Sunday, May 31, 2020

தெய்வீக ரகசியத்தை அறிந்துக்கொள்ளனுமா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல ரெடிமேட் சாம்பிராணி எழுத மறந்துட்டேன். அதையும் சேர்த்து வாங்கி வாங்க!

ஏன், தூபக்காலில் நெருப்பை வச்சு, அதில் சாம்பிராணி தூவி வீடு முழுக்க காட்டுறதுக்கென்ன?!

முன்னலாம் விறகு அடுப்பில் சமைச்சாங்க. அதனால் நெருப்பு இருந்தது. அதில் சாம்பிராணி புகை போட்டாங்க. இப்பலாம் கேஸ்ல சமைக்குறதால் நான் நெருப்புக்கு எங்க போவேன்?!

தேங்காய் ஓடும், தேங்காய் நாறும் இருக்கே. அதை வச்சு நெருப்பு கங்கை உருவாக்க முடியாது. மனமிருந்தால் மார்க்கமுண்டுன்னு நீ கேள்விப்பட்டதில்லையா?! 

இந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கும் தெரியும். இப்ப ரெடிமேட் சாம்பிராணி ஏத்தி வீடு முழுக்க காட்டுறதுல உனக்கென்ன  குறைஞ்சு போகுது?!

அடியேய்! நான் சொல்லுற மாதிரி சாம்பிராணி புகையை காட்டுறதால எத்தனை நன்மை இருக்கு தெரியுமா?! சிவன் கோவிலில் தினத்துக்கும் குங்கிலியம் கொண்டு புகை போடுறாங்களோ அவர்களுக்கு தெய்வீக ரகசியம் தெரியவருமென அகத்தியர் தன்னோட வாத காவியம்ன்ற நூலில் சொல்லி இருக்கிறார்.  இப்படி தெய்வீக ரகசியத்தினை தெரிஞ்சுக்கிட்டவங்களுக்கு எமதூதர்களிடமிருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும். அதாவது மரணத்தை வெல்லும் சக்தி கிடைக்குமாம். அப்படி சக்தி கிடைச்சவங்க தான் மட்டுமல்லாம மத்தவங்களையும் காப்பாத்துவாங்க. இது சித்தர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றூ. அதனால்தான் சித்தர்களால் மற்றவங்களை மரணத்திலிருந்து காப்பாத்த முடிஞ்சது. அதை நாம பல கதைகளில் கேட்டிருக்கோம். 

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரம் மாதிரியான சில காடுகளில் விளையக்கூடிய கருமருதுன்ற மரத்தினை கீறி, அதிலிருந்து வடியும் பிசினை சேகரிச்சு காயவச்சால் கிடைக்குறதுக்கு பேருதான் குங்கிலியம். இதைதான் நாம சாம்பிராணின்னு சொல்றோம்.  இந்த சாம்பிராணி புகை இந்துக்கள் வழிபாட்டில் மட்டுமல்லாமல் மதங்களை கடந்து எல்லா எல்லா மதத்தின் வழிபாட்டிலும் இடம்பெறுகிறது.

இப்படி மதங்களை கடந்து எல்லோரும் சாம்பிராணி புகை போட இறை நம்பிக்கை மட்டுமல்லாம  வாசனைக்காகவும்,  காற்றில் கலந்து வரும் நச்சுக்கிருமிகளை அழிக்கவும் வீடு, கடைன்னு எல்லா இடத்திலும் சாம்பிராணி புகை  போடும் வழக்கம் உண்டானது.  முன்னலாம் குழந்தைகள், பெண்கள் அதிலும் முக்கியமா கர்ப்பிணி பெண்கள், புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு வாரமொரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு ஊற்றி, சாம்பிராணி புகை காட்டுவது வழக்கம்.  சாம்பிராணி புகையை தலையில் காட்டுவதோடு புகையை சுவாசிக்கவும் செய்வாங்க. இதனால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள், தலைவலி,  தலையில் நீர் கோர்த்தல் மாதிரியான  வியாதிகள் தீரும். இளநரை, முடி கொட்டுதல், பொடுகு மாதிரியான தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் வராமல் இந்த சாம்பிராணி புகை தடுத்தது. 

சாம்பிராணி புகை  ஆஸ்த்துமா, வீசிங்க் பிராப்ளம் மாதிரியான சுவாசக்கோளாறுகளையும் போக்கியது.  சாம்பிராணி புகையில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குறதாகவும் இப்பத்தைய ஆய்வுகள் சொல்லுது.  சுத்தமான குங்கிலியம் கொண்டு போடும் சாம்பிராணி புகையால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனா, நீ சொல்லும் ரெடிமேட் சாம்பிராணி புகையால் மூச்சடைப்பு, அலர்ஜி மாதிரியான தொல்லைகள் உண்டாகுவதை நாமே பார்த்திருக்கோம்..

ஆமா மாமா, ரெடிமேட் சாம்பிராணி ஏத்தினாலே என் பாட்டி மூச்சடைக்குதுன்னு வெளில போய்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சுதான் உள்ள வருவாங்க. 


ம்ம் அந்த ரெடிமேட் சாம்பிராணியில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயாண பொருட்களும், வாசனை பொருட்களும்தான் இதற்கு காரணம்.    முன்னலாம் மழைக்காலத்தில் சாம்பிராணி புகையுடன், காய்ந்த வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகையும் போட்டு மாலைவேளையில் வீடு முழுக்க காட்டுவாங்க. இதனால் கொசு தொந்தரவு இருக்காது.  மழைக்காலத்தில் உருவாகும் நோய்க்கிருமிகள் தொற்றிலிருந்து நம்மை காக்கும்.  சுத்தமான குங்கிலியம் பர்வதமலை, கொல்லிமலை, கஞ்சமலை, சதுரகிரிமலை, அத்ரிமலை பகுதிகளில் கிடைக்கும். இப்பலாம் அங்கும் கலப்படம் நடக்குது. தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி வச்சு வாங்குறது நல்லது. 

சரி இனி பார்த்து வாங்குறேன். காலையில் எழுந்து அரக்க பரக்க சமைச்சு டப்பா கட்டும் வேலையில்லை. காலெஜ் லீவுங்குறதால் பாப்பா இருக்குறதால் வேலையே இல்லாத மாதிரி இருக்குன்னு சொன்னது குத்தம்ன்னு அப்பு இந்த கணக்கை நேர் பண்ணுன்னு சொல்லிட்டு போறான். இதுல 8767458998 அரிசி இருக்கு வேணும்ன்னா எண்ணிக்கன்னு மொக்கை ஜோக் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் வேற!
 
தேவையா உனக்கு?! வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம...

நான் அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா மாமா!? இப்படி என்னையை நக்கல் அடிக்குறான்.

இதுக்கும் வடிவேலு காமெடி மாதிரி எதும் சொல்லிடப்போறான். சின்ன வயசில் இப்படி எதாவது அவனை வெறுப்பேத்தி இருப்பே! அதான் உன்னைய இப்ப அவன் ரிவெஞ்ச் எடுக்குறான்... 

அப்படித்தான் போல!   சில கடுப்பேத்தும் வீடியோக்களால் எனக்கு டிக்டாக்ன்னாலே பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு யாராவது பகிர்ந்தால் பார்ப்பேன். அப்படி பார்த்ததில் இந்த வீடியோ பிடிச்சது.  உலக அழகியாக ஐஸ்வரியா ராய் தேர்வானபோது,  இந்தியாவே அவர் அழகை கொண்டாடிச்சு. அப்ப எங்க சார் ஒருத்தர் சொன்னாரு. ஐஸ்வர்யா ராயின் உடல் வாகு, அறிவுத்திறனோடு, உயரம், எடையோடு ஒத்துப்போகும் மொத்தத்தில் ஐஸ்வரியா ராயைவிடவும் அழகான பெண் எங்கோ காடு மேடுகளில் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். அதனால் ஐஸ்வரியா ராய் அழகான பெண்களில் ஒருத்திதானே தவிர, அவளே அழகானவள் இல்லைன்னு சொல்வார். 

அதுமாதிரி, பயிற்சி எடுத்துக்கிட்டு அசரவைக்குற மாதிரி ஆடும் ஆட்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, எந்த பயிற்சியும் செய்யாம, எங்கோ ஒரு மூலையில் நேர்த்தியுடனும்,அசர வைக்கும்படியாகவும் ஆட்களுக் இருக்கத்தான் செய்றாங்கன்னு இந்த வீடியோ பார்த்ததும் தெரிஞ்சுக்கிட்டேன். அதனாலோ என்னமோ எனக்கு பிடிச்சு போச்சு. நீ இந்த வீடியோவை பார்த்துக்கிட்டு இரு. நான் போய் சமைக்கும் வேலையை பார்க்கிறேன்...


நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. நல்ல விளக்கம்...

    காணொளிகள் அருமை... அதிலும் குழந்தை ஆகா...!

    ReplyDelete
  2. //ஐஸ்வரியா ராய் அழகான பெண்களில் ஒருத்திதானே தவிர, அவளே அழகானவள் இல்லைன்னு சொல்வார்//

    இதுதான் உண்மை.
    காணொளிகள் கண்டேன் குழந்தையை ரசித்தாலும் பாவமாக இருந்தது.

    ReplyDelete
  3. கலப்படமில்லாத சாம்பிராணிக்கு எங்கே போக?  கிடைத்தால் நல்லதுதான்.

    காணொளிகளை ரசித்தேன்.

    ReplyDelete
  4. சாம்பிராணி சிறப்பு. இப்போதெல்லாம் நிறையவே கலப்படம்.

    காணொளிகள் நன்று.

    ReplyDelete
  5. காணொளிகளை ரசித்தேன்

    சாம்பிராணி பயன்படுத்துவதில்லை.

    துளசிதரன்

    ஐஸ்வரியா ராய் அழகான பெண்களில் ஒருத்திதானே தவிர, அவளே அழகானவள் இல்லைன்னு சொல்வார்// நல்ல பாயின்ட்.

    நம்ம வீட்டுல சாம்பிராணி யூஸ் செய்யறதே இல்லை.

    காணொலிகள் நல்லாருக்கு.

    கீதா

    ReplyDelete