Wednesday, March 11, 2020

உரிமைக்காக போராடிய துரியோதனன்- வெளிச்சத்தின் பின்னே..

ஒரு குழந்தை தன்கிட்ட இருக்கும் ஒரு சாக்லேட்டையோ அல்லது பொம்மையையோ யாராவது கேட்டால் என்ன செய்யும்?! யாருக்கும் கொடுக்காது. நீங்க பிடிவாதமாய் அதை பறிக்க பார்த்தால் சட்டைக்குள் ஒளிச்சு வச்சுக்கும், இல்லன்னா வீட்டுக்குள் ஓடி எங்காவது மறைச்சு வைக்கும். இடம் கண்டுபிடிச்சு நீங்க எடுக்கப்போனால் விழுந்து புரண்டு அழும். நம்மளை எடுக்க விடாம போராடும். இந்த உதாரணம் எதுக்குன்னா, மகாபாரதத்தில் வரும் துரியோதனனை அந்த குழந்தையோடு ஒப்பிடத்தான். 
மகாபாரதத்தில் துரியோதனனை வில்லனா சித்தரித்தாலும்  போற்றத்தக்க நிறைய நல்ல விசயங்கள் துரியோதனன்கிட்ட இருக்குறதா எனக்கு படுது.  அப்படியென்ன துரியோதனன்கிட்ட நல்ல விசயம் இருக்குன்னு இன்றைய வெளிச்சத்தின் பின்னே பகுதியில் பார்க்கலாம்...

வீரதீர பராக்கிரமம், சகோதர பாசம், நட்பு, மனைவிமீது கொண்ட நம்பிக்கை என  பல நல்ல குணமும் சிறந்த அரசனாகவும் விளங்கினான் துரியோதனன். அவன் சிறந்த அரசனாய் விளங்கியதற்கு ஆதரமாய், மரணப்படுக்கையில் கிடந்த துரியோதனனிடம் சென்று எப்படி ஆட்சியமைக்க வேண்டுமென ஆலோசனை கேட்டுவர கிருஷ்ணபரமாத்மாவே தருமனை அனுப்பினார்ன்னு சொல்வாங்க. அப்பேற்பட்ட சிறந்த அரசனை மண்ணாசை பிடித்தவன், பெண்களை மதியாதவன், பங்காளிகளுக்குக்கூட ஐந்து கிராமத்தினைகூட கொடுக்காத கருமின்னு சொல்ல என்ன காரணம்ன்னு பார்க்கலாமா?!


முதலில் துரியோதனின் பிறப்பை பார்ப்போம். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது நல்ல விசயங்களை கேட்டு, பார்த்து, படித்து வந்தால் குழந்தை நல்ல மனநிலையில் இருக்குமெனவும், எல்லா குழந்தையும் தாயின் வயிற்றில் பத்து மாதம் முழுசா இருந்தால்தான் முழு வளர்ச்சி இருக்கும். கருப்பையிலிருந்து உருண்டு, பிரண்டு தாயின் யோனி வழியே குழந்தை வெளிவரும் சுகப்பிரசவம் நடந்தால்  குழந்தைக்கு இயல்பாகவே வாழ்க்கையில் நெளிவுசுளிவுகளை எதிர்கொள்ளும் திறன் உண்டு என இன்றைய அறிவியல் சொல்லுது.  ஆனா, துரியோதனன் விசயத்தில் நடந்ததே வேறு. சதா சர்வக்காலமும் தான் ஒரு குருடன், அதனாலே எதற்கும் நான் லாயக்கற்றவன் என புலம்பும் ஒரு குருட்டு தகப்பன் குரலை கேட்டு கருவிலே இருந்தவன். ஓரகத்தி பிள்ளைகளை பெற்றதும் தனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையென பொறாமைக்கொண்டு  வயிற்றில் அடித்துக்கொள்ள,  வயிற்றிலிருந்த வளர்ச்சிப்பெறாத பிண்டம் நழுவி விழுந்தது. வியாசரிடம் முறையிட, நெய் குடங்களை கொண்டுவரச்சொன்னார். கையிலிருந்த கமண்டல நீரினை , பிண்டத்தின்மீது தெளிக்க, நீர் பட்டதும், பிண்டம் நூறு துண்டங்களாயிற்று. நூறு துண்டங்களையும் நூறு நெய் குடங்களில் இட்டார். மிஞ்சியிருந்ததை வழித்து நூற்றி ஒன்றாவது குடத்திலிட்டார். 100 ஆண்குழந்தைகளும், ஒரு பெண்குழந்தையென மொத்தம் 101 பிள்ளைகள் பிறக்க, அதில் மூத்த பிள்ளையாய் தருமன் பிறந்த மறுநாள் துரியோதனன் பிறந்தான்.   வியாசர் அவனுக்கிட்ட பெயர் சுயோதனன். பெரும்போர்வீரன் என பொருள்பட வைக்கப்பட்ட பெயர்.  பின்னாளில் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பெயர்தான் துரியோதனன். வெற்றிக்கொள்ளப்படமுடியாதவன் என பொருள்படும்படி வைத்துக்கொண்டான்.


பிறப்பு இப்படியென்றால், அவன் வளர்ந்தது பொறாமைக்குணம் கொண்ட தாய், தகப்பனோடு.. அதுமட்டுமல்லாமல் குருட்டு தந்தைக்கு பிறந்தவன்ன்ற இளக்கார எண்ணமும், பச்சாதபமும் கொண்டு பலர் பார்த்ததை அவன் அறிந்தே வைத்திருந்தான். கூடவே பழிவாங்கும் எண்ணத்தோடு வந்த தாய்மாமனான சகுனியோடும் வளர்ந்தவன்.  பாண்டு இறந்தபின், அடைக்கலம் தேடி குந்தி தன் மகன்கள் ஐவரோடு ஹஸ்தினாபுரம் வந்தவர்களை ஆரம்பத்தில் அன்பாக அரவணைத்துக்கொண்டான் துரியோதனன். பீமனின் விளையாட்டுதனத்தால் கௌரவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். பீமனை மெல்லமெல்ல வெறுக்க ஆரம்பித்தான் துரியோதனன். தருமன்மேல் துரியோதனனுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அதனால் தருமரிடம் சென்று பீமனை பற்றி முறையிடுவான்.  தருமனும் பீமனை கண்டிப்பான். தருமன் இல்லாதபோது பீமன் தன் சேட்டைகளை தொடர்ந்தான். பீமன் ஒழிந்தால்தான் அவன் இம்சையிலிருந்து தப்பிக்கலாமென பீமனை (மட்டுமே) கொல்ல முடிவெடுத்து உணவில் விசம் கலந்து கொடுத்தான். அதிலிருந்து பீமன் தப்பினான்.


பாண்டவர்கள், கௌரவர்களும் துரோணரிடம் கலைகளை கற்க குருகுலம்  சென்றனர்.  கதாயுதத்தில் துரியோதனன் சிறந்து விளங்கினான். கூடவே சகலகலைகளிலும் தேர்ச்சி பெற்றாலும், அர்ஜுனனே தனது ஆஸ்தான சீடன் என துரோணர் அறிவிக்க, எதிலுமே முதலாவதாக இருக்கவேண்டுமென்ற தனது ஆசையில் மண் விழுந்ததால் அர்ஜுனனின்மேல் வெறுப்புக்கொள்ள ஆரம்பித்தான்.  அர்ஜுனனின் வில்வித்தையை  பரிசோதிக்க போட்டி நடத்தப்படுகிறது. தேரோட்டியின் மகனான கர்ணன் அதில் பங்கெடுக்க முயல, ஷத்திரியர்கள் மட்டுமே பங்குபெற முடியுமென, துரோணர், பீஷ்மர், விதுரன் என பெரும்கூட்டமே கர்ணனை எதிர்க்க, பிறப்பால் எதையும் முடிவு செய்ய வேண்டாம், அவனது திறமையைக்கொண்டு மதிப்பிடுங்கள் என குருவினை, பிதாமகர் என அத்தனை ஆளுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கின்றான்.  இதை அர்ஜுனனுக்கு எதிராகன்னு நாம நினைக்கிறோம். ஆனா, சாதிக்கு எதிர்ப்பாகன்னு வில்லி பாரதம் சொல்லுது. முடிவில், ”இன்றுமுதல் கர்ணன் ஒரு அரசன், அங்கதேசத்துக்கு அரசன்” என அங்கேயே அறிவிக்கின்றான்.  அன்றிலிருந்து கர்ணனும், துரியோதனனும் இணைப்பிரியா நண்பர்களாகிறார்கள்.  பிறப்பறியாதவன் என கேலி செய்த அர்ஜுனன் கர்ணனுக்கு எதிரியானான். கர்ணனின் எதிரி தனக்கும் எதிரி என நட்பு பாராட்டினான்.  பாண்டவர்களை கொல்ல பலவாறாய் முயற்சி செய்கிறான் துரியோதனன்.

ஒருமுறை, கர்ணனும், துரியோதனனின் மனைவி பானுமதியும் சொக்கட்டான் விளையாடும்போது அங்கு துரியோதனன் வர, அவனைக்கண்டு பானுமதி மரியாதைக்காக எழுந்துக்கொள்ள, துரியோதனன் வரவை கவனியாத கர்ணன், தோல்வி பயத்தில் பானுமதி எழுந்து ஓடுவதாக நினைத்து பாவாடையை பிடித்து இழுக்க, பாவாடையிலிருந்த முத்துக்கள் சிதறி ஓடுகிறது. பிறகே துரியோதனனை கவனித்த கர்ணன் விக்கித்து நிற்க, சிதறிய முத்துக்களை, எடுக்கவோ கோர்க்கவோ என அவர்களுக்குள் தவறான உறவு இல்லையென புரிந்துக்கொண்டதை சொல்லாமல் சொல்ல இருவர்மீதான அவன் கொண்ட நம்பிக்கையை மட்டுமே எல்லா கதைகளும் சொல்லும். ஆனால், அப்படி நம்பிக்கையும், நட்புணர்ச்சியும் கொண்ட ஒருவன் எப்படி இப்படி மாறினான் என யாரும் யோசிப்பதில்லை. எல்லா காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டல்லவா?! பாண்டவர்களில் தருமனை தவிர்த்து  அனைவருக்கும் பல மனைவிகள் உண்டு. ஆனால் துரியோதனன் பானுமதியோடு மட்டுமே வாழ்ந்தான்.


கர்ணன் கொடைவள்ளல்ன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனால் அவன் அப்படி கொடைவள்ளல்ன்னு பேர் எடுக்க, துரியோதனன் தந்த நாடும் செல்வமும்தானே?! ஒருநாளும், ஏன் இப்படி என் சொத்துக்களை வீணாக்குறேன்னு கர்ணனை கேட்டதில்லை. அப்பேற்பட்ட துரியோதனன், தனது பங்காளிகளுக்கு ஊசிமுனைகூட தரமுடியாது என மறுத்தவன்.

தருமனுக்கு ராஜ்ஜியத்தின் ஒருபகுதியை தந்து முடிசூட்டி பாண்டவர்களை அங்கு அனுப்பி வைக்கின்றனர்.   திரௌபதியின் சுயவரம் சென்று அங்கு அர்ஜுனனிடம் தோற்று போனான். அர்ஜுனன்மீதான வன்மம் வளர்ந்தது. ஒருமுறை தருமனின் அரண்மனைக்கு விருந்துக்கு சென்றான் துரியோதனன். அங்கு, கால் தடுக்கி விழப்போனவனை அப்பனைப்போல பிள்ளையும்  குருடு என திரௌபதி சிரிக்க திரௌபதிமேல் சினம்கொண்டான். அவளை பழிதீர்க்க சபதம் கொண்டான்.

இப்படி எல்லா பக்கமும் தோல்வியும், ஏளனப்பேச்சையுமே கேட்டுக்கொண்டிருந்தால் அவன் எப்படி நல்லவனாய் வளர்வான்?! பாண்டவர்கள்மேல் குரோதமும், வன்மமும் வளர்ந்தது. மாமன் சகுனியிடம் தன் எண்ணத்தினை பகிர, அவன் யோசனைப்படி, தருமனை அவனது சகோதரர்களோடு பதில் விருந்துண்ண தன் மாளிகைக்கு அழைக்கின்றான் துரியோதனன். அங்கு வந்த பாண்டவர்களை மாமன் சகுனியின் யோசனைப்படி  சூதாட அழைக்கிறான். நாடு, நகரம் உட்பட மனைவி திரௌபதியையும் சூதில்   பாண்டவர்கள் இழக்கின்றனர்.   தன்னை கேலி செய்தவளை பழிவாங்க சபையில் வைத்து துகிலுரிக்க சொல்கின்றான். அவ்வாறே நடந்தது.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் இடறும், அவர்களுடைய மனநிலை மாறும். அதன்படி துரியோதனன் இடறியது இங்குதான். பெண்புத்தி பின்புத்தி என மன்னித்து சென்றிருக்கலாம். ஆனால் விதி வலியதாச்சே!!?? துரியோதனனின் குரூரத்தைவிட நாமளே அடிமையாய் இருக்கும்போதும், தனது மனைவியை சக மனுஷியாய் எண்ணாது தனது அடிமையாய், ஒரு பொருளாய் நினைத்த பாண்டவர்களின் மனது குரூரமா இருக்கே!

எல்லாம் முடிஞ்சு குருஷேத்திர போர் வந்தது. பாண்டவர்கள் நம்பியது மாயை கிருஷ்ணனை.  ஆனால், துரியோதனன் நம்பியது தனது திறமை, தன் சகோதரர்கள், நண்பன் கர்ணனின் வில் திறமையை. அப்ப, பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமா மாதிரியான ஆட்களிடம் இல்லையா எனக்கேட்டால் இல்லன்னுதான் சொல்வேன். இவங்கலாம் பாண்டவர்களின் விசுவாசி என துரியோதனனுக்கு நல்லாவே தெரியும். பீஷ்மர் கர்ணனின் திறமையை மதியாமல் அவனை வெறும் படைவீரனாய் இருக்கச்சொல்ல, கர்ணன் கடும் சினம்கொண்டு பீஷ்மர் படைத்தலைவனாய் இருக்கும்வரை  போர்க்களம் புகமாட்டேன் என கர்ணன் சபதம் கொள்கிறான்.  நாமளா இருந்தால் என்ன சொல்வோம்?! உன்னை அரசனாக்கியது நான். என் சோத்தை தின்னுட்டு போர்க்களம் வரமாட்டேன்னு சபதம் போடுறியா?! ஒழுங்கா நாளைக்கு சண்டைக்கு வந்து சேரு இல்லன்னா நடக்குறதே வேறன்னு கர்ணனை கோவிச்சுப்போம். ஆனா, துரியோதனன் அப்படி சொல்லாம கர்ணனுடைய சுயமரியாதையை மதித்தான்.

மகாபாரதம் பாண்டவர்களின் பக்கமிருந்து எழுதப்பட்டது. முதலில் பாண்டவர்களின் தந்தை பாண்டு திருதிராஷ்டிரனைவிட இளையவர். திருதிராஷ்டிரனுக்கு பார்வை இல்லையென ராஜ்ஜிய பொறுப்பை சிலகாலம் ஏற்றிருந்தார். பிறகு தனக்கு வாரிசு உண்டாகாது என ராஜ்ஜியத்தினை அண்ணனிடம் கொடுத்து, மனைவிகளோடு காட்டுக்கு போறார். அப்படி இருக்க, ஹஸ்தினாபுரத்தின் அரசனாக முழு உரிமை துரியோதனனுக்குதான்,. வயதில் மூத்தவரும், தற்போதைய அரசனின் மகனுமான துரியோதனனே அரசனாக தகுதியுடையவன் ஆனால், அவனை அரசனாக்க தடுத்தவை எவை?!

பாண்டவர்களைவிட நல்லவனான துரியோதனனை பீஷ்மர், துரோணர், ஏன் கடவுள் உட்பட அனைவரும் அவனை சூழ்ச்சியால் வீழ்த்த காரணம் என்ன?! அவன் எதிர்த்தது பங்காளிகளை மட்டுமில்லாம சாதிக்கொடுமையை, வர்ணாசிரமத்தினை..  முதன்முதலில் தருமனுக்கு இளவரசு பட்டம் கட்ட திருதிராஷ்டிரன் உட்பட பீஷ்மர், துரோணர் முயல, உங்கள் பிள்ளை நான் இருக்க நீங்கள் ஏன் அவனுக்கு இளவரசு பட்டம் கட்டுகிறீர்கள் என கொதித்தெழ, நீ மனுதர்மத்தினை,  அரசனாகும் தகுதியில்லாதவன், நீ மனுநீதியை எதிர்க்கின்றாய். அதனால், தருமன் தான் அரசனாகவேண்டும் என திருதிராஷ்டிரனே சொல்வதாய் வில்லிபாரத்தின் 100வது பாடல் சொல்லுது. இவனை அரசனாக்கினால் சாதிக்கோட்பாடுகளை உடைச்சுப்போட்டு எல்லாரையும் ஒன்றாக்கிவிடுவான் என அனைவரும் (கடவுள் உட்பட)  பயந்தனர்.

தனக்கு நியாயமாய் கிடைக்கவேண்டிய ராஜ்ஜியத்திற்காக போராடியது துரியோதனன்.  கடைசிவரை எந்த தில்லுமுல்லும் போரில் துரியோதன செய்யவில்லை. ஆனால், பாண்டார்கள் தாங்கள் ஜெயிக்க எத்தனை சூது செய்தார்கள் என எல்லோருக்குமே தெரியும்.  ஆனால் கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் தனக்கு சொந்தமில்லாததைக்கூட சதி வேலைகள் செய்து கைப்பற்றலாமென இக்கதை சொல்லுது.

தனக்கு சம்பந்தமல்லாத ஒரு கதையில் ஒருவனை நல்லவன், கெட்டவன் என நிர்மாணிப்பது நாம யார் பக்கமென்பதை பொறுத்து. நாம் பாண்டவர்கள் பக்கமிருந்து பார்க்கிறதால் துரியோதனனிடமிருக்கும் நல்ல குணங்கள்கூட நம் கண்ணுக்கு தெரிவதில்லை.  துரியோதனன் முழுக்க நல்லவனில்லை. அவனது கைகள் ரத்தக்கறை படிந்தவையே! ஆனால், அந்த ரத்தக்கறைகூட, தனக்கு சொந்தமில்லாத ராஜ்ஜியத்தை அடைய ஆசைப்பட்ட பாண்டவர்களை பாண்டவர்களை எதிர்த்துதான். திரௌபதியின் துகிலுரித்த பாவமே துரியோதனனை அழித்தது என நான் சொல்வேன். பெண்பாவம் பொல்லாததாச்சே!!

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி



19 comments:

  1. நண்பர் திரு. துரி பற்றிய தங்களது விளக்கம் ஸூப்பர் சகோ

    ReplyDelete
  2. துரியோதனனுக்கு மட்டுமே தண்டனை...

    ReplyDelete
    Replies
    1. இல்லியே! கௌரவர்களுக்கும், துரியோதனனோடு சேர்ந்திருந்த பாவத்திற்கு பீஷ்மர், கர்ணன், அஸ்வத்தாமன், துரோணர்ன்னு பலருக்கும் கிடைச்சுது.

      Delete
  3. துரியோதனனுக்கு ஆதரவாய் ஒரு வழக்கு என்று என்று, விஜயன் என்று ஞாபகம், எழுதிய புத்தகத்தைப் படித்து விட்டு அதை எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தேன்.  அது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. அடடா! லிங்க் கொடுத்திருக்கலாமே!

      Delete
    2. துரியோதனன் கெட்டவனாகவே இருந்தாலும் எனக்கென்னமோ அவன் போரில் நியாயமா நடந்துக்கிட்ட மாதிரிதான் தோணுது, போரில் வெற்றிக்கொள்ள பாண்டவர்கள் பண்ணாத தில்லுமுல்லு கிடையாது. கடவுள் பக்கமிருந்ததால அதுலாம் நியாயமா பேசப்படுதுன்னு நான் நினைக்கிறேன் சகோ

      Delete
    3. 1)  ஒரு வழக்கு - துரியோதனனை ஆதரித்து 
      https://engalblog.blogspot.com/2013/10/blog-post_28.html


      2)  வில்லனுக்கும் உண்டு நல்ல குணங்கள் 
      https://engalblog.blogspot.com/2016/05/blog-post_26.html 

      Delete
  4. வித்தியாசமான பார்வை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு இடத்தை பள்ளத்திலிருந்து பார்த்தால் அது மேடு, மேட்டிலிருந்து பார்த்தால் அது பள்ளம். சமதளத்திலிருந்து பார்க்கும்போது சமதளம். ஒரு இடத்திற்கே மூணு பரிமாணம் இருக்கும்போது மனிதனுக்கு இருக்காதா?! அதன் விளைவே இந்த வெளிச்சத்தின் பின்னே தொடர்..

      வருகைக்கு நன்றிங்க சகோ.

      Delete
  5. ரொம்ப உள்வாங்கி எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. ஒவ்வொரு நாணயத்திற்கும் மறுபக்கம் உண்டு.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு. ஆனால் நான் வில்லி பாரதம் படித்ததில்லை. வில்லி பாரதத்தில் ஜாதிக்கொடுமை, வர்ணாசிரமம் எல்லாம் வருவதாகவும் தெரியலை. ஆனால் இங்கே நீங்கள் எழுதி இருப்பதிலேயே ஒரு முரண் ஆரம்பத்திலேயே வருகிறது. தன் மைத்துனன் மனைவி குந்திக்குக் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் தான் காந்தாரி தன் வயிற்றில் அடித்துக் கொள்கிறாள். பிண்டம் பிறக்கிறது. பின் குடத்தில் இடுவது எல்லாம் நடக்கிறது. ஆனால் குழந்தை பிறக்கையில் முதலில் தருமன் பிறப்பதாகவும் அடுத்த நாளே துரியோதனன் என்றும் எழுதி இருக்கிறீர்கள். வில்லிபுத்தூரார் இப்படிச் சொல்லி இருக்கிறாரா?அப்படிச் சொல்லி இருந்தால் அதுவும் தப்பு! தருமன் முதலிலேயே பிறந்து விட்டதால் தானே காந்தாரிக்குக் கோபம். தருமன், பீமன் இருவருமே பிறந்து விடுகின்றனர் என்பதாலேயே தன் கர்ப்பம் இத்தனை நாட்கள் ஆவது கண்டு காந்தாரி கோபம் அடைகிறாள். ஆகவே இங்கேயே பெரியதொரு தவறு.

    ReplyDelete
  8. அடுத்து திருதராஷ்டிரன் பட்டம் ஏறுவது பற்றி. அரசனாக இருப்பவன் சர்வ அங்கமும் லக்ஷணம் படைத்தவனாக இருக்க வேண்டும் என்பது விதி! அத்தகைய விதிக்குள் திருதராஷ்டிரன் வராத காரணத்தால் அவன் சம்மதம் பெற்றே பாண்டு சிங்காதனம் ஏறுகிறான். அதன் பின்னரும் பீஷ்மரைத் தான் தனக்காகப் பொறுப்பை நிர்வகிக்கச் சொல்லிவிட்டுக் காட்டுக்குச் செல்கிறான். பீஷ்மர் தான் செய்த சபதத்தால் அரியணை ஏறாமல் மன்னன் இல்லாமல் நாடு இருத்தல் சரியில்லை என திருதராஷ்டிரனை பொம்மை அரசனாக்கிவிட்டுத் தானே ராஜ்யபாரத்தை நிர்வகிக்கிறார்.

    ReplyDelete
  9. பொதுவாக அரச குலத்தில் வயதில் மூத்தவனுக்குத் தான் அடுத்த பட்டம். இதை நீங்க இங்கிலாந்தில் அரச பதவி ஏற்பதில் கூடக் கண்டிருக்கலாம். மூத்த மகன் என்பதால் பட்டம் ஏற்று அரசரான ஏழாம் எட்வர்ட் விவாகரத்தான திருமதி சிம்ப்ஸனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிப் பட்டம் துறந்ததும் அதன் பிறகு அவருக்கு அடுத்த ஐந்தாம் ஜார்ஜ், (தற்போதைய எலிசபத் ராணியின் அப்பா) அரசரானதும் வரலாறு. அதே வரலாறு தான் இங்கேயும். மூத்த பிள்ளை என்று பார்த்தால் தருமரே மூத்தவர். துரியோதனன் அதற்குப் பின்னர் தான் வருகிறான். இதையும் சபையைக் கூட்டி ஆலோசித்து எல்லோருடைய சம்மதத்தையும் பெற்ற பின்னரே அறிவிக்கின்றனர். திருதராஷ்டிரன் குருடாக இல்லாமல் இருந்து பட்டமும் ஏறி இருந்தால் துரியோதனனே முறைப்படி அரசன். ஆனால் விதி அவ்வாறு விடவில்லை.

    ReplyDelete
  10. அடுத்து கர்ணன். கர்ணன் க்ஷத்திரியனே! அதோடு அவனுக்குப் போர்ப்பயிற்சி அளித்தவரும் துரோணரே! துரோணர் அவனுக்கு குருவே! ஆனால் அவர் கர்ணனுக்குக் கற்பிக்க மறுத்தது பிரம்மாஸ்திரம் பயன்படுத்துவதற்கு. அதைக் கற்றுக்கொண்டு ஒரே முறை பயன்படுத்த வேண்டும். பின்னால் திரும்ப வாங்கவும் வேண்டும். தவறான பிரயோகம் செய்யப்பட்டால் பிரம்மாஸ்திரம் விரும்பத்தகாத அழிவுகளை உண்டு பண்ணும். எய்தவரையே திரும்பத் தாக்கும் அபாயமும் உண்டு. கர்ணனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அர்ஜுனனிடம், அவன் வில் வித்தையில் பொறாமை உண்டு. அதோடு அவன் குடும்பத்தினரின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தான். தாய், தந்தை இல்லாமல் ரதசாரதியிடம் வளர்ந்த அவன் மனதுக்கு ஏனோ அர்ஜுனனின் மேல் பொறாமை ஏற்பட்டது. அவனை வளர்த்த ராதேயனும் க்ஷத்திரியன் தான்! ரத சாரதிகள் அனைவருமே க்ஷத்திரியர்களே! இப்போ பிராமணரில் பல பிரிவுகள் இருப்பதைப் போல் அவர்களும் க்ஷத்திரியர்களில் ஒரு பிரிவினரே! ஆகவே அவன் க்ஷத்திரியன் இல்லை என்பதால் துரோணர் அவனுக்கு எதுவும் மறுக்கவில்லை. அவன் அரசகுல க்ஷத்திரியன் இல்லை என்பதால் அரச குடும்பத்துப் பிள்ளைகள் மட்டும் போட்டி இடும்போது அதில் அவனும் போட்டி இட முடியாது என்றே சொன்னார். அதே போல் பிரம்மாஸ்திரத்தை அவன் தவறாக ஏவுவதற்கு வாய்ப்பு உண்டென்பதால் கற்பிக்கவும் மறுத்தார். மற்றபடி துரோணரின் ஆசிரமத்தில் எல்லோருமே சமமாகக் கற்றுக் கொண்டவர்களே!

    ReplyDelete
  11. ராவணன் தன் தங்கை சூர்ப்பநகைக்காகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தான் என வலம் வந்து கொண்டிருக்கும் செய்தியைப் போல் இங்கேயும் துரியோதனனுக்கும், கர்ணனுக்கும் நல்லவர்கள் எனப் பாராட்டு. மேலும் துரியோதனன் தன் மனைவி பானுமதியைத் துன்புறுத்தினான். அவன் மனைவி பானுமதி கர்ணனோடு விளையாடியதாகவும், இடுப்பு மேகலை அறுந்து விழுந்ததாகவும், "எடுக்கவோ, கோர்க்கவோ" எனச் சொன்னதாகவும் வருவதெல்லாம் இடைச்செருகல். மூல பாரதத்தில் அப்படி எல்லாம் இல்லை. கிசாரி மோகன் கங்கூலியின் முழு மஹாபாரத்தையும் தமிழில் அரசன் என்பவர் மொழி பெயர்த்துள்ளார். அதைப் படியுங்கள், அல்லது கும்பகோணம் பதிப்புப் படியுங்கள். முதலில் சொன்னவை இரண்டும் இணையத்திலே கிடைக்கும்.

    ReplyDelete
  12. இப்போதைக்கு! பின்னர் முடிஞ்சால் வரேன்.

    ReplyDelete
  13. வந்தாச்சு...   கீதா அக்கா வந்தாச்சு...

    ReplyDelete