Saturday, April 14, 2018

நலம் தரும் தமிழ் புத்தாண்டு - அறிவோம் வரலாறு


தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல்நாளா அல்லது தை முதல்நாளா என இருவேறு கருத்துகள் இருந்தாலும் பலகாலமாய் கொண்டாடப்பட்டு வந்த சித்திரை முதல்நாளைத்தான் தமிழ் வருடப்பிறப்பாய் இன்றும் நாம் கொண்டாடி வருகிறோம். இந்நாளை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில் ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வடஇந்தியர்கள்  பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர்.  

இந்தியா விவசாய நாடு. அதனால், விவசாயிகள் மகிழ்ந்திருப்பது அறுவடை காலத்தில். அறுவடை தைமாதத்தில் வருவதாலும்,   தமிழ் மாதப்பெயர்கள் ஒன்றாவது தமிழில் உள்ளதா?! அதனால் தைமாதம்தான்   தமிழ் வருடப்பிறப்பு என ஒரு சாராரும்  இல்லை  இந்தியா வெப்ப நாடு. சூரியன் நிற்கும் நிலையை கொண்டு இளவேனில் காலம், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என  வருடத்தின் பருவக்காலம் பிரிக்கப்படுது.  சித்திரையில் இளவேனில் காலம் ஆரம்பிப்பதால்  சித்திரை முதல்நாள்தான் தமிழ்வருடத்தின் முதல்நாள் என மற்றொரு சாராரும் வாதாடுகின்றனர்.
ஜோதிடரீதியாக  மேஷம் தொடங்கி மீனம் முடிய பனிரெண்டு ராசிக்குள் சூரியன் குடியிருக்கும் நாட்கள் ஒரு மாதமாகும்.  சூரியன் மேஷராசியில் குடியிருக்கும் மாதம் சித்திரை. சித்திரை தொடங்கி பங்குனி முடிய தமிழ்மாதங்கள்  பனிரெண்டை கொண்டதுதான் தமிழ் வருடம். எனவே, சித்திரை முதல் நாளே தமிழ் வருடப்பிறப்பு எனவும் சொல்லப்படுது. சித்திரையில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். ஒரு தினம் 60 நாழிகை கொண்டது என்றும் கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது. தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரும் கிரகங்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. வானியல் சோதிட நூலான சூரிய சித்தாந்தம் எனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

சித்திரை ஒன்றில்தான் பிரம்மன் உலகத்தை தோற்றுவித்ததாய் புராணங்கள் சொல்லப்படுது.  சித்திரை ஒன்றில் பெரும்பாலான கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கும் விழா நடக்கும்.  இதே நாளில் குள்ளமுனி அகத்தியருக்கு சிவப்பெருமான் திருமணக்கோலத்தில் காட்சியளித்தார்.

சித்திரை முதல்நாளில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுது. அன்றைய தினம்  தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி மாவிலை தோரணம் கட்டி, காவி வரைந்து பூஜைஅறையில் விளக்கேற்றி பச்சரிசி பரப்பி அதன்மேல் மனையிட்டு புதுவருட பஞ்சாங்கம்  வைத்து வெற்றிலை,பாக்கு, பழம் வைத்து சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின் அந்தாண்டுக்குண்டான பலன்களை வீட்டின் பெரியவர் படித்து சொல்ல வேண்டும். இதேப்போன்ற நிகழ்வு அந்தந்த ஊர்க்கோவில்களிலும் நடக்கும். அவரவர் தங்களால் இயன்ற, தான தர்மங்களை செய்யவேண்டும்.

தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்கள்  தங்கள் வீடுகளில் வேப்பம்பூ, மாங்காய், மிளகா, உப்பு, புளி, வெல்லத்தால் பச்சடியை செய்வர். இதன்மூலம்  இன்பம், துன்பம் போன்றவை நிறைந்ததுதான் வாழ்க்கை என உணர்த்தினர்.

பஞ்சாங்கம் படித்தல்:
ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் படித்தல் நலம். இன்றைய காலகட்டத்தில் இது இயலாத காரியம். அதனால் தமிழ் வருடப்பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படித்தலோ அல்லது பஞ்சாங்கம் படித்தலை கேட்பதோ நல்லது. 

பஞ்சாங்கம் என்பது யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் என முக்கிய ஐந்து அம்சங்களை முக்கியமாய் கொண்டது. பஞ்சாங்கம் படித்தலை கேட்கும்போது  யோகம், ரோகத்தை போக்கும். திதி, நன்மையை அதிகரிக்கும், கரணம், வெற்றியை தரும். வாரம், ஆயுளை தரும். நட்சத்திரம்,  பாவத்தை போக்கும். 


விஷுக்கனி காணல் மற்றும் கைநீட்டம்...

விஷு என்றால் ஆண்டுப்பிறப்பு. கேரளாவில் சித்திரை முதல் நாளை சித்திரை விஷு எனக் கொண்டாடுகின்றனர்.  பங்குனி 31 அன்று பூஜையறையில் ஒரு மனையில்  கண்ணாடி ஒன்றை வைத்து, அதன்முன் நிறைநாழி நெல், நெல்லின்மீது  தென்னம்பாளை வைப்பர்.  பஞ்சபூதங்களை உணர்த்தும் விதமாய் பஞ்சலோகத்தால் ஆன உருளியில்  வாழை, பலா, மா உள்ளிட்ட பழவகைகள், கொன்னைப்பூ உள்ளிட்ட பூக்கள், இனிப்புகள், தங்கநகைகள், பணம் வைத்து உறங்கிவிடுவர். வீட்டின் மூத்த பெண்கள் தூங்கி எழுந்து இப்பொருளை பார்த்தப்பின் குளித்து பூஜையறையில் விளக்கேற்றுவர். பின் ஒவ்வொருவராக எழுப்பி, அவர் கண்களை கைகளால் மூடி பூஜையறையிலுள்ள கண்ணாடியில் இப்பொருளை பார்க்க வைப்பர். இதையே விஷுக்கணி காணுதல் என அழைப்பர். 

கேரள செல்வந்தர்கள்  தங்கள்  வயலில் வெளியாட்களை நியமித்து விவசாயம் செய்தனர். வயலில் விளைந்த பொருட்களை மாலையில் வயலுக்கு சொந்தமானவர் வீட்டில் கொண்டு  வந்து சேமிப்பர். செல்வந்தரும் அவர்தம் குடும்பத்தாரும் காலையில் இவ்விளைப்பொருட்களைப் பார்த்து மகிழ்வர்.  பாடுபட்டு உழைத்த பணியாளர்களுக்கு  மனமுவந்து பணமும், பொருளுமாய் அள்ளி தந்தனர். இதுவே பின்னாளில் விஷுக்கனியாவும், கைநீட்டமுமாய் மாறியது எனவும் சொல்வதுண்டு.  காலையில் விளைப்பொருட்களை காணுதலை ”கனி காணுதல்” எனவும், பணியாட்கள் பரிசுப்பொட்களை கைநீட்டி வாங்குவதால்  “கை நீட்டம்” எனவும் அழைக்கப்பட்டது.

பைசாகி:  
விக்ரம நாட்காட்டியின் முதல் மாதம்  பைசாகம் ஆகும். பைசாகத்தின் முதல் நாளை பைசாகி திருவிழாவாய் கொண்டாடப்படுகிறார்கள்.  ஜம்முவில் இப்பண்டிகையை அறுவடை திருநாளாய் கொண்டாடப்படுகிறார்கள். திருமணம் போன்ற மங்களகரமான நாட்களை நடத்தை ஏற்ற மங்களகரநாளாக இந்நாளை கருதுகின்றனர். இந்நாளில் ஆறு, குளங்களில் நீராடுவதை முக்கிய நிகழ்வாய் கொண்டுள்ளனர். இந்நாளில் அறுவடையான பொருட்களை விற்பனை செய்ய பெரும் சந்தை உருவாகும். பல்வேறு இன்னிசை கச்சேரிகள் நடைப்பெறும். முக்கியமாய் பஞ்சாப்பின் பாரம்பரிய நடனமான பாங்க்ரா நடனநிகழ்ச்சி நடக்கும். ஆடை அணிகலன், வீட்டு உபயோகப்பொருட்களும் கடைவிரிக்கப்படும்.  

1699ம் ஆண்டு  சீக்கிய மதத்தின் கால்சா என்ற பிரிவை  பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் உருவாக்கியதால் இந்நாளை கால்சா பிரிவினர் வெகுவிமர்சையாய் கொண்டாடுகின்றனர். இந்நாளில் கரும்புசாறும், பாஸ்மதி அரிசியினாலுமான பாயசத்தை உண்கின்றனர்.


நாரதருக்கும் க்ருஷ்ணருக்குமான உறவு;
ஒருமுறை நாரதருக்கு காம எண்ணம் தலைத்தூக்கியது. எத்தனை முயன்றும் அவரால் காமத்தை அடக்க முடியாமல் போகவே, க்ருஷ்ணரிடம் சென்று முறையிட்டு உங்கள் அறுபதனாயிரம் கோபியர்களில் யாரேனும் ஒருவரை மணக்க ஏற்பாடு செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார். எந்த கோபியர் மனதில் நானில்லையோ அவளை நீ மணந்துக்கொள் என க்ருஷ்ணர் பதிலளித்தார்.  அனைத்து கோபியரிடமும் உங்கள் மனதிலுள்ள ஆண்மகன் யாரென கேட்டார். அனைவரும் க்ருஷ்ணன் பெயரை சொல்லவே, மீண்டும் க்ருஷ்ணரிடம் வந்து, எல்லா கோபியர் மனதிலும் தாங்களே இருக்கின்றீர். அதனால்,  நீங்களே பெண்ணாய் மாறி என்னை மணந்துக்கொள்ளவேண்டுமென வேண்டினார்.  க்ருஷ்ணர் பெண்ணாய் மாறி நாரதரை மணந்து  சிலகாலம்  குடும்பம் நடத்தினர்.  அதன் விளைவாய் அறுபது குழந்தைகள் பிறந்தனர்.  அவையே   பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் எனவும் சொல்லப்படுது.  அறுபது  வருடங்களில் ஒன்றுகூட தமிழ் பெயர் இல்லாமைக்கு இதுவே காரணம். 
சித்திரை மாத திருதியை நட்சத்திரத்தில்தான் விஷ்ணுபகவான் மச்ச அவதாரம் எடுத்தார்.அன்றைய தினத்தை மத்ஸப ஜெயந்தின்னு கொண்டாடப்படுது.  சைத்ர மகரிஷி அவதரத்ததால் இந்த மாதத்திற்கு சித்திரைன்னு பேர் உண்டானது.  அன்றைய தினத்தில் சத்யநாராயணன் மற்றும் சித்திர குப்தரை வணங்குவது விசேச பலனை தரும். 
மனிதர்களின் பாவ, புண்ணியத்துக்கேற்ப பலாபலன்களை  அளிக்க ஏதுவாக, எமனுக்கு உதவியாய் இருக்கும் சித்ரகுப்தன் அவதரித்தது இந்த மாதத்தில்.  இந்த சித்திரை மாதம் அம்மனுக்கு உகந்தது,. அதனால்,  அனேகம் அம்மன் கோவில்களில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்படும். இது சித்திரை மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையிலிருந்து நம்மை காக்கும்.  
சித்திரை மாத பௌர்ணமி மிகுந்த விசேசமானது. இந்நாளில் கிரிவலம் செய்வது மிகுந்த நலம் பயக்கும். திருவண்ணாமலையில், சித்தர்கள் அரூபமாய் இந்நாளில்தான் கிரிவலம் வருவதாய் சொல்லப்படுது. அந்த வருடத்தில் தவறவிட்ட கிரிவலத்தின் பலனை இந்த ஒருநாளில் கிரிவலம் வருதால் பெறலாம். சித்ராபௌர்ணமியன்று, பெண்கள் சுமங்கலி நோன்பு இருப்பதும் நலம் பயக்கும். அன்றைய நாளில், முழுநிலவு நேரத்தில்  சித்ராண்ணம் எனப்படும் புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், கற்கண்டு சாதம் மாதிரியான உணவை சேர்ந்து உண்பதால் இருவருக்குள்ளும் அன்னியோன்யம் பிறக்கும்.
சித்திரைமாத சுக்லபட்ச பஞ்சமி தினத்தில்தான் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு மகாலட்சுமி வந்ததாக சொல்லப்படுது. அன்றைய தினம் லட்சுமி பூஜையை செய்தால் செல்வச்செழிப்பு உண்டாகும். சித்திரை மாத பௌர்ணமியில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கும்.

இந்த தினத்தில் இறைவனை, மனம் ஒன்றுப்பட்டு வணங்கி, இயன்றளவு தானதர்மங்களை செய்தால் இந்த ஆண்டு முழுவதும் நமக்கு வரும் இன்னல்கள் அகன்று இன்பங்கள் நிலைக்கும். நாம் எடுக்கும் நல்ல காரியங்கள் எதும் தங்கு தடையின்றி நிறைவேற  இந்நன்னாளில் இறைவனை வணங்குவோம்.

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிண்ணே

      Delete
  2. இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனிதாய் அமைந்திடட்டும்..... புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    நாபா பர்ஷா - நப பர்ஷ்

    ReplyDelete
    Replies
    1. திருத்திக்குறேன்ண்ணே

      Delete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
    பிரமிப்பான விடயங்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  4. அருமையான வரலாற்றுப் பதிவு.... நன்றி,தங்கச்சி.....///இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் சார்ந்தோருக்கும்/சான்றோருக்கும்......

    ReplyDelete
  5. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

      Delete
  6. புராணக் கதைகள் புன்னகைக்க வைக்கின்றன. இனிய தகவல்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சில கதைகள் முகம் சுளிக்கவும் வைக்கும் சகோ

      Delete
  7. அழகழகான படங்களுடன் ஏராளமான தகவல்களைத் தாராளமாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    [ ’ராஜி’ என்ற பெயர் ராசியினாலும் இது ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம் :) ]

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆன்மீக பதிவை பொறுத்தவரை எனக்கு ராஜேஸ்வரி அம்மாதான் உதாரணம். இப்பயும் பதிவு எழுதுவதில் சந்தேகம்ன்னா ராஜி அம்மா பதிவில்தான் போய் பார்ப்பேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா

      Delete
  8. தமிழ் புத்தாண்டு சித்திரையே என்று பெரும்பாலோரும், தை முதல் நாளே என்று மறைமலை அடிகளார் தொடங்கிய மரபைப் பின்பற்றுவோரும் வாதிடுகின்றார்கள். நம்முடைய பஞ்சாங்கம் பல வடமொழியில் உள்ள மூலநூல்களின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சில பெயர்கள் மட்டும் தமிழ் படுத்தப்பட்டுள்ளன. வானவியல் கணிதம் முன் குறிப்பிட்ட பராசரர், ஜைமினி போன்ற ரிஷிகள் வகுத்தது. உங்கள் பதிவில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள். சூரியமானம் என்ற சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக்கொண்டு புத்தாண்டு கொண்டாடும் மாநிலங்களின் புத்தாண்டுகளான விஷு (கேரளா), நாபு பர்ஷா (மேற்கு வங்கம்), பிஷு (அசாம்), பைசாகி (ஹரியானா,பஞ்சாப்) ஆகிய பண்டிகைகள் பற்றிய விரிவான பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete