Friday, June 12, 2020

ராகு-கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம்- புண்ணியம் தேடி

முன்னலாம் குழந்தை பிறந்ததும் ஜாதகம் எழுத,  திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கவும், திருமணத்திற்கு நாள் குறிக்கவும்தான் ஜோதிடர்களிடம் போவாங்க.  வீட்டில் யாராவது காணாமல் போனால், தீக்கமுடியாத பிரச்சனைகளுக்காகவும் ரொம்ப அரிதா ஜோதிடம் பார்க்க போவாங்க. காது குத்து, சீமந்தம், வீடு கிரகப்பிரவேசம் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்களே பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிப்பாங்க. இப்ப யாருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரிவதில்லை. அதனால் எல்லாத்துக்கும் ஜோதிடர்கிட்ட போறாங்க. அதுமட்டுமில்லாம,   ஜாதகம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுதேன்னுலாம் போறவங்களும் இருக்காங்க. 


அதேப்போல் முன்பு செவ்வாய் தோஷம் மட்டுமே சில திருமணங்களுக்கு தடையாக இருந்தது, இப்ப கல்யாண வயதுடைய பிள்ளைகளின் ஜாதகம் கொண்டு போனாலே ராகு-கேது தோஷம், களத்திர தோஷம்,  கால-சர்ப்ப தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம்ன்னு புதுசு புதுசா  சொல்றாங்க.  இதுக்கு பரிகாரமாய் ஆந்திராவில் இருக்கும் காளஹஸ்திக்கு போக சொல்வாங்க. இப்ப, தமிழ்நாட்டில் இருக்கும்  திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் போக சொல்றாங்க. என் பெரிய பொண்ணுக்கு ராகு-கேது தோஷ பரிகாரத்திற்காக போன வருசம் போய் வந்தோம். இப்ப சின்ன பொண்ணுக்கும் தோஷம் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நம்பலாமா?! வேண்டாமான்னு யோசனையா இருக்கு, அதுமில்லாம மகளின் எதிர்காலம் என்பதால் ரிஸ்க் எடுக்கவும் பயமா இருக்கு..  காளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகாரத்தலமான திருப்பாம்புரம்  பற்றி இந்த வாரமும், திருநாகேஸ்வர் பற்றி அடுத்த வாரம்  பார்ப்போம்.

கிட்டத்தட்ட 600 கிமீ, திருப்பனந்தாள், திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், திருமணஞ்சேரி, ஸ்ரீரங்கம் என அனைத்திலும் பூஜையும், தரிசனமும்.. இத்தனையும் 23 மணி நேரத்தில்..  முதன்முறையாக மகனார் கார் ஓட்ட தூர பயணம்.. மகளின் தோச நிவர்த்தி பூஜை ஒருபக்கம் மகிழ்ச்சி என்றால், மகனாரின் கார் ஓட்டும் திறமை இல்லாத காலரை தூக்கி விட்டுக்க வச்சுது.. சுய புராணம் போதும்.. இனி, தலப்பெருமையை பார்க்கலாம்...

தென்காளஹஸ்தி என புகழப்படும்  ராகு-கேது பரிகார தலமாய் அறியப்படும் இத்தலம் முன்பு சேஷப்புரி என அழைக்கப்பட்டது.  ஆதிசேஷன் உள்ளிட்ட நாகர்கள் தனது தோஷம் நீங்க இங்கிருக்கும் ஈசனை வழிபட்டு பலன் பெற்றதால் பாம்பு+புரம்=பாம்புரம் என்று அழைக்கப்பட்டு திருப்பாம்புரம் என அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல் பாடப்பெற்றது.  பாம்புரநாரதர், பாம்புரேஸ்வரர், சேஷப்புரீஸ்வரர். பாம்பீசர்ன்னும் இவருக்கு பேர்கள் இருக்கு.

ஒருமுறை வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் விளைவாக வாயுபகவான் மலை, மேடு, காடுகள் முதலியவற்றை தூக்கி வீசியது. ஆதிசேஷன் தன் வலிமையால் அவற்றை காத்து நிற்க இப்படியே இருவரும் சம பலம் காட்டி நின்றனர்.   ஒருகட்டத்தில்  வாயுபகவான் பிராணவாயுவை நிறுத்தினார். அதனால், அனைத்து உயிர்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்திரன்  முதலான  தேவர்கள் அனைவரும் ஆதிசேஷனை போட்டியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டி நின்றனர். ஆதிசேஷனும் விலக்கிக்கொள்ள, வாயுபகவான் வெற்றிக்களிப்பில் மலைகளை தூக்கி வீசினான். அதனால் கோபங்கொண்ட சிவன் பேயுரு கொள்ளுமாறு இருவரையும் சபித்தார். இருவரும் மனம் வருந்தி சாப விமோசனம் வேண்டி நிற்க,  வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்யவும், ஆதிசேஷனை  திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தவம் செய்து சாப விமோசனம் பெற ஆலோசனை கூறினார். அவ்வாறே வாயு பகவான் மதுரைக்கும், ஆதிசேஷன் திருப்பாம்புரத்திற்கும் வந்து பூஜை செய்து சாபம் நீங்கினர்.  

ஒருமுறை சிவனை வினாயகர் வணங்கும்போது தன்னையும் சேர்த்தே வினாயகர் வணங்குவதாக சிவன் உடலில் உள்ள பாம்புகள் கர்வம் கொண்டன. அவற்றின் கர்வத்தினை அடக்கும்பொருட்டு, பாம்பு இனமே இல்லாமல் போகவேண்டுமென சபித்தார். அந்த சாபத்தின் பலனாக பாம்பு இனம் அழிய ஆழம்பித்தது. அவற்றோடு சேர்த்து பூமியை தாங்கும் ஆதிசேஷனும், ராகு-கேது, வாசுகி பாம்பு முதலான தெய்வாம்சம் பொருந்திய நாகங்களும் தங்கள் சக்தியை இழக்க ஆரம்பித்தது. சாபவிமோசனம் வேண்டி சிவனை வேண்டி நின்றது. பூமியில் சேஷபுரி என்னும் இடத்தில் இருக்கும் சிவாலயத்தில் மகாசிவராத்திரி இரவு பூஜித்து வந்தால் சாபம் நீங்கும் என வழி சொன்னார்.

சிவனின் ஆலோசனைப்படி ஆதிசேஷன் தலைமையில் ராகு-கேது, வாசுகி உள்ளிட்ட நாகர் இனங்கள் சிவராத்திரியின் முதலாம் ஜாமத்தில்  கும்பகோணத்தில் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி சாபவிமோசனம் பெற்றது. அதனாலே, ராகு-கேது தோஷம் உள்ளிட்ட நாகத்தினால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரத்தலமாக இந்த நாலு கோவில்களும் இருக்கு.
இணையத்தில் சுட்டது
கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். கருவறையை சுற்றிலும் சிறு அகழி இருப்பது வேறு எங்கும் இல்லாத அமைப்பு. வண்டார்பூங்குழலின்ற பேரில் இறைவி தனிச்சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.  இறைவியின் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் ருத்ராட்ச மாலையும் தாங்கி, வரத, அபய ஹஸ்தக்கரங்களோடு அருள்பாலிக்கிறாள்.

ஆதிசேஷனோடு ராகு-கேது, வாசுகி, தட்சன், கார்க்கோடன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகா பத்மன் என்னும் அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்து ஆலமர விழுதை நாராக்கி, அத்திப்பூவை அதில் தொடுத்து பாம்புரேஸ்வரருக்கு அணிவித்து பூஜை செய்தனர்.  மனித தலையும் பாம்பின் உடலுமாய் இருந்த ராகுவும், பாம்பின் தலை+மனித உடலுமாய் இருந்த கேதுவும்  இருவரும் இணைந்து ஒரே உடலுடன் சிவனை வழிபட்டு  சாபம் நீங்கினர். அதனால் பாம்புரேஸ்வரர் ஆலயத்தில் ஈசானிய மூலையீல் ஒற்றை உடலுடன் தனிச்சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். ராகு கால நேரத்தில் அம்பாளுக்கும், சிவனுக்கும் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி நினைத்த காரியம் நடக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பாம்புரத்தில் ஆலமர விழுது தரை நோக்கி விழுவதில்லை, அத்தி பூப்பதில்லை. இங்கு யாரையும் பாம்புகள் தீண்டாது. அப்படியே தீண்டினாலும் உடலில் விசம் ஏறாது.  பாம்புரேஸ்வரர் மற்றும் வண்டுவார்பூங்குழலி அம்மன்மீதும் பாம்புகள் சட்டை உரித்து வைப்பது அடிக்கடி காணும் அற்புதமாகும். 

ஆதிசேஷன் சிவராத்திரியில் தான் சிவனை வழிபட ஏதுவாக இங்கிருக்கும் சிற்றம்பல வினாயகர் துணையுடன் குளம் ஒன்றை வெட்டினார். அதற்கு சிற்றம்பல குட்டை என்று பெயர்.  இது வடக்கு வீதியில் இன்னமும் இருக்கு. கோவிலுக்கு எதிரில் இருக்கும் குளத்திற்கு ஆதிசேஷன் குளம் என்று பெயர். தோஷ நிவர்த்திக்காக வருபவர்கள் இக்குலத்தில் நீராடி, ஈசானிய மூலையில் உள்ள ராகு-கேது சன்னிதியில்  ஒரு வெள்ளியிலான நாகத்தினை தாம்பாளத்தில் வைத்து சாந்தி பரிகார மந்திரங்களை புரோகிதர் சொல்லச்சொல்ல, தோஷத்தினால் பாதிக்கப்பட்டோர்  நாகத்திற்கு அபிஷேகம், பூஜைகளை செய்வித்து, அந்த நாக சிலையை உண்டியலில் சேர்த்துடனும். வெள்ளியிலான நாகர் சிலை, பூஜை பொருட்களை கோவில் வளாகத்திலேயே வாங்கிக்கலாம். இதுக்கென கோவிலில் கட்டணம் வசூல் பண்றாங்க.  பூஜையின் முடிவில் பூவும், குங்குமமும் தர்றாங்க. பூஜை அறையில் வைத்து, பூவை பாதுகாக்கனும், குங்குமத்தை தினமும் இட்டுக்கனும். வேண்டுதல் நிறைவேறியதும் பாதுகாத்து வைத்திருக்கும் பூவை கோவில் மஞ்சள் துணியில் வைத்து கட்டி உண்டியலில் சேர்ப்பிச்சுடனும். 

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் கோவிலில் சொல்லியுள்ள 7 இடங்களில் விளக்கேற்றி , பாம்புரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்தால் மது, புகை மாதிரியான தீய பழக்கங்களிலிருந்து விடுபடலாம்.  திருமணம் தடைபடுதல், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், அடிக்கடி கனவில் பாம்புகள் வருதல் மாதிரியான பிரச்சனைகள் இங்கு வழிபட்டால் தீரும். 

இராஜராஜ சோழன், இராந்தேந்திர சோழன், திரிபுவனவீரதேவன், மூன்றாவது குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்தைய கல்வெட்டுகள் 15 கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.  அவற்றில் உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம்  என இத்திருத்தலத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. , பாம்புரேஸ்வரரை பாம்புரம் உடையார் எனவும், வண்டார்குழலி அம்மனை மாமலையாட்டி எனவும்  பிள்ளையாரை ராஜராஜப்பிளையார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோவில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 வரையும், மாலை 4 மணி முதல் 8 மணிவரையும் கருவறை திறந்திருக்கும். பரிகார பூஜைகள் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் 2.45 மணிமுதல் 8 மணி வரையும் புதன்கிழமை காலை6.30 மணிமுதல் மதியம் 1.30 மணி வரையும், வியாழக்கிழமை பகல் 1.30 மணி முதல் 3 மணி வரையும் நடைப்பெறும். கிராமம்தான் இளநீர்,ஐஸ், பஜ்ஜி, போண்டா, டீலாம் கிடைக்கும். ஆனா, நல்ல சாப்பாடு கிடைக்காது. ஓரிரு ஹோட்டல்கள் இருக்கு. எல்லாமே இரு மடங்கு விலை. அன்னதானம் செய்வது நல்லதுதான். ஆனா, அதுக்காக பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவை தோஷ நிவர்த்திக்காக வருபவர்களை வாங்கி கொடுக்க சொல்லி வற்புறுத்துவது சரின்னு தெரில. இதுவரை எந்த கோவில்களிலும் அன்னதானத்திற்காக சாப்பாட்டை வித்து நான் பார்த்ததில்லை. இங்கிருக்கும் முதியவர்கள், வறியவர்கள்கிட்ட சாப்பாட்டை கொடுத்தால் வேண்டாங்குறாங்க. சிலர் வாங்கிக்குறாங்க.. அதே சாப்பாட்டு பொட்டலங்கள் திரும்ப திரும்ப கடைகளுக்கு வருவதாகவும் சொல்றாங்க.  அதனால், அன்னதான சாப்பாட்டு பொட்டலங்கள் வாங்குவதை தவிர்ப்பது நலம். ஏன்னா, பாத்திரம் அறிஞ்சு மட்டுமல்ல பசியறிஞ்சும் பிச்சை இடனும்..

தோஷம் நிவர்த்தியாகுதான்னு தெரில. ஆனா, திருப்பாம்புரம் சுற்றியுள்ள பகுதிகள் கண்ணுக்கு குளிர்ச்சியா வயல்வெளிகள், சிறுஓடைகள், குட்டைகள், ஏரிகள்ன்னு பார்க்க ரம்மியமா இருக்கு. பக்கத்துலயேதான் திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், திருமியச்சூர், திருமனஞ்சேரின்னு ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு.  ஒரு நாலு நாள் ஒதுக்கி அங்க போனாலும் எல்லாத்தையும் பார்க்க முடியுமான்னு தெரில:-(

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. சுவாரசியமான தகவல்கள்...

    ReplyDelete
  3. திருப்பாம்புரம் ராகு கேது தோசம் நீக்கும் நலம் என அறிந்தோம் . ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ராகு-கேது பரிகாரத்தலம்ன்னு சொன்னாலும் கருவறையில் குடியிருப்பது ஈஸ்வரன் தான். பரிகாரம் கோவிலின் ஈசானிய மூலையில் இருக்கு

      Delete
  4. தகவல்கள் சிறப்பு. போன வருஷம் போன பயணம் போல!

    ReplyDelete
    Replies
    1. ஆமாண்ணே. பதிவின் ஆரம்பத்துலயே சொல்லி இருக்கேனே!
      நிஜமோ பொய்யோ, இங்கு போய் தோஷம் கழிச்சு வந்தபின் மகளுக்கு நல்ல வரன் வந்திருக்கு.
      இப்ப சின்னவளுக்கும் தோஷம் இருக்கு காளஹஸ்திக்கு போக சொல்லி இருக்காங்க. நம்பிக்கை இல்லன்னாலும் மகளின் எதிர்காலம் என்பதால் ரிஸ்க் எடுக்க மனமில்லை.

      Delete
  5. இந்த பிப்ரவரியில் நாங்களும் இந்தப் பாம்புக் கோவிலைத் தரிசித்தோம்! எனினும் உங்கள் விளக்கங்கள் மிகவும் பயன்படுகின்றன என்றால் மிகையில்லை.

    ReplyDelete
    Replies
    1. சுற்றிலும் ஏகப்பட்ட கோவில் இருக்குப்பா. மகளுக்கு ஒரு நாள்தான் லீவு கொடுத்தாங்க. அதனால் திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், திருமணஞ்சேரி, ஸ்ரீரங்கம் மட்டும் பார்த்துட்டு வந்துட்டோம்.

      Delete
  6. கல்வெட்டு தகவல்கள் உட்பட, புகைப்படங்களுடன் மனதை ஈர்த்தது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. கோவில் அமைந்திருக்கும் இடமும் மனதை ஈக்கும். குறைஞ்சது ஒரு வாரம் ஒதுக்கி போனால்தான் எல்லா கோவில்களையும் பார்க்க முடியும். அவ்வளவு கோவில்கள் இருக்கு.

      Delete