Sunday, April 01, 2018

ஏமாறாதே! ஏமாற்றாதே! - அறிவோம் வரலாறு


மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம், ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், சுற்றுலா தினம்ன்னு தினத்துக்கு ஒரு நாள் கொண்டாடப்படுது. எல்லா தினத்துக்கும் சம்பந்தப்பட்டவங்களுக்கு வாழ்த்து சொல்வோம்.  ஆனா, இன்னிக்கு கொண்டாடப்படும்  நாளுக்கு வாழ்த்து சொன்னா கோவிச்சுக்குவாங்க. ஏன்னா, அந்த வாழ்த்தை வாங்கிக்கிட்டா அவங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டப்படும். அதனால், வாழ்த்துவதற்கு பதிலா சின்னச்சின்ன ஏமாத்து வேலைகளை ஒருத்தருக்கு ஒருத்தர் செஞ்சுப்பாங்க. அப்படி செஞ்சுக்கும்போது சிரிச்சுக்கிட்டே போய்டுவாங்க. கோவிக்கமாட்டாங்க.   ‘முட்டாள்கள் தினம்’. குழந்தைகளால் பெரிதும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் நாள்.  முன்புலாம்  ஏப்ரல்  1 அன்று, காலை முதல் மாலை வரை இத்தினத்தை கொண்டாடினர். இப்பலாம் ஒரு வாரம் வரைக்கும்கூட வச்சு செய்யுதுங்க நம்ம பசங்க.

பிரான்சில் முட்டாள்கள் தினத்தன்று ஏமாறுபவர்களின் முதுகில் காகிதத்தில் செய்த  மீனை அவருக்கு தெரியாமல் ஒட்டி  ‘ஏப்ரல் பிஷ்’ எனச்சொல்லி கிண்டல் செய்வர்.  கனடா, ஆஸ்திரேலியா, சைப்ரஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் வெகுவாய் கொண்டாடப்பட்டு வருது. இந்தியாவில் இப்படி கொண்டாடும் பழக்கமில்லையென்றாலும் மேல்நாட்டு கலாச்சார தாக்கத்தால் இங்கும் கொண்டாடப்படுது. 
இதுமாதிரியான ஒரு தினத்தை கொண்டு வந்ததில் ’பாஸ்வெல்” என்பவருக்கு முக்கிய பங்குண்டு. சில பழங்குடி மக்கள் இத்தினத்தை வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாய் சூரியனை வழிப்பட்டு கொண்டாடினர். பண்டைய காலத்தில் ரோமானியர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தினை ஏப்ரல் 1ம் தேதிதான் கொண்டாடினர். ஐரோப்பிய  நாடுகளும் ஏப்ரல் 1 தேதியில்தான் புத்தாண்டை கொண்டாடினர். 1562ஆம் ஆண்டு கிரகோரி என்ற போப்’ஜார்ஜியன்’ என்ற காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஏப்ரல் 1க்கு பதில் ஜனவரி 1தான் புத்தாண்டு தினமாய் குறிக்கப்பட்டு, இனி புத்தாண்டை ஜனவரி 1 தான் கொண்டாடப்படவேண்டுமென உத்தரவிட்டார். 

இங்கிலாந்தில் இந்த மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏப்ரல் 1யே புத்தாண்டு தினமாய் கொண்டாடினர். மேலும் போப்பின் உத்தரவு போய்ச் சேராத நாடுகள் ஏப்ரல் 1ஐ புத்தாண்டாய் கொண்டாடினர்.  பழைய காலண்டர் முறை மாறி புது காலண்டர் முறை வந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாடுபவர்களை முட்டாள்களென  கிண்டல் செய்தனர்.  காலப்போக்கில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமானது.


புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் நாள். இந்நாளில் புத்தாண்டு கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான குறிப்புகள் இருக்கு. ஹார்வி என்னும் வரலாற்று ஆய்வாளர் தனது குறிப்பில், " பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக அவர் குறிப்பில் சொல்லி இருக்கார்.  ஒருவார கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் 1ஐ பெரு விருந்துடன் முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளா

ஆனாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரே, 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் இருக்காம். அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்படுது. 1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரசசபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் 1 எனவும், அதனாலும் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, பழைய நடைமுறைகள் பலவற்றை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களை ஏற்காதவர்களுக்கு பரிசுப்பொருட்கள் போல பேக் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிக்குள் குதிரை முடி, பழைய குப்பை, முட்டை ஓடுகள், அழுகிய காய்கறிகளை அனுப்பி கேலி, கிண்டல் செய்து முட்டாள் பட்டம் கட்டினர். அதுவே, காலப்போக்கில் முட்டாள்கள் தினமா மாறிட்டுதாம். 

இன்னிக்கு உண்மையா எதாவது செஞ்சாலும் சந்தேகத்துக்குரியதாக இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை வெரிஃபை பண்ணிப்பாங்க. முதலாம் நெப்போலியன், ஆஸ்திரியாவை சேர்ந்த மேரி லூயிசை 1810ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி கல்யாணம் கட்டிக்கிட்டார். எல்லாரும் இது நிஜக்கல்யாணம் இல்லை. எல்லாரையும் முட்டாளாக்க நடந்த கல்யாணம்ன்னு சொல்லி கிண்டல் செஞ்சாங்களாம். இதான் விளையாட்டு வினையாகும்ன்னு சொல்லுறது.  
ஏப்ரல்1ஐ  "Poission d'avril "ன்னு அப்பத்திய காலக்கட்டத்தில் சொல்லி இருக்காங்க. இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச்சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும்  பரவி இருக்கு. அமெரிக்காவிலிருந்து நம்மூருக்கு வந்திருக்கு.
அறிவு வேலை செய்யாத மூடர்களுக்கு முட்டாள்ன்னு ஏன் பேர் வந்திச்சுன்னு பார்த்தால் நம்ம ஊரில் தேரோட்டம் நடக்கும்போது தேரை ஆங்காங்கு நிறுத்த, சக்கரங்களுக்கு ஒரு கட்டையை கொண்டு முட்டு கொடுப்பாங்க. இந்த வேலையை செய்றவங்களை முட்டு+ஆள் = முட்டாள்ன்னு சொன்னாங்க. பின்னாளில்  என்ன ஏதுன்னு யோசிக்காம சொன்ன வேலையை மட்டும் செய்றவங்களை முட்டு ஆள் மாதிரி வேலை செய்யாதன்னு சொல்லபோய் இப்ப முட்டாள்ங்குற வார்த்தை மூடர்களுக்கு  பொருந்திப்போச்சு.  

இந்த நாளை தேவை இல்லாம மேலைநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏப்ரல் ஃபூலா கொண்டாடாம, ஒரு மரக்கன்றை நட்டு ஏப்ரல் கூல் தினமா கொண்டாடலாம்ன்னு வாட்ஸ் அப், ஃபேஸ்புக்ல உலாவுது. இந்த ஐடியா நல்லாவும், அவசியமானதாகவும் இருக்கு. அப்படியே செய்வோமே!
நம்மூர்ல சட்டையில் இங்க் அடிப்பது, காலுக்கு கீழ் பாம்பு இருக்கு, இன்னிக்கு ஸ்கூல் லீவ்ன்னு முட்டாள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். எது எப்படியோ எப்பயாவது முட்டாளாக ஏமாறுபவர்களுக்கு இத்தினம் ஒரு கொண்டாட்டதினம். அனுதினமும் ஏமாறுபவர்களுக்கு?! இந்நாளும் மற்றொரு நாளே!
நன்றியுடன்,
ராஜி 

12 comments:

  1. முட்டாள்கள் தினத்திற்கும் ஒரு பதிவு - நடத்துங்க......

    எல்லா நாளும் நல்ல நாளே..... அப்படிங்கறது என்னோட பாலிசி!

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படிதான்ண்ணே!

      Delete
  2. எவ்வளவு விசயங்கள் பிரமிப்பாக இருக்கிறது சகோ.

    இருந்தாலும் உங்களுக்கு வாத்துகால்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வாத்துக்கால் பிடிக்காது. கோழிக்கால் இல்லன்னா ஆட்டுக்கால் போதும்.

      Delete
    2. ஸாரி வாழ்த்துகள்
      ஏதோ பிரிண்டிங் மிஸ்டேக் நடந்து விட்டது.

      Delete
  3. இத்தினத்திற்கும் நிறைய தகவல்கள் இல்லையா...

    என்னைப் பொருத்தவரை வெங்கட்ஜி சொன்னதே!!! அதை அப்படியே டிட்டோ செய்யறேன்...எல்லா நாளும் நல்ல நாளே! அதுதான் எனது பாலிசியும்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவ்தான் தகவல் இருக்கு கீதாக்கா.

      Delete
  4. ஏப்ரல் ஒன்றுக்கான விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். முட்டாளுக்கான விளக்கம் புதுசு.

    இவ்வளவு தகவல்களைத் திரட்ட எவ்வளவு நேரம் / நாள் எடுத்துக் கொள்வீர்கள்? இதுபோன்ற பதிவுகளை அழகா பதிவாக்கி ப்ரசண்ட் பண்றீங்க..... வாத்துகால் .. ச்சே. கில்லர்ஜி சொன்னதைக் கேட்டுக் குழம்பிட்டேன்... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. டிவில பார்க்குறது, பேப்பர்ல படிக்குறது, ஃபேஸ்புக், டிவிட்டர்ன்னு எங்க படிச்சாலும் எழுதிப்பேன். இல்லன்னா, வேர்ட் பைல்ல சேமிச்சுப்பேன். அதனால பதிவை எழுத அதிகப்பட்சம் 2 மணிநேரம் ஆகும். ஆனா, படம் தேடி, பிடிச்சு, செலக்ட் பண்ணத்தான் அதிக நேரம் பிடிக்கும்.

      கில்லர்ஜிக்கு சொன்ன அதே பதில்தான். எனக்கு வாத்துக்கால் வேணாம், ஆட்டுக்கால், கோழிக்கால் போதும்.

      Delete
  5. ஆச்சரியமாக இருக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. எதுக்குண்ணே ஆச்சர்யம்?!

      Delete
  6. விவரமாகச் சொல்லியிருக்கிறீர்கள் அக்கா...

    ReplyDelete