Friday, June 05, 2020

அழுக்கு துணிகளை துவைத்து கொடுத்து துன்பம் நீக்கிய சித்தர்-பாண்டிச்சேரி சித்தர்கள்.

சித்தம் என்றால் அறிவு... அறிவு தெளிந்தோருக்கு சித்தர்கள் என்று பெயர்.  சித்தர்கள் யாருக்கும் அடிமை இல்லை. யாரையும் அடிமைப்படுத்த மாட்டார்கள். ஜாதி, மத பாகுபாடு கிடையாது. இவர்களுக்கு நேரம் கால்ம் கிடையாது. தீட்டு, தீண்டத்தகாதவை கிடையாது. சித்தர்களின் கோட்பாடு ஒன்றுதான். இறைவன் ஒருவனே! அவன் ஜோதிவடிவானவன். அதிலும் இறைவன் தன்னுள்ளே உள்ளான். இறைவனை அடைய அன்பு ஒன்றே சிறந்த வழி என்று உணர்ந்தவர்களையே சித்தர்கள் என போற்றுகிறோம். தத்துவங்கள் தொன்னூற்று ஆறையும் கடந்தவர்கள் சித்தர்கள் என திருமூலர் பாடி வைத்துள்ளார். இப்பேற்பட்ட சித்தர்களை பற்றியும், அவர்தம் வரலாறு, ஜீவசமாதி ஆன இடம் பற்றியும் பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் நாம பார்க்கப்போறது பாண்டிச்சேரியில் உள்ள வில்லியனூர் சாலையில் ஒதியம்பட்டு என்ற ஊரில் உள்ள ஸ்ரீவண்ணார பரதேசி சுவாமிகள் ஜீவசமாதியை...

கடந்தவாரம் ஸ்ரீலட்சுமண சித்தர் சுவாமிகள் ஜீவ சமாதியில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேரா ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள் சித்தர் ஜீவ  சமாதிக்கு சென்றோம். அமைதியாக, எளிமையான முறையில் அமைந்திருந்தது இவரது ஜீவசமாதி .நாங்கள் சென்ற நேரம் மதியம் என்பதால் ஜீவசமாதி திருக்கோவில் உள்நடை அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்மண்டபத்தில் வாயில் சாத்தப்படவில்லைவெளியூரில் இருந்து நிறைய பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதால் அவர்கள் சித்தரை தரிசித்தது செல்வதற்கு வசதியாக கருவறை மட்டும் சாத்தப்பட்டு முன்மண்டப வாயிலை திறந்தே வைத்திருக்கின்றனர். நாங்கள் கொண்டுசென்ற கற்பூரத்தை ஏற்றி சித்தரை வணங்கி நின்றோம். கூட்டத்தில் சிலர் தேவாரப்பாடல்களை பாடி மெய்மறந்து தரிசனம் செய்து கொண்டிருந்தனர். தரிசனம்லாம் முடிந்து அங்கிருந்த மரநிழலில் சிறிது நேரம் அமர்ந்தோம். சித்தரின் வரலாற்றை யார் சொல்லுவார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தபோதுசிவப்பழமாக ஒரு அம்மையார்  தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் தரிசனம் செய்து முடிக்கட்டும் என்று பொறுமையாக அவர் வருகைக்காக காத்திருந்தேன் .அம்மையாரும் தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியே வந்ததும், அவரிடம் மெதுவாக சுய அரிமுகம் செய்துக்கிட்டு  ,நீங்க இந்த ஊர்தானே?!ன்னு கேட்டேன். கடந்த 2 நாட்களாக சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு சென்று தரிசித்து வருவதையும் சொல்லி அவரிடம் ஆசிகளை பெற்று ,இந்த வண்ணார பரதேசி சித்தரை பற்றி எனக்கு சொல்லுங்கம்மான்னு கேட்டேன். ஓ தாராளமா சொல்றேன். ஆனா, எல்லாமே  கேள்விஞானம்தான்னு சொல்ல ஆரம்பித்தார். 

ஸ்ரீவண்ணாரப் பரதேசி சுவாமிகள் சுமார் 220 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் வாழ்ந்து மறந்த மிகப்பெரிய மகான். இவரும் வள்ளலார் இராமலிங்க அடிகளும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்ன்னு சொல்றாங்க. இந்த வண்ணாரபரதேசி சுவாமிகள் யார்?எங்கிருந்து வந்தார்ன்னு யாருக்கும் தெரியாது. இவரோட சொந்தபேரே யாருக்கும் தெரியாது. ஆனா, வண்ணார பரதேசின்னு ஏன் பேரு வந்துச்சுன்னு மட்டும் தெரியும். இவர் தெருக்களில் நடந்திக்கிட்டிருக்கும்போது திடீர்ன்னு ஒரு வீட்டுக்குள் நுழைந்து அந்த வீட்டில் இருக்கும் அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு சங்கராபரணி ஆற்றுக்கு கொண்டு போய் துணிகளை துவைத்து, உலர்த்தி, மடித்து கொண்டுவந்து கொடுத்து சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிடுவாராம்.  துணிகளை வாங்கிட்டு போகும்போது யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களாம். மாறாக, நம்ம வீட்டில் வண்ணார பரதேசி துணி வாங்கி துவைக்கமாட்டாரா?! நம்ம துன்பம் தீறாதான்னு நினைப்பாங்களாம். 

அப்படி அவங்க நினைக்க காரணம், வண்ணார பரதேசி தெருக்களில் சுற்றும்போது யார் வீட்டில் நுழைந்து அழுக்கு துணிகளை கேட்கிறாரோ அக்குடும்பத்தார் சொல்லொனா துன்பத்தில் இருக்காங்கன்னு அர்த்தம். வண்ணார பரதேசி துணிகளை துவைக்கும்போது துணிகளுக்கு சொந்தக்காரர்களின் துன்பமும் அழுக்கோடு சேர்ந்து நீரில் கரைந்துபோகும் என்பது நம்பிக்கைபலரது அனுபவமும்கூட.. யாராவது சாப்பாடு கொடுத்தால் உடனே வாங்கி சபபிடமாட்டாராம். மாறாக அவர்களுக்கு எதாவது  வேலை செய்து கொடுத்தப்பிறகே உணவை சாப்பிடுவாராம்.

ஆனால் வேறு சிலரோ இந்த சித்தர் கடலூரை அடுத்த வண்டிப்பாளையம் என்னும் ஊரில் சலவை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் என்றும்அவரது இயற்பெயர் பலராமன் என்றும்சிறுவயதில் நல்ல வாட்டசாட்டமாக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு துறுதுறுவென வேலைசெய்வாராம். அவருடைய வாலிப வயதில் அந்த ஊரில் உள்ள பெண் ஒருவர் அவரை விரும்பியதாகவும்அந்த சமயத்தில்தான் எங்கிருந்தோ வந்த ஒரு சித்தர்நீ செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன என்னுடன் வா! என்று அழைத்து சென்றாராம். இந்த சுவாமிகளும் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் அந்த ஞானியுடன் சென்றுவிட்டாராம். அந்த ஞானியும் ஒரு பர்ணசாலை அமைத்து ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகளுக்கு யோகம், ஞானம் சித்துவித்தைகள்லாம் கற்றுக்கொடுத்தார். எல்லாவிதையையும் கற்றுக்கொண்ட ஸ்ரீவண்ணார பரதேசி சுவாமிகளிடம் அவரது குருவாக இருந்த சித்தர், இனி நீ ஊர் திரும்பி இல்லறவாழ்கையில் ஈடுபட்டுகுழந்தைகளையும் பெற்று இல்லற வாழ்வினை மகிழ்ச்சியுற முடித்து பின் என்னை வந்து சேர்வாய் என்று ஆசிகூறி வண்ணார பரதேசி சுவாமிகளை ஊருக்கு  அனுப்பிவைத்தாராம்.

தன் குருவின் வார்த்தையை சிரம் மேற்கொண்டு வண்ணார பரதேசி ஊர் திரும்பினார்தன்னை விரும்பிய அந்தப்பெண்ணையே மணந்துகொண்டார். இல்லறவாழ்வில் அவருக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. சிறிதுகாலம் இல்லறவாழ்வில் ஈடுபட்டு பின்னர் தன்குருவை தேடி வந்தார்.அவரிடம் மீண்டும் ஆன்ம பயிற்சிகளை படித்தார். இந்தசமயத்தில் அவரது குருநாதர் திடீரென ஒருநாள் இயற்கை எய்தினார். அதன்பிறகு தனது குருநாதருக்கு உரியக்கடன்களை செய்துவிட்டு தன் குருநாதர் காட்டியவழியில்புதுச்சேரியில் உள்ள வில்லியனுர் அருகே உள்ள  திருக்காஞ்சி ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவில் வந்தார். இந்த திருக்கோவில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்றதுஇங்கு வந்து ஒரு வில்வமரத்தடியில் அமர்ந்து யோகநிஷ்டையில் அமர்ந்திருப்பாராம்.

வில்லியனூரில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் தன் வயலில் விளைந்த நெல்லை களத்துமேட்டில் அடித்துவைத்து அதைக்காவல் செய்ய ஆள் இல்லாமல் தவித்தார். அப்பொழுது அங்கு வந்த ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகள் ,நீங்கள் செல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னாராம்.,அதைக்கேட்ட பெரியவரும் நம்பிக்கையுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் ஸ்ரீவண்ணார பரதேசி சுவாமிகள் களத்துமேட்டிற்கு செல்லாமல் இப்பொழுது சுவாமிகள் ஜீவ சமாதியடைந்திருக்கும் இந்த வில்வமரகாட்டிற்கு வந்து ஹண்ட் யோகா என்று சொல்லப்பட்டிருக்கிற யோகத்தை செய்து தன் ,கைவேறு ,கால்வேறு என்ற யோகநிலையில் தவம் செய்துகொண்டிருந்தார்.அதேசமயம் களத்துமேட்டில் சிலர் அந்த நெல் குவியலை களவாடும் நோக்கத்துடன் சாக்கு மூட்டைகளில் அள்ளிக்கொண்டிருந்ததை தன ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். நெல்லை அள்ளிக்கொண்டிந்த நிலையிலேயே அவர்கள் சிலைகள்போல் அப்படியே நின்றனர். விடிந்தும் விடியாத விடியல் பொழுதில் களத்து மேட்டுக்கு வந்து பார்த்த பெரியவர் திகிடுக்கிட்டு போனார். செய்தி ஊர்முழுக்க பரவியது. ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகளும் அங்கே வந்தார். இப்பொழுது ஊர்மக்கள் ஒன்றாக கூடி ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள் அவர்களை மன்னித்து அருளுங்கள் என மன்றாடினார் .சித்தரோ சூரியன் வரட்டும் இவர்கள் கட்டுகள் மறையும் என்றார் .சுவாமிகளின் மகத்துவம் அந்த ஊரெல்லாம் பரவியது.

இவரது சக்தியையும் ஆற்றலையும் புரிந்துகொண்ட மக்கள் இவரை தேடிவந்து வணங்க ஆரம்பித்தனர். மீன்பிடிக்க செல்பவர்கள்மீன் பிடிக்கப்போகும் முன்பும், மீன்பிடித்த பிறகும் சித்தரை தேடிவந்து வணங்கி செல்வார்களாம் அப்பொழுது சித்தர் தரையில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து அவர்களுக்கு கொடுப்பாராம் .அன்று மீன்கள் எல்லாம் சீக்கிரமே விற்றுத்தீர்ந்துவிடுமாம் .அதேபோல் நோயுற்றவர்களுக்கும் தன்கையினால் மண்ணை எடுத்து அவர்கள் உடம்பில் தடவி நோயை குணப்படுத்துவாராம். எப்பொழுதும் இறைசிந்தனையிலையே இருப்பாராம்

ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகள் எப்பொழுதும் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் வில்வமரத்தடியில் அமர்ந்து நிஷ்டையில் இருப்பாராம். ஒருமுறை அந்த கோவிலின் அர்ச்சகர் இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டி செல்லும்பொழுது எதோச்சையாக வில்வமரத்தடியை பார்க்க அங்கே சித்தர் இருந்த இடத்தில் ஒளிவெள்ளம் தெரிய அதைக்கண்டு பயந்துபோன அர்ச்சகர் கோவிலை பூட்டாமல் சென்றுவிட்டார்ஆனால் அடுத்தநாள் வந்துபார்க்கும்பொழுது கோவில் பூட்டி இருந்ததாம். ஒருசமயம் இந்த கோவில் இருந்த இடத்தில் அடைமழைஊரெல்லாம் வெள்ளக்காடாக இருந்தது. கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. மக்களும் சரி வெள்ளம் வடிந்தபிறகு கோவிலில் பூஜைகள் செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அன்று சிவபரம்பொருளுக்கு பூஜைகள் செய்யமுடியவில்லை. ஆனால் அன்று கோவிலில் பூஜைகள் செய்கிற மணி ஓசையும் ,சாம்பிராணி புகைவாசனையும் வர மக்கள் ஆச்சர்யப்பட்டு போயினர். சிலர் கோவிலுக்குள் யாரோ புகுந்துவிட்டனர் என்று கோவிலுக்குள் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது பூட்டிய கோவிலுக்குள் சென்றனர். அங்கே வில்வமரத்தடியில் கைவேறு, கால்வேறாக செய்கிற யோகத்தை செய்து பிரித்து போட்டிருந்தார். அதைக்கண்டு கோவிலுக்குள் நுழைந்தவர்கள் பயந்துபோய் கோவிலைவிட்டு வெளியேறி மக்களிடம் சொல்லகோவில் பூஜாரி கோவிலுக்கு வந்து பரிகார பூஜை செய்தார். அப்பொழுது அந்த கூட்டத்தில் ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகள் நின்றுகொண்டிருந்தார். கோவிலுக்குள் புகுந்தவர்கள் சுவாமியை அடையாளம் கண்டு ,கோவிலுக்குள் இருந்த மகான் இவர்தான் என்று அடையாளம் காட்டினார் . ஊர்மக்கள் சித்தரை இங்கேயே தங்கிவிடும்படி கேட்டுக்கொண்டனர் .ஆனால் ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகள் எனக்கென்று கொடுக்கப்பட்ட இடம் இதுவல்ல என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.

எப்பொழுதும்போல வில்லியனூரில் சுற்றிக்கொண்டிருந்தபோதுஅங்கு சில குழந்தைகள் அழுதுகொண்டிருந்தனர். ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு எங்கள் பெற்றோர்கள் எங்களை விட்டுவிட்டு மயிலம் முருகன் கோவில் தேரோட்டத்திற்கு சென்றுவிட்டனர் என்று கூற இவ்வுளவுதானா எனக்கூறி அவர்களை சுமந்து தேரேட்டோம் நடக்கும் இடத்திற்கு ஆகாயமர்க்கமாக கூட்டி சென்றார். குழந்தைகளும் தேரோட்டத்தை கண்டுகளித்தனர். பிறகு குழந்தைகளை அவர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். பின்னர் குழந்தைகளின் பெற்றோர் வந்ததும் நடந்ததை கூற மக்கள் வண்ணாரபரதேசி சுவாமிகளின் சித்துசக்தியை அறிந்துகொண்டனர். நாட்கள் இப்படியே சென்றனஇந்தமாகானுக்கு தான் இறைவனுடன் இரண்டற கலக்கும் காலம் வந்துவிட்டதை உணர்ந்துகொண்டார். அவர் சங்கராபரணி ஆற்றின் கரையில் உள்ள ஓதியம்பட்டு என்னும் இந்த ஊர் அந்த காலத்தில் இந்த ஊர் உதயன்பட்டு என்று அழைக்கப்பட்டதாம்.  .அங்க இருந்த வில்வமரக்காட்டில் எப்பொழுதும் தவத்திலையே இருந்தார். பேசுவதை குறைத்துக்கொண்டார் .எப்பொழுதும் மௌனமாகவே இருந்தார். தன்னுடைய உடலைவிட்டு ஆன்மாவை பிரித்து இறைவனுடன் ஒன்றாக கலந்தார். சிலநாட்களாக அவர் ஆடாமல் அசையாமல் இருந்ததையும் ,அவரது அசைவற்ற உடல் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்ததையும் பார்த்த .பொதுமக்களும் பக்தர்களும் சுவாமிகள்  அவர் ஜீவ சமாதியடைந்துவிட்டார் என்று அவர் இருந்த இடத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பினர் .ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகளின் குருபூஜையாக கொண்டாடப்படுகிறது .

 முதலில் சிறிய ஓலை குடிசையாக இருந்த ஜீவசமாதி பின்னர்,இவரது பக்தர்கள் இவருக்காக ஆலயம் கட்டினர். இந்த ஜீவசமாதி இருக்குமிடமான ஓதியம்பட்டு பகுதிக்கு பக்கத்தில் இருக்கும் மில்களில் பணிபுரியும் பெண்கள் இந்த சமாதிக்கு வந்து தீபம் ஏற்றிவிட்டுதான் செல்வார்களாம் .அவர்கள் கேட்பதெல்லாம் கிடைப்பதகவும் இங்குவந்து விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்களின் கோரிக்கைகள் ,பிரார்த்தனைகள்லாம்  சித்தர் நிறைவேற்றி வைப்பதாகவும் அனுபவபூர்மாக சொல்கிறார்கள். அதேபோல் சென்னையை சேர்ந்த கங்கா லெட்சுமி -மதிவாணன் என்ற தம்பதியினருக்கு திருமணம் ஆகி 13 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தைப்பேறு இல்லையாம் .சென்னையில் பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்தும் பலன் இல்லையாம் ,கடைசியில் ஒருமகப்பேறு ஆஸ்பிடலுக்கு சென்று சிகிச்சை எடுக்கமுடிவு செய்து அங்கு சென்றபோது அவர்கள் பெரும் பணச்செலவும் மேலும் தொடர்ந்து ஒருவருடம் அங்கே தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்  என்று கூறியிருக்கின்றனர்.ஆனால் கங்காலெட்சுமி இதற்கு உடன்படவில்லையாம். தெய்வ அருளால் எனக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்று திடமாக நம்பினாராம் கங்காலெட்சுமி.

அந்த சமயத்தில்தான் ஒருவர் ஸ்ரீ வண்ணாரபரதேசி சுவாமிகளை பற்றிச்சொல்ல நேரே புறப்பட்டு புதுவைக்கு வந்து இந்த சித்தரின் சமாதியில் விளக்கு ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தார்களாம். அடுத்த ஆண்டே அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்ததாம். அவர்களது மகனை கூட்டிக்கொண்டு வருடந்தோறும் இங்குவந்து வழிபடுவார்களாம். இதை கண்கூடாக கண்ட பக்தர்கள்  ஸ்ரீவண்ணாரபரதேசி சுவாமிகளின் பெருமையை  உணர்ந்தார்கள். இதேபோல கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் இனி நமக்கு வாழ்கையேது என்று இங்குவந்து ,இந்த சித்தரை வணங்கி குருவே சரணம் என்று இந்த ஜீவ சமாதி கோவிலில் கூட்டி பெருக்கி துடைத்து ,பணிவிடைகள் செய்துகொண்டிருப்பாராம் .ஒருநாள் அந்த பெண்ணுடைய கணவன் மனம்மாறி இந்த பெண்ணை தேடிவந்து மன்னிப்பு கேட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிட்டானாம் .இப்படி பலபேருடைய வாழ்க்கையில் ஜீவ சமாதியான பிறகும் இந்தமகான் அருள்வழங்கி வருகிறார் . 

புதுவையை புரட்டிப்போட்ட தானே புயல் சமயத்தில் தென்னை, பழமரங்கள்லாம் வேரோடு சாய்ந்தன. ஆனால் இந்த சித்தரின் சாமாதியில் உள்ள மரங்கள் ஒன்றுகூட விழவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்தப்புயலிலும்,சித்தரின் சமாதியில் ஏற்றிவைத்த தீபம்கூட புயல்காற்றில் அணையவில்லை இன்றுவரை ஆச்சர்யமா சொல்லப்படும் விசயம்.  இந்த சித்தரின் ஜீவசமாதி இருக்கு இடத்தை சுற்றி நிறைய பாம்புகள் இருக்கிறதாம். பலர் அதை பார்த்தும் இருக்கிறார்கள் ஆனால் இதுவரை ஒரு பாம்புகூட யாரையும் தீண்டியதில்லையாம். பக்தர்களை கண்டால் அவைகள் விலகி சென்றுவிடும் . இந்த சித்தரின் சமாதியில் நியாமான ஆசையுடன் கூடிய ஏதாவது பிரார்த்தனையை வைத்து அன்னதானம் செய்தால் அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறுமாம் .என இந்த சித்தரின் பெருமைகளை அந்த சிவனடியாரான அம்மையார் மூலம் நாமும் தெரிந்துகொண்டோம் .

சங்கரபராணி(வரக நாதி) ஆற்றின் கரையோரமாக அமைத்துள்ள இந்த ஜீவசமாதி கோவிலுக்கு  . புதுச்சேரி பஸ்டாண்டிலிருந்து விழுப்புரம் செல்லும் பஸ்சில் சென்றால் வில்லியனுர் பஸ்நிறுத்ததில் இறங்கினால் அங்கிருந்து  சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த ஜீவ சமாதிக்கோவில் இருக்கு. வில்லியனுர் பஸ்ஸ்டாண்டிலிருந்து நிறைய ஷேர் ஆட்டோக்கள் மூலம் செல்லலாம். வில்லியனுர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 3கிமீ தொலைவிலும், புதுச்சேரிமெயின் பஸ்ஸ்டாண்டிலிருந்து 8கிமீ தொலைவிலும்புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 8கிமீ தொலைவிலும்புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து 11கிமீ தொலைவிலும்விழுப்புரம் மெயின் பஸ் ஸ்டாண்டிலிருந்து 33 கிமீ தொலைவிலும் ,விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 32 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 160 கிமீ தொலைவிலும் இந்த       ஸ்ரீ வண்ணாரபரதேசி சித்தரின் ஜீவ சமாதிக்கோவில் உள்ளது. வாய்ப்பு கிடைப்போர் அவசியம் சென்று தரிசித்து வாருங்கள். 

இனி மீண்டும் அடுத்தவராம் வேறு ஒரு சித்தர் ஜீவ சமாதியில் இருந்து உங்களை மீண்டும் சந்திக்கிறேன் .

நன்றியுடன்,

ராஜி. 

11 comments:

  1. வியக்க வைக்கும் பல தகவல்கள்...!

    ReplyDelete
    Replies
    1. பாண்டிச்சேரி தாராள மயத்திற்கு தான் பெயர்போனது என்று நினைத்திருந்தேன்,ஆனால் இத்தனை சித்தர்களை தன்னுள்ளே ஜீவ சமாதியாக்கிய புண்ணிய பூமி என்பதை அங்கு சென்றபின்பே தெரிந்துகொண்டேன்.உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிங்க அண்ணா ..

      Delete
  2. வணங்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அண்ணா..எல்லோரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வணங்கவேண்டிய இடங்கள் இவை ..

      Delete
  3. எத்தனை எத்தனை சித்தர்கள்.

    தொடரட்டும் உங்கள் தேடல்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் 20க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதி ஆலயங்களுக்கு செல்லமுடியவில்லை, அடுத்தமுறை இறையருளும்,குருவருளும் இருந்தால் அங்கும் சென்று பதிவு செய்ய ஆசைங்க அண்ணா..

      Delete
  4. அருமையான தகவல்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ..

      Delete
  5. நிறைய சித்தர்கள் கதைகள். புதியதாய் அறிகிறோம்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. பெரிய லிஸ்ட்டே இருக்கிறது,எல்லா இடங்களுக்கும் செல்ல முடியவில்லை என்பதே என் வருத்தம்,காலமும்,நேரமும் கூடிவந்தால் மீண்டும் சென்று விடுபட்ட சித்தர் ஜீவ சமாதிகளை தேடிச்சென்று தகவல்களை சேமித்து பதிவு செய்ய வேண்டும் என்பதே என் ஆசை,உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ ..

      Delete
  6. வண்ணார பரதேசி சுவாமிகளின் ஆசியை வேண்டுவோம்.அற்புதம் நிறைந்த சுவாமிகள்.

    ReplyDelete