Friday, December 27, 2013

சனிப் பிரதோசம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கடந்த மூணு வாரமா சொர்ணாகர்ஷன கிரிவலம் பத்தி பார்த்தோம். பார்க்காதவங்க பாகம் 1, பாகம் 2 பாகம் 3 போய் பார்த்துட்டு வந்துடுங்க. அப்புறம் கிரிவலம் போறப் பாதையில இருக்கிற லிங்கங்கள் பத்தின பெருமைகளையும் பார்த்தோம். வெற்றிகரமா எந்தத் தடங்கலும் இல்லாம கிரிவலம் சுத்தி வந்தாச்சு. கிரிவலம் முடிக்கும்போதும் கோவிலுக்குள் சென்றி இறைவனை தரிசிக்கனும் என்பது ஐதீகம் அதனால, கோவிலுக்கு போகலாம் வாங்க!

ராஜக்கோபுரம் வழியா உள்ள போனால், வலது பக்கத்தில் ஆயிரங்கால் மண்டபமும், இடது பக்கத்தில் கம்பத்திளையனார் சந்நிதியும் இருக்கு. இங்க பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கு. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கு. ஆணவக் குணம் நீங்க இவரிடம் பிரார்த்திதுக்கொள்ளலாம்.

நாம் கோவிலுக்குள் நுழைந்தவுடன் தரிசிப்பது முருகன் சன்னதியான கம்பத்து இளையனார் சந்நிதி. அதென்ன கம்பத்து இளையனார் சந்நிதி!?அண்ணாமலையார் அக்கினிப் பிழம்பு, அதே போன்று மகனான முருகனும் அக்னிப் பிழம்பு.  தந்தையானதால அவர் மூத்தவர்.  மகனாய் பிறாந்ததால இவர் இளையவர்.   கம்பத்து இளையனார் சந்நிதி ன்னு சொல்வாங்க. அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் அருள் வழங்கிய திருத்தலம் இந்த திருவண்ணாமலை. அருணகிரியார் வாழ்க்கையின் சம்பவங்கள் பலஇங்க நடந்திருக்கு. அதிலொன்றுதான்கம்பத்து இளையனார் சந்நிதி தோன்றுவதற்கான காரணம்.

சம்பந்தாண்டான்ன்ற பேர் கொண்ட ஒருவர், அப்பத்திய திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அரசவையின் ஆஸ்தான புலவராகவும் விளங்கிய இவர், பொறாமை கொண்டவர். அருணகிரியாரை எப்படியேனும் மட்டம் தட்டனும்ன்னு திட்டம் போட்டார். அரசரா இருந்த பிரபுட தேவ மகாராஜாவிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, அருணகிரியாரை முடியுமானால் முருகனை வரவழைக்கச் சொல்லுங்கள்ன்னு தூண்டி விட்டார்.

 அருணகிரிநாதர் மயிலை வேண்டிப் பாடினார். மயில் முருகனை வேண்ட, ஆடும் மயில் மீது ஆடிக்கொண்டே ஆறுமுகனும் காட்சி கொடுத்தார். அதுவும் கம்பத்தில் வந்து காட்சி கொடுத்தார். அந்தக் கம்பமே கருவறையாக அமைந்த சந்நிதியே, கம்பத்தில் இளையனார் தோன்றிய கம்பத்து இளையனார் சந்நிதி.அதை விளக்கும் பதிகமே இது..,

 அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட
அபினகாளி தானாட அவளோடு அன்(று)
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேதனார் ஆட
மருவு வானுளோர் ஆட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனார் ஆட
மயிலுமாடி நீயாடி வரவேணும்  
நாமும் அந்த பதிகத்தை பாடி அங்கிருந்து கிளம்பி வேற சன்னிதி போகலாம். வாங்க! இங்க நமக்கு வலது பக்கத்தில் தெரிவதுதான் ஆயிரம் கால் மண்டபம்  இச்சன்னதியின் தென்புறமாக சிவகங்கை தீர்த்தம் இருக்கு.

இனி ஆயிரம் கால் மாண்டபம் பத்தி பார்க்கலாம். நமது முன்னோர்களின் பெருமைக்குறிய கட்டிடக் கலைகளில் இந்த ஆயிரங்கால் மண்டபம். ஒண்ணு.   மற்ற மண்டபங்களில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கு. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது ஆச்சர்யமான விஷயம்.  மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்யவும் கலை நிகழ்சிகள் நடத்தவும்  இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்ன்னு சொல்வாங்க. சிவகங்கை குளமும், ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. விஜநகர கால கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஆயிரங்கால் மண்டபம் இருக்குது. ஆயிரங்கால் மண்டபத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள யானை சிற்பங்கள் கலைநயம் மிக்கதா இருக்கு. இராசகோபுரத்தின் வடதிசையில் உள்ள வாயிலில் "சித்திரமணி மண்டபம்" இருக்கு. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி”யில் அமைத்துள்ளது.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் ரமண மகரிஷி தமது இளம் வயதில் தியானம் இருந்த இடம் இருக்கு.  மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்கு சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை கண்ட அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்துவிட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், பாதாள லிங்கம் இருக்கு. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக்கனும்ன்னு சொல்றாங்க. 
இங்க ரமண மகரிஷியின் போட்டோவும், பக்கவாட்டு சுவரில் பாதாள லிங்கம் பத்தின குறிப்புகளும் இருக்கு.  அதைத்தாண்டி ஒரு படிக்கட்டு வழியாக சென்றால் பாதாள லிங்கம் இருக்கு.

இந்த பாதாள லிங்க வாசலில் நம் அகந்தையெல்லாம் விட்டவாறே குனிந்துதான் செல்லவேண்டும்.  பிரகாரத்தை சுற்றி கோவிலினுடைய பழையப் படங்களும், ரமண மகரிஷியின் படங்களும் வைக்கப்பட்டிருக்கு.
இந்த கோவிலை புதுபிக்கும் முன் 1940 ல் இருந்த நிலையில் உள்ள போட்டோ வைக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு போட்டோவாப் பார்த்துட்டு சீக்கிரம்  வாங்க. அங்க, வெளியே இருக்கும் வினாயகப்பெருமானை கும்பிட போகலாம். 

திருக்குளத்தின் வடமேற்கில் இருப்பது சர்வ சித்தி விநாயகர் கோயில் இவரை வழிபட்டு கீழே இறங்கினால் தெரிவது பெரிய நந்தி. இந்த நந்திக்குதான் பிரதோசக் காலங்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதற்கு முன் இருப்பது உத்திராட்ச மண்டபம். உயரமாக காணப்படும்.இதைகடந்து போகும்போது இடதுபக்கம் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியும் வலது பக்கம் முருகபெருமான் சந்நிதியும் இருக்கு. இன்னும் கொஞ்சம் உள்ளே வலதுபக்கம் போனால் வன்னியமரத்து விநாயகர் திருக்கோயிலும் இருக்கு. 

இதன் சிறப்பு என்னன்னா ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிக்குற மாதிரி இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசி அலங்காரம் பண்றாங்க. சம்பந்தாசுரன்ன்ற அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.


பெரிய நந்திகேசுரருக்கு நேராக வல்லாள மகாராசா கோபுரம் இருக்கு. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார்ன்ற பேரில் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் அவரை வணங்கியப்படி இருக்கார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

மூன்றாம் கோபுரம் கிளிக்கோபுரம் ஆகும். அருனகிரிநாத பெருமான் பூத உடலை விட்டு கிளியாக மாறி பரிசாத மலர் கொண்டு வரச் சொர்க்கம் சென்றார். திரும்பி வரும்போது தன் உடல் இல்லாததுக் கண்டு கிளி உருவிலே "கந்தர் அனுபூதி "பாடிய இடம் இக்கோபுரமாகும். .இன்றும் இக்கோபுரத்தில் நிறைய கிளிகள் வாழ்வது சிறப்பு. 

கிளிக்கோபுர வாயிலை கடந்து போனால் மூன்றாம் பிரகாரத்தில் பதினாறுகால் மண்டபம் இருக்கு. .இதற்கு தீபதரிசன மண்டபம் ன்னு பேர். இங்க திருக்கார்த்திகை நாளில் பஞ்ச மூர்த்திகள் நிற்க மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும். இம்மண்டபம் மங்கையர்க்கரசி என்ற சிவனடியார் கட்டி சிறப்பு பெற்றார்கள். மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் ஸ்தல விருட்சமான மகிழமரமும், பின்புறம் அருணகிரி யோகீஷ்வர் சந்நிதியும், வடக்கே அருள்மிகு அம்பாள் சந்நிதியும், நேர் எதிரே காளத்தீஸ்வரர் சந்நிதியும், அருகில் யாக சாலையும் அமைந்திருக்கு.

இப்பக் கோவிலில் கூட்டம் கூட்டமாக ஆட்கள் வர தொடங்கிட்டாங்க. குபேர கிரிவலம் வந்த அந்த நாளில் சனி பிரதோசமும் கூட. அதனால் பக்தர்கள் வர தொடங்கிட்டாங்க. நாம வசதியா ஒரு இடத்தில அமர்ந்து கொள்ளலாம். சீக்கிரம் வாங்க இடம் பிடிச்சுக்கலாம். பிரதோசங்களிலே விசேஷமானது இந்த சனி பிரதோஷம் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று சொல்லப்படுது. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00வரையிலான நேரம் ஆகும்.

இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்தநேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலக் கோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும். ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள், நமக்குப் இன் வரும் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள்அழிந்துவிடும்.

பொய் சொல்லுதல்,கொலைசெய்தல்,பேராசைப்படுதல், அடுத்தவர் பொருளை அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள். எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம். ஜெபிக்கலாம் என்று குபேரலிங்கத்தில் கலந்துக்கிட்ட பெரியவர் ஒருத்தர் தன்னுடைய சீடர்களுக்கு அறிவுரை கூறியது ஞாபகம் வந்தது. நாம பேசிக்கொண்டு இருந்த நேரத்தில நிறைய கூட்டம் வந்துடுச்சு. நந்திக்கு அபிஷேகம் செய்ய ஆராம்பிசிட்டாங்க. அந்திசாய ஆரம்பித்து இருள் சூழ தொடங்கிடுச்சு. அபிஷேகம் முடிந்து நந்திக்கு அலங்காரம் செஞ்சு தீபாராதனையும் காண்பிச்சுட்டாங்க .

அந்த சமயத்தில் மழை பெய்ய ஆரம்பிச்சது. அங்க இருக்கிற பக்தர்களை பாருங்க. வருண பகவான் எவ்வளவு தான் சோதிச்சாலும் கலங்காது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தரிசனம் செய்றாங்க. சிலர் ஒதுங்கி நின்றாலும் பெரும்பான்மையானவர்கள் மழையில் நனைந்து கொண்டு தரிசனம் செய்வதை பார்க்கும் போது மக்களின் இறைவனை தரிசிப்பதில் காணப்படும் முயற்சியில் ஏற்படுகின்ற  சகிப்புத்தன்மை மனதுக்கு சந்தோசமளிக்குது. நாமளும் அவர்களை போல் மழையை பொருட்படுத்தாது பிரதோஷ கால நந்தியை தரிசிக்கலாம். வாங்க! 

பெரிய நந்தி அழகா அலங்கரிக்கப்பட்டு மலர் மாலைகளெல்லாம் சூட்டப்பட்டு அலங்காரமா காட்சியளிக்குது. அங்க பலரும் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற நெய்விளக்கு தீபம் ஏற்றினர். நாமும் ஏற்றி எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தித்து நந்திக்கு சூட்டிய பூமாலையை பிரசாதமா வாங்கிக்கிட்டு அங்கிருந்துக் கிளம்பலாம். இனி பிரதோஷ காலங்களில் எப்படி வலம் வரனும் முறையை பார்க்கலாம் பிரதோஷ  காலத்தில் வலம்வரும் முறைக்கு சோம சூக்த பிரதட்சணம்ன்னு சொல்வாங்க 
இது நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு, இடப்புறமா வலம் வந்து சண்டிகேஸ்வரரை வணங்கி, அங்கிருந்து திரும்பி நந்திப் பெருமானிடம் வணங்கி, இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து, அங்கிருந்து வலப்புறமாக போய் கோமுகி வரை வலம் வந்து கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்கனும். பின்னர் அங்கிருந்து திரும்பி நந்தித்தேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்கனும். இது சோமசூக்த பிரதட்சணம் ன்னு சொல்வாங்க. அதற்கான வரைப்படம் தான் மேல இருக்கும் படத்துல பார்த்தது. ஆலகால விஷம் வெளிப்பட்ட போது தேவர்கள் இங்கும் அங்கும் அலைந்ததை நினைவு கூறும் விதமா இந்த பிரதட்சணம் செய்யப்படுது. இந்த வலம் வரும் முறைப்படி நாம் செய்தால் பிரதோஷத்தின் முழு பலனையும் அடைய முடியும்.

மழை ஒருவழியாக முடிந்து சிறு தூறலாப் சொட்ட ஆரம்பித்தது,. நாமும் கிளம்பி செல்லலாம். கொடிமரத்தை தாண்டி உள்ள சென்றால் வடக்கே சுப்பிரமணி சுவாமி,தெற்கே விநாயகப் பெருமானும் இருக்காங்க. அதை கடந்து உள்ள போனால் இரண்டாம் பிரகாரம் அமைந்திருக்கு. இப்பிரகாரத்தில் சிவாலயத்தில் அமைய வேண்டிய அனைத்து பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் அமைந்திருக்கு.

பின்னர் அங்க இருக்கும் நந்தியை வழிப்பட்டு அண்ணாமலையார் சந்நிதிக்கு செல்லும் முன் .துவார பாலகர்களை தரிசித்து கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தில் நின்று தரிசிக்கும் போது அருணாசலேசுவரரரை சிவலிங்க வடிவில் தரிசனம் செய்து சொர்ணாகர்ஷன கிரிவல பயணத்தை இனிதே நிறைவு செய்யலாம்.

அடுத்த வாரம் வேற ஒரு கோவிலை புண்ணியம் தேடிப் போறப் பயணத்துல தரிசிக்கலாம்! அண்ணாமலையானுக்கு அரோகரா!

19 comments:

 1. நல்லா சுத்திப் பாத்தாச்சி சகோதரி... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அண்ணாமலையாரின் அருளும் கிடைச்சுட்டுதா அண்ணா

   Delete
 2. வணக்கம்
  எல்லாம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரூபன்

   Delete
 3. உங்களுடன் எங்களையும் அழகாகப் பயணிக்க வைத்துவிட்டது இந்தப் பகிர்வு.... வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. கிரிவலம் வந்து புண்ணியம் பெற்றதுக்கு நன்றி சகோ!

   Delete
 4. விரிவான தகவல்கள் மற்றும் படங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

   Delete
 5. அருமையான பதிவு சகோதரி, நாங்களும் திருவண்ணாமலை கோவிலை வலம் வந்து விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. புண்ணியம் பெற்றமைக்கு நன்றி!

   Delete
 6. VIJAY - HARISH12/27/2013 2:53 pm
  அருமையான பதிவு சகோதரி, நாங்களும் திருவண்ணாமலை கோவிலை வலம் வந்து விட்டோம்.


  repettttttttttttttttttu

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காயத்ரி

   Delete
 7. தென்னாடுடைய சிவனே போற்றி
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!

  எங்களையும் உங்களுடன் அழைத்துச் சென்று தரிசிக்க வைத்ததற்கு நன்றி....

  ReplyDelete
  Replies
  1. என்னோடு சேர்ந்து கிரிவலம் வந்ததுக்கு நன்றிங்க ஆதி!

   Delete
 8. சுவாரஸ்யமா சுத்திக் காட்டினதுக்குத் தேங்க்ஸ்! எவ்வளவோ கூட்டம்! கூட்டம்னாலே எனக்கு அலர்ஜி!

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா பௌர்ணமி, மற்றும் விஷேஷ நாட்கள் இல்லாத திங்கள் கிழமைகளில் கிரிவலம் வாங்க! கூட்டமே இருக்காது. ஒரு சிலர்தான் கிரிவலம் வருவாங்க.

   Delete
 9. நல்ல படங்கள் மற்றும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 10. அருமையான படங்களுடன் விளக்கங்கள். மிகவும் நேர்த்தியாக எங்களையெல்லாம் கிரிவலம் வர வைத்து, கோவிலுக்கும் கூட்டிச் சென்று வந்து விட்டீர்கள். அடுத்த கோவிலுக்கு நீங்கள் அழைத்துப் போகும் வரைக்கும் காத்திருக்கிறேன் சகோதரி.

  ReplyDelete