Tuesday, November 20, 2018

கருப்பு தங்கத்தில் ஒரு குழம்பு - கிச்சன் கார்னர்


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்ன்னு நம்ம ஊரில் சொல்வாங்க. நஞ்சையும் முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. மிளகு கொடி வகையை சார்ந்தது. மிளகு, வால்மிளகு, வெள்ளை மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகுன்னு பலவகை உண்டு.  நறுமண பொருட்களில் ஒன்றான மிளகு நாம நினைக்குற மாதிரி விதையோ காயோ அல்ல. அது ஒரு கனி. மிளகு செடியில் காய்க்கும் பழத்தையே உலர வச்சு மிளகாய் விற்பனைக்கு வருது. உணவுக்கு நறுமணத்தோடு சுவையும் கொடுக்குது. கூடவே மருந்தாகவும் பயன்படுது. பைப்பர் நிக்கரம்(Piper nigrum)ன்ற தாவர பெயரிலிருந்தே பெப்பர்ன்ற வார்த்தை உண்டானது.
மிளகின் பூர்வீகம் நம்ம தென்னிந்தியாதான். கேரளாவில் மிளகு அதிகளவில் பயிரிடப்படுது. மிளகுக்கு கோளகம், குறுமிளகுன்னும் வேற பேருண்டு. மலையாளத்தில் குருமிளகு, கன்னடத்தில் மெனசு, தெலுங்கில் மிரியாலு அல்லது மிரியம், கொங்கணியில் மிரியாகொனுன்னு பேரு. மிளகின் காரத்தன்மைக்கு பெப்பரைன்ன்ற வேதிப்பொருள் காரணமாகுது.  மிளகை கருப்பு தங்கம்ன்னும் செல்லமா கூப்பிடுறாங்க. லண்டனில்  டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததால்தான் கிழக்கிந்தியக் கம்பெனியே துவங்கப்பட்டதுன்னா மிளகின் மதிப்பை தெரிஞ்சுக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் மணப்பெண் சீதனமா மிளகை கொண்டு வருதல் செல்வ செழிப்பின் அடையாளமாய் கருதப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளின் மிளகின் அவசியத்தினால்தான் இந்தியாவுக்கு கடல்வழி கண்டுப்பிடிக்கப்பட்டது.  அப்புறம் நடந்த கதைலாம் நமக்குதான் தெரியுமே!
சுமார் நான்கு அடி மட்டுமே வளரும் தன்மையுள்ள இந்த கொடி, தான் படர்ந்திருக்கும்  சூழலை பொருத்து 12 அடிவரை செழித்து வளரும். இது பல்லாண்டு தாவரமாகும்.  மிளகுக்கு முள்முருங்கை மரம்ன்னா கொள்ளை இஷ்டம். இதன் இலைகள் வெற்றிலை மாதிரி இருக்கும்.  பழுக்காத பச்சை மிளகு காயை சுடுதண்ணியில் ஊறவைத்து பின்னர் வெயிலில் உலர்த்தினால் கிடைப்பதே பொதுவா நாம சமையலுக்கு பயன்படுத்தும் கருமிளகு. சுடுதண்ணியினால் மேல் தோல் உரிந்து பூஞ்சைகளின் உதவியோடு கருமை நிறத்துக்கு வந்திடுது.
வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்களே பயன்படுத்தப்படும். இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்பட்டு,  பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்பட்டு,  பின், பழத்தின் சதைப்பகுதியை தேய்த்து நீக்கி, கடைசியாய் மிஞ்சும் விதைகள் உலர்த்தப்படும். இவ்வாறு உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகளே வெண்மிளகாகும். சில இடத்தில் மிளகு பழத்துக்கு பதிலாய்  பச்சை மிளகு காயும் பயன்படுத்தப்படுது.
கருமிளகை போலவே மிளகு காயை பதப்படுத்துவதால் பச்சை மிளகு கிடைக்குது. பச்சை நிறத்தை தக்க வைக்க கந்தக - டை- ஆக்சைடு கலக்கப்படுவது உண்டு. வினிகரில் மிளகு காயை ஊற வைத்தும் பதப்படுத்துவதால் மிளகு பச்சை நிறத்துடன் இருக்கும். இதேமாதிரிதான் மிளகு பழத்தை வினிகரில் ஊற வைத்து பதப்படுத்துவதால் சிவப்பு மிளகு கிடைக்குது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு  போன்ற தாது உப்புகளும், கரோட்டின், தயாமின்,  ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமீன்களும் மிளகில் இருக்கு. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.  காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. மிளகின் காரமும் மணமும் செரிமானத்தை தூண்டுது. 

 இது மழைக்காலம் கூடவே முன்பனிக்காலம்... முன்பனிக்காலம் பொல்லாததுன்னு என் அம்மா சொல்லும். சளி, இருமல்ன்னு படுத்தி எடுக்கும்.  அதுக்கு தகுந்த மாதிரி ஒரு மருந்து குழம்பை  இன்னிக்கு பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்...
பூண்டு
வெங்காயம்
தக்காளி
புளி
உப்பு
எண்ணெய்.
வறுத்து அரைக்க...
மிளகு -  கொஞ்சம் தாரளமா எடுத்துக்கவும்
வெந்தயம்
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
மிளகாய்,
தனியா
சீரகம்
வறுத்து அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை கொஞ்சம் எண்ணெய் ஊத்தி வறுத்து, வதக்கின பூண்டை சேர்த்து ஆற விட்டு மைய அரைச்சுக்கனும்...
பூண்டு உரிச்சு எண்ணெயில் வதக்கி பாதி எடுத்து அரைக்க வேண்டியதில் சேர்த்துக்கனும்..
வெங்காயம் சேர்த்து வதக்கனும்...

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கிக்கனும்...

தக்காளி வெந்ததும் அரைச்ச விழுதை சேர்க்கனும்...

பெருங்காயப்பொடி,   மஞ்சப்பொடி சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து  கொதிக்க விடனும்.


பச்சை வாசனை போனதும் புளிக்கரைசலை சேர்க்கனும்.
உப்பு சேர்த்து நல்லா கொதிச்சு, எண்ணெய் பிரிஞ்சு தனியா வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சு இறக்கிடனும்.
மிளகை தாராளமாய் சேர்த்துக்கலாம். வெந்தயம் கொஞ்சமா சேர்க்கனும். மிளகு காரத்தினால் உடல் சூடாகாம இருக்கவே வெந்தயம் சேர்க்கடுது. சிலர் வீட்டில் உளுத்தம்பருப்பும், கடலை பருப்பும் சேர்ப்பதில்லை. அது குழம்பை கொழகொழன்னு ஆக்கிடும். இன்னும் சிலர் வீட்டில் பருப்புகளுக்கு பதில் பச்சரிசி சேர்ப்பதுண்டு. கத்திரிக்காய் இருந்தால் சேர்க்கலாம். அதும் தனி ருசி கொடுக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சாதத்தில் கொஞ்சம்  நெய் சேர்த்துக்கலாம். மிளகின் காரம், சாப்பிடும்போதே சளியை கரைச்சு  மூக்கில் நீர் வடிய வைக்கும். உடல்வலிக்கும், காய்ச்சல், சளிக்கும் கைக்கண்ட எளிய மருந்து இது.

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. இன்றைய எனது நிலைக்கு இது தான் செய்ய வேண்டும்... வீட்டில் சொல்கிறேன்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டு பார்த்து உடல்நிலை எப்படி இருக்குன்னு சொல்லுங்கண்ணே

      Delete
  2. ஆரோக்கியச் சுவை.

    ReplyDelete
  3. மிளகு பற்றிய அரிய செய்திகள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. துளசிதரன் : மிளகு குறிப்புகள் நன்றாக இருக்கிறது.

    கீதா: குழம்பு சூப்பர்...நான் தக்காளி வெங்காயம் பூண்டு போடாமலும் செய்வதுண்டு சேர்த்தும்...ஆனால் எப்படிச் செய்தாலும் தனியா ஜீரகம் சேர்ப்பதில்லை..வெந்தயம் எப்போதாவதுதான்..பெரும்பாலும் சேர்ப்பதிலை...நாங்கள் வருத்து அரைப்பது உ ப, (க ப சில சமயம்) மிளகு கூட மி வ வறுத்து அரைத்து கறிவேப்பிலை கொஞ்சம் சேர்த்து அரைத்து செய்வதுண்டு....இதில் கறிவேப்பிலை நிறைய சேர்த்தால் கறிவேப்பிலை குழம்பு...இதற்கு தனியா ஜீரகம் சேர்த்தால் எல்லா குழம்பு வகைகளும் ஒரே போல டேஸ்ட் என்பதால் சேர்ப்பதில்லை...ராஜி...

    ReplyDelete