Sunday, April 29, 2018

களங்கமில்லா மனமும், வாழ்வும் தரும் சித்ரா பௌர்ணமி

இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ணமிக்கும் நிறைய தொடர்புண்டு. அதுலயும் சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது.  வசந்தக்கால தொடக்கம் சித்திரை  மாதம். அதனால சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது.  மத்த பௌர்ணமிக்கில்லாத சிறப்பு இந்த பௌர்ணமிக்கு மட்டும் ஏன்ன்னு இனி பார்க்கலாம்.


குடும்பம், வியாபார செய்யும் இடம்ன்னு எங்கும்  வரவு, செலவுலாம் சரிவர கணக்கு வச்சு நிர்வகித்தால்  அந்த இடம் ஓகோன்னு வரும். அப்படி வரவு செலவை பார்த்துக்குறவங்களுக்கு வயசுல சின்னவங்களா இருந்தாலும் அங்கு மரியாதை, பொறுப்புன்னு சற்று தூக்கலா இருக்கும்.  சாதாரண வீடு, கடைக்கே இப்படின்னா, உயிர்களின் பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, சுகம் துக்கம்ன்னு வரவு செலவு வச்சுக்குற வேலை எப்பேற்பட்டது?! எந்தவித சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் எள்முனை அளவும் தன் கடமைல இருந்து தவறாமல் கடமையை ஆற்றிவருபவர் சித்திரகுப்தன். இவரின் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படுது.

வட இந்திய கதை...

வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த  தெய்வம் இந்த சித்திரகுப்தன். வட இந்திய மதமான சமண மதத்தின் தெய்வம் இவர்ன்னும் சொல்லப்படுது. சமண மதம் மட்டும்தான் இறப்பை முன்னிறுத்தி அறம் கூறுவதால், மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

தென் இந்திய கதை.....

கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் உணர்ந்து சிவப்பெருமானிடம் முறையிட்டார். சிவப்பெருமான் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவப்பெருமானின் கட்டளையை  சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார்.  சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாறியது.   நீளாவதியின் அழகில் மயங்கி அவளை மணக்கிறார். அதன் விளைவாய்  சித்திரகுப்தன் பிறந்தார், சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. கர்ணன் கவசகுண்டலங்களோடு பிறந்த மாதிரி ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு  நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார்.  பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்லுது.

அனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள்.  அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென  எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார்.  சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்திரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று. விரதமிருந்து  சித்திரகுப்தனை வழிப்படுவோரின் பாவச்சுமை ஏறாதென சிவப்பெருமான் வாக்களித்தார். சித்திரக்குப்தனின் திருமணநாளும் சித்ரா பௌர்ணமியே.


காமதேனு மகனாய்....
அகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவப்பெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்திரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்திரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துறதில்லையாம்.


சித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் முன் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும்.  இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும\ம், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின்  செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.

இவரை, பக்கம் பக்கமாய்  மந்திரங்கள் கொண்டு ஜெபிக்க வேண்டாம். செய்த தவறுகளை எண்ணி மலையளவு செய்த பாவத்தினை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எண்ணி எம்மை காப்பாற்றுங்கள் என வேண்டினாலே போதும். இவர்க்கு பானகம் பிடித்த நைவேத்தியம்.   இத்தினத்தில், எண்ணெய் தேய்த்து குளித்தலும் நல்லது. இதுவரை செய்த பாவங்களை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று இதற்கு பொருள்.   இத்தினத்தில் நீர்தானம், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் தானம் செய்வது சிறந்தது.  கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் இருக்கு.  காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இனி சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளை பார்க்கலாம்.

சித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் சொக்கநாதரை வழிப்பட்டு இழந்த இந்திரலோகத்தை பெற்றான்.

மதுரையில் மிகவும் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் இந்நாளில்தான்...


சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடக்கும்.  மகாபாரத போருக்கு முன்பாக களப்பலியிட ஆள் தேடியபோது  அர்ச்சுனனுக்கும், நாகலோக கன்னிகையான உலுப்பிக்கும் நடந்த திருமணத்தின் விளைவாய் பிறந்த அரவான் முன்வந்தான்.   ஆனால், தனக்கு திருமணம் ஆகி பெண்சுகம் அனுபவிக்க வேண்டுமென அரவான் கோரிக்கை வைக்க, ஒரு நாளைக்கு எந்த பெண்ணும் அரவாணின் மனைவியாக முன்வராததால் க்ருஷ்ணரே பெண்ணாய் மாறி அரவானை மணந்து ஒருநாள் மனைவியாய் வாழ்ந்து மறுநாள் விதவையானார். அந்நிகழ்ச்சியின் நினைவால்தான் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் கூடி பூசாரி கையால் தாலி கட்டி மறுநாள் சித்ரா பௌர்ணமியன்று தாலி அறுக்கின்றனர்.


ஜோதிப்பிழம்பான திருவண்ணாமலையில் பௌர்ணமியன்று கிரிவலம் வருவது அறிந்த ஒன்றே.  ஆனால், இந்த சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள்லாம் அரூபமாய் கிரிவலம் வருகிறார்கள் என்பது ஐதீகம் . அதேப்போல அந்த வருடத்தில் தவறவிட்ட கிரிவலத்தின் பலனை இந்த நாளில் கிரிவலம் வருவதால் பெறலாம்.


கன்னியாக்குமரியில் சூரியன் மறைவதை தினந்தோறும் காணலாம். ஆனால், சூரியன் மறையும்போது சந்திரன் முழுநிலவாக, மறையும் சூரியனோடு சேர்த்து இன்று காணலாம்.... இதைக்காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்.




குற்றாலத்தில் செண்பகாதேவிக்கு இத்தினத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்வித்தால் சந்தன வாசனையோடு மழைப்பெய்யுமென்பது ஐதீகம்.

சித்தர்கள் பலரும் வசிக்கும் திருஞானச்சம்பந்தரால் பாடல்பெற்ற கஞ்சன் மலையில் இன்று அபிஷேக ஆராதனைகள் நடைப்பெறும். சித்தர்கள் மலைக்கோவிலில் இருக்கும் நீரூற்றிலும், மலைமேலுள்ள சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கும் தீர்த்தத்தலிலும் நீராடி கஞ்சன்மலையை நட்சத்திரங்களா வலம் வருவதாய் ஐதீகம்.  இரவு 11 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை நட்சத்திர ஒளி மலையை சுற்றி நகர்ந்து மறைவதை தரிசிக்கலாம்.

ஆடி அமாவசையன்று விரதமிருந்து பிதுர் தர்ப்பணம் செய்வதுப்போல தாய்க்காக சித்ரா பௌர்ணமியன்று விரதம் மேற்கொள்வர்.

பாம்பன் சுவாமிகள் ராமேசுவரம் அருகில் உள்ள பிரப்பன்வலசை என்னும் ஊரில் மண்ணில் சவக்குழி போல வெட்டி   அதில் புதைந்து முருகனை நினைத்து தவமிருந்தார். ஏழாவது நாள் முருகன் காட்சியளித்து ஆசீர்வதித்தார், அதுமட்டுமில்லாமல் முப்பத்தி ஆறாவது நாள் மீண்டும் அவர்முன் தோன்றி குழியை விட்டு எழுந்து வா என பணித்தார். அவ்வாறு முருகன் பணித்த நாள் இந்நாளே.


பத்தினி தெய்வமான கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த கோவில் கேரள தமிழக எல்லையில் வருடத்திற்கொருமுறை சித்ரா பௌர்ணமியன்று மட்டும் பக்தர்கள் செண்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து அம்மன் கோவில்களிலும் சுமங்கலி பெண்கள்  சித்ரா பௌர்ணமியன்று பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்விப்பர்.


அனைத்து மாத பௌர்ணமியிலும் நிலவு முழுமையாய்  இருந்தாலும் ஆங்காங்கு நிலவில் சிறு களங்கங்கள்  தெரியும். ஆனா,  சித்ரா பௌர்ணமியன்று  நிலவு தனது கிரணங்களை  பூரணமாய் பொழிந்து துளிகூட களங்கமின்றி காட்சி அளிக்கும்.  நிலவைப்போல களங்கமில்லாத மனமும், வாழ்வும் வேண்டி இந்நாளில் இறைவனை அடிப்பணிவோம்.

நன்றியுடன், ..
ராஜி. 

22 comments:

  1. எத்தனை புராணக்கதைகள் நம்மிடம் இருக்கிறது.

    பாம்பன் சுவாமிகள் பிறப்பன்வினை அல்ல! சகோ "பிரப்பன்வலசை"

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சு. எழுத்துப்பிழை

      Delete
    2. சரிப்பண்ணிட்டேன்ண்ணே

      Delete
  2. நெகிழ்வான பதிவு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. எத்தனை கதைகள்....

    தலைநகரில் எங்கள் வீட்டின் அருகில் சித்திரகுப்தன் கோவில் ஒன்று உண்டு.

    ReplyDelete
    Replies
    1. இங்க காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தன் கோவில் இருக்குண்ணே. ஆனா, நான் போனதில்ல.

      Delete
  4. இன்னுமெத்தனை நாளைக்குத்தான் கதைகளை நம்பிக்கொண்டு இருக்கப்போகிறோமோ

    ReplyDelete
    Replies
    1. ஆனா, இந்த கதைகளைலாம் கேட்க கேட்க கடவுள் பக்தி வரலைப்பா.

      Delete
  5. சித்திரா பெளர்ணமி தின வரலாறு/கதை........மகிழ்ச்சி.அழகிய படங்களுடன் சிறப்பான நாளில் சிறப்பான பதிவு, நன்றி தங்கச்சி......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. சில தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ப் ஒற்றெழுத்து சேர்த்துடறீங்க... இப்போ சிவப்பெருமான், வழிப்படுவோர்.... முன்னால் ராஜக்கோபுரம்!

    மற்றபடி பிரமிக்கவைக்கும் விவரங்களின் சேர்க்கை வழக்கம் போல... சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நான் படிச்ச அஞ்சாப்புக்கு இப்படிதான் எழுத வரும்...


      இனி ஒற்றுப்பிழையில் கவனமா இருக்கேன் சகோ

      Delete
    2. அஞ்சாப்பாஆஆஆஆ ?
      என்னைவிட கூடுதலே வாழ்த்துகள் சகோ.

      Delete
    3. நன்றிண்ணே! நம்ம குடும்பத்துக்கே படிப்பு வாசனை ஒத்துக்காதே!

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. சித்ரா பௌர்ணமி அன்று சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறுகின்றன. பிற பவுர்ணமி நாட்களில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சந்திரன் தெளிவாய் தெரியும் காரணத்தை எடுத்து சொன்னமைக்கு நன்றி சகோ

      Delete
  10. நிறைய கதைகள் தகவல்கள் எல்லாம் எப்படியோ சேகரித்து போடுறீங்க....சுவையான தகவல்..

    கீதா: துளசியின் கருத்துடன்....சித்ரா பௌர்ணமி என்றால் நிலாச்சாப்பாடு போடுவீங்கனு பார்த்தா...காணலை...நேத்து பார்த்துட்டு சாப்பாடு போடலைனதும் ஓடிப் போயிட்டேன்..ஹிஹிஹிஹி...(சும்மா ஜோக்குத்தேன்)

    ReplyDelete
    Replies
    1. ஆரணிக்கு வாங்க. போதும் போதும்ன்னு சொன்னாலும் விடாம சாப்பாடு போடுறேன்.

      அதுமட்டுமில்லாம, எங்க ஊர் பக்கம் நிலாச்சோறு சாப்பாடும் பழக்கமில்லைங்க கீதாக்கா.

      வீட்டுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் திங்கள்தோறும் வார வழிபாடு நடக்கும். அங்க செவ்வாய் முதல் திங்கள் கிழமை வரை வரும் ஆன்மீக நாட்களை எடுத்து சொல்லி அதுக்கான காரண காரியத்தை சொல்வாங்க. அதுமில்லாம பேப்பர்ல வர்றதையும் சேர்த்துப்பேன். கூகுள்ல படமெடுத்துப்பேன். அம்புட்டுதான் பதிவு ரெடி. கோவிலுக்கு போகமுடியாத சூழ்நிலைன்னாலும் கோவில்ல மைக்செட்டுல ஒலிப்பரப்பாகுறது வீட்டுக்கு கேட்கும். இதான் பதிவின் ரகசியம் துளசியண்ணா

      Delete
  11. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

    ReplyDelete