Wednesday, January 16, 2019

பொங்கலோ பொங்கல்! மாட்டு பொங்கல்!!!

எத்தனையோ உயிரினங்கள் இருக்க, உழவுத்தொழிலுக்கு மாடுகள்தான் உதவுது. இதுக்கு புராண காரணங்களா இரண்டினை சொன்னாலும்,  மனிதர்களோடு நெருங்கி பழகும் குணமும், சாதுவான போக்குமே உழவுக்கு மாடுகளை பயன்படுத்த காரணமாகும். விவசாய வேலைகளுக்கு உதவும் பொருட்களை சிறப்பித்து வணங்க ஆயுதபூஜைன்னு ஒருநாள் இருக்கு.  அதுமாதிரிதான் உழவுக்கு உதவும் மாட்டினை சிறப்பிக்கவும், அதற்கு நன்றிகூறவுமே பொங்கல் பண்டிகைக்கு மறுதினம் மாட்டு பொங்கலாய் கொண்டாடப்படுது.
இன்னிக்கு ஸ்டேட்டஸ் சிம்பலா கார், மொபைல், பிளாட்ன்னு சொல்லுற மாதிரி அந்தகாலத்தில் மாடுகள் இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளே ஒருநாட்டின் செல்வத்தின் அடையாளமா இருந்ததாய் குறிப்புகள் சொல்லுது.ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ன்ற பட்டப் பெயர்களெல்லாம் அப்ப புழக்கத்தில் இருந்துச்சு. ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னிருந்து இழுத்து செல்பவை மாடுகளே! இப்பதான் போர்போட்டு தண்ணிய இழுக்குறோம். முன்னலாம் கலயம்மூலமாதான் நீர் இறைச்சது. அந்த கலயம் கட்டிய கயிற்றினை இழுப்பது மாடுகள்தான். அறுவடை முடிஞ்சபின் நெல் தனியா, வைக்கோல் தனியா பிரிக்க மாடுகள்தான் உதவும். அறுவடை செஞ்ச தானியங்கள் வீடு வந்து சேர வண்டி இழுக்க உதவுவதும் மாடுகள்தான். இப்படி, உலகம் உயிர்ப்போடு இருக்க தன்னாலான உதவிகளை மாடுகள் செய்யுது.

காளை மாடுகளின் துணைக்காக பசு மாடுகளும் வீட்டில் வளர்க்கப்பட்டது. பசுக்கள் பால், தயிர், வெண்ணெய்ன்னு நமக்கு வருமானத்துக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும், விவசாயத்துக்கு உதவும் காளைமாடுகளை ஈன்றெடுக்கவும்.\ இப்படி எல்லா விதத்திலும்  நமக்கு மாடுகள் உதவுவதால் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.
Image result for பசுவின் உடலில் முப்பத்து
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாக நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்க. அதனால்  பசுவை வணங்கினால் அனைத்து தேவர்களையும் வணங்குவதற்கு ஈடாகும். மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். மாடுகளை சுத்தம் செய்து, கொம்புக்கு வர்ணம் பூசி பலூன், பட்டு துணி, சலங்கை கட்டி அலங்கரித்து பொங்கலிட்டு படைத்து முதலில் மாடுகளுக்கு ஊட்டிய பின்னரே தாங்கள் உண்ணுவதை வழக்கமாய் வச்சிருக்காங்க. 
ஒருமுறை புருசனும், பொண்டாட்டியும் தோட்டத்தில் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்களாம். அப்ப நகையும், பட்டுமா உடுத்தி இருந்த பொண்டாட்டியை பார்த்து இப்படி நீ சீரும் சிறப்புமா இருக்க என் உழைப்புதான் காரணம்ன்னு சொன்னானாம். அப்படியா?!ன்னு மனைவி கேட்க, அதுக்கு இல்லன்னு சொல்றமாதிரி பக்கத்துல இருந்து மாடு தலை அசைத்ததாம்.வயலில் காளைமாடும், வீட்டில் பசுமாடும் உழைப்பதால்தான் நமக்கு இந்த வாழ்வும் வந்துச்சுன்னு மனைவி பதில் சொல்ல, அதுக்கு ஆமோதிப்பது மாதிரி பசுமாடு தலையசைக்க மோதிபார்க்கலாமா?!ன்னு கணவன் விளையாட்டாய் இறங்க, அப்படி உருவானதே ஜல்லிக்கட்டுன்னு ஒரு கதை சொல்வாங்க.
 தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். கொல்லேறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற பெயர்களும் இவ்வீரவிளையாட்டிற்கு உண்டு. முன்பு, இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள். மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என இதற்கு பல பெயர்கள் உண்டு.
 பொங்கல் பொங்கிவரும்போது கொஞ்சம் நீரினை அள்ளி, அதை வயல்வெளிகளுக்கும், மாடுகளுக்கும் குடிப்பாட்டவும் செய்வர். ‘பொங்கலோ பொங்கல், மாட்டு பொங்கல்.. பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக...‘ ன்னு பாடிக்கிட்டே மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பது வழக்கம். இதுக்கு. தண்ணீர் தெளித்தல் ன்னு பேரு. . மாட்டுப்பொங்கலன்று முறைமாப்பிள்ளைமீது மஞ்சள் நீர் தெளிப்பது தமிழக கிராமங்களில் இன்றும் உண்டு.  ஜல்லிகட்டுக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு தினத்துக்கு பாதாம், முந்திரி, மூலிகை செடிகள்ன்னு உணவே ஸ்பெஷலா இருக்கும். மனிதர்களுக்கு போலவே குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவபரிசோதனைன்னு கவனிப்பு உச்சத்தில் இருக்கும்.  வீரத்தை காட்டவேண்டிய இடத்தில் காட்டனும். பாசத்தை காட்ட வேண்டிய இடத்தில் பாசத்தை காட்டனும். இதுக்கு சரியான உதாரணம் காளைமாடுகளே!  தன்னோட உரிமையாளர்கள்மீது அம்புட்டு பாசமா இருக்கும். முக்கியமா அந்தவீட்டு பொண்ணுங்கமேல காளைகளுக்கு பாசம் அதிகம். பொண்டாட்டி பின்னாடி சுத்தும் புதுமாப்பிள்ளை மாதிரி, ஆக்ரோஷமாய் ஜல்லிக்கட்டு களத்தில் திரியும் காளை, ஜல்லிக்கட்டு மைதானத்தை விட்டு வந்ததும் அந்த வீட்டு பொண்ணுங்களுக்கு பொட்டி பாம்பாய் அடங்கிடும். 

தமிழன் என்றோர் இனமுண்டு. தனியோர் அவருக்கு குணமுண்டுன்னு சொல்லும் சொல்லுக்கேற்ப, நன்றி என்பது தமிழனுக்கே உண்டான தனிக்குணம். மனிதர்களுக்கு மட்டுமல்ல, தனக்கு உதவும் கால்நடைகளுக்கும்  கடன்பட்டவராய் இருப்போம்ன்னு சொல்லாமல் சொல்லுது இந்த விழா. 
அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்...
நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. புராணப் புளுகுகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மிகவும் யதார்த்தமாகவும் பழங்கால மற்றும் இக்கால சாதாரண தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியும் எழுதி இருக்கிறீங்க. உங்களின் மிக சிறந்த ஒருசில பதிவுகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் பண்டிகை மத்த பண்டிகை போல கடவுளை சார்ந்து இல்லாம வாழ்வியல் சார்ந்த பண்டிகை. உழைப்பும், செழிப்பும், நன்றி கூறுதலும், உறவுகளோடு சேர்ந்து மகிழ்ந்திருப்பதுமே இப்பண்டிகையின் நோக்கம். அதனாலாயே இப்பண்டிகையை பிடிக்கும், தீபாவளி பண்டிகைகூட இடைக்காலத்தில் வந்த பண்டிகையே.

      வருகைக்கும் கருத்துக்கும் பதிவினை ரசித்தமைக்கும் நன்றி சகோ

      Delete
  2. நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. படங்கள் அத்துணையும் அழகு
    வாவ்

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நெட்ல சுட்ட படங்களே!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete