Monday, March 30, 2020

காடுகளின் தாய் எதுவென தெரியுமா?! -ஐஞ்சுவை அவியல்

என் ஃப்ரெண்ட் ராஜி பையனுக்கு காய்ச்சல், தொண்டை வலின்னு இருந்திருக்கு. இப்பதான் ஊரெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கே. அவ பையன் வேற கடந்த 15 நாளில் மூணு முறை ஏர்போர்ட்டுக்கு போய் வந்திருக்கான். பதட்டத்துக்கு சொல்லவா வேணும்?! அலறி அடிச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டல் கொண்டுபோனா சாருக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு வடிவேலு காமெடிப்போல டெம்ப்ரேச்சர்கூட பார்க்காம பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து விட்டிருக்காங்க.

காய்ச்சல், சளின்றது கொரோனா தொற்றின் அறிகுறிதான். ஆனா, காய்ச்சல் சளின்னாலே அது கொரோனான்னு பயந்துக்க கூடாது.
உலர் இருமல் + தும்மல் = காற்று மாசுபாடு
இருமல் + சளி + தும்மல் + மூக்கு ஒழுகுதல் = பொதுவான சளி
இருமல் + சளி + தும்மல் + மூக்கு ஒழுகுதல் + உடல் வலி + பலவீனம் + லேசான காய்ச்சல் = காய்ச்சல்
உலர் இருமல் + தும்மல் + உடல் வலி + பலவீனம் + அதிக காய்ச்சல் + சுவாசிப்பதில் சிரமம் = கொரோனா வைரஸ்
இப்படி வேறுபாடு தெரிஞ்சுக்கிட்டா நமக்கும் தேவையில்லாத பதட்டத்தை தவிர்க்கலாம். ஹாஸ்பிட்டலிலும் கூட்டம் கூடாது. கூட்டம் கூடினால் வைரஸ் பரவ சான்ஸ் இருக்கு. ரெண்டாவது, மருத்துவ உதவி தேவைப்படுறவங்களுக்கு உதவி கிடைக்காது. புள்ள! பாவம்தான் டாக்டருங்க. அவங்களும் மனுசங்கதானே?! 16 மணிக்கு மேலா வேலை பார்க்கனும். சரியான தற்காப்பு உபகரணங்கள் கிடையாது. ஆனாலும், நமக்காக போராடுறாங்க. அவங்க சூழ்நிலையையும் நாம புரிஞ்சுக்கனும்.

எங்கயோ உஹான் மாகாணத்துல உருவான வைரஸ் எப்படிலாம் இப்படி நம்மளை ஆட்டி வைக்குது பாருங்க மாமா. உஹான் மாகாணம் வெளங்குமா?!

அதுலாம் நல்லா வெளங்கும். இன்னிக்கு உலகமே கரிச்சுக்கொட்டும் உகான் மாகாணம் எம்புட்டு அழகா இருக்குன்னு இந்த வீடியோவில் பாரு.


நல்ல ஊருதான் மாமா. கண்டதையும் சாப்பிட்டு இப்ப இப்படி உலகமே அவதிப்பட வேண்டாமே!

அவங்க கண்டதையும் சாப்பிடல. அவங்க ஊரில் கிடைப்பதை, அவங்க வாழும் சூழல், அவங்க உடல் உழைப்புக்கு ஏத்தமாதிரிதான் சாப்பிட முடியும். இயற்கை எதையும் தேவையில்லாம படைக்கலை. இயற்கையோட அனுசரித்து போகும் வாழ்வே என்னிக்கும் நிலைக்கும். அப்படி இல்லாமல் போனதால்தான் இன்னிக்கு நம்மை தாக்கும் நோய்கள். காட்டை, ஆற்றை, ஏரிகளை அழிச்சு வீடுகட்டி, குப்பையெல்லாம் கொட்டி வச்சா கண்ட நோயும் வரும்.

கரெக்ட்தான் மாமா. காட்டை அழிச்சதால்தான் சிறுத்தை, யானை, மான்.. மாதிரியான உயிர்கள்லாம் உணவுக்காக, தண்ணீருக்கா காட்டைவிட்டு வெளியில் வந்து அடிபட்டு சாகுதுங்க.


ஒரு யானையை பாதுகாத்தா  18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்ன்னு சொல்வாங்க.   மனுசங்க நாம எவ்வளவு சாப்பிடுவோம்?! எவ்வளவு தண்ணி குடிப்போம்?!


சராசரி மனுசன்னா 2 கிலோ உணவு, 3 லிட்டர் தண்ணி.  சிலர் 5கிலோ உணவு, 5/8லிட்டர் தண்ணி குடிப்பாங்க. 


இதுவே பெரிய யானைக்கு அடுத்தபடியான பெரிய விலங்கான ஒட்டகம், ஒட்டகசிவிங்கி மாதிரியான மிருகங்கள்?!


அது தெரியல மாமா.


சரி, ஆனா, யானை?!ஐயோ! அதுக்கு தீனி போட்டு ஆகாதே!   குறைஞ்சது ஒரு கட்டு கரும்பாவது சாப்பிடுமே!!


ஆமா, ஒரு யானை ஒருநாளைக்கு தன்னோட எடையில் 5ல் ஒரு பங்கு அளவுக்கு உணவு சாப்பிடும். ஒவ்வொரு யானையும் சராசரியா 200-250 கிலோ உணவை சாப்பிடும். அதேப்போல 100லிருந்து 150லிட்டர் தண்ணி குடிக்கும்.  மனுசனை தவிர பறவைகள், விலங்குகள் சாப்பிட்டால் அதோட உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், அதோட எச்சத்திலிருந்து தாவர விதைகள் பரவ உதவுது. சின்ன குருவிகூட அதோட சக்திக்கு அதோட எச்சத்தில் ரெண்டு ஆல மர விதைகளை சுமந்திருக்கும். அம்மாம்பெரிய யானையின் எச்சத்தில்  அது சாப்பிட்ட உணவின் 10 சதவிகித விதைகள், குச்சிகள்ன்னு இருக்கும். அதாவது 25கிலோ விதைகளும், குச்சிகளும் மீண்டும் மண்ணுக்கே திரும்ப வரும். குச்சிகள் போக 10கிலோ விதைகளாவது மிச்சம் மீறும். அந்த 10 கிலோவில் ஒரு கால் கிலோ விதையாவது தினசரி முளைக்காமயா போகும்?!.  கால் கிலோ விதையில் 100 விதியாவது இருக்குமா?! தினத்துக்கு 100ன்னு கணக்கு போட்டால்கூட மாசத்துக்கு 3000 விதை முளைச்சு வரும். ஒரு யானையின் சராசரி ஆயுட்காலம் 70 வருசம். அப்படின்னா ஒரு யானை தன் வாழ்நாளில் ஒரு காட்டையே உருவாக்கும் திறன் கொண்டது. அப்படிப்பட்ட யானைகளைதான் நாம அலைக்கழிச்சுக்கிட்டிருக்கோம்.  


அதுமட்டுமில்லாம, ஒருநாளைக்கு ஒரு யானைக்கே 250கிலோ உணவுன்னா, ஒரு யானை கூட்டத்திற்கு?! பல ஆயிரம் கிலோ உணவு தேவைப்படும்.  யானைக்கே இப்படின்னா, முயல், மான், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, கரடி மாதிரியான தாவர பட்சினிக்கு உணவு?! அதனால் ஒரே இடத்தில் யானை தங்கி இருந்தால் எல்லாருக்குமே உணவு கிடைக்குமா?!   ஒரு நாளைக்கு சராசரியா  190 கிலோமீட்டர்  யானை நடக்குமாம். 4இல்ல 5 மணி நேரத்துல 30 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காம நடக்க யானையால் முடியுமாம். அதேப்போல் யானை மனுசங்களைவிட வேகமாவே ஓடும்.  யானை துரத்தினால் மனுசனால் ஓடி தப்பிக்கவே முடியாது. யானை 12 மணி நேரத்திற்கு உணவை சாப்பிடும். பத்து மணி நேரத்திற்கு நடக்கும். மிச்சமிருக்கும் 2 மணி நேரத்திற்குதான் தூங்குமாம். யானைகள் ஓயாமல் நடக்குறதால் பூமி சமப்படுத்துற வேலையும் கண்ணுக்கு தெரியாம நடக்குமாம்.

இம்புட்டு நன்மை இருந்தாலும் யானைக்கு தலைக்கனம் கிடையாது. அது குழந்தை மாதிரி. நாம இழுத்த இழுப்புக்குலாம் வரும். கோவம் வந்தால் தூக்கிப்போட்டு ஒரே மிதிதான். அதுதான் அதோட மைனஸ் ..


தலைக்கனம் மட்டும் ஒரு மனுசனுக்கு கூடவே கூடாது மாமா. சீதையை கண்டுபிடித்து, ராமன் வருவான், சிறைமீட்பான் என அன்னைக்கு சொல்லி, அவளிடம் ஆசியும் அவளை சந்தித்தற்கு அடையாளமாய் சூடாமணியை வாங்கிக்கொண்டு வானத்தில் பறந்துக்கொண்டிருந்த அனுமனுக்கு  தலைக்கனம் உண்டானதாம். சீதையை கண்டுபிடிக்க ராமனால் முடியாதபோது,  தன்னால் முடிந்ததென..,  இதை உணர்ந்த  ராமன், அனுமனுக்கு இது அழகல்ல என நினைத்து அந்த தலைக்கனத்தை அழிக்க நினைத்தார். 

அனுமன் நீராட செல்லும் குளத்தினருகில் முனிவர் ரூபத்தில் ராமன் காத்திருந்தார். அங்கு வந்த அனுமன் தன்னுடைய உடைகளையும், நகைகளையும் குளித்து வரும்வரை பாதுகாத்து தரமுடியுமாவென கேட்டார். அப்படி வைத்துவிட்டு போ என்றார். சுவாமி, மற்ற பொருட்களை கீழே வைக்கலாம். ஆனால் இந்த சூடாமணி அன்னை சீதை தந்தது. அதை கீழே வைக்கமுடியாது என மறுத்தார். அத்தனை புனிதமென்றால்  இந்த கமண்டலத்தில் சூடாமணியை போட்டுவிட்டு போ என சொன்னார்.  அப்படியே, கமண்டலத்தில் சூடாமணியை போட்டுவிட்டு குளித்து திரும்ப வந்து முனிவரிடம் சூடாமணியை அனுமன் கேட்டார். கமண்டலத்தில் உள்ளதை நீயே எடுத்துக்கொள் என்றார் முனிவர்.  கமண்டலத்தினுள் கைவிட்ட அனுமனுக்கு பயங்கர ஷாக் . ஏன்னா, உள்ள ஏகப்பட்ட சூடாமணிகள் இருந்தது. சுவாமி! சீதை ராமனிடம் சேர்ப்பிக்க சொன்ன சூடாமணி எங்கே?! மிக புனிதமானது அது. அப்படியிருக்க, இந்த கமண்டலத்தினுள் அதேப்போன்ற சூடாமனிகள் வந்ததெப்படி என அனுமன் கேட்டான்.  எனக்கென்னப்பா தெரியும்?! உன்னைப்போல நாலஞ்சு வானர  வீரர்கள் வந்து இதையேதான் சொல்லிவிட்டு, சூடாமணியை கமண்டலத்தில் போட்டுவிட்டுப் போனார்கள்!" என்றதும் அனுமனுக்கு தலைக்கனம் மறைந்து உண்மை புரிந்தது. ராமனை தியானித்து. அனைத்துக்கு சூத்ரதாரியான நீங்கள் இருக்கும்போது என்னால்தான் அன்னையை காணமுடிந்தது என்ற எண்ணம் எனக்கேற்பட்டது தவறு என மன்னிப்பு கேட்டதும், மற்ற சூடாமணிகள் மறைந்து சீதை தந்த சூடாமணி மட்டுமே அனுமன் கையில் மிச்சமிருந்தது. பக்திக்கும் பணிவுக்கும் உதாரணமாய் திகழ்ந்த அனுமனுக்கே தலைக்கனத்தால் சிறிது நேரம் மனம் பதைபதைக்க முடிந்ததென்றால் அற்ப பிறவிங்க நாமலாம் நான், எனது, என்னுடைய, என்னால்..ன்ற எண்ணத்தினால் என்ன சாதிக்க முடியும்?!


கொரோனா லீவில் பிள்ளைங்க என்ன செய்றதுன்னு தெரியாம தவிக்குதுங்க. பெரிய பிள்ளைகள் தாயம், பல்லாங்குழி, கிராஃப்ட், சேலையில் ஊஞ்சல்ன்னு நேரத்தை செலவு செய்யுதுங்க.  சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடும்போது கவனமா இருக்கனும். வீடியோவில் இருக்க மாதிரி ஊஞ்சலில் சுத்தும்போது கவனக்குறைவா கழுத்தில் இறுக்கி உயிர்போகும் நிகழ்ச்சிலாம் நடந்திருக்கு. அதனால், சின்ன பிள்ளைகளை இப்படி தூளியில் குழந்தைகள் விளையாடும்போது கவனமா இருக்கனும்..

நீ சொல்றது சரிதான் புள்ள.. குழந்தைகள் மீது கவனமா இருக்கனும். அதும் வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்கும் இந்த சமயத்தில் இன்னும் கவனமா இருக்கனும்.

நன்றியுடன்,
ராஜி

10 comments:

 1. யானையின் உணவு, அதன்ஸ் எவை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.  மனிதனால் உலகுக்கு, அதாவது மற்ற உயிரினங்களுக்கு  என்ன நன்மை கிடைக்கிறது?  வுஹான் மாகாணத்தில் கொரோனா பரவ காரணம் என்று வேறு ஒரு காரணம் சொன்னார்கள்.  தினம் ஒரு கதையாக நிறையதான் சொல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. எத்தனை பேர் பாதிப்படைஞ்சிருக்காங்க?! குணமடைந்தவர்கள் விவரம், ஊரடங்கு அறிவிப்பு மாதிரியான அடிப்படை செய்திகளை தெரிஞ்சுக்கிட்டு அமைதியா இருப்பது கிட்னிக்கு நல்லது; வாட்ஸ் அப் பகிர்வுகள், தொலைக்காட்சி விவாதங்கள்லாம் பார்த்தால் பிபிதான் எகிறும்.

   Delete
 2. ஐஞ்சுவை அனைத்தும் அருமை சகோதரி...

  புதிர் மறந்து போச்சா...?

  ReplyDelete
  Replies
  1. மறக்கலைண்ணே. தேடனும்.. தேடுறேன்.

   Delete
 3. //அதன்ஸ் எவை//

  காடுகளை வளர்ப்பதில் அதன் சேவை என்று படிக்கவும்!!

  ReplyDelete
  Replies
  1. சொன்ன மாதிரியே படிக்குறேன்.

   Delete
 4. சிறப்பான அவியல். ஒவ்வொரு தகவலும் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 5. யான பற்றிய தகவல்கள் ஸ்வாரஸ்யம் ராஜி.

  மனிதன் சுயநலவாதி. கொரோனா பற்றி நிறைய தகவல்கள் உலவுது. எதுவோ இப்ப இப்படிப் பரவியாச்சு.

  ஹனுமான் கதை புதிது. இப்படிக் கேட்டதில்லை.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஒரு கொரோனா .. ஓராயிரம் கதைகள்ன்னு வாட்ஸ் அப் முழுக்க கொட்டி கிடக்குது..

   அனுமன் கதை எனக்கும் புதிது. அதான் பகிர்ந்தேன் கீதாக்கா

   Delete