Monday, March 16, 2020

கொரோனா வந்தால் உயிரிழப்புதான் முடிவா?! ஐஞ்சுவை அவியல்

மாமா! ஃப்ரீயா இருந்தால் வர்றியா?! கடைவீதிக்கு போய் வரலாம்?! 

அடியே! ஊரு உலகமெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கு. உனக்கு கடைவீதிக்கு போகனுமா?!    சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இப்ப, 110 நாடுகளுக்கு பரவி இருக்கு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5000க்குமேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா சொல்றாங்க. . சீனாவுக்கு அடுத்தபடியா இந்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின்,தென்கொரியாவில்தான் அதிகளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கு.  இப்ப இந்தியாவிலும் பரவியிருக்கு.  என் மதமா?1 உன் மதமான்னு அடிச்சுக்கும் நம்மாட்கள், மத வேறுபாடின்றி தங்களோட வழிபாட்டு தலத்துக்கு வரவேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருக்கு. 

கொரோனா வைரஸ்ன்னா என்ன மாமா?!

போன், லாப்டாப், மனுஷங்க மட்டுமல்ல.. கால மாற்றத்திற்கேற்ப எல்லா உயிரினமும் தங்களை அப்டேட் பண்ணிக்கும். இல்லன்னா, அந்த உயிரினம் தங்களை தக்கவச்சுக்க முடியாது. இது வைரசுக்கும் பொருந்தும். கொஞ்ச நாளுக்கு முந்தி வந்த சார்ஸ், எபோலா மாதிரி இப்ப வந்திருக்க வைரசுக்கு பேரு கொரோனா வைரஸ்.  இந்த கொரோனா குடும்பத்தில்  6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இப்ப பரவி இருக்கும் வைரஸ் 7 வது வைரஸ் கொரோனா குடும்பத்தில் நுழைஞ்சிருக்கு. கொரோனாவுக்கு சோறு வச்சியே பேரு வச்சியான்னு யாரும் கேட்டுடக்கூடாதுல்ல! அதனால், இதுக்கு 2019- nCoV (new strain of coronavirus) ன்னு பேர் வச்சிருக்காங்க.  2019 ஆம் கண்டுப்பிடிச்சதுக்காக 2019ன்ற ஆண்டையும் n என்பது புதியதுன்னு , CoV என்பது கொரனாவையும் குறிக்கிற விதமா பேர் வச்சிருக்காங்க. 2002 ல் சார்ஸ் SARS- CoV ன்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசும்  சீனாவில்தான் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் .  கொரோனா குடும்பத்தின் அடுத்த வைரஸான  MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிச்சாங்க. இதை கேமல் ப்ளூ பேர் வச்சாங்க. பழி ஓரிடம், பாவம் இன்னொரு இடம்ன்னு சொல்றமாதிரி ஒட்டகத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது குதிரையிலிருந்து பரவுச்சு. இதுல 800 பேர் வரை இறந்தாங்க. தன்னை அப்டேட் செய்துக்கிட்டே வந்த கோரோனா வைரஸ்  இப்ப 2019- nCoV நிலைக்கு வந்து இருக்கு. இந்த வைரஸ் ஒருத்தருக்கு தொற்றுச்சுன்னா,  முதலில் சாதாரணமா சளி, ஏற்படுத்தும் வைரஸ் மாதிரியே பரவுது. அவங்களுக்கு, ஒருவகையான நிமோனியாவை உண்டாக்குது.  கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்தாலும் தும்மல், இருமல்ன்னு ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவுது.  சாதாரண சளி, இருமல், காய்ச்சல்ன்னு இதோட அறிகுறிகள் இருக்குறதால் சட்டுன்னு அடையாளம் கண்டுக்க முடியாது. உரிய பரிசோதனைகளை செஞ்சுக்கிட்டால்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கோமான்னு தெரியும். ஆனா, அதுக்கான வசதிகள் நம்மக்கிட்ட இல்லன்றதுதான் இதில் வேதனையான விசயம். இதை பொதுவில் அரசு சொல்லல. ஆனாலும், நிலை இதுதான். அப்படியே கண்டுபிடிச்சாலும் கொரோனாவை குணப்படுத்த இப்பவரைக்கும் மருந்துகள் இல்ல.   முதலில், சளி பிடிக்கும். அடுத்து தலைவலி,காய்ச்சல் வரும். அதுக்கடுத்து, தொண்டைவலி, வறட்டு இருமலை  உண்டாக்கி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு கொண்டு போய்விடும்.  பிறகு கடுமையான உடல்வலியை ஏற்படுத்தி, நிமோனியா வந்து கிட்னி செயலிழந்து மரணம் ஏற்படும்.


அப்ப, கொரோனா வந்தால் செத்துதான் போகனுமா மாமா?!

அப்படிலாம் இல்ல. 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்குன்னு வச்சுக்க. கொரோனா தொற்று ஏற்பட்டதுன்னு  கண்டுபிடிச்சா அவங்கள்ல 80 பேருக்கு சாதாரண சளி, காய்ச்சல் லெவல்லயே குணப்படுத்த முடியும். மிச்சம் இருக்கும் 20 பேரில் 10 பேர் மூச்சுத்திணறல்   வரை போவாங்க.  அவங்களை ஹாஸ்பிடலில் சேர்த்தா பிழைக்க வச்சுடமுடியும். மிச்சமிருக்கும் 10 பேரில் 8பேர் ஐசியூ வரைக்கும் போனாலும் காப்பாத்திடலாம். மிச்சமிருக்கும் 2 பேர்தான் இறப்பு வரைக்கும் போவாங்க.    


அப்ப கொரோனா வைரஸ் பரவாம எப்படி மாமா தடுக்குறது?!


பாதிக்கப்பட்டங்க, தனி மனிதன்ன்னு ரெண்டே ரெண்டு பேர் மனசு வச்சால் போதும். வைரஸ் தொற்று ஏற்பட்டவங்க மாஸ்க் போட்டுக்கனும். சளியை கண்ட இடத்தில் துப்பாம இருக்கனும். தனியா இருந்துக்கனும். ஹாஸ்பிட்டல்ல சேரனும். கூட்டம் கூடும் இடங்களுக்கு போகக்கூடாது.   ஒவ்வொருத்தரும் கண்ட இடங்களில் கைவைக்காம இருக்கனும், கைகளை கழுவாம முகம், வாய்க்கு அருகில் கைகளை கொண்டு போகக்கூடாது.  இதை செய்தாலே போதும் அதைவிட்டு எல்லாரும் முகமூடின்ற மாஸ்க் போடத்தேவையில்லை, பாதிக்கப்பட்டவர் போட்டாலே போதும். பெருநகரங்களில் பொதுமக்கள் மாஸ்க்கோடு போறதை பல இடத்தில் பார்க்கமுடியுது. பாதிக்கப்பட்டவங்க இருமும்போது நம்மீது தெறிக்காதவரை கொரோனா வைரஸ் காற்றினால் பரவாது. ஆனா, நிலப்பரப்பு வழியா பரவும். அதாவது கொரோனா வைரஸ் உள்ள சளியை தொட்டு நம் கண், மூக்கு, வாய் அருகில் கொண்டு சென்றால் பரவும். நிலப்பரப்பில் இருக்கும் இந்த கிருமி 12 மணிநேரம் வரை உயிர்வாழும்.


பொழுதன்னிக்கும் ஒரே மாஸ்க்கை போட்டிருந்தால் ஒரு பிரயோசனுமுமில்லை. பொதுவாவே ரெண்டு இல்ல மூணு மணி நேரத்திற்கு மட்டுமே மாஸ்க் பயன்படும். அதுக்கப்புறம் அது பயன்படாது. சர்ஜிக்கல் மாஸ்க்ன்னு சொல்லப்படும் ஆப்ரேஷன் தியேட்டரில் பயன்படுத்தும் மாஸ்க் அஞ்சாறு மணிநேரத்திற்கு தாங்கும். மாஸ்கை காதில் மாட்டும் எலாஸ்டிக்கினை மட்டுமே பிடிச்சு போட்டுக்கனும், கழட்டனும்.  அதைவிட்டு, வாய்க்கு அருகில் இழுக்கக்கூடாது.  வாய்க்கு அருகில்  மாஸ்க்கை கழட்டிட்டு  சாப்பிடுறது, சிகெரெட் பிடிக்குறது, கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறது, லிப்ஸ்டிக்ன்னு போடுறது கூடாது. சானிட்டரி நாப்கின் மாதிரி மாஸ்கையும் அதுக்கு தகுந்த மாதிரி டிஸ்போஸ் பண்ணனும். அதைவிட்டு கண்ட இடத்தில்  போடக்கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமும்போது  தெறிக்கும் சளியின் மூலமா மட்டுமே கொரோனா வெளிவருது. அந்த சளியை நம்ம சுவாச்சாலோ, அல்லது எதேச்சையாய் நம் வாயில் விழுந்தாலோ நம் உடலில் பரவும். அதுக்கடுத்து, அந்த சளியை கையால் தொட்டு, முகம், வாய்க்கு அருகில் கொண்டு போனால் பரவும். அதாவது சளியில் இருக்கும் வைரஸ் மூக்கு, வாய் வழியா சுவாசப்பாதைக்கு போகாமல் இருந்தால் ஒரு பிரச்சனையுமில்ல.


கூடிய மட்டிலும், தண்ணியை காய்ச்சி குடிக்கனும்.  எங்க போனாலும் தண்ணியை எடுத்து போங்க. வெளி உணவை  தவிர்க்கலாம்.  சமைச்ச அசைவ உணவையும், சமைக்காத இறைச்சியையும் கிட்டக்க வச்சுக்காம இருக்கனும்.  வெளியில் எங்காவது போகும்போது சுவற்றில், பஸ் ஜன்னல், கதவுன்னு கைவைக்காம இருக்கனும்.வெளி இடங்களில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவனும். அதுவும் 20 நொடிகள் கைகளை தேய்ச்சு கழுவனும்.  கை கழுவுறேன்னு தேங்குற நீரில் கை கழுவக்கூடாது. ஓடும் நீரில்தான் கை கழுவனும்.  எச்சில் தொட்டு பணத்தை எண்ணுற பழக்கமிருக்குறதால பணத்தை தொட்டுட்டு கைகளை கழுவ மறக்காதீங்க.


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் 14 நாட்கள் வரை தொடரும். எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க. எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்ன்னு இருந்தாலும் 40 வயதுக்கு மேல் இருக்கவுங்களுக்குதான் கொரோனா வைரஸ் தாக்கம்  அதிகமா இருக்கும்.  சின்ன குழந்தைகள் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லைன்றது ஒரு சின்ன ஆறுதல். அதேப்போல் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில் 60 வயதினருக்கு மேலானவர்கள்தான் அதிகமா இறந்திருக்காங்க. நீரிழிவு நோய் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமா இருக்குமாம்.  கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவங்க இறந்துட்டா, அவங்க உடல் வழியா இந்நோய் பரவாது.


அரசாங்கமும் கூட்டமா இருக்காதீங்க, கோவிலுக்கு போகாதீங்க, மாஸ்க் போடுங்கன்னு அட்ராசிட்டி பண்ணாம தகுந்த நடவடிக்கை எடுக்கனும் அதாவது, கூட்டம் கூடும் இடமான ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் மாதிரியான பொது இடத்தில் கழட்டமுடியாத கை கழுவுற லிக்விட்டை வைக்கலாம். தியேட்டர், மால், திருமண மண்டபம் மாதிரியான தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கலாம். அதைவிட்டு,  


கொரோனா பாட்டுக்கு வந்த தடம் தெரியாம போகவும் வாய்ப்பிருக்கு. அதைவிட்டு, கிரிவலம் வந்த கொரோனா, பாண்டிச்சேரியின் புது சரக்கு கொரோனா, காஞ்சிபுரம் பட்டிற்கு போட்டியாய் உலகப்புகழ் கொரோனா...ன்னுலாம் அறிவிக்காதீங்க. ஆனாலும் நம்மாளுங்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கன்னும், ரசம் சாப்பிடுங்கன்னு ஆளுக்காள் அட்வைஸ். குற்றவாளி கிடைக்கலைன்னா கிடைச்சா ஆள் மேல் கேஸ் எழுதுற போலீஸ்க்காரன் மாதிரி இதையும் பிராய்லர் கோழி மேல் உயில் எழுதுனது பரிதாப கதை. நம்மூரு வெயிலுக்கு வராதுன்னு ஒரு வாட்ஸ் அப் மீம்ஸ்.  பரப்பாதீங்க. கூடவே, மணிக்கணக்கா டிவில விவாதமும் பேட்டியும் போடாதீங்க. இதுலாம் பார்த்தா கொரோனா கோபமாகி ஒரு காட்டு காட்டிட போகுது. 

எல்லாம் சரி, நீ எதுக்கு கடைவீதிக்கு கூப்பிட்ட?!
கடையில் கொரோனா வைரஸ் புடவை வந்திருக்காம். அதை வாங்கிக்கிட்டு, அப்படியே எதிர் கடையில் இருக்கும் கொரோனா வைரஸ் ஹேர் க்ளிப்பையும் வாங்கிட்டு வந்திடலாம்ன்னுதான் கூப்பிட்டேன். 

ஊரெல்லாம் உயிர் போய்டுமோன்னு பயத்துல இருக்கு. உனக்கு கொரோனா புடவையும், கிளிப்பும் வேணுமா?!

ஆமா, போற உசுரு ஆசைப்பட்டதை அடைஞ்சுட்டு போகட்டுமே! ஆசைப்பட்டதுக்கு ஏங்கிக்கிட்டு இருக்குறதுக்கு இல்லாம போறதே மேல். அப்புறம் புளிய மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் பேயா அலைய வேண்டியதுதான்,.

நன்றியுடன்,
ராஜி

11 comments:

 1. நல்ல தகவல்கள் ராஜி அக்கா ...

  அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம்

  ReplyDelete
  Replies
  1. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டுமே தவிர, பயத்துடன் இல்லைப்பா

   Delete
 2. நல்ல தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
 3. Replies
  1. பார்த்தவை , கேட்டவை, படித்தவற்றை பகிர்ந்துக்கொண்டேன். அவ்வளவுதான்ண்ணே

   Delete
 4. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது கொரோனா வந்தால் உயிரிழப்புதான் முடிவா?! ஐஞ்சுவை அவியல் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
 5. தகவல்களும் விளக்கங்களும் சிறப்பு. எங்கும் பயம் நிலவுகிறது.

  நலமே விளையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நலம் விளையவேண்டுமென்பதே எல்லோருடைய விருப்பமும்..

   இது பயங்கொள்ள வேண்டிய நேரமில்லை. கவனமா இருந்தாலே போதும்.

   Delete
 6. அருமையான கண்ணோட்டம்

  ReplyDelete