Wednesday, April 04, 2018

ஆலப்புழை படகுவீடு ஒரு பயண அனுபவம் - சுற்றுலா

கடவுளின் தேசமாம் கேரளாவில் பார்த்து, உணர்ந்து, ரசிக்க கோவில்கள்,  அழகான பெண்கள், வீடுகள், கடற்கரை, நீர்வீழ்ச்சி, புட்டு கொண்டைக்கடலை, அத்தப்பூ கோலம், கதகளி, மோகினியாட்டம், வர்மக்கலை, ஆயுர்வேத மசாஜ், மீன் உணவுகள்.... இப்படி பல இருக்கு. அழகை ரசிக்க, அமைதியை விரும்புறவங்க, எல்லா டென்ஷனையும் மறந்து ரிலாக்சா இருக்க நினைக்குறவுங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் கேரளாதான். ஆலப்புழா, மூணாறு,  தேக்கடி, துள்ளல்...ன்னு கேரளாவில் ரசிக்க எத்தனைய  இருந்தாலும்,  அதுல முக்கியமானது படகுவீடு.  இந்த படகுவீடு குடும்பத்தோடு போறவங்களுக்கும், நண்பர்களோடு போறவங்களுக்கும் முக்கியமா   ஹனிமூன் போறவங்களுக்குன்னு பெஸ்ட் சாய்ஸ் கேரளாவின் படகுவீடு.

 கேரளாவில் இருக்கிற ஆலப்புழாவிற்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மார்க்கமாகவும், கோயம்பேடுல இருந்து தரை வழியாகவும் போகலாம். இல்ல, ஆகாயமார்க்கமா போகனும்னா கொச்சின் விமானநிலையத்தில் இருந்தும் போகலாம்.  ஆலப்புழாவில் இருந்து 82 கி.மீ தொலைவில் கொச்சின்  இருக்கு. அதில்லாம, இன்னொரு வழி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து 160கி.மீ தூரத்துல ஆலப்புழா  இருக்கு.  ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு தான் ஆலப்புழா நகருக்குள் வரணும். பஸ்ல வரவங்களுக்கு ரொம்ப பக்கம் இந்த போட்(Boat) பாயிண்ட். பொதுவா ஒரு ஊருக்கு  பெயர் வைக்க அங்கிருக்கிற பழக்கவழக்கம், கலாச்சாரம், நிலஅமைப்பு, எதாவது வரலாற்று நிகழ்வு இதுமாதிரி எதையாவது அடிப்படையா கொண்டுதான்  அழைக்கப்படும். உதாரணத்துக்கு சென்னையில  எடுத்துகிட்டீங்கன்னா நிறைய இடங்கள் பாக்கம், பாக்கம்ன்னு  முடியும்.  உதாரணமா கோடம்பாக்கம், பட்டினப்பாக்கம், ஊரப்பாக்கம், கேளம்ப்பாக்கம் இப்படி நிறைய சொல்லலாம். பாக்கம்ன்னு சொன்னா  வியாபார ஸ்தலம் இருக்கும் இல்லன்னா இருந்திருக்கும். அதேப்போல பட்டினம்ன்னு சொன்னா  அங்க துறைமுகம்  அல்லது துறைமுக வியாபாரம் நடந்து இருக்கும். அதேப்போலதான் இந்த இடத்திற்கும் புழைன்னு முடியுற மாதிரி வந்ததும்  இதுமாதிரியாண காரணம்தான் .

மலையாளத்தில் புழைன்னா   ஆறுன்னு பொருள்.  தமிழில் ’ஐ’ன்ற உச்சரிப்பில் முடியும் வார்த்தைகளை மலையாளத்தில் ’ஆ’ன்னு முடியுற மாதிரிதான் உச்சரிப்பாங்க. உதாரணத்துக்கு, நம்ம ஊரின்  கதை, அங்க கதா,  நம்ம ஊர் கலை அங்க கலான்னு உச்சரிப்பாங்க. அதேமாதிரி, மழை-மழா, புழை-புழான்னுதான் உச்சரிப்பாங்க. அதேப்போல ஆறுகள் நிறைந்த கேரளாவின் மற்ற இடங்களான திருக்குன்னபுழா, மூவற்றின்புழா அழைக்கப்படுது.  தமிழுக்கும்  மலையாளத்துக்கும் அதிக வித்தியாசம்லாம்  இல்லை. தமிழில் கூட புழைக்கடை என்பது ஆற்றின் கடைப்பகுதி என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. ஆனா, அதை, இப்ப வீட்டின் பின்பகுதியை குறிக்கும் சொல்லாக்கிட்டாங்க. சரி, இப்ப மொழி ஆராய்ச்சிக்கு போகவேணாம்.  ஏன்னா இந்த ஆலப்புழை  நகரின் பல பிரதான இடங்கள் தரைவழிகளைவிட, நீர்வழிகளாலே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாகவே கேரளாவின் சாலை வழி இல்லாது பண்டைய காலகட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் நகரத்தை அடைய கெட்டுவள்ளம் என்று இந்த படகுகளின் மூலமாத்தான் பிரயாணம் செய்திருக்கிறாங்க. காலப்போக்கில் சுற்றுலா வர்றவங்களை இந்த படகுகள் கவரவே அதையே படகுவீடுகளாக மாற்றி முக்கியமான சுற்றுலாதலமாகவும் பொழுதுபோக்கும் இடமாகவும் மாத்திட்டாய்ங்க. 
படகுவீடு,   ஆலப்புழா பஸ் நிலையத்துக்கு அருகிலும்,  அதன் சுற்றுவட்டாரங்களிலும் நிறைய போட்ஹவுஸ் புக்கிங் ஆபீஸ் இருக்கு. முதலிலேயே ஒரு இடத்தை புக் பண்ணிடாதீங்க. இருக்கிற எல்லா அலுவலகத்திற்கும் போய்.   பார்த்து விசாரிச்சுட்டு, யார் குறைவா, அதேசமயம் அதிக வசதிகளை, யார் தர்றாங்களோ அவங்களை புக் பண்ணுங்க. முடிஞ்சளவுக்கு பினிஷிங் பாயிண்ட்ன்னு சொல்லுற போட் நிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள அலுவலகங்களை தேர்ந்தெடுங்க. அதேமாதிரி அங்க போய் நின்னால் படகுவீடு கிடைக்காது. இது ஆன்லைன் காலம். அதனால ஒருமாசம், ரெண்டு மாசத்துக்கு முந்தியே புக் பண்ணி இருப்பாங்க. அதேமாதிரி, அங்க போய் நின்னுக்கிட்டு, பட்டிக்காட்டான் முட்டாய்கடையை பார்த்தமாதிரி ஈஈன்னு நின்னா, நம்ம மொகரைய பார்த்தே, இவங்க வெளியூர்க்காரங்கன்னு ஆட்டோக்காரங்க, புரோக்கர்களும் அவங்களுக்கு கமிஷன் கொடுக்கிற போட்ஹவுஸ் ஏஜெண்ட்ஸ்கிட்ட கூட்டிட்டு போய்டுவாங்க. சிலசமயம் அது நம்முடைய பட்ஜெட்டையும்  தாண்டி செல்வதோடு, நமக்கு அந்த பயணம் திருப்திகரமா இல்லாம போறதுக்கும் வாய்ப்புண்டு. அதனால அதை தவிர்த்துடுங்க. இனி,  எப்படி ஒரு போட் தேர்ந்தெடுப்பது பற்றி பார்க்கலாம் .
முதலில் எத்தனை பேர் பிரயாணம் செய்கிறோம்ங்கிறத முடிவுபண்ணணும்.  இரண்டு பெட்ரூம் முதல் ஆறு பெட்ரூம் வரை கொண்ட படகுகள் கிடைக்கும். அதை நம்ம வசதிக்கேற்ப,  அவை  12,000ல இருந்து 25,000 வரை கிடைக்கும். ஒரு நாள் என்பது காலை 11 மணியில் இருந்து அடுத்தநாள் 9 மணிவரை. இனி பயண அனுபவத்தை பார்க்கலாம். நாம போட் அவுஸ் போனதும்,  அங்கே ஆயிரக்கணக்கில் படகுகள் காலை சவாரிக்காக வரிசையாக சுற்றுலா பயணிகளுக்காக காத்து இருக்கும்.  நாம செல்லும் வாகனங்களை பார்க்கிங் செய்ய, கட்டண பார்க்கிங் நிறைய இருக்கு. அதுல பார்க்கிங் செய்துக்கலாம். படகுவீடு செல்லும் வழியில் நிறைய உள்ளூர் படகு சவாரிகள் இருக்கு. அவற்றில் இரண்டு மணிநேரம் வரை சவாரி செய்ய  முதல் அரைநாள் என சவாரிக்கு 800 முதல் 1500 வரை வசூலிக்கின்றனர் . அவற்றில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கமட்டுமே முடியும். ஆலப்புழை கால்வாய்களில் இதுப்போன்று நூற்றுக்கணக்கில் இருக்கு. நம் உள்ளூர் பிரைவேட் பஸ்களைபோல் பயணிகளை கூவிக்கூவி அழைக்கின்றனர். 
 ஆலப்புழாவில் படகுவீடு மட்டும் ஸ்பெஷல் இல்ல. சுத்தமான கள்ளுகள் கிடைக்கக்கூடிய கள்ளுக்கடைகள் இங்க இருக்கு. நல்ல மத்தி மீன்பொறிச்சு தர்றாங்க.  குடிமகன்கள்களுக்கு மட்டும் இந்த இடம் இல்ல! இங்கே பக்கத்தில சுற்றுலா தகவல்ன்னு ஒன்னு இருக்கு. அங்க விசாரிச்சா, நிறைய புண்ணிய ஷேத்ரங்கள் இருக்கு.  அதுமட்டுமல்ல, நாகராஜாவுக்கென தனிக்கோயில் கொண்டு அமைந்துள்ள ஆலயங்கள் இந்தியாவில் நான்கு இல்ல ஐந்துதான் இருக்கும். அதில் நாகர்கோயில் நாகராஜா க்ஷேத்ரம் மாதிரி, இங்க நாகராஜாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மன்னாரசாலா ஸ்ரீநாகராஜா கோயில் இங்கேதான் இருக்கு. அதேப்போல அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணா கோயில்,  முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில், செட்டிகுளங்கரா பகவதி கோயில்..., இப்படி ஏராளமான கோவில்களும் இங்கே இருக்கு 

ஏற்கனவே பிரயாணம் செய்தவர்களை இறக்கி விட்டுவிட்டு அதை சுத்தம் செய்து, புதிய ஊழியர்களை வைத்து, ஃப்ரெஷ்சாகிட்டு புதுப்பயணிகளை சுமக்க புக் செய்திருக்கும் நேரத்துக்கு கரைக்கு வரும் இந்த படகுவீடு.  உள்ள நுழைஞ்சு பார்த்தால், அசந்துதான் நிக்கனும். படகுவீட்டில் பயணிப்பது, தங்குவது, உறங்குவது என்பது ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்கவேண்டிய விஷயம். படுக்கை அறைகள் ஸ்டார் ஹோட்டல்களை மிஞ்சுமளவு இருக்கும். பெரிய ஹால், உணவு உண்ணும் இடம், காபி குடித்து இயற்கையை ரசிக்க உட்காரும் வராண்டா போன்ற முற்பகுதி ஆஹா என்ன அழகு!! எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரதேசம். ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாம உள்ள நுழைஞ்சதும்  வெல்கம் ட்ரிங்க்ன்னு  எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்து இன்முகமாக வரவேற்குறாங்க.  . நமக்கு தேவையான உணவுகளை இங்கனயே தயார் செய்யுறாங்க . எதுவும் பாக்கெட்ல அடைப்பட்ட மசாலா கிடையாது, எல்லாமே அவங்களே தயாரிச்சு கையால அரைச்ச மசாலாக்கள்தான் பயன்படுத்துறாங்க. மீன்கள்கூட நம்ம கண் எதிரே பிடிச்சு சுத்தம் பண்ணி சமைச்சு தர்றாங்க. 
வழி எங்கும் பச்சை பசேலென வயல்வெளிகளும், நதிக்கரையில் அன்றாட வாழ்க்கை நடத்தும் மக்களும், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளையும் பொழுதுபோக்கும் ஆடவர் கூட்டங்களையும், வீட்டுத்துணிமணி, பாத்திர பண்டங்களை அலசும் பெண்களையும், தண்ணீரில் தேங்காய், மற்ற பொருட்களை எடுத்து செல்லும் படகுகளையும் பார்த்து கொண்டே இருக்குறது மனசுக்கு மகிழ்ச்சியை கொடுக்க்கும். நாம் லாங்க் ட்ராவல் பண்ணும்போது, கமிஷன் கொடுக்கும் மோட்டல், காஃபிக்கடையில் பஸ்களை நிறுத்துறமாதிரி, படகுவீட்டையும் இளநீர், சர்பத், ஸ்னாக்ஸ் கடையில் நிறுத்துறாங்க. தேவைப்படுறவங்க வாங்கிக்கலாம் மீன்,இறால், நண்டுன்னும் விற்பாங்க. நமக்கு தேவைன்னா வாங்கிக்கலாம்.
இப்படி இயற்கை அழகை ரசிக்குறது சிலருக்கு ஆர்ட் ஃபிலிம் பார்க்குற மாதிரி போரடிக்கும். அதுமாதிரி ஆளுங்களுக்கு, நல்ல ஆடியோ சிஸ்டமும், படம் பார்க்க விரும்புறவங்களுக்கு பெரிய LED ஸ்க்ரீன் டீவியும் வச்சு இருக்கிறாங்க. மதிய சாப்பாடு சாம்பார், 2 வகையான கூட்டு, அப்பளம், மோர் மீன்குழம்பு, மீன் பொறிச்சது, வெஜிடபிள் சாலட், தயிர் என கேரள மணம் வீசும். முழுக்க தேங்காய் எண்ணெயில் செஞ்ச உணவுகள் நம்ம நாவுக்கு ருசியின் புது பரிமாணத்தை காட்டும். 

இப்படி படகுவீடு போகும் பாதையில் ஆயுர்வேத பாடி மசாஜ் சென்டர் இருக்கு. விதவிதமான மசாஜ்கள் இங்க இருக்கு. தேவைப்படுறவங்க செஞ்சுக்கலாம். மாலைநேரத்தில் சூடா பஜ்ஜி, வடையோடு காஃபி, டீன்னு கொடுப்பாங்க. எப்பயுமே தண்ணில இருந்தா எப்படி?! அதனால, மாலை வேளைகளில் காயல் பக்கமா இருக்கும் நிலப்பகுதியில் படகை நிறுத்துவாங்க. காலாற நடந்து ஊர்  அழகை ரசிக்கலாம். படகுகளில் பெரிய பெரிய ஜெனரேட்டர்கள் இருந்தாலும் போட்டிலிருந்து நீண்ட உயரழுத்த கேபிள்கள் மூலம் தரைகளிருக்கும் வீடுகளில் இருந்து மின்னிணைப்பு கொடுத்து ,படகுவீட்டின் எல்லா அறைகளிலும் ஏசிக்களை இயக்கி குளுகுளு இயக்குவாங்க. என்னதான் படகுவீடு கதவுகள் ஜன்னல்கள் கண்ணாடியினால் ஆனாலும் மாலை வேளைகளில் கதவுகளை அடைச்சுடுறது நல்லது . இல்லன்னா கொசு நம்மை தூக்கிட்டு போய்டும். 

இரவு உணவுக்காக,  சப்பாத்தி ,இட்லி ,சட்னி ,குருமா ,டீ ,காஃபி என அவங்கவங்களுக்கு தேவைப்படும் உணவுகளை செஞ்சு தருவாங்க.  குடும்பத்தோடு போறவங்களுக்கு தனி உணர்வையும், இளஞ்சோடிகளுக்கு தனி உணர்வையும், இளைஞர்களுக்கு தனி உணர்வினையும் இந்த படகுவீடு தரும். எந்த கவலையுமில்லாத, இளைஞர்கள் போனால் பாட்டு, குடி, கும்மாளம்ன்னு ஆட்டம் போடலாம். கால்கட்டு, பிள்ளைகள், குடும்பம்ன்னு ஆனால் இதுலாம் அனுபவிக்கமுடியாது. 
மொட்டைமாடில, ஆத்தங்கரையில, குளத்தங்கரையில் , வண்டியில், பயணங்களில் சூரியோதத்தை பார்த்திருப்போம். இல்லன்னா, ஆனா இப்படி ஒரு இடத்தில் சூரியோதயத்தை பார்க்க புது அனுபவம் கிடைக்கும். அப்படியே சூரிய நமஸ்காரமும் பண்ணிக்கலாம். இல்ல  என்னைப்பொறுத்தவரை சாமி கோவில்லதான் இருக்குன்னு நினைச்சுக்குறவங்களுக்கு, போற வழில இருக்கும் கோவில்களின் அருகாமையில் படகை நிறுத்தி அதுக்கும் ஏற்பாடு செய்யுறாங்க.
காலை உணவை அந்த ஊர் ஸ்பெஷல் புட்டு, கொண்டைக்கடலை கறியுடன் ஆரம்பிக்குறாங்க. மணி ஒன்பதை நெருங்க ஆரம்பித்ததும், நாம இறங்க வேண்டிய அவசியத்தை நமக்கு நினைவுப்படுத்துறாங்க. காயல் நெருங்க நெருங்க எத்தனை எத்தனை படகுகள்?! இந்த மாதிரியான படகுவீடுகள், நம்ம ஊர் டவுன் பஸ்கள் போல பள்ளி குழந்தைகள், ஆஃபீசுக்கு போறவங்களை, கோவில், குளம், மார்க்கெட்டுக்குன்னு போறவங்களை சுமந்து செல்லும் படகுகள், மீன்பிடி படகுகள் என தண்ணிலகூட டிராஃபிக் பிரச்சனை வந்திருமோன்னு பயப்படும் அளவுக்கு  எங்க பார்த்தாலும் இருக்கும் படகுகளை பார்த்து வியந்துக்கிட்டே பினிஷிங்க் பாயிண்டுக்கு நெருங்கி படகுவீட்டின் பயணத்தை முடிச்சுக்குறோம். இங்கே கவனிக்கப்படவேண்டிய அம்சம் என்னன்னா கோடை விடுமுறை, மற்றும் நேரு ட்ராபி நடக்கும் நேரம் எல்லாம் படகு வீட்டுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் .
ஏன்னா அப்ப கட்டணம் இரண்டு மடங்காக இருக்கும். சரி, அது என்ன நேரு ட்ராபின்னு பார்த்தா, நேரு பிரதமாராயிருந்த காலத்தில் ஒருமுறை கோட்டயத்திற்கு வருகை தந்திருக்கார். அப்ப அவரை 50 கி.மீ தொலைவில் இருந்த ஆலப்புழாவில் படகுவீடு ஒன்றிற்கு அழைத்து சென்றனர். அந்த காயலின் இருபுறங்களிலும்  நீண்டு வளர்ந்த தென்னைமரம், அதனை அடுத்து பச்சைப்பசேலென வயல்வெளிகள், தண்ணீர் சூழ்ந்த அழகிய கிராமங்கள் என அவர் அந்த இயற்கை அழகில் மனதை பறிகொடுத்தார். அதுவும் அவரை மகிழ்விப்பதர்க்காக வல்லம் கழின்ற கேரளாவின் பாரம்பரிய படகு சவாரியும் நடத்தப்பட்டது. 100 அடி நீளத்தில் இருக்கும் அந்தப்  படகுகளை வலிக்கும் அழகு, நேருவை மிகவும் கவர்ந்ததாம்.  டெல்லி திரும்பிய நேருவுக்கு, ஆலப்புழாவின்  இயற்கை அழகும் படகுப்போட்டியும் மனதுக்குள்ளேயே நின்றதாம். எல்லோரிடமும் சொல்லி ஆனந்தப்பட்டாராம் .
உடனே தங்கத்திலான ஒரு கோப்பையை வடிவமைத்து, கூடவே அவரது விருப்பத்தையும் எழுதி அனுப்பினாராம். உங்கள் மண்ணின் இயற்கை அழகில் என் மனம் குளிர்ந்துவிட்டது. ஆண்டுக்கு ஒருமுறை அங்கே படகு போட்டி நடத்துங்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு எனது சிறிய அன்பளிப்பாக இந்த தங்க கோப்பையை பரிசாக வழங்குங்கள் என்று எழுதி இருந்தார். அதை பார்த்து சந்தோஷப்பட்ட ஆலப்புழாவாசிகள் முதன்முதலில் 1952 ம் ஆண்டு நேரு டிராஃபி பாம்பு படகு போட்டி நடத்தினர். அன்றிலிருந்து, ஆண்டுதோறும்  ஆகஸ்ட் இரண்டாவது சனிக்கிழமை  இந்த போட்டியினை நடத்துகின்றனர் அந்த சமயத்தில் பலரும் தரையில் இருந்து பார்ப்பதை விட, ஒரு படகு வீட்டினை புக் செய்து அதிலிருந்து போட்டியை கண்டுகளிப்பார்கள்.  குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் இப்படி செய்வதுண்டு. அதனால, இந்தமாதிரி நாட்களில் சுற்றுலாவிற்கு மட்டும் செல்பவர்கள் ஆலப்புழை படகுவீட்டிற்கு செல்வதை தவிர்க்கவேண்டும்.
படகுவீட்டில் பயணிப்பது, தங்குவது, உறங்குவது  என்பது ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்கவேண்டிய விஷயம்.  அரபிக்கடல் மீன் டேஸ்ட் சற்று தூக்கலாகவே இருக்கும்.  மீனை ஃப்ரெஷ்ஷாகப் பிடித்து நாம் கேட்டபடி பொறித்தும்  கொடுக்கிறார்கள்.இல்லை நாமும் வாங்கி கொடுக்கலாம். கேரளா உண்மையில் `உண்மையிலேயே கடவுளின் தேசம்தான்' அவ்வுளவு அழகு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது இந்த தண்ணீர்தேசம் 
இத்தாலியின் வெனிஸ் நகரத்தைதான் மிதக்கும் நகரம் என்பார்கள். அங்கே வீட்டுக்கு வீடு படகுகள் வைத்திருப்பார்கள். அதேப்போல இங்கு ஆலப்புழையில் வீட்டுக்கு வீடு படகுகள் வைத்திருக்கிறார்கள். சிறிய நாட்டுப்படகுகள் முதல் பயணிகள் மோட்டார் படகுகள், ஆடம்பரப் படகுகள் என செம டிராஃபிக்தான். இந்த அழகைக் காண்பதற்கே கோடிக்கண்கள் வேண்டும்.  பெரும்பாலான கிராமங்களுக்கு, படகுதான் ஒரே போக்குவரத்து ஆதாரம்.  பள்ளிக்குழந்தைகள் முதல் வியாபாரம் செய்யும் படகுகள் வரை இருக்கின்றன. நாம சின்னவயசில ஸ்கூல் பக்கம் சைக்கிள்ல வச்சு விக்கிற குச்சி ஐஸ் பெட்டி,இங்கே படகுல வந்து விக்கிறாங்க. காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் கடைகள், வங்கி, தபால் சேவைகள், ஏ.டி.எம் சேவை தரும் படகுகள்கூட இங்க இருக்கு .
ஆலப்புழாவிலிருந்து  குமாரகம் ஏரிக்கு கூட  படகு வீடுகள் இயக்கப்படுகின்றன.  ஆலப்புழாவை - குமாரகம் ஏரியும்தான் காயலின் இரு முனைகள். ஆலப்புழாவிலிருந்து குட்ட நாடு, பம்பா நதி, சம்பக்குளம், வேம்ப நாடு ஏரி வழியாக குமாரகம் செல்லலாம் . மதியம் 12 மணிக்கு ஆலப்புழாவில் படகில் ஏறினால், அடுத்த நாள் காலை  9 மணிக்கு மீண்டும் ஆலப்புழா  திரும்பிவிடலாம்.  இரண்டு நாள் பயணம்கொண்ட பயண திட்டமும் உண்டு.  நமக்கு தேவையானதை நாமளே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதேப்போல் பாதுகாப்பும் ரொம்ப நல்லா செய்து கொடுக்குறாங்க. அதனால, குடும்பத்தோடு தாராளமா பயப்படாம போகலாம். ,படகுவீடுகளில் தண்ணியடிச்சு கலாட்டா பண்ணுறவங்களை போலீஸ் ரோந்து படகுகள் கண்காணிச்சிட்டே இருப்பதோடு, அவசியப்படும் நேரத்தில் கண்டிக்கவும் செய்றாங்க. .அதேப்போல் படகு வீட்டில் நம்முடன் கூடவே வரும் பணியாளர்களும் நட்புடனும், நம்முடைய பாதுகாப்பிலும், விருந்து உபசரிப்பிலும்  அதிக அக்கறை எடுத்துகிறாங்க. ஏன்னா கேரளாவின் முக்கிய சுற்றுலாத்துறை வருமானம் இந்த படகு வீடுகளில் இருந்துதான் கிடைப்பதை அவர்கள் உணர்ந்து இருக்காங்க.
நாம பல இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தாலும், ஒருநாள் மட்டும் படகுவீட்டில் தங்கி அந்த அனுபவத்தை ரசித்து பாருங்கள். நம் வாழ்நாளில் அது ஒருமறக்க முடியாத அனுபவமாகவே இருக்கும். மீண்டும் ஒரு சுற்றுலா பகுதியிலிருந்து அடுத்தப்பதில் உங்களை சந்திக்கிறேன் .
நட்புடன் 
ராஜி 

25 comments:

  1. கண்ணிற்கும் மனதிற்கும் குளிர்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. எங்கே பார்த்தாலும் ,தண்ணீர் ,பச்சை பசேலென தென்னை மரங்கள் ,வயல்வெளிகள் ,மக்களின் அன்றாட போக்குவரத்தே பெரும்பாலும் தண்ணீர் வழியாகவே நடக்கிறது ..பார்க்கவே அழகு தான்ண்ணே

      Delete
  2. குமரகத்தில் ஒரு போட் அமர்த்தி சுமார் மூன்று மணி நேரம்பயணித்திருக்கிறோம் போட் ஹவுசில் தங்கியதில்லை நிறைய பார்த்திருக்கிறோம் கேரளா சுற்றுலவுக்குச் சிறந்த இடம்

    ReplyDelete
    Replies
    1. குமாரகம்,படகு சவாரியும் ,மீன் குழம்பும் ,அலாதியானவை ,இன்னமும் அம்மியில் அரைத்த மசாலாவையே குழம்பிற்கு உபயோக படுத்துகிறார்கள் ,குமரகோம் ,எர்ணாகுளம் ,பூவார் இங்கெல்லாம் 3 மணிக்கூர் ,இல்ல 4 மணிக்கூர் சவாரிதான் பெரும்பாலும் ,ஒருமுறை ஆலப்புழை சென்று வாருங்கள் அப்பா

      Delete
  3. அருமையான தகவல்கள்.
    "கடவுளின் தேசமாம்"
    அப்படீனாக்கா... தேவகோட்டை யாருடைய தேசம் ?

    ReplyDelete
    Replies
    1. தேவகோட்டை ,தேவனின் கோட்டை .இது கடவுளின் தேசம் ,கோட்டை என்பது ஒருவட்டத்துக்குள் ஆட்சி செய்வது ,தேசம் என்பது பறந்து விரிந்த நிலப்பரப்பு ..விளக்கம் சரிதானே ..

      Delete
  4. தகவல் பகிர்வு சிறப்பு.... எப்ப போயிட்டு வந்தீங்க?

    ReplyDelete
  5. நடுநடுவில் நீங்கள் சொல்லும் மொழி ஆராய்ச்சி போன்ற மேலதிகத் தகவல்கள் பதிவை சுவாரஸ்யமாக்குகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,உங்களின் கருத்துக்களுக்கு ,அந்த மொழி விஷயத்தை ஏன் மேற்கோழ் காட்டினேன்னா,அங்கிருக்கும் வழிகாட்டி போர்டுகளில் ஆலப்புழை அப்படின்னு இருக்கு ,ஆனா அங்குள்ள உள்ளூர்வாசிகள்,ஆலப்புழா அப்படின்னுதான் உச்சரிக்கிறாங்க ,அதுதான் ஏன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி ...

      Delete
  6. பிரதமர்ல ரா விட்டுப் போயிருக்கு!

    படங்களைப் பார்க்க ஆவலாய்த்தான் இருக்கு. 'போட்' விட இவ்வளவு தண்ணீரை ஆண்டவன் அவங்களுக்குக் கொடுத்திருக்கானே..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..உங்களின் துல்லியமான பார்வைக்கு ...சரி செய்யப்பட்டுவிட்டது .ஆழ்ந்து படித்தமைக்கும் ,இதுபோன்று பிழைகளை சுட்டிக்காட்டினால் ,அடுத்தமுறை இன்னும் கூடுதல் கவனம் எடுத்து எழுத உதவியாக இருக்கும் ...ஒருவேளை பிரதமராக இருந்தால் கால் ஊன்றி நிற்க நேரமில்லை ..சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டம் ,என்பதனை சிம்பாலிக்காக உணர்த்தும் தத்துவமாக கூட இருக்குமோ ....

      Delete
  7. மீனு மீனுங்கறீங்களே... எங்களை மாதிரி வெஜிடேரியன்களுக்கு? இந்தப் படகுச் சவாரி பற்றி ராமலக்ஷ்மி தளம் உள்ளிட்ட இடங்களிலும் படித்த நினைவு இருக்கு! ஒருமுறையாவது செல்லவேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாய் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. அது நம்முடைய சாய்ஸ் ,நீங்கள் தேர்தெடுக்கும் உணவு மெனுவுக்கு ஏற்ப ,உணவுப்பரிமாறுவார்கள் ,முதலிலே நாம் வெஜ் ,என்று சொல்லிவிட்டால் ,முழுக்க ,முழுக்க வெஜ் உணவுதான் பரிமாறுவார்கள் ,அதேபோல் நான் வெஜ் இருந்தாலும் ,வெஜ் பிரியர்களுக்கு என்றும் ,சைவ உணவும் கொடுக்கின்றனர் .

      Delete
    2. ஸ்ரீராம் சீனு கூட இதைப் பற்றி எழுதியிருந்தார். எங்கள் வீட்டுக் குழுவினரும் இதில் செல்லும் ஆசை இருப்பதால் யோசித்து வருகின்றனர் ஆனால் என்னன்னா வெஜிட்டேரியன் உணவு கிடைக்கும் என்றாலும் என்றாலும் என்றாலும்.....அசைவ உணவுதான் பெரும்பாலும் என்று சில சந்தேகங்களைக் கிளப்பியதால் குழுவினரில் சிலர் யோசிக்க அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார்கள். எனக்கும் ஆசை இதில் ஒரு முறையேனும் போகனும் என்று....ஆலப்புழா பல முறை சென்றிருக்கிரேன் கொச்சின் கூட எர்ணாகுளத்திலிருந்து போட் செர்வீஸ்....அதுவும் போயிருக்கிறேன்...கொச்சினில்....உறவினர் இருப்பதால்...

      கீதா

      Delete
    3. கொச்சின் ,எர்ணாகுளம் போட் சர்விஸ் பயணிகள் படகுபோல ,இருந்தாலும் அதுவும் ,கண்கொள்ளாக்காட்சியாகத்தான் இருக்கும் ,எர்ணாகுளம் ஏரியில் டீகடை போன்றவை அருமை ..உங்கள் ஊர் ..உங்கள் ஊர் என்று சொல்கிறீர்களே கீதா ,இப்பொழுது போய் பாருங்கள்,உங்கள் ஊருக்கும் செல்லும் வழியெல்லாம் நாற்கர சாலைபோடுகிறோம் என்று மரங்களையெல்லாம் வெட்டி சாய்த்து விட்டார்கள் .அதேபோல் உங்கள் ஊர் செல்லும் தண்ணீர் டேங்க்,போஸ்ட்டாபீஸ் வழியெல்லாம் உடைத்து புதிய வழித்தடம் வேலைநடக்கிறது,இப்பொழுது நீங்கள் ஊருக்கு சென்றால் ,உங்களுக்கே அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கிறது ...கன்னியாகுமரி செல்லும் வழியில் இருக்கும் மரங்களை கூட மொட்டையடித்து விட்டார்கள் .உண்மையை சொன்னால் கன்னையாகுமரி,தன இயற்கை அழகை இழந்து நிற்கிறது ,ஏற்கனவே ,பார்வதிபுரம் திருவனந்தபுரம் சாலையின் பச்சைபசேலென இருக்கும் நிலை . இந்த சாலையால் தன்னுடைய இயற்கை அழகை இழந்து நிற்கிறது ..என்ன செய்வது எதற்காக இயற்கையை .இயற்கை அழகை அழித்து இந்த வசதிகளை செய்கின்றனரோ தெரியவில்லை கீதா ...

      Delete
  8. வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வர வேண்டும்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அண்ணா ,மழைக்காலம் முடிந்து ஆகஸ்ட் ,தொடக்கங்களில் சென்றால் காணும் இடமெல்லாம் ,பராசக்தி என்று பாரதியார் சொன்னது போல ,திரும்பும் இடமெல்லாம் பச்சை பசேலென கண்ணுக்கும் ,மனதிற்கும் விருந்தாக அமையும் ....

      Delete
  9. ஆலப்புழை. நான் பார்க்க பட்டியலிட்டுள்ள இடங்களில் ஒன்று. முன்கூட்டியே சென்று, பார்த்த நிறைவு இப்போது. நேருவின் ஈடுபாடு தொடர்பாகவும், போட்டி நடப்பது தொடர்பாகவும் முன்னரே படித்துள்ளேன். இருந்தாலும் கூடுதல் செய்திகள். பயணிக்கும் ஆசையை விரைவுபடுத்தியுள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சென்றுவாருங்கள் ...இயற்கை அழகை ரசித்துவாருங்கள் ...

      Delete
  10. எங்கள் ஊராக இருந்தாலும் நான் இன்னும் சென்றதில்லை. இத்தனைக்கும் ஆலப்புழாவில் பஸ் போன்ற போட் செர்வீஸில் கோயில் அது இது என்று சென்றிருக்கிறேன். ஆனால் இது போன்று சென்றதில்லை..வெளியூரில் இருந்திருந்தால் சுற்றுலா என்று சென்றிருப்போமோ என்னவோ...

    கீதா: நல்ல தகவல்கள் ராஜி. இது பற்றி தெரிந்ததுதான் என்றாலும் எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொருவரது அனுபவமும் ஒவ்வொரு மாதிரி என்பதால் வாசிக்கும் சுவாரஸ்யம். நீங்க எப்ப போய் வந்தீங்க? படங்கள் அருமை ராஜி!!

    ReplyDelete
    Replies
    1. நான் போய் வந்தது இருக்கட்டும் ,உங்களுக்கு மிகவும் பக்கம் ஆயிற்றே ,காலையில் புறப்பட்டுச்சென்றால் திருவனந்தபுரத்தை அடைந்து அங்கிருந்து 4 மணிநேர பயணதூரம் ,நீங்கள் சென்று அழகான ஒரு பயணக்கட்டுரையை எங்களுக்காக எழுதுங்கள் ,கூடவே உங்கள் ஊரின் பழைய படங்கள் இருந்தால் ,அன்றும் இன்றும் என ஒரு பதிவு கூட எழுதுங்கள் எல்லாமே மாறிப்போய்விட்டது .வருத்தமாக இருக்கிறது கீதா .

      Delete
  11. அருமை. சிறப்பான பதிவு. உங்கள் எழுத்துக்களின் வழி ஆலப்புழாவைச் சுற்றிப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள். சிறு சிறு பிழைகள் காணப்பட்டாலும் படகுச் சவாரியில் குறை வைக்கவில்லை. சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    #088/2018/SigarambharathiLK
    2018/04/04
    அறம் செழிக்க வாழ்வோம்!
    https://newsigaram.blogspot.com/2018/04/ARAM-SEZHIKKA-VAAZHVOM.html
    பதிவர் : கவின்மொழிவர்மன்
    #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO
    #TAMIL #POEM #இயற்கை #NATURE #LIFE
    #சிகரம்
    #SigarambharathiLK

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி ,இனி பிழைகள் இல்லாமல் கவனமாக பதிவிட முயற்சிக்கிறேன் .உங்கள் வலைத்தளத்திற்கும் சென்றேன் கவிதைகளை ரசித்தேன் ,மிகவும் அருமை ..

      Delete
  12. சென்னை வெய்யில் கொடுமையிலிருந்து சிறிதுநேரம் விடுபட்டு படகுவீட்டில் சவாரி செய்த அனுபவம் கிடைத்தது. nanri

    ReplyDelete