வீட்டில் இருக்கும் பெரிசு, நண்டு, சிண்டு நட்டுவாக்களி தொந்தரவின்றி தேனை ருசித்து, நிலவை ரசிக்க ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீர் செல்லும் புதுமண தம்பதியினரின் காதலையும்..,

பரம்பரையிலே முதல் ஆளாய் பட்டம் வாங்கி, வெளிநாட்டில் வேலை செய்ய போகும் தன் மகனை(ளை), சாராயம் குடிக்காதே, வெள்ளி பீடி புடிக்காதேன்னு அட்வைஸ் சொல்லி, கடல் கடந்து போகும் தோஷம் தீர இடுப்பிலும், கையிலும் தாயத்து கட்டி, புளிசோறும் ஊறுகாயும் கட்டிக்கிட்டு, வேனில் வந்திருக்கும் கிராமத்து மனிதர்களின் அப்பாவித்தனத்தையும்... 

என்னமோ ஏர்போர்ட் வர்றவங்கலாம் டாட்டா, அம்பானி வாரிசுன்னு நினைச்சு 20ரூபாய் மதிப்புள்ள பழரசத்தை 120ரூபாய்க்கும், 10ருபாய் மதிப்புள்ள சமோசாவை 60க்கும் விற்கும் கடையும்.., 6 கிமீ தூரத்தை பயணிக்க 450 ரூபாய் கேட்கும் டாக்சிக்காரங்களின் ”நினைப்பையும்”..,

அருமைப் பெருமையாய் வளர்த்து.., நல்ல கல்வி தந்து.., வசதியான பெண் பார்த்து முடித்து.., என் பையன் ***** நாட்டுல வேலை செய்யுறானாக்கும்.., இது என் பையன் வாங்கித்தந்ததுன்னு.., தள்ளாத முதுமையில் மகன்(ள்) பெருமை பேசி.. மடிந்த பெற்றோரின் இறுதி சடங்கை செய்ய, இரண்டு நாள் கழித்து  ஓடோடி வரும் மகனி(ளி)ன் “கண்ணீரையும்...,

பருப்பில்லை, எண்ணெயில்லை, உங்களுக்கு பொறுப்பில்லை என்று நச்சரித்து அனுப்பும் மனைவியின் டென்சனை புறந்தள்ளி, ஆசை , காதல், பொறுப்பு, காதல், அக்கறை, கண்ணீர் தாங்கிய கனவுகள் ஈடேற அவர்களை, பெற்ற  தாய் போல பாதுகாப்போடு சேருமிடம் சேர்ப்பிக்கும் விமான ஓட்டியின் ”பொறுப்பையும்”.., 

அனைத்து உணர்ச்சிகளையும் ஒரு சேர  ஒரே இடத்தில் காணவேண்டுமா??

                    ”ஒருமுறை வாருங்கள் விமான நிலையத்திற்கு”!!.....,என் மகள் தூயாவை பார்க்க பெங்களுரு ஏர்போர்ட் போய் இருந்தேன். அங்க இருக்கும்போது எத்தனை விதமான மனிதர்கள்?! அழுகை, கோவம், ஆனந்தம், கண்ணீர்ன்னு பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேர்ந்தது..,  அதான் மனசுக்கு தோணுணதை எழுதிட்டேன்..,

31 கருத்துகள்:

 1. சொன்ன விதம் மனதை நெகிழ வைத்தது சகோதரி...

  தூயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோ! உங்க வாழ்த்தை தூயாக்கிட்ட சேர்ப்பிச்சுடுறேன்

   நீக்கு
 2. நான் ஒரு தனியார் முன்னனி எஃப்.எம் ரேடியோவில் இருக்கிறேன். முடிந்தால் இதை பயன் படுத்தி கொள்கிறேன். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாராளமா பயன்படுத்திக்கோங்க மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும்.., கருத்துக்கும்

   நீக்கு
 3. மகிழ்ச்சி !

  தூயா இன்னும் கொஞ்சம் வெயிட் போடணும் :)

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையை பதிவு. நானும் இதே போல் என் உணர்வுகளை பதிவாக்க வேண்ண்டும்.

  பதிலளிநீக்கு
 5. மிகவும் மனதில் வலிசுமந்தே இந்த ஆக்கத்தினைப் படைத்திருப்பீர்கள்
  தோழி காரணம் இந்த வலியை நானும் அறிவேன் .அழகிய செல்ல
  மகளின் திருமுகம் கண்டு மகிழ்ந்தேன் அவளுக்கு என் இனிய அன்பைத்
  தெரிவித்துக் கொள்ளுங்கள் தோழி .இன்றைய ஆக்கத்தில் என் மகளின்
  புகைப் படத்தைத் தான் நானும் வெளியிட்டுள்ளேன் .எப்போதும் இந்தப்
  பிஞ்சு மலர்களின் நினைவுகள் தான் எல்லா அம்மாக்களின் மனதிலும்
  நின்றாடும் போல !! :)

  பதிலளிநீக்கு
 6. கலர் கலர் வார்த்தைகளின் வர்ணனை அருமை...

  பதிலளிநீக்கு
 7. மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தூயாவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. உணர்ச்சிகளின் கலவையில் விமானநிலையமே மூழ்கிப்போகும்:(

  அருமையான அவதானிப்பும், பதிவும்.

  இனிய பாராட்டுகள்.

  தூயா....நல்ல அழகு! மேன்மேலும் சிறப்படைய இனிய ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 9. நீங்கள் சொன்னது போலவே ஏர்போர்ட் என்பது அனைத்து உணர்ச்சிகளும் நிறந்த இடம்தான் - அதனை நீங்கள் விபரித்த விதம் அழகு! உங்கள் மகள் தூயாவுக்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 10. மிகவும் அருமையாக விமான நிலையத்தை வருணித்து விட்டீர்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. உணர்சிகளின் தருணங்கள் சொன்ன விதம் அழகு. தூயாவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. ஒரு 'இந்திய'விமான நிலையம் பற்றிய உங்கள் உன்னிப்பான கவனிப்பு, அபாரம்.
  மகளுக்குப் பொருத்தமான பணி... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. வரும்போது, எவளாவது வெள்ளக்காரியை இழுத்துட்டு வந்துடாப்பா; உன் படிப்புக்கும் வேலைக்கும் இங்கு நல்ல சொத்து சுகத்துடன் காரு பங்களா நிறைய நகைகளுடனும் நல்ல பேங்க் பேலன்ஸ்சோட நல்ல பெண்ணா நாங்க பாத்து வைக்கிறோம்...என்று பாட்டு படிச்சு,

  அப்புறம், "சொல்லிட்டேன்...படிப்பு பணம் பெருசில்லை ராசா, ஜாதி சனம் குடும்ப மானம் தான் பெரிசு! மனசுல வைத்துக்கொள் மவனே"...என்று ""கலாசாரத்தைக்"" காப்பாற்ற துடித்து, உருகிக் கரையும் பெற்றோர்கள்...!

  பதிலளிநீக்கு
 14. கனவு, கடமை, சுட்டித்தனம், மோகம், ஆர்வம், அக்கறை, வீரம், அறியாமை, காதல், அப்பவித்தனமை, நினைப்பு, கண்ணீர், பொறுப்பு... அப்பப்பா.. இப்படி ஒரு உணர்ச்சிக் கதம்பத்தையே கொட்டித்தீர்த்துவிட்டீர்கள். அருமை.

  விமான நிலயத்தில் வழி அனுப்பிய, வரவேற்ற ஒவ்வொருத்தருக்குள்ளும் இந்த உணர்சிகளில் ஒவ்வொன்றாவது இருந்திருக்கும்.

  மிக அழகாக மனங்களையும் உங்கள் மகளையும்தான் படம் பிடித்து போட்டுவிட்டுள்ளீர்கள். மிகவும் ரசித்தேன்.

  உங்களுக்கும் மகளுக்கும் வாழ்த்துக்கள் தோழி!

  த ம.9

  பதிலளிநீக்கு
 15. என் கேர்ள் ஃப்ரெண்ட் வெளிநாடு போயாச்சா?வாழ்த்துகள்;ஆசிகள்.
  சிறப்பான பகிர்வு

  பதிலளிநீக்கு
 16. தூயா - எத்தனை அற்புதமான பெயர்! பாராட்டுக்கள்.
  நிறைய உணர்வுகளின் தேக்கிடம் விமான நிலையம் - அந்தக் காலத்தில் "பெரிய பஸ் ஸ்டேன்டு" :)

  பதிலளிநீக்கு
 17. உண்மை! உண்மை! உணர்ச்சி குவியல்களின் தொகுப்பு மிக சிறப்பு.விமான நிலையம் உணர்வுகளின் கலவை நிலையம்தான்.

  பதிலளிநீக்கு
 18. கனவுகளையும், கடமையையும், சுட்டித்தனத்தையும், மோகத்தையும், ஆர்வத்தையும், அக்கறையையும், வீரத்தையும், அறியாமையையும், காதலையும், அப்பாவித்தனத்தையும், நினைப்பையும், கண்ணீரையும், பொறுப்பையும் ஒன்றாகக் கலந்து பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. தூயாவிற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. நல்ல பதிவு ...தனித்தனியே ஒவ்வருவரும் சொல்வதை ஒரே பதிவில் சொல்லிவிடீர்கள் ..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. ஞாபகப் படுத்தி விட்டீர்களா...?
  இதையெல்லாம் படிக்கும் பொழுது
  திரும்பவும் அந்த சுகத்தையும் சோகத்தையும்
  மீண்டும் அனுபவிக்க
  வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

  பதிவு அருமை. உங்களுக்கும் துர்யாவிற்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. ஒரு நாள் ஏர்போர்ட்டை பார்த்ததும் உங்கள் பார்வையில் & மனதில் இவ்வளவு எண்ணங்கள் ஒடி இருக்கின்றன. வாவ்.... அதை தெளிவாகவும் மிக எளிமையாகவும் எடுத்து சொன்ன விதம் அருமை வானில் பறக்கும் தேவதையை படம் பிடித்து உங்கள் வலைத்தளத்திலும் அதனை பகிர்ந்தது அருமை... தூயா என்ற பெயருக்கு பொருத்தமான தோற்றம் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 22. நல்ல அப்ஸர்வேஷன்! அதை அழகாக வார்த்தைப் படுத்தி அசத்தி விட்டாயம்மா! மருமகளுக்கு உடன் திருஷ்டி சுற்றிப் போடவும்.

  பதிலளிநீக்கு
 23. திரும்பி வரும் போது உணர்ச்சி வெள்ளத்தில் விமானம் முழுதும் நிற்கும் முன்பே நம்மாட்கள் எழுந்து பைகளை தூக்கி வெளியே வர துடிப்பதும் ,
  இதை புரியாத சில படித்த தலைகளும் நூல்களும் 'ஊச்' கொட்டுவதும் மிக அற்புதமான காட்சி.
  பல ஆண்டுகளுக்கு இதை போலவே நியூ டெல்லி ரயில் நிலையத்தில் யாரோ முகம் தெரியாத வட நாட்டு ராணுவ வீரர் தன் மனைவி மக்களை அனுப்பி விட்டு குமுறி அழுக , தூரத்தில் இருந்து இதை பார்த்து எனக்கும் அழுகை. உணர்வுக்கு மொழி , மதம் எதுவுமில்லை , மனிதனாய் இருந்தால் போதும் என்று நினைகிறேன்

  பதிலளிநீக்கு