Wednesday, June 03, 2020

கடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு - தெரிந்த கதை, தெரியாத தகவல்

ஏழை பணக்காரன், உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்ற எந்த வித்தியாசமும் பாராமல்,தரும நெறியின் வழியில் நடப்பதில் தருமனுக்கு ஈடு இணை இல்லை என்பர். அவரைப்போலவே தருமநெறி தவறாமல் நடப்பது எமன். அதனால்தான் எமனுக்கு தர்மன் என்று பெயர் உண்டானது.    ஆனால், அந்த எமதர்ம ராஜாவையே நீ செய்ய வந்த வேலை தவறானது என உதை வாங்கியம்கதை தெரியுமா?! அப்படி உதைத்தவர் சிவபெருமான்?! தன் கடமையை எமதர்மன் செய்வதை ஏன் சிவபெருமான் தடுத்தார்?! எமதர்மனை ஏன் எட்டி உதைத்தார் என தெரிந்த கதை தெரியாத தகவலில் பார்க்கலாம் வாங்க!!
 
மிருகண்ட மகரிஷிக்கு வாரிசு இல்லை. அதனால்,  அவரும் அவரது மனைவி மருதவதியும் கடுந்தவம் இருந்தனர். அவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் பதினாறு வயது வரையில் இருக்கும் அறிவார்ந்த பிள்ளை வேண்டுமா?! அல்லது ஒழுக்கமான, அறிவில்லாத பூரண ஆயுசோடு இருக்கும் முரட்டு பிள்ளை வேண்டுமா என இறைவன் கேட்க, ஒழுக்கத்துடனும், அறிவுடனும் 16 வயது வரை வாழும் பிள்ளையே போதும் என  மிருகண்டு மகரிஷி வரம் வாங்கினார்.  அவ்வாறு வேண்டி விரும்பி பிறந்த குழந்தைதான் மார்க்கண்டேயன்... 


ஆழ்ந்த இறைபக்தி, சிறந்த ஒழுக்கம், அறிவாற்றல் என சிறந்த குணமுடையவனாக மார்க்கண்டேயன் வளர்ந்து வந்தான்...  16வது பிறந்த நாள் வந்தது. தந்தை தாயிடம் ஆசி பெறும்போது அவர்களின் முக வாட்டத்துடன் இருப்பதை கண்டு அவர்களிடம் விசாரிக்க, நடந்ததை சொல்லி இன்றுடன் உனது ஆயுள் முடியப்போவதை எண்ணியே வருத்தம் கொள்கிறோம் என மார்க்கண்டேயனிடம் விவரம் தெரிவித்தனர். 

தந்தையே! சிவபெருமானுக்கு தன் பக்தர்களின்மீது அலாதி பிரியம் உண்டு. தன்னுடைய பக்தர்கள் மனம் நோக விடமாட்டார் என நீங்கள் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். அப்படி இருக்க, சிறந்த சிவபக்தர்களான உங்களையும், அம்மாவையும் எப்படி மனம் நோக வைப்பார்?!  என்னை காத்து பூரண ஆயுளுடன் வாழ வைப்பார். நான் நாளை காலை வருகிறேன் என சிவாலயத்தில் புகுந்து தாளிட்டு கொண்டார்.  இடைவிடாமல் சிவனை பூஜிக்க ஆரம்பித்தான். 


மார்க்கண்டேயனின் ஆயுள் முடிவுக்கு வந்தது. அவனது உயிரை பறிக்க எமதர்மன் பூமிக்கு வந்தான். சிறுவனே! உனது பூஜையை நிறுத்து. உனது ஆயுட்காலம் முடிவடைந்தது. புறப்படு எனக்கூறியவாறு பாசக்கயிற்றை எமதர்மன் வீசினான். ஆபத்து வரும்போது சேய் எப்படி தாயை கட்டிக்கொள்ளுமோ! அதுமாதிரி மார்க்கண்டேயன் பாய்ந்து சிவலிங்கத்தை கட்டிக்கொண்டான்.  பாசக்கயிறு மார்க்கண்டேயனுடன் சேர்த்து சிவலிங்கத்தின்மீதும் விழுந்தது.  பாசக்கயிற்றை எமன் இழுக்க, மார்க்கண்டேயனுடன் சிவலிங்கமும் நகர்ந்தது. எமன் அதிர்ச்சியடைந்தான்.

சிவலிங்கம் இரண்டாக பிளந்து சிவப்பெருமான் வெளிவந்தார். தன்மீது பாசக்கயிற்றை வீசிய எமதர்மனை எட்டி உதைக்க, எமதர்மன் தூர விழுந்தான். மார்க்கண்டேயனை அள்ளி எடுத்து,பூரண ஆயுள்வரை பூமியில் வாழ்ந்து பிறகு கைலாயம் வந்துசேர வரம் தந்தார். இத்தோடு சுபம் போட்டு எல்லா நாடகம், சினிமா, பத்திரிக்கைகளில் முடிச்சுட்டாங்க. ஆனால்,    இந்த கதைக்குப்பின் கேட்க்கப்படாத கேள்விகளும், அதற்கு விடையாக அறியாத ஒரு தகவல் இருக்கு..

மார்க்கண்டேயன் சிலகாலமாய்தான் சிவனை பூஜித்தான். ஆனா, எமதர்மனோ பல்லாயிரம் ஆண்டுகளாக சிவனை பூஜித்து வந்தவன். சிறந்த சிவபக்தன் அப்படி இருக்க, ஒரு பக்தனை காப்பாற்ற இன்னொரு பக்தனை எட்டி உதைக்கலாமா?! எமதர்மன் தவறு செய்திருந்தால் இப்படி ஒரு தண்டனையை எமனுக்கு சிவன் கொடுத்திருக்கலாம். ஆனா, 16 வயதில் ஆயுள் முடியும் ஒருவனின் உயிரை எடுத்து தன் கடமையாற்ற வந்த எமனை உதைக்கலாமா?! கடமை தவறாத ஒருவனுக்கு இப்படியொரு பரிசு, அதுவும் கடவுளிடமிருந்து கிடைத்தால் அப்புறம் எப்படி கடமையாற்றுவார்கள்?! நீதி வழங்க வந்த தேவனையே இப்படி செய்யலாமா?! ஆயுள் முடிஞ்சும் மரணிக்க விரும்பாதவங்க எல்லாரும் சிவலிங்கத்தை கட்டிக்கிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்தால் மரணத்திலிருந்து தப்பிச்சுடலாமேன்னு என நமக்கு தோன்றும்..


காரணமில்லாமல் காரியமில்லை.  எமதர்மன் சிறந்த சிவபக்தன், சிவனை தினமும் முறையாக பூஜிப்பவன், தேவர்கள், மானிடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், ஆன்மீகவாதி, ஆத்திகவாதி என எந்தவித பாகுபாடுமின்றி அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப நீதி வழங்குபவன். சிந்தனையின் இருப்பிடம் மூளை.  காதல், காமம், அன்பு, பாசம், பழி என அனைத்துவித உணர்ச்சிகளின் இருப்பிடம் மனம் என்னும் இதயம். யோசித்து சிறந்த வழியில் நடக்க இறைவனின் துணை வேண்டுமென இறைவனின் திருப்பாதங்களை தலையில் தாங்குவதை விரும்புவர்.  ஆனால், எமதர்மன் இறைவனை மனதில்/இதயத்தில் தாங்க ஆசைப்பட்டான். காரணம், எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடம்கொடாமல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, தான் நடக்கவேண்டும், அதற்கு தன் இதயத்தில் இறைவனின் திருப்பாதம் பதியவேண்டுமென நினைத்து சிவனை நினைத்து தவமிருந்தான்.  தகுந்தகாலம் வரும்போது தன்னுடைய திருப்பாதம் உன் நெஞ்சில் பதியுமென சிவனும் எமனுக்கு வரம் தந்தார். 

அந்த பிரார்த்தனை நிறைவேறத்தான் மார்க்கண்டேயன் ஒரு கருவியானான். மார்க்கண்டேயனின் ஆயுளை அதிகரிக்க பதினாறு ஆண்டுகள்வரை இறைவன் பொறுத்திருப்பானேன். அதிலும் எமன் பாசக்கயிற்றை வீசி இழுக்கும்வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மார்க்கண்டேயனின் உயிரை பறிக்காதே என எமனுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தால், எமன் மீறி இருக்கப்போவதில்லை.. எமன் நெருங்கும்வேளையில் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக்கொண்டது, பாசக்கயிறு சிவலிங்கத்தின்மீது விழுந்தது எல்லாமே சிவன் நடத்திய நாடகமே! மார்க்கண்டேயன் கோவிலுக்குள் நுழைந்ததும் சிவலிங்கத்தை கட்டிக்கொண்டிருந்தால் எமன் பாசக்கயிற்றை வீச தயங்கி இருப்பான்.   எமனை சிவன் எட்டி உதைக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது. 

ஒரு பக்தனுக்கு என்றும் பதினாறு வயதுடன் இருக்க அருள் செய்ததுப்போல, எமனின் பக்திக்கும் , அவன் இதயத்தின் நீங்காத வடுவாய் தன் திருவடி நிலைத்திருக்க அருள்செய்தார்.  

எல்லாமேஎ சிவனின் திருவிளையாடல்ன்னு சொல்லி இத்துடனும் பதிவை முடிச்சுக்கலாம். ஆனா, எல்லா பரிமாணத்திலும் ஒரு விசயத்தை பார்க்கனுமே!  மார்க்கண்டேயன்னுக்கு என்றும் பதினாறு என்ற வரம் தந்த புண்ணிய தலம் திருக்கடையூர். இங்குதான் அன்னை அபிராமியின் கடைக்கண் பார்வை பட்டு, அவளின் பக்தரான அபிராம பட்டர் உயிர் பிழைத்ததும், பிறகு அவர் அந்தாதி தமிழ் இயற்றிய புராண கதை நிகழ்ந்தது.  இங்கு சிவபெருமான் எமனை காலால் உதைத்ததற்கு வேறு ஒரு காரணத்தை சொல்றாங்க. 

அது என்னன்னா,  சிவன் உமையொரு பாகன். அதாவது பார்வதிதேவிக்கு தனது இடப்பாகத்தை தந்தவர். சிவனின் இடப்பக்கம் பார்வதிதேவியின் அம்சம்,  மார்க்கண்டேயனை பிடிக்க வந்த எமனை சிவன் இடது காலால்தான் எட்டி உதைத்தார். ஆகவே, இது சிவனின் திருவடியல்ல. சக்திதேவியின் திருவடிதான் எனவும் சொல்லப்படுகிறது. கடமையை செய்ய வந்தவனை சிவன் காலால் உதைக்கவில்லை. மாறாக தர்மம் தவறாமல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் தன் கடமையை தொடர்ந்து செய்ய எமனை வைராக்கியமுள்ளவனாக மாற்ற பராசக்தி தன் பாதத்தை அவனது இதயத்தில் பதித்தாள்ன்னும் திருகடையூர் தல புராணம் சொல்லுது. ஏன்னா, எமன் மரணதேவன் மட்டுமல்ல, வினைப்பயனால் பூமியில் அல்லல்படும் உயிர்களை மனிதக்கூட்டிலிருந்து விடுதலை செய்யும் தர்மதேவனும்கூட... சிவசக்தியின் சங்கல்பத்தின்படியே எமன் உயிர்களை பறிக்கிறான். அதேவேளையில் சிவசக்தியின் அருள் இருந்தால் ஆரோக்கியமும், ஆயுளும் நீடிக்கும் என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்துது.  ம்ருத்யுஞ்ஜயன் என சிவனுக்கு ஒரு பெயர் உண்டு. ம்ருத்யு என்றால் மரணம், ஜயம் என்றால் வெற்றின்னு பொருள்.  உயிர்களை பிரித்தெடுத்து செல்லும் எமனையும் அன்பால் வென்றவன் என இதற்கு பொருளாம். 

எல்லாம் வினைப்படிதான் நடக்கும்ன்னு ஒரு பக்கம் சொல்லிட்டு, தன் பக்தர்கள், தன்னை துதிப்பவர்கள்ன்னு சிலருக்கு மட்டும் கர்மவினையிலிருந்து விலக்கு அளிப்பது எந்தவிதத்தில்ன்னு புரியல. அதுதான் தெய்வரகசியம் போல!!

நன்றியுடன்,
ராஜி. 

5 comments:

  1. எல்லாம் வினைப்படிதான் நடக்கும்ன்னு ஒரு பக்கம் சொல்லிட்டு, தன் பக்தர்கள், தன்னை துதிப்பவர்கள்ன்னு சிலருக்கு மட்டும் கர்மவினையிலிருந்து விலக்கு அளிப்பது எந்தவிதத்தில்ன்னு புரியல.

    அருமை

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான கதைகள்.  காரணமின்றி காரியமில்லை.

    ReplyDelete
  3. அடடே... இந்தக் கதையும் நல்லா இருக்கே...!

    ReplyDelete

  4. சிறப்பான கதை
    தொடருங்கள்

    ReplyDelete