Tuesday, December 26, 2017

திருப்பாவையின் முதல் எட்டு பாடல்களும் அதன் விளக்கமும்...

மார்கழி மாசம்ன்னாலே பஜனையும், கோலமும்தான் முக்கியம். அத்தோடு, திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும் முக்கியம். முப்பது பாடல்களை போட்டா பதிவு நீளும். அதனால ஒரு வாரத்துக்குண்டான திருப்பாவையும், அந்தந்த நாளில் நான் போட்ட கோலமும் வார இறுதியில் பதிவாக்கப்படும்.

மார்கழி 1ம் நாள்...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


முழு நிலவு நிறைந்த மார்கழி மாதத்தில் செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியின் அழகிய சிறுமிகளே ! அழகிய அணிகலன்களை அணிந்த அணங்குகளே ! எழுந்திருங்கள்.
இன்று முதல் நாம் அதிகாலையில் நீராடப் புறப்படுவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி ஆயர்பாடியில் வசிக்கும் தன்தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் கோதை நாச்சியார் .

மார்கழி 2ம் நாள்...

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்
இந்த உலகத்தில் வாழ்வதால் பாவை நோன்பு நோற்கப்பெரும் வாய்ப்பினை உடைய நாம் அனைவரும், பாவை நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் கேட்பீர்கள்...
பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள பரமனின் திருநாமத்தை எப்போதும் பாட வேண்டும், நெய் பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் விடியலில் நீராடவேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக்கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும் பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இட வேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

மார்கழி 3ம் நாள்...
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்.


விளக்கம்...
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி, நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.

மார்கழி 4ம் நாள்....


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

மார்கழி 5 ம் நாள்...


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

மாயச்செயல்கள் செய்பவனை, வடமதுரையின் மைந்தனை, தூய நீர்கொண்ட யமுனையின் கரையில் வாழ்பவனை, ஆயர் குலத்தின் மணிவிளக்கை, தன் தாயின் பெருமையை உலகறியச் செய்த தாமோதரனை, தூயவர்களாக வந்து நாம் மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், செய்த பிழைகளெல்லாம் தீயினில் எரியும் தூசென ஒழியும். ஆகையால் பாடுங்கள்

மார்கழி 6ம் நாள்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

மார்கழி 7ம் நாள்...
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்"
கீசு கீசு என்று ஆனைச் சாத்தன் (செம்போத்துப் ) பறவை தங்களுக்குள்ளே பேசும் பேச்சரவம் கேட்கவில்லையா பேய்ப் பெண்ணே? பகலாகியும் இன்னும் உறங்குகிறாயே? காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர்குலத்துப் பெண்கள் மத்தினால் ஓசையோடு தயிர் கடையும் அரவம் கேட்கலையோ? நீ இவர்களின் தலைவியான பெண்பிள்ளை ஆயிற்றே, நாராயணன் மூர்த்தி கேசவனைப் நாங்கள் பாடக் கேட்டும் நீ படுத்திருக்கிறாயே, ஒளியுடையவளே கதவைத் திறவாய்.. என்பாவாய்.

மார்கழி 8ம் நாள்...


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.
 கிழக்குத் திசையில்  வானம் வெளுத்துள்ளது. எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின. கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம். குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்.  குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்,  மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.
அடுத்த எட்டு பாடல்களை அடுத்த ஞாயிறு அன்னிக்கு பதிவு வரும்
ராஜி.

15 comments:

  1. கோலங்கள் அனைத்தும் அழகு. படம் எடுத்ததை, கோலம் மட்டும் தெரியும்படி க்ராப் செய்து போடலாம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஃபோட்டோஷாப் தெரியாதுண்ணெ.

      Delete
  2. நம் இல்லக் கோலங்களின் அழகே தனிதான். திருப்பாவை,திருவெம்பாவையினை ரசித்தோம். பகிர்வு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  3. படங்களும் கோலங்களும் மிக அழகு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  4. கோலங்களில் தெரிவது உங்கள் ஆர்வமும் உழைப்பும். அருமை.

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசு பழக்கம் சகோ. என் அம்மா பழக்கப்படுத்தி விட்டாங்க. ஆனா, என் பசங்க கோலம் போட சோம்பல் படுதுங்க

      Delete
  5. அழகான கோலங்கள்
    அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. முதல் பாடலும் மூன்றாம் பாடல் மட்டுமே கேட்டதுண்டு..எப்படி உங்களால் முடிகிறது தினமும் இவ்வளவு விஷயங்கள் சேகரிக்க...எளிமையான விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. விவரம் சேகரிக்க ஏழு பேர் கொண்ட குழு இருக்கு சகோ. அதான் தினமும் ஒரு பதிவு

      Delete
  7. அழகிய கோலங்களுடன்...சிறப்பான பகிர்வு....

    ReplyDelete